LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ? டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம்

அது ஆகஸ்ட் 9, 1988. விஸ்வரூப நாயகன் கமலஹாசன் நடித்த “உன்னால் முடியும் தம்பி” திரைப்படம் எந்தத் தடையுமின்றி எளிமையாக வெளியான தேதி. 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும், உங்கள் நினைவுத்திறனைச் சோதிக்க ஒரு கேள்வி. இப்படத்தில் கமலின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன ? ஒரு நிமிடம் யோசியுங்கள். விடை தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் மூளைக்குள் சிறு ஸ்கேனிங் செய்து பார்த்ததற்கு நன்றி. விடை இதோ: ”உதயமூர்த்தி”. படத்தின் இயக்குனர் K.பாலச்சந்தர் ஏதேச்சையாக வைத்த பெயரல்ல இது. தன் கல்லூரித்தோழர், தமிழகத்தின் தலைசிறந்த தன்னம்பிக்கை எழுத்தாளர், மே 1988ல் தானும் கலந்துகொண்டு தொடங்கி வைத்த “மக்கள் சக்தி இயக்கத்தின்” நிறுவனத் தலைவர் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்தான் அது.

ஏப்ரல் 8, 1928ல் அப்போதைய தஞ்சை மாவட்டம், இப்போதைய நாகை மாவட்டம் விளநகர் கிராமத்தில் பிறந்த எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் பிற்காலத்தில் பேனா முனையால் இலட்சக்கணக்கான உள்ளங்களை உலுக்கியெடுத்து, எழுச்சியடையச் செய்யப்போகிறார் என்று யாரும் கனவுகூட கண்டிருக்க முடியாது. கடந்த ஜனவரி 21 அன்று இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரின் உன்னத வாழ்க்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளது. சிலவற்றை மட்டும் பதிவு செய்கிறேன். அவர் புத்தகத்தைப் படித்தவன் என்பதைவிட, அவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு சாப்ட்வேர் துறையிலிருந்து, சமூகப்பணிக்கு வந்தவன் என்பதைவிட, மக்கள் சக்தி இயக்கத்தில் 4 ஆண்டுகள் செயல்பட்டு அவரின் வாழ்க்கைப் பாடத்தை அருகிலிருந்து படித்தவன் என்ற அடிப்படையில்…

கல்வி ஒரு வேள்வி:

படிப்பு என்பதை ஒரு வேள்வியாகவே பாவித்தவர் உதயமூர்த்தி.

மயிலாடு துறையில் பள்ளிக்கல்வி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப்பட்டம். பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் மற்றுமொரு முதுநிலைப் பட்டம். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் மருத்துவ ரசாயணத்தில் டாக்டர் பட்டம். எனத் தொடர்ந்த படிப்பு 85 வயதில் அவரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது. அவரின், இறுதி ஆண்டுகளில்கூட செய்தித்தாளை, பத்திரிக்கைகளைப் படிக்கும்போது அடிக்கோடிட்டுப் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். இயக்க வேலைகள் தொடர்பாக அவரைச் சந்திக்கும்போதெல்லாம் எங்களிடம் மறவாமல் அவர் கேட்கும் கேள்வி “…இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ?”. வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர் ஒவ்வொருவரும் தாரக மந்திரமாய் கொள்ள வேண்டிய கேள்வி இது என்றால் மிகையில்லை.

சொன்னபடி வாழ்ந்தவர்: சுயவளர்ச்சி, சுய பொருளாதார வளர்ச்சி, சமூக ஈடுபாடு

மக்கள் சக்தி இயக்கத்தைக் கட்டமைத்தபோது அவர் இயக்கத்தின் அடிப்படையாக வைத்த மூன்று கொள்கைகள்: சுயவளர்ச்சி, சுய பொருளாதார வளர்ச்சி, சமூக ஈடுபாடு. முதலில் உன்னை(கல்வியை,சிந்தனையை) உயர்த்திக்கொள் ; உன் தேவைக்கான, உன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத் தன்னிறைவு கொள் ; நானுண்டு-குடும்பமுண்டு என்றில்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, உன்னால் முடிந்த அளவு பணி செய் என்ற வாழ்க்கையின் படிநிலைகளை இயக்கத்தின் கொள்கைகளாக வைத்தவர், அடிபிசகாமல் தன் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டினார். உயர்கல்வி கற்றவராக தன்னை உயர்த்திக்கொண்டு, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக -துறைத்தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். பிறகு, ஒரு உணவுத் தொழிற்சாலையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். பின்னர், தானே ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, “அமெரிக்காவில் தொழில் துறையில் உள்ளவர்கள் யார், யார் என்ற பட்டியலில்” இடம்பெற்றார். ( Directory of Who is Who in Business and Finance in the U.S.A). மாணவன், கல்லூரிப் பேராசிரியர், துறைத்தலைவர், தொழிற்சாலையில் தலைமை நிர்வாகி, சொந்தத் தொழிற்சாலை நிறுவுதல் என்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வாழ்ந்து, தன்னையும் - தன் பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொண்ட அவர் அடுத்த 25 ஆண்டுகள்(1988 முதல்) உழைத்தது தாயகத்திற்காக.. தமிழகத்திற்காக. சொன்னபடி வாழ்ந்த பெருமைக்குரிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உதயமூர்த்தி.

எழுத்துப் பணி:

அமெரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே தன் எழுத்துப்பணியைத் தொடங்கிவிட்டார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் அமெரிக்கா வந்தபோது, அவர்களுடன் பயணித்து, பயணவிவரங்கள் குறித்து தமிழகத்திற்கு எழுதினார். 1970, 80களில் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் இலட்சக்கணக்கான உள்ளங்களில் எழுச்சி தீபம் ஏற்றின. மனித உறவுகள், சிந்தனை தொழில் செல்வம், நீதான் தம்பி முதலமைச்சர், உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள், ஆத்ம தரிசனம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட புத்தகங்களை

அவர் எழுதியுள்ளார். இருந்தாலும் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் விற்று இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் புத்தகம் “எண்ணங்கள்”. மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களே நம் வாழ்க்கை எனும் மரமாக மாறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எளிய வார்த்தைகளில்,வரிகளில் விளக்கியிருப்பார் அப்புத்தகத்தில். சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகம் அப்புத்தகத்தை மாணவர்களுக்குப் பாடநூலாக வைத்திருந்தது என்றால் அப்புத்தகத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அவர் நூல்களை தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், சமூகச் சிந்தனைகள், ஆன்மீகம் என்ற 4 வகைகளாகப் பிரிக்கலாம்..

”என்னைச் செதுக்கிய எண்ணங்கள்” என்ற நூலின் மூலம் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் வரை அனைவரையும் வாசகர்களாகக் கொண்டவர் உதயமூர்த்தி. இதற்குக் காரணமாய் அவர் சொல்வது தன் எழுத்துலக குருவான கல்கியைத்தான். கல்கியின் எழுத்தோட்டத்தை அடியொற்றியே தன் எழுத்து நடையை அமைத்துக்கொண்டேன் என்பார் அவர். எளிமையான சின்னச் சின்ன, வார்த்தைகள் - வாக்கியங்கள் அவரின் எழுத்தை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தது. எழுத்திற்கு கல்கி போல், தன் எண்ணங்களுக்கு குருவாக இருந்தவர் ஜேம்ஸ் ஆலன் என்பார் அவர். ஆலனின் “As a Man Thinkth” என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கமாக “ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்” என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் இறந்தாலும், அவரின் எழுத்துகள் மூலம் இன்றும்-என்றும் அவர் நம்மோடு வாழ்வார்.

இயக்கப் பணி:

1990களின் துவக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்த ஒரு சில இயக்கங்களில் மக்கள் சக்தி இயக்கமும் ஒன்று. நதிநீர் இணைப்பு, கிராம வேள்வி, கல்வி மேம்பாடு, மதுவிலக்கு போன்ற சமுதாயத்தின் அடிப்படை பிரச்னைகளுக்காக தீவிரமாக செயல்பட்டது இயக்கம். குறிப்பாக நதிநீர் இணைப்பிற்காக இயக்கம் உரத்தகுரல் எழுப்பியது. இதற்காக கன்னியாகுமரி-சென்னை பாதயாத்திரை போன்ற பல பாதயாத்திரைகளை நடத்தி தமிழர்களைத் தட்டியெழுப்பியது இயக்கம். நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை வருவதற்குக் காரணமாக இருந்தது இயக்கம். மதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய போராட்டத்திற்காக சில நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் உதயமூர்த்தி. அந்த சிறை அனுபவங்களை எங்களிடமும், பலரிடம் அவர் சுவைபட விவரித்திருக்கிறார். இயக்க பொறுப்பாளர்களின் குடும்பநலனின் மீது அவர் காட்டிய கூடுதல் அக்கறை குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், பெருநிறுவனங்களின் பணியாற்றிய நிர்வாகிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள், விவசாயிகள், பெட்டிக்கடை-மளிகைக்கடை நடத்துபவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பினர் இயக்கப் பொறுப்புகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். 1996 தேர்தலில் உதயமூர்த்தி உட்பட 11பேர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இயக்க வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு மைல்கல். வாயளவில் ஆதரித்த மக்கள் வாக்குகள் மூலம் ஆதரிக்கவில்லை. பரபரப்பு மிகுந்த 1996 தேர்தல் புயலில் இயக்கம் போட்டியிட்டது சரியா ? தவறா ? ; உதயமூர்த்தி தேர்தலில் நின்றது சரியா ? தவறா ? ; இயக்கம் தேர்தல் அரசியலுக்குப் போகலாமா? என்ற விவாதம் இன்றளவும் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளிடம் தொடர்கிறது. சரி, தவறு என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு, சமூக சிந்தனைகள் குறித்து எழுதியது மட்டும் போதாது, சொன்னதை களத்தில் செயல்படுத்த இயக்கத்தைக் கட்டினார். அரசியல் அநியாயங்களைப் பார்த்து பொங்கி எழுதியதோடு நின்றுவிடாமல் தேர்தலிலும் போட்டியிட்டார். தான், வாய்ப்பேச்சு வீரர் இல்லை ; பேனா மூலம் மட்டும் போர் நடத்துபவர் இல்லை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்துக் காட்டியவர் உதயமூர்த்தி.

உன்னால் முடியும் தம்பி படத்தின் பாடல் வரிகள் காதில் கேட்கிறது.

உன்னால் முடியும் தம்பி ! தம்பி !
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி !
தோளை உயர்த்து ; தூங்கிவிழும் நாட்டை நாட்டையெழுப்பு !
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன் !
உன்னால் முடியும் தம்பி ! தம்பி !

இது உதயமூர்த்தியின் உள்ளக்குரல்.
அவரின் நினைவாக என்றும் நம் காதில் ஒலிக்க வேண்டிய 5 வரி குறள்

-செந்தில் ஆறுமுகம்

by Swathi   on 22 Jan 2015  2 Comments
Tags: MS Udhaya Moorthy   Senthil Arumugam   எம்.எஸ்.உதயமூர்த்தி   எம்.எஸ்.உதயமூர்த்தி வரலாறு   செந்தில் ஆறுமுகம்   மக்கள் சக்தி இயக்கம்     
 தொடர்புடையவை-Related Articles
இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ?  டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம் இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ? டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம்
நெகிழ வைத்தார் பாலசந்தர் !.. - எம்.எஸ்.உதயமூர்த்தி நெகிழ வைத்தார் பாலசந்தர் !.. - எம்.எஸ்.உதயமூர்த்தி
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
கருத்துகள்
15-Dec-2017 16:40:34 Marithangam said : Report Abuse
Welcome.I am also,interested in Makkal sakthi iyakkam
 
23-Jan-2016 02:43:16 தாமோதரன்.ஸ்ரீ said : Report Abuse
அந்த கால கட்டங்களில் இளைஞர்களின் மனதில் எழுச்சியை தூண்டியவர், நாட்டின் முன்னேற்றத்தை பற்றியும், நம்மால் முடியும் என்ற எண்ணத்தை விதைத்தவர்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.