|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 08 : பெண் சித்த மருத்துவர்களின் முன்னேற்றமே, சித்த மருத்துவத் துறையின் முன்னேற்றம் |
||||||||
சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(Siddha), M.Sc.(Medical Pharmacology), M.Sc.(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கூற்றுப்படி ஆணுக்கு பெண் நிகரென கொண்டால், இந்த வையகம் தழைக்குமாம். இதற்கு ஒரு படி மேலே போய், சித்த மருத்துவ துறை ஆண்களை விட பெண்களை அதிகமாக கொண்டுள்ளது. சராசரியாக நூற்றில் எண்பது (80%) விழுக்காடு பெண் சித்த மருத்துவர்களை கொண்டுள்ளது நம் சித்த மருத்துவ துறை. இந்தியாவிலேயே முதன் முதலாக ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க வேண்டுமானால், அது சித்த மருத்துவ துறைக்காகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், இன்னும் வருங்காலங்களில், முழுக்க முழுக்க பெண்கள் மயமாகி, எங்கு நோக்கினும் சித்திகளாக ஆகிப்போகும் வாய்ப்பும் உள்ளது. கல்லூரி படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிக இடங்ககளை கைப்பற்றுவதால், ஆண்கள் சித்த மருத்துவ துறையில் ஏதோ அதிசய பிறவி போல காட்சியளிக்கின்றனர். அதிகப்படியாக வேலை வாய்ப்புகளை கைப்பற்றும் பெண்களில் ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர் எதிர்பார்த்த அளவு முழுமையாக பங்களிப்பை சித்த மருத்துவத்துறைக்கு அளிக்க முடிவதில்லை. இந்த பெண் சித்தர்களின் (சித்திகள்) திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று யோசித்தல் நலம். இன்றளவும் பாரதியின் அந்த கூற்று சித்த மருத்துவத்தில் ஏன் நிறைவேறாமல் போனது, அதை எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என விசாலமாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். BSMS சித்த படிப்புக்கு எதற்காக சேருகிறார்கள்: பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர், மருத்துவம் (MBBS) கிடைக்காத பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் அடுத்து தேர்ந்தெடுக்கும் துறை சித்த மருத்துவம். ஏனென்றால், இதில் MD (siddha) படிக்கலாம், அரசு வேலை கிடைக்கும், நல்ல வசதியான மாப்பிள்ளையிடம் பெண்ணை ஒப்படைக்கலாம் என்ற மூன்றே சுயநல எண்ணங்கள்தான் தனது பெண்ணை சித்த மருத்துவப் படிப்புக்கு சேர்க்க நினைக்கும் காரணிகள் ஆகும். ஒரு சராசரி பெற்றோராக இந்த மூன்று காரணங்களும் நியாமானவையே. இவர்களை சந்தர்ப்ப சூழ்நிலையால் சித்த மருத்துவ கல்லூரயில் சேர்பவர்கள் என்று கொள்ளலாம். இந்த எண்ணத்தில் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகிறது என்பதை இந்த கட்டுரையை முழுவதும் வாசித்த பின்னர் உணர்ந்து கொள்வீர்கள். அடுத்த பிரிவு, பாரம்பரிய சித்த வைத்தியரின் மகள்கள், சித்த மருத்துவத்தால் பயன்பெற்ற குடும்பத்தை சேர்ந்த பெண்கள், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த குடும்பம், தமிழ் பற்றாளர்கள், என்று பெண் பிள்ளைகள் விருப்பத்தின் பெயரில் சித்த மருத்துவத்தை படிக்கிறார்கள். இந்த பிரிவினர் வாழ்க்கையில் சித்த மருத்துவம் இரண்டற கலந்து இருக்கும். பொதுவாக மாநிலத்தில் எல்லா படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று, முதலாவது இடைத்தேர்வு நடந்த பின்னர்தான் சித்த மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். உதாரணமாக, ஜுன் மாதம் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவ துணை படிப்புக்கள், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடை, கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான சேர்க்கைகள் அடுத்த மூன்று மாதத்துக்குள் நடைபெறு விடும். அதன் பின்னர்தான், அக்டோபர் மாதம் சித்த மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். மற்ற படிப்புகளில் இடம் கிடைக்காமல், மற்ற படிப்புகள் சேர்ந்து படிக்க முடியாமல், மற்ற படிப்புகள் பிடிக்காமல், ஏதோ நல்ல படிப்பு படிக்க வேண்டும், அரசு வேலை வேண்டும் என்ற எண்ணத்துடன், விண்ணப்பங்கள் வாங்கி, ஒற்றை சாரளர் முறையில் சித்த மருத்துவம் சேர்வதற்குள், தன் நண்பன் பொறியியல் மற்றும் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி இருப்பான். இந்த மூன்றாவது வகையினர் பெரும்பாலும் விளம்பரம் செய்யும் சித்த மருத்துவ வியாபாரிகளாகவும், ஊசி போடும் முழு நேர அலோபதி மருத்துவராகவும் வலம் வரக்கூடிய எல்லா தகுதிகளும் ஒருங்கே கொண்டவர்கள். சில ஆர்வமுடைய மாணவர்கள் சித்த மருத்துவம் படிக்க விரும்பியும், வேறு படிப்பில் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டதால், மறுபடியும் அந்த கல்லூரியை விட்டு விட்டு வருவதில் பல சிக்கல்கள் இருகின்ற காரணத்தினால், தனது ஆசை கனவான சித்த மருத்துவம் படிக்க முடியாமல் போய் விடுகிறது. உதாரணமாக, ஒரு மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூயில் சேர்ந்த பின்னர், மூன்று மாதங்கள் கழித்து சித்த மருத்துவம் படிக்க வெளியேற நினைத்தால், நான்கு வருடத்தின் மொத்த கட்டணங்களையும் செலுத்தாமல், வெளியே வர முடியாது. பல தனியார் கல்லூரிகளில், சேர்க்கையின் போது வாங்கி வைக்கும், மதிப்பெண் சான்றிதழ்களை இடையில் நிர்வாகம் தருவதில்லை. எனவே, உரிய காலத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான கவுன்சிலிங் நடைபெறும்போதே, சித்த மருத்துவத்துக்கான சேர்க்கையும் ஒருங்கே நடைபெற்றால் மட்டுமே, தரமான, ஆர்வமான மாணாக்கர்களை சித்த மருத்துவ துறை கிடைக்கப்பெறும் என்பது மக்களின் பொதுவான கருத்து ஆகும். இதற்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த மூன்று வகையினரும், சித்த மருத்துவக் கல்லூரயில் சேர்ந்த பின்னர், நல்ல ஆசிரியர்கள், நல்ல மூத்த மாணவர்கள், நல்ல தோழர்கள் என சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் போது, சித்த மருத்துவத்தை தனது வாழ்வாதாரமாகக் கொள்ளவும், துறை வளர்ச்சிக்கு தனது பங்கினை தருபவராகவும் இருக்கிறார்கள். எவரொருவர் சித்த மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல், வெறுமனே BSMS மற்றும் MD (Siddha) படிப்புகளை முடிக்கிறார்களோ, அவர்களால் சித்த மருத்துவ துறைக்கு எந்த பயனும் இல்லை, மாறாக அவர்கள் ஒரு சுமையாக அமைந்து விடுகின்றனர். அவர்களில் சிலர், அரசு மருத்துவராகவோ, ஆசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பணியில் சேரும் போது, நம் துறையின் வளர்ச்சிக்கு அவர்களால் உரிய பங்கை அளிக்க இயலாமல் போவது மிகுந்த வருத்தத்திற்குரிய விடயமாகும். எது எப்படியோ, ஒரு வழியாக அரசு வேலை வாங்கி விடவோ, நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்பதோ அனைத்து பெண் சித்த மருத்துவ மாணவிகளின் பெற்றோர்களின் உயரிய கனவாக இருக்கிறது.
சித்த மருத்துவக் கல்லூரிக்குள் பெண்கள்: கல்லூரயில் நுழைந்தவுடன் அங்கே தமிழ் மணம் வீசும், சேலைதான் கட்ட வேண்டும், சித்தர்களின் தமிழ் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும், பல கிராமத்து நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணாக்கர்களுடன் பழக வேண்டும், லேகியம் கிண்ட வேண்டும், கஷாயம் காய்ச்ச வேண்டும், என அந்த எதிர்பாராத திடீர் சூழல் மாற்றம், மாணவிகளையை இரு நூற்றாண்டுகளுக்கு பின்னே கொண்டு சென்று விடும். இங்கே நூறில், பத்து அல்லது பதினைந்து ஆண்கள் மட்டுமே இருபார்கள், எந்த வித எதிர்கால திட்டமும் இல்லாமல், தனது பெயருக்கு முன்னால் வரப்போகும், Dr. என்ற இரண்டு எழுத்துக்காகவும், அரசு வேலைக்காகவும், டாக்டர் என்ற முகவரியுடன் திருமணம் செய்துகொள்ளவும், மட்டுமே கல்லூரி நாட்களை கடத்தும் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள், தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள். பெரும்பாலும் சித்த மருத்துவ பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்தே இருப்பதால், தனக்கு தெரிந்த தமிழ் மொழிதானே எப்போது வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் என்ற அசட்டு தைரியமும், எப்படி வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டாலும், சுக்கு, மிளகு, திப்பிலி - வாதம், பித்தம், கபம் என்று ஏதாவது பதில் எழுதி தேர்வில் பாஸ் ஆகிவிடலாம் என்ற அசட்டு தைரியமும் சேர்வதால், கற்க வேண்டிய காலத்தில் சித்த வைத்திய நுணுக்கங்களை கற்காமல் மாணாக்கர்கள் போகின்றார்கள். அவர்கள் பிற்காலத்தில் சமுதாயத்தில், நோயாளிகளிடத்தில், கூனிக் குறுகி நிற்க வேண்டிய காலங்களில் ஏற்படும் காட்சிகள் ஏராளம். நம் கல்லூரிகளின் அமைப்புகளும், சூழ்நிலைகளும், கலாச்சாரமும் சங்ககாலத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டு இருப்பதால், வேறு துறை படிக்கும் நமது தோழர்களை சித்த மருத்துவ கல்லூரிக்கு உள்ளே அழைத்து வந்து காட்டுவதற்கு கூட நாம் தயங்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. உதாரணமாக, வசதியற்ற அழுக்கடைந்த விடுதி, கரப்பான் பூச்சி உலா வரும் உணவகம், நாற்றம் அடிக்கும் ஆய்வுகூடம், காய்ந்த மூலிகை தோட்டம், வண்ண பூச்சி பாதி களைந்த கட்டிடங்களின் பழமை, லேகிய வாசனைகள் என பலவற்றை சொல்லலாம். இதுவே சிலரிடத்தில், நாம் தவறான இடத்தில் தவறான படிப்பை படிக்கிறோமோ என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். இந்த நிலை மாற கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் சேர்ந்தே முயற்சிக்க வேண்டும். மாணவர் பருவத்தில் சட்டை காலரை தூக்கி விட்டு நண்பர்களை கொண்டு வந்து காட்டும் படி தமது கல்லூரி சகல வசதியுடன் இருப்பதையே எவரும் விரும்புவர். அடிக்கடி கலைநிகழ்சிகள் நடத்துவதும், கல்லூரிகளுக்கிடையேயான கலைநிகழ்சிகளில் பங்கேற்பதும் என உங்கள் மற்ற திறமைகளை அவ்வப்போது மெருகேற்றி கொண்டே இருக்கவேண்டியதும் அவசியமாகிறது.. பிற்காலங்களில் ஊடகங்ககள் வாயிலாக தங்களை நிலைநிறுத்தவும் சித்த மருத்துவத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த திறமைகள் அவசியமாகிறது. அடுத்து, தெரிந்தோ தெரியாமலோ, சித்த மருத்தவம் படிக்க சேர்ந்து விட்டோம். எனவே, அய்யா அப்துல் கலாம் வாக்குப்படி, நீங்கள் உங்கள் வருங்காலத்தை பற்றிய கனவு காணுங்கள், அதற்காக தயார் ஆகுங்கள் என்ற கூற்றுப்படி, நான் படிக்கும் காலங்களிலேயே, எனது வருங்காலத்தை கனவில் நிறுத்தி விட்டேன். அதற்கு எனது ஆங்கில அறிவும், கணினி அறிவும் போதுமானதாக இல்லை என நான் உணர்ந்தேன். BSMS ஐந்தாம் ஆண்டு, உறைவிடப் பயிற்சி (house surgeon) காலம், மூன்று வருடம் MD (Siddha) என மொத்தமாக ஐந்து வருடம் தொடர்ந்து நான் பாளையங்கோட்டை மேற்கு பஜார் வீதியில் ஆங்கிலமும், ஏதாவது ஒரு கணினி பயிற்சி நிறுவனங்களில் தொடர்ந்து ஏதேனும் புதிய புதிய கம்பியூட்டர் வகுப்பும் படித்து கொண்டே இருந்தேன். இவைகள், வருங்கால திட்டத்துக்கு தம்மை தயார்படுத்தவும், சமகால அறிவியல் உலகில் தகவமைத்து கொள்ளவும், மனதில் ஒருவித நம்பிக்கையை உண்டாக்கவும் அவசியமாகிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால், மூத்த சித்த மருத்துவ அதிகாரிகள் பலரும் இன்றும் ஆங்கிலத்தில் உரையாட தயங்குகிறார்கள், அவர்களுக்கு கணினியை இயக்குவதில் சிரமம் இருக்கிறது. எப்போதும் மற்றவரை நம்பியே பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது. துணித்து பல ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுப்பதிலும், காரசாரகாக ஆங்கிலத்தில் விவாதம் செய்ய வேண்டி இருந்தால் செய்வதிலும், முன்மாதிரியான செயல்களை வித்தியாசமாக செய்வதிலும் முடியாமலே போய்விடுகிறது. “சாதனையாளர்கள் புதிது புதிதாக செயல்களை செய்வதில்லை, அன்றாடம் செய்யும் செயல்களையே புதிய விதமாக செய்கிறார்கள்” என்பது ஷிவ்கேரா என்ற உளவியல் நிபுணரின் கருத்து. உலகத்தோடு ஒத்துப்போக வேண்டி இருப்பதால், ஆங்கிலம், பல மொழிகள், கணினி போன்ற அடிப்படை அறிவுகளை கல்லூரி காலத்திலேயே நாம் வளர்த்தெடுத்தால், வருங்காலத்தில், சொந்த காலில் நிற்கவும், தனியார் பயிற்சிக்கும் மிகவும் உதவும். இல்லையெனில, சவால்களை சந்திக்க சிரமங்களை நேரிடும். நல்ல ஆசிரியர்கள், நல்ல மூத்த மாணவர்கள், நல்ல தோழர்கள், நல்ல வைத்தியர்கள் என சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் போது, சித்த மருத்துவத்தை மூலதானமாக வைத்து தனது வாழ்வை கட்டமைக்கும் நம்பிக்கையை அந்த பெண் பெறுகிறாள். இந்த வகையினர் தான் சித்த மருத்துவத்தின் வருங்கால முதுகெலும்பான மாணாக்கர்கள். கல்லூரி காலத்தில் ஒவ்வொரு மாணாக்கருக்கும் வருங்காலத்தை பற்றிய தெளிவும், கனவும் இருக்க வேண்டும். அந்த கனவுக்கேற்ப தன்னை தயார் படுத்தி கொள்ளவே கல்லூரி நாட்களை முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்பதை நம்மில் பலரும் மிகவும் கால தாமதமாக உணர்ந்து இருக்கிறோம். உதாரணமாக, ஒரு மாணவி, வருங்காலத்தில், தான் ஒரு கருப்பை நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் அல்லது குழந்தையின்மைக்கான மருத்துவம் அல்லது புற்று நோய்க்கான மருத்துவம் என்று ஒன்றை மனத்தில் நிறுத்த வேண்டும். அது சம்பந்தமான எண்ணிலடங்கா சித்த மருத்துவ குறிப்புகள், புத்தகங்கள், நூல்கள், மூத்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், மாநாடுகள், மருத்துவ இதழ்கள் என தேனீ போல அனைத்தையும் சேகரிக்கப் பழக வேண்டும். கல்லூரயில் வரும் நோயாளிகளை முழு ஈடுபாட்டுடன் கவனித்தால் போதுமானது, நோயாளிகளின் உடல் உங்களுடன் பேசும், சித்த மருந்துகள் உங்களுடன் பேசும். அத்தனை வகையான, நாள்பட்ட நோயாளிகளை வைத்து நாம் பாடம் படிக்க கல்லூரி நமக்கு கொடுத்த வரப்பிரசாதமே, வெளி மற்றும் உள் நோயாளர் பகுதிகள். ஒவ்வொரு நோயாளரும் ஒரு தனி உலகம் (அண்டத்தில் உள்ளதே பிண்டம்) என்ற அடிப்படையில், அந்த நோயாளியை ஆசிரியர் மற்றும் மூத்த மாணாக்கர்களின் துணை கொண்டு, முழுவதும் நமது அறிவை வளர்ப்பதற்கு பயனபடுத்த வேண்டும். நாடி, நோய் குறிகுணங்கள், நெய்க்குறி, நவீன சிகிட்சை முறைகள், சித்த மருத்துவ முறைகள், ஆய்வு அறிக்கைகள், பத்திய முறைகள், யோக முறைகள், கை வைத்தியம் போன்ற அத்தனையும் அவ்வப்போதே தெரிந்து மண்டையில் ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அந்த நோய் எவ்வாறு வெளிப்படுகிறது, மருந்து கொடுத்த பின்னர் எப்படி ஆகிறது, அதிகமாகி விட்டால், எப்படி கையாள்வது, நோயாளியின் உடல் யாக்கைக்கு ஏற்ப எப்படி உணவை தெரிவு செய்வது, பல சித்த மருந்துகளில் எந்த மருந்து எப்போது பலன் தரும், போன்ற அத்தனை தகவல்களும் நோயாளிக்கு நோயாளி வேறுபடும். மீண்டும் ஒரு முறை இதே நோயாளியை அல்லது இதே போன்ற நோயாளியை படிக்கும் காலத்தில் பார்க்கக் கூட வாய்ப்ப்பு ஏற்படாமல் போகலாம். பின்னாளில், நமது சொந்த மருத்துவமனையில், இதேபோன்ற ஒரு நோயாளி வரும்போது, நமது மனக்கண்ணில் பழைய நோயாளியின் உடலும், அப்போது கொடுத்த மருந்துகளும் நம்மிடம் பேசும். மருத்துவ துறையின் ஒரு முக்கிய சிறப்பே, எப்பவோ ஒரு முறை நாம் பார்த்த ஒன்று மறுபடியும், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தேவைப்படும் போது, நமது மூளை அதை தேடிப்பிடித்து உடனே கொண்டு வந்து மனத்திரையில் நிறுத்தும். இந்த ஒரு சிறப்புதான் பல கைராசி மருத்துவர்களின் தொழில் ரகசியம் ஆகும். இதற்கு ஒரே வழி, கண்ணும் கருத்துமாக கல்லூரி காலத்தில், ஒவ்வொரு நோயாளியையும் அணு அணுவாக படித்து நம் மூளையில் ஏற்றுவதுதான். ஆராய்ச்சி மனப்பன்மையுடன், சித்த மருத்துவத்தை அணுகுங்கள். நான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, ஒருநாள் ஒரு கன்னியாஸ்திரி, ஆறு முதியவர்களை வெளி நோயாளர் பிரிவுக்கு அழைத்து வந்தார். தனக்கும், அந்த ஆறு பேருக்கும் உரிய மருத்துவர்களை பார்த்து மருந்து வாங்கி முடிக்க சாயங்காலம் ஆகி விட்டது. இதை கவனித்த நான் அந்த ஆறு பேரில் ஒரு பாட்டியிடம் விசாரித்தேன். அதன் பின்தான் தெரிந்தது, அவர்கள் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் சிரமம் இருகிறது என்பதும். அதன்பின், நான் என் நண்பர்களுடன் அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று பார்த்தோம். வீடுகளில் இருந்து கைவிடப்பட்ட அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என நினைத்த நாங்கள், வாராவாரம், சனிக்கிழமை மாலை அங்கே சென்று பொது பரிசோதனை செய்வோம், சித்த மருந்துகளை கொடுப்போம். நாங்கள் பாளையங்கோட்டையில் இருக்கும் வரை இதை செய்தோம். இவ்வாறு நாம் கல்வி கற்பதற்கும், சேவை செய்வதற்கும் வாய்ப்பை நாமே உருவாக்கி கொள்ளலாம். நீங்களும் அருகில் இருக்கும் முதியோர் இல்லங்கள், பெற்றோர்கள் கைவிட்ட குழந்தைகள் இல்லங்கள், உடல் மற்றும் மூளை குறைபாடு குழந்தைகளுக்கான இல்லங்கள் என ஒன்றையும் விட்டு வைக்காதீர்கள். எல்லா இடங்களிலும் கதவை தட்டுங்கள். மக்களிடம் நாம் சித்த மருத்துவத்தை கொண்டு சேர்ப்பதற்கான இந்த வழியில், நாமும் பலன் பெறுவதோடு, துறை வளர்ச்சியும் அதில் அடக்கம். மேலும் கல்லூரி நிர்வாகம் மூலமாக, இலவச சித்த மருத்துவ முகாம்களையும், ஆலோசனை மையங்களையும், சுற்றி உள்ள பள்ளி, கல்லூரிகள், கிராமங்களில் செயல்படுத்தலாம். எனக்கு தெரிந்த பல மூத்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சிறந்த முறையில் நோயாளிகளை கவனித்ததால், அவர்கள் படித்துச் சென்ற பிறகு கூட நோயாளிகள் நம்மிடம் அவர்களைப் பற்றிய நினைவை அசைபோடுவார்கள். அதாவது உங்களால் பலன் பெற்ற நோயாளிகள், அவர்கள் காலம்வரைக்கும் உங்களை நினைவில் நிறுத்தி, ஆசீர்வாதம் அளிக்கவே செய்கின்றனர். பல மருத்துவ மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே நிறைய நோயாளர் கூட்டத்தை வைத்திருந்த காரணத்தால், படித்து முடித்த உடனே, தனியார் பயிற்சியை ஆரம்பித்தும் விட்டனர். மற்றொரு நண்பர் படிக்கும் காலத்திலேயே, வாரா வாரம் வீட்டுக்கு சென்று அங்கு நோயாளிகளை பார்ப்பார், வீட்டிலிருந்து வரும் போது நிறைய தின்பண்டங்களை எங்களுக்கு எடுத்து வருவார். அவரால் படிப்பு முடித்த உடனே சித்த மருத்துவ பயிற்சி வெற்றிகரமாக ஆரம்பிக்க முடிந்தது. இதைப்போல, உங்களை நீங்கள் வளர்த்து எடுக்கவும், உங்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாய் இருப்பது அவசியம். ஒரு வேளை சித்த மருத்துவ துறை தமக்கு ஏற்ற துறை இல்லை என தெரிய வந்தால், கண்டிப்பாக, உங்களுக்கு பிடித்த வேறு படிப்புக்கு போய் விடுங்கள். ஆயுள் முழுதும் அறை குறை சித்த அறிவு மற்றும் ஆர்வத்தை கொண்டு, அவமானத்தால் கூனி குறுகி சிரமப்படுவதைவிட, உங்களுக்குப் பிடித்த படிப்பை படித்து விட்டு, நிமிர்ந்த நன்னடையுடன் வாழுங்கள். BSMS படிப்பு முடித்த பிறகு, MD (Siddha) படிப்பு உங்களுக்கு அவசியமா, அவசியமெனில் எந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் உண்டு என்பதை அறிந்து, சேர வேண்டும். ஒருவேளை வீட்டில் சும்மா இருக்க போவதாக முடிவெடுத்து விட்டால், தயவு செய்து MD (Siddha) படிப்பு சேர வேண்டாம், வேறு ஒரு ஆர்வமான மாணவருக்கு நீங்கள் வழி விடுவது இந்தத் துறைக்கு நீங்கள் செய்யும் சேவையாகும். ஒரு மாணவர் BSMS, MD (Siddha) படிப்புகளை முடித்து வெளி வருவதற்கு அரசு செய்யும் செலவும் MBBS, MD க்கு ஆகும் செலவும் சமம் ஆகும். எனவே, ஒவ்வொரு சித்த மருத்துவரும் தமக்கு உள்ள சமுதாய பொறுப்பினை உணர வேண்டும். ஒரு சித்த மருத்துவ மாணவர் உருவாகும் போதும், அவருக்கென குறிப்பிட்ட நோயாளிகளும் உருவாக்கப்பட்டு விடுகிறார்கள். அரசும், நாட்டு மக்களும் நம்மிடம்தான் சித்த மருத்துவ துறையை வளர்த்து எடுப்பதற்காக கொடுத்து இருகின்றனர் என்பதை மனத்தில் இருத்த வேண்டும். இந்த நோக்கம் சரியாக இருந்தால் உங்கள் இலக்கை அடைவதற்கு சித்தர் பெருமக்கள் காத்து கிடக்கின்றனர்.
படித்தாகி விட்டது, அடுத்து என்ன செய்வது: பொதுவாக பெண் சித்த மருத்துவர்களின் படிப்பு முடித்த பிறகு, திருமணம் செய்து வைப்பதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வர். உடனடியாக திருமணம் செய்து கொள்வதா, அல்லது தனியார் பயிற்சி ஆரம்பிப்பதா, தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதா, அரசு மருத்துவர் வேலைக்கு காத்து கிடப்பதா, என முடிவெடுக்க முடியாமல் திண்டாடும் அது வாழ்வின் மிகவும் கடினமான காலக்கட்டமாகும். அரசு வேலை கிடைத்துவிட்டால் நல்ல வரன் கிடைக்கும், அதுவரை பொறுத்து இருக்கலாம் என்று சிலர் நினைத்து இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அரசு தேர்வுக்காக காத்துக்கிடப்பர். சிலர், திருமணமானால் வேறு இடத்திற்கு மாறவேண்டியது இருக்கிறதே, அதனால் இப்போது சொந்த கிளினிக் ஆரம்பிக்க வேண்டாம் என்று தள்ளிப்போட்டு கொண்டே இருப்பர். ஆக, திருமணம் செய்த பின்னர் சித்த மருத்துவ பயிற்சியை ஆரம்பிப்பதா, இல்லை, பயிற்சியை ஆரம்பித்து விட்டு பிறகு திருமணம் செய்து கொள்வதா என்ற குழப்பம் பலரிடமும் இருக்கிறது. சிலருக்கு உடனடியாக அரசு வேலை கிடைத்து விடும், திருமணமும் நல்ல இடத்தில் நடந்து விடும். சிலருக்கு திருமணம் முதலில் நடக்கும், அதன் பின்னர் அரசு வேலை கிடைத்து விடும். இந்த வேலை முன்னமே கிடைத்து இருந்தால், இவரை விடவும் கொஞ்சம் பெரிய இடமாக, நல்ல படிப்புடன், நல்ல வேலையுடன் மாப்பிள்ளை கிடைத்து இருப்பாரே என்ற ஒரு மனவலியும் அவ்வப்போது தொந்தரவு செய்வதை, என்னிடம் பல பெண் சித்த மருத்துவர்கள் பகிர்த்து இருக்கிறார்கள். பல பெண் சித்த மருத்துவர்கள், வேலை கிடைக்கும் வரை திருமணம் இல்லை என்று, வந்த வரனையும் திருப்பி அனுப்பி கொண்டே இருப்பார்கள். பலர் இப்படியே காலத்தை தள்ளி, கடைசியில் வேலையும் கிடைக்காமல், திருமணமும் ஆகாமல், பெண்ணின் அடுத்த பருவத்துக்கே கடந்து போகிறார்கள். மிகச் சிலர் தனியாக கிளினிக் அல்லது வேலையை தேடிக்கொள்வர், அவர்கள் வேலையையோ அல்லது திருமணத்தையோ எதிர்பார்த்து காத்து இருக்காமல், ஆக வேண்டியதை செய்வார்கள்.
பெண் சித்த மருத்துவர்களின் திருமண வாழ்க்கை: ஒரு கருத்தை ஆணித்தரமாக நான் வலியுறுத்த விரும்புகிறேன். நான் எதிர்காக திருமணம் செய்யது கொள்ள போகிறேன், எந்த மாதிரி மாப்பிள்ளை எனக்கு வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதை குறித்த தெளிவு கண்டிப்பாக ஒவ்வொரு பெண் சித்த மருத்துவருக்கும் இருக்க வேண்டும். முதலில் தான் ஒரு சித்த மருத்துவர் என்பதையும், தனக்கு உள்ள சமுக பொறுப்பையும் உணர வேண்டும். உங்களின், வாழ்வின் குறிகோளை அல்லது லட்சியத்தை அடைய வேண்டுமானால் எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்பதை உங்கள் பெற்றோரிடம் விவாதியுங்கள், தெளிவு பெறுங்கள். பெரும்பாலான பெண்கள் இதை செய்யாததால், பல இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல, 80 சதவீதம் பெண்களுக்கு, 20 ஆண் சித்த மருத்துவர்களே இருக்கிறார்கள். எனவே, அனைத்து பெண்களுக்கும் சித்த மருத்துவ ஆண்கள் மாப்பிள்ளையாக கிடைக்க முடியாது. அப்படி ஒருவேளை சித்த மருத்துவ வரன் வருமாகில், அதற்கு முக்கியத்துவம் தரலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. சித்த மருத்துவர் கணவரானால், நமது துறை, நமது கலாச்சாரம், சித்த மருத்துவ பயிற்சியின் நிறை குறைகளை தெரிந்து வைத்து இருப்பார், உங்களுக்கு சொந்த சித்த மருத்துவ பயிற்சிக்கு பக்க பலமாக கண்டிப்பாக இருப்பார். இது இப்படி இருக்க, உண்மை நிலவரம் என்னவென்றால், இந்த 20 ஆண் சித்த மருத்துவர்களில், வெறும் 5 பேரைத்தான் சித்த மருத்துவ பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். மீதம் இருக்கும் 15 பேரும், வாய்ப்புகள் மறுக்கப்படிருப்பதாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, வேறு துறை பெண்களை திருமணம் செய்ய வேண்டிய சூழல் எழுகிறது. மாப்பிள்ளை தேடும் படலத்தில் பல காரணங்கள் இருப்பதால், நாம் எல்லாரையும் சித்த மருத்துவ தம்பதிகளாக ஆவதற்கு வலியுறுத்த முடிவதில்லை. அவ்வாறு அமைந்து விட்டால், அது சிறப்புதான். பொதுவாக ஆயுஷ் மருத்துவத்துறை, அலோபதி மருத்துவ துறை, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உள்ளவர்களை கணவராக அடைந்த பெண் சித்த மருத்துவர்கள் ஓரளவு சித்த மருத்துவ பயிற்சியில் பக்க பலத்தை அடைகிறார்கள். குறிப்பாக கிளினிக் வைத்த ஆரம்ப கட்டத்திலே நோயாளிகள் வருவதில்லை, பணம் சம்பாதிக்க முடிவதில்லை, மருந்துகள் வாங்குவது அல்லது செய்வதில் ஆண்களின் துணை அவசியம், மருத்துவ முகாம்கள் நடத்த துணைவரின் பங்களிப்பு இருந்தால் நல்லது, என பல காரணங்களை மருத்துவ துறையில் உள்ள கணவர் புரிந்து வைத்து இருப்பதால், அவரின் முழு ஒத்துழைப்பு கிடைப்பதில் எந்த தடங்கலும் இருக்காது. இருவரும் சேர்ந்தே, வாழ்க்கையை சித்த மருத்துவத்தை மையமாக வைத்து இனிமையாக பயணிப்பார். இன்றுவரை பல சாதனையாளர்கள், முன்னணி சித்த மருத்துவகள் என பெரும்பாலானோர் சித்த மருத்துவ தம்பதிகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எனினும் இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால், எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமையபெறாத காரணத்தால், நீங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டுகிறேன். மாப்பிள்ளை மற்றும் அவர் வீட்டாருக்கு சித்த மருத்துவத் துறை அல்லது தொழில் குறித்த போதிய விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை முதலில் நோக்குங்கள். அவர்கள் உங்களை ஒரு சித்த மருத்துவராக ஏற்றுகொள்கிறார்களா அல்லது உங்கள் டாக்டர் பட்டம்தான் தேவையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்பது மட்டும்தான் அவர்கள் குறிக்கோளா, அல்லது உங்கள் அரசு வேலையை எதிர்பார்த்து உங்களை நெருங்கி வருகிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களை, உங்கள் சித்த மருத்துவ துறையை முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவரையே திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பெண் சித்த மருத்துவருக்கு பின்னாலும், ஒவ்வொரு ஆண் (கணவன்) இருக்க வேண்டிய கட்டாயம் இன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில், பல பொதுமக்கள், சித்த மருத்துவத்தின் மீது அளப்பரிய காதலும் மரியாதையும் கொண்டு உள்ளனர். அப்படிப்பட்ட நபரை நீங்கள் கணவனாக, அல்லது கணவனின் குடும்பமாக தெரிந்தெடுத்தால், உங்கள் வீட்டில் என்றும் ஆனந்தமே. பல பெண் சித்த மருத்துவர்களை, திருமணத்துக்கு பிறகு, சொந்தமாக கிளினிக் வைத்து தராமல், ஏமாற்றிய கணவன்மார்கள் ஏராளம். கிளினிக் வைத்து தந்த உடனே எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத போது, கணவனால், கணவன் குடும்பத்தாரால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். திருமணத்துக்கு பின்னால், அரசு வேலை கிடைக்காமல், காலம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் ஏராளம். கணவன் வீட்டாருக்கு ஏதாவது தீராத நோய்கள் வரும்போது, அல்லது பிற மருத்தவரை சந்திக்கும் போது, சித்த மருத்துவ மருமகளை பற்றி வசைபாடி, மனதை புண்படுத்தும் நிகழ்வு நடக்கிறது. தனது சொந்த குழந்தைக்கு கூட சித்த மருத்துகளை கொடுக்க அனுமதிக்காக, தன் மனைவியை மருத்துவர் என்றும் மதிக்காத, “உனக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது, நீ என்ன ஒரிஜினல் டாக்டரா, லேகியம் கஷாயம்தானே” என்று சொற்களால் புண்படுத்தும் ஆண்களிடம் மாட்டிக்கொள்ளும் பெண் சித்த மருத்துவர்களின் பாடு திண்டாட்டம்தான். தன் வேலைக்காக, பல பொறியாளர்கள், தமிழ் நாட்டில் இருந்து, டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கம்பெனியாக மாறும்போதும், அந்த டாக்டர் மனைவி கூடவே போய்கொண்டே இருக்க வேண்டும், அவள் தனக்கென, தன் படிப்பு சார்ந்த வேலையை தேடிக்கொள்ள அல்லது சொந்தமாக கிளினிக் வைக்க வாய்ப்புகள் மறுக்கபடுவது வேதனைக்கு உரியது. பல வெளிநாடுகளில் இப்படியாக செல்ல நேர்ந்த பெண் சித்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நாட்டில், சித்த மருத்துவ முறைக்கு அங்கீகாரம் இல்லாததால், அவர்கள் மனதளவில் படும் வேதனை அளப்பரியது. இந்த சந்தர்ப்பத்தில், கணவனின் ஆதரவுக் கரம் கண்டிப்பாக தேவை. காலங்காலமாக கட்டி வைத்த மாடு, போராடுவதற்காக பயன்படும் கொம்பை மறந்து விடுமாம். யானை கூட காலில் கட்டபட்டு இருக்கும் சங்கிலியை விட நமக்கு பலம் குறைவு என தன்னைத்தானே குறைவாக நினைத்து கொள்ளுமாம். சரியான மாப்பிள்ளை அமையாத பெண் சித்த மருத்துவர்கள் பலரும் சொல்லொண்ணா துயரத்தை மனதில் இருத்தி, புழுங்கி வருவது அந்த நடைமுறை எதார்த்தம். சில மாப்பிள்ளைகளுக்கு, தன் மனைவி சமூகத்தில் தன்னை விட அதிக பெயர், புகழ் அடைவதை ஏற்றுக் கொள்வதில் மனச்சிக்கல் இருக்கும். அப்படிப்பட்ட மனக்குறைபாடு உள்ள நபரின் சித்த மருத்துவ மனைவியை பொது இடத்தில் பார்த்து, தன்னிடம் குணமான ஆண் நோயாளி, ‘ஆண்டவன் மாதிரி நீங்க என்னை காப்பத்தினிங்க, என்னோட தோல் நோய் குணமாகி இப்போது திருமணம் ஆகி விட்டது” என்று சொல்லும் போதோ, “எனக்கு இருந்த மறைமுக பிரச்சனை சரியாகி, தற்போது குழந்தை பிறந்து இருக்கிறது, நீங்க நல்லா இருக்கணும்’ என்ற வாழ்த்தும் போதும், அதை ஏற்றுகொள்ள கூடிய பக்குவம் கணவனுக்கு இல்லாத காரணத்தால், அங்கு குடும்பத்தில் பிளவு ஏற்படும். மருத்துவ துறையில் பல ஆண் நோயாளிகளிடமும், ஆண் மருத்துவர்களிடமும் இன்னும் பலதரபட்ட ஆண்களிடமும் பழக நேரிடும், நேரம் செலவிட நேரிடும். இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாத கணவன்மார்களிடம் இருந்து விவாகரத்து பெற்ற எத்தனையோ சித்த மருத்துவர்களை நான் அறிவேன். ஆணாதிக்க மாப்பிள்ளைகளிடம் அடிமைகளாய் எம் சித்த மருத்துவ பெண்கள் சிக்கி விடுவதால், சீரழிவது அவர்கள் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, சித்த மருத்துவ துறையின் வளர்ச்சியும் தான். இங்கே, பாரதியின், பெரியாரின், புதுமை பெண்ணாக சித்த மருத்தவர்கள் மறுபிறவி எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது. ஒவ்வொரு சித்த பெண் மருத்துவரும், தான் மருத்துவ பயிற்சி செய்வதில் உறுதியாக இருங்கள், அதை உங்கள் பெற்றோர் மற்றும் பெண் பார்க்க வருவோர் என எல்லாரிடமும் இதை ஒரு முக்கிய அம்சமாக சொல்லுங்கள். அதற்கு பக்க பலமாக இருந்தால் மட்டுமே, அந்த மாப்பிள்ளையை தேர்ந்தெடுங்கள். நீங்கள் படித்து விட்டு, சும்மா வீட்டில் இருக்கும் போது, நீங்கள் ஒரு பெண். எனவே அதற்கேற்ப மட்டும்தான் வரன்கள் வரும். நீங்கள் படித்து விட்டு, மருத்துவ தொழிலை ஆரம்பித்து விட்டால், நீங்கள் ஒரு சமுதாயம் மதிக்கும் மருத்துவர். இப்போது, அதற்கேற்ப வரன்கள் உங்களை வீடுதேடி வரும். இதைதான் மதிப்பு கூட்டிய பொருள் (Value added products) என்று வியாபாரத்தில் சொல்வார்கள். உங்கள் மதிப்பை சித்த மருத்துவம் மூலம் நீங்கள் கூட்டுங்கள், அப்போதுதான் உங்களை மதிக்க தெரிந்த, உங்கள் துறையை பற்றி தெரிந்த கணவர் தேடி வருவார். இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் யார், எப்படி வாழ வேண்டும் என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்துவிட்டு, அதன்படி வாழ்வை ஆரம்பியுங்கள், மீதத்தை சித்தர்கள் பார்த்து கொள்வார்கள். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொரு சித்த மருத்துவ பெண்களும் பெண்ணியத்தின் குணநலன்களை கொண்டிருக்க வேண்டும், சித்த மருத்துவ பயிற்சிக்கு தடையாக இருக்கும் காரணிகளை அறிந்து, அதை உமிழ்ந்து தள்ளுதல் வேண்டும். பெண் சித்த மருத்துவர்களின் குடும்பத்தார்க்கு: அரசு வேலை கிடைக்கும், நல்ல வசதியான மாப்பிள்ளையிடம் பெண்ணை ஒப்படைக்கலாம் என்ற சுயநல எண்ணங்கள் இருக்குமானால், சித்த மருத்துவ துறை அதற்கானது அல்ல, நீங்கள் தயவு செய்து இந்த எண்ணம் இருந்தால், உங்கள் மகளை சித்த மருத்துவ கல்லூரியில் சேர்க்காதீர்கள். கடைசியில் அதன் கர்ம வினை பலனை அனுபவிக்க போவது உங்கள் மகள்தான். சித்த மருத்துவ துறையில் பல சவால்கள் இருக்கிறது, அவற்றுக்காக போராட உங்கள் மகள் தயார் என்றால் மட்டுமே, இந்த துறை அவளுக்கானது, என்பதை புரிந்து கொள்ளுங்கள். “ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும் தன் மகனை வள்ளுவரின் இந்த வாக்குப்படி உங்கள் மகள் அறிவில் சிறந்த சான்றோன் என்று சமுதாயம் சொல்லி, அதை நீங்கள் கேட்டு மகிழ வேண்டுமெனில், உங்கள் மகளுக்கு ஏற்ற துறையை தெரிந்தெடுக்க வேண்டியது அவசியம். பெண்ணை பெற்ற பெற்றோரே, தயவு கூர்ந்து உங்கள் பிள்ளைகளிடம் கலந்து ஆலோசித்து அவளின் சித்த மருத்துவ தொழிலுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால், உங்கள் மகளின் மனம் நிறையாத வாழ்க்கையை, நிறைவு இல்லாமல் வாழ வேண்டி வரும். திருமணம் ஆகி, இருபது முப்பது ஆண்டுகளில் உலகை விட்டு நீங்கள் போய் விடுவீர்கள். வாழப்போகும் அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு வாழ்வை, அவள் விருப்பப்படி அமைப்பது நல்லதுதானே. அவளின் படிப்பை மூலதானமாக வைத்து வாழ்வில் முன்னேற அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது உங்கள் கடமை அல்லவா. வைரம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதற்கும் மரியாயாதையாம், அதை வைத்திருப்பவர்க்கும் மரியாதையாம். வைரத்துக்கு ஒப்பான பெண் சித்த மருத்துவர்களை அவர்களை மதிக்கும் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது குடும்பத்தாரின் கடமை அல்லவா. சித்த மருத்துவத்தை மதிக்கும் எவ்வளவோ மக்கள், தங்கள் வீட்டிலும் ஒரு சித்த மருத்துவர் திருமணமாகி வரமாட்டாரா என்று ஏங்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் நம் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், ஒரு நாள் வள்ளுவனின் வாக்கு உங்களுக்கும் பலிக்கும். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை உங்கள் மகள் மூலம் பலன் பெற்ற நோயாளர் உங்கள் மகளை சிறந்த சித்த மருத்துவர் என்று புகழ்வதை நீங்கள் காதுகுளிர கேட்கும் பாக்கித்யத்தை அவள் தருவாள். இதை விட பெரிய பாக்கியம் ஒரு பெற்றோருக்கு கிடைக்கவே கிடைக்காது. சித்த மருத்துவரை மனைவியாக அடைவது ஒரு வரம்: “துணை நலம் ஆக்கம் தரும் வினைநலம் பெண் சித்த மருத்துவர்களை துணையாக பெறும்போது, அவர்கள் நல்ல ஆக்கத்தை தரும் துணைவியர்களாக இருப்பர். ஆனாலும், சித்த மருத்துவ துறை ஒன்றும் முழுமையாக வளர்ந்து, வேலை வாய்ப்பை உடனடியாக தந்து, பணத்தை அள்ளித்தரும் தொழில் அல்ல. காசுக்கேத்த தோசை என்று சொல்வதைபோல, உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி நிச்சயம். ஒரு பெண் தன்னந்தனியாக இந்த துறையில் வளர்ந்து வருவது மிக கடினம். குடும்ப உறுப்பினர்களின் துணை இருந்தால் கண்டிப்பாக, உங்கள் மனைவி பாரறியும் மருத்துவராக வலம் வருவார். அப்படி அவர் பாரறியச் செய்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் தயவு செய்து ஒரு சித்த மருத்துவரின் வாழ்க்கை தரத்தை குறைத்துவிடாதீர்கள். ஏனெனில் எம் சித்த மருத்துவ துறை, ஒவ்வொரு பெண் சித்த மருத்துவரையும் நம்பியே உள்ளது. ஒவ்வொருவரும் எங்களுக்கு தேவை. அவர்களை மனைவியாக பெறும்போது, உங்களுக்கும் மிகப்பெரும் சமுதாய பொறுப்பு உருவாகிறது. அவள் உங்கள் மனைவி மட்டுமல்ல, சமூகத்துக்கு அவளின் பங்களிப்பு தேவைப்படுகிறது. அதற்கான உந்துதல்களை நீங்கள் செய்ய முடியும் என்றால் மட்டுமே, சித்த மருத்துவரை மனைவியாக ஏற்று கொள்ளுங்கள். சமுதாயத்தில் பெண்கள் சித்த மருத்துவம் பயிற்சி செய்யாத காரணத்தால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் முற்றிலும் பாழடைந்து கிடக்கிறது. இது ஒட்டு மொத்த மனித குலத்தையும் பாதிக்கும் செயலாகும். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!” என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொரு சித்த மருத்துவ மனைவிமாரும், பெண் தெய்வம் ஆகும். சிலையை கல்லாக பார்த்தால், கல்லாகத்தான் தெரியும், கடவுளாக பார்த்தால், கடவுள் தெரிவார், என்பதற்கிணங்க, சித்த மருத்துவ மனைவியை ஒரு பெண்ணாக அல்லது உங்கள் மனைவியாக மட்டும் பார்க்காமல், ஒரு மருத்துவராக பாருங்கள். தமிழ் மருதத்துவத்தின் எதிர்காலமும், தமிழ் மக்களின் ஆரோக்கியத்தின் எதிர்காலமும், பெண் சித்த மருத்துவர்களின் குடும்பத்தாரின் கைகளில்தான் இருக்கிறது. தங்க முட்டையிடும் வாத்துகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்களை ஊக்குவிப்பதோடு, நீங்களும் இணைந்தே பல தொழில்கள் செய்து வாழ்வில் வளம் பெறலாம். எனவே அன்பான பெண் சித்த மருத்துவர்களே, உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்தான். நமது சித்த மருத்துவ துறை உங்களை நம்பித்தான் இருக்கிறது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் நமது துறைக்கு தேவை என்பதால்தான், உங்களை பற்றி நான் அதிகமாக கவலைபடுகிறேன். தங்கள் வீட்டிலும் ஒரு சித்த மருத்துவர் மருமகளாக வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு, நம் பெண் சித்த மருத்துவர்கள் சாதனையாளராக வரவேண்டும் என்பதே என்னுடைய அவா. எண்ணம்போல வாழ்வு என்பதற்கிணங்க, நீங்கள் முதலில் உங்களால் முடியும் என்று நம்புங்கள். நமது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் காக்க உங்களை தயார்படுத்துவதற்கு எனது வாழ்த்துக்கள், இனி ஒரு விதி செய்யுங்கள்.
-சித்தம் தெளியும் (சித்தம் வளரும்...) |
||||||||
by Swathi on 24 Sep 2018 8 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|