|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 05 : “பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கை” மூலம் தமிழின் அறிவியல் முகத்தை (Scientific Domain) உலகறிய செய்வோம் |
||||||||
சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education
தமிழ் இருக்கைகள்: கடந்த ஆண்டில், உலக தமிழர்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டி, ஹார்வேர்டு பல்கலைகழகத்தில், தமிழுக்கு இருக்கை அமைத்து இருப்பது என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அது உலக தமிழர்களை ஒருங்கிணைத்தும், நம்மிடையே ஒரு நம்பிக்கையை உண்டாக்கியும் இருக்கிறது. அதை தொடர்ந்து, காலம் சென்ற தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோஞ்ச்பார்க் பல்கலைகழகம் மற்றும் மலேசியாவிலும் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது மகிழ்ச்சியான விடயம். மேலும் உலக தமிழர்கள் இணைந்து கனடாவின் டொரண்டோ பல்கலை கழகத்திலும், ஜெர்மனியில், ஹுஸ்டன் பல்கலைகழகத்தில் புதிய தமிழ் இருக்கைகளை அமைக்கும் முயற்சி எடுத்து வருவது புதிய தெம்பை நமக்கு பாய்ச்சுகிறது. சந்தேகமே இல்லாமல், இந்த இருக்கைகள், தமிழ் மொழியை பரப்புரை செய்வதிலும், தமிழ் இலக்கிய ஆய்வுகள் மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்க போகின்றன. இருப்பினும், தமிழ்த்தாயின் பன்முகத்தில், அறிவியல் முகத்தை மையமாக வைத்து “பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கை” அமைய வேண்டியதன் அவசியத்தை நான் இங்கு விளக்க விழைகிறேன்.
திருமூலர் செய்த சித்த மருத்துவ தொண்டுகள்: ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ - திருமந்திரம் (81/3047)
இவ்வாறு திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லியிருப்பதன் மூலம் தமிழுக்கும், தமிழ் சார்ந்த துறைகளுக்கும், தமிழ் மூலம் உலகுக்கும், தொண்டு செய்வதை தன் பிறவி நோக்கமாக கொண்டிருந்ததை நம்மால் அறிய முடிகிறது. இவர் இயற்றிய திருமந்திரமானது, சித்த மருத்துவத்தின் யோகக் கலையைப் பற்றியும், சித்த மருத்துவ அறிவியலின் அடிப்படையில் மனித உடலைப் பற்றியும் விவரிக்கிறது. சித்த மருத்துவம் குறித்த உடல் இயங்கியல் (Physiology) கூறுகளாகிய 96 தத்துவங்கள் பற்றியும், இருமல், சோகை, ஈளை, வெப்பு, கழலை, வீக்கம், சிரங்கு, குட்டம் போன்ற சித்த மருத்துவ நோய்களின் பெயர்களையும், மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு, நெருஞ்சில், கரும்பு, அக்கரகாரம் போன்ற மூலிகைகளின் பெயர்களையும், திருமதிரத்தில் திருமூலர் குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
‘நந்தி அருள் பெற்றா நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே’ - திருமந்திரம் (67/3047) மேலும், பதஞ்சலி உட்பட என்னுடன் சேர்த்து மொத்தம் எட்டு பேர் நந்தி என்ற சித்தரிடம் (ஆதி சித்தன் சிவனின் முதல் சீடரே நந்தி ஆவார்) சித்த மருத்துவம் மற்றும் யோக கலையை கற்றோம் என்று திருமூலர் சொல்லும் வாக்கு மூலத்திலிருந்து நாம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. சித்தா மற்றும் யோக கலையை தமிழ் அல்லாத வேறு மொழியில் (சமஸ்கிருத மொழியில்) எழுதி வைத்ததால் பதஞ்சலியும், தன்வந்தரியும் உலகம் அறியும் மேதைகளாக போற்றப் படுகின்றனர். அவர்களின் அந்த அறிவியலால், எழுதி வைக்கப்பட்ட அந்த மொழிக்கும், உலக அளவில் மரியாதையை இந்தியர்களாகிய நாம் தேடி தந்திருக்கிறோம். அதே அறிவியலை தமிழில் எழுதிய ஒரே காரணத்தால், தனக்கு அந்த உலக அங்கீகாரமும் கிடைக்கவில்லையே, என்றும் அதை எழுத பயன்படுத்திய தமிழ் மொழிக்கு அறிவியல் அங்கீகாரமும் கிடைக்கவில்லையே, என்றும் அந்த சித்த மருத்துவத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லையே நேற்றும் திருமூலர் புலம்புவது என் காதுகளில் விழுகிறது. இதை ஏன் இந்தியர்களாகிய நாம், தமிழர்களாகிய நாம் செய்ய தவறி இருக்கிறோம்? வெளிநாடு சென்ற நண்பர் அதிக பணம் சம்பாதிக்கவும், உலகம் அறியப்படும் அறிவியல் அறிஞராகவும் ஆகிவிட முடிகிறதே என்றும், அவரைபோல படிப்பிலும், அறிவிலும் சம அளவில் இருக்கும் கிராமத்து நண்பன் இந்தியாவில் இருந்து கொண்டு, கிடைத்த சிறிய சம்பளத்துக்கு வேலை செய்யும் அந்த நம்பணின் மனம் படும் வேதனையை தான் திருமூலர் இன்று பட்டு கொண்டிருக்கிறார். மேலும் அதே திருமந்திரத்தில், கீழ்கண்ட இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார்: உடம்பால் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளார்த்தேன் உயிர் வளர்த்தேன்’ - திருமந்திரம் (724/3047)
‘உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேன்’ - திருமந்திரம் (725/3047)
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடிவதில்லை. அது போல, உடம்பு ஆரோக்கியமாக இல்லாவிட்டால், எப்படி பல்லாண்டு வாழ்ந்து, இறைவனை எவ்வாறு அடைய முடியும்? எனவே சித்த மருத்துவம் முறையை பின்பற்றி உடம்பையும் உயிரையும் வளர்த்தேன். இந்த உடம்பை இறைவன் குடி இருக்கும் கோயில் என்று என்றைக்கு உண்ர்ந்தேனோ, அன்றிலிருந்தே, உடம்பை சித்த மருத்துவ முறைப்படி நான் பராமரித்து போற்றி வளர்க்கிறேன், என்ற அவரது வாக்குப்படி, அவர் பல சித்த மருத்துவ நூல்களையும் எழுதி உள்ளார். ஒன்று தெரியுமா, சித்த மருத்துவத்துக்கான வரையறையை (definition for Siddha Medicine) தந்தவரே திருமூலர் தான்.
‘மறுப்ப துடல்நோய் மருந்தெனல் சாலும் மறுப்ப துளநோய் மருந்தெனல் சாலும் மறுப்ப தினிநோய் வாரா திருப்ப மறுப்பது சாவை மருந்தென லாகும்.’ - திருமூலர் கற்பவிதி (7/42) சித்த மருத்துவ மருந்துகள், உடல் நோயை போக்கும், உள்ள நோயை போக்கும், நோய்களை வராமல் தடுக்கும், சாவையும் தள்ளி போடும் என்று அழகாக சித்த மருத்துவத்துக்கான வரையறையை குறிப்பிடுகிறார் திருமூலர். அவர் எழுதி உள்ள சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட தகுந்தவை; திருமூலர் வாதம் 21, திருமூலர் 608, திருமூலர் வைத்தியம் 100, திருமூலர் ஞானம், திருமூலர் பலதிரட்டு, திருமூலர் காவியம் 8000, திருமூலர் வைத்திய காவியம் 1000, திருமூலர் கருக்கடை வைத்தியம் 1000 , வைத்திய சுருக்கம் 200 , சூக்கும் ஞானம் 100 , பெருங்காவியம் 1500 , தீட்சை விதி 18, கோர்வை விதி 16, யோக ஞானம் 16. இவற்றில், குறிப்பிடப்பட்டுள்ள அந்த எண்கள் மொத்தமுள்ள பாடல்களை குறிப்பிடுபவை. இப்போது நமக்கு நன்றாக புரிந்து இருக்கும், திருமூலர் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என்று சொல்லி இருப்பது, சித்த மருத்துவம் மூலம் தமிழுக்கு தொண்டு செய்வதையே.
திருவள்ளுவர் செய்த சித்த மருத்துவ தொண்டுகள்: இதை போலவே, திருவள்ளுவரும், (சித்த) மருந்து என்ற அதிகாரத்தை தனது திருக்குறளில் வைத்து, பத்து பாடல்களை பாடியுள்ளார். மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் இந்த பாடலில் தெளிவாக வள்ளுவர் வளி, அழல், ஐயம் (வாத, பித்த, கபம்) மூன்று உயிர் தாதுக்களும், தத்தம் விகிதாசாரத்தில் குறைந்தாலும், கூடினாலும் நோயை உண்டாக்கும் என்று, தன் காலத்துக்கு முன்னால் சித்த மருத்துவ நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் (நூலோர்) எழுதி வைத்துள்ளதை தான் படித்து இருப்பதாக குறிப்பிடுகிறார். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் வளி, அழல், ஐயம் (வாத, பித்த, கபம்) மூன்று உயிர் தாதுக்களும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், வேவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கும், இதை யாக்கை (உடலின் ஆக்கம்) அல்லது தேகி (Genetic makeup) (பிரக்கிருதி in Ayurveda) என்று அழைப்பர். உடல் அமைப்பும், பிற்காலத்தில் வரும் நோய்களும், மருந்துகள் மற்றும் உணவுகள் உடலில் செயல்படும் விதமும் இந்த விகிதாசாரத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே, தத்தம் உடலின் யாக்கைக்கு (Genetic makeup) ஏற்ற உணவுகளை மாறுபடாமல் உண்டு வந்தால் உயிருக்கு (வளி, அழல், ஐயம் என்ற உயிர் தாதுக்களுக்கு) எந்த பிரச்சனையும் இல்லை. நாவுக்கு உருசியாக இருந்தாலும், தம் யாக்கைக்கு பொருந்தாத உணவானால், அதை மறுத்து விட்டு, உடலுக்கு பொருந்தும் உணவையே உண்ண வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார். இதைத்தான் இன்று Pharmacogenetics, pharmacogenomics என்ற துறை ஆராய்ச்சி செய்கிறது. இவை போன்ற சித்த மருத்துவத்தின் ஆழமான கருத்துக்களை தனது குறளில் கூறியுள்ள, வள்ளுவர் ஞான வெட்டியான், ஞான வெட்டியான் கதை, திருவள்ளுவர் அகவல், நவரத்தின சுருக்கம் -300, பஞ்சரத்தினம்-500, திருவள்ளுவ நாயனார் கர்ப்பம்-300, நாதாந்த சரம், குரு நூல், முப்பு சூத்திரம், வாத சூத்திரம், முப்பு குரு, வைத்திய சூத்திரம், நவரத்தின சிந்தாமணி போன்ற சித்த மருத்துவ நூல்களை இயற்றி உள்ளார். இருவரும் வேறு வேறு வள்ளுவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது, இது ஆராய்ச்சிக்கு உரியது. வீரமாமுனிவர் செய்த சித்த மருத்துவ தொண்டுகள்: Constantine Joseph Beschi என்ற இத்தாலிய கிறிஸ்தவ மத போதகர் தமிழகத்தில் சுற்றி திரிந்த காலங்களில் ( கிபி 1680 - 1747), தமிழை பயின்று, தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றி தமிழ் தொண்டு ஆற்றிய அந்த மகான், ஆறு சித்த மருத்துவ நூல்களை (நசகாண்ட வெண்பா, நவ இரத்தின சுருக்க மாலை, மாகா வீரிய சிந்தாமணி, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, தனிமுறை திரட்டு) எழுதி உள்ளார். சித்த மருத்துவத்தின் வளர்ச்சியே தமிழின் வளர்ச்சி: திருமூலர், திருவள்ளுவர், வீரமாமுனிவர் போலவே, அகத்தியர் போன்ற பிற சித்தர்களும் தமிழ் தொண்டு ஆற்றி உள்ளனர்; தமிழ் தொண்டு ஆற்றிய எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் சித்த மருத்துவத்துக்கு தொண்டு ஆற்றி உள்ளனர் என்பதை மறக்கவே கூடாது. எனவே சித்த மருத்துவத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது, இரண்டும் நகமும் சதையும் போல உள்ளவைகள் ஆகும். சித்த மருத்துவம் இல்லாத தமிழ் தொண்டு முழுமை அடையாதது. என்றைக்கு தமிழரின் மரபு மருத்துவமாம் சித்த மருத்துவத்துக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் இடையே இடைவெளி வந்ததோ, அன்றைக்கே தமிழ் மொழி தனது அறிவியல் முகத்தை இழந்து வாட ஆரம்பித்து விட்டது. கடந்த ஒரு நூற்றாண்டுகளாக, திருக்குறளையும் திருமந்திரத்தையும் பரப்புவது மட்டுமே தமிழை பரப்புவதாக நினைத்து, திருவள்ளுவரும், திருமூலரும் இயற்றிய சித்த மருத்துவத்தை மறந்தது, நாம் செய்த மிகப்பெரிய பிழை என்றே கருதுகிறேன். அந்த பிழையை இனி நாம் சரி செய்தே ஆக வேண்டும். சித்த மருத்துவம் என்பது தமிழின், தமிழர் அறிவியலின் உச்ச கட்டம் என்றால் அது மிகையில்லை. சித்த வைத்தியத்தை உலக மனித குலத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றால், கண்டிப்பாக தமிழின் பெருமையும், தமிழனின் அறிவும் மெச்சப்படும். தமிழ் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உலக மக்களால் உணரப்பட செயவதற்கும், தமிழை அறிவியல் மொழியாக நிலை நாட்டவும் சித்த மருத்துவத்தை உலகளாவ செய்வது ஒன்றே வழியாகும். AYUSH chair by AYUSH Ministry: இந்திய நடுவண் அரசு, 2016 ம் ஆண்டு, ஆயுஸ் அமைச்சரகம் மூலமாக, உலகத்தின் பல நாடுகளின் பல்கலை கழகங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவங்களின் இருக்கைகளுகள் அமைய வழிவகை செய்கிறது, அதற்கான மூன்று வருட செலவையும் இந்திய அரசே ஏற்கிறது. அதன்படி, பல ஆயுர்வேத மற்றும் யோகா இருக்கைகள் அமைத்து, அதன் மூலமாக பல ஆராய்சிகள், மாநாடுகள் மற்றும் பரப்புரைகளை செய்து வருகின்றனர். இன்று வரையிலும், ஒரு சித்த மருத்துவ இருக்கை அமைப்பதற்கான சிறிய முயற்சி கூட மேற்கொள்ளப்பட வில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. நமது தமிழக அரசும், அரசியல் வாதிகளும், சித்த மருத்துவ சமூகமும் இதை கருத்தில் கொண்டு முயற்சி எடுக்க வேண்டும். உலக அளவில் பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கைகள்: பாரம்பரிய மருத்துவத்துக்கென்று ஒவ்வொரு நாட்டிலும், தனி நிறுவனங்களோ அல்லது மருத்துவ பல்கலைகழகத்தில் தனி துறைகளோ அமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவ (Integrative Medicine) முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சித்த மருத்துவம் இன்றளவும், தமிழ் நாட்டை விட்டு தாண்ட மறுக்கிறது. எனவே வெளிநாடுகளின் ஒவ்வொரு மருத்துவ பல்கலைகழகத்தின் கீழும் பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கைகள் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். அங்கு கீழ்க்கண்ட செயல் பாடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது:
இந்த பணிகள் செவ்வனே நிறைவேனும் போது, அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் கூட தமிழர்களின் மருத்துவ முறையின் அருமையை கண்ணால் கண்டு அனுபவிக்க எதுவாக இருக்கும். அவர்களின் நோய்களை சித்த மருத்துவம் போக்கும் பட்சத்தில், தமிழ் பெயர் கொண்ட சித்த மருந்துகளையும், மூலிகைகளையும், உணவுகளையும் அவர்கள் நாவு மந்திரமென உச்சரித்து கிடக்கும். தமிழுக்கும் அறிவியல் மொழி என்ற பெயர் கிடைக்கும். அதற்கு அப்புறம், சித்த மருத்துவத்தை படிக்க வேண்டுமானால், தமிழை தானாக படிக்க வருவார்கள். ஐரோப்பிய நாடுகளில், நம் தமிழ் மொழியில் உள்ள சித்த மருதத்துவ நூல்களை வேறு மொழிகளில் மாற்றும் பணியும் நடைபெறும். இதனால் பல தமிழ் வல்லுனர்கள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கு உலக அளவில் வேலை கிடைக்கும். தமிழ் நாட்டில் இருந்துதான், மூலிகைகள், சிறு தானியங்கள், பனை கருப்பட்டி போன்ற சித்த வைத்திய பெருட்கள் எல்லாமே வெளி நாடுகளுக்கு வர வேண்டும் என்னும் போது, பல தமிழர்கள் உலக அளவில் வியாபர வாய்ப்புகளை பெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளும் கைமேல் பலன் பெறுவார். இவ்வாறெல்லாம் நாம் செய்தால் மட்டுமே நம் தமிழ் அன்னைக்கு கிடைக்க வேண்டிய உலக அங்கீகாரம் கிடைக்க முடியும். நம் தமிழ் அன்னை, அறிவியல் மொழி அன்னையாக பெருமை அடைந்தால், அதைவிட பெரிய அங்கீகாரம் தமிழுக்கு வேறு இல்லை.
இந்தியாவில் பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கைகள்: இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. தமிழகம், கேரளா தவிர வேறு எங்கும் சித்த மருத்துவத்துக்கு கிளைகள் (கல்லூரிகள்) இல்லை. தமிழ் பேசும் பாண்டிசேரியில் கூட சித்த மருத்துவ கல்லூரி இல்லாதது வருந்தத்தக்கது. சித்த மருத்துவம், இந்தியாவின் ஒரு முக்கியமான பாரம்பரிய மருத்துவம் ஆதலால், இந்திய அரசுக்கு இதை நாடு முழுவதும் பரப்புவதில் தார்மீக பொறுப்பு உண்டு. தமிழகம் அல்லாத பிற இந்திய மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களிலும், மாநிலத்துக்கு ஒரு முன்னணி மருத்துவ பல்கலை கழகத்தை தேர்ந்தெடுத்து, அங்கே சித்த மருதத்துவ துறையை உடனே நிறுவ வேண்டியது அவசியம். தமிழக அரசே முன்வந்து இதை மிக எளிதாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மூலமாக செய்தால் கண்டிப்பாக ஒரே மாதத்தில் இந்தியாவில் 35 சித்த மருத்துவ இருக்கைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். அத்தனை செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தலாம், அல்லது தமிழக அரசு கூட அந்த செலவில் சில பகுதியை அளிக்கலாம். மேற்சொன்ன எல்லா சித்தா மருத்துவம் குறித்த நடவடிக்கைகளும் தொடர வேண்டும். பிற்காலத்தில், இவை ஒவ்வொன்றும் ஒரு சித்த மருத்துவ கல்லூரிகளாக மாற்றப்பட வேண்டிய அளவில், அடித்தளமிட்டு ஆரம்பம் முதலே தொலைநோக்கு சிந்தனையுடன் இதை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
Indo-US சித்த மருத்துவ இருக்கைகள்: உலகெங்கும் உள்ள சித்த மருத்துவ இருக்கைகள், இந்தியாவில் உள்ள சித்த மருத்துவ இருக்கைகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியம். ஒரு மருந்து ஆராய்ச்சியை அமெரிக்காவில் செய்ய வேண்டுமென்றால், இந்திய பணம் மதிப்பு ரூபாய் 40 லட்சம் தேவைப்படுமென்று வைத்துக்கொள்வோம். அதே ஆராய்ச்சியை இந்தியாவில் நடத்தினால், வெறும் 8 -10 லட்சத்தில் முடித்து விடலாம். 40 லட்சத்தில், நான்கு ஆராய்ச்சிகளை முடித்து விடலாம். பல தமிழக மாணாக்கர்களும் PhD சித்த மருத்துவத்தில் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்க மாணாக்கர்கள் இந்தியாவில் வந்து சித்த மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், Clinical Trial என்று சொல்லக் கூடிய மனிதனுக்கு சித்த மருந்து கொடுத்து ஆராய்ச்சி செய்வதும், இந்தியாவில் மிக எளிது. வெளிநாடுகளில், சித்த மருந்துகள் அங்கீகாரம் இதுவரையிலும் கிடைக்காத காரணத்ததால், அந்த ஆராய்ச்சிகள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் செய்வது கடினம். எனவே, Indo-US சித்த மருத்துவ இருக்கைகள் அமைந்தால், மிக சிறப்பான செயல்களை நம்மால் செய்ய முடியும்.
மணிப்பால் பல்கலை கழகம் – அமெரிக்க தமிழர்கள் கூட்டு சித்த மருத்துவ இருக்கை: முதல் கட்டமாக இந்தியாவில் புகழ் பெற்ற மணிப்பால் பல்கலைகழகத்தில், சித்த மருத்துவ பிரிவு (Division of Siddha) இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், Center for Integrative Medicine and Research (CIMR) க்கு கீழ் என்னால் ஆரம்பிக்க பட்டது. இந்த பல்கலைகழகம், கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்கே, நவீன மருத்துவ (Kasturba Medical College, Manipal) கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள சித்த மருத்துவ துறை, பல முற்போக்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறது. இலவச சித்த மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சித்த மருத்துவ மாநாடு இவற்றை, Central Council for Research in Siddha (CCRS), Ministry of AYUSH அவர்களுடன் இணைந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இதுவரையிலும், நான்கு ஆராய்ச்சியாளர்கள் சித்த மருந்துகளை PhD செய்து கொண்டிருக்கிறார்கள். பல நல்ல ஆராய்ச்சி கட்டுரைகள் உலகெங்கும் நடக்கும் மருத்துவ மாநாடுகளில் வாசிக்கப்படுகிறது, மருத்துவ இதழ்களில் வெளியிடப்படுகிறது. மேலும் பல மருத்துவ கல்லூரி மாணாக்கர்கள் சித்த மூலிகைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நவீன மருத்துவ கல்லூரி மாணாக்கர்களுக்கு, சித்த மருத்துவத்தை குறித்த அடிப்படை வகுப்புகள் (Certificate course) ஆரம்பிக்க, பல்கலைகழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. சித்த மருந்துகளை கொண்டு Haemophilia, psoriasis, autism மற்றும் புற்று நோய்களை கட்டுப்படுத்தும் Clinical Trial ஆராய்ச்சிகள் செய்வதகான முயற்சிகள் பல கட்டங்களை தாண்டி உள்ளது. சித்த மருத்துவத்தை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும் உலகின் முதல் Integrative Medical Center இதுதான். முக்கியமாக, நவீன மருத்துவ நிபுணர்கள் மற்றும் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் (தமிழர் அல்லாதவர்கள்) கைகோர்த்து ஓரணியில் திரண்டு சித்த மருத்துவம் குறித்த பல ஆராய்சிகளை முன்னெடுக்கிறார்கள். தமிழ் அல்லாத பிற மொழியினருக்கு, சித்த மருத்துவத்தை பயன்படுத்த நாம் வாய்ப்பு தரும்போது, அதன் பயனை அறிந்து கொண்ட அவர்கள், தமிழ் மொழி மீது அளவு கடந்த மரியாதை ஏற்படுவதை நான் கர்நாடகத்தில் பார்த்து வருகிறேன். சித்தமருத்துத்தின்மேல் ஈடுபாடு கொண்ட, தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை உலகெங்கும் இருந்து ஒருங்கிணைத்து பல ஆராய்ச்சிகளை செய்ய திட்டமும் இருக்கிறது.
உலகத் தமிழர்களும், தமிழக அரசும் இணைந்து ஹார்வார்டில் இருக்கை அமைத்ததைத் தொடர்ந்து, இன்று உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அவரவர் வசிக்கும் நாடுகளில் தமிழ் இருக்கை அமைக்க முன்வந்திருப்பதும் பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் இதை சாத்தியமாக்கியிருப்பதும் பெருமைதரத்தக்க செயலாகும். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்குவது குறித்து சிந்திக்கவேண்டும், செயல்படுத்த முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். தமிழர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் அந்தந்த நாட்டின், மாநிலத்தின் மக்கள் சித்த மருத்துவ பயன்பாட்டை பெற , அதன் பலனை பெற்று நலமாக வாழ, அதன் மூலம் தமிழின் மேன்மையை உணர்ந்து யாதும் ஊரே ... யாவரும் கேளீர் என்பதற்கு ஏற்ப உலகக் குடிமக்களாக நம் மதிப்பை உயர்த்த இந்த தமிழ் இருக்கை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என்பதற்கு இணங்க தமிழின் அத்துணை துறைகளுக்கும், குறிப்பாக சித்த மருத்துவ துறைக்கு, ஒவ்வொரு தமிழனும் பணி செய்வோம், தமிழின் அறிவியல் முகத்தை (Scientific Domain) உலகறிய செய்வோம். சித்தம் தெளியும் (சித்தம் வளரும்) |
||||||||
by Swathi on 23 Jul 2018 3 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|