LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

சட்டம் - வள்ளுவர் காட்டும் வழியில் - தி.நெ.வள்ளிநாயகம்

எழிலோடு வாழ்கின்ற தமிழ். இமயம் பல வென்று வந்த தமிழ், பொழில் நிறை பூவாகப் பூத்த தமிழ் பெற்ற ஒரு கருவூலம் ''திருக்குறள்''.

 

வள்ளுவர் செய் திருக்குறளை

 

மறுஅறநன்கு உணர்ந்தோர்கள்

 

உள்ளுவரோ மனு நீதி ஒரு குலத்துக்கு

 

ஒரு நீதி

 

என்று ''மனோன்மணியமும்'' மகிழ்ந்து மொழிகின்றது.

 

நன்றென எப்பா லவரும் இயைபவே

 

வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி

 

என்ற கருத்தினைக் ''கல்லாடர்'' சொல்லாடக் காண்கின்றோம்.

 

மனித குணங்கள் அனைத்தையும், சித்திரித்துக் காட்டுகின்ற சிறப்பால் இந்திய இதிகாசங்களில் மகாபாரதத்திற்கும், இராமகாதைக்கும் ஒரு தனி மதிப்பு உண்டு. சொத்துரிமை, ஒப்பந்தம், இயற்கை நீதி, கடமை, பாதுகாப்பு, பெண்ணுரிமை, சூட்சியுரிமை, வாக்குறுதி, மறைகாத்தல் போன்ற பலவற்றைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் அவற்றில் புதைந்து கிடக்கின்றன. இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் பல சட்ட விவரங்கள் இலைமறை காய்களாக அமைந்துள்ளன. எப்பொருளையும் தெளிவாக, அறிவு பெறும் வகையில் எடுத்துரைக்கும் திருக்குறளில் எல்லாமே உண்டு என்பதனால்தான் ''இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'' என்று மதுரைத் தமிழ் நாகனார் கூறினார்.

 

எல்லாம் வல்ல பரம்பொருள், யாரும் அறியாத மறைபொருளான இறைவனை ஆதிபகவன் என வழிபட்டு நின்று, அந்த அகண்ட வானத்தின் சிறப்பினைச் செப்பி, முன்னோடியாகத் திகழ்ந்த ஞானியரை வழிபட்டு, உடனே அறனை வழியுறுத்த வள்ளுவர் வருகின்றார். அறத்தின் அருமையும், பெருமையும் தெளிவாகின்றது. அறம் என்ற பொருளைக் குறிப்பிடும் சொல்லாக, Justice (நீதி) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. தெய்வீகமான மறை பொருள் அறம் என்பது கிரேக்க ஞானிகளின் கொள்கை. அறத்தின் இரகசியம் என்ன என்பதனை முற்றும் உணர்ந்த சட்ட அறிஞர்களும் உணர இயலவில்லை. பிளேட்டோ நூல்களில் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அதற்கான விடை ''அறம் என்பது அறிந்துகொள்ள முடியாத தெய்வீகமான மறைபொருளாகும்''. இதுவே சட்ட அறிஞர்களின் கருத்து.

 

அரிஸ்டாட்டில் எழுதிய ''எத்திக்ஸ்'' - (அறவழி) என்ற நூலில் ''அறத்தால் ஒருவர் பெறுவதே இன்பம்'', எனவே இன்பத்திலிருந்து அறத்தை வேறொன்றாகக் காட்ட இயலாது என்ற கருத்தினைக் காண்கின்றோம்.

 

''இயற்கை நெறி'' (அறம்) என்பது ஆண்டவனின் கட்டளையாகும். மக்கள் இனம் அதற்குப் பணிந்து நடத்தல் வேண்டும். கடவுளுக்கும், மனித இனத்திற்கும் ஒருவன் ஆற்ற வேண்டிய புனிதமான கடமைகளையே அறம் ஆற்றுகின்றது. அக்கடமைகளை ஆற்றுபவர்க்கு நலவாழ்வு உண்டு என்று அறம் கூறுகின்றது. மாறுபட்டு நடப்பவர்க்கு மரணம் தான் என்றும் என அறம் அச்சுறுத்துகின்றது - என்ற கருத்து ஆங்கில நாட்டுத் தெய்வீகப் பேரவையினால் வலியுறுத்தப்பட்டது.

 

சட்ட வல்லுநர் என்று கருதப்பட்ட Black stone - அறத்தின் இலக்கணத்தைக் கூற முற்பட்ட பொழுது, ''அறம் என்பது மனித இனத்தோடு பிறந்ததாகும். அஃது இறைவனால் வகுக்கப் பெற்றது. மற்றைய கடமைகளை எல்லாம் விடச் சிறந்தது. உலகணைத்திற்கும் பொதுவானது. எல்லா நாடுகளுக்கும் எக்காலத்திற்கும் பொருந்துவது'' - என வரையறுத்தார்.

 

இதற்கு அறம் ஆனது சான்றோர் சென்ற நெறி என்று இவர்களுக்கெல்லாம் மேலாகப் புறநானூறு புரியவைக்கின்றது.

 

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

 

அறவிலை வணிகன் ஆய் அலன்; பிறரும்

 

சான்றோர் சென்ற நெறி என,

 

ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே

 

- - - (புறம் 134)

 

எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே'' - என்ற அந்திம தத்துவத்தின் அடிப்படையே அதுதான்.

 

''மக்களின் நல்வாழ்விற்கு ஏற்ற ஒழுக்கத்தைத்தான் பயன் உள்ளது என்று கருத முடியும். மக்கள் நலனுக்கு ஏற்றதா? என்பதை உரைகல்லாகக் கொண்டே மனிதனின் செயல்களை நாம் மதிப்பிட வேண்டும். மக்களின் பொதுவான நல்வாழ்விற்கு ஏற்றம் அளிப்பதாக ஒருவனின் நடத்தை அமைதல் வேண்டும் என்பதையே அறம் அறிவிக்கின்றது'' என்று சால்மண்ட் (Salmond) என்ற சட்ட நூலறிஞர் கூறுகின்றார்.

 

இவையனைத்தும், ''மன நலம் சிறந்தால் மட்டுமே சிறந்திடும்'' என்பதனைக் காட்டும் வகையில்

 

மனநலம் மன்னுயிர்க்(கு) ஆக்கம் இனநலம்

 

எல்லாப் புகழும் தரும்

 

- - - (குறள் 457)

 

என வள்ளுவர் விதிதருகின்றார்.

 

புறநானூறு கூட,

 

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

 

அறத்து வழிபடூ உந் தோற்றம் போல

 

- - - (புறம் 31)

 

எனக் கூறி மகிழ்கின்றது.

 

மணிமேகலை தந்த புலவர் சாத்தனார் இதுபற்றிக் கூற வருகையில்

 

அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்

 

மறவாது இது கேள்; மன் உயிர்க்கு எல்லாம்

 

உண்டியும், உடையும், உறையுளும், அல்லது

 

கண்டது இல்

 

- - - (காதை 25. வரி 228-231)

 

எனப் பாடுகின்றார்.

 

இதற்கு சட்டத்தினை ஒப்புமை இல்லாத பெட்டகமான வள்ளுவர் திருக்குறளில் வைத்துள்ளார். சட்டத்தின் குறிக்கோள் ''நீதி'' ஆகும். அத்தகைய சட்டம் முடிவில் நீதியை உணர்த்திட வேண்டும் என்பது சால்மண்ட்டின் கருத்தாகும்.

 

Justice is the end. Law is merely the instrument and the means,

 

and the instrument must be defined by reference to its end. - Juris Prudence

 

இத்தகைய நீதி வழங்கிடவும், நிலை பெறவும் இன்றைய சட்டங்கள் அன்றைய ஆங்கில நெறிப்படி வரையப்பட்டுள்ளன. ஆனால் அன்றைய ஆங்கில நெறிமுறைகளும், சட்டங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே விதிமுறைகளாக, அடிப்படையாக வள்ளுவரால் தரப்பட்டிருக்கின்றன. என்பதனைக் காண்கின்ற பொழுது நமது புருவங்கள் மேலே உயருகின்றன அல்லவா. ''சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கிலின் வாதம் ஓர் விளக்கு'' என்றார் அறிஞர் அண்ணா. அந்த இருட்டுக் குகையின் ஒளி விளக்காக வள்ளுவம் வாழ்ந்திருப்பது கண்டு அனைவரும் வணங்குகின்றனர்.

 

''இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்களின் உரிமைகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்ற விதிமுறையைக் காண்கின்றோம். ''கடமைகளை'' உணர்த்திக் கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் வாழ்வை நெறிமுறைப் படுத்துவதற்குப் பிறந்ததுதான் ''சட்டம்''. அந்தச் சட்டத்தின் கூறுபாடுகளைக் குறளில் காண்கின்றோம்.

 

பேச்சுரிமை, எழுத்துரிமை, சொத்துரிமை, பாதுகாப்பு உரிமை, வாழும் உரிமை, பணி உரிமை, மறைந்த பின்பும் பெயரும், புகழும் பொருளும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை என மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை அரசியல் அமைப்புச் சட்டம் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாகத் தந்துள்ளது. அதன் அடிப்படையில் அமைந்த சட்டங்கள் அனைத்தும் இந்த நோக்கை நோக்கிப் பயணம், செய்பவைதான்.

 

''பேச்சுரிமை'' கொடுத்த சட்டம் அதன் எல்லைகளை வள்ளுவர் போல வரையறுக்கவில்லை. புறங் கூறாமை, பயனில சொல்லாமை என்ற அதிகாரங்களில் வள்ளுவர் இதனை அறிவுறுத்துகின்றார். எடுத்துக்காட்டாக அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தாலும் தாழ்வில்லை. புறம் பேசமாட்டான் என்ற பெயரையாவது காத்துக் கொள்ளல் நல்லது என்று

 

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

 

புறம்கூறான் என்றல் இனிது

 

- - - (குறள் 181)

 

என எடுத்துரைக்கின்றார்.

 

''சொல்வன்மை'' என்ற அதிகாரத்திலும் கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகம் விரைந்து அவரின் ஏவலைக் கேட்டு நடக்கும் என்கிறார்.

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

 

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

 

- - - (குறள் 648)

 

என்ற குறள் மூலம் வள்ளுவர் அதை உறுதிப்படுத்துகின்றார். குறிப்பாக நாநலம் என்பது நமது உடமை என்று பேச்சுரிமையை விளக்குகின்றார். ஆனாலும் அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் வள்ளுவர் மிகக் கவனமாக இருக்கின்றார்.

 

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்

 

யாநலத்(து) உள்ளதூஉம் அன்று

 

- - - (குறள் 641)

 

இந்தப் பேச்சுரிமை ஏதேனிசு நகரத்தில் தொடங்கி புருட்டஸ், ரோம் நகரத்து மார்க் ஆண்டனி, பிரிட்டனின் சர்ச்சில் தொடர்ந்து கென்னடி வரை சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பேச்சுரிமை தான் வள்ளுவர் காட்டும் கட்டளை.

 

மற்ற உரிமைகளை வகை வகையாகக் கூறினாலும் அதோடு ஒருவரது கடமைகள் என்னென்ன என்று சுருக்கமாகக் கூற வந்த வள்ளுவர்

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

 

செய்யாமை யானும் கெடும்

 

- - - (குறள் 466)

 

என்று கூறுகின்றார்.

 

கடமைகள் பற்றிப் பேசும் பொழுது இல்வாழ்வோர் கடமைகள் என்னென்ன என்பதனைத் தெளிவாக விளக்குகின்றார். தனிமனிதன் ஒருவன் உரிமை மட்டும் கேட்டுப் பெற முடியாது. அதற்கான கடமையும் இரட்டைப் பிறவிகள், சமூகத்தாய் தந்த நல்ல குழந்தைகள். அன்றைய இந்து விதிமுறைகள் சட்டமாக வகுக்கப்பட்ட நாளில் தந்தை மகற்கு ஆற்றும் கடமை, மகன் தந்தைக்குச் செய்யும் நன்றிக் கடமை என்பவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அதையே தான் வள்ளுவர் ''அவையத்து முந்தியிருக்கச் செயல் வேண்டும்'' என்று அன்றே கூறினார். இது தந்தையின் கடமைகளில் ஒன்றென மனுவின் இந்துச் சட்டம் கூறுகின்றது. ஒவ்வொருவரும் கல்வி பெறுவது அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமையைத்தான் வள்ளுவரும் கல்வியின் பெருமையைக் கூறவந்த பொழுது பேசி மகிழ்கிறார்.

 

திருக்குறள் மானுடத்தின் மொழி! அதுதான் சிறந்த வழி! நடுவு நிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, இறைமாட்சி, குற்றங்கடிதல், சிற்றினஞ் சேராமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, ஒற்றாடல், அமைச்சு, தூது, நாடு, சூது, கயமை போன்ற பல அதிகாரங்கள் சட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன.

 

திருக்குறளுக்குத் தனிப்பெருமை சேர்ப்பது இன்பத்துப் பாலாகும். அதனால்தான் திருக்குறளுக்கு இலக்கியத் தகுதி கிடைத்துள்ளது. அது உலகறிந்த உண்மை. இன்பத்துப் பாலிலும், இயற்கையின் நியதியை, சட்டத்தை, தன்மையை, ஆற்றலை மிக அழகாக, நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

 

தமிழ் மறையாம் திருக்குறளில் சட்டம், நீதி என்ற சொற்கள் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எனினும் இந்நாட்டின் மற்ற அறநூல்களில் கூறப்படாத அளவிற்கு, மேலைநாட்டு அறிஞர்கள் அவை பற்றிக் கொண்டுள்ள கருத்துகளுக்கு ஓரளவிற்கன்றி முழு அளவிற்கும் ஒத்த வகையில், இன்றைய சட்ட அறிஞர்களால் உருவாக்கப் பெற்று வரும் சமுதாய நலத் தத்துவங்களுக்கு அடிப்படையாக விளங்கும் அளவிற்குச் சட்டத்தைப் பற்றியும் நீதியைப் பற்றியும் பல கருத்துகள் திருக்குறளில் செறிந்து கிடப்பதைக் காணலாம்.

 

வள்ளுவர் வகுத்த அரசியல் - வள்ளுவர் கண்ட சட்டமும் நீதியும்

 

''இந்தச் சமுதாய இன்பத்தைப் பெருக்க வழி சொல்வதுதான் சட்டங்களின் நோக்கம்; சட்டநெறியின் அடிப்படை''.

 

''வள்ளுவர் வகுத்த அறநெறிகள் சமுதாய இன்பத்தை நிலை நிறுத்தும் நோக்கமுடையனவாக உள்ளன''

 

சமுதாய இன்பமே அறமாகும் என்பதே இன்றைய சட்டவியல் அறிஞர்கள் கண்ட முடிவாகும்.

 

''திருக்குறள் பொழுதுபோக்கு இலக்கியமன்று; மனித சமுதாயத்தின் பொதுச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்கின்றோமே அதுபோலச் சமுதாயத்தின் அரசியலமைப்புச் சட்டம் திருக்குறள். மக்கள் சமுதாயம் எப்படியெல்லாம் நாம் வாழ்வதற்கு அவர் ''விதிமுறை''களை வகுத்துத் தந்தார்''. (திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும் (ம.பொ.சி.) பக். 68.)

 

''மனித வாழ்க்கைக்குரிய விதிமுறைகளை - குறிக்கோள்களைத் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ளார் என்பது ஒன்று; மற்றொன்று, திருக்குறள் மனித சமுதாயம் அனைத்திற்கும் உரியது என்பது'' (டாக்டர் ந. சஞ்சீவி).

 

எனவே, அரசியலார், சட்டத்துறை வல்லுநர்கள் சுருக்கமாக இந்திய அரசியல் சட்டத்தை இ.பி.கோ (இன்டியன் பீனல் கோட்) என்பர்.

 

திருவள்ளுவர் வழியில் நடைபோடும் தமிழ்ச் சமுதாயத்தினரான நாம் நமது வாழ்க்கைச் சட்டமான வள்ளுவத்தை, ''தி.பி.கோ'' என்றால் தவறாகாது. ''திருக்குறள் பீனல் கோட்'' எனலாம்.

 

ஒவ்வொரு மனித உயிரும் இவ்வுலகில் ஒரு குறிக்கோளைக் கொண்டே வாழ வேண்டும்; வாழ முடியும் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அன்று.

 

குறிக்கோளுக்காக வாழும் மனிதன் தன் வாழ்வில் சில கடமைகளைச் செய்ய வேண்டியவனாகிறான். உரிமையை அடைய வேண்டியவனாகின்றான்.

 

எனவே குறிக்கோள் உடைய ஒவ்வொருவருக்கும் சில ''உரிமைகளும் கடமைகளும்'' வேண்டப்படுகின்றன.

 

''புருடார்த்தம்'' என்ற வடமொழிச் சொல்லிலும் ''குறிக்கோள்'' என்ற ''உறுதிப்பொருளும்'' ''கடமை'' என்ற ''பயன்பொருளும்'' ''உரிமை'' என்ற உட்பொருளும் அடங்கியிருப்பதை ஊன்றிப் பார்த்தால் தெற்றென விளங்கும்.

 

''சமுதாயக் கட்டமைப்பில் வாழும் மனிதர் தாம், தம் மக்கள், தம் சுற்றம் என நலன்களை நாடும் போதும் சமுதாயத்தின் (சமுதாயத்தில் வாழும் பிற மக்களின்) நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு கொள்வது - கொண்டு செயல்படுவது - சமுதாயக் கட்டமைப்பில் அவருக்குரிய ''கடமையும்'' ஆகின்றது''.

 

ஒரு தனி மனிதனின் கடமையையும் உரிமையையும் வாழ்க்கை நெறியின் சட்டமாகக் காட்டியுள்ள ஒரு குறளைப் பார்ப்போமா!

 

முயற்சி திருவினை ஆக்கும் என்று தனிமனிதனுக்குக் கடமையை உணர்த்தினார். அவன் உணர மறுத்தால் விளைவு என்ன? தண்டனை என்ன? என்பதை அடுத்து நான்கு சீரில் தொடர்ந்து விளக்குகிறார்.

 

''முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்'' என்கிறார்.

 

ஒரே குறளில் ஒரு தனிமனிதனுக்குரிய உரிமை, கடமை மற்றும் சட்டவிதி முறையை யாரால் சொல்லமுடியும்? அதுவும் ஏழே ஏழு சீர்களைக் கொண்டு வாழ்க்கையின் சீரை யாரால் இவ்வளவு செப்பமாகக் கூறமுடியும்.

 

அடுத்து, திருவள்ளுவர் தனது தி.பி.கோவில் இவையிவை மனிதன் ''கொள்ளத்தக்கன'' என்று உரிமையையும் கடமையையும் வலியுறுத்திக் கட்டளைச் சொற்களால் காட்டியுள்ள புதுமையைக் காணமுடியும்.

 

''கொள்ளத்தக்கன'' என்பவற்றை ஒரு மனிதன் கொள்ளாவிடினும் பாதகமில்லை; ''தள்ளத்தக்கன'' வற்றை அறிந்து தன் வாழ்வில் அவன் தள்ளி வாழ வேண்டும் என்று சட்ட விதி முறைகளையும் கட்டளைச் சொற்களைக் கொண்டே வற்புறுத்தும் பாங்கினைப் பார்ப்போம்.

 

கொள்ளத்தக்கன - தள்ளத்தக்கன ஆகிய இவற்றில் எதற்கு நாம் முதன்மை கொடுக்க வேண்டும்? எவை எவற்றை நாம் கடமையாகக் கருத வேண்டும்? கடமை என்பது என்ன? என்பவற்றிற்கு ஒரே வரியில் விடை சொல்லும் வள்ளுவனின் திறமையை வியந்து பாராட்டுங்கள்.

 

''கடன்என்ப நல்லவை எல்லாம்''

 

இதைவிட உங்கள் வாழ்க்கைச் சூத்திரம் வேண்டுமா? வேதங்களை எல்லாம் படிக்க வேண்டுமா? உலக நீதி நூல்களில் எவற்றில் இவ்வளவு சுருக்கமாக விளக்கமாகக் கடமையைக் ''கடன்'' என்ற சொல்லால் விளக்கியுள்ளார்?

 

குறிப்பாக, பெண்ணின் உரிமை மற்றும் கடமையை எண்ணிப் பார்த்த வள்ளுவர் பல நல்லுரைகளைச் சொல்லியிருப்பினும் அவளைத் ''தக்க'' என்ற அடைமொழி கொடுத்து, அழைத்து, ''தக்கவள்'' என்று சிறப்பிக்கும் பாங்கே பாங்கு ''மனைத்தக்க'' என்பதிலிருந்தே அவள் குடும்பத்தில் உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்பட்டிருக்கின்றாள் என்பது தெளிவு.

 

''தக்க'' என்ற பண்புச் சொல் எதை எதைத் தன்னுள் அடக்கிக் கொண்டு சிறக்கின்றது என்பதைப் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் கருத்து வழிக் கேட்போம்.

 

''தக்க'' என்பது தகுதி வாய்ந்த என்ற கருத்துச் சிறப்பது. இங்கே தகுதி என்பது அன்பு, அன்பின் வடிவான பாசம், நடுவுநிலைமை, அடக்க முடைமை, சமுதாய அறிவு, குறிப்புணர்தல், பிறர்க்குதவும் மனப்பான்மை கால இடச் சூழலுக்கு ஏற்ப நடக்கும் திறமை, தடைகளைத் தாங்கி முயற்சியில் தளராப் பொறுமை, வெற்றி கிட்டும் வரை விடாது உழைக்கும் விடா முயற்சி, முன்னறிந்து செயலாற்றும் திறம், திட்டமிட்டுப் படிப்படியாகச் செயலாற்றும் பண்பு ஆகியவற்றை உட்கொண்ட முழுமைப் பண்புத் தொகுதி ஆகும். (திருக்குறள் மணிவிளக்க உரை (பக். 178).

 

''உரிமை''யைப் பற்றித் திருவள்ளுவர் கருதும் சிறப்புப் பார்வையை இப்படியும் தொகுத்துக் காணலாம்.

 

சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சில, பல உரிமைகளைச் சமுதாயத்திலிருந்து பெற்றுள்ளனர். அவ் உரிமைகளை முழுமையாக நுகர வேண்டும் என எண்ணுகின்றனர். உரிமைகளுக்குத் தடை ஏற்பட்டால் தடையை உடைக்க விழைகின்றார். பொருள் சேர்ப்பது, அவற்றை அனுபவிப்பது, மணம் செய்து கொள்ளுவது, மணந்து கொண்டவனைத் தனக்கே உரிமை உடையவனாகக் கருதுவது, குழந்தைகளைப் பெறுவது அவர்களை வளர்ப்பது போன்ற பல்வேறு உரிமைகளைத் தமக்குச் சமுதாயம் வழங்கி இருப்பதாகக் கருதும் அதே மனிதர் பிறருக்கும் அந்த உரிமைகள் உண்டு என்பதை உள்ளார உள்ள வேண்டும். அப்போது தான் பிறர் உரிமைகளை மதிக்கும் பக்குவ நிலை - பண்பட்ட நிலை ஏற்படும். (டாக்டர் கு. மோகனராசு)

 

என்று கூறியுள்ளமை சிந்தனைக்குரிய செய்தியாகும்.

 

பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதுவும் மணமான பெண்ணைக் குறிக்கும்போது,

 

''பிறனொருவனின் உரிமை'' என்றே சிறப்புச்செய்து கூறியுள்ளார்.

 

''பிறன் பொருளாள், பிறனியலாள், பிறன்மனை, பிறற்குரியாள், பிறன்வரையாள்'' என்று கூறியிருப்பதிலிருந்தே பிறன் மனைவி விரும்பும் செயல் ''உரிமை மீறல்'' குற்றமாக நம் தி.பி.கோ. (அதிகாரம் 15) வாயிலாகக் காட்டியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

இதைப் போன்றே ஒருவன் சம்பாதித்து ஈட்டிய பொருளை வெஃகுதல் தவறு என்று ''வெஃகாமை''யிலும் திருடுவதைக் ''கள்ளாமை''யிலும் ''உரிமை மீறல்'' குற்றமாகத் திருவள்ளுவர் கூறியிருப்பது இ.பி.கோ.விற்கே முன்னோடியாக இருக்கின்றது அல்லவா?

 

தனிமனிதனிலிருந்து சமுதாயப் பார்வையைப் பார்க்கும் வள்ளுவர் குடி என்ற சொல்லைக் கையாண்டு, குடிமக்களின் பொறுப்புகளை உணர்த்துகிறார்.

 

''குடி'' என்னும் சொல் இருப்பிடம், குடியிருப்போர், குடிமக்கள், குடும்பம், உழவர், பரம்பரை என்ற பலபொருள்களில் வழங்கப்பட்டாலும் திருவள்ளுவர் ''தமிழ்க்குடி''யான தமிழரை எண்ணி - தமிழ்க் குடிமக்களை எண்ணி - அவர்கள் தாம் பிறந்த குடியின் தாழ்வுகளை நீக்கி, பெருமைகளைக் காத்து குடியின் பெருமையை உயர்த்த வேண்டும் எனப் பலபட எண்ணியுள்ளார்.

 

ஒருவன் குடிப்பண்பிலிருந்து வழுவினாலும் அவனைச் சார்ந்த குடிக்கே இழுக்கு என்று கூறியுள்ளதை எண்ண வேண்டும். மடியுடைமையும், சிறந்த பண்புகள் இன்மையும் உட்பகையும் குடிப்பெருமையை அழித்து விடும் என்று அடித்துச் சொல்கிறார்.

 

தான் பிறந்த குடிக்கு எவ்வகையிலும் பழியை விளைவிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். பிறராலும் தம் குடிக்குப் பழி ஏற்படுமோ என அஞ்சி அதற்கும் நாண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த,

 

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்(கு)

 

உறைபதி என்னும் உலகு

 

- - - (குறள் 1015)

 

என்று கூறும் நயத்தை வியந்து நோக்குக.

 

''குடிமகனுக்கு உயிரைவிட நாணம் பெரிது'' என்ற குடிப்பண்பை உணர்த்தி, ''குடியின் புகழை'' உயர்த்திக் காட்டிய அவரே ''தலையின் இழிந்த மயிரனையர்'' என்று குடியின் இகழுக்குக் காரணமானவனை ஏசுகின்றார்.

 

இன்று சமுதாயத்திற்காக இருக்கின்ற சட்டங்களை ''அரசியலமைப்புச் சட்டங்கள்'' என்கிறோம். திருவள்ளுவரின் சட்டங்களைச் ''சமுதாய அறச் சட்டங்கள்'' என்று உலகச் சான்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

Its sentences are counted as binding as the

 

Ten Commandments of the Jews

 

- Charles E. Gover

 

In one hundred and thirty three chapters it

 

treats of almost every veriety of subjects

 

pertaining to relations and duties of life

 

- Ward.

 

என்று மேல்நாட்டு அறிஞர்கள் புகழ்ந்து இருப்பதை இங்கு நினைவுகூர்தல் சிறப்புடையதாகும்.

 

எனவே, கடமை என்பது தனிமனிதன் தன் வாழ்விலும் குடிமகன் என்ற நிலையில் குடிநலனிலும், சமுதாயத்தின் அங்கம் என்ற வகையில் சமுதாய உயர்விலும், மனிதன் என்ற படிநிலையில் உலகத் தொண்டிலும் நாட்டம் செலுத்த வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் ஒருவர்தான் சிறப்பாகப் படம்பிடித்துள்ளார் எனலாம்.

 

இதே அடிப்படையில்தான் அரசியல் துறையினருக்கு அறிவுரை கூறும்போதும், ''படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண்'' என்ற ஆறு பெரும் பொறுப்புகளோடு பண்புடைமை, அஞ்சாமை, அறன் இழுக்காமை, அறிவுடைமை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, இன்சொல் உடைமை, செவிகைப்ப சொற் பொறுத்தல், துணிவுடைமை, தூங்காமை, பொச்சாவாமை, மடியின்மை, பெண்வழிச் சேராமை முதலிய நற்பண்புகளைப் பொறுப்புகளாகவும் கடமைகளாகவும் கருத வேண்டும் என்று பட்டியல் இட்டுக் காட்டியுள்ளார்.

 

''அறநெறியே அரசியலைத் தாங்கும் தூணாக அமைய வேண்டும்'' என்பதே ''வள்ளுவர் உள்ளம்'' என்று தெரிய வேண்டும். அதனால் தான் ''முறை செய்து'' என்ற அழகான சொல்லால் அரசியலார்க்கு அறிவுரை கூறியுள்ளார். அரசியலில் உள்ளோர் ''முறைசெய்து'' மக்களைக் காத்திடின் ''முறைசெய்யக் குறை'' என்ன இருக்க முடியும். ''முறைசெய்து'' என்ற சொற்றொடர்தான் அரசியலார் தம் பொறுப்புணர உணர்த்திய ''செஞ்சொல்'' என நினைவு கூர்க. விரிந்து பொருள் காண்க. இதன் பரப்பே ''அரசியல்'' எனவாகும்.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உரை திருக்குறள் ஐம்பெரும் விழா - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உரை
ஐரோப்பியத் தமிழறிஞர் பிரான்சிஸ் ஒயிட் (எல்லீசன்) நினைவுநாள் பகிர்வோம்! ஐரோப்பியத் தமிழறிஞர் பிரான்சிஸ் ஒயிட் (எல்லீசன்) நினைவுநாள் பகிர்வோம்!
தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்? தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்?
Management Principles in Thirukkural Management Principles in Thirukkural
III – BBA MANAGEMENT CONCEPT IN THIRUKURAL - Bharathidasan University III – BBA MANAGEMENT CONCEPT IN THIRUKURAL - Bharathidasan University
Management Lessons from Thirukkural - ashokbhatia Management Lessons from Thirukkural - ashokbhatia
Thirukkurals on  Management Thirukkurals on Management
Tirukkural Translations of G. U. Pope and Rajaji – A Comparative Study - J. Jaya Parveen and V. Rajesh Tirukkural Translations of G. U. Pope and Rajaji – A Comparative Study - J. Jaya Parveen and V. Rajesh
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.