|
||||||||||||||||||
சியாமளா கல்மனசுக்காரிதான் |
||||||||||||||||||
சியாமளா கல்மனசுக்காரிதான் நாளை மறு நாள் “தீபாவளி” சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து நிலையத்தில் கட்டுகடங்காத கூட்டம், ஒவ்வொரு ஊருக்கு செல்லும் பேருந்துகள் முன்னால் பெரும் கூட்டம் நின்றபடி வந்து நிற்கும் பேருந்துகளில் அடித்து பிடித்து ஏறியபடி இருந்தனர். வண்டி வந்து நிற்கவும் கிளம்பவும் அடுத்த வண்டி வந்து நிற்கவுமாக அந்த இடமே கூட்டமாக இருந்தது. சியாமளா சிந்தனை வசப்பட்டபடி நின்றிருந்தாள். மதுரைக்கு செல்ல வேண்டும், கூட்டமோ கட்டு கடங்காமல் இருந்தது. முதலில் அவள் மதுரைக்கு செல்ல விருப்பமில்லாமல்தான் இருந்தாள். மூன்று நாள்தான் விடுமுறை, இவள் எழுதி முடிக்கவேண்டியது ஏராளமாய் இருந்தது. வீட்டிற்கு போன் செய்தும் பேசினாள். அப்பா உன் விருப்பம் போல் செய் சென்று சொல்லி விட்டார். அவருக்கு மனதுக்குள் பெண் தீபாவளிக்கு வரவில்லையே என்னும் ஏக்கம் இருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை. அம்மாதான் திட்டினாள், ஏண்டி என்னதான் எழுதறயோ, ஒரு எட்டி வந்து பார்த்துட்டு போலாமில்லை. அவளுக்கு புரிந்தது, அம்மாவின் ஏக்கம். போக வர செலவுகள் ஆயிரத்துக்கு மேல் ஆகும், இழுத்து பிடித்து செலவு செய்தாலும். விடுமுறையோ ஒரே நாள்தான், மற்ற இரண்டு நாட்கள் போக வர சரியாக இருக்கும். பேசாமல் புது வருட விடுமுறை ஒரு வாரம் கிறிஸ்துமசோடு கிடைக்கும், அதை விட்டால், பொங்கல் ஐந்து நாள் கிடைக்கும், இதில் ஏதாவது ஒன்றில் வீட்டுக்கு போய் வந்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டாள். ஆனால் இப்படி திடீரென்று ஊருக்கு போக வேண்டிய சூழல் வந்து விட்டது. சியாமளாவின் அருகிலேயே ஒரு பேருந்து வந்து நின்றது, அனிச்சையாய் ஓடி சென்று சட்டென ஏறியவள், காலியாக கிடந்த முவர் உட்காரும் இருக்கை ஒன்றில் உட்கார போனாள். அதற்குள் அவள் பின்னால் ஓடி வந்தவர்கள் அவளை பிடித்து தள்ளி ஒரு இடத்தில் உட்கார விடாமல் அலைக்கழித்தார்கள். கோபமாய் திரும்பியவள் யார் தன்னை இழுத்தது என்று பார்த்தாள் இவள் வயதை ஒத்த இரண்டு கல்லூரி மாணவிகளாய் இருக்க வேண்டும், ஒரு “சாரி” கூட சொல்லாமல் அவளை தள்ளி விட்டு மூன்று பேர் உட்காரும் இருக்கையில் பரவி கொண்டார்கள். சியாமளா சட்டென அவர்களில் ஒருத்தியை அப்படியே தள்ளி சட்டென உட்கார்ந்து கொண்டாள். கீழே விழப்போனவள் எழுந்தபடியே சியாமளாவை முறைத்தாள். உனக்கு அறிவிருக்கா? நான் கீழே விழுந்திருந்தா? சியாமளாவும் அவளை முறைத்தபடி அதை முதல்ல நீ தெரிஞ்சுக்கணும், நான் ஒரமாதான் நின்னேன், என்னை பிடிச்சு தள்ளிட்டு நீங்க சீட்டுல உட்கார பாத்தீங்கல்ல.
இவர்களின் சச்சரவுக்குள் இடையில் புகுந்து ஜன்னல் ஓரமாக இருக்கும் இருக்கயை பிடித்து உட்கார்ந்திருந்தவள் சியாமளாவை நீ அந்த ஓரமா உட்காரு, அவ என் பக்கத்துல உட்காருவா. சியாமளாவிற்கு அவள் சொன்ன தோரணை வெறுப்பாக இருந்தது. முதல்ல எப்படி ஒருத்தர்கிட்ட பேசறதுன்னு “மேனர்ஸ்” கத்துக்கோ, அந்த பொண்ணு உன் பிரண்டாயிருந்தாலும் எனக்கு பின்னாடிதான இரண்டு பேரும் வந்தீங்க, அதுவும் உட்கார போன என்னை பிடிச்சு இழுத்துட்டுதான நீயே உட்கார்ந்தே. சியாமளாவுடன் மல்லு கட்ட இருவரும் தயாராக எழுந்து நின்றிருந்தாலும் ஒவ்வொரு இருக்கையிலும் இதே போல் தகராறுகள் நடந்து கொண்டிருந்ததால் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. அதற்குள் பேருந்தில் பயணிகள் நிறைந்து ஓட்டுநர் வண்டியை வேகமாக அங்கிருந்து எடுக்க, வேறு வழியில்லாமல் ஒருத்தி கம்பி ஓரத்திலும், மற்றவள் ஜன்னல் ஓரத்திலும் உட்கார்ந்து கொண்டனர். நேரம் எவ்வளவு இருக்கும்? சியாமளா யோசித்தாள். தன் செல்போனை எடுத்து பார்க்கலாம் என்றால் காலுக்கு கீழாய் வைத்திருக்கும் பையை திறந்து எடுத்து பார்க்க வேண்டும், இப்பொழுது எடுத்தால் யாரையாவது இடித்தபடி எடுக்க வேண்டும், வேண்டாம் ஏற்கனவே நம் மீது கோபமாய் இருக்கிறார்கள், நினைத்தவள் , தான் கிளம்பும்போது மணி ஆறு இருக்கலாம், அப்படியானால் ஏழு அல்லது ஏழரை இருக்கும், அவளாகவே முடிவு செய்து கொண்டாள். ஜன்னல் ஒரம் உட்கார்ந்திருந்தவள், வேண்டுமென்றே தன் தோள் பையை மடி மீது வைத்து அதன் ஜிப்பை திறந்தாள். தாராளமாக தன் முழங்கையை சியாமளாவின் மார்பின் மீது இடித்தபடியே. சியாமளாவிற்கு கோபமாக வந்தது. வேண்டாம் இந்த சூழ்நிலையில் இவர்களுடன் சண்டையிடுவதில் லாபமில்லை. அப்படியே இருக்கையில் சாய்ந்து கொண்டு அப்பாவை நினைத்து பார்த்தாள். நாம நேத்தே போயிருந்திருக்கணும், போக வேண்டாமுன்னு அவங்க கிட்ட சொன்னதுனால பாவம் அவங்களுக்கு என்னைய பாக்க ஆசைப்பட்டும் என்னோட படிப்புக்காக ஒத்துகிட்டாங்க, எனக்குத்தான் நட்டம், அப்பாவையும் அம்மாவையும் நினைக்கையில் அவள் மனம் நெகிழ்ந்தது, பாவம் அப்பா ஒரு “அச்சகத்தில் வேலை, அதில் வரும் வருமானத்தில் எப்படியோ நம்மை இந்தளவுக்கு படிக்க வைத்து விட்டார். இன்னும் ஒரு வருடம் முடிந்தால் சென்னையிலேயே எங்காவது ஒரு வேலைக்கு சேர்ந்து விடலாம், இருவரையும் கூட கூட்டி வந்து இங்கேயே வைத்து கொண்டு நாம் வேலைக்கு போய்ட்டு வந்து கொண்டிருக்கலாம், இப்படி எத்தனையோ கற்பனைகள், நினைக்கும்போதே அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர். சியாமளாவை “கல்மனசுக்காரி” என்றே அம்மா சொல்லுவாள். அது எப்படிடீ இவ்வளவு கல்லாட்டம் இருக்கறியோன்னு தெரியலை, எதுக்கும் பயப்படறதில்லை, உங்கப்பாவுக்கு எதை கண்டாலும் பயம், எனக்கு அதை விட பயம், ஆனா நீ மட்டும் எங்களுக்கு வித்தியாசமா வந்து பொறந்திருக்கடி. சியாமளாவுக்கு அம்மா சொன்னது சரியோ என்று பல முறை தோன்றி யிருக்கிறது. மனதை நெகிழும் சம்பவங்கள் எதிரில் நடந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லாதவள் போல்தான் இருப்பாள். அம்மாவும், அப்பாவுடனும் ஏதாவது சினிமாவுக்கு போகும்போது, மிகுந்த சோகமான காட்சிகள் வந்து விட்டால் அம்மா “பூத் பூத்” என்று அழுவாள், இவளுக்கு சிரிப்பாக வரும், அம்மாவை பாரு என்று அப்பாவிடம் சொல்ல திரும்பினால், அப்பா தன் கண்களை துடைத்தபடி இருப்பார். திரைப்படம் பார்த்து விட்டு வரும்போது இருவரையும் கிண்டல் செய்து கொண்டே வருவாள். அம்மா அவளிடம் போடி உன்னைய மாதிரி கல்லாட்டம் என்னால இருக்க முடியாது என்பாள். திடீரென அவள் அருகில் “கெக்கெ பிக்கே” என்று சிரிப்பு, வலதும் இடதும் உட்கார்ந்திருந்த பெண்கள் இருவரும் ஏதோ பெரிய “ஜோக்கை” சொல்லி சிரித்தனர். அவர்களின் சத்தம் அமைதியான பேருந்தின் பயணத்தில் ஒரு இடைஞ்சலாகத்தான் தெரிந்தது சியாமளாவிற்கு. அவர்கள் இருவரையும் பார்த்தாள். இவளின் பார்வையை புரிந்து கொண்ட அவர்கள் வேண்டு மென்றே இவளுக்கு எரிச்சல் ஊட்ட மேலும் சிரித்தனர். சியாமளாவிற்கு அவர்கள் மேல் பரிதாபமாக வந்தது. அவள் தாராளமாக அவர்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து செல்ல ஒத்துகொண்டிருப்பாள், ஆனால் அவர்கள் அவளிடம் நடந்து கொண்ட முறை, அதனால் ஏற்பட்ட எரிச்சல், இதனாலயே இப்படி வம்படியாக இவர்கள் இருவருக்கும் இடையில் உட்கார்ந்து வருவது சிரமமாக இருந்தது. பேசாமல் விட்டு கொடுத்திருக்கலாம், இப்பொழுது விட்டு கொடுத்தால் பயந்து விட்டாள் என்று எண்ணுவார்கள். திடீரென இந்த பக்கமிருந்தவள், சாப்பிடலாமாடி? ஓ.. தன் பையை திறந்து பெரிய பார்சல் ஒன்றை வெளியில் எடுத்தாள்., அதை பிரித்தாள். ஏதோ ஒட்டலில் பரோட்டா பார்சல் செய்து கொண்டு வந்திருப்பார்கள் போல , மாறி மாறி பங்கிட்டு கொண்டனர். நடுவில் இவள் உட்கார்ந்திருப்பதை கண்டு கொள்ளாதவர்கள் போல அவள் மீது சிந்தியபடி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அந்த மசாலாவின் மணம் அக்கம் பக்கம் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை இவர்கள் பக்கம் பார்க்க செய்தது. சியாமளாவிற்கு மனதுக்குள் கோபம் வந்தாலும் அடக்கி கொண்டாள். அவர்கள் இவளுக்கு கோபமூட்ட வேண்டுமென்றே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் அவர்களுடன் சண்டைக்கு போனால் அவர்கள் வெற்றி பெற்றதாகிவிடும். அமைதியாக கண்டு கொள்ளாதவள் போல் கண்களை மூடியபடி தலையை இருக்கையின் மேலே சாய்த்து கொண்டாள். ஜன்னல் வழியாக ஒருத்தி அந்த சாப்பிட்ட பார்சலை வெளியே வீசினாள், கையில் இருந்த பிளாஸ்க் தண்ணீரில் ஜன்னல் வழியாக கையை எட்டி கழுவவும் செய்தாள். ஓடும் வண்டியில் இவள் கையை கழுவிய தண்ணீர் பின் புறமாய் உட்கார்ந்திருந்தவர்கள் மீது வந்து விழுந்து கண்களில் எரிச்சலை ஏற்படுத்த, பின் புறமிருந்து யாரோ சப்தமிடுவதும் சியாமளாவிற்கு கேட்டது. அதை விட இந்த புறம் உட்கார்ந்திருந்தவளும் வேண்டுமென்றே இவள் மீது படுத்தவாறே தான் சாப்பிட்ட உணவு பார்சலையும் வெளியே வீசி கையை கழுவினாள். சியாமளா கண்ணை மூடியபடி படுத்திருந்தாலும் அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் உணர்ந்தபடியேதான் இருந்தாள். அவர்கள் மனதுக்குள் தன் மீது இருந்த வன்மம் அவளுக்கு புரிந்துதான் இருந்தது. ஐந்தாறு மணி நேர பயணம், அதற்கு மட்டுமே அந்த இருக்கை உரிமை, அது பறி போனதற்கே என்ன ஒரு கோபம் இந்த பெண்களிடம்? தன்னை போல இருந்தால்..! சியாமளாவின் எண்ண ஓட்டத்தில் அவளுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடியபடியே தலையை சாய்த்து கிடந்தாள். ஆனால் அவளிடம் ஒன்றாய் உட்காருவதற்கு சண்டை போட்ட இருவரும் அப்படியே இவள் மடி மீதே சாய்ந்து எச்சிலை ஒழுக்கியபடி படுத்து கிடந்தனர். சியாமளாவிற்கு அவர்களை எழுப்ப மனமில்லாமல் அப்படியே இருக்கையில் கிடந்தாள். பேருந்து மதுரைக்கு வந்து சேர்ந்து கச கசவென்று கூட்டம் இறங்க முயற்சிக்கும் போதுதான் அந்த பெண்கள் இருவரும் விழித்தனர். தாங்கள் இருவரும் சியாமளாவின் மடியில் படுத்து கிடந்ததை எழும்போதுதான் தெரிந்து கொண்டவர்கள், அவள் முகத்தை பார்க்க சங்கடப்பட்டு வேக வேகமாக எழுந்து தங்கள் உடைகளை சரிப்படுத்தியபடி வெளியே வந்தனர். சியாமளா அவசரப்படாமல் அவர்கள் எழுந்து சற்று நகர்ந்த பின்னே தான் எழுந்தாள். தனது தோள்பையை காலின் கீழிருந்து எடுத்து தோள் மீது போட்டு கொண்டாள். நீண்ட நேரமாக உட்கார்ந்து வந்ததால் கால்கள் எழுந்து நிற்க தடுமாறியது. இரண்டு நிமிடம் தன்னை திடப்படுத்திய பின்னாலேயே பேருந்திலிருந்து இறங்கினாள். இன்னும் விடியல் நேரம் வரவில்லை, என்பதை குளிர் காட்டியது. செல்போனிலிருந்து எடுத்து மணியை பார்த்தவள் மூன்றை காட்டியதும், அடுத்து என்ன செய்யலாம்? யோசித்தபடியே முன்னால் நடக்க ஆரம்பித்தாள். சியாமளா..திடீர் குரல் கேட்கவும் திரும்பினாள், மாமா நின்று கொண்டிருந்தார். எப்படியும் இந்த “டைம்” ஆயிடும்னுதான் காத்திருக்கேன், அவர் குரலில் துக்கம் காட்டியது. அதன் தாக்கம் இவள் மனதையும் தாக்க வர இருந்த அழுகையை அடக்கியபடியே தன்னை திடப்படுத்தி கொண்டாள். காரில் சற்று தூரம் செல்லும்போதுதான் கவனித்தாள், அவள் அருகில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள் பயந்து பயந்து அந்த இருளில் விழித்தபடி என்ன செயவது என்பது போல் விழித்து நிற்பதை. மாமாவிடம் கொஞ்சம் காரை நிறுத்துங்க மாமா, அந்த பொண்ணுங்க என் கூட வந்தவங்க, நாம போற வழியில அவங்க இறங்கறதா இருந்தா இறக்கி விட்டுடலாம், சொன்னவள் கார் அவர்கள் அருகில் சென்று நிற்கவும் இறங்கியவள் அந்த பெண்களிடம் “ஹலோ உங்க வீடு எங்கிருக்கு? சொன்னீங்கன்னா இறக்கி விட்டுட்டு போயிடறோம். இருவரும் திகைத்தனர், தங்களுக்கு இடையில் உட்கார்ந்து வந்தவளல்லவா? அவளிடம் சொல்வதற்கு தயக்கம், இருந்தாலும் வீடு போனால் சரி என்பது போல , போகும் இடத்தை சொன்னார்கள். சரி ஏறுங்க, என்றவள் அவர்களை பின் புறமாக ஏற்றி கொண்டாள். அவர்கள் தன்னிடம் நடந்து கொண்டதற்கு ஒரு வெட்கம் தோன்றியதை அவர்கள் ஏறும்போது தயங்கி குழைந்து ஏறும்போது கவனித்தாள். கார் இவள் வீட்டு முன் நன்றது. மாமா நான் இறங்கிக்கறேன், அவங்களை இறக்கி விட்டுட்டு வந்திடுங்க, சொல்லி விட்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தாள். அந்த நேரத்தில் அவள் வீட்டின் முன் நிற்கும் கூட்டத்தை பார்த்த இவர்கள் இருவரும், கார் போகும் போது அவரிடம் கேட்டனர், என்ன சார் அவங்க வீட்டு முன்னாடி கூட்டம்? எங்க மச்சான், அதுதான் சியாமளா அப்பா மதியானம் ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டாரு, அவ எப்படியும் இந்த நேரத்துல பஸ்ஸுல வருவான்னுதான் வெயிட் பண்ணிகிட்டிருந்தேன். அதிர்ந்து போயினர் இருவரும், சே… அப்பாவை பறிகொடுத்து துக்கத்துடன் வந்த பெண்ணிடமா தாங்கள் இப்படி நடந்து கொண்டது, அதை விட அந்த துக்க நேரத்திலும், நாம் செய்ததை எல்லாம் மனதில் கொள்ளாமல் தங்களை ஏற்றிக்கொண்டதுமில்லாமல் இறக்கி விட்டு வர சொல்லி விட்டு இறந்து போன அப்பா உடலை பார்க்க போகிறாள்..! |
||||||||||||||||||
Shyamala very stuff girl | ||||||||||||||||||
by Dhamotharan.S on 11 Nov 2023 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|