LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி


2.61 திருவெண்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
655     உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே.     01
656     நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.     02
657     தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.     03
658    நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே.     04
659     பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.     05
660     ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.     06
661     கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.     07
662    வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.     08
663     கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.     09
664     பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.     10
665    விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.     11

திருச்சிற்றம்பலம்


2.62 திருமீயச்சூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    666    காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
    பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
    மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
    மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.     01
    667     பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
    நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
    ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
    மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.     02
    668     பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
    மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
    தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்
    கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே.     03
    669     வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
    பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
    நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
    மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.     04
    670     விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
    படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
    பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
    விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.     05
    671     குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
    ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
    நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
    மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.     06
    672    நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
    கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
    காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
    மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.     07
    673     புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
    ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
    வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
    மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.     08
    674     காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
    போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்
    கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
    மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.     09
    675     கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
    கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
    பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
    விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.     10
    676     வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
    நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
    பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
    ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.     11
    > இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    677    மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
    துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
    அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
    பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.     01
    678     மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
    ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
    நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
    பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.     02
    679     பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண்
    டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
    கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
    பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.     03
    680     வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
    கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
    அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
    பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.     04
    681     என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை
    மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
    அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்
    பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.     05
    682     வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
    வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
    தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
    புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.     06
    683     நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
    சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
    அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
    புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.     07
    684     இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
    பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்
    வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
    புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.     08
    685    முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட
    ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
    கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
    புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.     09
    686     கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
    மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
    பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
    ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.     10
    687    நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
    பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
    செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
    அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.     11
    இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.64 திருமுதுகுன்றம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    688    தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
    ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
    ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
    மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.     01
    689     எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
    சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
    மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
    முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே.     02
    690     நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந்
    தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
    பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
    மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே.     03
    691     தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
    குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
    இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
    முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.     04
    692     வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
    சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
    கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும்
    முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.     05
    693     வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
    நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
    கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
    மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    694     வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
    நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
    பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
    மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.     08
    695     அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
    சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
    கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
    முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.     09
    696     கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
    றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில்
    திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
    முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.     10
    697    அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
    முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக்
    குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
    பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.65 திருப்பிரமபுரம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    698    கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
    மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
    பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
    பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.     01
    699    கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
    ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
    தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
    பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.     02
    700     சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
    கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
    மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
    பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.     03
    701     நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
    கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
    மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
    பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.     04
    702     தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
    ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
    ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
    பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.     05
    703     விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
    அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
    வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
    பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.     06
    704     பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
    கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
    துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
    பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.     07
    705    பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
    அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
    புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
    பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.     08
    706     அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
    கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
    படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
    பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.     09
    707     வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
    அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
    உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
    பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.     10
    708    பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
    அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
    நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
    விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    709    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.     01
    710     வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
    ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
    சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.     02
    711     முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
    சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.     03
    712     காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
    பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
    மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
    சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.     04
    713    பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
    பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
    ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
    தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.     05
    714     அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
    வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
    பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
    திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.     06
    715     எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
    பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
    துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
    அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.     07
    716     இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
    பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.     08
    717    மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
    மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
    ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
    ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.     09
    718    குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
    கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
    எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
    அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.     10
    719    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
    போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.67 திருப்பெரும்புலியூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    720    மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
    விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
    கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
    பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.     01
    720     துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
    மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக்
    கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
    பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     02
        * கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை
    யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.
    722     கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்
    துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்
    வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
    பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     03
    723    ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
    பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
    ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
    பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.     04
    724     தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
    காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
    நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
    பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     05
    725     கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
    முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
    மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்
    பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.     06
    726     மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
    குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
    கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
    பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.     07
    727     உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
    துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
    மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
    பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     08
    728     சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
    நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
    தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
    பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     09
    729     உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
    கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
    கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
    பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.     10
    730    பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
    நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
    மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
    நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.68 திருக்கடம்பூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    731    வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத்
    தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
    கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
    தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.     01
    732    அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
    விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப்
    பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
    இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே.     02
    733    *இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத்
    தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
    ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
    புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே.     03
        * இளி - என்பது ஏழிசையிலொன்று.
    734     பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங்
    கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
    மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
    பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.     04
    735     தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
    நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
    காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
    பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.     05
    736     தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக்
    கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
    பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
    பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.     06
    737     பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
    கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
    ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
    புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.     07
    738     பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
    காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
    மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித்
    தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.     08
    739     திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
    இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
    கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
    மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.     09
    740     ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச்
    சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
    வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
    காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.     10
    741     விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
    கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
    நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
    படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    742    பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
    கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
    எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
    பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     01
    743     தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
    வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
    நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
    பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.     02
    744     சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
    புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
    விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
    படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     03
    745    நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
    கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
    மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
    பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     04
    746     போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
    ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
    நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்
    பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.     05
    747     கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
    பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
    வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
    படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     06
    748     ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்
    தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
    கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
    பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     07
    749     புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
    பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்
    கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
    பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.     08
    750    திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
    பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
    மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
    பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.     09
    751     புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
    மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
    சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
    பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.     10
    752    கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
    பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்
    சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
    நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.     11
    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    753    பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
    புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
    அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
    பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.     01
    754     வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
    தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
    கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
    காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.     02
    755     புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
    நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
    அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
    பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.     03
    756     வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
    தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
    தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
    கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.     04
    757     தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
    இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
    நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
    பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.     05
    758     தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
    அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
    விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து
    கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.     06
    759     சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
    ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
    ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி
    பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.     07
    760     புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
    நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
    விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
    திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.     08
    761     சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
    பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
    நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத
    வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.     09
    762     செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
    கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
    விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்
    கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.     10
    763     கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
    நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
    நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
    அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.     11
    764     காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
    பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை
    நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
    மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.     12
    இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்
    றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
    நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று
    திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.

    திருச்சிற்றம்பலம்

    
    2.71 திருக்குறும்பலா
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    765    திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
    பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
    இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
    குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.     01
    766     நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
    ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
    கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட
    கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.     02
    767     வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி
    ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
    பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
    கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.     03
    768     பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக்
    கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
    நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
    கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.     04
    769     தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி
    முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
    மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
    குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.     05
    770     நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்
    கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
    ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
    கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.     06
    771     பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப்
    பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி
    மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்
    குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.     07
    772     ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச்
    சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
    பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்
    கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.     08
    773     அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
    விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்
    மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
    குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.     09
    774     மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
    காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
    நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்
    கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.     10
    775     கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
    நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
    இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
    தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.     11
    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.
    சுவாமிபெயர் - குறும்பலாநாதர்,
    தேவியார் - குழன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.72 திருநணா
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    776    பந்தார் விரல்மடவாள் பாகமா
        நாகம்பூண் டேற தேறி
        அந்தார் அரவணிந்த அம்மா
        னிடம்போலும் அந்தண் சாரல்
        வந்தார் மடமந்தி கூத்தாட
        வார்பொழிலில் வண்டு பாடச்
        செந்தேன் தெளியொளிரத் தேமாக்
        கனியுதிர்க்குந் திருந ணாவே.     01
    777     நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
        மற்றொருகை வீணை யேந்தி
        ஈட்டுந் துயரறுக்கும் எம்மா
        னிடம்போலு மிலைசூழ் கானில்
        ஓட்டந் தருமருவி வீழும்
        விசைகாட்ட முந்தூ ழோசைச்
        சேட்டார் மணிகள் அணியுந்
        திரைசேர்க்குந் திருந ணாவே.     02
    778     நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
        பாகமாய் ஞால மேத்த
        மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
        கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
        குன்றோங்கி வன்றிரைகள் மோத
        மயிலாலுஞ் சாரற் செவ்வி
        சென்றோங்கி வானவர்க ளேத்தி
        அடிபணியுந் திருந ணாவே.     03
    779     கையில் மழுவேந்திக் காலிற்
        சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
        மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்
        கிடம்போலு மிடைந்து வானோர்
        ஐய ரவரெம் பெருமா
        னருளென்றென் றாத ரிக்கச்
        செய்ய கமலம் பொழிதே
        னளித்தியலுந் திருந ணாவே.     04
    780     முத்தேர் நகையா ளிடமாகத்
        தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
        தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
        ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
        அத்தேன் அளியுண் களியா
        லிசைமுரல ஆலத் தும்பி
        தெத்தே யெனமுரலக் கேட்டார்
        வினைகெடுக்குந் திருந ணாவே.     05
    781     வில்லார் வரையாக மாநாகம்
        நாணாக வேடங் கொண்டு
        புல்லார் புரமூன் றெரித்தார்க்
        கிடம்போலும் புலியு மானும்
        அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
        கைகூப்ப அடியார் கூடிச்
        செல்லா வருநெறிக்கே செல்ல
        அருள்புரியுந் திருந ணாவே.     06
    782     கானார் களிற்றுரிவை மேல்மூடி
        ஆடரவொன் றரைமேற் சாத்தி
        ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
        றானுகந்த கோயி லெங்கும்
        நானா விதத்தால் விரதிகள்நன்
        னாமமே யேத்தி வாழ்த்தத்
        தேனார் மலர்கொண் டடியார்
        அடிவணங்குந் திருந ணாவே.     07
    783     மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
        வலிதொலைய விரலா லூன்றி
        முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்
        கிடம்போலும் முநனைசேர் சீயம்
        அன்னீர் மைகுன்றி அழலால்
        விழிகுறைய வழியு முன்றில்
        செந்நீர் பரப்பச் சிறந்து
        கரியொளிக்குந் திருந ணாவே.     08
    784     மையார் மணிமிடறன் மங்கையோர்
        பங்குடையான் மனைக டோ றும்
        கையார் பலியேற்ற கள்வன்
        இடம்போலுங் கழல்கள் நேடிப்
        பொய்யா மறையானும் பூமி
        யளந்தானும் போற்ற மன்னிச்
        செய்யார் எரியாம் உருவ
        முறவணங்குந் திருந ணாவே.     09
    785     ஆடை யொழித்தங் கமணே
        திரிந்துண்பார் அல்லல் பேசி
        மூடு உருவம் உகந்தார்
        உரையகற்றும் மூர்த்தி கோயில்
        ஓடு நதிசேரும் நித்திலமும்
        மொய்த்தகிலுங் கரையில் சாரச்
        சேடர் சிறந்தேத்தத் தோன்றி
        யொளிபெருகுந் திருந ணாவே.     10
    786     கல்வித் தகத்தால் திரைசூழ்
        கடற்காழிக் கவுணி சீரார்
        நல்வித் தகத்தால் இனிதுணரும்
        ஞானசம் பந்தன் எண்ணுஞ்
        சொல்வித் தகத்தால் இறைவன்
        திருநணா ஏத்து பாடல்
        வல்வித் தகத்தான் மொழிவார்
        பழியிலரிம் மண்ணின் மேலே.     11
    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி
    காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப்
    பெயர் வழங்கப்படுகின்றது.
    சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,
    தேவியார் - வேதமங்கையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    787    விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
        புகலிவெங் குருமேற் சோலை
        வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்
        சிரபுரம்வண் புறவ மண்மேல்
        களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
        கொச்சைகழு மலமென் றின்ன
        இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
        பகையெறிவித் திறைவ னூரே.     01
    788     திருவளருங் கழுமலமே கொச்சைதே
        வேந்திரனூர் அயனூர் தெய்வத்
        தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
        காழிதகு சண்பை யொண்பா
        வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
        தோணிபுரம் உயர்ந்த தேவர்
        வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
        கண்டத்தோன் விரும்புமூரே.     02
    789     வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
        பூந்தராய் சிலம்பன் வாழூர்
        ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
        காழியிறை கொச்சை யம்பொன்
        வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
        மிக்கயனூர் அமரர் கோனூர்
        ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
        தரன்நாளும் அமரு மூரே.     03
    790     மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
        புகலிதராய் தோணிபுரம் வான்
        சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
        கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
        பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
        சிலம்பனூர் காழி சண்பை
        பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
        பயன்நுகர்வோர் பரவு மூரே.
        04
        *தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
    791     வயங்கொச்சை தயங்கு பூமேல்
    விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
        விண்ணவர்தங் கோனூர் வென்றித்
        திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
        வம்பெருகு தோணிபுரஞ் சீர்
        உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
        உலகத்தில் உயர்ந்த வூரே.     05
    792     புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
        சிரபுரம்பூங் காழி சண்பை
        எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
        பூந்தராய் தோணிபுரஞ் சீர்
        வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
        கொச்சைவா னவர்தங் கோனூர்
        அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
        யுதைத்துகந்த அப்ப னூரே.     06
    793     வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
        கோனூர்வண் புகலி யிஞ்சி
        வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
        சண்பைவியன் காழி கொச்சை
        கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
        தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
        பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
        பால்வண்ணன் பயிலு மூரே.     07
    794     மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
        சிலம்பனூர் காழி மூதூர்
        நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
        வேணுபுரங் கமல நீடு
        கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
        தராய்தோணி புரங்கூ டப்போர்
        தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
        செற்றமலைச் சிலைய னூரே.     08
    795     இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
        பூந்தராய் சிலம்பன் தன்னூர்
        நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்
        தயனூர்சீர்த் தேவர் கோனூர்
        வரக்கரவாப் புகலிவெங் குருமாசி
        லாச்சண்பை காழி கொச்சை
        அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்
        தணர்வேத மறாத வூரே.     09
    796     மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
        கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
        நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
        குருப்புகலி தராய்தூ நீர்மேல்
        சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
        சிலம்பனூர் செருச்செய் தன்று
        மாலோடும் அயனறியான் வண்காழி
        சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.     10
    797     ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
        கொச்சைகழு மலமன் பானூர்
        ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
        சிரபுரமொண் புறவ நண்பார்
        பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
        புகலிவெங் குருவு மென்பர்
        சாக்கியரோ டமண்கையர் தாமறியா
        வகைநின்றான் தங்கு மூரே.     11
    798     அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
        தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
        புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
        புகழ்க்காழி சண்பை தொல்லூர்
        மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
        வேணுபுரம் அயனூர் மேலிச்
        சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
        தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.     12

    திருச்சிற்றம்பலம்

    
    2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    799    பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
        குறைவிலாப் புகலி பூமேல்
        மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
        பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
        சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
        புகழ்ச்சண்பை காழி கொச்சை
        காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
        கழுமலம்நாங் கருது மூரே.     01
    800     கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
        தோணிபுரம் கனக மாட
        உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
        யுலகாருங் கொச்சை காழி
        திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
        செங்கமலத் தயனூர் தெய்வத்
        தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
        முடியண்ணல் தங்கு மூரே.     02
    801     ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
        யொளிமருவு காழி கொச்சை
        கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
        தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
        சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்
        புறவம்அய னூர்பூங் கற்பத்
        தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
        குருக்கங்கை தரித்தோ னூரே.     03
    802     தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
        தோணிபுரந் தரியா ரிஞ்சி
        எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
        தராய்புகலி யிமையோர் கோனூர்
        தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
        சண்பைசெழு மறைக ளெல்லாம்
        விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
        னூருலகில் விளங்கு மூரே.     04
    803     விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
        வேணுபுரம் மேக மேய்க்கும்
        இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
        யெழிற்புகலி புறவம் ஏரார்
        வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
        சிரபுரம்வன் னஞ்ச முண்டு
        களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
        மன்னுடலங் காய்ந்தோ னூரே.     05
    804     காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
        கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
        ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
        இருங்கமலத் தயனூர் இன்பம்
        வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
        தராய்கொச்சை காழி சண்பை
        சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
        பகைகெடுத்தோன் திகழு மூரே.     06
    805     திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
        பிரமனூர் காழி தேசார்
        மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
        வயங்கொச்சை புறவம் விண்ணோர்
        புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
        குருவெம்போர் மகிடற் செற்று
        நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
        பணிந்துலகில் நின்ற வூரே.     07
    806     நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
        புரநிகழும் வேணு மன்றில்
        ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
        சண்பைவளர் புறவ மோடி
        சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
        தராய்புகலி தேவர் கோனூர்
        வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
        தாங்காக்க மிக்க வூரே.     08
    807     மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
        வஞ்சண்பை காழி கொச்சை
        தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
        பூந்தராய் சிலம்பன் சேரூர்
        மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
        வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
        ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
        டழித்துகந்த எம்மா னூரே.     09
    808     எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
        கழுமலநற் புகலி யென்றும்
        பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
        தரனூர்நற் றோணிபுரம் போர்க்
        கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
        னூர்தராய் சண்பை காரின்
        மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
        விளங்கியஎம் இறைவ னூரே.     10
    809     இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
        னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
        குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
        புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
        சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
        கொச்சைகழு மலந்தே சின்றிப்
        பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
        பரிசறியா அம்மா னூரே.     11
    810     அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
        குருக்கொச்சை புறவ மஞ்சீர்
        மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
        தோணிபுரந் தேவர் கோனூர்
        அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
        வழிமுடக்கு மாவின் பாச்சல்
        தம்மானொன் றியஞான சம்பந்தன்
        தமிழ்கற்போர் தக்கோர் தாமே.     12

    திருச்சிற்றம்பலம்

    
    2.75 சீகாழி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    811    விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
    பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
    கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
    மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.     01
    812     வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
    பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
    கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
    நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.     02
    813     சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
    துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
    கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
    மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே.     03
    814     பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
    மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
    கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
    தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.     04
    815     தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
    நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்
    கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
    தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.     05
    816     சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
    மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
    கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
    பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.     06
    817     முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
    அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
    கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
    கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.     07
    818     வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
    கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
    நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
    தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே.     08
    819     மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
    இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
    வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
    கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.     09
    820     நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
    அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
    கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
    வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.     10
    821     கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
    அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
    வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
    விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.76 திருஅகத்தியான்பள்ளி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    822    வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
    நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
    ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்
    பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.     01
    823     துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
    மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
    அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
    உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.     02
    824     உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்
    கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
    அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.     03
    825     காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
    பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
    ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.     04
    826     போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
    கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
    கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.     05
    827     தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
    எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
    அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.     06
    828     ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்
    சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
    ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
    நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.     07
    829     செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்
    ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
    அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
    இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.     08
    830     சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
    அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
    பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
    பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.     09
    831     செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
    புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
    அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்
    சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.     10
    832     ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
    ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
    சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
    மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அகத்தீசுவரர்,
    தேவியார் - மங்கைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.77 திருஅறையணிநல்லூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    833    பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
    வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
    சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
    ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.     01
    834     இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
    நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்
    அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
    தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.     02
    835     என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
    பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
    முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
    கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.     03
    836     விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
    உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
    அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
    பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.     04
    837     தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
    ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
    மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
    பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.     05
    838     விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
    அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
    நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
    உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.     06
    839     வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
    ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
    ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
    வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.     07
    840     தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
    முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
    அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
    நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.     08
    841     வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
    செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
    ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்
    சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.     09
    842     வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
    சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
    ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்
    பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.     10
    843     கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
    பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
    மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்
    கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.78 திருவிளநகர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    844    ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
    குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
    நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
    மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.     01
    845     அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
    டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
    புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
    மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.     02
    846     வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்
    தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
    காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
    மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.     03
    847     கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
    நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
    மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
    மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.     04
    848     பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
    துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
    சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
    மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.     05
    849     தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்
    யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
    மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
    மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.     06
    850     சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
    கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
    மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
    விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.     07
    851     படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
    அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
    விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
    மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.     08
    852     கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
    பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
    மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
    மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.     09
    853     உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
    உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
    உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
    உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.     10
    854     மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
    நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
    இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
    துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.79 திருவாரூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    855    கவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
        பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
        சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
        போலநீ வெள்கி னாயே
        கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
        தேறிய காள கண்டன்
        அவனதா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     01
    856     தந்தையார் போயினார் தாயரும்
        போயினார் தாமும் போவார்
        கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
        பார்க்கின்றார் கொண்டு போவார்
        எந்தநாள் வாழ்வதற் கேமனம்
        வைத்தியால் ஏழை நெஞ்சே
        அந்தணா ரூர்தொழு துய்யலா
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     02
    857     நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
        ஆக்கைதான் நிலாய தன்றால்
        குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
        காதெனக் குலுங்கி னாயே
        வணங்குவார் வானவர் தானவர்
        வைகலும் மனங்கொ டேத்தும்
        அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     03
    858     நீதியால் வாழ்கிலை நாள்செலா
        நின்றன நித்த நோய்கள்
        வாதியா ஆதலால் நாளும்நாள்
        இன்பமே மருவி னாயே
        சாதியார் கின்னரர் தருமனும்
        வருணனும் ஏத்து முக்கண்
        ஆதியா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     04
    859     பிறவியால் வருவன கேடுள
        ஆதலாற் பெரிய இன்பத்
        துறவியார்க் கல்லது துன்பம்நீங்
        காதெனத் தூங்கி னாயே
        மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
        தீர்த்தநீர் மல்கு சென்னி
        அறவனா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     05
    860     செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
        தேரையாய்ச் சிறு பறவை
        கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
        லாமென்று கருதி னாயே
        முடிகளால் வானவர் முன்பணிந்
        தன்பரா யேத்து முக்கண்
        அடிகளா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     06
    861     ஏறுமால் யானையே சிவிகையந்
        தளகமீச் சேர்ப்பி வட்டில்
        மாறிவா ழுடம்பினார் படுவதோர்
        நடலைக்கு மயங்கி னாயே
        மாறிலா வனமுலை மங்கையோர்
        பங்கினர் மதியம் வைத்த
        ஆறனா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     07
    862     என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
        சுவரெறிந் திதுநம் இல்லம்
        புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
        லாமையான் முகடு கொண்டு
        முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
        குரம்பையின் மூழ்கி டாதே
        அன்பனா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     08
    863     தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
        புத்திரர் தார மென்னும்
        பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
        கில்லெனப் பற்றி னாயே
        வெந்தநீ றாடியார் ஆதியார்
        சோதியார் வேத கீதர்
        எந்தையா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     09
    864     நெடியமால் பிரமனும் நீண்டுமண்
        ணிடந்தின்னம் நேடிக் காணாப்
        படியனார் பவளம்போல் உருவனார்
        பனிவளர் மலையாள் பாக
        வடிவனார் மதிபொதி சடையனார்
        மணியணி கண்டத் தெண்டோ ள்
        அடிகளா ரூர்தொழு துய்யலாம்
        மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.     10
    865     பல்லிதழ் மாதவி அல்லிவண்
        டியாழ்செயுங் காழி யூரன்
        நல்லவே நல்லவே சொல்லிய
        ஞானசம் பந்தன் ஆரூர்
        எல்லியம் போதெரி யாடுமெம்
        மீசனை யேத்து பாடல்
        சொல்லவே வல்லவர் தீதிலார்
        ஓதநீர் வைய கத்தே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.80 திருக்கடவூர்மயானம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    866    வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
    எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
    கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே.     01
    867     மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக்
    கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்
    அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.     02
    868     ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்
    காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
    ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.     03
    869     இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்
    மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
    கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.     04
    870     வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
    துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்
    கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.    05
    871     பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
    ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்
    கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.     06
    872     பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்
    ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
    காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.     07
    873     செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற்
    கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
    மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
    பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.    08
    874     வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
    கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்
    பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.     09
    875     தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள்
    காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
    தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்
    பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.     10
    876     மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
    அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப்
    பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
    இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.81 திருவேணுபுரம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    877    பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
    ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
    வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
    பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.     01
    878     சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
    உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
    அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
    படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.     02
    879     கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
    திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
    மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
    பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.     03
    880     நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
    ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
    சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
    கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.     04
    881     ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
    சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
    காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
    பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.     05
    882     மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
    துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
    பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
    தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.     06
    883     நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
    கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
    ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.     07
    884     இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
    விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
    கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
    விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.     08
    885     தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
    போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
    பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
    சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.     09
    886     நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
    புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
    நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
    விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.     10
        இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.82 திருத்தேவூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    887    பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
    விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
    தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
    அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே.     01
    888     ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
    சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
    தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
    ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.     02
    889     மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
    கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
    செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
    அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.     03
    890     முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்
    பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
    சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
    அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.     04
    891     பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
    கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
    தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
    ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.     05
    892     பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
    மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
    திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
    அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.     06
    893     வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
    தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
    தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
    அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.     07
    894     தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து
    வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
    தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்
    அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.     08
    895     முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா
    எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
    செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்
    அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.     09
    896     பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
    கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
    தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்
    ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.     10
    897     அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
    நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
    எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
    தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தேவகுருநாதர், தேவியார் - தேன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.83 திருக்கொச்சைவயம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    898    நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
        நெடுமா வுரித்த நிகரில்
        சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
        திகழ்தேவன் மேவு பதிதான்
        வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
        விழவோசை வேத வொலியின்
        சாலநல் வேலையோசை தருமாட வீதி
        கொடியாடு கொச்சை வயமே.     01
    899     விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
        விகிர்தத் துருக்கொள் விமலன்
        சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
        தகவைத்த சோதிபதி தான்
        மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து
        கமலத்து வைகும் வயல்சூழ்
        கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
        வளர்கின்ற கொச்சை வயமே.     02
    900     படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
        களைவிக்கும் எங்கள் பரமன்
        இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
        இடமாய வேர்கொள் பதிதான்
        நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
        நளிர்சோலை கோலு கனகக்
        குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
        மறையோது கொச்சை வயமே.     03
    901     எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
        முயல்வுற்ற சிந்தை முடுகி
        பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
        பணிவுற்ற பாதர் பதிதான்
        மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
        வயல்பாய வாளை குழுமிக்
        குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
        வளர்கின்ற கொச்சை வயமே.     04
    902     பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
        னொடுதோழ மைக்கொள் பகவன்
        இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
        இறைவன் இடங்கொள் பதிதான்
        முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
        வளர்தூம மோடி யணவிக்
        குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
        நிறைகின்ற கொச்சை வயமே.     05
    903     புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
        வுடையான் நினைக்கு மளவில்
        நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
        நலமா இருந்த நகர்தான்
        கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
        யுடையார் நிறைந்து வளரப்
        பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
        வரைமேவு கொச்சை வயமே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    904     மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
        முடியோடு தோள்கள் நெரியப்
        பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
        டுடனாடி மேய பதிதான்
        இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
        விடுமூச லன்ன கமுகின்
        குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
        அடிதேடு கொச்சை வயமே.     08
    905     வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
        முழுதுண்ட மாலும் இகலிக்
        கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
        அறியாத சோதி பதிதான்
        நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
        விரைதேரப் போது மடுவிற்
        புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
        வயல்மேவு கொச்சை வயமே.     09
    906     கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
        இடுசீவ ரத்தி னுடையார்
        மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
        விகிர்தத் துருக்கொள் விமலன்
        பையுடை நாகவாயில் எயிறார மிக்க
        குரவம் பயின்று மலரச்
        செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
        மணநாறு கொச்சை வயமே.     10
    907     இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
        உலகங்க ளேழு முடனே
        மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
        இனிதா இருந்த மணியைக்
        குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
        தமிழ்மாலை பாடு மவர்போய்
        அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
        அழகா இருப்ப தறிவே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.84 திருநனிபள்ளி
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    908    காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
        படர்தொடரி கள்ளி கவினிச்
        சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
        சிவன்மேய சோலை நகர்தான்
        தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
        குதிகொள்ள வள்ளை துவள
        நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     01
    909     சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
        வளர்திங்கள் கண்ணி அயலே
        இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
        யிறைவன்னி டங்கொள் பதிதான்
        மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
        மணநாறும் நீல மலரும்
        நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை
        நனிபள்ளி போலு நமர்காள்.     02
    910     பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
        ஒழிபாடி லாத பெருமான்
        கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
        யிடமாய காதல் நகர்தான்
        வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
        விடுபோ தலர்ந்த விரைசூழ்
        நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     03
    911     குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
        தலைமாலை யோடு குலவி
        ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
        வுடையா னுகந்த நகர்தான்
        குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
        பெடைவண்டு தானும் முரல
        நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     04
    912     தோடொரு காதனாகி யொருகா திலங்கு
        சுரிசங்கு நின்று புரளக்
        காடிட மாகநின்று கனலாடு மெந்தை
        யிடமாய காதல் நகர்தான்
        வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
        வெறிநீர் தெளிப்ப விரலால்
        நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     05
    913     மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
        மலையான் மடந்தை மணிபொன்
        ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை
        பெருமான் அமர்ந்த நகர்தான்
        ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப
        அகிலுந்தி யொண்பொன் இடறி
        நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும்
        நனிபள்ளி போலு நகர்காள்.     06
    914     தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
        கொடுகொட்டி வீணை முரல
        வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
        பெருமான் உகந்த நகர்தான்
        புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
        பணிவார்கள் பாடல் பெருகி
        *நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
        நனிபள்ளி போலு நமர்காள்.     07
        * பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது
    சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில்,
    முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா
    லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப்
    பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.
    915     வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
        மதியா அரக்கன் வலியோ
        டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
        பெருமான் உகந்த நகர்தான்
        நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
        எனநின்ற நீதி யதனை
        நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     08
    916     நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
        தொருநீர்மை சீர்மை நினையார்
        அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
        அறியாத அண்ணல் நகர்தான்
        புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
        புனைகொன்றை துன்று பொதுளி
        நறவிரி போதுதாது புதுவாச நாறும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     09
    917     அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
        இடவுண்டு பட்ட அமணும்
        மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
        குணமின்றி நின்ற வடிவும்
        வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
        விடையா னுகந்த நகர்தான்
        நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
        நனிபள்ளி போலு நமர்காள்.     10
    918     கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
        கமழ்காழி என்று கருத
        படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
        பதியான ஞான முனிவன்
        இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
        னிசையா லுரைத்த பனுவல்
        நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
        வினைகெடுதல் ஆணை நமதே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.85 கோளாறு திருப்பதிகம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    919    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
        மிகநல்ல வீணை தடவி
        மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
        சனிபாம்பி ரண்டு முடனே
        ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     01
    920     என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
        எருதேறி யேழை யுடனே
        பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
        உளமே புகுந்த அதனால்
        *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
        உடனாய நாள்க ளவைதாம்
        அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     02
        *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத
    12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
    விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
    ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
    நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
    நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
    மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
    12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
    கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
    ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
    921     உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
        உமையோடும் வெள்ளை விடைமேன்
        முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
        திசை தெய்வ மானபலவும்
        அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     03
    922     மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
        மறையோது மெங்கள் பரமன்
        நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
        கொடுநோய்க ளான பலவும்
        அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     04
    923     நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
        விடையேறும் நங்கள் பரமன்
        துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
        மிகையான பூத மவையும்
        அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     05
    924     வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
        மடவாள் தனோடு முடனாய்
        நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
        உளமே புகுந்த அதனால்
        கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
        கொடுநாக மோடு கரடி
        ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     06
    925     செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
        விடையேறு செல்வ னடைவார்
        ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
        வினையான வந்து நலியா
        அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     07
    926     வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
        மடவாள் தனோடும் உடனாய்
        வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
        உளமே புகுந்த அதனால்
        ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
        இடரான வந்து நலியா
        ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     08
    927     பலபல வேடமாகும் பரனாரி பாகன்
        பசுவேறும் எங்கள் பரமன்
        சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
        வருகால மான பலவும்
        அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     09
    928     கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
        குணமாய வேட விகிர்தன்
        மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
        உளமே புகுந்த அதனால்
        புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
        திருநீறு செம்மை திடமே
        அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
        அடியா ரவர்க்கு மிகவே.     10
    929     தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
        வளர்செம்பொன் எங்கும் நிகழ
        நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
        மறைஞான ஞான முனிவன்
        தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
        நலியாத வண்ணம் உரைசெய்
        ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
        அரசாள்வர் ஆணை நமதே.     11
    இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.

    திருச்சிற்றம்பலம்

    
    2.86 திருநாரையூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    930    உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
        செயல்தீங்கு குற்ற முலகில்
        வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
        மிகவேத்தி நித்தம் நினைமின்
        வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
        வளர்கங்குல் நங்கை வெருவ
        திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     01
    931     ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
        பிணிநோ யொருங்கும் உயரும்
        வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
        விதியான வேத விகிர்தன்
        கானிடை யாடிபூதப் படையா னியங்கு
        விடையான் இலங்கு முடிமேல்
        தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
        திருநாரை யூர்கை தொழவே.     02
    932     ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
        துயருற்ற தீங்கு விரவிப்
        பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
        ஒழிவுற்ற வண்ண மகலும்
        போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
        புகழ்வானு ளோர்கள் புணருந்
        தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
        திருநாரை யூர்கை தொழவே.     03
    933     தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
        வினைசெற்ற வுற்ற உலகின்
        தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
        நிலையாக நின்று மருவும்
        பேயுற வாயகானில் நடமாடி கோல
        விடமுண்ட கண்டன் முடிமேல்
        தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     04
    934     வசையப ராதமாய வுவரோத நீங்குந்
        தவமாய தன்மை வரும்வான்
        மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
        விரிநூலர் விண்ணும் நிலனும்
        இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
        யமையாத காத லொடுசேர்
        திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     05
    935     உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
        உணர்வாக்கும் உண்மை உலகில்
        குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
        நிறைவாற்று நேசம் வளரும்
        மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
        அரவார்த்த அண்ணல் கழலே
        திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
        திருநாரை யூர்கை தொழவே.     06
    936     தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
        வருதிக் குழன்ற உடலின்
        இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
        நினைவொன்று சிந்தை பெருகும்
        முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
        சரமுன் றெரிந்த அவுணர்
        சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     07
    937     உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
        நனியஞ்சு மாத லுறநீர்
        மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
        அழிபா டிலாத கடலின்
        அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
        அழியத் தடக்கை முடிகள்
        திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     08
    938     வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
        பகைதீர்க்கு மேய வுடலில்
        தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
        கரவைக் கரந்து திகழுஞ்
        சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
        திருமாலும் நேட எரியாய்ச்
        சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     09
    939     மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
        வெளியாக்கு முன்னி யுணரும்
        படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
        ஒலிபாடி யாடி பெருமை
        உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
        உரைமாயும் வண்ணம் அழியச்
        செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழவே.     10
    940     எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
        பெருமானை உள்கி நினையார்
        திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
        திருநாரை யூர்கை தொழுவான்
        பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
        உரைமாலை பத்தும் மொழிவார்
        திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
        துளதென்பர் செம்மை யினரே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.87 திருநறையூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    941    நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
        யரியான்மு னாய வொளியான்
        நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
        யுறுதீயு மாய நிமலன்
        ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
        நலகண்டு பண்டு சுடலை
        நாரியோர் பாகமாக நடமாட வல்ல
        நறையூரின் நம்ப னவனே.     01
    942     இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
        யெதிர்நாணி பூண வரையிற்
        கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
        அமரர்க் களித்த தலைவன்
        மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
        மனம்நின்ற மைந்தன் மருவும்
        நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
        நறையூரின் நம்ப னவனே.     02
    943     சூடக முன்கைமங்கை யொருபாக மாக
        அருள்கார ணங்கள் வருவான்
        ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
        படுபிச்ச னென்று பரவத்
        தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
        குழைதாழ வேழ வுரியன்
        நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
        நறையூரின் நம்ப னவனே.     03
    944     சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
        கதியாக நின்ற கடவுள்
        ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
        இருளாய கண்டன் அவனித்
        தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
        மலையின்கண் வந்து தொழுவார்
        நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
        நறையூரின் நம்ப னவனே.     04
    945     நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
        நிகழம் பலத்தின் நடுவே
        அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
        எமர்சுற்ற மாய இறைவன்
        மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
        விடையேறி இல்பலி கொள்வான்
        நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
        நறையூரின் நம்ப னவனே.     05
    946     கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
        மலர்துன்று செஞ்சடை யினான்
        பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
        பலவாகி நின்ற பரமன்
        அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
        பொருளான ஆதி யருளான்
        நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
        நறையூரின் நம்ப னவனே.     06
    947     ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
        மவையார ஆட லரவம்
        மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
        விகிர்தன் விடங்கொள் மிடறன்
        துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
        எழிலார வென்றி யருளும்
        நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
        நறையூரின் நம்ப னவனே.     07
    948     அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
        எதிருஞ் சிலம்பொ டிசையக்
        கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
        முனிவுற் றிலங்கை யரையன்
        உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
        இசைகேட் டிரங்கி யொருவாள்
        நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
        நறையூரின் நம்ப னவனே.     08
    949     குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
        எதிர்கூடி நேடி நினைவுற்
        றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
        பெரியா னிலங்கு சடையன்
        சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
        வருமைத் திகழ்ந்த பொழிலின்
        நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
        நறையூரின் நம்ப னவனே.     09
    950     துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
        வவர்தாமு மல்ல சமணுங்
        கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
        பெருமான் பிறங்கு சடையன்
        தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
        முறைமாதர் பாடி மருவும்
        நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
        நறையூரின் நம்ப னவனே.     10
    951     கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
        மிகுபந்தன் முந்தி யுணர
        ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
        நறையூரின் நம்ப னவனை
        ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
        தமிழ்மாலை பத்தும் நினைவார்
        வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
        வழிபாடு செய்யும் மிகவே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.88 திருமுல்லைவாயில்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    952    துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
        நடமன்னு துன்னு சுடரோன்
        ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
        உமைபங்க னெங்க ளரனூர்
        களிமண்டு சோலை கழனிக் கலந்த
        கமலங்கள் தங்கு மதுவின்
        தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
        திருமுல்லை வாயி லிதுவே.     01
    953     பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
        அயனைப் படைத்த பரமன்
        அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
        மரவிக்க நின்ற அரனூர்
        உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
        யவையோத மோத வெருவித்
        தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
        திருமுல்லை வாயி லிதுவே.     02
    954     வாராத நாடன் வருவார்தம் வில்லின்
        உருமெல்கி நாளு முருகில்
        ஆராத வின்ப னகலாத அன்பன்
        அருள்மேவி நின்ற அரனூர்
        பேராத சோதி பிரியாத மார்பின்
        அலர்மேவு பேதை பிரியாள்
        தீராத காதல் நெதிநேர நீடு
        திருமுல்லை வாயி லிதுவே.     03
    955     ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
        இருமூன்றொ டேழு முடனாய்
        அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
        அறியாமை நின்ற அரனூர்
        குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று
        கொடியொன்றொ டொன்று குழுமிச்
        சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
        திருமுல்லை வாயி லிதுவே.     04
    956     கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
        விடைநாளும் ஏறு குழகன்
        நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
        மதியேறு சென்னி அரனூர்
        அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
        அணிகோபு ரங்க ளழகார்
        செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
        திருமுல்லை வாயி லிதுவே.     05
    957     ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
        ஒளியேறு கொண்ட வொருவன்
        ஆனேற தேறி யழகேறு நீறன்
        அரவேறு பூணு மரனூர்
        மானேறு கொல்லை மயிலேறி வந்து
        குயிலேறு சோலை மருவி
        தேனேறு மாவின் வளமேறி யாடு
        திருமுல்லை வாயி லிதுவே.     06
    958     நெஞ்சார நீடு நினைவாரை மூடு
        வினைதேய நின்ற நிமலன்
        அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
        அனலாடு மேனி யரனூர்
        மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
        உளதென்று வைகி வரினுஞ்
        செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
        திருமுல்லை வாயி லிதுவே.     07
    959     வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
        முடிபத்து மிற்று நெரிய
        உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
        உமைபங்கன் எங்க ளரனூர்
        வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
        மிளிர்கின்ற பொன்னி வடபால்
        திரைவந்து வந்து செறிதேற லாடு
        திருமுல்லை வாயி லிதுவே.     08
    960     மேலோடி நீடு விளையாடல் மேவு
        விரிநூலன் வேத முதல்வன்
        பாலாடு மேனி கரியானு முன்னி
        யவர்தேட நின்ற பரனூர்
        காலாடு நீல மலர்துன்றி நின்ற
        கதிரேறு செந்நெல் வயலிற்
        சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
        திருமுல்லை வாயி லிதுவே.     09
    961     பனைமல்கு திண்கை மதமா வுரித்த
        பரமன்ன நம்ப னடியே
        நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
        அமண்மாய நின்ற அரனூர்
        வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
        முகுளங்க ளெங்கு நெரியச்
        சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
        திருமுல்லை வாயி லிதுவே.     10
    962     அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
        அருள்செய்த எந்தை மருவார்
        திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
        திருமுல்லை வாயி லிதன்மேல்
        தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
        மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
        அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
        அகல்வானம் ஆள்வர் மிகவே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - கோதையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.89 திருக்கொச்சைவயம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    963    அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
    பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
    மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
    குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.     01
    964     சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
    கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்
    எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
    வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.     02
    965     பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
    மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
    வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
    கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.     03
    966     கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
    பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
    கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
    கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.     04
    967     ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
    வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
    ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்
    கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.     05
    968     மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
    துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
    விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
    கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    969     அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
    பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
    வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
    குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.     08
    970     சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
    ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்
    பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்
    கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.     09
    971     குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
    மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்
    பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
    கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.     10
    972     கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
    அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
    சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
    முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    973    எந்தை ஈசனெம் பெருமான்
        ஏறமர் கடவுளென் றேத்திச்
        சிந்தை செய்பவர்க் கல்லால்
        சென்றுகை கூடுவ தன்றாற்
        கந்த மாமல ருந்திக்
        கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
        அந்தண் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     01
    974     ஈர வார்சடை தன்மேல்
        இளம்பிறை யணிந்த எம்பெருமான்
        சீருஞ் செல்வமும் ஏத்தாச்
        சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
        வாரி மாமல ருந்தி
        வருபுனல் நிவாமல்கு கரைமேல்
        ஆருஞ் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     02
    975     *பிணிக லந்தபுன் சடைமேற்
        பிறையணி சிவனெனப் பேணிப்
        பணிக லந்துசெய் யாத
        பாவிகள் தொழச்செல் வதன்றால்
        மணிக லந்துபொன் னுந்தி
        வருபுனல் நிவாமல்கு கரைமேல்
        அணிக லந்தநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     03
        *பிணி - கட்டுதல்
    976     துன்ன ஆடையொன் றுடுத்துத்
        தூயவெண் ணீற்றி னராகி
        உன்னி நைபவர்க் கல்லால்
        ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
        பொன்னும் மாமணி யுந்திப்
        பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
        அன்ன மாருநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     04
    977     வெருகு ரிஞ்சுவெங் காட்டி
        லாடிய விமலனென் றுள்கி
        உருகி நைபவர்க் கல்லால்
        ஒன்றுங்கை கூடுவ தன்றால்
        முருகு ரிஞ்சுபூஞ் சோலை
        மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
        தருகு ரிஞ்சுநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     05
    978     உரவு நீர்சடைக் கரந்த
        வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
        பரவி நைபவர்க் கல்லாற்
        பரிந்துகை கூடுவ தன்றால்
        குரவ நீடுயர் சோலைக்
        குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
        அரவ மாருநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     06
    979     நீல மாமணி மிடற்று
        நீறணி சிவனெனப் பேணுஞ்
        சீல மாந்தர்கட் கல்லாற்
        சென்றுகை கூடுவ தன்றால்
        கோல மாமல ருந்திக்
        குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
        ஆலுஞ் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     07
    980     செழுந்தண் மால்வரை யெடுத்த
        செருவலி இராவணன் அலற
        அழுந்த ஊன்றிய விரலான்
        போற்றியென் பார்க்கல்ல தருளான்
        கொழுங் கனிசுமந் துந்திக்
        குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
        அழுந்துஞ் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     08
    981     நுணங்கு நூலயன் மாலும்
        இருவரும் நோக்கரி யானை
        வணங்கி நைபவர்க் கல்லால்
        வந்துகை கூடுவ தன்றால்
        மணங்க மழ்ந்துபொன் னுந்தி
        வருபுனல் நிவாமல்கு கரைமேல்
        அணங்குஞ் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     09
    982     சாக்கி யப்படு வாருஞ்
        சமண்படு வார்களும் மற்றும்
        பாக்கி யப்பட கில்லாப்
        பாவிகள் தொழச்செல்வ தன்றால்
        பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
        பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
        ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
        அரத்துறை யடிகள்தம் அருளே.     10
    983     கறையி னார்பொழில் சூழ்ந்த
        காழியுள் ஞான சம்பந்தன்
        அறையும் பூம்புனல் பரந்த
        அரத்துறை யடிகள்தம் அருளை
        முறைமை யாற்சொன்ன பாடல்
        மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
        பறையும் ஐயுற வில்லை
        பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
    நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.
    இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.

    திருச்சிற்றம்பலம்

    
    2.91 திருமறைக்காடு
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    984    பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்
    கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந்
    திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்
    எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.     01
    985     கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை
    ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்
    கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
    தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.     02
    986     நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
    பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
    தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
    கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.     03
    986     ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
    தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
    மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
    நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.     04
    987     அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
    பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
    மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
    டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.     05
    989     பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்
    அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
    புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
    மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே.     06
    990     நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப்
    பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய
    வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட
    ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.     07
    991     தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
    மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க
    நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன்
    பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.     08
    992     விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
    பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்
    கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
    வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.     09
    993     பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
    கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
    அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
    பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.     10
    994     மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
    கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்
    செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்
    பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    995    பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
    நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்
    புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
    வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.     01
    996     முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
    இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்
    கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
    வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.     02
    997     தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
    கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்
    கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
    வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.     03
    998     பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத
    விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்
    பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
    வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.     04
    999     ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
    பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
    மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
    வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.     05
    1000     தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக்
    கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
    உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்
    வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.     06
    1001     தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்
    துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
    அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
    வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.     07
    1002     சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும்
    நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
    காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
    வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.     08
    1003     சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
    நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
    ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
    வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.     09
    1004     கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்
    மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்
    செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
    மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.     10
    1005     பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்
    மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
    தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
    எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.93 திருத்தெங்கூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1006    புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
    கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
    இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
    விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     01
    1007     சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்
    கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
    பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
    வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     02
    1008     அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்
    படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
    சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்
    விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.    03
    1009     பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
    கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
    வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி
    விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     04
    1010     சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்
    தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை
    கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக
    விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     05
    1011     தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
    எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்
    சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற
    வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     06
    1012     நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
    முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்
    பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
    வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     07
    1013     எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
    கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்
    தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
    விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     08
    1014     தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்
    பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்
    ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்
    வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.     09
    1015     சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர
    இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்
    கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
    விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே     .10
    1016     வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
    கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
    சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
    பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.94 திருவாழ்கொளிபுத்தூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1017    சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
    ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
    தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
    வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.     01
    1018     எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
    கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்
    பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்
    வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     02
    1019     நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
    வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
    முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்
    வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     03
    1020     பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
    குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
    அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
    வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     04
    1021     பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்
    விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
    அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
    வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     05
    1022     தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
    கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
    கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
    வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     06
    1023     மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
    தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
    ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
    வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     07
    1024     ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
    வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
    கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
    வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     08
    1025     வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
    என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
    முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
    மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.     09
    1026     மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
    குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
    துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
    வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.     10
    1027     நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
    வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
    இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
    நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.95 திருஅரைசிலி
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1028    பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
    கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
    வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்
    ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.     01
    1029     ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
    வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
    ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
    ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.     02
    1030     கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்
    கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
    சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து
    அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே.     03
    1031     மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
    புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
    தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
    அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே.     04
    1032     மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
    தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
    வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
    ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.     05
    1033     பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
    பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
    கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
    அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.     06
        இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.     07
    1034     வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
    கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
    பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
    அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே.     08
    1035     குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்
    வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
    செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
    அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.     09
    1036     குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
    திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
    பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
    அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.     10
    1037     அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி
    நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
    சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
    வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அரைசிலிநாதர், தேவியார் - பெரியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.96 சீகாழி
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1038    பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
    செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
    பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
    தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.     01
    1039     தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
    நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
    ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
    காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.     02
    1040     கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்
    திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
    சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
    உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.     03
    1041     சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
    அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்
    துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
    வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.     04
    1042     மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
    எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
    சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
    கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.     05
    1043     நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
    ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
    நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
    தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.     06
    1044     நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
    விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
    இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
    குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.     07
    1045     கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
    ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்
    சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
    தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.     08
    1046     மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
    பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
    சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
    ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.     09
    1047     புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
    சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
    சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
    முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.     10
    1048     ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு
    ---- ---- ---- ----
    ---- ---- ---- ----
    ---- ---- ---- ----     11
        * இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள்
    சிதைந்துபோயின.

    திருச்சிற்றம்பலம்

    
    2.97 சீகாழி - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1049    நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
    அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
    உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
    நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.     01
    1050     பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
    ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
    தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்
    தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.     02
    1051     சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
    கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
    ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
    நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.     03
    1052     நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
    உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
    பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
    இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.     04
    1053     கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
    உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
    விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
    கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.     05
    1054     அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
    எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
    பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
    கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.     06
        இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.     07
    1055     பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
    ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
    மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
    பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.     08
    1056     காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
    ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
    மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
    நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.     09
    1057     நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
    முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
    தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
    சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.     10
    1058     தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
    அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
    ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
    மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.98 திருத்துருத்தி - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1059    வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்
    திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
    கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
    உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.     01
    1060     அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்
    தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
    கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
    எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.     02
    1061     கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
    சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
    பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்
    கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.     03
    1062     கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
    அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
    ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்
    இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.     04
    1063     துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்
    டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.     05
    1064     வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
    துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
    மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
    வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.     06
    1065     கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
    துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
    அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
    மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.     07
    1066     சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
    இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்
    கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
    அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.     08
    1067     களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்
    வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
    துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
    உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.     09
    1068     புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
    உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்
    துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
    பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.     10
    1069     கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
    சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
    பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
    குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதேசுவரர், தேவியார் - முகிழாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.99 திருக்கோடிகா - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1070    இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.     01
    1071     அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
    வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
    கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.     02
    1072     துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
    தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
    அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
    கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.     03
    1073     பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
    உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
    மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
    கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.     04
    1074     முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
    தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
    பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
    கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.     05
    1075     ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
    பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
    காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
    கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.     06
    1076     ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
    மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
    பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
    கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.     07
    1077     மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
    பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
    வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
    குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.     08
    1078     மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
    செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
    வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
    கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.     09
    1079     தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
    பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
    விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
    கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.     10
    1080     கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
    செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
    அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
    பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1081    படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
    இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
    குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
    விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.     01
    1082     கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
    திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
    குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
    விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.     02
    1083     உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
    அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
    கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
    வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.     03
    1084     கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
    இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
    பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
    வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.     04
    1085     உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
    துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
    வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
    விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.     05
    1086     கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
    ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
    கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
    வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.     06
    1087     உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
    நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
    வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
    விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.     07
    1088     ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
    ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
    போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
    வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.     08
    1089     ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
    கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
    நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
    வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.     09
    1090     குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
    அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
    பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
    வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.     10
    1091     கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
    பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
    அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
    விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.101 திருவாரூர் - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1092    பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
    நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
    கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
    அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.     01
    1093     விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
    இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
    கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
    அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.     02
    1094     கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
    மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
    வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
    அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.     03
    1095     அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
    குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
    பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
    அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.     04
    1096     சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
    தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
    தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
    அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.     05
    1097     கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
    டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
    துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
    அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.     06
    1098     கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
    மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
    தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
    அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.     07
    1099     வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
    நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
    நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
    அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.     08
    1100     இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
    வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
    செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
    அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.     09
    1101     பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
    வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
    மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
    அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.     10
    1102     வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
    அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
    நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
    வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.102 திருச்சிரபுரம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1103    அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
        அமரர்தம் பெருமானார்
        மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
        வைத்தவர் வேதந்தாம்
        பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
        சிரபுரத் தார்சீரார்
        பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
        வினையொடும் பொருந்தாரே.     01
    1104    கோல மாகரி உரித்தவர் அரவொடும்
        ஏனக்கொம் பிளஆமை
        சாலப் பூண்டுதண் மதியது சூடிய
        சங்கர னார்தம்மைப்
        போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
        பொருகடல் விடமுண்ட
        நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
        தொழவினை நில்லாவே.     02
    1105    மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
        தவங்கெட மதித்தன்று
        கானத் தேதிரி வேடனா யமர்செயக்
        கண்டருள் புரிந்தார்பூந்
        தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
        சிரபுரத் துறையெங்கள்
        கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
        குற்றங்கள் குறுகாவே.     03
    1106     மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
        காலனை உதைசெய்தார்
        பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
        பிணக்கறுத் தருள்செய்வார்
        வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
        சிரபுரத் தமர்கின்ற
        ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
        கருவினை யடையாவே.     04
    1107    பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
        பனிமதி ஆகாசம்
        ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
        தலைவனு மாய்நின்றார்
        சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
        செழும்புனற் கோட்டாறு
        வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
        அடியவர் வருந்தாரே.     05
    1108    ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
        வுலகங்க ளவைமூட
        ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
        அந்தரத் துயர்ந்தார்தாம்
        யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
        இன்பன்எம் பெருமானார்
        வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
        வல்வினை அடையாவே.     06
    1109    பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
        பிணமிடு சுடுகாட்டில்
        வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
        ஆடும்வித் தகனாரொண்
        சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
        தகுசிர புரத்தார்தாந்
        தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
        தொழுமவர் தளராரே.     07
    1110    இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
        எழில்கொள்வெற் பெடுத்தன்று
        கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
        நெரியவைத் தருள்செய்தார்
        புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
        றதனிடைப் புகுந்தாருங்
        குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
        தெழவினை குறுகாவே.     08
    1111     வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
        மாயனென் றிவரன்று
        கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
        கிளறியும் பறந்துந்தாம்
        பண்டு கண்டது காணவே நீண்டவெம்
        பசுபதி பரமேட்டி
        கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
        வினையவை கூடாவே.     09
    1112    பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
        பார்மிசைத் துவர்தோய்ந்த
        செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
        தேவர்கள் பெருமானார்
        முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
        மூழ்கிட இளவாளை
        வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
        விட்டிடும் மிகத்தானே.     10
    1113     பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
        பையர வோடக்கு
        நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
        நித்திலப் பெருந்தொத்தை
        விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
        விண்ணவர் பெருமானைப்
        பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
        பரமனைப் பணிவாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.103 திரு அம்பர்த்திருமாகாளம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1114    புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
        போழிள மதிசூடிப்
        பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
        பிணையல்செய் தவர்மேய
        மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
        கருவினை அடையாவே.     01
    1115     அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
        அங்கையில் அனலேந்தி
        இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
        ளிசைவன பலபூதம்
        மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
        பயன்தலைப் படுவாரே.     02
    1116     குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
        குரைகழ லடிசேரக்
        கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
        கருத்தறிந் தவர்மேய
        மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
        வல்வினை அடையாவே.     03
    1117     எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
        இழைவளர் நறுங்கொன்றை
        தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
        தாமகிழ்ந் தவர்மேய
        மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளங்
        கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
        காதன்மை யுடையாரே.     04
    1118     நெதியம் என்னுள போகமற் றென்னுள
        நிலமிசை நலமாய
        கதியம் என்னுள வானவர் என்னுளர்
        கருதிய பொருள்கூடில்
        மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
        டேத்துதல் புரிந்தோர்க்கே.     05
    1119     கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
        கனல்விடு சுடர்நாகந்
        தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
        திகழவைத் தவர்மேய
        மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
        வுலகினில் உயர்வாரே.     06
    1120    தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
        சுடர்விடு நறுங்கொன்றை
        பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
        புகழ்புரிந் தவர்மேய
        மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
        பெருமையைப் பெறுவாரே.     07
    1121    பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
        பருவரைக் கீழூன்றி
        எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
        இறையவன் உறைகோயில்
        மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளங்
        கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
        கனலிடைச் செதிளன்றே.     08
    1122     உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
        ஒளிகிளர் மலரோனும்
        பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
        பரவநின் றவர்மேய
        மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளங்
        கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
        கவலையுங் களைவாரே.     09
    1123     பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
        பீலிகொண் டுழல்வாருங்
        கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
        கழறநின் றவர்மேய
        வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
        வருபுனல் மாகாளம்
        பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
        பரவுதல் செய்வோமே.     10
    1124    மாறு தன்னொடு மண்மிசை யில்லது
        வருபுனல் மாகாளத்
        தீறும் ஆதியு மாகிய சோதியை
        ஏறமர் பெருமானை
        நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
        பந்தன தமிழ்மாலை
        கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
        குற்றங்கள் குறுகாவே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,
    தேவியார் - பட்சநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.104 திருக்கடிக்குளம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1125    பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
        புலியுரி யதளாடை
        கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
        குரைகழல் சிலம்பார்க்கக்
        கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
        துறையுங்கற் பகத்தைத்தம்
        முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
        முன்வினை மூடாவே.     01
    1126    விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
        விகிர்தனை விழவாரும்
        மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்
        வள்ளலை மருவித்தங்
        கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
        துறைதரு கற்பகத்தைப்
        பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
        பழியிலர் புகழாமே.     02
    1127     பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
        புலியதள் அழல்நாகந்
        தங்க மங்கையைப் பாகம துடையவர்
        தழல்புரை திருமேனிக்
        கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
        துறைதரு கற்பகத்தை
        எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
        இடும்பைவந் தடையாவே.     03
    1128    நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
        தொத்தினை நிகரில்லாப்
        பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை
        பசும்பொன்னை விசும்பாருங்
        கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
        துறையுங்கற் பகந்தன்னைச்
        சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
        தேய்வது திணமாமே.     04
    1129     சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
        துன்னிய தழல்நாகம்
        அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல
        கொண்டடி யவர்போற்றக்
        கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்
        துறைதரு கற்பகத்தை
        விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்
        விதியுடை யவர்தாமே.     05
    1130     மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
        டலைபுனல் அழல்நாகம்
        போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
        புரிசடைக் கழகாகக்
        காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
        துறைதரு கற்பகத்தின்
        பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
        பற்றறக் கெடுமன்றே.     06
    1131     குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
        குழாம்பல குளிர்பொய்கை
        உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
        பூவைசே ருங்கூந்தல்
        கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
        துறையுங்கற் பகத்தைச்சீர்
        நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
        நிற்ககில் லாதானே.     07
    1132    மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்
        மதியிலா மையிலோடி
        எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
        இறையவன் விரலூன்றக்
        கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
        கடிக்குளந் தனில்மேவிக்
        கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
        குணமுடை யவர்தாமே.     08
    1133    நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
        நிகழடி முடிகாணார்
        பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்
        பவளத்தின் படியாகிக்
        காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்
        துறையுங்கற் பகத்தின்றன்
        சீரி னார்கழ லேத்தவல் லார்களைத்
        தீவினை யடையாவே.     09
    1134     குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
        குறியினில் நெறிநில்லா
        மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
        கொள்ளன்மின் விடமுண்ட
        கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்
        துறைதரும் எம்மீசர்
        தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
        தூநெறி எளிதாமே.     10
    1135    தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்
        மன்னன்நற் சம்பந்தன்
        மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
        மாலதாய் மகிழ்வோடுங்
        கனம லிகட லோதம்வந் துலவிய
        கடிக்குளத் தமர்வானை
        இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்
        இறைவனோ டுறைவாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கற்பகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.105 திருக்கீழ்வேளூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1136    மின்னு லாவிய சடையினர் விடையினர்
        மிளிர்தரும் அரவோடும்
        பன்னு லாவிய மறைஒலி நாவினர்
        கறையணி கண்டத்தர்
        பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
        புகழ்மிகு கீழ்வேளூர்
        உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
        யோடிட வீடாமே.     01
    1137    நீரு லாவிய சடையிடை யரவொடு
        மதிசிர நிரைமாலை
        வாரு லாவிய வனமுலை யவளொடு
        மணிசிலம் பவையார்க்க
        ஏரு லாவிய இறைவன துறைவிடம்
        எழில்திகழ் கீழ்வேளூர்
        சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
        பிணியொடு வினைபோமே.     02
    1138     வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
        வெள்ளெருக் கலர்மத்தம்
        பண்ணி லாவிய பாடலோ டாடலர்
        பயில்வுறு கீழ்வேளூர்ப்
        பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
        கோயிலெம் பெருமானை
        உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
        உலகினில் உள்ளாரே.     03
    1139    சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
        தொங்கவைத் தழகாக
        நாடு லாவிய பலிகொளும் நாதனார்
        நலமிகு கீழ்வேளூர்ப்
        பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
        கோயிலுட் பிரியாது
        நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
        நிலைமிகப் பெறுவாரே.     04
    1140     துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
        வடமணி சிரமாலை
        மன்று லாவிய மாதவ ரினிதியன்
        மணமிகு கீழ்வேளூர்
        நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
        நிமலனை நினைவோடுஞ்
        சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
        தேய்வது திணமாமே.     05
    1141     கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
        கூத்தனை மகிழ்ந்துள்கித்
        தொத்து லாவிய நூலணி மார்பினர்
        தொழுதெழு கீழ்வேளூர்ப்
        பித்து லாவிய பத்தர்கள் பேணிய
        பெருந்திருக் கோயில்மன்னும்
        முத்து லாவிய வித்தினை யேத்துமின்
        முடுகிய இடர்போமே.     06
    1142     பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
        வன்னியுந் துன்னாரும்
        கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
        காதல்செய் கீழ்வேளூர்
        மறைநி லாவிய அந்தணர் மலிதரு
        பெருந்திருக் கோயில்மன்னும்
        நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
        நினைபவர் வினைபோமே.     07
    1143     மலைநி லாவிய மைந்தனம் மலையினை
        யெடுத்தலும் அரக்கன்றன்
        தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
        உறைதரு கீழ்வேளூர்க்
        கலைநி லாவிய நாவினர் காதல்செய்
        பெருந்திருக் கோயிலுள்
        நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
        நினையவல் வினைபோமே.     08
    1144     மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
        மலரவன் காண்பொண்ணாப்
        பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
        பாகனைப் பரிவோடுஞ்
        செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
        மல்கிய கீழ்வேளூர்
        நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
        நடலைகள் நணுகாவே.     09
    1145    சீறு லாவிய தலையினர் நிலையிலா
        அமணர்கள் சீவரத்தார்
        வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
        சுரும்பமர் கீழ்வேளூர்
        ஏறு லாவிய கொடியனை யேதமில்
        பெருந்திருக் கோயில்மன்னு
        பேறு லாவிய பெருமையன் திருவடி
        பேணுமின் தவமாமே.     10
    1146     குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
        அழகமர் கீழ்வேளூர்த்
        திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
        கோயிலெம் பெருமானை
        இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
        புகலிமன் சம்பந்தன்
        தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
        பெறுவது திடமாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.106 திருவலஞ்சுழி
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1147    என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
        யிருங்கடல் வையத்து
        முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
        முழுமணித் தரளங்கள்
        மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
        வாணனை வாயாரப்
        பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
        வழிபடும் அதனாலே.     01
    1148     விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
        விரிகடல் வருநஞ்சம்
        உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
        இறைவனை உலகத்தில்
        வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
        வலஞ்சுழி யிடமாகக்
        கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
        டினிதிருந் தமையாலே.     02
    1149    திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
        விறலின்கண் அடியாரைப்
        பரிந்து காப்பன பத்தியில் வருவன
        மத்தமாம் பிணிநோய்க்கு
        மருந்து மாவன மந்திர மாவன
        வலஞ்சுழி யிடமாக
        இருந்த நாயகன் இமையவ ரேத்திய
        இணையடித் தலந்தானே.     03
    1150     கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
        அறத்திற முனிவர்க்கன்
        றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
        தினிதருள் பெருமானார்
        மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
        யிடமகிழ்ந் தருங்கானத்
        தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
        அற்புதம் அறியோமே.     04
    1151    மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
        எரியுரு வொருபாகம்
        பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
        பெருங்கடற் பவளம்போல்
        வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
        பரிபவர் மனம்புக்க
        எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
        இணையடி தொழுவாரே.     05
    1152     ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
        மேனியர் மடமாதர்
        இருவ ராதரிப் பார்பல பூதமும்
        பேய்களும் அடையாளம்
        அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
        தகந்தொறும் பலிக்கென்று
        வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
        வரிவளை கவர்ந்தாரே.     06
    1153     குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
        குலவிய நெய்த்தானம்
        என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
        இமையவர் பணிகேட்பார்
        அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
        வலஞ்சுழி யரனார்பால்
        சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
        சேயிழை தளர்வாமே.     07
    1154    குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
        குலவரைப் பரப்பாய
        கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
        தோளிரு பதுமூன்றி
        மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
        வலஞ்சுழி யெம்மானைப்
        பயில வல்லவர் பரகதி காண்பவர்
        அல்லவர் காணாரே.     08
    1155     அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
        அரவணைத் துயின்றானுங்
        கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
        மாண்பமர் தடக்கையில்
        மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
        வலங்கொடு பாதத்தால்
        சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
        துன்பங்கள் களைவாரே.     09
    1156     அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
        தவம்புரிந் தவஞ்செய்வார்
        நெறிய லாதன கூறுவர் மற்றவை
        தேறன்மின் மாறாநீர்
        மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
        மருவிய பெருமானைப்
        பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
        அளவறுப் பொண்ணாதே.     10
    1157     மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
        மருந்தினை வயற்காழி
        நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
        நவிற்றிய தமிழ்மாலை
        ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
        கேட்டுகந் தவர்தம்மை
        வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
        வருத்தம்வந் தடையாவே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சித்தீசநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.107 திருக்கேதீச்சரம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1158    விருது குன்றமா மேருவில் நாணர
        வாவனல் எரியம்பாப்
        பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
        றுறைபதி யெந்நாளுங்
        கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
        பொழிலணி மாதோட்டங்
        கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
        கடுவினை யடையாவே.     01
    1159     பாடல் வீணையர் பலபல சரிதையர்
        எருதுகைத் தருநட்டம்
        ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
        சுண்டிருள் கண்டத்தர்
        ஈட மாவது இருங்கடற் கரையினில்
        எழில்திகழ் மாதோட்டம்
        கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
        கெடுமிடர் வினைதானே.     02
    1160    பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
        அறைகழல் சிலம்பார்க்கச்
        சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
        அகந்தொறும் இடுபிச்சைக்
        குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
        உயர்தரு மாதோட்டத்
        தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
        கருவினை யடையாவே.     03
    1161    பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
        விரிதரு கரத்தேந்தும்
        வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
        மறிகடல் மாதோட்டத்
        தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
        பரிந்தசிந் தையராகி
        முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
        மொய்த்தெழும் வினைபோமே.     04
    1162    நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
        மடைந்தவர்க் கருளீய
        வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
        மலிகடல் மாதோட்டத்
        தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
        இராப்பகல் நினைந்தேத்தி
        அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
        அன்பராம் அடியாரே.     05
    1163     பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
        பொருந்தவைத் தொருபாகம்
        மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
        பொருளினர் குடிவாழ்க்கை
        வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
        மருவிய மாதோட்டக்
        கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
        தீச்சரம் பிரியாரே.     06
    1164    பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
        லுலகினில் உயிர்வாழ்க்கை
        கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
        காதலித் துறைகோயில்
        வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
        நடமிடு மாதோட்டந்
        தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
        தீச்சர மதுதானே.     07
    1165     தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
        தெடுத்தவன் முடிதிண்டோ ள்
        தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
        தலைவனார் கடல்வாயப்
        பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
        பொருந்திய மாதோட்டத்
        துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
        தீச்சரத் துள்ளாரே.     08
    1166     பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
        புவியிடந் தெழுந்தோடி
        மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
        வித்தக மென்னாகும்
        மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
        தோட்டநன் னகர்மன்னித்
        தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
        திருந்தஎம் பெருமானே.     09
    1167     புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
        புறனுரைச் சமணாதர்
        எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
        ஏழைமை கேலேன்மின்
        மத்த யானையை மறுகிட உரிசெய்து
        போர்த்தவர் மாதோட்டத்
        தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
        தீச்சரம் அடைமின்னே.     10
    1168     மாடெ லாமண முரசெனக் கடலின
        தொலிகவர் மாதோட்டத்
        தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
        தடிகளை யணிகாழி
        நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
        நவின்றெழு பாமாலைப்
        பாட லாயின பாடுமின் பத்தர்காள்
        பரகதி பெறலாமே.     11
    இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கேதீச்சுவரர், தேவியார் - கௌரிநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.108 திருவிற்குடிவீரட்டானம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1169    வடிகொள் மேனியர் வானமா மதியினர்
        நதியினர் மதுவார்ந்த
        கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
        உடைபுலி யதளார்ப்பர்
        விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
        விற்குடி வீரட்டம்
        அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
        அருவினை யடையாவே.     01
    1170     களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
        கடிகமழ் சடைக்கேற்றி
        உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
        பொருகரி யுரிபோர்த்து
        விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
        விற்குடி வீரட்டம்
        வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
        வருத்தம தறியாரே.     02
    1171    கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
        மார்பினர் வலங்கையில்
        எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
        தாடிய வேடத்தர்
        விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
        விற்குடி வீரட்டம்
        பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
        பேணுவ ருலகத்தே.     03
    1172    பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
        பொலிதர நலமார்ந்த
        பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
        கடலெழு விடமுண்டார்
        வேத மோதிய நாவுடை யானிடம்
        விற்குடி வீரட்டஞ்
        சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி
        தீவினை கெடுமாறே.     04
    1173     கடிய ஏற்றினர் கனலன மேனியர்
        அனலெழ வூர்மூன்றும்
        இடிய மால்வரை கால்வளைத் தான்றன
        தடியவர் மேலுள்ள
        வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
        விற்குடி வீரட்டம்
        படிய தாகவே பரவுமின் பரவினாற்
        பற்றறும் அருநோயே.     05
    1174     பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
        கையினர் மெய்யார்ந்த
        அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
        அரியவர் அல்லார்க்கு
        விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
        விற்குடி வீரட்டம்
        எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
        கிடர்கள்வந் தடையாவே.     06
        இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    1175     இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
        யிகலழி தரவூன்று
        திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
        பொருளினன் இருளார்ந்த
        விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
        விற்குடி வீரட்டந்
        தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
        துன்பநோ யடையாவே.     08
    1176    செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
        திருவடி யறியாமை
        எங்கு மாரெரி யாகிய இறைவனை
        யறைபுனல் முடியார்ந்த
        வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
        விற்குடி வீரட்டந்
        தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
        தவமல்கு குணத்தாரே.     09
    1177     பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
        ராடைய ரவர்வார்த்தை
        பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
        பரிவுறு வீர்கேண்மின்
        விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
        விற்குடி வீரட்டங்
        கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
        கருத்துறுங் குணத்தாரே.     10
    1178    விலங்க லேசிலை யிடமென வுடையவன்
        விற்குடி வீரட்டத்
        திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
        யெழில்திகழ் கழல்பேணி
        நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
        பந்தனற் றமிழ்மாலை
        வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
        மற்றது வரமாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.109 திருக்கோட்டூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1179    நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
        கண்ணனே ஒற்றைவிடைச்
        சூல மார்தரு கையனே துன்றுபைம்
        பொழில்கள்சூழ்ந் தழகாய
        கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்
        தாங்குவர் பாங்காலே.     01
    1180    பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு
        மெல்விர லரவல்குல்
        மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
        மிழற்றிய மொழியார்மென்
        கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
        அருள்பெறல் எளிதாமே.     02
    1181     நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
        அடியவர் தமக்கெல்லாஞ்
        செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
        செல்வமல் கியநல்ல
        கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
        டமர்ந்தினி திருப்பாரே.     03
    1182    பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
        மாங்கனி பயில்வாய
        கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
        அன்னஞ்சேர்ந் தழகாய
        குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
        நீடிய புகழாரே.     04
    1183    உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
        அன்பராம் அடியார்கள்
        பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
        பத்திசெய் தெத்திசையுங்
        குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
        அவனருள் பெறலாமே.     05
    1184     துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
        துன்னெருக் கார்வன்னி
        பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
        புலியுரி யுடையாடை
        கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவாரை
        என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
        ஏதம்வந் தடையாவே.     06
    1185    மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
        மணியரங் கணிசாலை
        பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
        பரிசொடு பயில்வாய
        கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
        கெழுவுவர் புகழாலே.     07
    1186     ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
        யெடுத்தலும் உமையஞ்சிச்
        சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
        நாளவற் கருள்செய்த
        குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
        கொழுந்தினைத் தொழுவார்கள்
        தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
        தவமுடை யவர்தாமே.     08
    1187    பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்
        முத்தினைப் பவளத்தைத்
        தேடி மாலயன் காணவொண் ணாதவத்
        திருவினைத் தெரிவைமார்
        கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
        கொழுந்தேயென் றெழுவார்கள்
        நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
        நிகழ்தரு புகழாரே.     09
    1188     கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
        கொழுந்தினைச் செழுந்திரளைப்
        பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
        மெய்யன்நல் லருளென்றுங்
        காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
        டாக்கர்சொற் கருதாதே
        பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
        பெருமையைப் பெறுவாரே.     10
    1189     பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
        பாவையோ டுருவாருங்
        கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
        கொழுந்தினைச் செழும்பவளம்
        வந்து லாவிய காழியுள் ஞானசம்
        பந்தன்வாய்ந் துரைசெய்த
        சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
        தாங்குவர் புகழாலே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.110 திருமாந்துறை
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1190    செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
        செருந்திசெண் பகமானைக்
        கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
        குருந்தலர் பரந்துந்தி
        அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யுறைகின்ற
        எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
        லேத்துதல் செய்வோமே.     01
    1191    விளவு தேனொடு சாதியின் பலங்களும்
        வேய்மணி நிரந்துந்தி
        அளவி நீர்வரு காவிரி வடகரை
        மாந்துறை உறைவானத்
        துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
        சுடவிழித் தவனெற்றி
        அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
        யன்றிமற் றறியோமே.     02
    1192    கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
        கூந்தலின் குலைவாரி
        ஓடு நீர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யுறைநம்பன்
        வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
        வானவர் மகிழ்ந்தேத்துங்
        கேடி லாமணி யைத்தொழ லல்லது
        கெழுமுதல் அறியோமே.     03
    1193    இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
        இளமரு திலவங்கங்
        கலவி நீர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யுறைகண்டன்
        அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
        ஆடர வுடன்வைத்த
        மலையை வானவர் கொழுந்தினை யல்லது
        வணங்குதல் அறியோமே.     04
    1194    கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
        குரவிடை மலருந்தி
        ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யுறைவானைப்
        பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
        பாட்டவி மலர்சேர்த்தித்
        தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
        தலைப்படுந் தவத்தோரே.     05
    1195    பெருகு சந்தனங் காரகில் பீலியும்
        பெருமரம் நிமிர்ந்துந்திப்
        பொருது காவிரி வடகரை மாந்துறைப்
        புனிதனெம் பெருமானைப்
        பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
        பார்மன்னர் பணிந்தேத்த
        மருத வானவர் வழிபடு மலரடி
        வணங்குதல் செய்வோமே.     06
    1196     நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
        நாண்மல ரவைவாரி
        இறவில் வந்தெறி காவிரி வடகரை
        மாந்துறை யிறைஅன்றங்
        கறவ னாகிய கூற்றினைச் சாடிய
        அந்தணன் வரைவில்லால்
        நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
        நிரைகழல் பணிவோமே.     07
    1197     மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
        மந்திகள் மாணிக்கம்
        உந்தி நீர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யுறைவானை
        நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
        நெரித்திடு விரலானைச்
        சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
        தீநெறி யதுதானே.     08
    1198     நீல மாமணி நித்திலத் தொத்தொடு
        நிரைமலர் நிரந்துந்தி
        ஆலி யாவரு காவிரி வடகரை
        மாந்துறை யமர்வானை
        மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
        மலரடி யிணைநாளுங்
        கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
        கூற்றுவன் நலியானே.     09
    1199    நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
        நெடுங்கழை நறவேலம்
        நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
        நாணலின் நுரைவாரி
        ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
        மாந்துறை யொருகாலம்
        அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
        அதுவவர்க் கிடமாமே.     10
    1200     வரைவ ளங்கவர் காவிரி வடகரை
        மாந்துறை யுறைவானைச்
        சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
        செழுமறை நிறைநாவன்
        அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
        பந்தனன் புறுமாலை
        பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
        பாவமும் இலர்தாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஐராவணேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.111 திருவாய்மூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1201    தளிரிள வளரென உமைபாடத்
        தாள மிடவோர் கழல்வீசிக்
        கிளரிள மணியர வரையார்த்
        தாடும் வேடக் கிறிமையார்
        விளரிள முலையவர்க் கருள்நல்கி
        வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
        வளரிள மதியமொ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     01
    1202     வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
        விரிதரு கோவண வுடைமேலோர்
        பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
        பலபல கடைதொறும் பலிதேர்வார்
        சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
        செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
        வந்தனை பலசெய இவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     02
    1203    பண்ணிற் பொலிந்த வீணையர்
        பதினெண் கணமு முணராநஞ்
        சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
        உள்ள முருகி லுடனாவார்
        சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
        சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
        வண்ணப் பிறையோ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     03
    1204     எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
        எறிபொறி யரவினொ டாறுமூழ்க
        விரிகிளர் சடையினர் விடையேறி
        வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
        புரிகிளர் பொடியணி திருவகலம்
        பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
        வரியர வரைக்கசைத் திவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     04
    1205     அஞ்சன மணிவணம் எழில்நிறமா
        வகமிட றணிகொள வுடல்திமில
        நஞ்சினை யமரர்கள் அமுதமென
        நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
        வெஞ்சின மால்களி யானையின்தோல்
        வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
        வஞ்சனை வடிவினோ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     05
    1206     அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
        கழலிணை யடிநிழ லவைபரவ
        எல்லியம் போதுகொண் டெரியேந்தி
        யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
        சொல்லிய அருமறை யிசைபாடிச்
        சூடிள மதியினர் தோடுபெய்து
        வல்லியந் தோலுடுத் திவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     06
    1207    கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
        கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
        முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
        முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
        பொடியணி வடிவொடு திருவகலம்
        பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
        வடிநுனை மழுவினொ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     07
    1208     கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
        கண்ணியர் வீணையர் தாமுமஃதே
        எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
        இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
        பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
        பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
        வட்டணை யாடலொ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     08
    1209    ஏனம ருப்பினொ டெழிலாமை
        யிசையப் பூண்டோ ரேறேறிக்
        கானம திடமா வுறைகின்ற
        கள்வர் கனவில் துயர்செய்து
        தேனுண மலர்கள் உந்திவிம்மித்
        திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
        வானநன் மதியினோ டிவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     09
    1210     சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
        சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
        பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
        பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
        கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
        குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
        வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
        வாய்மூ ரடிகள் வருவாரே.     10
    1211     திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
        தேனலங் கானலந் திருவாய்மூர்
        அங்கமோ டருமறை யொலிபாடல்
        அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
        நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
        ஞானசம் பந்தன் தமிழ்மாலை
        தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
        தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.112 திருஆடானை
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1212    மாதோர் கூறுகந் தேற தேறிய
    ஆதியா னுறை ஆடானை
    போதினாற் புனைந் தேத்து வார்தமை
    வாதியா வினை மாயுமே.     01
    1213     வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
    றாடலா னுறை ஆடானை
    தோடுலா மலர் தூவிக் கைதொழ
    வீடும் நுங்கள் வினைகளே.     02
    1214    மங்கை கூறினன் மான்ம றியுடை
    அங்கை யானுறை ஆடானை
    தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
    மங்கு நோய்பிணி மாயுமே.     03
    1215    சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
    அண்ண லானுறை ஆடானை
    வண்ண மாமலர் தூவிக் கைதொழ
    எண்ணு வாரிடர் ஏகுமே.     04
    1216    கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
    ஐயன் மேவிய ஆடானை
    கைய ணிம்மல ரால்வ ணங்கிட
    வெய்ய வல்வினை வீடுமே.     05
    1217     வானி ளம்மதி மல்கு வார்சடை
    ஆனஞ் சாடலன் ஆடானை
    தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
    ஊன முள்ள வொழியுமே.     06
    1218     துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
    அலங்க லானுறை ஆடானை
    நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
    வலங்கொள் வார்வினை மாயுமே.     07
    1219     வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
    அந்த மில்லவன் ஆடானை
    கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ்
    சிந்தை யார்வினை தேயுமே.     08
    1220     மறைவல் லாரொடு வான வர்தொழு
    தறையுந் தண்புனல் ஆடானை
    உறையும் ஈசனை யேத்தத் தீவினை
    பறையும் நல்வினை பற்றுமே.     09
    1221    மாய னும்மல ரானுங் கைதொழ
    ஆய அந்தணன் ஆடானை
    தூய மாமலர் தூவிக் கைதொழ
    தீய வல்வினை தீருமே.     10
    1222    வீடி னார்மலி வேங்க டத்துநின்
    றாட லானுறை ஆடானை
    நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
    பாட நோய்பிணி பாறுமே.     11
    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.113 சீகாழி
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1223     பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
    அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
    இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
    கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.     01
    1224    மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
    அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
    புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
    கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.     02
    1225    கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
    மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
    நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
    கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.     03
    1226     குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
    பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
    மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
    கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.     04
    1227     விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
    எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
    பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
    கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.     05
    1228     தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
    பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
    கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
    காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.     06
    1229     மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
    தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
    இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
    கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.     07
    1230    முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
    அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
    தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
    கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.     08
    1231     பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
    மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
    தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
    காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.     09
    1232    உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
    முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
    மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
    கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.     10
    1233     கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
    உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்
    பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
    விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.114 திருக்கேதாரம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1234    தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர்
    இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
    வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
    கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.     01
    1235     பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே
    வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந்
    தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்
    கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.     02
    1236    முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
    எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்
    மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
    கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.     03
    1237     உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்
    எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்
    பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க்
    கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.     04
    1238    ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
    வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்
    மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
    கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.     05
    1239    நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்
    தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்
    ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்
    கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.     06
    1240    மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
    தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்
    உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல்
    கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே.     07
    1241     அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
    வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால்
    குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
    கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.     08
    1242    ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்
    தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்
    வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
    கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.     09
    1243     கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்
    இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்
    அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்
    கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.     10
    1244     வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
    ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
    ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
    வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே.     11
    இத்தலம் வடதேசத்திலுள்ளது.
    சுவாமிபெயர் - கேதாரேசுவரர்,
    தேவியார் - கௌரியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.115 திருப்புகலூர்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1245    வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்
    பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
    திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய
    எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.     01
    1246    வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்
    வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
    போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே
    சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே.     02
    1247     மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை
    புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
    தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை
    அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.     03
    1248     பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே
    நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்
    யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்
    ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே.     04
    1249    அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
    பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
    முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
    இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே.     05
    1250     குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்
    உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்
    புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்
    நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.     06
    1251     ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப்
    பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்
    ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
    பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.     07
    1252     உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்
    கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால்
    செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
    பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.     08
    1253    நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
    ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்
    சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
    பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே.     09
    1254     வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்
    போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்
    தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
    ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.     10
    1255    புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்
    வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
    அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
    பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.116 திருநாகைக்காரோணம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1256    கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
    வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
    வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
    கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     01
    1257    விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
    இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
    மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
    கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     02
    1258    வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
    முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
    நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
    கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     03
    1259     வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
    கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
    உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்
    கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     04
    1260     வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
    நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
    போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
    கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     05
    1261    விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
    படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
    உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
    கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     06
    1262     பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை
    செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
    எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
    கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     07
    1263     பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
    அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
    மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
    கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     08
    1264     நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்
    அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
    மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
    கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     09
    1265    உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்
    பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
    நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
    கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.     10
    1266     மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
    நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
    வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
    சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.117 திரு இரும்பைமாகாளம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1267    மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
    கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
    எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
    வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.     01
    1268    வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
    கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
    ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்
    மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.     02
    1269    வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
    எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
    கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
    மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.     03
    1270    நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
    அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
    எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
    மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.     04
    1271    பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
    கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
    ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
    மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.     05
    1272    குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
    பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
    இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
    மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.     06
    1273     பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
    தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
    எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
    மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.     07
    1274     நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
    அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
    இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
    வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.     08
    1275    அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
    எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
    இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
    மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.     09
    1276     அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
    பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
    குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
    மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.     10
    1277     எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
    மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
    அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
    பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1278    பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
    அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
    கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி
    வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே.     01
    1279     தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
    கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
    தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
    வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.     02
    1280    அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
    கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
    திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
    மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே.     03
    1281     கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
    வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
    செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
    மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.     04
    1282     புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
    பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
    விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
    மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே.     05
    1283     விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
    பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
    தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
    மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.     06
    1284     ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
    கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
    தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி
    மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.     07
    1285    கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
    எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
    புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
    மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே.     08
    1286    படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
    இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
    திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
    மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே.     09
    1287     புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
    பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
    பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
    மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே.     10
    1288     மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
    கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
    பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
    சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.119 திருநாகேச்சரம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1289     தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
    பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
    நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
    தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.     01
    1290    பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய
    வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
    நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
    கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.     02
    1291     குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
    பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
    நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
    திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.     03
    1292    கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
    நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்
    தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
    நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.     04
    1293     வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
    பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
    நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
    உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.     05
    1294     காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
    நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
    நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
    கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.     06
    1295     வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்
    பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
    நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
    மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.     07
    1296     இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும்
    மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
    நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
    வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.     08
    1297     கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
    எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
    விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
    பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.     09
    1298     தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
    கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
    நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
    மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.     10
    1299     கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
    நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்
    பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
    எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.120 திருமூக்கீச்சரம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1300    சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
    காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
    ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
    வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.     01
    1301     வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
    கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா
    விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
    கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.     02
    1302     மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
    உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
    செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
    பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.     03
    1303    அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே
    மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்
    தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
    மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.     04
    1304     விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
    நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
    வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
    அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.     05
    1305    வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
    வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
    அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
    எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.     06
    1306     அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
    உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
    விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
    அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.     07
    1307    ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
    கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
    ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்
    மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.     08
    1308    நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
    சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
    சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்
    சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.     09
    1309     வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
    உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
    ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
    பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.     10
    1310    மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
    செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
    நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
    சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.     11

    திருச்சிற்றம்பலம்

    
    2.121 திருப்பாதிரிப்புலியூர்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1311    முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
    புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
    தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
    பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.     01
    1312     கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
    முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
    புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
    உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.     02
    1313    மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
    பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
    வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
    அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.     03
    1314     போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
    போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
    ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
    ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.     04
    1315     ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
    நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
    போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
    பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.     05
    1316    மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
    புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்
    பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
    குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.     06
    1317    கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
    சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
    பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
    அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.     07
    1318     வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை
    ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
    பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
    நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.     08
    1319     அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
    பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
    முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
    தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.     09
    1320     உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
    திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
    எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
    புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.     10
    1321     அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
    பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
    சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்
    வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    
    2.122 திருப்புகலி
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1322    விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
    படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
    கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
    புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.     01
    1323     வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
    ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
    சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
    சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.     02
    1324     வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
    துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
    கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
    புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.     03
    1325     திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்
    கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
    பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
    புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.     04
    1326     ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
    நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
    மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்
    பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.     05
    1327     தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
    ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
    கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
    புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.     06
        இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.     07
    1328    தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
    தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது
    கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
    பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.     08
    1329     கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
    காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
    நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
    பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.     09
    1330     தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
    இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
    மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
    அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.     10
    1331    எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
    கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
    செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
    எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.     11

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.