|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 06 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும் |
||||||||
சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education
“கண்டதையும் தின்றவன் குண்டனாவான், கண்டதையும் கற்றவன் பண்டிதனாவான்” – என்ற வாக்குக்கு இணங்க, பலதுறைகளை கற்ற ஒருவன் பண்டிதன் ஆகலாம், ஆனால் எல்லா நோய்களையும் வெற்றிகரமாக குணப்படுத்தவல்ல சகலகலா மருத்துவனாக ஒருவனே ஆகி விடுவதில்லை. தமிழர்கள் எல்லோருக்கும் சித்த மருத்துவம் மேல் தீராத பற்றும், நம்பிக்கையும், காதலும் உள்ளது, அனால் அதே நம்பிக்கை இன்றைய சித்த மருத்துவர்கள் மீது இல்லை என்பது கசப்பான உண்மையாகும். வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழ் இனத்தை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நோயினின்று பாதுகாத்து வந்த அந்த சித்த மருத்துவ முறைகள், இன்று அந்த சேவையை தொடர்ந்து செய்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? அது ஏன் இன்று உள்ள சித்த மருத்துவர்களால் முடியவில்லை என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாக BSMS என்ற சித்த மருத்துவ இளங்கலை படிப்பில், சித்த மருத்துவத்தின் அனைத்து நுட்பங்களையும் ஆழமாக சொல்லித்தர முடிவதில்லை. கடலளவு கொண்ட சித்த மருத்துவத்தை ஐந்தரை ஆண்டுகளில் மாணவர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைக்க முடியும். நம்மிடம் வரும் நோயாளிகள் எல்லாரும், நம்மை ஒரு google search engine ஆகவே பார்க்கின்றனர். சித்த வைத்தியம், நவீன வைத்தியம், மூலிகைகள், உணவுகள், என அத்தனையும் அத்துபடியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கிரார்கள். எனவே இந்த நூற்றாண்டில் வெற்றிகரமாக சித்த மருத்துவ பயிற்சி மேற்கொள்ள என்ன செய்யலாம் என்று விவாதிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும். அதற்காக கீழ்க்கண்ட 15 வழிமுறைகளை பின்பற்றி நம்மை முன்னேற்றுவது எப்படி என்பதை விவரிக்கிறேன்.
1. மக்களை அவர்கள் இடத்தில் சென்று பார்ப்போம்: பொதுவாகவே சித்த மருத்துவர்கள், ஒரு கிளினிக்கை ஆரம்பித்த உடனே, நோயாளிகள் தன்னை தேடி வரமாட்டார்கள் என்பது உண்மைதான். நாம் கூட எப்போதும் ஒரு கைதேர்ந்த (experienced) மருத்துவர்களிடம் செல்லவே விரும்புவோம். அதைபோலதானே, எல்லாரும் இருப்பர். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நமது சித்த மருத்துவ புலமையை மக்களிடம் எடுத்துசெல்ல தயங்க வேண்டாம். நோயாளிகள் வேண்டுமானால் என்னை தேடி வரட்டும், என்னிடம் நிறைய மூலிகை மருந்துகள் தயார் நிலையில் உள்ளன, நான் ஏன் அவர்களை தேடி போக வேண்டும்? என்னிடம் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று விதி இருந்தால், என்னிடம் வந்தே தீருவர், என்று எனக்கு தெரிந்த சில சித்த மருத்துவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் தான் ஒருத்தன் இங்கு உங்களுக்காக இருக்கிறேன் என்று தங்களை வெளியில் காட்டிக்கொள்ளாத சித்த மருத்துவர் மீட்டாத வீணையை போன்றவர்தான்.
வாரம் ஒருமுறையாவது நாம் பொது மக்களை அவர்கள் இடங்களிலே சென்று சந்திக்க வேண்டும். உதாரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், பொருட்காட்சி மையங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர்கள் வட்டங்கள், கிராமங்கள், அலுவலகங்கள், நற்பணி மன்றங்கள், ரசிகர் மன்றங்கள், அரசியல் கட்சிகள் என்று எங்கே பல மக்கள் ஓன்று கூடுவார்களோ அங்கு நாமே சென்று சித்த மருத்துவம் பற்றி பேசவும், பிரச்சாரம் செய்யவும் தயங்க வேண்டாம். முன்னேறிய எல்லா சித்த மருத்துவர்களின் ஆரம்பங்கள் இப்படி ஆரம்பித்தவையே. “டாக்டர்.. மழைக்காலம் வந்து விட்டது. எப்படி சித்த முறைப்படி நம்மை பாதுகாத்து கொள்வது? வெயில் காலம் வந்து விட்டது. எப்படி நம்மை தற்காத்து கொள்வது? என்பதைப் பற்றி பேச வர முடியுமா?” என்று சில காலம் கழித்து, அவர்களே உங்களை அழைப்பர். அதுவரையிலும், நாம் சும்மா இருந்தால் நம் அடித்தளத்தை கட்டி எழுப்ப முடியாது. சித்த மருத்துவம் குறித்த பல அடிப்படை கருத்துக்களை தெளிவு படுத்தும் போது, மேலும் தெரிந்து கொள்ளவும், வைத்தியம் பார்க்கவும் கண்டிப்பாக மக்கள் உங்களை நாடுவர்.
2. வீட்டு வைத்தியம், சிடுகா முறைகள், கைவைத்தியம் பேசுவோம் ஒற்றை மூலிகையாகவோ அல்லது பல மூலிகைகளைக் கொண்டோ செய்யப்படும் குடிநீர் (கஷாயம் அல்லது கியாழம்), கற்கம் (பச்சையாக அரைத்து எடுத்தல்), சூரணம் (பொடி), வெளிப் பூச்சு, ஒத்தடம், மூலிகை பற்று, எளிய தைலங்கள், ஆவி பிடித்தல், உணவு முறைகள், யோக முறைகளை, பத்திய முறைகள், நோய்களுக்கேற்ற உணவுகள் மற்றும் சித்த மருத்துவ வாழ்வியல் முறைகளை நாம் பொது மக்களுக்கு சொல்லி கொடுத்தே ஆகவேண்டும். இவைகள் பள்ளி பாடத்திட்டத்திலும் இல்லை, வேறு எவரும் சொல்லி கொடுக்க போவதும் இல்லை. ஆகவே, இந்த அடிப்படை சித்த மருத்துவ வாழ்வியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஒவ்வொரு சித்த மருத்துவரின் முதலாய கடமை ஆகும். இவற்றை கொண்டு, பொதுமக்கள், நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே துரத்தி அடிக்கவும் வழி வகுக்கும். அதிலும் கட்டுப்படாத போது, சித்த மருத்துவராகிய நம்மிடம் வர அறிவுறுத்த வேண்டும். பல நாள்பட்ட நோய்களை சித்த மூலிகை மருந்துகளை கொண்டே, பல வருடங்கள் பக்க விளைவு இல்லாமலும் நோயின் தீவிர தன்மை மிகாமலும் கட்டுக்குள் வைக்கவும் முடியும். பின்னாட்களில் நவீன மருந்துகள் தேவைப்படின் அதற்கு உரிய மருத்துவரிடம் பரிந்துரை செய்யலாம். உதாரணமாக, மதுமேகம் என்ற நீரிழிவு (diabetes mellitus) வந்த உடனே, உணவு மாற்றம், கை வைத்தியம், உடற் பயிற்சி மற்றும் யோகம் இவற்றின் துணையுடம் மட்டுமே நம்மால் பல வருடங்கள் அந்த நோயை கட்டுக்குள் வைக்க முடியும். அதன் பின்னர், சித்த மருத்துவரின் அறிவுரையின் பேரில் சித்த மருந்துகளால், மேலும் பல வருடங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயை கண்டு பிடித்த பின்னர், தோராயமாக முதல் பதினைந்து முதல் இருபது வருடங்கள் இப்படி உடலை பேண முடியும். அதன்பின்னர் தேவைக்கேற்ப நவீன மருத்துவத்தை சேர்த்து கொள்ளலாம். நம்மிடம் வரும் நோயாளிகளுக்கு, வெறும் மருந்தினால் மட்டும் நோயை முழுவதும் குணப்படுத்த முயலாமல், அவர்களின் உடல் வாகுக்கேற்ப, கை வைத்தியம் சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் மக்களுக்கு செலவு குறையும், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் மற்றும் தேவையற்ற பக்க விளைவுகளுக்கு ஆட்படாமலும் தவிர்க்கலாம். நாம் நேர்மையாக நம் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் போது, ஒரு கட்டத்தில் நாம் அவர்களின் குடும்ப மருத்துவர் ஆகிவிடுவோம்.
3.அடுத்த தலைமுறை மேல் ஒரு கண் வைப்போம்: சித்த மருத்துவத்தின் அடிப்படை கூறுகள், அதன் நன்மைகள், நோய்களுக்கேற்ற உணவுகள், மூலிகை இனம் கண்டுபிடித்தல், கை வைத்தியம், மூலிகைகளை கொண்டு முதலுதவி, போன்றவைகள் பள்ளி பாடத்திட்டத்தில் இல்லை. எனவே, ஒவ்வொரு சித்த மருத்துவரின் கவனமும் அருகில் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை சென்று மாணவர்களிடம் கலந்துரையாடல், இலவச சித்த மருத்துவ ஆலோசனை, மாதிரி மூலிகை தோட்டம் அமைத்தல், மாணவர்கள் மூலம் அவர்களின் வீடு மற்றும் கிராமம் அல்லது சொந்த ஊரில் வீட்டு மூலிகை தோட்டம் அமைத்தல் போன்ற பல பயனுள்ள பணிகளை எளிதில் செய்யலாம். எந்த பள்ளிகளும், இதற்கு தடை போடாது. நாம் இன்னும் அங்கு சென்று அவர்களை அணுகவில்லை என்பதே உண்மை. NSS மற்றும் NCC போன்ற மாணவர் அமைப்புகளை கொண்டே பொதுமக்களுக்கு சித்த மருத்துவ கண்காட்சிகள் வருடத்துக்கு ஒருமுறையாவது நடத்த வேண்டும். தமிழக மக்கள் எளிதில் மறந்து விடும் பழக்கம் உடையவர்கள்; ஆதலால், நாம் நல்ல விடயங்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் மக்கள் மனதில் பதியும். அதுமட்டுமல்ல, நமது மண் சார்ந்த மூலிகை செடிகொடி மரங்களை நட்டு பராமரித்தால், இயற்கையின் சூழல் (Environment) பாதுகாக்கப்படும். இவைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விருப்பப் பாடமானால், மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்த தலைமுறையினரின் மனதில் இன்று விதைக்கும் விதைதான் நாளை தமிழகத்தின், இந்தியாவின் எதிர்கால குரலாக ஒலிக்க போகிறது.
4. பாரம்பரிய கலைகளை, விளையாட்டுகளை விளையாடுவோம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளான நடனம், பாட்டு, இசை, யோக பயிற்சி, சிலம்பம், கிட்டிப்புள், நொண்டியடித்தல் போன்ற எல்லாமே மருத்துவ ரீதியாக உடலுக்கு பலன் தரக் கூடியது. ஒருவர் விபத்து ஏற்பட்டோ அல்லது வேறு வகையிலோ நரம்பு, எலும்பு மற்றும் தசை சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படும்போது, உடல் இயக்கவியல் (physiotherapy, occupational therapy) என்ற மருத்துவம் மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறார். இதில், இயக்கவியல் பயிற்சியாளர் நோயாளிக்கு செய்யும் பயிற்சிகள் (passive therapy), நோயாளி தன்னைத்தானே செய்ய வேண்டிய பயிற்சிகள் (active therapy) என இரண்டு வகையாக பிரித்து சிகிட்சை அளிப்பர். அதற்கு பயிற்சியாளரிடம் தினமும் சென்று பயிற்சியில் ஈடுபட வேண்டும். சில நேரம் சில கருவிகள் கூட வாங்க வேண்டி வரும். பல நேரங்களில், பயிற்சியில் தொய்வு ஏற்படும், சரியான பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட மனம் வராது, வலி இருக்கும், சோம்பல் இருக்கும், பணம் தேவைப் படும். இதற்கு மாற்றாக நமது பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை ஆடுவதன் மூலம், பணச் செலவு இல்லாமல், மகிழ்ச்சியாக உடலுக்கு தேவையான active therapy கிடைத்து விடும். Post traumatic அல்லது post surgical அல்லது neurological rehabilitation போன்ற நேரங்களில், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுக்களால், மிக எளிதாக பயிற்சிகள் செய்து, மிக விரைவாக குணம் அடைய முடியும். குழந்தைகள் இந்த விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம், நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு தசை மண்டலங்கள் வலுப்பெற்று உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அரசு அல்லது தமிழ் ஆர்வலர்கள் நிதி ஒதுக்கினால், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுகளின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும். பள்ளி கல்லூரிகளில் இந்த விளையாட்டுகளை சொல்லி கொடுப்பதோடு நில்லாமல், போட்டிகளும் நடத்தி ஊக்குவிக்கலாம். நமது நோயாளிகளுக்கு கண்டிப்பாக ஒரு விளையாட்டை அன்றாட பழக்கமாக அறிவுறுத்தும் அளவுக்கு நம் அறிவை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். உதாரமாக, ஆள் காட்டி விரல் முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளி, அறுவை மருத்துவம் மேற்கொண்டு எலும்பை சேர்த்த பின்னர், அந்த விரலின் இயல்பான அசைவுகள் வருவதில்லை. விரல் விறைப்பாக இருக்கிறது, மடங்கவில்லை. இவருக்கு, வசவு எண்ணையை வெளியில் தடவ சொல்லுவதோடு நிறுத்தி விடாமல், பிறருடன் கைவிரல்களை கோர்த்து கொண்டு பலம் பார்க்கும் விளையாட்டு, கூழாங்கற்களை மேலே போட்டு பிடித்தல், சிலம்ப கம்பு சுத்துதல், தபேலா மற்றும் தோல் இசைக்கருவிகளை விரல்களால் இசைத்தல் போன்ற விரல்களால் விளையாடும் விளையாட்டுகளை அறிவுறுத்தலாம். இதை குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் கண்டிப்பாக தேவை.
5. சித்த வைத்தியரை (வைத்தியத்தை) தத்து எடுப்போம் பண்டைய காலங்களில், சித்த மருத்துவத்தை குருவின் அருகில் இருந்து மாணாக்கர் படித்து வந்தனர். அந்த மாணாக்கர்களில், சிறந்த மாணாக்கரை தெரிவு செய்து, அவருக்கு மட்டும் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் ஒரு ஆசான் கற்றுக் கொடுப்பார். பல நேரங்களில், தனது சொந்த மகனுக்கு கூட இத்தனை அறிவை அந்த ஆசிரியர் போதித்து இருக்க மாட்டார். தனது மருத்துவ வாரிசாக, சிறந்த மாணாக்கரை உருவாக்குவது ஒவ்வொரு ஆசானின் முக்கிய குறிக்கோள் ஆகும். அப்படி ஒரு தலை சிறந்த மாணாக்கரை உருவாக்க தவறி விட்டால், அவர் சிறந்த ஆசான் இல்லை என்றே பொருள். அந்த ஆசானால் உருவாக்கப்பட்ட மாணாக்கர்கள், பிற்காலத்தில் நன்கு சம்பாதிக்கும் போது, அடிக்கடி தனது குருவை சந்தித்து சேவகம் செய்து, பணம் மற்றும் பொருளுதவிகள் செய்வது வழக்கம், அது ஒரு குருவுக்கு செய்யும் மரியாதையும் ஆகும். எனக்கு தெரிந்த பல சித்த மருத்துவ ஆசான்கள், அவர்களின் குருக்களின் வயதான காலத்தில், அவர்களை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து, உணவு கொடுத்து, பாடம் படித்து, நுணுக்கங்களை கேட்டுணர்ந்து, குருவின் ஆசீர்வாதம் பெற்று சிறந்து விளங்கி இருக்கிறார்கள். ஆக, ஒவ்வொரு சித்த மருத்துவ குருவும், தனது வயதான காலத்தை தனது மாணாக்கரின் வீட்டில் கழித்து இருப்பார். ஆனால் இன்றோ, கல்லூரிகளில் சென்று சித்த மருத்துவம் படித்த நமக்கு அப்படி நமது ஆசிரியர்களை நமது வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பல ஆண்டுகளாக, பல சித்த வைத்தியர்களின் வீடுகளுக்கு ஏறி இறங்கி, அவர்களை வணங்கி நான் சித்த மருத்துவம் பயின்றுள்ளேன். அவர்களின் இன்றைய நிலைமையோ மிகவும் பரிதாபமானது. சிலர் தனது அன்றாட உணவுக்கு அடுத்தவரிடம் கையேந்துகின்றனர். பணம் இன்மையால், தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். சித்த வைத்தியர்களால் காலத்துக்கு ஏற்றாற்போல தனது வைத்திய தொழிலை மேம்படுத்த தெரியாததாலும், பலரிடம் சான்றிதழ் (Certificate or license to practice Siddha) இல்லாமையாலும், நோய்களை பற்றிய நவீன அறிவு இல்லாமையாலும், முக்கியமாக சித்த மருத்துவமே தனது வாழ்க்கையாக வாழ்ந்து வந்த காரணத்தினாலும், இன்று கேட்பாரற்று நடை பிணமாக வாழ்கின்றனர். இந்த நடமாடும் சித்த மருத்துவ பொக்கிஷங்களை ஒவ்வொரு சித்த மருத்துவரும் தனது குருவாக தத்து எடுத்தால், நமக்கு தெரியாத, கல்லூரியில் படிக்காத சித்த மருத்துவ நுணுக்கங்களை நாம் கற்றுணர முடியும். அவர்களை நம் வீட்டில்தான் தங்க வைக்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களின் மருந்து தயாரிப்புகளை நாம் வாங்கலாம், அல்லது அவர்களின் அனுபவ அறிவை புத்தகமாக வெளியிட உதவி செய்யலாம், அல்லது நமது சித்த மருத்துவமனையில் அவர்களுக்கு ஒரு வேலை போட்டு தரலாம், அல்லது அவர்களின் அறிவை, அனுபவத்தை மற்ற சித்த மருத்துவ மாணாக்கர்கள் படிப்பதற்காக வகுப்புகள் ஏற்படுத்தி தரலாம். பல வெற்றிகரமாக சித்த மருத்துவம் பயிற்சி செய்துவரும் சித்த மருத்துவர்கள், இந்த குருசேவையை ஏற்கனவே செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆக, இது ஒருவகையில், சித்த மருத்துவத்தின் சுதேசி இயக்கம் போன்றது, அது நமது துறையின் வளர்ச்சிக்கு முக்கியமானது. சித்த மருத்துவத்தை வாழ்க்கையாக வாழ்ந்து வரும் எந்த சித்த வைத்தியரையும் இனி சித்த மருத்துவர்கள் கைவிடலாகாது.
6. நம் பலத்தை அறிவோம், பலவீனத்தை ஒத்து கொள்வோம் சித்த மருத்துவத்துக்கு என்று பலமும் உண்டு, பலவீனமும் உண்டு. குறிப்பிட்ட பல நோய்களை வராமல் தடுக்கலாம், தள்ளி போடலாம், ஆரம்ப நிலையில் மட்டும் குணப்படுத்தலாம், அல்லது குணப்படுத்த முடியாமல் போகலாம். சித்த மருத்துவம் 4448 நோய்களைப்பற்றி விவரித்து இருந்தாலும், இன்று வரும் பல புதிய நோய்கள் அதற்குள் அடங்குமா, இல்லை அவை முற்றிலும் புதிய நோய்களா, என்பவற்றில் தெளிவு வேண்டும். சித்த மருத்துவ நூல்களே பல நோய்களை குணப்படுத்த முடியாது என்றும், பலவற்றை கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என்றும், அசாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும். ஆக, எந்த நோய்களுக்கு, எந்த நிலையில் நம்மால் கண்டிப்பாக நன்மை பயக்க முடியுமோ அந்த நோய்களை மட்டுமே நாம் பரிந்துறைக்க முயல வேண்டும். இதை விடுத்து, உலகில் உள்ள எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தால் மூன்றே நாளில் அல்லது ஒரே மண்டலத்தில் குணப்படுத்துவேன் என்று ஒருவர் சொன்னால், அவருக்கு சித்த மருத்துவம் தெரியவில்லை என்றும், பணம் பறிக்கும் பிழைப்பு நடத்தும் நபர் என்றும், அறம் சாராத (Against Ethical practice) தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான நபர் என்றும் மக்கள் விரைவில் அறிந்து கொள்வர். ஒரு தமிழர் தமிழில் மட்டுமே பேசுவார் என்பதில் இருந்து, இரண்டு விடயங்கள் திண்ணமாகும் – ஒன்று அவருக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு, இரண்டு அவருக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது என்றும் கொள்ள முடியும். அதை போலத்தான், சித்த மருத்தவர் மற்ற மருத்துவ முறைகளை பற்றி தெரியாமல், எதற்கெடுத்தாலும், சித்தம்தான் தீர்வு என்று கூறுவது கூட மக்களிடம் ஒருவித சந்தேகத்தை கிளறிவிட்டுவிடும். நமது நோயாளிகளிடம், அவரின் நோயைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தி, சித்த மருத்துவம் எந்த அளவு பயன்படும் என்றும், முடிந்தால் மற்ற மருத்துவ முறைகளையும், சித்த மருத்துவ முறையையும் ஒப்பீடு செய்து, அதன் பின்னரே நாம் மருத்துவம் புரியவேண்டும். நம்மால் பரிந்துரைக்க முடியாத நோய்களை, எந்த மருத்துவ முறையில் தீர்வு கிட்டுமோ, அங்கு அனுப்பி விடுவது சாலச்சிறந்தது. நாம் சித்த மருத்துவத்தின் துணை கொண்டு, மக்களின் நோய்களை, துன்பங்களை போக்கவே இருக்கிறோம் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, நோயாளிகளிடம் வெளிப்படைத் தன்மையாக நடந்து கொள்வது நம் மீது மரியாதையை ஏற்படுத்தும் செயலாகும்.
7. Specialty சித்த மருத்துவர் ஆவோம்: அக்காலத்தில், ஒவ்வொரு சித்த வைத்தியரும், ஒவ்வொரு நோய்களுக்கு பெயர் பெற்றவராக விளங்கி வந்தனர். உதாரணமாக, பாம்பு கடி வைத்தியர், விஷ வைத்தியர், பிள்ளை வைத்தியர், கண் புரை வைத்தியர், காதுவலி வைத்தியர், ஒடிவு முறிவு வைத்தியர், வர்ம வைத்தியர், சுளுக்கு வைத்தியர், பிள்ளையின்மை வைத்தியர், ஆண்மைக்குறைவு வைத்தியர், காமாலை வைத்தியர், வைசூரி வைத்தியர், காய்ச்சல் வைத்தியர், போன்று பல specialty & super specialty துறைகளில் தமக்கென ஒரு நோயை சிறப்பாக செய்ததாலேயே, அவர்கள் அந்த குறிப்பிட்ட நோயில் சிறப்பாக புகழ் பெற்று விளங்கினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில், எனது கொள்ளு தாத்தா பரம்ஜோதி மற்றும் அவரது தந்தை பாக்கியநாதன் கூட பிள்ளை வைத்தியர்கள் (pediatric Siddha practitioners) என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன். இவ்வளவு ஏன், சித்தர்கள் கூட ஒவ்வொரு துறையையும் தனக்காக ஏற்படுத்தி அதிலே சிறந்து விளங்கி இருக்கிறனர். இன்றோ, இருபது ஆண்டுகளாக சித்த மருத்துவம் பயிற்சி செய்த பிறகு, ஒரு சித்த மருத்துவரிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று “எந்த நோயாளிகள் உங்களிடம் அதிகமாக வருகிறார்கள்? எந்த நோய்களுக்கு நீங்கள் வெற்றி கரமாக சித்த மருத்துவம் செய்ய முடிகிறது”. ஒன்று அல்லது இரண்டு நோய்களுக்காக தற்போது அவர் பெயர் பெற்றுள்ளார் என்பது தெரிய வரும். அதாவது, தன்னுடைய specialty ஐ அவர் தேர்வு செய்து, அதில் வெற்றி பெற இத்துனை ஆண்டுகள் ஆகி இருக்கிறது. அவருக்கான அந்த specialty ஐ அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப காலகட்டத்திலேயே தேர்வு செய்து இருந்தாரானால், இந்நேரம் இந்திய அளவில் புகழ் பெற்று இருப்பார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று கூட வெளிநாடு மற்றும் உள்நாட்டு அன்பர்கள் நம்மிடம் அதிகமாக கேட்கும் கேள்விகளில் ஓன்று, குழந்தை இன்மைக்காக சிறப்பான சித்த மருத்துவர் யாராவது உண்டா? புற்று நோயை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவர் எங்கு இருக்கிறார்? நீங்கள் எந்த நோய்க்காக சிறப்பான சித்த மருத்துவம் செய்கிறீர்கள்? என்ற இந்த கேள்விகளுக்கு நம் சித்த மருத்துவர்கள் அளிக்கும் பதில் “நாங்கள் 4448 நோய்களையும், இன்னும் கண்டு பிடிக்காத எல்லா நோய்களையும், மூன்றே நாளில் அற்புதமாக சுகமளிப்போம்”. இந்த பதிலே நோயாளிகளுக்கு நம் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒரு பொறுப்புள்ள சித்த மருத்துவராக, எனது நோயாளிகளை யாரிடம் அனுப்புவது என்பதில் எனக்கே பல நேரங்களில் குழப்பம் மிஞ்சி இருக்கிறது. உண்மையை சொல்ல போனால், எனக்கே எனது சக சித்த மருத்துவ நண்பரிடம் “போதிய” நம்பிக்கை வரவில்லை என்பதை நினைத்தால் மனசு வலிக்கிறது. ஒரு முறை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவரை, முன்னணி சித்த மருத்துவரிடம் நான் செல்லுமாறு அறிவுறுத்திய போது, அவர் சொன்னார்; “டாக்டர்.. நீங்களும், மற்ற சித்த மருத்துவர்களும், அவரும்தான் சொல்கிறீர்கள் அவர் சிறந்த மருத்துவர் என்று. அவரிடம் சென்ற நோயாளிகள் எவரும் அப்படி என்னிடம் சொல்லவில்லையே”. ஆக சமுதாயத்தில் பெயர் (popular) பெற்ற சித்த மருத்துவரை கூட சிகிட்சை என்று வரும்போது, நோயாளிகள் நம்ப தயார் இல்லை. ஏன் இவையெல்லாம் நிகழ்கிறது? இன்றைய அறிவியல் யுகத்தில், ஒரு சித்த மருத்துவர், உலகில் உள்ள எல்லா நோய்களை பற்றியும், அதை கண்டு பிடிக்கும் வழிவகைகளை பற்றியும், மூலிகை மருந்துகளை பற்றியும் தெரிந்து வைத்திருப்பது சாத்தியமில்லைதானே. எனவே ஒன்று அல்லது இரண்டு நோய்களை மட்டுமே தேர்வு செய்து அதில் வல்லுனராக, நிபுணராக இருந்து பயிற்சி செய்தால், தானும் வளர்வோம், நமது சித்த மருத்துவமும் வளரும். நமது நோயாளிகளிடம், அவரின் நோயை பற்றிய அறிவியல் பின்புலத்தையும், சித்த மருத்துவ பின் புலத்தையும், தெளிவாக விளக்கி, எல்லா மருத்துவ முறைகளின் சிகிட்சை முறைகளை ஒப்பிட்டு பார்த்து, பயன் மிகுந்த சித்த மருத்துவத்தை, உணவுகளை, பத்தியத்தை, யோகா பயிற்சியை, பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை, வாழ்வியல் முறைகளை சரிவர பரிந்துரை செய்ய முடியும். நமது படிப்பு, அனுபவம் மற்றும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, பிற மருத்துவ முறைகளில் உள்ள சிகிட்சை முறைகளையும் பரிந்துரை செய்யலாம், அல்லது அதற்கேற்ற சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைக்கலாம். இப்படி சிறப்பு சித்த மருத்துவராக பயிற்சி மேற்கொள்ளும் போதுதான், பல நோயாளிகளுக்கு குறிப்பாக பலநோய் தொகுதிகள் (Comorbid conditions) கொண்டவர்களுக்கு நம்மால் சரிவர கவனம் செலுத்த இயலும். உதாரணமாக, கல்லடைப்பு (kidney stone) நோயாளர் சித்த மூலிகை மருத்துவம் உட்கொள்ளும் காலத்தில், அதிக அளவில் சிறுநீரும் அத்துடன் பொட்டாசியம் சத்தும் வெளியேறும். பொட்டாசியம் சத்து உடலில் குறைந்தால், இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரந்து, அதனால் அவருக்கு தற்காலிகமாக அதிகுருதி இனிப்பு சத்து (hyperglycemia) மிகும். ஒருவேளை அந்த நோயாளி ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவரானால், அவருக்கு கல்லடைப்பு நோய்க்கான மூலிகை சிகிட்சை செய்யும்போது, நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாமல் போகும். இது போன்ற மருத்துவ நுட்பங்கள், இவற்றை கையாளும் முறைகள், இந்த அறிவை நோயாளிகளுக்கு முன்கூட்டியே சொல்வது, நவீன மருத்துவரிடம் இதை நேரடியாக ஒப்புக் கொள்வது, அதனால் ஒருங்கிணைந்த சிகிட்சை முறைகளை உருவாக்குதல் (Integrative treatment protocol) போன்ற எண்ணற்ற பெரும்செயல்களை நம்மால் செய்ய இயலும். இந்த நுண்ணறிவுகளை ஆராய்ச்சி கட்டுரைகளாக சமர்ப்பிக்கலாம், இதை அடிப்படையாக வைத்து, அரசும் கூட சுகாதார திட்டங்களை வகுக்கலாம். சித்த மருத்துவரும், சித்த மருத்துவமும் மக்கள் மத்தியிலும், உலக மருத்துவ அறிவியல் சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்றாகும்.
8. நண்பர்களுக்கிடையே நோயாளிகளை பரிந்துரை செய்வோம்: நான் பீனிசம் (sinusitis) மற்றும் மரு (warts) என்ற இரண்டு நோயாளிகளை சிறப்பாக கவனித்து வருகிறேன் என்று வைத்து கொள்வோம். அதைபற்றிய விழிப்புணர்ச்சி சக சித்த மருத்துவர்கள் மற்றும் நவீன மருத்துவர்களிடம் நான் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், அது சம்பந்தமான நோயாளிகளை நமக்கு அவர்கள் பரிந்துரை செய்வார்கள். ஒருவேளை நமது நண்பர் (சித்த மருத்துவர்) அதைப்பற்றி கேட்டால் கூட, நாம் மனம் திறந்து அந்த மருந்துகளை சொல்வதற்கு தயங்க வேண்டாம். நமது பிழைப்பில் அவர் கைவைத்து விடுவார் என்று நாம் எண்ணாமல், மனம் திறந்து பேசும்போதுதான், அவர்களுக்கு நம்மீது ஒரு நோயாளியை நம்மிடம் பரிந்துரைக்கும் அளவு நம்பிக்கை ஏற்படும். ஒருவேளை, அவரிடம் பேசும்போது, நமக்கே புதிய தகவல்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் நண்பர் இதே நோய்க்கு சிறப்பாக பயிற்சி செய்வாரானால், அவரை வாரம் ஒரு முறை உங்கள் கிளினிக்குக்கு consultant ஆக அழைத்து உங்கள் நோயாளிகளை பயன்பெற செய்யலாம். இதேபோல், நம்மிடம் வரும் நோயாளி சிறுநீரக கல்லடைப்புக்கு மருந்து கேட்டால், நாம் எந்த சித்த மருத்துவர் கல்லடைப்புக்கு சிறப்பாக பயிற்சி மேற்கொள்கிறாரோ, அவரிடம் பரிந்துரை செய்து விடுவது சிறப்பு. இவையெல்லாம், நோயாளிகள் மத்தியில் நல்ல எண்ணங்களை சித்த மருத்துவம் மற்றும் சித்த மருத்துவர் மீது ஏற்படுத்தும். sinusitis மட்டுமே பயிற்சி செய்யும் நான், கல்லடைப்பு பயிற்சி செய்யும் என் நண்பரை எனது கிளினிக்குக்கு வாரம் ஒரு முறை consultant ஆக அழைக்கும் போது, எனது கிளினிக்கு இன்னும் பல நோயாளிகள் வந்து செல்வர், எனது வருமானமும் அதிகம் ஆகும்.
சித்தம் தெளியும் (சித்தம் வளரும்) |
||||||||
by Swathi on 10 Aug 2018 7 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|