LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

சித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -03 : சித்தமருத்துவ வரலாற்றுக் குறிப்பு

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy)

உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

II. இடை கால (கடந்த நூற்றாண்டில்) சித்த மருத்துவம்:

ஆதி காலத்தில் வாய் மொழியாகவே சித்த மருத்துவ கல்வி இருந்து வந்துள்ளது. பிற்கால கட்டத்தில் எழுத்துக்களால் எழுதும் பழக்கம் வந்தபின்னர், சித்த மருத்துவ நூல்கள் பனை ஓலை சுவடிகளில் எழுதப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த நூல்களை கொண்டு பாடம் படிப்பிக்கப் பட்டது. சீடர்கள் சில நேரம், தங்களுக்கென்று பிரதி வேண்டுமெனில், புதிய ஓலை சுவடிகளில் எழுதி எடுத்து கொண்டனர். முன்நூறு வருடங்கள் வரை ஒரு ஓலை சுவடி சிதையாமல் இருக்குமாம், அதன் பின் மரு பதிப்பு (reprint) செய்ய வேண்டிய கட்டாயம். அவ்வாறு மறுபதிப்பு செய்யும் போதோ அல்லது புதிய பிரதிகளை எழுதும் போதோ, அந்த கால கட்டத்தில், எந்த வழக்கு சொற்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தனவோ, அந்த வார்த்தைகளை பயன்படுத்தியே சுவடிகள் எழுதப்பட்டு வந்துள்ளன. பிற்காலத்தில் எழுதப்பட்ட ஓலை சுவடிகள் தற்போதைய தமிழ் வார்த்தைகளையும், சில நேரம் பிற மொழி கலந்தும் இருப்பதற்கு இதுவே காரணமாகும். பல சித்தர்களின் மூல நூல்களை அல்லது  வாய் வழி நூல்களை பிற்காலத்திலேயே, அவர்கள் வழி வந்த சீடர்கள் ஓலை சுவடிகளில் எழுதி பாதுகாத்து வந்துள்ளனர். ஆனாலும், அந்த நூலின் முதல் பிரதி (மூலம்) பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே எழுதப்படிருக்கும், அல்லது வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை அழிவுகள், திட்டமிடப்பட்ட அழிப்புகள், மறு பதிப்பு செய்யப் படாமல் போதல், வைத்தியர் இறக்கும் போது அவர் சார்ந்த சுவடிகளை அவருடனேயே புதைத்தல் அல்லது எரித்தல், போகி பண்டிகைகளில் பழையன கழியும் போது கழித்தல், சிதல் (கரையான்) அரித்து அழிந்து போதல், போன்றவை போக மீதம் தற்போது ஏறக்குறைய 5,000 க்கும் மேற்பட்ட மருத்துவ ஓலைசுவடிகள் தற்போது கிடைத்துள்ளன. அவைகளில் சில நூறு மட்டுமே இன்று அச்சகத்தில் பதிப்பிக்கப் பட்டு, காகிதத்தில், நூல்களாக வெளியிட பட்டுள்ளன. எனவே, சித்த மருத்துவத்தின் எல்லா கூறுகளும், நுட்பங்களும், வாய்மொழியாக எல்லாருக்கும் கடத்தப் படவில்லை; அவ்வாறு கடத்தப்பட்டவைகள் எல்லாமே ஓலைச் சுவடிகளாக எழுதப்படவில்லை; அவ்வாறு எழுதப்பட்ட எல்லாமே புத்தகமாக அச்சேறவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. எனவே இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள சித்த மருத்துவ நூல்களை வைத்து சித்த மருத்துவ அறிவியலின் ஆழத்தை கணிக்க முடியாது. அவ்வாறு ஏட்டில் எழுதப் படாமல், பரம்பரையாக நாம் கைமுறையாக, வாய்மொழியாக பயன்படுத்தி வரும் மருத்துவ குறிப்புகளை Folk Medicine என்று அழைக்கிறோம். இன்னும் எவ்வளவோ சித்த மருத்துவ குறிப்புகள் documentation செய்யப் படாமலே இருக்கிறது. இன்னமும் வெளியே தெரியாமல், பல மருத்துவ ஓலை சுவடிகள் பல மடங்களிலும், நூலகங்களிலும், அருங்காட்சியங்களிலும், கரையான் அரித்தும் வீணாகி கொண்டு இருக்கின்றன. அவை அத்தனையும், வெளிக்கொண்டு வர அரசு ஆவன செய்ய வேண்டும்.


பல சித்த வைத்திய பெருமக்கள் இந்த வைத்தியத்தை, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல, சொந்த மகன், மகள் அல்லது உறவினர்களில் தகுதியானவர்களை தெரிந்தெடுத்து தன்னிடத்தில் வைத்தியத்தை படிக்க செய்தனர். அப்படி சிறந்த மாணாக்கர் இல்லையெனில், அந்த ஊரில், அல்லது பக்கத்து ஊரில் இருந்தாவது மாணாக்கர்களை கொண்டிருந்தனர். சில நேரம் மாணாக்கர்களோ அல்லது பெற்றோரோ, முன் பின் பழகியிராத பெரும்புகழ் பெற்ற வைத்தியரிடம் வந்து சித்த வைத்தியம் படிக்க வேண்டுமென்று கேட்டால், அவர்களை சீடர்களாக சாதி மதம் பார்க்காமல் சேர்த்து கொண்டுள்ளனர். எத்தனை மாணவர்கள் இருந்தாலும், அவர்களில் தன் மகனென்றும் பாராமல்,  யார் ஒருவனுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிராதோ, யார் இந்த வைத்தியத்தை பணத்துக்காக பயன் படுத்தாமல் சமுதாய நலனுக்காக பயன் படுத்துபவரோ, அவருக்கு மட்டும் சில நுண்ணிய வைத்திய குறிப்புகளை ரகசியமாக கத்து கொடுத்திருந்தனர். எனவே எல்லா சித்த வைத்தியர்களும் முழுமை அடைந்தவர் அல்லர். பல நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மட்டுமே சித்த வைத்தியர் என்று பெயர் எடுத்தவர்கள்தான் அதிகம்.  எனது கொள்ளு தாத்தா கூட ஒரு பிள்ளை வைத்தியர் (pediatric siddha specialty). இன்றும் பிள்ளை வைத்தியர், வைசூரி வைத்தியர் (Viral skin lesions expert), காமாலை (jaundice) வைத்தியர், பாம்பு கடி வைத்தியர், விஷ கடி வைத்தியர், வர்ம வைத்தியர், முறிவு வைத்தியர், என சித்த மருத்துவம் பல துறைகளில் கால் பதித்து புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.  இப்போது சிறப்பு சித்த வைத்தியர்கள் உருவாகும் கால கட்டமாக இருக்கிறது.  பல நேரங்களில் ஒரு மாணவர் பல வைத்தியர்களிடம் பயற்சி பெற்றிருந்தனர். தன் சொந்த மகனாக இருந்தாலும் அல்லது மாணாக்கனாக இருந்தாலும், திறமை வாய்ந்த சீடரை வேறு பெயர் பெற்ற வைத்தியர்களிடம் பயிற்சி பெறுவதற்காக அனுப்புவதும், recommendation செய்வதும் இருந்து வந்துள்ளது. ஒரே நேரத்தில், ஒரு வைத்திய ஆசிரியரிடம் சராசரியாக ஐந்து முதல் இருபது மாணாக்கர் வரை பயிலுவதும் உண்டு. ஒவ்வொரு சித்த வைத்திய ஆசிரியருக்கும், தன் வாழ்நாளில் தன்னை விடவும் திறமை சாலியான ஒரே ஒரு வைத்திய வாரிசை (சீடரை) யாவது உருவாக்கி, தன் பெயரை நிலை நிறுத்த வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கும். அவ்வாறு செய்வது அவரது ஆசிரியருக்கு அவர் செய்யும் நன்றிகடன் என்றும், அப்போதுதான் தனது வைத்திய ஆசிரியர் பணி நிறைவுறும் என்றும், தன் ஆன்மா சாந்தி அடையும் என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த வைத்திய வாரிசுக்கு தேவையான தகுதி திறமை ஒன்றே, தவிர சொந்த மகன் என்பதோ அல்லது, தன் சாதிகாரன் என்பதோ போன்ற வேறு எந்த காரணமும் இருந்து இருக்க வில்லை. வர்ம வைத்தியத்தை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்றும் அழைப்பதுண்டு.


ஒருகாலகட்டத்தில், பல வைத்தியர்கள்  ஒன்று சேர்ந்து, வாராவாரம் அல்லது மாதாமாதம் ஒரு நாள் ஒரு இடத்தில் தனது மாணாக்கர்களுடன் கூடி, வைத்திய  நுணுக்கங்களை பற்றி விவாதிப்பது ஆரம்பிக்கிறது. இவ்வாறு சித்த வைத்தியர்கள் சங்கம், தமிழ்நாடு மட்டுமல்லாமல், இன்றைய கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும், இலங்கையில் செயல்பட்டு இருந்து இருக்கின்றன. அங்கு ஒரு கூட்டு முயற்சியாக, ஓலை சுவடிகளை சேகரித்து வைத்தல், பொது பாடங்கள் (Common syllabus for Siddha practitioner) தயாரித்தல், அங்கீகாரம் பெற்ற சித்த வைத்திய பயிற்சிகள், மருந்து செய் முறைகள் மற்றும் படிப்புகள் நடத்துதல், சித்த மருத்துவ புத்தகங்கள் வெளியிடுதல், மாத இதழ்கள் வெளியிடுதல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல் பாடுகள் இருந்தும் வந்தன. இந்த நேரத்தில், சில பதிப்பகங்கள் சித்த வைத்திய நூல்களை அச்சிட்டு வெளியிட துவங்குகின்றன. அவற்றில் முக்கியமாக மதுரை சித்த வைத்திய சங்கம் மற்றும் அகில திருவான்கூர் சித்த வைத்தியர் சங்கம் இன்றளவும் இருக்கிறது. 1910 ல், S.S. Anandan பண்டிதரால் ஆரம்பிக்கப் பட்ட, மதுரை சித்த வைத்தியர் சங்கம் பின்னாளில் ஆறு மாத Certificate of Siddha Marutthuva Gurugulam போன்ற சித்த  மருத்துவ பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்திருக்கிறார்கள்.


1937 ல், குமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறை என்ற ஊரில் நித்தியானந்தா சாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட அகில திருவான்கூர் சித்த வைத்தியர் சங்கம் அக்கால கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கேரள அரசின்) கீழ் பதிவு செய்யப்பட்டு, இரண்டு வருட Certificate of Siddha Practitioner படிப்பையும் பின்னாளில் நான்காண்டு Bachelor of Siddha Medicine (BSM)  படிப்பையும் நடத்தி வந்துள்ளனர்.  கேரளாவை சேர்ந்த பல வைத்தியர்கள் இங்கு வந்து படித்து கேரளாவில் சென்று சித்த வைத்தியத்தை பயிற்சி செய்தும், மலையாளத்தில் பல வைத்திய நூல்களை எழுதியும் வந்துள்ளனர். இந்த சங்கம் ஏறக்குறைய நான்காயிரம் சித்த மருத்துவ ஓலைசுவடிகளை சேகரித்து (Palm manuscript library) வைத்திருந்தாலும், பல பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், சில நூலகளை மட்டுமே (தமிழ் மற்றும் மலையாளம்) அச்சேற்றம் செய்ய முடிந்தது.  நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு துறை ஓலைசுவடிகளை புத்தகமாக அச்செற்றம் செய்வதும், மின் நூலாக மாற்றுவதும். குமரி மாவட்டம் 1983 க்கு பிறகு தமிழ் நாட்டுடன் இணைந்த பிறகு, கேரள அரசு, இந்த கல்லூரியின் படிப்பின் அங்கீகாரத்தை நிறுத்திவிட்டது. இப்படி கேரளத்துக்குள் வேர்விட்ட சித்த வைத்தியம், இன்று கேரளா ஆயுர்வேதம் என்று உலகால் அறியப்படுகிறது. அந்த சங்கம் இன்று பல தடைகளைக் கடந்து சித்த மருத்துவ கல்லூரியை (BSMS degree) நடத்தி வருவதற்காக நாம் தலை வணங்க வேண்டும்.  இதை போன்ற பல சங்கங்கள், பதிப்பகங்கள், தலைசிறந்த வைத்தியர்கள், சித்த வைத்திய ஓலைசுவடிகள்  மற்றும் புத்தக வெளியீடுகள் பற்றி பின்னோரு நாளில் எழுதுகிறேன்.


III. தற்கால சித்த மருத்துவம்:

1918 ல், வெள்ளைகார அரசு, Madras Presidency யில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளும் அவற்றின் அறிவியல் முகமும் பற்றி ஆராய Dr. Rao Sahib MC Koman என்பவரை நியமிக்கிறது. அந்த அறிக்கையும் தன்மைக்கு ஏற்ப, பாரம்பரிய மருத்துவ முறைகளை அரசு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கும். ஆனால், அவரின் அறிக்கையின் படி, பாரம்பரிய மருத்துவத்தில் அறிவியல் அடிப்படை தன்மை இல்லை. இன்று 2018, ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது; இன்று ஒரு கமிட்டி அமைத்தாலும், இதே பதில்தான் வரும் அளவுக்கு நாம் பின்னோக்கியே செல்கிறோம். சில வைத்தியர் சங்கங்கள் விடுத்த கடும் கண்டனத்தை தொடர்ந்து, மீண்டும் 1921 மறுபடியும்   Muhammad Usman Sahib Bahadur மற்றும் G.Srinivasamurti தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முக்கிய நோக்கம், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது மற்றும் வளர்த்தெடுத்தல் தொடர்பானது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ந்து பின்னர் 1923 ல், அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில், மொத்தம் 3,000 ஆங்கில மருத்துவர்களும் 21,000 பாரம்பரிய (ayurvedha, Siddha, Unani) வைத்தியர்களும் இருப்பதாகவும், School of Indian System of Medicine ஆரம்பித்து, அதில் மூன்று பாரம்பரிய மருத்தவ முறைகளையும் படிப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடபட்டு இருந்தது. உடனடியாக 1924 ல், School of Indian System of Medicine க்கான ஆணையை பிறப்பித்து, 1925 January 6 ல் சென்னையில் கீழ்ப்பாக்கில் அக்கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது. நான்காண்டு பட்ட படிப்பு (Licentiates of Indian Medicine - LIM) ஆயுர்வதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகளுக்கு ஆரம்பிக்க பட்டது. சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவம் ஒரே வாத பித்த கப அடிப்படையில் ஆனது என்றும், போதிய நூல்கள் அச்சில் வெளிவரவில்லை என்றும், போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும் பல காரணங்களை சொல்லி சித்த மருத்துவ பட்டப் படிப்பை நிறுத்தும் முயற்சியை கைவிட முயற்சிக்கப்பட்டது. 1947 ல், இந்த School of Indian System of Medicine, College of Indian Medicine என்று பெயர் மாற்றப்பட்டது, 1955 ல், College of Integrated Medicine என்று பெயர் மாற்றப்பட்டு, 40% ஆங்கில மருத்துவ முறைகளையும் புகுத்தி, Graduate of College of Indigenous Medicine (GCIM) என்ற பட்டபடிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.  1960 க்கு பிறகு, அந்த பாரம்பரிய மருத்துவ கல்லூரி நிறுத்தப்பட்டு, இன்றைய கீழ்பாக் மருத்துவக் கல்லூரியாக MBBS படிப்புக்காக மாற்றப்பட்டது. மீண்டும், மதுரை சித்த வைத்தியர் சங்கத்தின் செயல்தலைவர் முத்துகருப்ப பிள்ளை யின் தொடர் முயற்சியால், மெட்ராஸ் பல்கலைகழகத்தின் கீழ் 1964 ல், பாளையம்கோட்டையில் College of Siddha, Ayurveda and Unani, Bachelor of Indian Medicine (BIM), என்ற ஐந்து ஆண்டு பட்ட படிப்பை ஆரம்பித்ததில் முதலில் 30 மாணவர்கள் சித்தாவுக்கு சேர்ந்தனர். முதல் ஆண்டு ஆயுர்வேதாவுக்கு 20 மாணவர்களும், யுனானிக்கு 15 மாணவர்களும் சேர்ந்திருந்தாலும், அடுத்தடுத்த வருடங்களில், ஆயுர்வேதம் மற்றும் யுனானி படிக்க அதிக ஆர்வம் காட்டாததால், அரசு சித்தாவுக்கான 30 இடங்களை 40 ஆக உயர்த்தியது.

அதே நேரத்தில், கல்லூரி சென்று சித்த மருத்துவ பட்ட படிப்பு படிக்காமல், பாரம்பரையாக  சித்த வைத்தியம் செய்வோருக்காக Registered Indian Medicine Practitioners (RIMP) என்ற அங்கீகாரமும் இருந்தது; அது மட்டுமல்ல, பல தலைசிறந்த RIMP சித்த வைத்தியர்களும் கல்லூரி விரிவுரையாளர்களாக நியமிக்கப் பட்டிருந்தனர்.  அது மட்டுமல்ல, RIMP வைத்தியரகளின் பிள்ளைகளுக்கு தனி இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கல்லூரியில் படிக்க முன்னுரிமையும் வழங்கப்பட்டது. பின்னர், 1972 ல் சித்த மருத்துவத்தில் MD (Siddha) பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

1977 வாக்கில், நவீன மருத்துவ அடிப்படை அறிவியல் கூறுகளையும்  உள்ளடக்கி ஐந்தரை ஆண்டு Bachelor of Siddha Medicine and Surgery (BSMS) என்ற ஆரம்பித்த பட்டபடிப்பு இன்றளவும் உள்ளது. 1982 ல் பாளையங்கோட்டையில் ஆரம்பித்த Government Siddha Medical College இன்றும் இயங்குகிறது. இன்றளவும் பல சித்த மருத்துவ ஜாம்பவான்களை இந்த தாய் கல்லூரி உருவாக்கி இருக்கிறது. நானும் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். சித்த மருத்துவத்துக்கு என்று இரண்டாவது Government Siddha Medical College 1985 ல் பழனியில் ஆரம்பிக்கப் பட்டு, பின்னர் அது தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை அரும்பாக்கத்தில்  இட மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை சித்த மருத்துவத்துக்கு பெருமை சேர்த்த பலரை உருவாக்கி வருகிறது.  தமிழக அரசு இந்த இரண்டு சித்த மருத்துவ கல்லூரிகளை ஆரம்பித்த பிறகு, புதிதாக வேறு கல்லூரிகள் ஆரம்பிக்க முயற்சி எடுக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என்ற விகிதத்தில் கண்டிப்பாக அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


2005 ம் ஆண்டு, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருந்த சமயம், சென்னை தாம்பரத்தில், National Institute of Siddha என்ற மத்திய அரசின் சித்த மருத்துவ நிறுவனத்தை திறந்து வைத்தார். அங்கு MD (siddha) மற்றும்  PhD படிப்புகள் உள்ளன. எல்லா நோய்களுக்கும் தரமான சித்த மருத்துவ சிகிட்சை கிடைக்கும் நம்பிக்கையான இடமாக திகழ்கிறது, பல வெளி மாநிலங்களிலும் இருந்து நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.


தற்போது மாநில அரசின் கல்லூரிகள் இரண்டும் (பாளையங்கோட்டை, சென்னை), மத்திய அரசின் கல்லூரி (சென்னை) ஒன்றுமாக முன்று அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மேலும் 7 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்தும் The Tamil Nadu Dr.MGR Medial University யின் கட்டுப்பாடில் உள்ளன. தமிழ் மொழிக்கு (BA, MA) அடுத்த படியாக, தமிழின் அறிவியலாம் சித்த மருத்துவத்துக்கு பட்ட படிப்புகள் (BSMS, MD Siddha) பல்கலைகழகங்களால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படுவது அரசின் அங்கீகாரம் என்ற பின்புலம் மட்டுமல்ல,  நமக்கெல்லாம் இது ஒரு அடையாளமும் தானே.

கேரளாவில் சித்த மருத்துவ கல்லூரி:  

கேரளாவின் முதல் சித்த மருத்துவ கல்லூரியானது 2002 ஆம் ஆண்டு Kerala University of Health Sciences இன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட Santhigiri Siddha Medical College ஆகும். இது திருவனந்தபுரத்தில் உள்ள ஷாந்திகிரி ஆன்மீக ஆசிரமம் நிறுவனர் நவஜோதிஸ்ரீ கருணாகர குரு (1927 - 1999) அவர்களால் உலகின் மூத்த மருத்துவம் என்று தனது யோக சக்தியால் உணரப்பட்டு, அதை உலகறிய செய்யும் உன்னத நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டது. நவஜோதிஸ்ரீ கருணாகர குரு அவர்கள் தமிழகத்தில் உள்ள வள்ளலாருக்கு இணையாக கேரளத்தில் மதிக்கப்படுபவர்; அவரின் ஆன்மீக சீர்திருத்தங்களால் அவரை கேரளத்து வள்ளலார் என்றே சொல்ல வேண்டும். ஆங்கில வழியில் கல்வி கற்றுக்கொடுக்கும் BSMS கல்லூரி என்பதால், இங்கு தமிழே தெரியாத உலகின் பல நாடுகளில் இருந்தும் (ஜப்பான், சுவிட்சர்லாந்து) மாணவர்கள் படித்து செயல்கிறார்கள். இந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் மாணவர்கள், மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை கேரளம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பரப்புவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  சதற்போதைய சாந்திகிரி ஆசிரம குருவும் வேறு மாநிலங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகளை நிறுவ பெறும் முயற்சி எடுத்து வருகிறார்கள். சித்த மருத்துவ ஆர்வலர்களின் உதவி கிடைக்குமானால் இந்த மகத்தான பணி விரைவில் சாத்தியாகும். சித்த மருத்துவ ஆர்வலர்கள் கண்டிப்பாக ஒருதடவையாவது கால்பதித்து தலை வணங்க வேண்டிய ஆசிரமம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்த Shanthigiri Ashram (படம் பார்க்கவும்).  தமிழகத்திலும் பல பணம் படைத்த ஆன்மீக தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் சித்த மருத்துவம் வளர்க்கும் எண்ணம் ஒருநாள் வர வேண்டும் என்று சித்தர்களை வேண்டுவோம்.


இலங்கையில் இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்:

இலங்கையில் இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. முதல் கல்லூரி 1929 ல்  Diploma in Indigenous Medicine and Surgery (DIMS) என்ற படிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது யாழ்பாணம் பல்கலை கழகத்தில் (University of Jaffna-Northern Province) BSMS degree தரப்படுகிறது. இரண்டாவது, திரிகோணமலையில் (Eastern University – Eastern Province), 2007 ல் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கில வழியில் படிப்பு இருப்பதால், தமிழர்கள் மட்டுமலாது சிங்களர்களும் இங்கு BSMS படிக்கிறார்கள். இலங்கையில்  BSMS முடித்த மாணவர்கள், அங்கு MD (Siddha) படிக்க கல்லூரி இல்லாதால், தமிழகத்துக்கு ஆண்டு தோறும் வந்து படித்து செல்கின்றனர். யாழ்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட போது எண்ணற்ற சித்த மருத்துவ ஓலைசுவடிகளும் எரிந்து போனதாக அந்த நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். இரு நாடுகளுக்கும் நட்பு ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இந்திய அரசு அவர்களுக்கு கடவு சீட்டு (Visa) மற்றும் கல்லூரியில் சேர்க்கைக்கான நடவடுக்கைகளை எடுக்கிறது.


உள்நாட்டு போர் மற்றும் பல அரசியல் இன்னல்களுக்கும் மத்தியில் அங்குள்ள தமிழர்கள், இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகளை நிறுவ முடிகிறதென்றால், நம் தமிழ் நாட்டில், நாம் எத்தனை கல்லூரிகளை இந்நேரம் திறந்திருக்க  வேண்டும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்க்கிறேன்.  சித்த மருத்துவம் நம்  அறிவியல் அடையாளமாக அங்கு பார்க்கப்படுகிறது. போருக்கு பின்னர், இந்திய அரசு கொடுத்த  புனரமைப்பு நிதியில், பெருமளவு இந்த சித்த மருத்துவ கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்கள்,

திரைப்படங்கள் போலவே, சித்த மருத்துவமும் இரு நாட்டு தமிழர்களை இணைக்கும் தொப்புள் கொடியாக இன்றும் இருந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் நமக்கு எண்ணற்ற சித்த மருத்துவ நூல்களை தந்துள்ளனர். அவற்றை பற்றியும், அங்குள்ள சித்த மருத்துவ் வரலாறு பற்றியும் பின்னாளில் பார்க்கலாம்.

by Swathi   on 28 May 2018  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி–2 -உலகின் முதல் அறிவியலாளர்கள் சித்தர்கள் சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி–2 -உலகின் முதல் அறிவியலாளர்கள் சித்தர்கள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 1 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 1
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18 மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16 மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16
கருத்துகள்
07-Jun-2018 17:26:54 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே சித்த மருத்துவ சிறப்பை விளக்கும் பாடம் ஒன்றை உரைநடை வடிவில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அப்பாடத்தில் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளான போகர்700, திருமூலர் 700 பற்றி சொல்லப்பட்டிருந்தது.அக்கால சித்த புருஷர்களும் சரி,அவர்களை வணங்கி அவர் வழி வந்த தற்போதைய (சித்தர்) ஆன்மிக தலைவர்களின் நோக்கமும் ஒன்றே. அது நோய் வந்து குணம் பெறுவதைவிட , வருமுன் காப்போம் என்பதும் உணவே மருந்து என்பதுமாகும்.மனம் மற்றும் உடல் வளம் பேணுவதே சிறப்பு.அதனால்தான் திருமூல தெய்வமும் உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்கிறார். தகவலுக்கும், சித்தமருத்துவத்தின் பால் விழிப்புணர்வேற்றியமைக்கும் நன்றி.
 
07-Jun-2018 12:42:28 Ramesh.R said : Report Abuse
Siddhamaruthuvam thodarbana ariya pala katturaigalai vayangi varum valaitamil-kku nenjarndha nandrigal!
 
04-Jun-2018 03:37:49 Jeganathan said : Report Abuse
நல்ல தகவல் உங்கள் பனி தொடரட்டும் தமிழரின் பெருமை இந்த உலகம் அறிந்து பெருமைப்படுத்தும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.