LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நாகரத்தினம் கிருஷ்ணா

செந்தமிழ் நகர்

வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத்தன்மைகளின் விழுக்காடு குறைவாகவே இருந்தது. பெரிய அதிர்ச்சிகள் எவையுமில்லையென்றாலும் ஒருவிதமான பதற்றமும் வியப்பும் சேர்ந்த கலவை நெஞ்சில் கொப்பளித்தது. மனத்தில் அதுநாள் வரை வளர்த்துக்கொண்ட கற்பனைக்கு வடிவம் கொடுத்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெல்ல நடந்து பெயர்ப் பலகையைத் தொட்டுப்பார்த்து அப்படியேதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான்கடிக்கு இரண்டடி அளவிலிருந்த பலகையில் அக்ரிலிக் வகை நிறப்பூச்சு உபயோகித்திருந்தார்கள். வெண்மை, கறுப்பு நிறங்களிலுமிருந்த எழுத்துகள் செந்தமிழ் நகர் என அறிவித்தன. அந்நகரோடு ஆங்கிலேயர் தொப்பியும் நீண்ட காக்கி கால்சராயை ஒருபக்கம் முழங்கால் தெரிய மடித்தும் பூவும் இலையுமாய் புஷ் ஷர்ட்டும் அணிந்த அந்நபருடனான முதல் சந்திப்பும் அவரை வேடிக்கையாய் எதிர்கொண்ட தாத்தாவும் நினைவுக்குவருகிறார்கள். 1985ஆம் ஆண்டு இலண்டன் போவதற்கு ஒருவாரம் இருந்தபோது தாத்தாவிடம் சொல்லிக்கொள்ள இந்தப் பக்கம் வந்திருந்தேன். அப்போது தாத்தா உயிரோடு இருந்தார், ஊரும் உயிர்த்திருந்தது. சற்று முன்பு பேருந்திலிருந்து இறங்கியபோது, தவறான நிறுத்தத்தில் இறங்கியிருக்கலாமென ஒரு கணம் நினைத்தேன். மலேசிய மனிதரை ஒவ்வொருமுறை சந்தித்தபோதும் தவறான நிறுத்தத்தில் அவர் இறங்கியிருக்கக்கூடும் என்பதுதான் எங்களில் பலருக்கும் இருந்த அபிப்ராயம். இறக்கும்வரை தாத்தாவைச் செந்தமிழ் நகரும் அந்த ஆசாமியும் துரத்திவந்திருக்கிறார்கள். பூர்வஜென்மத்தில் அவனிடம் கடன்பட்டிருந்ததாகத் தாத்தா ஒருமுறை கூறியிருந்தார். அவர் செலுத்தாத கடன் ஏதேனும் நிலுவையில் இருக்க வேண்டும். நிழல் கிடைத்தால் சற்று உட்காரலாம். அப்புதிய காலனி வெறிச்சோடிக் கிடக்கிறது. உயிர்வாழ்க்கைக்கான எந்தத் தடயமும் அற்றதுபோல் பூமியும் ஆகாயமும் இருந்தன. பேதமின்றி ஒன்று போல கான்க்ரீட் வீடுகள் வண்ணப் பூச்சுக்களின் மெருகு குலையாமல் அண்மையில் முளைத்த காலனியென்ற மமதையுடன் நிற்கின்றன. மனிதர்கள் நடமாட்டங்களில்லை. கதவைத் திறந்துகொண்டு ஓர் உயிர், சன்னல் கதவிடுக்கில் ஒரு முகம். அவை போதும். பத்து நிமிட உரையாடலில் மனக் கரைசலைத் தெளிவுபடுத்திக்கொண்டு புறப்பட்டுவிடலாம். நடக்க நடக்கச் செந்தமிழ் நகரின் முதல் தெரு ஒரு மாயப்புனைவுபோல அயற்சியின்றி வளர்ந்துகொண்டுபோனது.

அந்நபரை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது எனக்குப் பதினைந்து வயது. வியட்நாம் சண்டை- மார்ட்டின் லூதர் கிங் கொலை- பிரான்சு நாட்டில் நடந்த மிகப் பெரிய மாணவர் கிளர்ச்சி இவற்றைக் குறித்து எங்கேயாவது படிக்க நேர்ந்தாலோ யாரேனும் பேசக் கேட்டாலோ அம்மனிதரைத்தான் நினைத்துக்கொள்வேன். ஏனெனில் அவருடனான அம்முதல் சந்திப்பிற்கும் குறிப்பிட்ட அம்மூன்று உலக நிகழ்வுகளுக்குமிருந்த காலக்கொடி உறவை அல்லது ஆண்டு ஒற்றுமையை எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம்முறையாக அம்மனிதரைச் சந்தித்த மறுநாள் விளங்கிக்கொள்ள முடிந்தது. அறுபதுகளின் இறுதியில் அவரை முதலில் பார்த்தேன். அதாவது எனது மூளையின் ஞாபகப் பிரிவு ஆவணத்தின்படி 1968 மே மாதத்தில் ஒரு சனிக்கிழமைக் காலை பதினோரு மணி அளவில். அவ் வருடத்தை அத்தனை சுத்தமாக நினைவுகொள்ள முடிவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. பள்ளி இறுதிவகுப்புக்கான பொதுத் தேர்வை அப்போதுதான் எழுதி முடித்திருந்தேன். எங்கள் முதல் சந்திப்பின்போது அவரது நினைவென்று வாய்கொள்ள நாக்கும் இரும்புக்கிராதியை வலியத் திறப்பது போன்ற குரலும் சொற்களோடு பொருந்தாத வாயசைவும் தவளை நெஞ்சுபோலப் புடைத்து அடங்கிய கழுத்தும் இன்றுவரை நினைவிலிருக்கின்றன. இரண்டொரு மி.மீ. கூடுதலாக அவர் வாயைத் திறந்திருப்பாரென்றால் வாய்கிழிந்து தாள்மட்டும் கழன்றுவிடக்கூடிய அபாயமும் அன்றைக்கு இருந்தது. இவ்வளவிற்கும் அக்குரலுக்கும் அக்குரல் போர்த்திய சொற்களுக்கும் கவனத்திற்கொள்ளப் பெரிதாய் ஒன்றுமில்லை.

 

அப்போது கிராமத்தில் வசித்து வந்தேன். ஆடு, மாடு, கோழிகள் போக கொஞ்சம் மனிதர்களும் வாழ்ந்த ஊர். நாதஸ்வரக் குழுவும் வாணவேடிக்கையும் சிலாகித்துச் சொல்லும்படி இல்லாமலிருந்தால் உலா முடித்த இரண்டு மணி நேரத்தில் தேரடிக்குத் தேர் வந்து விடும். தெருக்களுக்குப் பெயர்களெல்லாம் கிடையா. தெருவுக்கு ஒரு பெரிய தலையிருக்க, அவர்களுக்கே தெருக்களைச் சொந்தமாக்கியிருந்தார்கள். பள்ளியிறுதி வகுப்புப் பொதுத்தேர்வை எழுதிமுடித்து விட்டுக் கல்லூரியில் சேரும் கனவுடன் இருந்தேன். விகடன், குமுதம், கல்கியெனச் சஞ்சிகைகளுக்காக மகேஸ்வரி டீச்சர் வீட்டையும் பேட்மிண்டனுக்காகப் பிள்ளையார் கோவில் திடலையும் சீட்டுக்கட்டுக்கென்று முனுசாமி ஆச்சாரிவீட்டுத் திண்ணையையும் வில்வண்டியைப் பூட்டிக்கொண்டு இரண்டாம் காட்சி சினிமாவுக்கென்று புறப்படும் பெண்களின் தரிசனத்திற்காக மூன்று கல் தொலைவிலிருந்த டூரிங் கொட்டகையையும் சொப்பன ஸ்கலிதத்தால் நனைப்பதற்கு மிச்சமிருந்த இரவுகளையும் அண்டியுமிருந்த இளைஞர்களில் நானும் ஒருவன்.

என்ன நடந்ததோ அல்லது எனது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இரண்டிலொன்று அவ்வருட கோடைவிடுமுறைக்கு என்னைத் தாத்தா வீட்டிற்கு அனுப்பிவைக்க அப்பாவுக்குக் காரணமாகக் கிடைத்தது. கல்லூரி சேர்க்கைக்கான ஒப்புதல் வரும்வரை தாத்தா வீட்டில் கொஞ்சநாள் இருந்துட்டுவாயேன் என்று அப்பா இட்ட கட்டளைக்கு அம்மாவின் தலை சொடுக்குப் போட்டது, போகலாமே என்று அதற்கு அர்த்தம். புறப்பட்டுவிட்டேன். தாத்தா அங்கே கர்ணமாக இருந்தார். தாத்தாவுக்குப் பெரும்பாலான நாட்கள் நிலத்தை அளக்க, பத்திரங்கள் எழுத, அவற்றைப் பதிவுசெய்யவென்று வேலைகள் நிறைய. இன்றைக்கும் தாத்தா ஒரு மகா புருஷர் எனத் தயக்கமின்றிச் சொல்ல முடிகிறது. அவர் வெகுசனக் கடலில் கரைந்து போகாத பெருங்காயம். ஈரத்தையும் வறட்சியையும் பாரபட்சமின்றி மனத்தில் வாங்கிக்கொள்வார். தாத்தாவுக்கும் அப்பாவுக்குமுள்ள பேதங்களை வண்ணங்களால் அளக்கும் வழக்கம் எனக்கிருந்தது. இந்த அளவுமுறையைத் தாத்தாதான் பரிச்சயப்படுத்தினார். நிலத்தைச் சங்கிலிகொண்டு அளந்து அவர் அலுத்திருக்கலாம். வண்ணங்களால் அளக்கிறபோது மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதில்லை என்பது தாத்தா தந்த விளக்கம். தாத்தா அதிகம் பேசமாட்டார். பாட்டி அப்படி அல்ல. தாத்தாவை ஏதாவது குறை சொல்லியபடியிருக்கும். வார்த்தைகளால் கொட்டுவது பாட்டிக்குப் பழகியிருந்தது. தாத்தாவைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். என் அம்மாகூடச் சில நேரங்களில் குறிப்பாக அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் அப்பாவைப் பற்றி என்னிடம் முணுமுணுப்பதுண்டு. பாட்டியிடமிருந்துதான் இப்பழக்கம் அம்மாவுக்கு வந்திருக்க வேண்டும். தாத்தா தமது கோபத்தைப் பிரயோகிக்கும் விதமே வேறு, மௌனம்தான் அவரது பிரத்தியேக ஆயுதம். தனதிருப்பை வெற்றிடத்திற்கு ஒப்படைத்துவிட்டு வெளிகளில் கரைந்து சிலநேரங்களில் தாத்தா பூடகமாகப் பாட்டிக்குக் கையளிக்கும் தண்டனைக்கு எனது வாக்கு ஆதரவாக இருந்தது. முரண்களுக்கிடையிலும் தாத்தாவுக்கும் பாட்டிக்குமிடையே ஒருவித நெருக்கம் நாணேற்றப்பட்ட நிலையில் தொய்வின்றி இருந்ததென்பதையும் சொல்ல வேண்டும். என்ன வேலையாக எங்கே போயிருந்தாலும் இரவு வீடு திரும்பிவிடுகிற பழக் கத்தைத் தாத்தா வைத்திருந்தார். அவர் கனைத்துக்கொண்டு தெருக் கதவைத் தட்டும்வரை எச்சிலைக் கூடப் பாட்டி விழுங்காது. தாத்தா ஒரு வெற்றிலை போகி. வீட்டில் பகல் சாப்பாட்டிற்குப் பின்னும் இரவு பலகாரத்திற்குப் பின்னும் வெற்றிலை ஒரு கட்டாயம். காம்புகளைக் கிள்ளி நரம்புகளை நீக்கி, அளவாய் சுண்ணாம்பு சேர்த்து, பாக்குவெட்டியும் களிப்பாக்குள்ள தட்டையும் முன்னுக்குத் தள்ளி, சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி முகத்தைத் திருப்பாமலேயே ஐந்து விரல்களையும் இணைத்து உள்ளங் கையைத் தொன்னையாக்கி நீட்டும் தாத்தாவின் கையில் மடித்த வெற்றிலையைப் பாட்டி வைப்பார். கை தொன்னையை வாய்க்கு நேராகப் பிடிப்பதும் நாக்கில் அதை நாசூக்காக வாங்கிக்கொள்வதும் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து முடியும். இரத்தச் சிவப்பில் உமிழ்நீர் கடைவாயில் அரும்பும்வரை மெல்ல வேண்டும். முதல் எச்சில் துப்புகிறபோது முகத்தில் திடுமென்று ஒரு மினுமினுப்பு வந்தமர்ந்து கொள்ளும். தாத்தாவிடம் காரியம் சித்தியாக அது உகந்தநேரமெனப் பாட்டி சொல்லியிருந்தது.

தாத்தா வீட்டிற்குவந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அன்று சனிக் கிழமை. காலை ஆப்பமும் தேங்காய்ப் பாலும் சாப்பிட்ட மயக்கத்தில் இருந்தேன். “நாராயணா கிளம்பு ரோட்டுவரை போய் வருவோம்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். தாத்தா நின்றிருந்தார். நான் எழுந்துகொண்டேன். “பத்து நிமிடத்துலே ரெடியாயிடுவேன், கொஞ்சம் பொறுங்க” என்றேன். “இங்கே பாருங்க! அவன் வளர்ந்த பையன். உங்கள் நிழலில் பொத்தி வச்சிருக்க இன்னமும் அவன் குழந்தை இல்லை” என்ற பாட்டியின் பேச்சை இருவருமே பெரிதுபடுத்தவில்லை. தாத்தா என்னைப் பார்த்தார். ‘நீ கிளம்பு அவள் கிடக்கிறாள்’ என்று அதற்குப் பொருள். அவசர அவசரமாக பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இரண்டு தென்னந் தோப்புகளூடாகப் புகுந்து கடைத் தெருக்கள், அரிசி ஆலை, டூரிங் சினிமா என இருந்த கிராமத் திடலுக்கு வந்தோம். எதிர்ப்பட்ட சிநேகிதர்களுடன் தாத்தா உரையாடியதில் அங்கே ஓர் அரை மணி நேரம் கழிந்தது. நண்பர்களிடம் ரோட்டு வரைக்கும் போகணும் வீராசாமி எனக்காக டீக்கடையில் காத்திருப்பான் எனக் கூறி தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

 

தாத்தாவால் ‘ரோடு’ என்று சுட்டப்பட்டது சுமார் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய கிழக்குக் கடற்கரைச் சாலை. தாத்தா ஊரைச் சேர்ந்தவர்கள் தெற்கே புதுச்சேரிக்கோ வடக்கே மரக்காணம் அல்லது திண்டிவனம் போக வேண்டுமென்றால் அங்கேதான் பேருந்து எடுக்க வேண்டும். இரண்டு டீக்கடைகளும் ஒரு நிழற்குடையும் பயணிகள் ஒதுங்குமிடங்கள். அரிதாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு நண்பர்களோடு உரையாட தாத்தாவுக்கு அதுதான் பொருத்தமான இடம். நாங்கள் ரோட்டில் கால்வைக்கும் நேரம், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்கிற பேருந்தொன்று காச நோயாளிபோல இருமிக்கொண்டு வந்து நின்றது. அந்நபருக்கு முன்பாக இறங்கியவர்கள் இரண்டுபேர், அவர் மூன்றாவதாக இறங்கினார். நல்ல கருத்த மனிதர். நடுத்தர வயது. முகத்தைச் சுத்தமாக மழித்திருந்தார். தலையில் ஆங்கிலேயர் தொப்பி. பேண்ட் போட்டிருந்தார் என்றாலும் ஒருபக்கம் முழங்கால் தெரிந்தது, மேலே பூவும் இலையுமாய் புஷ் ஷர்ட். அதை மணிக்கட்டுவரை மடித்திருந்தார். முதற்படியிலிருந்து காலை எடுத்தவர், அடுத்த படியில் கால்வைக்கத் தவறிச் சாலையில் கால் பாவ, பிடிமானம் இல்லாமற் போகவே தடுமாறி விழ இருந்தார். நல்லவேளை பேருந்தில் ஏறவிருந்த பயணி ஒருவர் தாங்கிக்கொண்டார். அதற்குள் எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல், “பிச்சேரி தண்ணி, இன்னும் தெளியலை போல, அதான் ஆளை இந்தச் சுழட்டு சுழட்டுது” என்றது. தாத்தா குரல்வந்த திசையை எச்சரிப்பதுபோல் பார்த்தார். பின்னர் அம்மனிதனிடம்:

“எங்கே மலேசியாவிலிருந்து வர்றீங்களா?” என்றார்.

தாத்தாவின் கேள்வியால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் நம்பிக்கைகொண்டவர்போல எங்களிடம் வந்தார்.

“சரியா சொன்னீங்க, மலேசியாவில் இருந்துதான் வரேன். இந்தியாவுக்குக் குடும்பத்தோடு வந்து இரண்டு மாதம் ஆகப்போவுது. செந்தமிழ் நகர்னு ஒன்று இங்கே இருக்கணும், அதைத் தேடி வந்தேன்.”

அம்மனிதர் தேடலில் நேர்ந்துள்ள தவற்றை உணர்ந்த மாத்திரத்தில் பலரும் உச்சுக் கொட்டினார்கள். ஒன்றிரண்டு பேர் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள். தாத்தா குறுக்கிட்டார்.

“ஏதோ தவறு நடந்திருக்குங்க தம்பி. நீங்க சொல்றது மாதிரி ஊரெதுவும் இந்தப் பக்கத்திலில்லை. மற்றவர்களைவிட எனக்கு இங்கிருக்கும் ஊர்கள் ஒவ்வொன்றும் அவற்றின் எல்லைகள் உட்பட மனப்பாடம். வடக்கால போனா ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, மரக்காணமென்று ஊர்கள் இருக்கு. வம்பா மணலில் ஒரு கல் கிழக்கால நடந்துபோனா குப்பம் வரும். மேற்கு திசையிலே எங்க கிராமத்தைத் தாண்டினா கழுவெளி. அது தவிர சின்ன சின்ன ஊர்கள் இருக்கு. தெற்குத் திசையிலே நடந்தா கூனிமேடு. மற்றபடி நீங்க சொல்ற பேருலே எதுவுமில்லை.”

“இல்லை எனக்குக் கிடைத்த தகவலின்படி செந்தமிழ் நகர் இங்கே தான் எங்கோ இருக்கணும்.”

முதன்முறையாகக் கோபங்கொண்ட தாத்தாவைப் பார்த்தேன்.

“இங்கே பாருங்க தம்பி, ஏற்கனவே சொன்னதுதான். நீங்க தேடற ஊர் இங்க இல்லை. இப்போ வந்து இறங்கின பஸ் பதினொன்றரைக்குத் திரும்பவும் வரும். பேசாம கிளம்பிப்போங்க. ஒழுங்கான முகவரியைக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க, அதன் பிறகு அந்த ஊரைத் தேடலாம்.”

செந்தமிழ் நகரைத் தேடிவந்த நபரிடம் பதில் இல்லை. சிறிது நேரம் யோசிப்பதுபோல் பாவனை செய்தார். பின்னர் தெற்குத் திசை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

“பாவி! அந்நிய தேசத்துக்கு வருகிறபோது யாரையாவது துணைக்கு வைத்துக்கொண்டோ அல்லது தீரவிசாரித்துக்கொண்டோ பஸ் ஏற வேண்டாமா?” தாத்தா கடிந்துகொண்டார்.

வீடு திரும்பின தாத்தா அம்மனிதனைச் சுலபத்தில் மறக்கவில்லை. அவனைக் கிட்ட இருந்து பஸ் ஏற்றிவிட்டு வந்திருக்க வேண்டுமென்றார். இரவெல்லாம் உறக்கமின்றி நடைக்கும் தெருவாசலுக்குமாக அலைந்துகொண்டிருந்தார். தம்மைத் திரும்பவும் அவன் தேடி வருவான் என்றார். இத்தனைக்கும் வீட்டிற்கும் ரோட்டிற்கும் இரண்டு கல் தூரம். கண நேரச் சந்திப்பில் தாத்தா முகங்கூட அவனுக்கு ஞாபகத்திலிருக்குமா என்பது சந்தேகம். நாங்கள் யார்? எங்கிருக்கிறோம்? என்ற தகவல்கள்கூட அவனிடத்திலில்லை. இத்தனை தூரம் விசாரித்துக்கொண்டு மெனக்கெட்டு வர அவனென்ன பைத்தியக்காரனாவென்றேன்.

“இல்லை நீ பாரேன் அவன் வருவான்!” எனப் புதிரைப் போட்டுவிட்டு நிறுத்திக்கொண்டார். இப்போது எனக்கு அந்த ஆள்மீதல்ல தாத்தாமீதுதான் எரிச்சலேற்பட்டது. அவருக்கு ஏதேனும் மனப்பிறழ்வு நேர்ந்திருக்குமோவென்ற சந்தேகம்.

இரண்டாம் முறையாக அம்மனிதனைச் சந்தித்தபோது பதினெட்டு ஆண்டுகள் கழிந்திருந்தன. தாத்தா வீட்டிற்குச் செல்வது படிப்படியாகக் குறைந்து முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே செல்வதென இருந்தபோது அது நடந்தது. இதற்கிடையில் கல்லூரி, வேலை, திருமணமென்று மனித வாழ்க்கையின் பரிணாமங்களைப் படிப்படியாகக் கடந்துகொண்டிருந்தேன். பாட்டி இறந்து ஆறுமாதங்கள் கடந்திருந்தன. அம்மாவும் மாமாவும் தங்கள் வீட்டிற்கு வந்துவிடும்படி வற்புறுத்தியும் சாகும்வரை தனது வீட்டைவிட்டு எங்கும் வரமாட்டேனென்று தாத்தா பிடிவாதமாக இருந்தார். “தாத்தா முன்ன மாதிரி இல்லை. ரொம்ப மெலிஞ்சு போயிருக்கிறார். உன்னைத்தான் அடிக்கடி கேட்டு எழுதறார். ஒருமுறை பார்த்துட்டு வந்துடேன்” என்று புதுச்சேரியிலிருந்து கிராமத்திற்கு வந்தபோதெல்லாம் அம்மா ஓயாமல் புலம்பும். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. எனக்குத் திடீரென்று இலண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதற்காகப் பயணப்பட்டுக்கொண்டிருந்த நேரம். அம்மா வழக்கம்போல, “ஊருக்குப் போவதற்கு முன்பு தாத்தாவைப் பார்த்து சொல்லிக்கொண்டுபோ. தவறினால் நீ அவரைத் திரும்பவும் பார்க்கச் சந்தர்ப்பம் வாய்க்காமலே போகலாம்” என எச்சரித்தாள். மனைவியும் “நானும் வர்றேங்க ஒருமுறை பார்த்துட்டு வந்திடலாம்” என்றாள். குடும்பத்தோட தாத்தா ஊருக்குச் சென்று இறங்கினோம். ரோட்டுக்கு வில்வண்டியென்கிற கூண்டுவண்டியை அனுப்பியிருந்தார். வீட்டை அடைந்தபோது வாசலிலேயே காத்திருந்தார். வண்டிக்காரர், “ரொம்ப நாளைக்கப்புறம் அவர் வாசலில் நிற்கப் பார்க்கிறோம். அம்மா செத்ததுக்கப்புறம் ஐயா வெளியில் போவது சுத்தமா நின்னுபோச்சு” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தார். அவரைச் சமாதானம் செய்துவிட்டு வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டேன்.

மறுநாள் காலை தாத்தாவிடம் எதையாவது பேச வேண்டுமேயென்று, “ரோடு முந்தைய கலகலப்புடன் இப்போதுமிருக்கிறதா?” என்று கேட்டேன். “இருக்கலாம் யாருக்குத் தெரியும். நான் அந்தப் பக்கம் தலையைக் காட்டி ரொம்ப நாளாச்சு” பட்டும் படாமல் பேசினார்.

“எதற்காக ரோட்டுப்பக்கம் போகலை. ஒருவேளை அந்த ஆளை மறுபடியும் சந்திக்க நேரும் என்று பயமா?”

“எந்த ஆளை?”

“ஞாபகமிருக்கா? அப்போ பள்ளி இறுதிவகுப்புப் பொதுத்தேர்வு முடிச் சுட்டு வந்திருந்தேன். இரண்டு பேருமா ஒரு சனிக்கிழமைக் காலை நேரம் ரோட்டுக்குப் போகலாம்னு புறப்பட்டுப் போனோம். அங்க வச்சுத்தான் அந்த ஆளைச் சந்திச்சோம். ஒரு ஃபார்கோ பஸ்ஸிலே புதுச்சேரியிலிருந்து வந்து இறங்கினான். மலேசியாவைச் சேர்ந்தவன்.”

“செந்தமிழ் நகர் எங்கே இருக்குண்ணு கேட்டுவந்தான். நாமகூட அது மாதிரி எந்த ஊரும் இல்லண்ணு சொல்லி அனுப்பி வைச்சோம்.”

“நீங்களும் மறக்கலைபோலிருக்கு.”

“ம் . . .” என்று தலையாட்டிவிட்டு அமைதியானார்.

“வாங்களேன், அங்கே போய் வருவோம். ரோடும் கடைகளும் இப்போது எப்படி இருக்குதுன்னு எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையாயிருக்கு” என்று எனது விருப்பத்தைக் கூறினேன்.

“வண்டியைப் பூட்டச் சொல் லட்டுமா?”

“வேண்டாம் நடந்தே செல்வோம்.” தாத்தா முகத்தில் ஒளிப் புள்ளிகள் தோன்றிமறைந்தன. முடிந்தவரை அதை நிரந்தரப்படுத்த வேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

வயதும் இழப்பும் தாத்தாவின் கால்களைப் பலவீனப்படுத்தியிருந்தன. செருப்பை மாட்டக்கூடத்தெம்பில்லை. அவற்றைச் சுமக்கவியலாதென்பதுபோல் கால்கள் தயங்கின. நனவிலி மனநிலையில் கால்களை அதிகம் ஊன்றாமல் நடப்பதுபோலிருந்தது. சற்று முன்பு வரை இருந்த சோகத்தை விலக்கி நாசித் துவாரங்களையும் வாயையும் போதிய அளவு திறந்து தற்காலிகமாகச் சரீரத்திற்குத் தெம்பூட்டிக்கொண்டு நடந்ததும் எனது கவனத்தில் பதிவாகியிருந்தது. கடந்த முறை தாத்தாவுடன் ரோட்டுக்குப் போனபோது எதிர்ப்பட்ட மனிதர்களிடம் நின்று பரஸ்பரம் விசாரித்தோம். இம்முறை அப்படியேதும் நடக்கவில்லை. பேருந்தைத் தவறவிடக் கூடாதென்கிற எச்சரிக்கையுடன் எட்டிக் கால்வைத்து நடக்கிற பயணியை ஒத்திருந்தார். நாங்கள் ரோட்டை அடைந்தபோது பேருந்துக்குக் காத்திருந்தவர்களில் பெண்மணி ஒருவர், “ஏங்க வாட்சு கட்டிகிறவரே உங்களத்தான், மணி என்னாவுது?” என விசாரித்தார். அவரும் தன் வலதுகை மணிக்கட்டை உயர்த்திப் பார்த்துவிட்டு, “பதினொண்ணு ஆவப்போவது, வீரப்பா (பேருந்தின் பெயர்) டாண்ணு வந்திடுவான், கவலைப் படாதேம்மா” என்றார்.

தெற்கே சாலையில் பார்வை முடிந்த இடத்தில் முதலில் ஒரு புள்ளிபோலத் தோன்றிப் பின்னர் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுத்து வெயில் அலைகளில் மிதந்தபடி நீலவண்ணத்தில் பேருந்து எங்களை நோக்கி வருவது தெரிந்தது. சாலையின் இரு மருங்கிலுமுள்ள தென்னை மரங்களை விலக்கிக்கொண்டு முன்னேறியது. அங்கிருந்த மனிதர்களிடையே பேருந்தின் வரவு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. “உள்ளே எங்க வீட்டுக்காரர் இருக்கார், பஸ் வந்துட்டுதுன்னு சொல்லுங்க” பெண்மணி தேநீர்க் கடை வாசலில் நிற்பவர்களிடம் வேண்டினாள். பந்தய முடிவில் கோட்டைத் தொட்ட நிம்மதியில் மூச்சிறைத்துக்கொண்டு பேருந்து நின்றது. முதலில் இளம்பெண்ணொருத்தி கைக்குழந்தையுடன் இறங்கினாள். அவள் இறங்கட்டுமெனக் காத்திருந்து இரட்டைசடை போட்ட சிறுவனை மார்புக்கு நேராகத் தூக்கிப்பிடித்தபடி ஓர் இளைஞன் இறங்கிவந்தான். ரோட்டில் காலை ஊன்றியபோது அவன் அணிந்திருந்த பாட்டா ரப்பர் செருப்பின் வார் அறுந்திருக்க வேண்டும், சமாளித்துக்கொண்டு இறங்கினான். காத்திருந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறவிருந்த நேரம், நடத்துநர் தலை எட்டி பார்த்தது. “கொஞ்சம் பொறும்மா, உள்ளே இருக்கிறவங்க முதலில் இறங்கி முடியட்டும்” என்றார். இரட்டை நாடிகொண்ட பெண்மனி ஒருத்தி இறங்கினாள். உடையும் தலைமுடியைக் கழுத்துக்குமேலே உயர்த்திக் கொண்டைபோட்டிருந்த விதமும் மஞ்சள் முகமும் பர்மியப் பெண்களை நினைவூட்டின. அவளை நாங்கள் அதிசயமாகப் பார்த்தோம். அவளுக்கு அந்த இடம் விந்தையாகப்பட்டிருக்க வேண்டும், கண்களை அகல விரித்துக்கொண்டு, பற்கள் தெரியப் புன்னகைத்தபடி அதிசயமாகச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “கண்டக்டர் இன்னும் எங்க புருஷன் இறங்கனும்ப்பா. அவர பஸ்ல கொண்டு போயுடாதீங்க, எனக்கிருக்கிறது ஒரு புருஷந்தான்” என்று நடத்துநரிடம் வேடிக்கையாகக் கூறினாள். அங்கிருந்த பலரும் சிரித்தார்கள்.

அவள் புருஷன் என்று குறிப்பிட்ட நபர், நடத்துநர் வழிவிட மெல்ல இறங்கினார். அந்த மனிதர்தான். நாங்கள் இருவரும் குறிப்பாக நான் வியப்புடன் பார்த்தேன். இப்படிக்கூட உலகில் நடக்குமா? அவர்தானா? அல்லது வீணாக எதையாவது கற்பனை செய்துகொண்டோமா? தாத்தாவிடமும் என்னிடமும் வயது ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அம்மனிதரிடமும் பார்த்தேன். மற்றபடி அவரது தொப்பி, அணிந்திருந்த நீண்ட கால்சராய், புஷ் ஷர்ட் இவற்றில் மாற்றங்களில்லை. பேருந்திலிருந்து இறங்கிய மனிதர் தமது பர்மிய மனைவியைக்கூட இலட்சியம் செய்யாமல் எங்களை அங்கே எதிர்பார்த்தவர் போல நடந்துவந்தார்.

பல நாள் தாத்தாவிடம் பழகியவர்போல, “எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?” என விசாரித்தார். அவரது முன்பற்களில் ஒன்று விழுந்திருந்தது. மெல்லியதாகவொரு சீழ்க்கை சப்தமும் உடன் வந்தது. நாங்கள் பதில்சொல்ல வேண்டிய அவசியங்களெவையும் இல்லை என்பதுபோல அவரே தொடர்ந்தார்.

“செந்தமிழ் நகரைத்தான் தேடி வந்திருக்கேன். இந்தமுறை எல்லா டாக்குமெண்ட்டோட வந்திருக்கேன்.” தமது பர்மிய மனைவியைப் பார்த்தார். பிறகு எங்களைப் பார்த்தார். “இங்கே வேண்டாம் கொஞ்சம் தள்ளிப்போய்ப் பேசுவோமா” என்றார். அவரே மனிதர்கள் யாருமற்ற ஒதுக்குப்புறமாக ஓரிடத்தைத் தேர்வுசெய்து கொண்டு போய் நின்றார். நாங்களும் அவரது கட்டளைக்கு உட்பட்டவர்கள் போல் பின்தொடர்ந்தோம்.

“தம்பி!” தாத்தாதான் பேசினார். “நான் ஏற்கனவே சொன்னதுதான் இங்கே எனக்குத் தெரிந்து . . .” என்று பேசிக்கொண்டு போனவரைத் தடுத்து நிறுத்தினார்.

“இங்கே செந்தமிழ் நகரென்று எதுவுமில்லையென மறுபடியும் சாதிக்கப்போகிறீர்கள் அப்படித்தானே. இதைப் பாருங்கள் நில அளவையாளர் ஒருவர் எழுதிய வரைபடம் இது. இதன்படி சரியாகச் சொன்னால் இந்த ரோட்டிலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் மேற்கில் இருக்கிறது.

“தாராளமாய்ப் போய்ப் பார்த்துக்குங்க. என்னுடைய அடங்கல் புத்தகத்தின் பிரகாரம் அவ்வளவும் முத்து மாணிக்கம் செட்டியாரோட சாகுபடி நிலங்கள். இந்த வருஷங்கூட நெல் அறுப்பு முடிச்சு தாளடியாகப் போட்டுவச்சிருக்கார். அவர்கிட்டே போய் செந்தமிழ்நகர் அப்படி இப்படின்னா மனுஷன் கொதிச்சுப் போயிடுவார்.”

பர்மியப் பெண்மணி தன் கணவரைத் தொட்டுக் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்பதைப் போலப் பார்த்தாள். அவரும் அதைப் புரிந்துகொண்டவர்போல் ஒதுங்கிக்கொண்டார்.

“நாங்க மலேசியாவிலிருந்து நிரந்தரமாக இந்தியாவுக்கு வந்துட்டோம். இப்போது புதுச்சேரியிலே தான் குடியிருக்கிறோம். திடீர் திடீரென்று இங்கே புறப்பட்டு வந்திடறார். செந்தமிழ் நகர்னு சொல்றார். அங்கே வீட்டுமனை எங்களுக்கு இருக்காம்.”

“இல்லைம்மா அப்படியேதுமில்லை. எதற்கும் புதுச்சேரிப் பக்கத்திலே உங்களுக்கு யாராவது தெரிஞ்சவங்க இருந்தா அவங்களை வச்சுகிட்டுத் தேடிப்பாருங்க. இப்படித்தான் பல வருடங்களுக்கு முன்ன ஒருமுறை வந்தார். அப்போதும் பொறுமையா அவர்கிட்டே விளக்கிச் சொல்லியிருக்கேன். ரகசியமா அப்பெண்மணியின் காதில் முணு முணுத்தார். “உங்க கணவருக்குப் புத்தி கித்தி பிசகிப்போச்சா? பத்திரமா திருப்பி அழைச்சுப் போங்க.”

பர்மியப் பெண்மணியையும் அவள் கணவரையும் இம்முறை தாத்தாவின் விருப்பப்படி மீண்டும் புதுச்சேரி பேருந்து வரும்வரைக் காத்திருந்து வழியனுப்பிவிட்டு வந்தோம். அவர்கள் இருவரும் பேருந்தில் அமர்ந்து கையசைத்த காட்சி கண்முன்னே நிற்கிறது. அதற்குப் பிறகு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன எதற்காக வந்தேன் ஏன் வந்தேன். என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியில் என்னையும் கடித்திருக்கிறது. செந்தமிழ் நகரைத் தேடி நானும் வந்திருக்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் வயது உடலில் நடத்திய மூர்க்கமான தாக்குதலில் மரணத்தைக் குறித்த பயமும் சேர்ந்துகொள்ள மனத்தின் ஆதிக்கத்திற்கு அடிமையாகி அறிவின் கட்டுப்பாடுகள் தளர்ந்திருந்தன. தாத்தாவுக்கும் இறப்புக்கு முன்னே செந்தமிழ் நகர் குறித்த தேடுதல் இருந்திருக்க வேண்டும். உறக்கமிழந்த பின்னிரவுகளில் மலேசிய மனிதரை சன்னலை ஒட்டியோ திறந்திருந்த அறைக் கதவு இடைவெளியிலோ என்னைப் போல அவரும் பார்த்திருக்கக்கூடும். கனவுகளுடனான இரவுகளும் விழிப்புகளும் உளறல்களும் அவருக்கும் நேர்ந்திருக்கலாம். என்னைப் போலவே இங்கே வந்திருப்பார், செந்தமிழ் நகரென்ற பெயர்ப் பலகையைக் கண்டு அநேக மாக வியந்திருப்பார். எவ்வளவு தூரம் நடந்திருப்பேனெனத் தெரியாது. களைப்பாக இருந்தது. இனித் தொடர்ந்து நடக்க முடியா தென்று தோன்றியது. அருகிலிருந்த வீட்டின் கதவைத் தட்டிச் சற்று இளைப்பாறி விட்டுப் போகலாமென நினைத்தபோது . . . அவர்தான் . . . அதே மலேசிய மனிதரை . . . மூன்றாம்முறையாகப் பார்த்தேன், கதவைத் திறந்துகொண்டு என்னை எதிர்பார்த்தவர் போல நின்றார். உடலில் முதுமை போட்டிருந்தது. தலை என்னைக் காட்டிலும் கூடுதலாக வெண்மை போட்டிருந்தது.

“நீங்க?”

“என்னை அடையாளம் தெரியுதா? உங்களை இரண்டுமுறை இங்கே சற்று தள்ளியிருக்கிற பேருந்து நிறுத்தத்துல வெவ்வேறு காலங்களில் பார்த்திருக்கேன். அப்போ என்னுடைய தாத்தாகூட இருந்தார்.”

“அடையாளம் தெரியாமலென்ன? செந்தமிழ் நகரைத் தேடி வந்த என்னை உங்க தாத்தாவும் மற்றவங்களும் பைத்தியக்காரனென்று அபிப்ராயப்பட்டதை நான் மறக்கவில்லை. வர வேண்டிய இடத்துக்குத்தான் நீங்களும் வந்திருக்கீங்க. உள்ள வாங்க.”

என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவரைப் பின்தொடர்ந்தேன்.

“உட்காருங்கள்” என்றவர், “நீங்ககூட என்னைப் பைத்தியக்காரனென்றுதான் நினைச்சிருப்பீங்க. பாருங்க உண்மை வேறா இருக்கு. சின்மா சின்மா!” பின்புறம் திரும்பிக் குரல்கொடுத்தார். பர்மியப் பெண் மணிக்குக் கூன்போட்டிருந்தது. மெல்ல எட்டிப் பார்த்தார். “யார் தெரியுதா?” என்றார். அப்பெண்மணி, சிறிது நேரம் கூர்ந்து என்னைப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கித் தலையாட்டிவிட்டுச் சிரித்தபடி மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டார்.

“அவளுக்குப் பார்வை முன்ன மாதிரியில்லை. வயசாகுதில்லையா? இங்கேதான் அஞ்சுவருஷமா பிள்ளை, பேரப்பிள்ளகள்னு இருக்கோம். நீங்க?”

“லண்டன்ல இருக்கேன்.”

“உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இந்தக் காலனியிலே இருக்காங்களா?”

“முகவரி கொடுத்தாங்க தொலைச்சிட்டேன்.”

“பொறுமையா தேடுங்க கிடைச்சிடும்.” சிரித்தார்.

வெகுநேரம் லண்டன், மலேசியாவென்று உரையாடல் நீண்டது. தாத்தாவைப் பற்றி ஏதேனும் கேட்பாரா என எதிர் பார்த்தேன். எதுவுமில்லை என்றபோது அலுப்பாக இருந்தது. அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டபோதுதான் கவனித்தேன், வாசற்கூடத்திலிருந்த நிழற்படத்தில் தாத்தா இருந்தார் அவர் அருகில் பாட்டியின் இடத்தில் வேறொரு பெண்மணி. அன்றிரவு மனைவிக்கு எழுதிய மின்னஞ்சலில் தாத்தா ஊருக்கு நான் சென்று வந்ததையும் செந்தமிழ் நகரை கடைசியில் பார்க்க முடிந்ததையும் எழுதினேன். அகத்தில் ஏதோ எரிந்து சாம்பலாகியிருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு இரவு நன்கு உறங்கினேன்.

by Swathi   on 25 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.