LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐம்பெருங் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி பகுதி -2

 

விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு 
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி 
வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத் 
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே. 221
தான் அமர் காதலி தன்னொடு மா வலி 
வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும் 
தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக் 
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள். 222
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண் 
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக 
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு 
வைத்தது போல வளர்ந்ததை அன்றே. 223
சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
வார் குழை வில் இட மா முடி தூக்குபு 
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல் 
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து 
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். 224
நன்முடி நின் மகனாம் நறு மாலைகள் 
அன்னவனால் அமரப்படும் தேவியர் 
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப் 
பின்னதனால் பயன் பேசலன் விட்டான். 225
அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
இற்று அதனால் பயன் என் என ஏந்திழை 
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும் 
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து 
அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள். 226
காவி கடந்த கண்ணீரொடு காரிகை 
ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப் 
பாவி என் ஆவி வருத்துதியோ எனத் 
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான். 227
தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள் 
கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும் 
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப் 
பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான். 228
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க் 
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத் 
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய 
போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். 229
விசயை தாய்மையுறுதல்
பண் கனியப் பருகிப் பயன் நாடகம் 
கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல 
விண் கனியக் கவின் வித்திய வேல் கணி 
மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள். 230
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக் 
கண் பசலை பூத்த காமம் 
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் 
பெய்து இருந்த பொன் செப்பே போல் 
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று 
ஆய்ந்த அனிச்ச மாலை 
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் 
நங்கை நலம் தொலைந்ததே.
231
சச்சந்தன் கவலையுறுதல்
தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் 
தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக 
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க 
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். 232
'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட 
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து 
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே 
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். 233
சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்
அந்தரத்தார் மயனே என ஐயுறும் 
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் 
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர் 
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். 234
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு 
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன 
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச் 
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. 235
பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய 
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன் 
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது 
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். 236
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது 
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என 
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர் 
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். 237
மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி 
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப் 
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து 
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238
பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி 
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய 
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை 
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239
சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
காதி வேல் வல கட்டியங் காரனும் 
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல் 
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான் 
கோது செய் குணக் கோதினுள் கோது அனான். 240
மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம் 
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல் 
துன்னி நின்று செகுத்திடு நீ எனும் 
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே. 241
தருமதத்தன் அறிவுரை கூறுதல்
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர் 
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன் 
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான் 
தரும தத்தன் என்பான் இது சாற்றினான். 242
தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் 
குவளையே அளவுள்ள கொழுங் கணாள் 
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும் 
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான். 243
விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது 
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன் 
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம் 
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே. 244
தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப் 
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் 
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப் 
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. 245
திலக நீள் முடித் தேவரும் வேந்தரும் 
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப 
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன் 
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். 246
அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல் 
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம் 
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும் 
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. 247
உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி 
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் 
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து 
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார். 248
யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின் 
தேவர் என்பது தேறும் இவ் வையகம் 
காவல் மன்னவர் காய்வன சிந்தியார் 
நாவினும் உரையார் நவை அஞ்சுவார். 249
தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ 
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும் 
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான் 
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே. 250
வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ் 
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல் 
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு 
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். 251
குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர் 
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் 
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா 
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார். 252
நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான் 
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும் 
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான் 
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். 253
பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள் 
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல் 
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும் 
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். 254
கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி 
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப் 
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி 
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான். 255
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார் 
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி 
நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான். 256
தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற 
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன் 
காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள் 
வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான். 257
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் 
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக் 
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா 
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். 258
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் 
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் 
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக 
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். 259
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா 
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும் 
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும் 
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான். 260
கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர 
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி 
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக் 
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். 261
கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ் 
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி 
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து 
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே. 262
பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித் 
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி 
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச் 
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே. 263
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்
நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி! 
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி! 
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று 
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். 264
திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே 
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும் 
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான் 
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். 265
புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற 
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக் 
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல் 
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். 266
விசயை துன்புறுதல்
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா 
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக் 
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து 
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 267
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான் 
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப் 
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச் 
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே. 268
சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும் 
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய் 
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே 
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான். 269
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா 
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் 
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற 
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. 270
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல் 
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி 
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல் 
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான். 271
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார் 
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் 
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான் 
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான். 272
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த 
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை 
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித் 
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். 273
சச்சந்தன் கோபங்கொள்ளல்
நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி 
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின் 
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள் 
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான். 274
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில் 
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட 
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை 
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே. 275
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன் 
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம் 
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர் 
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான். 276
மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின் 
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை 
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப் 
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே. 277
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் 
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின் 
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என 
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே. 278
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை 
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து 
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத் 
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே. 279
உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது 
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி 
இப்படி இறை மகன் இரும் களிறு நூற 
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி. 280
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு 
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக் 
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான். 281
நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி 
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி 
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக் 
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான். 282
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும் 
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச் 
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் 
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான். 283
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம் 
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் 
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம 
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே. 284
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி 
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் 
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம் 
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே. 285
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து 
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக் 
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து 
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான். 286
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன் 
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும் 
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள் 
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான். 287
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும் 
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப் 
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப் 
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான். 288
சச்சந்தன் வீழ்தல்
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத் 
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா 
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க 
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான். 289
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது 
புலம்பு எய்தி மைந்தர் மாழ்க 
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல் 
இருள் பரப்பவே ஏ பாவம் 
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த 
அறச் செங்கோலாய் கதிரினை 
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா 
நாகமுடன் விழுங்கிற்று அன்றே.
290
பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் 
நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க் 
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக் 
கேடகமும் மறமும் ஆற்றி 
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி 
மந்திர மென் சாந்து பூசி 
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் 
விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.
291
சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ் 
தேம் தேம் என்னும் மணி முழவமும் 
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத் 
தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் 
அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை 
போய் ஆடல் அரம்பை அன்னார் 
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து 
இரங்கிப் பள்ளி படுத்தார்களே.
292
சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச் 
செப்பகம் கடைகின்றவே போல் 
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் 
உள் அரங்கி மூழ்கக் காமன் 
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப் 
பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார் 
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள் 
மின்னுப் போல் புலம்பினாரே.
293
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு 
வேந்தன் கிடந்தானைத் தான் 
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் 
கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் 
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் 
ஏற்பச் சொரிந்து அலறி எம் 
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப் 
பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.
294
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல் 
ஆரம் பரிந்து அலறுவார் 
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் 
நின்று திருவில் வீசும் 
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார் 
கையால் வயிறு அதுக்குவார் 
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது 
என்பார் கோல் வளையினார்.
295
பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய் 
ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத் 
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு 
பிடிகள் போலத் துயர் உழந்து தாம் 
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி 
அடைதும் என்று அழுது போயினார் எம் 
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி 
இனிப் பூவா பிறர் பறிப்பவே.
296
அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்
செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு 
அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப 
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் 
எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப் 
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை 
அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப 
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் 
பூமகளை எய்தினானே.
297
சீவகன் பிறப்பு
களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர 
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால் 
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய 
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன். 298
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் 
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண் 
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப 
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள். 299
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம் 
பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும் 
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல் 
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே. 300
மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும் 
அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை 
பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக் 
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே. 301
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று 
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள் 
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச் 
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள். 302
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம் 
கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி 
விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள் 
வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள். 303
இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி 
அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப் 
பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே 
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே. 304
பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித் 
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல் 
வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள் 
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். 305
விசயை புலம்புதல்
கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின் 
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க 
உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு 
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின். 306
மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு 
ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள் 
வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக் 
கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின். 307
அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில் 
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக் 
கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி 
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 308
வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக 
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட 
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட 
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே. 309
பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால் 
உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால் 
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால் 
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே. 310
பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும் 
புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால் 
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால் 
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 311 
விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்
அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல் 
கந்தார் களிற்றுத் தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து 
வந்தாள் போலப் புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள் 
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே. 312
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த 
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இருங் கண் ஞாலத்து இருள் பருகிச் 
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த 
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டுப் படா முலையாள். 313
சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்
தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள் 
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில் 
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும் 
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே. 314
விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக் 
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க 
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம் 
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள். 315
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி 
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற 
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே 
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 316
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க 
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி 
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள் 
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள். 317
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம் 
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக் 
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக் 
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள். 318
நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக் 
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப் 
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல் 
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். 319
கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர் 
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக் 
காளக உடையினன் கந்து நாமனும் 
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். 320
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம் 
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள் 
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் 
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. 321
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய 
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர் 
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை 
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். 322
புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம் 
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால் 
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான் 
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. 323
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய 
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை 
நுன் பழம் பகை தவ நூறுவாய் என 
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். 324
ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார் 
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே 
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி 
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். 325
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு 
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின் 
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு 
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். 326
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய 
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய் 
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான் 
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. 327
கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன் 
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர 
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை 
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். 328
சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம் 
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன 
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல் 
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். 329
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து 
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் 
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று 
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். 330
திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப் 
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை 
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம் 
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. 331
விசயை துறவு நிலையைப் பூணுதல்
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர் 
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர் 
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து 
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம். 332
பொறி அறு பாவையின் பொம் என விம்மி 
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த 
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம் 
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள். 333
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே 
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம் 
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும் 
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே. 334
மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால் 
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய் 
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி 
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம். 335
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் 
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர் 
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம் 
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி. 336
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும் 
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய 
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று 
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள். 337
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற 
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி 
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி 
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள். 338
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய 
இருவிலும் எறி மா மகரக் குழைத் 
திருவிலும் இவை தேமொழி மாதரைப் 
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே. 339
சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப 
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண் 
மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும் 
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். 340
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று 
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள் 
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா 
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே. 341
தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும் 
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல் 
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல் 
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே. 342
எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர் 
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள் 
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய 
அல்லல் வெவ்வினை போல அகன்றதே. 343
நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை 
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து 
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ 
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள். 344
வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக் 
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து 
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி 
மொய் கொள் பூமி முளைப்பது போலவே. 345
தூவி அம்சிறை அன்னமும் தோகையும் 
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா 
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு 
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே. 346
கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள் 
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால் 
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள் 
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 347
வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம் 
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத் 
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று 
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார். 348
திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும் 
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும் 
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப 
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள். 349
திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப் 
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும் 
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய 
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள். 350
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட 
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து 
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள் 
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள். 351
பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும் 
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல் 
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை 
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள். 352
பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள் 
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின் 
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற 
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே. 353
பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன 
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச் 
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை 
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள். 354
விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல் 
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான் 
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும் 
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே. 355
பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின் 
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை 
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும் 
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே. 356
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை 
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம் 
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக் 
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள். 357
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால் 
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள் 
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று 
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள். 358
தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும் 
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று 
ஆனியம் பல ஆசையில் செல்லுமே 
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே. 359
மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள் 
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர 
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால் 
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன். 360
கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும் 
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் 
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச் 
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார். 361
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண் 
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப் 
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல் 
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான். 362
அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப் 
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும் 
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி 
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே. 363
பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து 
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும் 
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச் 
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே. 364
மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும் 
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக் 
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான் 
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள். 365
சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா 
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப் 
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால் 
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான். 366
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள் 
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே 
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக 
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள். 367
முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும் 
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும் 
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல் 
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார். 368
சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்
அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் 
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி 
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத் 
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே. 369
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல் 
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக் 
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர் 
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான். 370
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் 
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக் 
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக் 
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார். 371
விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் 
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும் 
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம் 
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார். 372
சீவகன் வளர்தல்
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத் 
தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத் 
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற 
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான். 373
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப் 
பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன 
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ 
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான். 374
அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற 
நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார் 
பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே 
வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 375
கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து 
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும் 
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி 
ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண். 376
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் 
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம் 
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக் 
கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம். 377
தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச் 
செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும் 
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற 
கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ. 378
பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் 
குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக் 
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா 
உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான். 379
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும் 
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும் 
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும் 
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான். 380
காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப் 
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா 
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து 
ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 381
நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித் 
தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப் 
புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும் 
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான். 382
அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித் 
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா 
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும் 
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான். 383
பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி 
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல் 
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில் 
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான். 384
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி 
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள் 
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி 
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். 385
புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி 
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன 
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி 
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள். 386
வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக் 
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி 
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே 
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே. 387
அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று 
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத் 
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று 
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள். 388
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப் 
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும் 
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத் 
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 389
கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச் 
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி 
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக் 
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான். 390
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் 
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப் 
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான் 
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே. 391
மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர் 
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச் 
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும் 
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே. 392
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல 
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன 
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை 
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான். 393
வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர் 
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி 
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி 
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான். 394
அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்
வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன் 
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான் 
தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப் 
பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான். 395
வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும் 
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக் 
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர் 
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான். 396
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி 
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன 
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால் 
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான். 397
பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால் 
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான் 
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி 
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே. 398
புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல் 
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின் 
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான் 
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார். 399
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப் 
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம் 
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க 
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன். 400
சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் 
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி 
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் 
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401
நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம் 
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் 
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன் 
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402
ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட 
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித் 
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் 
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403
கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல 
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய் 
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச் 
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404 
அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே 
தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை 
வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன 
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான். 405
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால் 
பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார் 
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான் 
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான். 406
கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான் 
தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன் 
பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் 
மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான். 407
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள் 
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக 
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான் 
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். 408
நாமகள் இலம்பகம் முற்றியது.
கோவிந்தையார் இலம்பகம்
அச்சணந்தி பிறவி நீத்தல்
ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய் 
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின் 
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச் 
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 409
சீவகன் குமரன் ஆதல்
நம்பன் இத் தலை நாக நல் நகர் 
பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும் 
செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும் 
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே. 410
கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும் 
சிலையினது அகலமும் வீணைச் செல்வமும் 
மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ் 
உலகினில் இலை என ஒருவன் ஆயினான். 411
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக் 
காமனே எனக் கன்னி மங்கையர் 
தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம் 
கோ மகன் திறத்து உற்ற கூறுவாம். 412
வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல்
சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம் 
முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை 
புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும் 
கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே. 413
மிக்க நாளினால் வேழம் மும் மதம் 
உக்க தேனினோடு ஊறி வார் சுனை 
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல் 
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார். 414
வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல்
மன்னவன் நிரை வந்து கண் உறும் 
இன்ன நாளினால் கோடும் நாம் எனச் 
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல் 
முன்னம் கூறினான் முது உணர்வினான். 415
அடைதும் நாம் நிரை அடைந்த காலையே 
குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை 
உடையும் பின்னரே ஒருவன் தேரினால் 
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே. 416
என்று கூறலும் 'ஏழை வேட்டுவீர் 
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே 
என்று கூறினும் ஒருவன் என் செயும் 
இன்று கோடும் நாம் எழுக' என்று ஏகினார். 417
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர் 
தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ 
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என 
மண்டினார் நிரை மணந்த காலையே. 418
தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல்
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார் 
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் 
கோத்த நித்திலக் கோதை மார்பினான் 
வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான். 419
பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால் 
எள்ளன்மின் நிரை இன்று நீர் என 
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் 
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 420
வேடர்கள் ஆநிரை கவர்தல்
காய மீன் எனக் கலந்து கான் நிரை 
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன் 
பாய மாரிபோல் பகழி சிந்தினார் 
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார். 421
குழலும் நவியமும் ஒழியக் கோவலர் 
சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து 
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள் 
மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார். 422
மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர் 
அத்தலை விடின் இத்தலை விடார் 
உய்த்தனர் என உடை தயிர்ப் புளி 
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார். 423
வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம் 
முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த 
தலைப் படு தண் மலர் மாலை பிணங்க 
அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார். 424
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர் 
நும் அனைமார்களை நோவ அதுக்கி 
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத் 
தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார். 425
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது 
ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக 
மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது 
சேறு படு மலர் சிந்த விரைந்தே. 426
கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல்
புறவு அணி பூ விரி புன் புலம் போகி 
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச் 
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் 
இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல். 427
கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த 
படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி 
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை 
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே. 428
காசு இல் மா மணிச் சாமரை கன்னியர் 
வீசு மா மகரக் குழை வில் இட 
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி 
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான். 429
கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு 
சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை 
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக் 
கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான். 430 
கட்டியங்காரன் படை தோல்வியுறல்
செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம் 
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் 
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள் 
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான். 431
கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய் 
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக் 
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன் 
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே. 432
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் 
போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள் 
வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல் 
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே. 433
கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல் 
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க 
வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப் 
பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார். 434
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர் 
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச் 
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக் 
கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே. 435
வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக் 
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால் 
வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் 
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே. 436
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி 
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல் 
பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம் 
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே. 437
பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த 
முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர் 
ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன 
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான். 438
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர் 
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும் 
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார் 
செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார். 439
நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல்
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள்கண் 
பொன் இழை சுடரும் மேனிப் பூங் கொடி அனைய பொற்பில் 
கன்னியைத் தருதும் என்று கடி முரசு இயம்பக் கொட்டி 
நல் நகர் வீதி தோறும் நந்த கோன் அறை வித்தானே. 440
சீவகன் போருக்கு எழுதல்
வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க 
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும் 
கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும் 
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார். 441
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும் 
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித் 
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு 
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே. 442
தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும் 
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம் 
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் 
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான். 443
போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித் 
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து 
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில் 
பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே. 444
நிமித்திகன் வேடரைத் தடுத்தல்
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்கண் நோக்கின் 
பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை 
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும் 
பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்தான் மொழிந்தான். 445
நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்
மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல் 
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று 
ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல் 
வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே. 446
சீவகன் வேடர்களுடன் போரிடுதல்
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து 
இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து 
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் 
கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே. 447
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப 
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம் 
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் 
மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே. 448 
வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்
ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம் 
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் 
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக் 
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார். 449
புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான் 
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா 
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா 
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே. 450
மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை 
கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல் 
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி 
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே. 451
கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும் 
ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள் 
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி 
போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே. 452
ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர் 
மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர் 
கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின் 
மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார். 453
வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக் 
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன் 
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் 
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான். 454
ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும் 
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற 
வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல் 
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே. 455 
சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம் 
விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி 
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற 
புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார். 456
இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல் 
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம் 
மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி 
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார். 457
சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன் 
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி 
நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச் 
செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே. 458
நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக் 
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக் 
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி 
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார். 459
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப் 
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப் 
பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார் 
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார். 460
வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல் 
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் 
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல் 
காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே. 461
வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் 
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர் 
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் 
பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம். 462
மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப் 
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார் 
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என் 
தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார். 463
கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப் 
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல் 
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம் 
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார். 464
செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார் 
எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார் 
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித் 
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார். 465
சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக் 
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார் 
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் 
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும். 466
விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார் 
மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல் 
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி 
அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார். 467
வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே 
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ 
அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக் 
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார். 468
வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி 
ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால் 
பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன் 
தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே. 469
வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித் 
தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல் 
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் 
கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். 470
பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க 
மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி 
இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி 
மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே. 471
இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி 
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப் 
பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து 
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். 472
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக் 
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி 
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன் 
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார். 473
நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்
தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண் 
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட 
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த் 
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும். 474
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த 
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை 
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப் 
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான். 475
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக் 
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன் 
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே 
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன். 476
குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன் 
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன் 
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த 
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள். 477
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம் 
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக் 
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற 
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன். 478
பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல் 
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை 
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய 
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான். 479
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள் 
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் 
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி 
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய். 480
சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும் 
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய் 
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை 
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான். 481
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி 
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன் 
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை 
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. 482
பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம் 
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப் 
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார் 
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே. 483
கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி 
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் 
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி 
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான். 484
தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர் 
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு 
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க் 
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான். 485
கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன் 
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற 
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து 
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். 486
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து 
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று 
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி 
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே. 487
நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி 
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப் 
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச் 
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார். 488
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச் 
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி 
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் 
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே. 489
பதுமுகன் இன்பம் நுகர்தல்
நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன் 
இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால் 
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க 
முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே. 490
கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி 
வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை 
முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக் 
கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான். 491
தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர் 
தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள் 
ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய 
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே. 492
கோவிந்தையார் இலம்பகம் முற்றியது
சீவக சிந்தாமணி முற்றியது

விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத் தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே. 221
தான் அமர் காதலி தன்னொடு மா வலி வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும் தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக் கான் அமர் கோதை கனா மொழிகின்றாள். 222
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண் முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு வைத்தது போல வளர்ந்ததை அன்றே. 223
சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
வார் குழை வில் இட மா முடி தூக்குபு கார் கெழு குன்று அனையான் கனவின் இயல் பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். 224
நன்முடி நின் மகனாம் நறு மாலைகள் அன்னவனால் அமரப்படும் தேவியர் நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப் பின்னதனால் பயன் பேசலன் விட்டான். 225
அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
இற்று அதனால் பயன் என் என ஏந்திழை உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும் மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள். 226
காவி கடந்த கண்ணீரொடு காரிகை ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப் பாவி என் ஆவி வருத்துதியோ எனத் தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான். 227
தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள் கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும் பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப் பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான். 228
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க் கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத் தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். 229
விசயை தாய்மையுறுதல்
பண் கனியப் பருகிப் பயன் நாடகம் கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல விண் கனியக் கவின் வித்திய வேல் கணி மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள். 230
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண் பசலை பூத்த காமம் விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல் அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே.231
சச்சந்தன் கவலையுறுதல்
தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். 232
'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். 233
சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்
அந்தரத்தார் மயனே என ஐயுறும் தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர் எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். 234
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச் செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. 235
பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய கோல நல் மாமயிலும் கொடு சென்றவன் ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். 236
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர் பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். 237
மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப் பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238
பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239
சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
காதி வேல் வல கட்டியங் காரனும் நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல் ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான் கோது செய் குணக் கோதினுள் கோது அனான். 240
மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம் என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல் துன்னி நின்று செகுத்திடு நீ எனும் என்னை யான் செய்வ கூறுமின் என்னவே. 241
தருமதத்தன் அறிவுரை கூறுதல்
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர் உருமு வீழ்ந்து என உட்கினரா அவன் கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான் தரும தத்தன் என்பான் இது சாற்றினான். 242
தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் குவளையே அளவுள்ள கொழுங் கணாள் அவளையே அமிர்தாக அவ் அண்ணலும் உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான். 243
விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன் எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம் தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே. 244
தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப் பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப் பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. 245
திலக நீள் முடித் தேவரும் வேந்தரும் உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன் பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். 246
அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல் வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம் மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும் அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. 247
உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார். 248
யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின் தேவர் என்பது தேறும் இவ் வையகம் காவல் மன்னவர் காய்வன சிந்தியார் நாவினும் உரையார் நவை அஞ்சுவார். 249
தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும் வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான் மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே. 250
வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ் ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல் வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். 251
குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர் நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார். 252
நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும் அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான் குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். 253
பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள் குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல் இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும் நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். 254
கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப் பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான். 255
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார் போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான். 256
தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன் காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள் வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான். 257
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக் கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். 258
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். 259
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும் வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும் அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான். 260
கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக் குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். 261
கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ் ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே. 262
பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித் திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச் செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே. 263
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்
நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி! பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி! கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். 264
திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும் கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான் விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். 265
புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக் கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல் வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். 266
விசயை துன்புறுதல்
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக் கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 267
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான் அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப் புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச் சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே. 268
சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும் ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய் நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான். 269
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. 270
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல் உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல் ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான். 271
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார் கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான் எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான். 272
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித் துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். 273
சச்சந்தன் கோபங்கொள்ளல்
நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின் சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள் பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான். 274
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில் குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே. 275
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன் பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம் வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர் கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான். 276
மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின் வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப் பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே. 277
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின் ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே. 278
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத் தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே. 279
உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி இப்படி இறை மகன் இரும் களிறு நூற அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி. 280
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக் காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான். 281
நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக் கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான். 282
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும் வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச் சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான். 283
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம் கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே. 284
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம் காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே. 285
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக் கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான். 286
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன் நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும் மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள் குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான். 287
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும் வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப் பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப் போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான். 288
சச்சந்தன் வீழ்தல்
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத் தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான். 289
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல் இருள் பரப்பவே ஏ பாவம் ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த அறச் செங்கோலாய் கதிரினை வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே.290
பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க் கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக் கேடகமும் மறமும் ஆற்றி வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.291
சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும் தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத் தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை போய் ஆடல் அரம்பை அன்னார் எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து இரங்கிப் பள்ளி படுத்தார்களே.292
சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச் செப்பகம் கடைகின்றவே போல் தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்கக் காமன் படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப் பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார் புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள் மின்னுப் போல் புலம்பினாரே.293
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானைத் தான் கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்பச் சொரிந்து அலறி எம் பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப் பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.294
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல் ஆரம் பரிந்து அலறுவார் நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும் மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார் ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார்.295
பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய் ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத் தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு பிடிகள் போலத் துயர் உழந்து தாம் ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம் கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி இனிப் பூவா பிறர் பறிப்பவே.296
அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்
செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப் பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே.297
சீவகன் பிறப்பு
களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால் சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன். 298
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண் வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள். 299
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம் பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும் காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல் பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே. 300
மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும் அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக் குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே. 301
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள் ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச் சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள். 302
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம் கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள் வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள். 303
இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப் பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே. 304
பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித் தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல் வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள் வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். 305
விசயை புலம்புதல்
கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின் சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின். 306
மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள் வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக் கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின். 307
அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில் ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக் கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 308
வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே. 309
பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால் உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால் மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால் எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே. 310
பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும் புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால் சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால் மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 311 
விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்
அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல் கந்தார் களிற்றுத் தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து வந்தாள் போலப் புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள் சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே. 312
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இருங் கண் ஞாலத்து இருள் பருகிச் சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டுப் படா முலையாள். 313
சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்
தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள் யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில் தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும் கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே. 314
விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக் கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம் செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள். 315
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 316
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள் நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள். 317
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம் தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக் காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக் கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள். 318
நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக் கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப் புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல் ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். 319
கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர் கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக் காளக உடையினன் கந்து நாமனும் வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். 320
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம் தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள் நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. 321
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர் பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். 322
புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம் வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால் துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான் சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. 323
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை நுன் பழம் பகை தவ நூறுவாய் என இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். 324
ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார் அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். 325
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின் தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். 326
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய் திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான் வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. 327
கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன் உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். 328
சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம் விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல் கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். 329
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். 330
திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப் பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம் செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. 331
விசயை துறவு நிலையைப் பூணுதல்
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர் புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர் கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம். 332
பொறி அறு பாவையின் பொம் என விம்மி வெறி உறு கோதை வெறு நிலம் எய்த இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம் நெறிமையில் கூற நினைவின் அகன்றாள். 333
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம் ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும் தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே. 334
மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால் பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய் துணி இருள் போர்வையில் துன்னுபு போகி அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம். 335
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் குமரிக் கொடி மதில் கோபுர மூதூர் தமர் இயல் ஓம்பும் தரணி திலகம் நமர் அது மற்றது நண்ணலம் ஆகி. 336
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும் கண்டார் மனம் கவர் காவும் கஞலிய தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள். 337
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி அருள் உடை மாதவர் அத்திசை முன்னி இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள். 338
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய இருவிலும் எறி மா மகரக் குழைத் திருவிலும் இவை தேமொழி மாதரைப் பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே. 339
சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண் மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும் சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். 340
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள் குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே. 341
தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும் குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல் கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல் இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே. 342
எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர் மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள் தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய அல்லல் வெவ்வினை போல அகன்றதே. 343
நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள். 344
வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக் கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி மொய் கொள் பூமி முளைப்பது போலவே. 345
தூவி அம்சிறை அன்னமும் தோகையும் மேவி மென் புனம் மான் இனம் ஆதியா நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே. 346
கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள் உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால் இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள் செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 347
வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம் தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத் தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார். 348
திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும் கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும் திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள். 349
திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப் பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும் வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள். 350
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள் அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள். 351
பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும் ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல் வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள். 352
பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள் அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின் கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே. 353
பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச் சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள். 354
விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல் அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான் புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும் நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே. 355
பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின் ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும் கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே. 356
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம் சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக் குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள். 357
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால் வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள் பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள். 358
தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும் மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று ஆனியம் பல ஆசையில் செல்லுமே தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே. 359
மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள் கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால் பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன். 360
கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும் மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச் சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார். 361
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண் ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப் போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல் மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான். 362
அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப் பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும் செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே. 363
பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும் கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச் செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே. 364
மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும் அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக் கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான் இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள். 365
சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப் போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால் ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான். 366
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள் மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள். 367
முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும் அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும் மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல் குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார். 368
சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்
அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத் திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே. 369
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல் ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக் காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர் பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான். 370
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக் குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக் கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார். 371
விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும் கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம் சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார். 372
சீவகன் வளர்தல்
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத் தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத் தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான். 373
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப் பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான். 374
அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார் பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 375
கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும் நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண். 376
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம் ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக் கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம். 377
தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச் செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும் முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ. 378
பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக் கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான். 379
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும் வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும் ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும் ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான். 380
காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப் பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 381
நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித் தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப் புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும் இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான். 382
அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித் திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும் தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான். 383
பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல் பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில் ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான். 384
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள் செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். 385
புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள். 386
வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக் கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே. 387
அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத் திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள். 388
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப் பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும் சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத் திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 389
கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச் சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக் கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான். 390
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம் நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப் புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான் நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே. 391
மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர் அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச் சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும் இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே. 392
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான். 393
வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர் கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான். 394
அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்
வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன் ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான் தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப் பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான். 395
வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும் வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக் குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர் மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான். 396
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன 'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால் 'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான். 397
பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால் நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான் பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே. 398
புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல் நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின் இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான் கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார். 399
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப் பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம் பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன். 400
சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401
நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம் நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன் கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402
ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித் தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403
கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய் கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச் சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404 
அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான். 405
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால் பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார் துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான் நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான். 406
கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான் தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன் பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான். 407
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள் குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான் பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். 408
நாமகள் இலம்பகம் முற்றியது.

கோவிந்தையார் இலம்பகம்
அச்சணந்தி பிறவி நீத்தல்
ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய் வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின் மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச் சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 409
சீவகன் குமரன் ஆதல்
நம்பன் இத் தலை நாக நல் நகர் பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும் செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும் வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே. 410
கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும் சிலையினது அகலமும் வீணைச் செல்வமும் மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ் உலகினில் இலை என ஒருவன் ஆயினான். 411
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக் காமனே எனக் கன்னி மங்கையர் தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம் கோ மகன் திறத்து உற்ற கூறுவாம். 412
வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல்
சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம் முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும் கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே. 413
மிக்க நாளினால் வேழம் மும் மதம் உக்க தேனினோடு ஊறி வார் சுனை ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல் மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார். 414
வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல்
மன்னவன் நிரை வந்து கண் உறும் இன்ன நாளினால் கோடும் நாம் எனச் சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல் முன்னம் கூறினான் முது உணர்வினான். 415
அடைதும் நாம் நிரை அடைந்த காலையே குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை உடையும் பின்னரே ஒருவன் தேரினால் உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே. 416
என்று கூறலும் 'ஏழை வேட்டுவீர் ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே என்று கூறினும் ஒருவன் என் செயும் இன்று கோடும் நாம் எழுக' என்று ஏகினார். 417
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர் தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என மண்டினார் நிரை மணந்த காலையே. 418
தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல்
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார் ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் கோத்த நித்திலக் கோதை மார்பினான் வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான். 419
பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால் எள்ளன்மின் நிரை இன்று நீர் என வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 420
வேடர்கள் ஆநிரை கவர்தல்
காய மீன் எனக் கலந்து கான் நிரை மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன் பாய மாரிபோல் பகழி சிந்தினார் ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார். 421
குழலும் நவியமும் ஒழியக் கோவலர் சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள் மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார். 422
மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர் அத்தலை விடின் இத்தலை விடார் உய்த்தனர் என உடை தயிர்ப் புளி மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார். 423
வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம் முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த தலைப் படு தண் மலர் மாலை பிணங்க அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார். 424
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர் நும் அனைமார்களை நோவ அதுக்கி வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத் தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார். 425
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது சேறு படு மலர் சிந்த விரைந்தே. 426
கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல்
புறவு அணி பூ விரி புன் புலம் போகி நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச் சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல். 427
கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே. 428
காசு இல் மா மணிச் சாமரை கன்னியர் வீசு மா மகரக் குழை வில் இட வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான். 429
கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக் கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான். 430 
கட்டியங்காரன் படை தோல்வியுறல்
செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம் வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள் அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான். 431
கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக் காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன் ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே. 432
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள் வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல் நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே. 433
கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல் வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப் பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார். 434
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர் மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச் சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக் கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே. 435
வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக் கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால் வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே. 436
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல் பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம் மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே. 437
பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர் ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான். 438
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர் கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும் அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார் செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார். 439
நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல்
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள்கண் பொன் இழை சுடரும் மேனிப் பூங் கொடி அனைய பொற்பில் கன்னியைத் தருதும் என்று கடி முரசு இயம்பக் கொட்டி நல் நகர் வீதி தோறும் நந்த கோன் அறை வித்தானே. 440
சீவகன் போருக்கு எழுதல்
வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும் கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும் அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார். 441
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும் தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித் தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே. 442
தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும் இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம் நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான். 443
போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித் தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில் பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே. 444
நிமித்திகன் வேடரைத் தடுத்தல்
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்கண் நோக்கின் பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும் பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்தான் மொழிந்தான். 445
நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்
மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல் காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல் வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே. 446
சீவகன் வேடர்களுடன் போரிடுதல்
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே. 447
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம் ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே. 448 
வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்
ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக் கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார். 449
புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான் வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே. 450
மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல் மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே. 451
கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும் ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள் தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே. 452
ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர் மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர் கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின் மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார். 453
வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக் கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன் தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான். 454
ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும் கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல் நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே. 455 
சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம் விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார். 456
இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல் பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம் மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார். 457
சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன் அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச் செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே. 458
நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக் கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக் கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார். 459
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப் போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப் பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார் நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார். 460
வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல் ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல் காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே. 461
வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர் இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம். 462
மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப் போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார் தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என் தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார். 463
கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப் படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல் நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம் தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார். 464
செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார் எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார் அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித் தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார். 465
சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக் கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார் மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும். 466
விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார் மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல் பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார். 467
வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக் கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார். 468
வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால் பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன் தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே. 469
வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித் தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல் நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். 470
பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே. 471
இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப் பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். 472
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக் காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன் சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார். 473
நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்
தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண் புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த் தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும். 474
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப் பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான். 475
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக் கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன் மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன். 476
குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன் நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன் இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள். 477
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம் அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக் கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன். 478
பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல் சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான். 479
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள் உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் வண்ண வனமுலை மாதர் மட நோக்கி கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய். 480
சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும் பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய் போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான். 481
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன் நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. 482
பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம் முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப் பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார் இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே. 483
கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான். 484
தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர் கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க் கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான். 485
கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன் குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். 486
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே. 487
நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப் பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச் செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார். 488
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச் சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே. 489
பதுமுகன் இன்பம் நுகர்தல்
நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால் அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே. 490
கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக் கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான். 491
தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர் தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள் ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே. 492
கோவிந்தையார் இலம்பகம் முற்றியது

சீவக சிந்தாமணி முற்றியது

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.