LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தன்னம்பிக்கை (Self Confidence )

தன்னம்பிக்கை-பகுதி 1

 

தன்னம்பிக்கை-பகுதி 1  
-சூர்யா சரவணன்

தன்னம்பிக்கை-பகுதி 1  

-சூர்யா சரவணன் 

           1.உன்னை உயர்த்தும் தன்னம்பிக்கை 

 

  னிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம். ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம், கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலை முகடாக இருக்கலாம் வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே செல்கிறார்கள். தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.

 

  முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும். முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!

 

  சோர்வும் சோம்பறித்தனமும் அவன் கால்விரல்பட்டு நசுங்கி விடும். சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும், விடாமுயற்சியும் அவன் மனத்தோட்டத்தில் மணம் வீசும், வண்ணப்பூக்களாய் பூத்து குலுங்கி புது அழகு காட்டும்.

 

  களை எடுத்து, தளை அறுத்துத் தடைகளை உடைக்கும் வீர நெஞ்சம் அவனுக்கு சொந்தமாயிருக்கும்.

 

தன்னம்பிக்கை ஒளி பாயும்:

 

  தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள், வெற்றியை நேசிப்பார்கள்வெற்றிப் பற்றிய கனவு காண்பார்கள். வெற்றியாளர்களின் கதைகளால் அவர்களது மனம் நிரம்பி இருக்கும், வெற்றியாளர்களின் பாதையில் நடைபயில ஆர்வம் ததும்பி வழியும்.

  அவர்கள் செயல் வீரர்களைப்போல் சிந்தித்து, சிந்தனையாளர்களைப்போல செயல்படுவார்கள்எடுத்த காரியம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.

  வாழ்க்கையில் எந்த ஒரு செயலளிலும் வெற்றி பெற நினைப்பவர்கள் நம்பகமானவர்களாக நடந்து கொள்ளவேண்டும்நேர்மையாளர்களாக இருந்திட வேண்டும்.

  இத்தகைய தன்னம்பிக்கையாளர்கள் வாழ்ந்து காட்டிய பாதையை நினைத்தாலே நெஞ்சில் தன்னம்பிக்கை ஒளி வெள்ளம் பாயும்.

 

இரண்டு நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி:

 

  புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படும் ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் மேடம் கியூரி. இதைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும் அளவுக்கு சிக்கல்களும் சிரமங்களும் இடர்பாடுகளும் இருந்தன. ஆனாலும் மேடம் கியூரி மிகுந்த தன்னம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ரேடியத்தைக் கண்டுபிடித்தார்பல ஆண்டுகால ஆராய்ச்சியில் எந்த ஒருகாலகட்டத்திலும் அவர் தன்னம்பிக்கையை கை விடவில்லைஇந்த கண்டுபிடிப்பு தனிப்பட்ட முறையில் அவருக்கு மட்டுமல்ல விஞ்ஞான உலகிற்கு கிடைத்த வெற்றியாக மாறியதுஇக்கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு பெற்றார்பின்னர் போலோனியம் கண்டுபிடுத்து அதற்காகவும் ஒரு நோபல் பரிசு பெற்றார்.

  தாவரங்களுக்கு உயிர் உண்டு, உணர்ச்சி உண்டு என்றார், வங்காளத்தைச் சேர்ந்த சர். ஜெகதீச வி.சந்திரபோஸ். 1907 ஆம் ஆண்டு இலண்டனில் ராயல் சொஸைட்டியில் உரையாற்றும் போது தமது விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டார்தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லைஎனினும், அவர் சோர்ந்து போய்விடவில்லை இந்தியாவுக்குத் திரும்பியதும் தனது ஆராய்சியைத் தொடர்ந்துமேற்கொண்டார்தனது ஆராய்ச்சிக்கு தேவையான நுட்பமான கருவிகளை உருவாக்கி தாம் கண்டறிந்த விஞ்ஞான உண்மைகளை உறுதி செய்து கொண்டார்.பிறகு மீண்டும் இலண்டன் சென்றார்இப்போது அவரது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர்கடினமான உழைப்பும் விடாமுயற்சியும்  தன்னம்பிக்கையுமே அவரிடம் இருந்தது. அதனால் அவர் வெற்றியாளராக வலம் வந்தார்.

  அமெரிக்கரான ஜார்ஜ் ஈஸ்ட்மென் ஏழையாக பிறந்து வங்கி ஒன்றில் சில காலம் சாதாரண ஊழியராக இருந்தவர் அவர். படப்பதிவுதாளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்.

  மாபெரும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்னின் நட்பு கிடைத்ததும் கொடாக் காமிராவை 1900 ஆம் ஆண்டு உருவாக்கினார். 1916ஆம் ஆண்டு 16 எம்.எம். காமிராவை உருவாக்கினார். படம் காட்டும் கருவியையும் அவர்தான் கண்டுபிடித்தார்.

  சாதாரண ஏழையாக இருந்த ஈஸ்ட்மென் விஞ்ஞானக் கருவிகளின் படைப்பாளியானார் என்றால், அவரிடம் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏழை ஈஸ்ட்மென் மிகப்பெரிய பணக்காராகவும் மாறினார்.

 

சிலந்தி கற்று தந்த பாடம்:

 

  ராபர்ட் புரூஸ் என்ற மன்னன் போரில் பலமுறை தோல்வியுற்று பகைவருக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருந்தபோது அவன் விழிகளுக்கு ஒளியேற்றி அவன் நெஞ்சுக்கு உரமேற்றிய ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

  வலை பின்னும் சிலந்தி தனக்குரிய வலையைப் பின்னி முடிப்பதற்குள் எத்தனை முறை வலை அறுந்தாலும் அது திரும்ப திரும்ப முயற்சி மேற்கொள்வதை புரூஸ் மன்னன் வைத்த விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சிலந்திக்கு சோர்வே இல்லையா? அதற்கு அலுப்பே ஏற்படவில்லையா? திரும்ப திரும்ப நூல் அறுபடும். வலை பின்னும் முயற்சி தடைபடும். அதனால் என்ன? வலை பின்னி முடிக்கும் வரை அது ஓயவில்லை. வலை பின்னிய வெற்றிப் பெருமிதத்துடன் சிலந்தி.

  இவன் மட்டும் ஏன் சோர்ந்து கிடக்க வேண்டும். திரும்ப திரும்ப முயற்சித்தால் வெற்றி கிட்டாமலா போய்விடும்? வலை பின்னும் சிலந்தி சொல்லித் தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கை ஊற்றைத் திறந்துவிட்டது. அந்த தன்னம்பிக்கை அவனை வெற்றியாளானாக்கியது.

 

  மனித வாழ்க்கையில் வளர்ச்சி என்பது வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வந்த இடத்துக்கே வருவதல்ல. சுழன்று சுழன்று சுழன்று சுழன்று செல்லக் கூடிய சுழலேணி வளர்ச்சி அது. இந்தச் சுழலேணியின் படிகளில் தொடர்ந்து மேலேறிச் செல்ல ஒருவருக்கு தன்னம்பிக்கை வேண்டும். அதுவே வாழ்க்கை மேம்பாடடையும் என்ற நன்னம்பிக்கையும் தரும். இந்த நன்னம்பிக்கையும் தன்னம்பிக்கையும் சேர்ந்திருந்தால் ஞாலம் கருதினும் கைகூடும்.

  ஞாலத்தை வெல்லஓடுமீன் ஓட உறுமீன் வருமளவுகாத்திருத்தல் வேண்டும். இந்தக் காத்திருத்தல் என்பது சும்மா இருப்பதல்ல, செயல்படுவதாகும். செயல்படுவது மந்தகதியில் இருந்து விடக்கூடாது! விரைந்தும், தெளிந்தும், தன்னம்பிக்கையோடும் செயல்படவேண்டும்.

 

                  “ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்

                   செல்வார்க்குச் செல்லாதது இல்

                                                                               (குறள் 472)

  ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாத எதுவும் இருக்காது.

  இந்த மனஉறுதியோடு எண்ணித் துணிந்த பின் முன் வைத்த காலை பின் வைக்காது நடை கொண்ட படை வேழமென அச்சமின்றி முன்னே செல்ல செல்ல முன்னேற்றம் உங்கள் காலடியில்! சாதனை உங்கள் கைப்பிடியில்

 

 

  தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த திட்டமிடுவதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்துவிடாமல், விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசைநோக்கி முன்னேறுவதும்தான் தன்னம்பிக்கை ஆகும்.

 

  மனிதன் தன் மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை வைக்காதிருந்தால் அவனால் எதுவும் செய்து முடிக்க முடியாது. “முயற்சி திருவினை ஆக்கும்”, “முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்எனும் வாசகங்கள் எல்லாம் தன்னம்பிக்கையிலிருந்து தோன்றியவை ஆகும். “முயன்றால் முடியாதது எதுவும் இல்லைஎன்ற அழுத்தமான சிந்தனைதான் தன்னம்பிக்கையின் அடித்தளம் ஆகும்.

 

குழந்தைக்கு தன்னம்பிக்கை:

 

  நம்பிக்கை எனும் வலைப்பின்னல் சூழவே மனிதன் வாழ்ந்து வருகிறான்.

  பெற்ற தாய் மீதும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மீதும், நண்பர்கள் மீதும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் தன்னால் புரிந்த கொள்ள முடியாத இயற்கையின் மீதும் நம்பிக்கை வைக்கும் நாம் தொடர்ந்து வாழ்நாளெல்லாம் பலவிதமான நம்பிக்கைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  எனவே ஒருவர் தன் மீது நம்பிக்கை வைப்பதும் அதை வளர்ப்பதும் முடியாத ஒன்றல்ல.

  தன்னம்பிக்கை என்பது ஒரு மனநிலை. இதனை எந்த வயதிலும் வளர்த்துக் கொள்ள முடியும். இது பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏன் குழந்தைகளிடமும் காணப்படுகிறது.

  ஆம்! தன்னம்பிக்கை மனோபாவம் குழந்தை பருவத்திலேயே தோன்றிவிடுகிறது.

  ஒரு பசுமாடு கன்றை ஈன்றவுடன் பிறந்த கன்றுக்குட்டி தட்டுத் தடுமாறி எழுந்து நின்று நடக்கிறது. முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு பிறந்தவுடன் நடக்கிறது.

  ஆனால்&

  மனிதன் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை. குழந்தைப் பருவத்தில் நடப்பது எப்படி என்று கற்றுக் கொள்கிறான். உட்காரவும் தவழ்ந்து செல்லவும் கற்றுக் கொண்ட குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்கிறது. பலமுறை எழுந்தும், விழுந்தும் பின்னர் உறுதியாக நிற்கவும் கற்றுக் கொள்கிறது.

 

தாயும் தன்னம்பிக்கையும்:

 

  அந்தக் குழந்தை முதலாவது அடி எடுத்து வைக்கும் போதே விழுந்து விடுவோம் என்ற பய உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் கொடுப்பவள் தாய். தன் குழந்தையை ஓரடி ஈரடியாகக் காலடி எடுத்து வைக்கச் சொல்லி அக்குழந்தையின் மனத்தில்  உன்னால் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துபவர் தாய். குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி பருவத்திலும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தாய் ஊட்டி வளர்க்கும் தன்னம்பிக்கை.

  இத்தகைய தன்னம்பிக்கை ஊட்டம் பெறாத குழந்தைகளின் வளர்ச்சியில் காலதாமதமும் முன்னேறுவதில் சிறு தடுமாற்றமும் இருக்கும். இதனை அக்குழந்தை நடை பயில்வதிலும் பேசப் பழகுவதிலும் நன்கு காணமுடியும்.

  ஒரு குழந்தை சிறு வயதிலிருந்தே கோழையாக வளர்வதற்கும் பெற்றோர் காரணமாகி விடுகிறார்கள். இந்தக் கோழைத்தனம் தன்னம்பிக்கைக்குத் தடையாக இருக்கும்.

 

ஆசிரியரும் தன்னம்பிக்கையும்:

 

  குழந்தை பருவத்தில் தாயின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த குழந்தை பள்ளிக்குச் சென்றவுடன் அதன் தன்னம்பிக்கையை வளர்ப்பவர்கள் அதன் ஆசிரியர்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறுகின்ற நம்பிக்கை ஒளி மிகுந்த சொற்கள், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. மாணவப்

                         

பருவத்தில் மாணவர்கள் படிக்கும் நல்ல நூல்கள், மாமனிதர்களின் வரலாறுகள், அவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்துகின்றன. பள்ளியில் தங்கள் அறிவாற்றல் திறனை அறிந்தும் வளர்த்தும் தன்னம்பிக்கை பெறுவது போலவே மாணவர்கள் தங்கள் பலத்தை தாங்களே உணர்ந்து கொள்ளச் செய்யும் படியான செயல்கள் மூலமாகவும் அவர்களது தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

 

  விளையாட்டு ஆசிரியர் தரும் பயிற்சி விளையாட்டு திறனை வளர்க்கிறது. ஓவிய ஆசிரியர் தரும் பயிற்சி அவர்களது கலைத்திறனை வளர்க்கிறது. இலக்கிய ஆசிரியர் தரும் தன்னம்பிக்கை ஊட்டம் பெற்ற மாணவர்கள் எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக சிறந்து விளங்கமுடியும்.

 

நண்பர்களும் தன்னம்பிக்கையும்:

 

  ஆசிரியர்கள் எவ்வளவுதான் தன்னம்பிக்கையூட்டி வளர்த்த போதிலும் அந்த தன்னம்பிக்கையை அசைத்து பார்கின்ற அளவுக்கு வலுவான பிரச்சனைகள் மாணவப் பருவம் கடந்த பிற்காலத்தில், சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் ஈடுபடும்போது மழையில் கரையும் மண் போல அப்படியே சரிந்து போகிறார்கள் இளம்தலை முறையினர்!

  வேலையின்மை, வறுமை, குடும்ப சூழ்நிலைகளில் துவண்டுபோகும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. மனம் தளர்ந்து சலிப்பு மிகுந்து கடைசியில் விரக்தியடைந்து தற்கொலைப் பாதையைத் தேடும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.

  இத்தகைய இளைஞர்களும் சொந்த வாழ்கையிலும் சமூக வாழ்கையிலும் செயலூக்கமாக பங்கு பெற அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டம் அவசியம்அவர்கள் தங்களுடைய சிறந்த நண்பர்களிடமிருந்தும் அவர்களின் மரியாதையைப் பெற்ற மூத்தவர்களிடமிருந்தும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

 

தன்னம்பிக்கை  இலக்கியம்:

 

  “நூல் பலகல்என்பதனை புரிந்து கொண்டவர்கள் வாழ்வியல் நூல்களை நல்ல வழி காட்டிகளாக கொண்டு தன்னம்பிக்கை எனும் உரமேற்றிக் கொள்கிறார்கள்.

 

                  “வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்

          வாசல் தோறும் வேதனை இருக்கும்

          வந்த துன்பம் எது வென்றாலும் 

         வாடிநின்றால் ஓடுவதில்லை"

 

                  என்று கவியரசு கண்ணதாசன் சுட்டிக் காட்டுவார்.

 

 

வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்பதைக் கற்றுத் தருவதில் இலக்கியம்  சிறந்த பங்காற்றுகிறது. வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும்! ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டு விடக்கூடாது!” என்று வலியுறுத்தும் கவிஞர் .மருதகாசிஉள்ளத்தில் உரம் வேணுமடாஎன்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

 எண்ணெய் தீர்ந்து அணைந்து போகும் அகல் விளக்கென எல்லா நம்பிக்கைகளும் வறண்டு போய் தற்கொலை பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவரை அந்த தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு நம்பிகையோடும் செயல் துடிப்போடும் வாழ்க்கை எதிர் கொள்ள செய்ய ஒரு புதினத்துக்கு ஆற்றல் உண்டா?

 

  உண்டு!

 

  என்னால் அடையாளம் காட்டமுடியும்! நச்சுக் கோப்பையைக் ஒரு கையிலும் அந்த நாவலை ஒரு கையிலும் எடுத்துக் கொள்ளட்டும். இந்தக் கதையைப் படித்து முடித்ததும்தாரளமாய் செத்துப்போஎன்று கம்பீரமாய் சொல்லிவிட்டு தன்னம்பிக்கையோடு காத்திருங்கள்! அந்த புதினத்தை படித்து முடித்ததும் விஷக் கோப்பையை வீசி எறிந்து விட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை தேடும் ஆன்ம பலம் கொண்ட மானிடனாய்அவன் மாறிவிடுவான்.

 

  சாவுக்கே சவால் என்பது அந்த நாவலின் பெயர். இந்த நாவலை எழுதியவருக்கு இரண்டு கைகளும் இல்லை. பற்களால் பேனாவைப்பிடித்து இந்த நாவலை எழதியுள்ளார். கால் விரல்களில் பிடித்து எழுதுவதை விடக் கடுமையானது உதடுகளில்  

போனாவை பற்றி எழுதுவது? உலகில் எண்ணற்ற மொழிகளில் அச்சேறிய அந்த நாவலை படித்தவர்கள் ஒரு நாளும் அதை மறந்துவிட முடியாது.

 

  நீங்கள் பலவீனமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் நீங்கள் பலமற்றவர்களாகவே ஆகி விடுவீர்கள். பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணினால் பலமுடையவர்களாகி விடுவீர்கள்என்று கூறும் விவேகானந்தர் உனது பலம் உனக்குள்ளே என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். ஒருவன் தன் பலத்தை தானே உணர்ந்து கொள்ளாது இருந்தால் அவன் பலவீனமானவனாகவே இருப்பான். தன்னம்பிக்கை உள்ளவன்தான் தன் பலத்தை உணர்ந்திருப்பான்.

 

  தன்னம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு கருத்துதான். ஆனால் இந்தக்

கருத்து ஒருவர் மனத்தைப் பற்றிக்கொண்டவுடன் அதற்குப் பொருள்வகை சக்தி வந்து விடுகிறது. இந்த சக்திதான் தடைகனை தாண்டி ஒருவன் வெற்றிப்பாதை நோக்கி நடை போடவைக்கிறது. ஒருவருக்கு மன வலிமையூட்டுவதும் இதே  தன்னம்பிக்கைதான். ஒருவர் தன் வாழ்கையில்எடுத்த காரியம் யானும் வெற்றி, வெற்றி

என மகிழ்ச்சி குரல் கொடுக்க தன்னம்பிக்கைத் தேவை

 

  வாழ்க்கை என்பது நீர் தேங்கிக் கிடக்கும் குளம்  குட்டையாக்க இல்லாமல் தெளிந்த நீரோடையாய் இருக்க தன்னம்பிக்கை தேவை.

 

  கணம் தோன்றி கணம் மறையும் புழுக்களின் வாழ்கையாக மனித வாழ்க்கை இருந்து விடக்கூடாது. அதில் சாதனைகள் நிறைந்திருக்க வேண்டும். அப்படிசாதனை நிறைந்த வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தேவை!

 

  இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு!

அதன் வெளிச்ச மழையில் நனைபர்களுக்கு முன்னேற்றம் கைதொடும் தூரமே!

 

  * உங்கள் மீது அதிக அக்கறையை உங்கள் பெற்றோரை விட யார் காட்டமுடியும்? அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கை முன்னேற வைக்கும் உங்களை தன்னம்பிக்கை உங்களிடம் குறைவாக இருக்கிறதா-? விடுங்கள் கவ¬லையை!

 

  * உங்கள் நண்பர்களிடம் பேச்சுக்கொடுங்கள்! உள்ளத்தில் ஊறும் தன்னம்பிக்கை.

 

  * உங்கள் மீது அக்கறைகாட்டும் ஆசிரியர் ஒருவர் இருந்தால் போதுமே தன்னம்பிக்கை உரமேற்றுவார் உங்களுக்கு. இது என்னால் முடியும்! எனது முயற்சி வெல்லும்! என்னால் சாதிக்க முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்.

 

                            *   *   *   *   *

 

    

  2. சுயமதிப்பு உங்களிடம் இருக்கிறதா?

 

  சுயமதிப்பு என்பது தன்னம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே தன்னம்பிக்கையுடன் செயல்புரிய நினைக்கும் ஒருவர் தன்னுடய சுயமதிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

  ஒருவர் தண்னைப்பற்றி உருவாக்கும் மதிப்பீடுதான் இந்த சுயமதிப்பு. யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

  ஒரு மிருகம் கண்ணாடியில் தன்னுருவத்தைப் பார்த்து அது தன் பிம்பம் என்பதை அறிந்து கொள்ளாது. ஆனால் ஒரு குழந்தை தன் உருவத்தைக்  கண்ணாடியில் கண்டு சிரிக்கும், மகிழ்ச்சி அடையும். தன்னை அறிதல் என்பது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிறது.

  ஆக, நாம் யாராக இருக்கிறோம், எந்த மாதிரி சிந்திக்கிறோம் என்பதையே சுயமதிப்பு என்று கூறுகிறோம் அதில் ஒருவரது சுயமேம்பாடும், சுயமரியாதையும், தன்னை நேசிப்பதும் அடங்கும்.

  இந்தச் சுய மதிப்பு என்பது நாம் பிறக்கும்போதே பிறப்பதல்ல. குழந்தை பிறந்த பின்னர் தன்னையறிவதும்  தன்னுடைய மதிப்பை அறிவதும் தொடங்குகிறது

  நம்மைப் பற்றி நாம் எவ்வாறு உணர்ந்து கொள்கிறோம் என்பதே சுயமதிப்பு ஆகும்.

நம்மைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்து நமது எல்லா விஷயங்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

  ஓர் அலுவலகத்தில், அல்லது பிறிதோர் இடத்தில் பணியாற்றும்போது நமது நடவடிக்கைகளின் மீது சுயமதிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது நாம் பிறருடன் கொண்டுள்ள உறவுகளிலும் வெளிப்படுகிறதுநாம் பெற்றோராக மாறும்போதும் நமது

நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது

  நாம் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய சவாலாக விளங்குவது  இந்த சுயமதிப்பு  ஆகும். உயர்ந்த அளவில் சுயமதிப்பு இருக்குமானால், அது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும், திருப்திகரமான  மனநிலைக்கும் மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்கிறதுஇந்த உயர் சுயமதிப்பு ஏற்பட வேண்டுமானால், மதிப்புமிக்கவராக உங்களைக் கருத வேண்டும்.

  இப்படி உயர்சுய மதிப்பு கொண்டவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்தவர்களாக இருப்பார்கள், வாழ்க்கையை நன்னம்பிக்கையாடு எதிர்கொள்வார்கள், மற்றவர்களுடன் நல்லுறவுகளை பேணி வளர்ப்பார்கள், கூருணர்ச்சி மிகுந்தவர்களாக இருப்பார்கள், புதிய வாய்ப்புகள், சவால்களை எதிர்கொள்வார்கள், ஆபத்துகளை சமாளிக்கும் திறனும் அவர்களிடம் அதிகரிக்கும்.

  வித்தொன்று போட சுரையொன்று முளைக்குமா என்பது பழமொழி. நம்மைப் பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கு ஏற்பவே நமது நடவடிக்கைகளும் அமையும்.

சுயமதிப்பு  ஐந்து வயதிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர் சுயமதிப்பின் வளர்ச்சி போக்கில் இடையூறுகள் ஏற்படலாம் எனினும் இடையூறுகளை எடுத்தெறிந்து சுயமதிப்பை வளர்ப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை.

   சுயமதிப்பில்லாதவன் மனத்தில் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். தன்னம்பிக்கை குறைந்த மனம் தலை குனிந்து நிற்கும்.

 

சுயமதிப்பின் பயன்கள்

  * சுயமதிப்பானது ஒருவரிடம் திடமான நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

  * பொறுப்புணர்வை ஏற்கும் விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது.

  * நம்பிக்கையூட்டும் போக்குகளை உருவாக்கி, வளர்க்கிறது.

  * நல்லுறவுகளை வளர்க்க உதவுகிறது.

  * பிறர் தேவைகளை உணரச் செய்கிறது.

  * பிறர் மீது அக்கறை காட்டச் செய்கிறது.

  * தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்ளவும் ஒரு லட்சியத்தோடு இருக்கவும் உதவுகிறது.

  * ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள், நெருக்கடிகளின் போது இந்த சுயமதிப்பானது உதவிக்கரம் தந்து, அவற்றிலிருந்து அவரை மீட்டெடுக்கப் பயன்படுகிறது. மேலும் சுயமதிப்பானது தெளிவான முடிவெடுக்க உதவுகிறது.

  * ஒருவர் தன்னை எவ்வாறு மதிப்பிடுகிறார், அவர் தனது உணர்ச்சிகளை, ஆர்வ விருப்பங்களை எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார். மேலும் அவரிடம் எந்த அளவுக்குத் தன்னம்பிக்கை காணப்படுகிறது என்பனவற்றுடன் இந்த சுயமதிப்பு தொடர்பு கொண்டுள்ளது.

  * ஒருவரிடம் சுயமதிப்பு மிகவும் தாழ்வாக இருந்தால் அவரிடம் தன்னம்பிக்கையும் அதற்கேற்ப மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதைக் காணமுடியும்.

 

சுயமதிப்புடன் செயல்படும் விதம்

 

  நம்மை யாரென்று அடையாளம் காண்பிப்பதில் நமது குடும்பம் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே சுயமதிப்பு நமது குடும்பத்திலிருந்து ஆரம்பித்து வளர்கிறது. அதனால் குடும்பத்தில் நமக்கு எத்தகைய இடமும் மதிப்பும் தரப்படுகிறது என்பதும், உற்றார் உறவினர்கள் நம்மீது எத்தகைய மதிப்பு வைத்துள்ளனர் என்பதும் மிக முக்கியமானது.

  பெற்றோர் மட்டுமின்றி, சுயமதிப்பு உருவாக ஆசிரியர்களும் காரணமாய் உள்ளனர்.

  ‘உதவாக்கரைஎன்ற மாதிரியான மதிப்பீட்டை குழந்தைகள் மீது பெற்றேர், ஆசிரியர் திணிக்கும் போது அக்குழந்தைகள்தாங்கள் தகுதியற்றவர்கள்என்ற உணர்வோடுதான் வளர்கிறார்கள். அதனால் அவர்களது சுய பிம்பம் (ஷிமீறீயீ வீனீணீரீமீ) மிகவும் பரிதாபமாக இருக்கும்.

  குழந்தைகள் சாதிக்கும் திறன் படைத்தவர்கள், எதையும் சரியாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள் என்ற சுயமதிப்பை அவர்கள் உள்ளத்தில் விதைக்கும் போது அவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

 

  ஆனால் தங்களது சொந்தக் குழந்தையையேஉதவாக்கரைஎன்று அடிக்கடி சுட்டிக் காட்டும் பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்கள் பலர் முன்னிலையிலும் அவனை உதவாக்கரையாகவே சுட்டிக்காட்டி பேசுவார்கள். அப்போது அந்தக் குழந்தை அவமானதால் கூனிக்குறுகிவிடும் என்பதைப் பற்றி, குழந்தையானாலும் அதற்கும் மான, அவமான உணர்ச்சி உண்டென்பதையும் தங்கள் சௌகரியத்துக்காக பெற்றோர் மறந்துவிடுகிறார்கள்.

  தன் குழந்தை ஏதேனும் கருத்து தெரிவிக்க வாய் திறப்பதற்கு முன்பேஉனக்கொன்றும் தெரியாது, நீ ஒரு சரியான முட்டாள்என்று பேசுகின்ற பெற்றோரும் உண்டு.

  இப்படி அடிக்கடி கேட்டுக் கேட்டு, தான் அப்படித்தான் என்ற மனம் குழந்தைக்கு வந்துவிடும். தன்னைப் பற்றிய அதன் மதிப்பீடு தாழ்ந்து விடும். வீட்டில் இப்படி என்றால் பள்ளிப் பருவத்திலும் மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிற அளவுக்கு ஆசிரியர்களின் போக்கும் காணப்படுகிறது.

  “வீட்டுப் பாடம் கொடுத்தால் உன்னால் செய்ய முடியாது, ஏதாவது சாக்கு போக்கு சொல்வாய், பாடம் எழுதி வந்தாலும் பிழையில்லாமல் உன்னால் எழுத முடியாது, பள்ளிக்கூடத்துக்கு ஏன் வந்தாய்?” என்பது மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டி வந்தால் அந்த மாணவர்கள் மனத்தில் ஆசிரியர் சொல்வது சரிதான் என்று பதிவாகிவிடும். பிறகு அவர்களை சரி செய்வது கடினமாகிவிடும்.

  பள்ளியில் படிக்க நமக்கு தகுதியில்லையோ என அவர்களது மனம் யோசிக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் பாடம் படிக்கும்போதும், எழுதிப் பார்க்கும் போதும், மனப்பாடம் செய்யும் போதும், தான் படிப்பதற்கு தகுதியில்லாதவன்/தகுதியில்லாதவள் என்ற எண்ணம் மேலோங்கி படிப்பில் குறுக்கீடு செய்யும். மற்றவர்களை விட தான் தாழ்ந்து இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். பிறகு நாம் அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் கலக்கம் தீர்ந்துஅப்படியேலாயக்கில்லாத மாணவராக மாறி விடுவர்.

  இவ்வாறு ஆசிரியரின் தவறான அணுகுமுறையால் மாணவரின் மனத்தில் தாழ்வான சுயமதிப்பு உருவாக்கப்படுகிறது. கடைசியில் இத்தகைய மாணவர்களின் கல்வி பாழாகிவிடும்.

  தன் சொந்தக் குழந்தையை, பேரனை அல்லது பேத்தியை, மனைவியை அல்லது தாயை நீ தொட்டால் துலங்காது, நீ கை வைத்தால் உருப்படாது, நீ வேலையை ஆரம்பித்தால்  சரிபடாது என்றெல்லாம் பேசக்கூடியவர்கள் உண்டு. இந்த வாசகங்கள் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டாலும் அவரது மனநிலையை இவை பாதிக்கும். எனவே ஒருவரது உயர்வான சுயமதிப்பு அல்லது தாழ்வான சுயமதிப்பீடு உருவாக குடும்பப் பின்னணி, பள்ளிக்கூட சூழல், அவர்கள் பழகும் நட்பு வட்டாரம் போன்ற அம்சங்கள் காரணமாய் இருக்கின்றன.

 

சுயமதிப்பு குறைந்தவர்களிடம் காணப்படும் சில அறிகுறிகள்

 

   சுயமதிப்பு குறைந்தவர்கள், அரட்டை அடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஊர்வம்பு இழுப்பது அவர்களுக்கு பிடித்த விஷயமாய் இருக்கும். எதிலும் குற்றம் குறை  கண்டுபிடிப்பவர்களாய் இருப்பார்கள். அவர்களிடம் தலைகனம் இருக்கும்.

  பிறரிடம் அராஜகமாக நடந்து கொள்வார்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற தோரணையில் பேசுவார்கள். தங்களை மையப்படுத்தியே பேசுவார்கள், செயல்படுவார்கள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

 

  அவர்கள் தங்களின் தவறுகள், தோல்விகளை நியாயப்படுத்துவார்கள். தங்கள் கடமைப் பொறுப்பை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் மற்றவரை குற்றம் சொல்வார்கள். எந்த ஒரு செயலையும் செய்வதில் முன்முயற்சி எடுக்கமாட்டார்கள். பிறர் செய்யட்டும், பத்தோடு பதினொன்றாக சேர்ந்து கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிடுவார்கள்.

  அவர்களுக்கு இயல்பாகவே பொறாமை இருக்கும். நியாயமான விமர்சனத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  தனித்து இருக்கும் போது அவர்களுக்கு அலுப்பேற்பட்டுவிடும். அசௌகரியமாய் இருப்பதாய் தோன்றும்.

  நாகரிகமாய் இருப்பதை விட்டுவிடுவார்கள். அவர்களது பேச்சில் அநாகரிகம் மேலோங்கி இருக்கும்.

  சுயமதிப்பு குறைவான அவர்களுக்கு நல்ல நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே நல்லவராக நடந்துகொள்வதில்லை.

  நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் பிறருக்கு வாக்குறுதி அளிப்பார்கள்.     இவர்கள் வானத்தை வில்லாய் வளைப்பேன், பூமியைப் பாயாய் சுருட்டுவேன், செவ்வாயில் வீட்டுமனை விற்பனை செய்வேன் என்ற பாணியில் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி இவர்களது வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாய் இருப்பதால், இவர் மீதான நம்பகத்தன்மை போய்விடும். இவர்கள் மற்றவர்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வார்கள். ஊசலாட்ட மனநிலையுடனேயே இருப்பார்கள். ‘உதடு பழம் சொரியும், உள்ளமெல்லாம் வயிறெரியும்என்ற பாணியில் நடந்துகொள்வார்கள். காலை வாரிவிட்டு சிரிக்கவும் செய்வார்கள். பிறரை ஒதுக்கிவைத்து,கடைசியில் இவர்கள் ஒதுங்கிக் கிடப்பார்கள்.

  இயல்பாகதொட்டாற்சிணுங்கியாக இருப்பார்கள். இது மென்மையான ஆணவமாக இருக்கும். இத்தகைய மனநிலை கொண்டவர்கள் எதைச் சொன்னாலும் தன்னைக் குறித்தே சொல்லப்பட்டதாக கருதி பிறர் மனதைக் காயப்படுத்திவிடுவார்கள்.

  கூர்மையான முள்ளைத் தொட்டால் அது விரலை காயப்படுத்தி விடுவது போல இவர்களது குணம் அமைந்திருக்கும். அவர்கள் தங்களிடமும் பிறரிடமும் எதிர்பார்ப்பது கூட எதிர்மறையாக இருக்கும். இவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாதிருக்கும். மொத்தத்தில் தாழ்வான சுயமதிப்பீடு கொண்டவர்களாக இருப்பது வளர்ச்சிக்கு உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

சுயமதிப்பை வளர்க்கும் வழிமுறைகள் 

 

 

  . உங்களை நீங்களே மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

 

  பிறர் உங்களை மதிக்கும்போது மனம் உற்சாக நதியில் நீந்தும். ஆனால் உங்களை நீங்களே மதிக்காமல் போனால், பிறர் எப்படி உங்களை மதிப்பார்கள்?

  உங்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கும். அவை உங்கள் மீது பிறருக்கு நல்ல மரியாதையை ஏற்படுத்தித் தரும். எனவே உங்களிடம் காணப்படும் நல்ல குணங்களை நீங்கள் எந்த விதத்திலும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. ‘நல்ல குணமுடையவர்என்ற அடைமொழியை நீங்கள் இழந்து விட்டால் நீங்கள்மோசமானவர்என்ற புதுமொழி உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். பிறகு எவ்வளவு முயன்றாலும் நீங்கள் நல்லவர் என்ற அடைமொழியை பெறுவது முடியாமல் போகும். எனவே எவரும் தங்களிடம் உள்ள எந்த ஒரு நல்ல குணத்தையும் விட்டுவிடக் கூடாது.

  தவறான நடத்தை, அநீதி, சுரண்டல் கொடுமை ஆகியவற்றை எதிர்த்து நிற்க வேண்டும். கோடி கொடுத்தாலும் நல்ல குணத்தை, நல்ல நடத்தையை, தான் நம்புகிற நல்ல கொள்கையை கைவிடமாட்டேன் என்ற உறுதி கொண்டவரிடம்சுயமதிப்புகம்பீரமாக உயர்ந்து காணப்படும். சுயமதிப்பு தாழ்ந்து போனால் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திட வேண்டி வரும்.

 

 2. உதவி செய்க 

 

  உதவி செய்யும் மனப்பான்மை என்பது ஓர் உயர்ந்த பண்பு. பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் நமது மதிப்பு உயரும். இதனால் நாம் பயனுள்ளவர் என்ற பெருமித உணர்வும் நம் மனதில் தோன்றும். தனது தகுதி குறித்த பெருமித உணர்வும் தோன்றி வளரும். உங்கள் கண்ணியமும் வளரும்.

 

3. பாராட்டும் பண்பு 

 

  பிறரைப் பாராட்டும் பண்பு கொண்டிருந்தால் அது உங்கள் சுயமதிப்பை வளர்க்கும். பிறரும் உங்களது நற்செயல்களைப் பாராட்டுவர். நீங்கள் பிறரை மதித்துப் பாராட்டுவதும் பிறர் உங்களை மதித்துப் பாராட்டுவதும் உங்கள் சுயமதிப்பை உயர்த்தும்.

 

4. சாதனை நோக்கம் கொள் 

 

  சாதனைகள் புரிய வேண்டும் என்ற நோக்கம் மனத்தில் இருந்தால் உங்கள் மனத்தில் பெருமித உணர்வு பொங்கி வழியும். சுயமதிப்பு மேலோங்கி இருக்கும். வெற்றி பெறும்போதும், சாதனை புரியும் போதும் நம்மைப் பற்றி நாம் மேன்மேலும் உயர்வாக எண்ணிக் கொள்வோம்.

 

5. இருப்பு நிலையை உயர்த்து 

 

  ஒருவரது சுயமதிப்பை வளர்ப்பதில் அவர் குடும்பத்தில், கல்விக்கூடத்தில், பணியிடத்தில் எத்தகைய இருப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது முக்கியமானது. சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் தொடர்ந்து தனது இருப்பு நிலையை உயர்த்திக் கொள்ளும் போது அதற்குரிய மதிப்பு அவருக்கு வந்து சேர்கிறது.

 

6. சுடர்மிகு அறிவுடன் இருந்திடு!

 

  சுயமதிப்பு மிகுந்த ஒருவர் அறிவாற்றல் மிக்கவராக தன்னை வளர்த்து கொள்ள வேண்டும். அறிவாளிகளை உலகம் போற்றும் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பிறர் தரும் மதிப்பு மிகும்.

 

7. கொள்கை பிடிப்பு

 

  நல்ல கோட்பாடுகளை கடைபிடிக்கிற எவரையும் மக்கள் மதிப்பர். எவ்வித சுயலாபத்துக்கும் கொள்கைகளை, கோட்பாட்டு நெறிகளை பலிகொடுக்காமல் நிமிர்ந்து நிற்பவரை உலகம் வணங்கும். நேர்மையானர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் மரியாதைக்குரியதாய் இருக்கிறது.

 

8. துணிச்சலான செயல்பாடு

 

  கரடு முரடான பாதை என்பதால் செல்ல மறுக்காது, சிகரங்களை தொடுவதற்கும்சிரமங்கள் படுவதற்கும் தயாரான எவரையும் மதிப்பர். செய்யமுடியாது என உறுதியாக நீங்கள் உணர்ந்த காரியத்தைசெய்ய முடியாதுஎன்று திட்டவட்டமாக தெரிவிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது. உங்களது பலம், பலவீனங்களை அறிந்திருக்கும் நீங்கள் கறாராக, முடிந்ததை துணிந்து செய்து, முடியாததை மறுத்து நடந்திட வேண்டும் இவ்வாறு நடந்து கொள்வதன் மூலமும் உங்களது சுயமதிப்பை வளர்த்து கொள்ள முடியும்.

 

9. தோற்றப் பொலிவில் கவனம் தேவை

  உங்களைப் பார்த்ததும் ஏற்படும் முதல் மனப்பதிவு முக்கியமானது என்பதால் உங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆள்பாதி, ஆடைபாதி என்பார்கள். அதனை மறந்து விடக் கூடாது.

10. சரியான உங்கள் உணர்வை வெளிப்படுத்துக

  தோற்றப் பொலிவு மட்டுமல்ல உள்ளத்து உணர்வுகளை சரியாகத் தெளிவாக எடுத்துக்கூறாவிட்டாலும் உங்களது சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்.

                                                            

                         *   *   *   *   *

3.தன்னம்பிக்கை இருந்தால் முன்னேறலாம்

 

 வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் முன்னேற்றம் காண்பதற்கு வெறும் விருப்பம் மட்டுமே போதுமானதல்ல.

  முன்னேற்றம் என்பது பொதுவான சொல். எனினும் பொருளாதார முன்னேற்றம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதால் திரைகடல் ஓடியிம் திரவியம் தேடு என்ற நிலை. அறிவு வளம் மிகுந்தும் உடல்நலம் மிகுந்தும் இருந்த போதிலும் ஒருவரது பொருளாதார நலம் நலிந்திருக்குமாயின் அவரை வாழ்க்கையில் முன்னேறியவர்களாக எவரும் கருதுவதில்லை.

  நாம் வாழ்ந்து வருகிற இன்றைய சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக காணப்படுகின்றன. உண்ண உணவில்லாதவர்கள், உடுக்க உடையில்லாதவர்கள், இருக்க இடமில்லாதவர்கள் கோடிக்கணக்கில் நமது சமுதாயத்தில் இருந்து வருகிறார்கள் இவர்களுக்கெல்லாம் சொந்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் இல்லையா?

  ஒவ்வொருவரும் தத்தமது சொந்த வாழ்க்கையில் தாங்கள் வாழ்ந்து வரும் நிலையிலிருந்து ஓரளவுக்காவது முன்னேற்றம் காணவே விரும்புகின்றனர். அத்தகைய முன்னேற்றம் கைகூடும். அதற்கு அடிப்படையாய் இருப்பது, படிப்படியாய் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை ஆகும்.

  குடும்பத்தின் வருவாயை பெருக்கி வசதி வாய்ப்புகளை அதிகமாக்கிக்கொள்ள விரும்பும் ஒருவர் முதலில் தனது முன்னேற்றம் எந்த திசையை நோக்கி என்று திட்டவட்டமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த முடிவை நோக்கி தன்னம்பிக்கையோடு அவர் தனது காலடியை எடுத்து வைக்க வேண்டும். அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் அளவுக்கு ஏற்ப அவரது முன்னேற்றம் இருக்கும். அதுவே வள்ளுவர் குறளில் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று குறிப்பிடுகிறார். இப்படி முன்னேற்றத்தை நோக்கி செல்லும்போது கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.

  உதாரணத்திற்கு தனது உடல் நிலைதேறும் நலம் பெற்று எழுந்து நடமாடுவோம் என்ற

நம்பிக்கை இல்லாத நோயாளிக்கு உடல் நல முன்னேற்றம் தடைபடும் அல்லது தாமதமாகும். எளிதில் குணம் பெறுவேன் என்ற நம்பிக்கை கொண்டோரின் உடல் நலனைத் தேற்றுவதில் அவர் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை வி அவரிடம் காணப்படும் தன்னம்பிக்கை முக்கியப் பங்காற்றுகிறது.

------*------ 

  கல்விக் கூடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படிப்பில் முன்னேற வேண்டும் என்று விரும்புவது இயல்பானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட! இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். இந்த நம்பிக்கை மாணவனுக்கு வந்துவிட்டால் சிந்தனையும் செயலும் அவன் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். பள்ளியில் ஆசிரியர் படம் சொல்லித் தரும் போது கவனிக்காதிருந்த பழைய போக்கை மாற்றி கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவான். பாடம் புரியவில்லையா பரவாயில்லை என்று விட்டு விடாமல் ஆசிரியரிடமோ சக மாணவனிடமோ கேட்டுத் தெரிந்து கொள்வான்.

  அன்றாடம் சொல்லித் தந்த பாடங்களைப் படிப்பதைத் தள்ளிப் போட்டு வந்த மாணவர்கள் கூட தன்னம்பிக்கை வந்துவிட்டால் போதும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டுப் படிக்கத் தொடங்கிவிடுவர்.

  பாடங்களை படிப்பதன் மூலம் வாசிக்கும் திறன் வளரும். எழுதிப் பார்ப்பதன் மூலம் மொழியைப் பிழையின்றி எழுதும் பயிற்சி கிட்டும். வாசிக்க சொன்னால் பல மணி நேரம் வாசிக்கத் தயாராக இருக்கும். மாணவர்கள் கூட எழுதிப் பார்க்க சோம்பல் படுவார்கள். இது தவறு. எழுதிப் பார்ப்பது மிக முக்கியம் சில பள்ளிகளில் வீட்டுப் பாடங்களை சுமையாக கொடுத்துவிடுவர்-. அதைச் செய்து முடிப்பதற்குள் மாணவர்களும் களைத்து போய்விடுவர். வாசிக்கும் பழக்கம் இல்லாத நிலையிலும் வெறும் எழுத்து பயிற்சி நாம் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை தராது. இரண்டும் சேர வேண்டும்.

  ஆக படிப்பில் முன்னேற்றம் காணவேண்டும் என்ற உறுதி கொண்ட அஞ்சாதவர்களும்  அதற்கேற்ப படிப்பில் போதிய கவனம் செலுத்துதல் வாசித்து வார்த்தல், எழுதிப் பார்த்தல் ஆகிய பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. பின்னர் தேர்வில் பிற மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும், மாநிலத்தில் முதல் மாணவனாக வரவேண்டும் என்றெல்லாம் குறிக்கோள்களை உருவாக்கி கொள்ளலாம்.

  அப்படி ஒரு மாணவன் முயன்று முன்னேறி செல்ல அவனுக்குத் தேவை தன்னம்பிக்கை!

 

 

 

-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்
கருத்துகள்
31-Jan-2021 13:26:57 Arunkumar said : Report Abuse
தன்னம்பிக்கையுள்ள சிறந்த பதிவு.
 
13-Jan-2020 16:45:35 raju ramasamy said : Report Abuse
நன்றாக உள்ளது karuttthu
 
01-Sep-2017 16:27:29 Sundar said : Report Abuse
வாழ்வில் ஒவ்வொருவரும் அரிந்து ஆராய்ந்து... நடக்க நல்ல தன்னம்பிக்கையான பதிவுகள்..... நன்றி...ஆசிரியரே....
 
17-Jan-2017 07:57:09 பழனி Ramu said : Report Abuse
நல்ல தமிழ் கட்டுரை , நான் இது போன்ற நூல்களை நிறைய நிறைய படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு . படித்தவற்றில் மிகச்சிறந்தது இதுவும் ஒன்று . நன்றி பழனி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.