|
||||||||
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !! |
||||||||
![]() முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் இன்று பரபப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்சனை : 1979 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கேரளா அரசு, அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து, 136 அடியாக குறைத்தது. அணையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பின், மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு கூறியது. ஆனால் பராமரிப்பு பணி முடிந்தும் மீண்டும், நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 2006ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மராமத்து பணிகள் முடிவடைந்த பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து நடவடிக்கை எடுத்த கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு ஏற்றவாறு கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு மாநில அரசின் முடிவுகளில் அண்டை மாநிலங்கள் தலையிடக்கூடாது என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், அணை மிகவும் பலமாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தரப்பட்டது. நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை அளித்த பின்னரும், கேரள அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. கேரளா அரசு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தின் அறிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு புதிய குழுவை நியமிக்க வேண்டுமென கோர்ட்டில் வலியுறுத்தியது. கேரள அரசின் இந்த வாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் நியமித்த இந்த குழுவானது ஏசி அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், நேரடியாக களத்தில் இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்தனர் என்றும் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்து இருந்தார். இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ந் தேதி முடிவடைந்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முழு விவரம் பின்வருமாறு, முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், கேரள அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. எனவே, அந்த சட்டம் செல்லாது. அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லை பெரியாறு திட்டத்தில் புதிய அணை கட்டவும் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். |
||||||||
by Swathi on 07 May 2014 1 Comments | ||||||||
Tags: முல்லை பெரியார் அணை உச்ச நீதிமன்றம் Mullaperiyar Dam Mullaperiyar Dam Problem Mullaperiyar Dam Issue | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|