இசைக்கருவிகளின் இசைக்கேற்ப திருமால் என்ற தெய்வத்தின் அருளைப்பெற ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் எனப்படும். தெலுங்கு பேசும் மக்களுடன் தொடர்புடைய இவ்வாட்டம் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்து உண்டு. ஆந்திர எல்லையில் உள்ள தமிழர்களிடம் இது செல்வாக்குப் பெற்றுள்ளது. இவ்வாட்டத்தை இரண்டு வகைகளாகக் குறிப்பிடலாம். தருமபுரி மாவட்டத்தில் ஒரு வகையாகவும், மதுரை மாவட்டத்தில் ஒரு வகையாகவும் இதனை நடத்துவர். முதல் வகை ஆட்டம் தருமபுரி மாவட்டத்திலுள்ள பூங்குறுத்தி, சாமந்தமலை, நாடகப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, கோட்டப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ராயர்மலைக் கோவிலிலும், நரசிம்மசாமி, கிருஷ்ணசாமி, கௌரம்மாள், பெருமாள், ராயப்பன், கதிரப்பன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோவில்களிலும் நிகழ்கிறது. இரண்டாம் வகை ஆட்டம் தேவராட்டத்துடன் தொடர்புடையது. இந்த ஆட்டம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது.
|