LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

ஏழாம் திருமுறை முதற் பகுதி


7.01 திருவெண்ணெய்நல்லூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

001     பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.01
002    நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.02
003    மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.03
004    முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.04
005    பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.05
006    தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.06
007    ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.07
008    ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.08
009    மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.     7.1.09
010    காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.     7.1.10

திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்,
தேவியார் - வேற்கண்மங்கையம்மை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.2 திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

011     கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
    கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
    சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
    சில்பூத மும்நீ ருந்திசை திசையன
    சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
    அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
    தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
    படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.01
012    முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
    முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
    கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
    கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
    பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம்
    பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
    அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.02
013    மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
    முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
    பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
    பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
    தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
    துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
    றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.     7.2.03
014    மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
    மலையான் மடந்தை மணவாள நம்பி
    பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
    ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
    நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
    நலமொன் றறியோமுங் கைநாக மதற்
    கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.04
015    பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
    புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
    எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
    என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
    கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
    கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
    அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.05
016    தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
    சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
    பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
    படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
    பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
    படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
    அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.06
017    சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
    தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
    பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
    தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
    கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
    கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
    அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.     7.2.07
018    பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
    பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
    துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்
    சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
    மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
    மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
    அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.08
019    கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
    மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
    வேளா ளியகா மனைவெந் தழிய
    விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
    தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
    உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
    ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.09
020    பாரோடு விண்ணும் பகலு மாகிப்
    பனிமால் வரையா கிப்பரவை யாகி
    நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
    நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
    தேரோ டவரை எடுத்த அரக்கன்
    சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
    ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
    அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.    7.2.10
021    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
    றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
    முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
    மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
    படியா இவைகற் றுவல்ல அடியார்
    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
    குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
    குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.     7.2.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.3 திருநெல்வாயில் அரத்துறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

022     கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
    கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
    நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
    நிலவெண் மதிசூ டியநின் மலனே
    நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
    சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
    தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.     7.3.01
023    கறிமா மிளகும் மிகுவன் மரமும்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
    நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
    நெல்வா யில்அரத் துறைநின் மலனே
    வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
    நரனா கவகுத் தனைநா னிலையேன்
    பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
    பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.     7.3.02
024    புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
    புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
    எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
    நெல்வா யில்அரத் துறைநின் மலனே
    மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
    வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
    அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.03
025    கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
    நீடுயர் சோலை நெல்வா யிலரத்
    துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
    ஓடு புனற்க ரையாம் இளமை
    உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
    வாடி இருந்து வருந்தல் செய்யா
    தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.     7.3.04
026    உலவு முலகிற் றலைகற் பொழிய
    உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
    நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
    புலனைந் தும்மயங் கியகங் குழையப்
    பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
    அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.05
027    ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
    நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
    நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
    வாலூன் றவருந் தும்முடம் பிதனை
    மகிழா தழகா வலந்தேன் இனியான்
    ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.06
028    சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
    நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
    மகரக் குழையாய் மணக்கோ லமதே
    பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
    அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.07
029    திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
    றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
    நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
    பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
    பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
    அண்டா வமரர்க் கமரர் பெருமான்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.08
030    மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
    மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
    நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
    வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
    பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
    ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.    7.3.09
031    நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
    நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
    தேரூர் நெடுவீதி நன்மா டமலி
    தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
    ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
    மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
    காரூர் களிவண் டறையானை மன்ன
    ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.     7.3.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.4 திருஅஞ்சைக்களம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

032    தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
    சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
    அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
    அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
    மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
    வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
    டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.01
033    பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே
    பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
    பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே
    புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
    மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட
    வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
    அடித்தார் கடலங் கரைமேன் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.     7.4.02
034    சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
    சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
    முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
    முனிகள் முனியே அமரர்க் கமரா
    சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்
    தணியா திடறுங் கடலங் கரைமேல்
    அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.03
035    இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்
    இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
    குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
    அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
    மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
    வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
    டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.04
036    வீடின் பயனென் பிறப்பின் பயனென்
    விடையே றுவதென் மதயா னைநிற்க
    கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
    சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
    பாடும் புலவர்க் கருளும் பொருளென்
    நிதியம் பலசெய் தகலச் செலவில்
    ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.05
037    இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே
    இறந்தார் தலையிற் பலிகோட லென்னே
    பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே
    பரமா பரமேட் டிபணித் தருளாய்
    உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்
    கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
    டரவக் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.06
038    ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்
    சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
    நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
    நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
    நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
    கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
    ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.07
039    வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
    விளங்குங் குழைக்கா துடைவே தியனே
    இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்
    தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
    கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்
    கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
    றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.08
040    பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்
    பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
    நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்
    சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
    வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்
    வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
    டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.    7.4.09
041    எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
    எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
    அந்தண் கடலங் கரைமேல் மகோதை
    அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
    மந்தம் முழவுங் குழலு மியம்பும்
    வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
    சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
    டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.     7.4.10

இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் - உமையம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.5 திருஓணகாந்தன்றளி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

042    நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசை செய்ய லுற்றார்
    கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
    ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
    குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.01
043    திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
    திரைகள் வந்து புரள வீசுங்
    கங்கை யாளேல் வாய்தி றவாள்
    கணப தியேல் வயிறு தாரி
    அங்கை வேலோன் குமரன் பிள்ளை
    தேவி யார்கொற் றட்டி யாளால்
    உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம்
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.02
044    பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
    பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
    மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
    மதியு டையவர் செய்கை செய்யீர்
    அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
    ஆவற் காலத் தடிகேள் உம்மை
    ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.03
045    வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை
    வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
    றில்லை என்னீர் உண்டும் என்னீர்
    எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
    பல்லை யுக்கப் படுத லையிற்
    பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
    கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.04
046    கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
    கொண்ட பாணி குறைப டாமே
    ஆடிப் பாடி அழுது நெக்கங்
    கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
    தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
    சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
    ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
    ஓண காந்தன் றளியு ளீரே.    7.5.05
047    வாரி ருங்குழல் வாணெ டுங்கண்
    மலைம கள்மது விம்மு கொன்றைத்
    தாரி ருந்தட மார்பு நீங்காத்
    தைய லாளுல குய்ய வைத்த
    காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
    காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
    ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.06
048    பொய்ம்மை யாலே போது போக்கிப்
    புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
    மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
    மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
    எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
    ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
    உம்மை என்றே எம்பெ ருமான்
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.07
049    வலையம் வைத்த கூற்ற மீவான்
    வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
    சிலைய மைத்த சிந்தை யாலே
    திருவ டிதொழு துய்யி னல்லாற்
    கலைய மைத்த காமச் செற்றக்
    குரோத லோப மதம வருடை
    உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.08
050    வார மாகித் திருவ டிக்குப்
    பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
    ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
    ஒற்றி யூரேல் உம்ம தன்று
    தார மாகக் கங்கை யாளைச்
    சடையில் வைத்த அடிகேள் உந்தம்
    ஊருங் காடு உடையுந் தோலே
    ஓண காந்தன் றளியு ளீரே.     7.5.09
051    ஓவ ணமேல் எருதொன் றேறும்
    ஓண காந்தன் றளியு ளார்தாம்
    ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
    வரைது கிலொடு பட்டு வீக்கிக்
    கோவ ணமேற் கொண்ட வேடங்
    கோவை யாகவா ரூரன் சொன்ன
    பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
    பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.     7.5.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.6 திருவெண்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

052    படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
    பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
    அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
    மடங்க லானைச் செற்று கந்தீர்
    மனைகள் தோறுந் தலைகை யேந்தி
    விடங்க ராகித் திரிவ தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.     7.6.01
053    இழித்து கந்தீர் முன்னை வேடம்
    இமைய வர்க்கும் உரைகள் பேணா
    தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
    உயர்த வத்தை அமரர் வேண்ட
    அழிக்க வந்த காம வேளை
    அவனு டைய தாதை காண
    விழித்து கந்த வெற்றி யென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.02
054    படைகள் ஏந்திப் பாரி டமும்
    பாதம் போற்ற மாதும் நீரும்
    உடையோர் கோவ ணத்த ராகி
    உண்மை சொல்லீர் உம்மை யன்றே
    சடைகள் தாழக் கரணம் இட்டுத்
    தன்மை பேசி இல்ப லிக்கு
    விடைய தேறித் திரிவ தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.03
055    பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
    பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
    கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்
    கருது வார்கள் காணும் வண்ணம்
    மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
    வான நாடர் மருவி யேத்த
    விண்ணு ளீராய் நிற்ப தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.04
056    குடமெ டுத்து நீரும் பூவுங்
    கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
    நடமெ டுத்தொன் றாடிப் பாடி
    நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
    வடமெ டுத்த கொங்கை மாதோர்
    பாக மாக வார்க டல்வாய்
    விடம்மி டற்றில் வைத்த தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.05
057    மாறு பட்ட வனத்த கத்தில்
    மருவ வந்த வன்க ளிற்றைப்
    பீறி இட்ட மாகப் போர்த்தீர்
    பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
    கூறு பட்ட கொடியும் நீருங்
    குலாவி ஏற்றை அடர ஏறி
    வேறு பட்டுத் திரிவ தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.06
058    காத லாலே கருதுந் தொண்டர்
    கார ணத்தீ ராகி நின்றே
    பூதம் பாடப் புரிந்து நட்டம்
    புவனி யேத்த ஆட வல்லீர்
    நீதி யாக ஏழி லோசை
    நித்த ராகிச் சித்தர் சூழ
    வேத மோதித் திரிவ தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.07
059    குரவு கொன்றை மதியம் மத்தங்
    கொங்கை மாதர் கங்கை நாகம்
    விரவு கின்ற சடையு டையீர்
    விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
    பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
    பாக மாய மங்கை யஞ்சி
    வெருவ வேழஞ் செற்ற தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.08
060    மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
    நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
    பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
    பரவும் வண்ணம் எங்ங னேதான்
    நாடுங் காட்டில் அயனும் மாலும்
    நணுகா வண்ணம் அனலு மாய
    வேடங் காட்டித் திரிவ தென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே.    7.6.09
061    விரித்த வேதம் ஓத வல்லார்
    வேலை சூழ்வெண் காடு மேய
    விருத்த னாய வேதன் றன்னை
    விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
    அருத்தி யாலா ரூரன் தொண்டன்
    அடியன் கேட்ட மாலை பத்துந்
    தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
    செம்மை யாளர் வானு ளாரே.     7.6.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்,
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.7 திருஎதிர்கொள்பாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

062     மத்த யானை ஏறி மன்னர்
    சூழவரு வீர்காள்
    செத்த போதில் ஆரும் இல்லை
    சிந்தையுள் வைம்மின்கள்
    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
    வம்மின் மனத்தீரே
    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.01
063    தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
    துயரம் மனைவாழ்க்கை
    மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
    நெஞ்ச மனத்தீரே
    நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
    நிறைபுனல் நீள்சடைமேல்
    ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.02
064    செடிகொ ளாக்கை சென்று சென்று
    தேய்ந்தொல் லைவீழாமுன்
    வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
    பட்டு மயங்காதே
    கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
    கோவண ஆடையுடை
    அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.03
065    வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
    வஞ்ச மனத்தீரே
    யாவ ராலும் இகழப் பட்டிங்
    கல்ல லில்வீழாதே
    மூவ ராயும் இருவ ராயும்
    முதல்வன் அவனேயாம்
    தேவர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.04
066    அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
    காறலைப் பான்பொருட்டாற்
    சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
    ஊர்ப்பு றஞ்சேராமுன்
    வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
    வஞ்ச மதில்மூன்றும்
    எரித்த வில்லி எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.05
067    பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
    பொத்தடைப் பான்பொருட்டால்
    மையல் கொண்டீர் எம்மோ டாடி
    நீரும் மனத்தீரே
    நைய வேண்டா இம்மை யேத்த
    அம்மை நமக்கருளும்
    ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.06
068    கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
    செற்ற மனம்நீக்கி
    வாசம் மல்கு குழலி னார்கள்
    வஞ்ச மனைவாழ்க்கை
    ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
    என்பணிந் தேறேறும்
    ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.07
069    இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
    ஏழை மனைவாழ்க்கை
    முன்பு சொன்ன மோழை மையான்
    முட்டை மனத்தீரே
    அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
    அடிக ளடிசேரார்
    என்பர் கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.08
070    தந்தை யாரும் தவ்வை யாரும்
    எட்டனைச் சார்வாகார்
    வந்து நம்மோ டுள்ள ளாவி
    வான நெறிகாட்டுஞ்
    சிந்தை யீரே நெஞ்சி னீரே
    திகழ்மதி யஞ்சூடும்
    எந்தை கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.09
071    குருதி சோர ஆனையின் றோல்
    கொண்ட குழற்சடையன்
    மருது கீறி ஊடு போன
    மாலய னும்மறியாச்
    சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
    சோதியெம் ஆதியான்
    கருது கோயில் எதிர்கொள் பாடி
    என்ப தடைவோமே.     7.7.10
072    முத்து நீற்றுப் பவள மேனிச்
    செஞ்சடை யான்உறையும்
    பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
    பரமனை யேபணியச்
    சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
    சடைய னவன்சிறுவன்
    பத்தன் ஊரன் பாடல் வல்லார்
    பாதம் பணிவாரே.     7.7.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.8 திருவாரூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

073     இறைகளோ டிசைந்த இன்பம்
    இன்பத்தோ டிசைந்த வாழ்வு
    பறைகிழித் தனைய போர்வை
    பற்றியான் நோக்கி னேற்குத்
    திறைகொணர்ந் தீண்டித் தேவர்
    செம்பொனும் மணியுந் தூவி
    அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.1
074    ஊன்மிசை உதிரக் குப்பை
    ஒருபொரு ளிலாத மாயம்
    மான்மறித் தனைய நோக்க
    மடந்தைமார் மதிக்கு மிந்த
    மானுடப் பிறவி வாழ்வு
    வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
    ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.2
075    அறுபதும் பத்தும் எட்டும்
    ஆறினோ டஞ்சு நான்குந்
    துறுபறித் தனைய நோக்கிச்
    சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
    நறுமலர்ப் பூவும் நீரும்
    நாடொறும் வணங்கு வார்க்கு
    அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.3
076    சொல்லிடில் எல்லை இல்லை
    சுவையிலாப் பேதை வாழ்வு
    நல்லதோர் கூரை புக்கு
    நலமிக அறிந்தே னல்லேன்
    மல்லிகை மாடம் நீடு
    மருங்கொடு நெருங்கி யெங்கும்
    அல்லிவண் டியங்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.4
077    நரம்பினோ டெலும்பு கட்டி
    நசையினோ டிசைவொன் றில்லாக்
    குரம்பைவாய்க் குடியி ருந்து
    குலத்தினால் வாழ மாட்டேன்
    விரும்பிய கமழும் புன்னை
    மாதவித் தொகுதி என்றும்
    அரும்புவாய் மலரும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.    7.8.5
078    மணமென மகிழ்வர் முன்னே
    மக்கள்தாய் தந்தை சுற்றம்
    பிணமெனச் சுடுவர் பேர்த்தே
    பிறவியை வேண்டேன் நாயேன்
    பணையிடைச் சோலை தோறும்
    பைம்பொழில் விளாகத் தெங்கள்
    அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.6
079    தாழ்வெனுந் தன்மை விட்டுத்
    தனத்தையே மனத்தில் வைத்து
    வாழ்வதே கருதித் தொண்டர்
    மறுமைக்கொன் றீய கில்லார்
    ஆழ்குழிப் பட்ட போது
    வலக்கணில் ஒருவர்க் காவர்
    யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.     7.8.7
080    உதிரநீர் இறைச்சிக் குப்பை
    எடுத்தது மலக்கு கைம்மேல்
    வருவதோர் மாயக் கூரை
    வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
    கரியமால் அயனுந் தேடிக்
    கழலிணை காண மாட்டா
    அரியனாய் நின்ற ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.    7.8.8
081    பொய்த்தன்மைத் தாய மாயப்
    போர்வையை மெய்யென் றெண்ணும்
    வித்தகத் தாய வாழ்வு
    வேண்டிநான் விரும்ப கில்லேன்
    முத்தினைத் தொழுது நாளும்
    முடிகளால் வணங்கு வார்க்கு
    அத்தன்மைத் தாகும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.    7.8.9
082    தஞ்சொலார் அருள் பயக்குந்
    தமியனேன் தடமு லைக்கண்
    அஞ்சொலார் பயிலும் ஆரூர்
    அப்பனை ஊரன் அஞ்சிச்
    செஞ்சொலால் நயந்த பாடல்
    சிந்தியா ஏத்த வல்லார்
    நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
    நாதனை நணுகு வாரே.     7.8.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.9 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்


083     மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்
    எரித்தீர் வருமுப் புரங்கள்
    சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
    சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
    கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
    கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
    அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.1
084    அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
    தீரழற் சூலத்தில் அந்தகனைத்
    திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
    பாகிய பூசனை செய்பொழுதில்
    ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
    வாகவோர் கண்மலர் சூட்டலுமே
    பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
    லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.     7.9.2
085    தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
    சந்திரன் சவிதாவிய மானனானீர்
    சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
    தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
    முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
    முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
    அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.3
086    கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
    வில்லா நாணியிற் கோலொன்றினால்
    இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
    உமக்கார் எதிரெம் பெருமான்
    கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
    காமனை வேவக் கடைக்கண்ணினாற்
    பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.     7.9.4
087    வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
    வானவர் தானவர் மாமுனிவர்
    உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
    உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
    இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
    இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
    அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.5
088    *அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
    சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
    மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
    மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
    வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு
    மென்றொரு காசினை நின்றநன்றிப்
    புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி
    லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

    *திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப்
    பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை
    நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன்
    பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள்
    ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில்
    பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து
    வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில்
    அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும்
    நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு
    பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும்
    ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த
    ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது.     7.9.6
089    பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
    பகலோன்முத லாப்பல தேவரையுந்
    தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
    என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
    விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
    விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
    அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.7
090    பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
    குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
    பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
    பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
    கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
    கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
    பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.     7.9.8
091    மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
    புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
    முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
    முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
    கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
    கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
    டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.9
092    கடிக்கும் அரவால் மலையால் அமரர்
    கடலைக் கடையவெழு காளகூடம்
    ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
    உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
    இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
    இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
    அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.     7.9.10
093    காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
    யோடகி லுந்திட் டிருகரையும்
    போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
    பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
    ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
    காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
    சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
    இணங்கிச் சிவலோகம தெய்துவரே.     7.9.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்,
தேவியார் - அழகம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.10 திருக்கச்சிஅனேகதங்காவதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

094    தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
    மானதி டந்திகழ் ஐங்கணையக்
    கோனை யெரித்தெரி யாடி இடங்குல
    வான திடங்குறை யாமறையாம்
    மானை இடத்ததோர் கையனி டம்மத
    மாறு படப்பொழி யும்மலைபோல்
    யானை யுரித்த பிரான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.1
095    கூறு நடைக்குழி கட்பகு வாயன
    பேயுகந் தாடநின் றோரியிட
    வேறு படக்குட கத்திலை யம்பல
    வாணன்நின் றாடல் விரும்புமிடம்
    ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
    யோர்பெரு மான்உமை யாள்கணவன்
    ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.2
096    கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
    லாலுமி டம்மழு வாளுடைய
    கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
    கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
    செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
    வாகுமி டந்திரு மார்பகலத்
    தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.    7.10.3
097    கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
    கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
    மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
    பங்கினிற் றங்க உவந்தருள்செய்
    சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
    பாய வியாத்தழல் போலுடைத்தம்
    அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.4
098    பைத்த படத்தலை ஆடர வம்பயில்
    கின்ற இடம்பயி லப்புகுவார்
    சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
    கின்ற இடந்திரு வானடிக்கே
    வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
    வைத்த இடம்மழு வாளுடைய
    அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.5
099    தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
    ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
    பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
    நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
    கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
    பிரான திடங்கடல் ஏழுகடந்
    தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.6
100    கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
    தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
    விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
    பேடைதன் சேவலோ டாடுமிடம்
    மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
    மாதவி யோடு மணம்புணரும்
    அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.7
101    புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
    தம்புர மூன்றும் பொடிப்படுத்த
    வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
    காலனைக் கால்கொடு வீந்தவியக்
    கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
    குராவகு ளங்குருக் கத்திபுன்னை
    அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.8
102    சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
    வேனகை யாள்தவி ராமிகுசீர்
    மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
    நட்டம்நின் றாடிய சங்கரனெம்
    அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
    சேரொளி யன்னதோர் பேரகலத்
    தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.9
103    வீடு பெறப்பல ஊழிகள் நின்று
    நினைக்கும் இடம்வினை தீருமிடம்
    பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
    மேவினர் தங்களைக் காக்குமிடம்
    பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
    உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
    கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே.     7.10.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.11 திருப்பூவணம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

104     திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.     7.11.1
105    எண்ணி இருந்து கிடந்து நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.    7.11.2
106    தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.     7.11.3
107    நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ.    7.11.4
108    நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடியணி வார்உறை பூவணம் ஈதோ.    7.11.5
109    மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.     7.11.6
110    மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ.    7.11.7
    இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.    7.11.8-9
111    சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாஉறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.     7.11.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.12 திருநாட்டுத்தொகை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்

112    வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.     7.12.1
113    அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.     7.12.2
114    மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.     7.12.3
115    தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.    7.12.4
116    குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.    7.12.5
117    தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.     7.12.6
118    ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.     7.12.7
119    நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.    7.12.8
120    தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.     7.12.9
121    மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.    7.12.10
122    பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.    7.12.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.13 திருத்துறையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

123     மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.    7.13.1
124    மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.2
125    கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.3
126    அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.    7.13.4
127    பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.5
128    மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.6
129    மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.7
130    கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.8
131    விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.    7.13.9
132    மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.     7.13.10
133    செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்
பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.     7.13.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர், தேவியார் - பூங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.14 திருப்பாச்சிலாச்சிராமம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

134     வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
    நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
    உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
    உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
    பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
    பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.1
135    அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
    அடிகளே அமையுமென் றிருந்தேன்
    என்னையும் ஒருவன் உளனென்று கருதி
    இறையிறை திருவருள் காட்டாய்
    அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
    லாச்சிரா மத்துறை அடிகள்
    பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.2
136    உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
    உள்ளமே அமையுமென் றிருந்தேன்
    செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
    செஞ்சடை நஞ்சடை கண்டர்
    அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
    தடிகள்தா மியாதுசொன் னாலும்
    பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.3
137    நாச்சில பேசி நமர்பிறர் என்று
    நன்றுதீ தென்கிலர் மற்றோர்
    பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
    புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
    பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
    பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
    பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
    இவரலா தில்லையோ பிரானார்.    7.14.4
138    வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
    வாட்டிய வகையின ரேனும்
    புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
    போகுநாள் வீழுநா ளாகிப்
    பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
    தடிகள்தா மியாதுசொன் னாலும்
    பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.5
139    செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
    தீவினை செற்றிடு மென்று
    அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
    ஆவதும் அறிவரெம் மடிகள்
    படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
    பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
    இவரலா தில்லையோ பிரானார்.    7.14.6
140    கையது கபாலங் காடுறை வாழ்க்கை
    கட்டங்கம் ஏந்திய கையர்
    மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
    வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
    பையர வல்குற் பாவைய ராடும்
    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
    மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.7
141    நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன்
    நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
    கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங்
    கருத்தினாற் கைதொழு தெழுவேன்
    பணம்படும் அரவம் பற்றிய கையர்
    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
    பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.8
142    குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
    குற்றேவல் நாடொறுஞ் செய்வான்
    இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
    எம்பெரு மானென்றெப் போதும்
    அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
    தடிகள்தாம் யாதுசொன் னாலும்
    பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.9
143    துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
    தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
    மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
    மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
    பணிப்படும் அரவம் பற்றிய கையர்
    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
    பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.10
144    ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
    அடியவர்க் கடியனும் ஆனேன்
    உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
    ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
    அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
    லாச்சிரா மத்தெம் மடிகள்
    பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
    இவரலா தில்லையோ பிரானார்.     7.14.11
145    ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
    எம்பெரு மானென்றெப் போதும்
    பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
    தடிகளை அடிதொழப் பன்னாள்
    வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
    வளவயல் நாவலா ரூரன்
    பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
    இவரலா தில்லையோ பிரானார்.    7.14.12

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.15 திருநாட்டியத்தான்குடி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

146     பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்
    புறங்காட் டாடல்கண் டிகழேன்
    பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
    பிறவே னாகிலும் மறவேன்
    காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்
    கருதீ ராகிலுங் கருதி
    நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.1
147    கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
    டெல்லியில் ஆடலைக் கவர்வன்
    துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
    சொல்லாய் திப்பிய மூர்த்தி
    வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல
    மணியே மாணிக்க வண்ணா
    நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.2
148    அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்
    யாதினுக் காசைப் படுகேன்
    பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
    பங்கா எம்பர மேட்டீ
    மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
    மணியே மாணிக்க வண்ணா
    நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.3
149    கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
    கல்லா தேபல கற்றேன்
    நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
    தம்முடை நீதியை நினைய
    வல்லே னல்லேன் பொன்னடி பரவ
    மாட்டேன் மறுமையை நினைய
    நல்லே னல்லேன் நானுமக் கல்லால்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.4
150    மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
    கருதா தார்தமைக் கருதேன்
    ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்
    உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
    பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
    பாடியும் நாடியும் அறிய
    நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.5
151    படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
    படுத்தா யென்றல்லல் பறையேன்
    குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே
    கோனே கூற்றுதைத் தானே
    மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்
    மறையோ தீமங்கை பங்கா
    நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.6
152    ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
    அழகா அமரர்கள் தலைவா
    எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
    நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
    உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்
    உகவீ ராகிலும் உகப்பன்
    நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.7
153    கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்
    கருதிடிற் கண்கணீர் பில்கும்
    பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்
    பசுவே ஏறிலும் பழியேன்
    வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
    மாட்டேன் மறுமையை நினையேன்
    நலியேன் ஒருவரை நானுமை யல்லால்
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.8
154    குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
    கொண்டா ராகிலுங் கொள்ளக்
    கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
    கண்ணா நின்னல தறியேன்
    தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
    தொழுதேன் என்வினை போக
    நண்டா டும்வயற் றண்டலை வேலி
    நாட்டியத் தான்குடி நம்பீ.     7.15.9
155    கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
    கொடிறன் கோட்புலி சென்னி
    நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
    நம்பியை நாளும் மறவாச்
    சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
    திருவா ரூரன் உரைத்த
    பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
    பாடநும் பாவம்பற் றறுமே.     7.15.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரிநாதேசுவரர், தேவியார் - மலர்மங்கையம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.16 திருக்கலையநல்லூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்

156    குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
    குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
    விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
    விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
    அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
    அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
    கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
    கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.     7.16.1
157    செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
    செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
    இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
    இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
    பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
    பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக
    கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
    களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.     7.16.2
158    இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி
    இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
    துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
    தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
    மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
    மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
    கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
    காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.     7.16.3
159    மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
    மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
    உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
    ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
    அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
    அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
    கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்
    கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.     7.16.4
160    நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா
    நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
    வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்
    புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற்
    சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்
    தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே
    கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
    கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.     7.16.5
161    பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
    பெருந்தேவர் *சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
    செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
    தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
    தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
    திரைபொருது வருபுனல்சேர் #அரிசிலின்றென் கரைமேற்
    கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
    கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

    *எச்சன்சிரம், இந்திரன்றோள், சூரியன்பல், அக்கினிதேவன்
    கரம், பகன் என்னும் பெயருள்ள மற்றொரு சூரியன்கண்
    இவை பீடழிந்தவை.

    #விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல்
    நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது.
    இதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க.     7.16.6
162    இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
    இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
    நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
    நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
    பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
    பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
    கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
    கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.     7.16.7
163    மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
    வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
    வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
    விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
    சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
    சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
    காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
    கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.     7.16.8
164    பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
    பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
    கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்
    கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
    இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
    இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்
    கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
    கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.     7.16.9
165    தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்
    றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
    வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
    மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
    வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
    விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்
    கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
    கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.     7.16.10
166    தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்
    தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
    உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்
    ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை
    நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
    நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
    பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
    பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.     7.16.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.17 திருநாவலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

167     கோவலன் நான்முகன் வானவர்
    கோனுங்குற் றேவல்செய்ய
    மேவலர் முப்புரந் தீயெழு
    வித்தவன் ஓரம்பினால்
    ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை யாளுங்கொண்ட
    நாவல னார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.1
168    தன்மையி னாலடி யேனைத்தாம்
    ஆட்கொண்ட நாட்சபைமுன்
    வன்மைகள் பேசிட வன்றொண்டன்
    என்பதோர் வாழ்வுதந்தார்
    புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
    தென்னைப்போ கம்புணர்த்த
    நன்மையி னார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.2
169    வேகங்கொண் டோ டிய வெள்விடை
    ஏறியோர் மெல்லியலை
    ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்டார்
    போகங்கொண் டார்*கடற் கோடியின்
    மோடியைப் பூண்பதாக
    நாகங்கொண் டார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.

    *கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது
    அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.     7.17.3
170    அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
    சேவினை ஆட்சிகொண்டார்
    தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
    தாமென வைத்துகந்தார்
    நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்டு
    நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.4
171    உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித்
    தாருரித் தார்களிற்றைச்
    செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
    நீற்றரோர் ஆவணத்தால்
    எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்ட
    நம்பிரா னார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.5
172    கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
    கோவலுங் கோத்திட்டையும்
    வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்டார்
    ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
    பலத்தே அருக்கனைமுன்
    நாட்டங்கொண் டார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.6
173    தாயவ ளாய்த்தந்தை யாகிச்
    சாதல் பிறத்தலின்றிப்
    போயக லாமைத்தன் பொன்னடிக்
    கென்னைப் பொருந்தவைத்த
    வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்ட
    நாயக னார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.7
174    வாயாடி மாமறை ஓதியோர்
    வேதிய னாகிவந்து
    தீயாடி யார்சினக் கேழலின்
    பின்சென்றோர் வேடுவனாய்
    வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்ட
    நாயாடி யார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.8
175    படமாடு பாம்பணை யானுக்கும்
    பாவைநல் லாள்தனக்கும்
    வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
    பாகனாய் வந்தொருநாள்
    இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்ட
    நடமாடி யார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.9
176    மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
    தான்வலி யைநெரித்தார்
    அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
    வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
    தடுக்கவொண் ணாததோர் வேழத்தி
    னையுரித் திட்டுமையை
    நடுக்கங்கண் டார்க்கிட மாவது
    நந்திரு நாவலூரே.     7.17.10
177    நாதனுக் கூர்நமக் கூர்நர
    சிங்க முனையரையன்
    ஆதரித் தீசனுக் காட்செயும்
    ஊரணி நாவலூரென்
    றோதநற் றக்கவன் றொண்டனா
    ரூரன் உரைத்ததமிழ்
    காதலித் துங்கற்றுங் கேட்பவர்
    தம்வினை கட்டறுமே.     7.17.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நாவலீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.18 திருவேள்விக்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

178     மூப்பதும் இல்லை பிறப்பதும்
    இல்லை இறப்பதில்லை
    சேர்ப்பது காட்டகத் தூரினு
    மாகச்சிந் திக்கினல்லாற்
    காப்பது வேள்விக் குடிதண்
    டுருத்தியெங் கோன்அரைமேல்
    ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.    7.18.1
179    கட்டக்காட் டில்நட மாடுவரி
    யாவர்க்குங் காட்சியொண்ணார்
    சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
    பாடுவர் தூயநெய்யால்
    வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
    தோம்பி மறைபயில்வார்
    அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.2
180    பேருமோர் ஆயிரம் பேருடை
    யார்பெண்ணோ டாணுமல்லர்
    ஊரும தொற்றியூர் மற்றையூர்
    பெற்றவா நாமறியோம்
    காருங் கருங்கடல் நஞ்சமு
    துண்டுகண் டங்கறுத்தார்க்
    காரம்பாம் பாவ தறிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.3
181    ஏனக்கொம் பும்மிள ஆமையும்
    பூண்டங்கோர் ஏறுமேறிக்
    கானக்காட் டிற்றொண்டர் கண்டன
    சொல்லியுங் காமுறவே
    மானைத்தோல் ஒன்றை உடுத்துப்
    புலித்தோல் பியற்குமிட்டு
    யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.4
182    ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
    ஊரிடு பிச்சையல்லாற்
    பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
    ஏறியோர் பூதந்தம்பாற்
    பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
    றும்பல பாம்புபற்றி
    ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.5
183    குறவனார் தம்மகள் தம்மக
    னார்மண வாட்டிகொல்லை
    மறவனா ராயங்கோர் பன்றிப்பின்
    போவது மாயங்கண்டீர்
    இறைவனார் ஆதியார் சோதிய
    ராயங்கோர் சோர்வுபடா
    அறவனார் ஆவத றிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.6
184    பித்தரை ஒத்தொரு பெற்றியர்
    நற்றவை என்னைப்பெற்ற
    முத்தவை தம்மனை தந்தைக்குந்
    தவ்வைக்குந் தம்பிரானார்
    செத்தவர் தந்தலை யிற்பலி
    கொள்வதே செல்வமாகில்
    அத்தவம் ஆவத றிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.7
185    உம்பரான் ஊழியான் ஆழியான்
    ஓங்கி மலருறைவான்
    தம்பரம் அல்லவர் சிந்திப்ப
    வர்தடு மாற்றறுப்பார்
    எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்
    துள்ளும் இருப்பதாகில்
    அம்பரம் ஆவத றிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.     7.18.8
186    இந்திர னுக்கும் இராவண
    னுக்கும் அருள்புரிந்தார்
    மந்திரம் ஓதுவர் மாமறை
    பாடுவர் மான்மறியர்
    சிந்துரக் கண்ணனும் நான்முக
    னும்முட னாய்த்தனியே
    அந்தரஞ் செல்வத றிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே.    7.18.9
187    கூடலர் மன்னன் குலநாவ
    லூர்க்கோன் நலத்தமிழைப்
    பாடவல் லபர மன்னடி
    யார்க்கடி மைவழுவார்
    நாடவல் லதொண்டன் ஆரூரன்
    ஆட்படு மாறுசொல்லிப்
    பாடவல் லார்பர லோகத்
    திருப்பது பண்டமன்றே.     7.18.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.19 திருநின்றியூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

188     அற்றவ னாரடி யார்தமக்
    காயிழை பங்கினராம்
    பற்றவ னாரெம் பராபர
    ரென்று பலர்விரும்பும்
    கொற்றவ னார்குறு காதவர்
    ஊர்நெடு வெஞ்சரத்தால்
    செற்றவ னார்க்கிட மாவது
    நந்திரு நின்றியூரே.     7.19.1
189    வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
    ளார்வடி வார்ந்தநீறு
    பூசத்தி னார்புக லிந்நகர்
    போற்றுமெம் புண்ணியத்தார்
    நேசத்தி னாலென்னை யாளுங்கொண்
    டார்நெடு மாகடல்சூழ்
    தேசத்தி னார்க்கிட மாவது
    நந்திரு நின்றியூரே.     7.19.2
190    அங்கையின் மூவிலை வேலர்
    அமரர் அடிபரவச்
    சங்கையை நீங்க அருளித்
    தடங்கடல் நஞ்சமுண்டார்
    மங்கையோர் பாகர் மகிழ்ந்த
    இடம்வள மல்குபுனற்
    செங்கயல் பாயும் வயல்பொலி
    யுந்திரு நின்றியூரே.     7.19.3
191    ஆறுகந் தாரங்கம் நான்மறை
    யாரெங்கு மாகியடல்
    ஏறுகந் தாரிசை ஏழுகந்
    தார்முடிக் கங்கைதன்னை
    வேறுகந் தார்விரி நூலுகந்
    தார்பரி சாந்தமதா
    நீறுகந் தாருறை யும்மிட
    மாந்திரு நின்றியூரே.     7.19.4
192    வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
    லார்நறு நெய்தயிர்பால்
    அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
    னாரதி கைப்பதியே
    தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்
    இருக்கை சரணடைந்தார்
    நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
    நந்திரு நின்றியூரே.     7.19.5
193    ஆர்த்தவர் ஆடர வம்மரை
    மேற்புலி ஈருரிவை
    போர்த்தவர் ஆனையின் தோலுடல்
    வெம்புலால் கையகலப்
    பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்
    தான்சிர மஞ்சிலொன்றைச்
    சேர்த்தவ ருக்குறை யும்மிட
    மாந்திரு நின்றியூரே.     7.19.6
194    தலையிடை யார்பலி சென்றகந்
    தோறுந் திரிந்தசெல்வர்
    மலையுடை யாளொரு பாகம்வைத்
    தார்கல் துதைந்தநன்னீர்
    அலையுடை யார்சடை எட்டுஞ்
    சுழல அருநடஞ்செய்
    நிலையுடை யாருறை யும்மிட
    மாந்திரு நின்றியூரே.     7.19.7
195    எட்டுகந் தார்திசை ஏழுகந்
    தார்எழுத் தாறுமன்பர்
    இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்
    சிக்கும் இறைவர்முன்னாள்
    பட்டுகும் பாரிடைக் காலனைக்
    காய்ந்து பலியிரந்தூண்
    சிட்டுகந் தார்க்கிட மாவது
    நந்திரு நின்றியூரே.     7.19.8
196    காலமும் ஞாயிறு மாகிநின்
    றார்கழல் பேணவல்லார்
    சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
    பாரடி போற்றிசைப்ப
    மாலொடு நான்முகன் இந்திரன்
    மந்திரத் தால்வணங்க
    நீலநஞ் சுண்டவ ருக்கிட
    மாந்திரு நின்றியூரே.     7.19.9
197    வாயார் மனத்தால் நினைக்கு
    மவருக் கருந்தவத்தில்
    தூயார் சுடுபொடி யாடிய
    மேனியர் வானிலென்றும்
    மேயார் விடையுகந் தேறிய
    வித்தகர் பேர்ந்தவர்க்குச்
    சேயார் அடியார்க் கணியவர்
    ஊர்திரு நின்றியூரே.     7.19.10
198    சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
    அறாத்திரு நின்றியூரிற்
    சீருஞ் சிவகதி யாயிருந்
    தானைத் திருநாவலா
    ரூரன் உரைத்த உறுதமிழ்
    பத்தும்வல் லார்வினைபோய்ப்
    பாரும் விசும்புந் தொழப்பர
    மன்னடி கூடுவரே.     7.19.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.20 திருக்கோளிலி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

199     நீள நினைந்தடி யேனுமை
    நித்தலுங் கைதொழுவேன்
    வாளன கண்மட வாளவள்
    வாடி வருந்தாமே
    கோளிலி எம்பெரு மான்குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
    ஆளிலை எம்பெரு மானவை
    அட்டித் தரப்பணியே.     7.20.1
200    வண்டம ருங்குழ லாளுமை
    நங்கையோர் பங்குடையாய்
    விண்டவர் தம்புர மூன்றெரி
    செய்தவெம் வேதியனே
    தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
    கோளிலி எம்பெருமான்
    அண்டம தாயவ னேயவை
    அட்டித் தரப்பணியே.     7.20.1
201    பாதியோர் பெண்ணைவைத் தாய்பட
    ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
    மாதர்நல் லார்வருத் தம்மது
    நீயும் அறிதியன்றே
    கோதில் பொழில்புடை சூழ்குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
    ஆதியே அற்புத னேயவை
    அட்டித் தரப்பணியே.     7.20.3
202    சொல்லுவ தென்னுனை நான்தொண்டை
    வாயுமை நங்கையைநீ
    புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு
    பூசல்செய் தாருளரோ
    கொல்லை வளம்புற விற்குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
    அல்லல் களைந்தடி யேற்கவை
    அட்டித் தரப்பணியே.     7.20.4
203    முல்லை முறுவல் உமையொரு
    பங்குடை முக்கணனே
    பல்லயர் வெண்டலை யிற்பலி
    கொண்டுழல் பாசுபதா
    கொல்லை வளம்புற விற்றிருக்
    கோளிலி எம்பெருமான்
    அல்லல் களைந்தடி யேற்கவை
    அட்டித் தரப்பணியே.     7.20.5
204    குரவம ருங்குழ லாளுமை
    நங்கையோர் பங்குடையாய்
    பரவை பசிவருத் தம்மது
    நீயும் அறிதியன்றே
    குரவம ரும்பொழில் சூழ்குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
    அரவ மசைத்தவ னேயவை
    அட்டித் தரப்பணியே.     7.20.6
205    எம்பெரு மானுனை யேநினைந்
    தேத்துவன் எப்பொழுதும்
    வம்பம ருங்குழ லாளொரு
    பாகம மர்ந்தவனே
    செம்பொனின் மாளிகை சூழ்திருக்
    கோளிலி எம்பெருமான்
    அன்பது வாயடி யேற்கவை
    அட்டித் தரப்பணியே.     7.20.7
206    அரக்கன் முடிகரங் கள்அடர்த்
    திட்டவெம் மாதிபிரான்
    பரக்கும் அரவல்கு லாள்பர
    வையவள் வாடுகின்றாள்
    குரக்கினங் கள்குதி கொள்குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
    இரக்கம தாயடி யேற்கவை
    அட்டித் தரப்பணியே.     7.20.8
207    பண்டைய மால்பிர மன்பறந்
    தும்மிடந் தும்மயர்ந்துங்
    கண்டில ராயவர் கள்கழல்
    காண்பரி தாயபிரான்
    தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
    கோளிலி எம்பெருமான்
    அண்டம தாயவ னேயவை
    அட்டித் தரப்பணியே.     7.20.9
208    கொல்லை வளம்புற விற்றிருக்
    கோளிலி மேயவனை
    நல்லவர் தாம்பர வுந்திரு
    நாவல வூரனவன்
    நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்
    தேத்திய பத்தும்வல்லார்
    அல்லல் களைந்துல கின்அண்டர்
    வானுல காள்பவரே.     7.20.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.21 திருக்கச்சிமேற்றளி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

209     நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.    7.21.1
210    ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும்
மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.     7.21.2
211    மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.     7.21.3
212    உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.     7.21.4
213    எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.     7.21.5
214    நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.     7.21.6
215    கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.     7.21.7
216    விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.     7.21.8
217    நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.     7.21.9
218    பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.     7.21.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளியீசுவரர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

219     முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.1
220    அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.2
221    ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.3
222    அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங்
கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.4
223    உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.5
224    செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.6
225    கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே.     7.22.7
226    திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே.

*அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம்,
நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை
என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய
காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப்
புட்பவிதியிற் காண்க.     7.22.8
227    வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே.     7.22.9
228    பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.     7.22.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.23 திருக்கழிப்பாலை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

229     செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்
வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.     7.23.1
230    எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால்
அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.     7.23.2
231    ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.     7.23.3
232    சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற்
கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.     7.23.4
233    ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய்
கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.     7.23.5
234    ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற்
போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.     7.23.6
235    பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள்
உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.     7.23.7
236    படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.     7.23.8
237    பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.     7.23.9
238    பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.     7.23.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.24 திருமழபாடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

239    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.1
240    கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.2
241    எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.3
242    பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.4
243    கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.5
244    நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.6
245    சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.7
246    வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.8
247    நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.     7.24.9
248    ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.     7.24.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர், தேவியார் - அழகம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.25 திருமுதுகுன்றம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

249     பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே.

*இட்டளம் து துன்பம்.     7.25.1
250    உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே.     7.25.2
251    பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.3
252    மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.4
253    மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.5
254    நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.6
255    கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.7
256    பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.     7.25.8
257    ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.     7.25.9
258    பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.

திருமுதுகுன்றமென்னும் விருத்தாசலத்தில் பரமசிவம்
அருளிச்செய்த பொன்னை மணிமுத்தா நதியில்
விட்டுப்போய்த் திருவாரூர்க்கமலாலயமென்னுந்
திருக்குளத்திலிறங்கிக் கையால்தடவும்போதோதிய
பதிகம். அவ்வாறு தடவும்போது, "எத்தாதிருந்தறியே
னென்னுந்" தேவாரமோதுகையில் பொருளகப்பட்டது.     7.25.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.26 திருக்காளத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

259    செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.    7.26.1
260    இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.     7.26.2
261    படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே.     7.26.3
262    மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.     7.26.4
263    செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற்
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.    7.26.5
264    பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென்
ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.    7.26.6
265    கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே.     7.26.7
266    நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.     7.26.8
267    தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே.     7.26.9
268    காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.     7.26.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர், தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.27 திருக்கற்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

269     விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.1
270    மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.2
271    சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.3
272    செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.4
273    சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.     7.27.5
274    அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.6
275    பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.7
276    நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.     7.27.8
277    வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.     7.27.9
278    அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.     7.27.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.28 திருக்கடவூர்வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

279     பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.1
280    பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.2
281    அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.     7.28.3
282    போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.4
283    மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.5
284    மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.6
285    எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.7
286    வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.     7.28.8
287    அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.     7.28.9
288    காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.     7.28.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்,
தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.29 திருக்குருகாவூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

289     இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.1
290    ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.2
291    பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.3
292    வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.4
293    வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.5
294    பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.6
295    போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.7
296    மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.8
297    படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.     7.29.9
298    வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.     7.29.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.30 திருக்கருப்பறியலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

299     சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்
    வைத்துகந்து திறம்பா வண்ணங்
    கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக்
    கண்டானைக் கருப்ப றியலூர்க்
    கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட
    மயிலாடுங் கொகுடிக் கோயில்
    எம்மானை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.1
300    நீற்றாரும் மேனியராய் நினைவார்தம்
    உள்ளத்தே நிறைந்து தோன்றுங்
    காற்றானைத் தீயானைக் கதிரானை
    மதியானைக் கருப்ப றியலூர்க்
    கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள்
    அவளோடுங் கொகுடிக் கோயில்
    ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.2
301    முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்
    பூப்பறித்து மூன்று போதுங்
    கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும்
    அந்தணர்தங் கருப்ப றியலூர்
    கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக்
    குழகனைக் கொகுடிக் கோயில்
    எட்டான மூர்த்தியை நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.3
302    விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி
    வினைபோக வேலி தோறுங்
    கருந்தாள வாழைமேற் செங்கனிகள்
    தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
    குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள்
    அவளோடுங் கொகுடிக் கோயில்
    இருந்தானை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.4
303    பொடியேறு திருமேனிப் பெருமானைப்
    பொங்கரவக் கச்சை யானைக்
    கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை
    குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்
    கொடியேறி வண்டினமுந் தண்டேனும்
    பண்செய்யுங் கோகுடிக் கோயில்
    அடியேறு கழலானை நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.5
304    பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்
    போற்றிசைத்துப் பூசை செய்து
    கையினா லெரியோம்பி மறைவளர்க்கும்
    அந்தணர்தங் கருப்ப றியலூர்க்
    கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
    மயிலாலுங் கொகுடிக் கோயில்
    ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.6
305    செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்
    தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
    கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி
    கண்படுக்குங் கருப்ப றியலூர்க்
    கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள்
    அவளோடுங் கொகுடிக் கோயில்
    அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.7
306    பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்
    பன்னாளும் பாடி யாடிக்
    கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்
    முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
    குறையாத மறைநாவர் குற்றேவல்
    ஒழியாத கொகுடிக் கோயில்
    உறைவானை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.8
307    சங்கேந்து கையானுந் தாமரையின்
    மேலானுந் தன்மை காணாக்
    கங்கார்ந்த வார்சடைகள் உடையானை
    விடையானைக் கருப்ப றியலூர்க்
    கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்
    பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
    எங்கோனை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.9
308    பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்
    பாவித்துப் பாடி யாடிக்
    கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்
    பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
    குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும்
    புறங்கூறுங் கொகுடிக் கோயில்
    எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.     7.30.10
309    கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்
    மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்
    குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும்
    பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
    இலைமலிந்த மழுவானை மனத்தினா
    லன்புசெய் தின்ப மெய்தி
    மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப்
    பன்னுரைத்த வண்ட மிழ்களே.     7.30.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தவீசுவரர்,
தேவியார் - கோல்வளைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.31 திருஇடையாற்றுத்தொகை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

310    முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.1
311    சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.2
312    கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய
படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.3
313    கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.4
314    நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.5
315    திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.6
316    கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.7
317    தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.8
318    பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.     7.31.9
319    ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.     7.31.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.32 திருக்கோடிக்குழகர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

320     கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.     7.32.1
321    முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.     7.32.2
322    மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே.     7.32.3
323    காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே.     7.32.4
324    மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே.     7.32.5
325    அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே.     7.32.6
326    பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.     7.32.7
327    ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய கோடிக் குழகா
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே.     7.32.8
328    நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே.     7.32.9
329    பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே.     7.32.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர், தேவியார் - மையார்தடங்கணம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.33. நமக்கடிகளாகிய - அடிகள்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

330     
பாறுதாங்கிய காடரோபடு
    தலையரோமலைப் பாவையோர்
    கூறுதாங்கிய குழகரோகுழைக்
    காதரோகுறுங் கோட்டிள
    ஏறுதாங்கிய கொடியரோசுடு
    பொடியரோஇலங் கும்பிறை
    ஆறுதாங்கிய சடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.1
331    இட்டிதாகவந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    கட்டிவாழ்வது நாகமோசடை
    மேலும்நாறு கரந்தையோ
    பட்டியேறுகந் தேறரோபடு
    வெண்டலைப்பலி கொண்டுவந்
    தட்டியாளவுங் கிற்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.2
332    ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்
    பாகிநீறுகொண் டணிவரோ
    இன்றியேயிலர் ஆவரோஅன்றி
    உடையராயிலர் ஆவரோ
    அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.3
333    தேனையாடுமுக் கண்ணரோமிகச்
    செய்யரோவெள்ளை நீற்றரோ
    பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
    மானைமேவிய கண்ணினாள்மலை
    மங்கைநங்கையை அஞ்சவோர்
    ஆனையீருரி போர்ப்பரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.4
334    கோணல்மாமதி சூடரோகொடு
    கொட்டிகாலர் கழலரோ
    வீணைதானவர் கருவியோ
    விடையேறுவேத முதல்வரோ
    நாணதாகவோர் நாகங்கொண்டரைக்
    கார்ப்பரோநல மார்தர
    ஆணையாகநம் மடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.5
335    வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
    வல்லவாநினைந் தேத்துவீர்
    வந்தசாயினை அறிவரோதம்மை
    வாழ்த்தினார்கட்கு நல்லரோ
    புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்
    பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
    அன்றியேமிக அறவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.6
336    மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
    கிசையுமாநினைந் தேத்துவீர்
    கையிற்சூலம துடையரோகரி
    காடரோகறைக் கண்டரோ
    வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
    ஏறரோகடை தோறுஞ்சென்
    றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.7
337    நீடுவாழ்பதி உடையரோஅயன்
    நெடியமாலுக்கு நெடியரோ
    பாடுவாரையும் உடையரோதமைப்
    பற்றினார்கட்கு நல்லரோ
    காடுதானரங் காகவேகைகள்
    எட்டினோடில யம்பட
    ஆடுவாரெனப் படுவரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.8
338    நமணநந்தியுங் கருமவீரனுந்
    தருமசேனனு மென்றிவர்
    குமணமாமலைக் குன்றுபோனின்று
    தங்கள்கூறையொன் றின்றியே
    ஞமணஞாஞண ஞாணஞோணமென்
    றோதியாரையு நாணிலா
    அமணராற்பழிப் புடையரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.9
339    படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்
    தேத்தினேன்பணி யீரருள்
    வடிவிலான்றிரு நாவலூரன்
    வனப்பகையப்பன் வன்றொண்டன்
    செடியனாகிலுந் தீயனாகிலுந்
    தம்மையேமனஞ் சிந்திக்கும்
    அடியனூரனை ஆள்வரோநமக்
    கடிகளாகிய அடிகளே.     7.33.10

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.34 திருப்புகலூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

340    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்
    சார்வினுந்தொண்டர் தருகிலாப்
    பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
    புகலூர்பாடுமின் புலவீர்காள்
    இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
    ஏத்தலாமிடர் கெடலுமாம்
    அம்மையேசிவ லோகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.1
341    மிடுக்கிலாதானை வீமனேவிறல்
    விசயனேவில்லுக் கிவனென்று
    கொடுக்கிலாதானைப் பாரியேயென்று
    கூறினுங்கொடுப் பாரிலை
    பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அடுக்குமேலம ருலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.2
342    காணியேற்பெரி துடையனேகற்று
    நல்லனேசுற்றம் நற்கிளை
    பேணியேவிருந் தோம்புமேயென்று
    பேசினுங்கொடுப் பாரிலை
    பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்
    புகலூர்பாடுமின் புலவீர்காள்
    ஆணியாயம ருலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.3
343    நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல்
    நடுங்கிநிற்குமிக் கிழவனை
    வரைகள்போல்திரள் தோளனேயென்று
    வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
    புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அரையனாயம ருலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.4
344    வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
    பாவியைவழக் கில்லியைப்
    பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று
    பாடினுங்கொடுப் பாரிலை
    பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.5
345    நலமிலாதானை நல்லனேயென்று
    நரைத்தமாந்தரை இளையனே
    குலமிலாதானைக் குலவனேயென்று
    கூறினுங்கொடுப் பாரிலை
    புலமெலாம்வெறி கமழும்பூம்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அலமராதமர் உலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.6
346    நோயனைத்தடந் தோளனேயென்று
    நொய்யமாந்தரை விழுமிய
    தாயன்றோபுல வோர்க்கெலாமென்று
    சாற்றினுங்கொடுப் பாரிலை
    போயுழன்றுகண் குழியாதேயெந்தை
    புகலூர்பாடுமின் புலவீர்காள்
    ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.7
347    எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்
    ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
    வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று
    வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
    புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அள்ளற்பட்டழுந் தாதுபோவதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.8
348    கற்றிலாதானைக் கற்றுநல்லனே
    காமதேவனை யொக்குமே
    முற்றிலாதானை முற்றனேயென்று
    மொழியினுங்கொடுப் பாரிலை
    பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    அத்தனாயம ருலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.9
349    தையலாருக்கோர் காமனேயென்றுஞ்
    சாலநல்வழக் குடையனே
    கையுலாவிய வேலனேயென்று
    கழறினுங்கொடுப் பாரிலை
    பொய்கையாவியின் மேதிபாய்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
    ஐயனாயம ருலகமாள்வதற்
    கியாதுமையுற வில்லையே.     7.34.10
350    செறுவினிற்செழுங் கமலமோங்குதென்
    புகலூர்மேவிய செல்வனை
    நறவம்பூம்பொழில் நாவலூரன்
    வனப்பகையப்பன் சடையன்றன்
    சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய
    பாடல்பத்திவை வல்லவர்
    அறவனாரடி சென்றுசேர்வதற்
    கியாதுமையுற வில்லையே.

    இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி
    செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப்
    புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில்
    திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி
    அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி
    யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு
    மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.     7.34.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.35 திருப்புறம்பயம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

351     அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
    நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
    தங்கினோமையும் இன்னதென்றிலர்
    ஈசனாரெழு நெஞ்சமே
    கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
    ஏத்திவானவர் தாந்தொழும்
    பொங்குமால்விடை யேறிசெல்வப்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.1
352    பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்
    பண்டையாரலர் பெண்டிரும்
    நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
    நினைப்பொழிமட நெஞ்சமே
    மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
    மகிழும்மல்லிகை செண்பகம்
    புதியபூமலர்ந் தெல்லிநாறும்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.2
353    புறந்திரைந்து நரம்பெழுந்து
    நரைத்துநீயுரை யாற்றளர்ந்
    தறம்புரிந்து நினைப்பதாண்மை
    அரிதுகாண்இஃ தறிதியேல்
    திறம்பியாதெழு நெஞ்சமேசிறு
    காலைநாமுறு வாணியம்
    புறம்பயத்துறை பூதநாதன்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.3
354    குற்றொருவரைக் கூறைகொண்டு
    கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
    செற்றொருவரைச் செய்ததீமைகள்
    இம்மையேவருந் திண்ணமே
    மற்றொருவரைப் பற்றிலேன்மற
    வாதெழுமட நெஞ்சமே
    புற்றரவுடைப் பெற்றமேறி
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.4
355    கள்ளிநீசெய்த தீமையுள்ளன
    பாவமும்பறை யும்படி
    தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்
    சேவுடைச்சிவ லோகனூர்
    துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
    தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
    புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.5
356    படையெலாம்பக டாரஆளிலும்
    பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
    கடையெலாம்பிணைத் தேரைவால்கவ
    லாதெழுமட நெஞ்சமே
    மடையெலாங்கழு நீர்மலர்ந்து
    மருங்கெலாங்கரும் பாடத்தேன்
    புடையெலாம்மணம் நாறுசோலைப்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.6
357    முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
    மூடுமாதலின் முன்னமே
    என்னைநீதியக் காதெழுமட
    நெஞ்சமேயெந்தை தந்தையூர்
    அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
    கூடிச்சேரு மணிபொழிற்
    புன்னைக்கன்னி கழிக்கணாறும்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.7
358    மலமெலாமறும் இம்மையேமறு
    மைக்கும்வல்வினை சார்கிலா
    சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
    சங்கரன்வந்து தங்குமூர்
    கலமெலாங்கடல் மண்டுகாவிரி
    நங்கையாடிய கங்கைநீர்
    புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.8
359    பண்டரியன செய்ததீமையும்
    பாவமும்பறை யும்படி
    கண்டரியன கேட்டியேற்கவ
    லாதெழுமட நெஞ்சமே
    தொண்டரியன பாடித்துள்ளிநின்
    றாடிவானவர்தாந் தொழும்
    புண்டரீக மலரும்பொய்கை
    புறம்பயந்தொழப் போதுமே.     7.35.9
360    துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்
    துயக்கறாத மயக்கிவை
    அஞ்சிஊரன் திருப்புறம்பயத்
    தப்பனைத்தமிழ்ச் சீரினால்
    நெஞ்சினாலே புறம்பயந்தொழு
    துய்துமென்று நினைத்தன
    வஞ்சியாதுரை செய்யவல்லவர்
    வல்லவானுல காள்வரே.     7.35.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்,
தேவியார் - கரும்படுசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.36 திருப்பைஞ்ஞீலி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

361     காருலாவிய நஞ்சையுண்டிருள்
    கண்டவெண்டலை யோடுகொண்
    டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி
    ஓரிடத்திலே கொள்ளும்நீர்
    பாரெலாம்பணிந் தும்மையேபர
    விப்பணியும்பைஞ் ஞீலியீர்
    ஆரமாவது நாகமோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.1
362    சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
    வாயபாம்பது மூசெனும்
    பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
    பாம்புவேண்டா பிரானிரே
    மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
    மன்னுகாரகில் சண்பகம்
    அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணீய விடங்கரே.     7.36.2
363    தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
    துன்னஆடை சுடலையிற்
    பேயொடாடலைத் தவிரும்நீரொரு
    பித்தரோவெம் பிரானிரே
    பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
    பைந்தண்மாதவி புன்னையும்
    ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணீய விடங்கரே.     7.36.3
364    செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்
    அரவமுன்கையில் ஆடவே
    வந்துநிற்குமி தென்கொலோபலி
    மாற்றமாட்டோ ம் இடகிலோம்
    பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
    கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
    அந்திவானமும் மேனியோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.4
365    நீறுநுந்திரு மேனிநித்திலம்
    நீணெடுங்கண்ணி னாளொடுங்
    கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந்
    திடுகிலோம்பலி நடமினோ
    பாறுவெண்டலை கையிலேந்திபைஞ்
    ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
    ஆறுதாங்கிய சடையரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.5
366    குரவம்நாறிய குழலினார்வளை
    கொள்வதேதொழி லாகிநீர்
    இரவும்இம்மனை அறிதிரேயிங்கே
    நடந்துபோகவும் வல்லிரே
    பரவிநாடொறும் பாடுவார்வினை
    பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
    அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.6
367    ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர்
    என்பெலாமணிந் தென்செய்வீர்
    காடுநும்பதி ஓடுகையது
    காதல்செய்பவர் பெறுவதென்
    பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ்
    ஞீலியேனென்று நிற்றிரால்
    ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.7
368    மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
    கங்கையாளொடு திங்களும்
    மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
    வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
    பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
    ஞீலியேன்என்று நிற்றிரால்
    அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.8
369    தக்கைதண்ணுமை தாளம்வீணை
    தகுணிச்சங்கிணை சல்லரி
    கொக்கரைகுட முழவினோடிசை
    கூடிப்பாடிநின் றாடுவீர்
    பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்
    ஞீலியேனென நிற்றிரால்
    அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.9
370    கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு
    கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
    மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்
    வேதமோதுதிர் கீதமும்
    பையவேவிடங் காகநின்றுபைஞ்
    ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
    ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.     7.36.10
371    அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணீய விடங்கரை
    மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
    வேண்டிக்காதல் மொழிந்தசொல்
    மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
    றொண்டன்வாய்மொழி பாடல்பத்
    துன்னிஇன்னிசை பாடுவார்உமை
    கேள்வன்சேவடி சேர்வரே.     7.36.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.37 திருவாரூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

372     குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.     7.37.1
373    பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.    7.37.2
374    சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.     7.37.3
375    சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.    7.37.4
376    இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.     7.37.5
377    வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.     7.37.6
378    தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.    7.37.7
379    சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.    7.37.8
380    குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.     7.37.9
381    கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.     7.37.10
382    நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.     7.37.11

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.38 திருவதிகைத்திருவீரட்டானம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்

383     தம்மானை அறியாத சாதியார் உளரே
    சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
    கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
    உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
    தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
    ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
    எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.1
384    முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா
    தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
    பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
    குன்றமே ஈச஦னென் றுன்னையே புகழ்வேன்
    அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்
    படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
    என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.2
385    விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே
    விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
    கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
    காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
    வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்
    வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
    இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.3
386    நாற்றானத் தொருவனை நானாய பரனை
    நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
    காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
    றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
    ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
    தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
    ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.4
387    சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும்
    உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
    கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
    சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
    வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி
    மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
    ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.     7.38.5
388    மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
    வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
    தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும்
    தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
    வெம்மான மதகரியின் உரியானை வேத
    விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
    எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.6
389    வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு
    மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
    பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
    தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற்
    செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்
    அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
    எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.     7.38.7
390    பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
    பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
    தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
    சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
    அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்
    உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
    என்னானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.8
391    திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
    சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
    கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய
    கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
    பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
    உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
    இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.    7.38.9
392    என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
    எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
    வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
    வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
    அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்
    பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
    என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
    துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.     7.38.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.39 திருத்தொண்டத்தொகை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்

393     தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.     7.39.1
394    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
    ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
    கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.     7.39.2
395    *மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
    செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.

    *விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு
    செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது.    7.39.3
396    திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
    ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
    அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.     7.39.4
397    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
    *நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
    #அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    *பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத்
    தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி
    யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ
    ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும்
    என்றருளிச்செய்தது.

    #அம்பரான் சோமாசி - திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர்.     7.39.1
398    வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
    கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    *கழறிற்றறிவார் - சேரமானாயனார்.     7.39.6
399    பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    *சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச்
    சத்தியாரென மாற்றுக.     7.39.7
400    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.     7.39.8
401    கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
    மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.     7.39.9
402    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    *முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    *இவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள்     7.39.10
403    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
    ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.     7.39.11

    இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்
    திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத்
    தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது
    தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை
    உள்ளத்தால் வணங்கி "இவர்களுக்குநானடியே"னாகும்படி
    பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் "தில்லைவாழ்
    பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
    அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி
    எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.40 திருக்கானாட்டுமுள்ளூர்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    404    வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
        மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
        புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
        பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
        முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
        மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
        கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.1
    405    ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
        ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
        பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
        புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
        திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
        திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
        கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.2
    406    இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
        இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
        சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
        சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
        அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
        அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
        கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.3
    407    பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
        புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
        நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
        ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
        பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
        படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
        காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.4
    408    செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
        தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
        முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
        முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
        இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்
        வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
        கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.5
    409    விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
        வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
        அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
        சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
        உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
        குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
        கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.6
    410    அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
        அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
        திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
        தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
        குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
        கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
        கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.7
    411    இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
        ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
        குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
        கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
        தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே
        தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
        கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.8
    412    குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
        குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
        பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
        பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
        துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
        தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
        கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.9
    413    தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்
        தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
        மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
        மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
        தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
        துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
        காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.     7.40.10
    414    திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
        செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
        கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
        கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
        உரையினார் மதயானை நாவலா ரூரன்
        உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
        வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்
        வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.     7.40.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர், தேவியார் - கானார்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    415    முதுவாய் ஓரி கதற முதுகாட்
        டெரிகொண் டாடல் முயல்வானே
        மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
        மலையான் மகள்தன் மணவாளா
        கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
        கண்டால் அடியார் கவலாரே
        அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.1
    416    கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
        கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
        றுச்சம் போதா ஊரூர் திரியக்
        கண்டால் அடியார் உருகாரே
        இச்சை அறியோம் எங்கள் பெருமான்
        ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
        அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.2
    417    சாலக் கோயில் உளநின் கோயில்
        அவையென் றலைமேற் கொண்டாடி
        மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
        வானோர் அறியா நெறியானே
        கோலக் கோயில் குறையாக் கோயில்
        குளிர்பூங் கச்சூர் வடபாலை
        ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
        அறங்கட் டுரைத்த அம்மானே.     7.41.3
    418    விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
        மின்னேர் உருவத் தொளியானே
        கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
        கன்னி மாடங் கலந்தெங்கும்
        புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
        பூமேல் திருமா மகள்புல்கி
        அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.4
    419    மேலை விதியே வினையின் பயனே
        விரவார் புரமூன் றெரிசெய்தாய்
        காலை யெழுந்து தொழுவார் தங்கள்
        கவலை களைவாய் கறைக்கண்டா
        மாலை மதியே மலைமேல் மருந்தே
        மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
        ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே.     7.415
    420    பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
        பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
        துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
        இடமாக் கொண்டு நடமாடி
        ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
        கண்டால் அடியார் உருகாரே
        அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.6
    421    பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
        அதுவும் பொருளாக் கொள்வானே
        மெய்யே எங்கள் பெருமான் உன்னை
        நினைவார் அவரை நினைகண்டாய்
        மையார் தடங்கண் மங்கை பங்கா
        கங்கார் மதியஞ் சடைவைத்த
        ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.7
    422    ஊனைப் பெருக்கி உன்னை நினையா
        தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
        கானக் கொன்றை கமழ மலருங்
        கடிநா றுடையாய் கச்சூராய்
        மானைப் புரையும் மடமென் னோக்கி
        மடவா ளஞ்ச மறைத்திட்ட
        ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.8
    423    காதல் செய்து களித்துப் பிதற்றிக்
        கடிமா மலரிட் டுனையேத்தி
        ஆதல் செய்யும் அடியார் இருக்க
        ஐயங் கொள்வ தழகிதே
        ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
        உமையாள் கணவா எனையாள்வாய்
        ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானே.     7.41.9
    424    அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
        ஆலக் கோயில் அம்மானை
        உன்ன முன்னும் மனத்தா ரூரன்
        ஆரூ ரன்பேர் முடிவைத்த
        மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
        செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
        பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
        அவரெந் தலைமேற் பயில்வாரே.     7.41.10

    இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை
    வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர், தேவியார் - கன்னியுமையம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.42 திருவெஞ்சமாக்கூடல்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    425     எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு
        மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
        செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
        திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
        முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
        குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
        வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.1
    426    குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
        குடமாமணி சந்தனமும் அகிலுந்
        துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
        திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
        வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
        மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
        விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.2
    427    வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
        வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
        திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
        திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
        நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்
        குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
        விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.3
    428    பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
        படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
        தண்ணா ரகிலுந் நலசா மரையும்
        அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
        மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
        மடவார் நடமாடு மணியரங்கில்
        விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.4
    429    துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந்
        தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
        களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
        கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
        பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
        பிறவாதவனே பெறுதற் கரியாய்
        வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.5
    430    தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
        சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
        உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
        புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
        முழவா ரொலிபா டலோடா டலறா
        முதுகாடரங்கா நடமாட வல்லாய்
        விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.6
    431    கடமா களியா னையுரித் தவனே
        கரிகாடிடமா அனல்வீசி நின்று
        நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
        நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
        படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்
        பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
        விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.7
    432    காடும் மலையுந் நாடு மிடறிக்
        கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
        சேட னுறையும் மிடந்தான் விரும்பி
        திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
        பாடல் முழவுங் குழலு மியம்பப்
        பணைத்தோளியர் பாடலோ டாடலறா
        வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.8
    433    கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
        கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
        பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
        பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
        துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
        திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
        வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
        விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.     7.42.9
    434    வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
        வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
        வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
        வேண்டுதி யேயென்று தான்விரும்பி
        வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
        வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
        செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
        சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.     7.42.10

    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - விகிர்தேசுவரர், தேவியார் - விகிர்தேசுவரி.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.43 திருமுதுகுன்றம்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    435    நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
    துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
    பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
    முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.     7.43.1
    436    ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
    ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
    வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
    மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.     7.43.2
    437    தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர்
    பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
    கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
    மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.     7.43.3
    438    இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
    விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
    அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
    முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே.     7.43.4
    439    ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
    பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
    மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
    மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.     7.43.5
    440    இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
    குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
    மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
    முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.     7.43.6
    441    சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள்
    மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
    குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
    முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.     7.43.7
    442    அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ்
    சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
    மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
    முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.     7.43.8
    443    செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
    அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே
    பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
    முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.     7.43.9
    444    எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார்
    பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ
    எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
    முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.     7.43.10
    445    முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
    பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
    தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
    எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.     7.43.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.44 முடிப்பதுகங்கை
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    446     முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
    நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
    கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
    பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.     7.44.1
    447    தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
    நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
    கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
    ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.     7.44.2
    448    தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
    ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
    சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
    வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.     7.44.3
    449    நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
    எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
    சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
    பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.     7.44.4
    450    வேயன தோளி மலைம களைவி ரும்பிய
    மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
    ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
    பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.     7.44.5
    451    இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
    துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
    மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
    பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.    7.44.6
    452    தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
    ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
    ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
    பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.     7.44.7
    453    அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
    வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
    புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
    எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.    7.44.8
    454    கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
    எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
    பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
    கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.     7.44.9
    455    காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
    தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய
    ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான்
    ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.     7.44.10

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.45 திருஆமாத்தூர்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    456     காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
    ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்
    பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
    மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.     7.45.1
    457    பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
    தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
    ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்
    கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.     7.45.2
    458    காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
    பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை
    ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்
    ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.     7.45.3
    459    ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
    சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
    சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
    ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.     7.45.4
    460    வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
    சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை
    நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
    அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே.    7.45.5
    461    காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
    நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
    ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்
    பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.     7.45.6
    462    எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
    கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்
    பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
    அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.     7.45.7
    463    பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா
    மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய
    அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
    என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.     7.45.8
    464    தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்
    நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
    மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
    ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.     7.45.9
    465    உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள்
    பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
    அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்
    பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.     7.45.10
    466    ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
    மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
    மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்
    பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.     7.45.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.46 திருநாகைக்காரோணம்
    பண் - கொல்லிக்கௌவாணம்
    திருச்சிற்றம்பலம்

    467     பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
        பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
        செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
        செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
        முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
        அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
        கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.1
    468    வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
        விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
        பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
        பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
        சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
        திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
        காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.2
    469    பூண்பதோர் இளவாமை பொருவிடையொன் றேறிப்
        பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
        பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
        பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
        வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
        வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
        காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.3
    470    விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
        வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
        துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
        சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
        வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
        மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
        கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.4
    471    மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
        வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
        தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
        சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
        பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
        பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
        கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.5
    472    இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
        இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
        பலவகம்புக் குழிதர்வீர் பட்டோ டு சாந்தம்
        பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
        உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
        உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
        கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.6
    473    தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
        தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
        தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
        திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
        நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
        நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
        காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.7
    474    மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
        வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
        ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
        அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
        தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்
        தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
        காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.8
    475    மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
        மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
        எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
        எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
        திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
        திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
        கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.9
    476    மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
        மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
        கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
        கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
        பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
        பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
        கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.     7.46.10
    477    பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
        பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
        உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
        ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
        கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
        கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
        றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
        அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.    7.46.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.47 ஊர்த்தொகை
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    478     காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
    கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
    பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
    மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.     7.47.1
    479    கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
    மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
    சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
    கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.    7.47.2
    480    நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.     7.47.3
    481    ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
    காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
    பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
    பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.     7.47.4
    482    மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே
    அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
    கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
    பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.     7.47.5
    483    தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
    வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
    நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
    பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.     7.47.6
    484    தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
    வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
    ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
    ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.     7.47.7
    485    துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா
    பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
    திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
    அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே.     7.47.8
    486    புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
    பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே
    வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
    கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே.     7.47.9
    487    கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
    மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி
    தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை
    செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.     7.47.10

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.48 திருப்பாண்டிக்கொடுமுடி
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    488    மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
        பாத மேமனம் பாவித்தேன்
        பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
        வாத தன்மைவந் தெய்தினேன்
        கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
        யூரிற் பாண்டிக் கொடுமுடி
        நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.1
    489    இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
        திட்ட நாள்மறந் திட்டநாள்
        கெட்ட நாளிவை என்ற லாற்கரு
        தேன்கி ளர்புனற் காவிரி
        வட்ட வாசிகை கொண்ட டிதொழு
        தேத்து பாண்டிக் கொடுமுடி
        நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.2
    490    ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
        போகும் நாளுயர் பாடைமேல்
        காவு நாளிவை என்ற லாற்கரு
        தேன்கி ளர்புனற் காவிரிப்
        பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
        சோதி பாண்டிக் கொடுமுடி
        நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.3
    491    எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
        தம்பி ரானென்பொன் மாமணி
        கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
        காவி ரியதன் வாய்க்கரை
        நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
        யூரிற் பாண்டிக் கொடுமுடி
        வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.4
    492    அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
        யேனும் நான்மிக அஞ்சினேன்
        அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
        நல்கி னாய்க்கழி கின்றதென்
        பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
        தாடு பாண்டிக் கொடுமுடி
        நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.    7.48.5
    493    ஏடு வானிளந் திங்கள் சூடினை
        என்பின் கொல்புலித் தோலின்மேல்
        ஆடு பாம்பத ரைக்க சைத்த
        அழக னேயந்தண் காவிரிப்
        பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
        சோதி பாண்டிக் கொடுமுடி
        சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.    7.48.6
    494    விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
        தேன்வி னைகளும் விண்டனன்
        நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
        நின்ற காவிரிக் கோட்டிடைக்
        குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
        தாடு பாண்டிக் கொடுமுடி
        விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.    7.48.7
    495    செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
        தீயெ ழச்சிலை கோலினாய்
        வம்பு லாங்குழ லாளைப் பாகம
        மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
        கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
        லாடு பாண்டிக் கொடுமுடி
        நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.8
    496    சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
        தம்பிரா னென்பொன்மா மணியென்று
        பேரெ ணாயிர கோடி தேவர்
        பிதற்றி நின்று பிரிகிலார்
        நார ணன்பிர மன்றொ ழுங்கறை
        யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
        கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
        சொல்லும் நாநமச்சி வாயவே.     7.48.9
    497    கோணி யபிறை சூடியைக் கறை
        யூரிற் பாண்டிக் கொடுமுடி
        பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
        பித்த னைப்பிறப் பில்லியைப்
        பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
        தார னைப்படப் பாம்பரை
        நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
        சொல்லு வார்க்கில்லை துன்பமே.    7.48.10

    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொடுமுடிநாதர், தேவியார் - பண்மொழியாளம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.49 திருமுருகன்பூண்டி
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    498    கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
        விரவ லாமை சொல்லித்
        திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
        டாற லைக்கு மிடம்
        முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.1
    499    வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
        விரவ லாமை சொல்லிக்
        கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
        கூறை கொள்ளு மிடம்
        முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.2
    500    பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
        பாவ மொன் றறியார்
        *உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
        கூறை கொள்ளு மிடம்
        முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

        *உயிர் - உசிர் என மருவியது.     7.49.3
    501    பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
        கட்டி வெட்டன ராய்ச்
        சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
        கூறை கொள்ளு மிடம்
        மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.4
    502    தயங்கு தோலை உடுத்த சங்கரா
        சாம வேத மோதி
        மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
        மார்க்க மொன்றறி யீர்
        முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.5
    503    விட்டி சைப்பன கொக்க ரைகொடு
        கொட்டி தத்த ளகங்
        கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
        குடமுழா நீர் மகிழ்வீர்
        மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.6
    504    வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
        கோவணந் தற்ற யலே
        ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
        முத்தி நீர் மகிழ்வீர்
        மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        ஏது காரணம் எது காவல்கொண்
        டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.7
    505    படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
        தோள்வ ரிநெடுங் கண்
        மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
        பாகம் வைத்து கந்தீர்
        முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        இடவ மேறியும் போவ தாகில்நீர்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.8
    506    சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
        பற்ற லைக லனா
        வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
        பாகம் வைத்து கந்தீர்
        மோந்தை யோடு முழக்கறா முருகன்
        பூண்டி மாநகர் வாய்
        ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
        எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.     7.49.9
    507    முந்தி வானவர் தாந்தொழு முருகன்
        பூண்டி மாநகர் வாய்ப்
        பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
        பாகம் வைத்த வனைச்
        சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
        உரைத்தன பத்துங் கொண்
        டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
        ஒன்றுந் தாமி லரே.     7.49.10

    கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த
    திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு
    திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின்
    கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை
    அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி
    சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.


    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆவுடைநாயகர்,
    தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்
    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    7.50 திருப்புனவாயில்
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    508    சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
    மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
    பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
    பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.     7.50.1
    509    கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
    மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
    பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.     7.50.2
    510    தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
    நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
    அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
    புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.     7.50.3
    511    வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
    பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
    கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
    புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.     7.50.4
    512    நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
    நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
    வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
    புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.     7.50.5
    513    மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
    பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
    புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.     7.50.6
    514    ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
    பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
    தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
    பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.     7.50.7
    515    கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
    தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
    கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
    புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.     7.50.8
    516    எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
    மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
    கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
    புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.     7.50.9
    517    பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
    அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
    மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
    குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.     7.50.10

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.