LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ் நாட்டின் வளர்ச்சியும்–9, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம்

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(Siddha), M.Sc.(Medical Pharmacology), M.Sc.(Yoga and Naturopathy)

உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

தமிழ்நாட்டுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அள்ளித்தரும் திட்டம். பொதுவாக ஒரு நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது, சுற்றுலா தலங்கள் மற்றும்  ஆன்மீக தலங்களை பார்க்கவும், மருத்துவம் செய்யவும், இளைப்பாறவும் மற்றும் அந்தந்த நாட்டின் பாரம்பரியத்தை கண்டுணரவும், அறிவியல் மாநாடுகளில்/ வியாபாரத்தில் பங்கேற்கவும் ஆகும். இது தவிர, இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் வருடத்துக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தும் செல்கின்றனர்.

அந்த அடிப்படையில் தமிழகம் இந்தியாவில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைபுரியும் மாநிலங்களில் ஒன்றாகும். சென்னை மாநகரம் நவீன மருத்துவம் மற்றும் அறுவை சிகிட்சைகளுக்காக அதிகப்படியான மருத்துவ சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு நகரம் ஆகும். சுற்றுலா துறை மூலம் ஒவ்வொரு அரசும் பெரும் வருமானம் ஈட்ட முடியும். அதனால் தான் பல நாடுகள் சுற்றுலா துறைக்கென பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சுற்றுலா துறை வளர்வதால்,விமான-ரெயில்-பேருந்து-மகிழுந்து போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சிறிய வீதியோர கடைகள் என அனைவருக்கும் வருமானம்தான். பக்கத்து மாநிலமான கேரளாவில், இயற்கையை அனுபவிக்கவும், ஆயுர்வேத-பஞ்சகர்மா வைத்தியம் எடுத்துகொள்ளவுமே அதிக வெளிநாட்டினர் வருகின்றனர். அங்கு வேறு உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எதுவும் இல்லை, இருப்பினும் சுற்றுலா ஒன்றையே பெரும் ஆதாரமாக வைத்து அந்த அரசால் வருமானம் ஈட்ட முடிகிறது. அப்படி இருந்தும், தமிழ் நாட்டில் உலகம் வியக்கும் கட்டிடக்கலை, அழகுணர்ச்சி மிகுந்த 3500க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தும் பாரம்பரிய மருத்துவமான சித்தா-வர்மா-யோக வைத்திய முறைகள் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம் எதுவும் இதுவரை செயல்படுத்தப் படவில்லை. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாம் கன்னியாகுமரியில் பிறந்த எனக்கு, குமரியிலேயே உருவான சித்த வர்ம மருத்துவத்துக்காக அங்கு வெளிநாட்டினர் வருவதில்லை என்பது கவலை அளிக்கிறது. அங்கு சித்த மருத்துவத்துக்கு பதிலாக, எல்லா தங்கும் விடுதிகளிலும் ஆயுர்வேத-பஞ்சகர்மா வசதி மட்டுமே இருப்பது, தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். முதலில் அங்குதான் ஒரு சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா மையம் அமைய வேண்டும். அப்படி செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நான் 2013 ஆம் ஆண்டு, தென்கொரிய நாட்டுக்கு ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, அவர்கள் ஒருநாள் எங்களை ஒரு பாரம்பரிய மருத்துவ அருங்காட்சியகம் (Seoul Yangnyeongsi Herb Medicine Museum) அழைத்துச் சென்றார்கள். அது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாதலமாக வெளிநாட்டினர் பார்வையிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அதன் உள்ளே சென்றவுடன், முதலில் பத்து நிமிடம் அவர்களின் பாரம்பரிய மருத்துவம் பற்றிய குறும்படம் போடுவார்கள். அடுத்த அறையில், அவர்களின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையின் பெரிய உருவ படம், மெழுகு சிலை, வரலாறு என அத்தனையும், அவ்வளவு நேர்த்தியாக வைக்கபட்டு இருந்தது. பார்வையாளர்கள் மெழுகு சிலையின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மொத்தமாக அவர்கள் நாட்டு வரைபடமும், அதில் எங்கெங்கு இருந்து அந்த பாரம்பரிய மருத்துவ நிறுவனர்கள் பணிசெய்தார்கள், தற்போது எங்கெங்கு பாரம்பரிய மருத்துவ கல்லூரிகள் உள்ளன என்பன போன்ற தகவல்கள் அடுத்த இடத்தில் இருந்தது. அடுத்த கட்டமாக, அவர்களிடம் கிடைத்த பழங்கால மருத்துவ நூல்களை (அவர்களிடம் வெறும் பதினைந்து நூல்கள்தான், நம்மிடம் 10,000 மருத்துவ ஓலை சுவடிகள் கேட்பாரற்று கிடக்கின்றன) அப்படி அழகாக கண்ணாடி கூட்டுக்குள் வைரவியாபாரி வைத்திருப்பது போல மிகவும் பாதுகாப்பாக அதற்கு சிறப்பு ஒளிக்கதிர்கள் அதில் விழும்படி அமைத்து இருக்கின்றனர். அந்த நூல்கள் எந்த ஆண்டில், UNESCOவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்க பட்டது என்பது பற்றிய குறிப்புகளும் இருந்தது. நமது தமிழ் சித்த மருத்துவ ஓலை சுவடிகள் 1997 ஆம் ஆண்டு UNESCO வால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்க பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இது எத்தனை தமிழருக்கு தெரியும்?.

அடுத்து, அவர்களின் அடிப்படை தத்துவங்களாகிய யின்-யான், பூதங்கள் போன்றவைகளின் விளக்கப் படம், அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகளின் அழகிய வண்ணப்படம் பல தொடுதிறையில் இருக்கும். நீங்கள் ஒரு screenல்உங்கள் விரல்களை வைத்து தேய்ப்பதன் மூலம், மூலிகை அட்டவணை, புகைப்படங்கள், அதன் பயன்பாடுகள் என அத்தனையும்(உள்ளூர் மற்றும் ஆங்கில மொழி இரண்டிலும்) அதனுள் அடக்கி வைத்திருப்பர். அதன் பின்னர், அவர்களின் நோய் வகைப்பாட்டிலும், மருந்து செய்முறைகளும் பற்றிய விளக்க கூடங்கள் இருந்தன. அவற்றில், அவர்களின் வைத்தியர்கள் அக்காலத்தில் எவ்வாறு உடை உடுத்தி இருந்தனர், அவர்களின் வைத்திய சாலை எப்படி இருந்தது,meridian channels, எப்படி தடவல் முறைகள் (massage) செய்தார்கள்,எவ்வாறு எலும்பு முறிவுகள் சரிசெய்யப்பட்டன என பல்வேறு தகவல்களை மெழுகு சிலைகளாக தத்ரூபமாக செய்து வைத்திருந்தனர். அடுத்த அறையில், பழைய அம்மி, மருந்து அரைகருவிகள், இடிகருவிகள், என மருந்து செய்வதற்கு பயன்படுத்திய அத்தனை பொருட்களையும் அடுக்கி வைத்திருந்தனர்.

அதன்பின், அந்த அருங்காட்சியகத்தின் வெளியே வந்து விடுகிறோம். இப்போது அங்கே பிரம்மாண்டமான திறந்த வெளி மூலிகை தோட்டங்கள்,Green house மூலிகை தோட்டங்கள், தண்ணீரில் வாழும் மூலிகை தோட்டங்கள் என மிகவும் அருமையாக இருந்தது. அதற்கு அடுத்து அவர்களின் விற்பனை கூடம் மற்றும் information center ல் நம்மை வரவேற்கும். அந்த விற்பனை கூடம், நகைக்கடை போல மிகவும் அழகாகநேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும். மூலிகை தைலங்கள், மெழுகுகள், பசைகள்(ointment), அழகு சாதனங்கள், வலி நிவாரண பிளாஸ்த்திரிகள், மூலிகை புகைபூட்டிகள், முலிகை உதட்டு பூச்சிகள் என அத்தனையும் இருந்தன.

Information center ல் நமக்கு வேண்டிய தகவல்களை அவர்கள் பகிர்வார்கள், நம்மில் யாருக்கெல்லாம் மூலிகை மருத்துவம் செய்ய விருப்பமோ, அவர்கள் அடுத்த அறைக்கு பாரம்பரிய கொரிய மருத்துவரிடம் அனுப்பப்படுவர். அந்த மருத்துவர் நம்மிடம் ஐந்து நிமிடம் பேசிவிட்டு, நம்மை பத்திய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு,  டோக்கன் தருகிறார். பின்னர் அவர்கள் குறிப்பிடும் அந்த பாரம்பரிய மருத்துவ சாலைக்கு நாம் செல்ல வேண்டும். சில நேரம், நாம் தங்கி இருக்கும் தங்கும்விடுதில் கூட அவர்களின் அங்கீகாரம் பெற்ற மருத்துவ சேவை மையம் இருக்கலாம். அல்லது, நாம் தங்கி இருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள இடத்தை நாமே தேர்வு செய்யலாம். ஒரு வேளை நாம் இந்தியாவில் இருந்து கிளம்பும் முன்பே தனியாக ஏதாவது மருத்துவ சேவைமையத்திடம் முன்பதிவு செய்திருந்தால், அதன் தரத்தை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நாம் மருந்து செய்யும் நிலையத்தை பார்வையிட வேண்டுமென்றால், சிறிது நேரம் காத்திருக்க வேண்டிவரும். நம்மைப்போல பலரை ஒரு குளுகுளு பேருந்தில் ஏற்றிக்கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு பாரம்பரிய மருந்து செய்நிலைத்துக்கு அழைத்து சென்று அத்தனையும் கண்பிப்பார்கள். அதை பார்த்த நாளில் இருந்தே எனக்கும் ஒரு ஏக்கம், நம்ம ஊரிலும் இதை போல சித்த மருத்துவ நலமையம் அமையாதா என்று. கொரிய மக்கள் இந்த பாரம்பரியம் காப்பது வெறும் வெளி வேடமா, இல்லை அவர்கள் வாழ்வியலே பாரம்பரியமானதான கண்களால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சியோல் நகரிலிருந்து மணிப்பாலில் படித்த எனது மாணவி Jin Satt Chung என்னை அவரது வீட்டுக்கு அழைத்தது சென்றார். உள்ளே சென்ற உடன், அவரது பெற்றோர் என்னை அமருங்கள் அமருங்கள் என்று சொன்னார்கள், எனக்கு கொரிய மொழி புரியவில்லைனாலும், ஒருவழியாக அமரத்தான் சொல்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. நான் அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சென்ற போது, பெருங்குரலால் ஏதேதோ திட்டி பேசினார்கள். நான் பயந்து போய், உடனே செய்வதறியாது திகைத்தேன். மாணவி பெற்றோரிடமும் என்னிடமும் சாரி என்று சொல்லிவிட்டு, நாற்காலியில் உட்கார வேண்டாம் என்று சொன்னார். பின்னர் ஒரு சிறிய மரத்தால் ஆன குறுங்கட்டி (நாகர்கோவில் வார்த்தை) போன்ற ஒன்றை எடுத்து வந்து, அதில் பழங்களை வைத்து, அதன் அருகே தரையில் அமருமாறு பணித்தார். விருந்தினரை பாரம்பரிய முறைப்படிதான் வரவேற்க வேண்டும், அதுதான் தரையில் உட்கார சொல்கிறார்கள் என்றும், நாற்காலியில் விருந்தினரை உட்கார வைப்பது அவமானப்படுத்துவது ஆகும் என்றும் சொன்னார். பின்னர் மூலிகை தேநீர் தந்தார்கள். அவரது தந்தையும் கொரிய பாரம்பரிய மருத்துவராதலால்,அவரின் வீட்டு மூலிகை தோட்டத்தையும் காண்பித்தார். மாணவியின் அம்மா, தான் சிறு பிள்ளையாக இருந்தபோது, தனது பிறந்த நாளுக்கு அப்பா ஒரு தொட்டியில் நட்ட அந்த ஆலமரக்கன்றை, தனக்கு திருமணம் ஆன பின்னர், புகுந்த வீட்டுக்கு எடுத்து வந்து இத்தனை ஆண்டுகளாக அதை வீட்டினுள் ஒரு பெரிய தொட்டியில் வைத்து  தனது பிள்ளை போல பாதுகாத்து வருகிறார். இயற்கையை மதிக்கிறார்கள் கொரியர்கள்.

உலகின் நாகரிகத் தொட்டிலான கீழடி ஆகியவற்றை கொண்டுள்ள நாமோ இங்கு மரங்களையும் இயற்கையையும் ஏனென்று தெரியாமலே அழிக்கிறோம். நமது பாரம்பரியத்தை காக்க மறந்து விட்டோம். சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமான்னு சும்மா பாட்டு படித்தால் மட்டும் போதாது, அது செயலிலும் இருக்க வேண்டாமா? நம்ம ஊரை எல்லோருக்கும் பிடிக்கும் சொர்கமாக மாற்ற வேண்டாமா?. 

 

தமிழ் நாட்டில் சித்த மருத்துவ சுற்றுலா:

சரி நம் ஊருக்கு வருவோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் நாடு, பழங்கால கோவில்களுக்கு மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஏறக்குறைய 33,000 பழங்கால கோவில்கள், கோடையில் குளிர்காயும்தலங்கள், மலை அருவிகள், வனங்கள், மற்றும் கடற்கரைகள்  நம்மிடம் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாமலும், எப்போது தூள் தூளாக பறந்து போகுமோ என்று இருக்கும் ஓட்டை பேருந்துகளும், மழைக்கு குடை பிடிக்க வேண்டிய அளவுக்கு டிசைன் ஓட்டைகளுடன் கூரை பிஞ்சி போன அரசு பேருந்துகளும், அடிக்கடி பாலியல் அத்து மீறல்களும், பணத்தாசையால் ஏமாற்றும் உள்ளுர் மக்களாலும், பாதுகாப்பற்ற தன்மையாலும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த நிலையில் எப்படி நாம் உலக தரம் வாய்ந்த சித்த மருத்துவ ஆரோக்கிய மையம் குறித்து சிந்திக்க, செயல்பட? சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அரசு மட்டுமல்ல, உள்ளூர் மக்களும் தர சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒரு தடவை தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வந்து சென்ற ஒருவர் மறுமுறை யோசிக்க வேண்டி இருக்கிறது. அதே நேரம், கேரளா, சிக்கிம், அஸ்ஸாம் போன்ற பல மாநிலங்களுக்கு ஒருதடவை சென்று வந்தவர்கள் மறுபடியும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தானாக வருகின்றன.  இவையெல்லாம் சரி செய்யபட்டு, நமது பாரம்பரிய சித்த மருத்துவ சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தால், கண்டிப்பாக தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் அடையும். இதை பல கட்டமாக செய்யலாம், அவற்றை எப்படி செய்யலாம் என்று விவாதிப்போம்.

Siddha Medical Museum (சித்த மருத்துவ அருங்காட்சியகம்):

நான் ஏற்கனவே தென் கொரியாவில் கண்டு, அதை இந்த கட்டுரையின் முதலில் எழுதியது போல சித்த மருத்துவத்துக்கென்று அருங்காட்சியகம், கண்டிப்பாக மாவட்டம் தோறும், அல்லது சுற்றுலா தளங்களின் அருகாமையிலும், குறைந்த பட்சம் எல்லா விமான நிலையங்களின் அருகாமையிலும் இருக்க வேண்டும். ஒரு தடவை உள்ளே வந்து வெளியே போகும் போது, ஒரு வாரம் சித்தா வர்மா வைத்தியம் செய்யவேண்டும் என்ற உந்துதல் வர வேண்டும். அந்த அளவுக்கு, அங்கே சித்த மருத்துவம் குறித்த வரலாறு, சித்தர்கள் வரலாறு, அவர்களின் சிலைகள், மூலிகைகள், ஓலை சுவடிகள்,பாரம்பரிய தமிழர் உணவுகள், மூலிகை தோட்டம், ஆலோசனை மையம்,outlet விற்பனை மையம், உதவி மையம் என அத்தனையும் நேர்த்தியாக, சுத்தமாக, உலகத்தரத்தில் இருக்க வேண்டும். அங்கு வந்த பின்னர் கூட அவர்கள், எந்த மருத்துவர் அல்லதுஆரோக்கிய மையத்துக்குசெல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கலாம். அங்கிருந்து அந்தமையத்துக்கு அழைத்து செல்ல ஓட்டை உடைசல் இல்லாத, சிறந்த பேருந்து வசதியும் இருக்க வேண்டும். 

Siddha Medical Tourism center (சித்த மருத்துவ சுற்றுலா மையம்):

அரசின் தங்கும் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள்,பிரபல மருத்துவமனைகள் (eg: அப்போல்லோ மருத்துவமனை), அனைத்து நவீன மருத்துவ கல்லூரிகள், அனைத்து சித்த மருத்துவ கல்லூரிகள், அரசு சித்த மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், சிறிய அளவிலான சித்தா கிளினிக், மருந்து செய்நிலையங்கள் என ஒன்றையும் விடாமல், அனைவருக்கும் இந்த Siddha Medical Tourismcenterநடத்த வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இதற்காக முதலில் அரசு ஒரு விதிமுறையை (guideline) வகுக்க வேண்டும். இந்த விதிமுறையில், ஒரு சித்த மருத்துவர், வர்மா-புற மருத்துவம் செய்பவர் (varma-external therapy therapist) என குறைந்தது இரண்டு பேர் பணியமர்த்தப்பட வேண்டும். ஒருவேளை, சித்த மருத்துவர் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்றால், அவரே போதுமானது. மேலும் உலகத்தரம் வாய்ந்த தங்கும் வசதி, பாரம்பரிய தமிழர் உணவுகள், பத்திய உணவுகள், அதை சமைப்பவர், என அத்தனை வசதிகளும் இருக்க வேண்டும்.

பத்திரிகையில் அழைப்பு கொடுக்கப்பட்டு, எவருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களுக்கு உரிய பயிற்சி (குறுகிய கால பயிற்சி) வழங்க வேண்டும். இந்த பயிற்சியில், உலக சுற்றுலா, பயணிகளின் எதிர்பார்ப்பு, எப்படி அவர்களை கையாள்வது, எப்படி அவர்களுக்கு உதவுவது, எப்படி சித்த மருத்துவ சுற்றுலா நிறுவனம் நடத்துவது, எப்படி அதற்கு வங்கி கடன் பெறுவது, எந்த மாதிரி பத்திய உணவுகள் சமைத்து கொடுப்பது, அறம் சார்ந்த நெறிமுறைகள் (ethics), சட்ட பிரச்னையை எவ்வாறு கையாள்வது, பணப்புழக்கத்தை எவ்வாறு கையாள்வது போன்ற அத்தனையும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இந்த தகவல்களை, சித்த மருத்துவ மாணாக்கர்களின்  பாடத்திட்டத்தில் வைத்தால் நல்லது. MD சித்தா பிரிவல் Siddha Medical Tourismஎன்று கூட ஒரு பிரிவு வந்தாலும் நல்லதுதான். ஆக, எவரெல்லாம் இந்த அறிவை பெருகிறார்களோ, அவர்களுக்கு வங்கி கடன் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உரிய பயிற்சி பெற்று ஆரம்பிக்கப்படும் மையங்கள் ஒவ்வொன்றுக்கும் என ஒரு இணைய தளமோ, அல்லது அத்தனையும் இணைக்கும் வண்ணம் ஒரே அரசு இணையதளமோ அரசு கொண்டுவர வேண்டும்.

சித்தமருத்துவத்தை அதிகம் படிப்பது பெண்கள் என்ற வகையில் சில பெண் சித்த மருத்துவர்களுக்கு (ஆண் மருத்துவர்களும் விதி விலக்கல்ல) அதிக பணம் இருக்காது, குடும்பத்தின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது. அந்த நேரம், அவர்கள் இருவர் அல்லது மூவர் (தோழர்கள் அல்லது தோழிகள்) இணைந்து நடத்தலாம். மேலும் Homestay என்ற ஒரு புது யுக்தியையும் அறிமுகப் படுத்தலாம். இந்தியாவின் பல மாநிலங்களில் (கேரளா, கர்நாடகா) இந்த வகை திட்டம் இருக்கிறது. அதன்படி, நாம் தங்கி இருக்கும் வீட்டில், நமக்கு தங்குவதற்கு போக மீதம், குறைந்த பட்சம் ஒரு அறை முதல் அதிக பட்சம் ஆறு அறைகள் வரை இருக்குமானால், இந்த Homestay க்கான அனுமதி கிடைக்கும். இதற்கு மாவட்டம்தோறும் உள்ள சுற்றுலா மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தனது வசதிகள், தனது சேவைகள், என எல்லாவற்றையும் நிரப்பி கொடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் ஒரு சுகாதார துறை அதிகாரியுடன் நம் வீட்டுக்கு வந்து, வசதிகளை சரிபார்த்து விட்டு அனுமதி தருகிறார். உடனடியாக நமது விவரங்களை அரசு இணையதளத்தில் இணைக்கப்பட்டு விடும். நமக்கென தனியாகவும் இணையதளம் வைத்துக்கொள்ளலாம். எவராவது, இணையதளத்தில் தேடும்போது, நம்மை நேரடியாக தொடர்பு கொண்டு, விசாரித்து, முன்பதிவு செய்து கொண்டு, நம் வீட்டுக்கு வந்து தங்குவர். அவருக்கு வேண்டிய சிகிட்சைகள், உணவுகள், உள்ளூர் சுற்றுலா என எல்லாவற்றையும் நாம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இது பெரும்பாலும், நடுத்தர, ஏழை, மற்றும் பணக்காரர்  என எல்லா வர்க்கத்தில் இருக்கும் சித்த மருத்துவர்களுக்கும் செய்வதற்கு எளிதும் கூட. நல்ல வசதியான வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தோ அல்லது சொந்தமாக இருந்தால், அதை வீட்டோடு சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாற்றலாம்.

இந்த ஒவ்வொரு மையங்களும் அருகில் உள்ள நவீன மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரியுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அருகில் உள்ள பல் மருத்துவமனையுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும். முடிந்தால், இந்த மையத்தில் சித்த மருத்துவருடன், பல் மருத்தவர் மற்றம் நவீன மருத்துவர்கள் குழுவும் இணைந்து ஒருங்கிணைந்த சித்தா நலமையமாக (Integrated Siddha wellness center) செயல்பட்டால் இன்னும் சிறப்பு. பல சித்த மருத்துவர்களின் குடும்ப அங்கத்தினரோ, நண்பர்களோ, உறவினர்களோ பல் மற்றும் நவீன மருத்துவராக இருக்கலாம். அல்லது நவீன மருத்துவர்களை visiting consultant ஆகவும் வைத்துக் கொள்ளலாம். வெளிநாட்டு நோயாளிக்கு, இந்தியாவில் தரமான பாரம்பரிய மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ கூட்டு சிகிச்சை குறைந்த விலையில் கிடைப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்த மையங்களில், மூலிகை தோட்டங்கள் இருக்கலாம், organic காய்கறி தோட்டங்கள் இருக்கலாம், நாட்டு மாடு/ஆடு/கோழி/காடை பண்ணைகள் இருக்கலாம், இயற்கை விவசாயம் இருக்கலாம், நடைபாதை இருக்கலாம். அங்கு விளைவிக்கப் படும் காய்கறிகள், எடுத்த பால், போன்றவைகளை வாடிக்கையாளர்கள் முன்னிலையே உணவாக தயார் செய்யலாம். இயற்கை மர செக்கும் ஒன்று வைத்து கொள்ளலாம். அவர்களையும் உடன் அழைத்து சென்று புதியதாக மூலிகைகள் பறித்து, மூலிகை தேநீர் தயாரித்து கொடுக்கலாம். குளிக்கும் மூலிகை தண்ணீரில் இருந்து, பல்பொடி, உறங்கும் கோரை/ பனை ஓலைப்பாய் வரையிலும், அனைத்திலும் தமிழனின் பாரம்பரியம் கமழ வேண்டும். வீட்டு வைத்தியத்தில் எவ்வாறு மூலிகைகளை பயன்படுதுவது என்பது குறித்து விளக்கம் அளிக்கலாம். நமது பாரம்பரிய முறைப்படி கட்டிய ஒட்டு வீடுகள், குடிசைகள்,செட்டிநாடு அமைப்பில் கட்டிய வீடுகள் என அவரவர் வசதிக்கேற்ப இந்த மையத்தை அமைத்து கொள்ளலாம். சுற்றுலா பயணிகள் இதனுடன் சேர்த்து நமது பாரம்பரிய விளையாட்டுகள் (கபடி, உறி அடித்தல், காளை அடக்குதல், சிலம்பம்), நாட்டியம், நடனங்கள், வில்லுபாட்டு, கோவில் திருவிழாக்கள், பொங்கல், போன்ற தமிழர் கலாச்சாரம் குறித்த நிகழ்வுகளையும் கண்டு களிக்க ஏற்பாடு செய்யலாம். சிலவேளை, அவர்கள் விருப்பப்பட்டால், நமது மையத்துக்கே அந்தந்த கலைஞர்களை வரவழைத்தும் நிகழ்சிகள் நடத்தலாம். இந்த சித்த மருத்துவ நலசுற்றுலா மையங்கள் நன்றாக செயல்பட்டால், தமிழக கிராமிய கலைஞர்களின் வாழ்வில் கூட, இது ஒளியேற்றும் என்பதில் ஐயமில்லை.இவையெல்லாம் கண்டிப்பாக நம் அறிவியலை உலகறிய செய்யும் எனபதில் சந்தேகமே இல்லை. அரசு உரிய வழிமுறைகளை இதற்கு வகுத்து, பயிற்சியும் கொடுத்து அதை கண்காணித்து வந்தால் சிறப்பாக இது செயல்படும்.

எந்த மாதிரியான சிகிச்சைகள்:

இந்த மையங்களில், மூன்று விதமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும்.

முதல் ரகம் - எந்த நோயும் இதுவரை இல்லை, இனி நோய் வராமல் இருக்க வேண்டும், வயோதிகத்தை தள்ளிபோட வேண்டும், மனம் அமைதியாக வேண்டும் (relaxation, rejuvenation, recreation) என பொது ஆரோக்கியத்துக்காக வரும் மக்கள். இதற்கு, ஓகம்(yoga), பாரம்பரிய உணவுகள், எண்ணெய் குளியல், மண் குளியல், வாழை இலை குளியல், வாத-பித்த-கபத்தை சமன் செய்யும் அகத்தியர் குழம்பு அல்லது சித்தாதி எண்ணெய், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் அருகில் இருக்கும் அருவி, குளம், ஆறுகள், கடல்கள், கோவில்கள் அல்லது பிற சுற்றுலா தலத்துக்கும் அழைத்து செல்லலாம். அவர்களுக்கு வேட்டி சேலை என அணிவித்து, தமிழகத்தில் எவ்வாறு விவசாயம் செய்யப்படுகிறது என்பதையும், மீன் எவ்வாறு பிடிக்கபடுகிறது என்பதையும் காண்பிக்கலாம். இந்த வகை வாடிக்கையாளர்களை நல்ல முறையில் திருப்தி செய்தால், மீண்டும் மீண்டும் அவர்கள் உங்களிடம் வருடா வருடம் வருகை தருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. சில நேரம் அவர்களுக்கு தெரிந்தவர்களை இங்கு செல்ல அறிவுறுத்துவார்கள். சிலர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கிராமம், நகரம், Homestayஎன அத்தனை வகை ஆரோக்கிய மையங்களிலும் ஒவ்வொரு முறை தங்கி, அதை அனுபவிக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மையத்துக்கு படையெடுப்பர், ஆனாலும் உங்களை கண்டிப்பாக தொடர்பு கொள்வார்கள் அலல்து வந்து பார்த்து விட்டு போவார்கள். பல நேரங்களில்,கேரளா சென்று ஆயுர்வேதம் எடுத்தவர்கள் அடுத்த முறை கண்டிப்பாக சித்தாவை தேடி தமிழகம் வரத்தான் செய்வார்கள். நல்ல தரமாக நாம் பணி செய்தால், நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமே இருக்காது. எது எப்படியோ, அந்த வாடிக்கையாளர் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருடா வருடம் வந்து போவதும், தங்குவதுமே, தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணிதானே. அது இந்தியாவிற்கு வருமானமும், பெருமையும்தானே.

இரண்டாவது ரகம் - ஏதாவது குறிப்பிட்ட நோய்க்காக பாரம்பரிய மருத்துவம் பார்க்க வருவார்கள். இவர்களுக்கு அவர்களுக்கு தேவையான சித்த வைத்தியம், பத்திய உணவுகள், யோகா, மற்றும் மேற்சொன்ன அனைத்திலும் எவை தேவையோ அவைகளை செய்யவேண்டும். கேரளாவுக்கு சென்று விட்டு அதற்கு பின்னர் மணிப்பாலுக்கு என்னை பார்க்க வருவதில் பெரும்பான்மை நோயாளிகள் இந்த வகையை சார்ந்தவர்களே. அவர்கள் கேரளா போகும்போது, வெறும்கையுடன் போவார்கள், திரும்ப வரும்போது இரண்டு பெட்டி நிறைய மூலிகை மருந்துகள் என அடுத்த ஆறு மாதத்துக்கு சேர்த்து வாங்கி செல்வர். இந்த மருந்துகள் அந்த மையத்திலேயே செய்தவையாக இருக்கும். இதற்கு மூலிகைகளை சேகரிக்கும் கிராமத்து முதியவர்கள், அதை வளர்க்கும் விவசாயி, அதை மருந்தாக்கும் மனிதன் என பலருக்கும் இது வேலை வாய்ப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ தருகிறது. இந்த வகை நோயாளிகள் வெளிநாடு சென்ற பின்னர் கூட உங்களிடம் தொடர்பில் இருப்பார்கள். நீங்கள் நல்ல மருத்துவராக இருந்தால், மீண்டும் வருவார்கள். உங்களிடம் online consultation செய்வார்கள், நீங்கள் மருந்துகளை அனுப்பி கொடுக்கலாம். நமது சேவை தரம் இல்லையெனில் வேறு மையம் தேடி செல்வர்.

மூன்றாவது ரகம் - மிகவும் முக்கியமானது. ஒரு நோயாளிக்கு பல வியாதிகள், அதுவும் நாட்பட்ட நோய்களாக இருக்கும். அவருக்கு, பலவித ஆய்வுக் கூட சோதனைகள் தேவைப்படும், இதயம்-பல்-சிறுநீரகம் என பல மருத்துவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டிவரும். அதனுடன் சித்த மருத்துவம், ஓகம்(yoga) போன்றவற்றை கலந்து ஒருங்கிணைந்த கூட்டு சிகிட்சை முறை (Integrative medicine or wellness therapy) தேவைப்படும். இந்த வகை நோயாளிகளை நாம் எடுக்க வேண்டுமென்றால், நாமும் நமது மையமும் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். நம்மிடம் மருத்துவர்கள் குழு, ஆய்வுக் கூடம் மற்றும் பிற வசதிகள் இல்லாவிட்டால், அருகில் உள்ள நவீன மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து இந்த கூட்டு சிகிச்சைகளை செய்யலாம். இந்த வகை நோயாளிகளை கையாள அரசு கண்டிப்பாக சித்த மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் நவீன மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும். நம் ஊரைப்போல, நோயாளி முன்னால் அடுத்த மருத்துவ முறையை அல்லது மருத்துவரை குறைத்து பேசுவது, எனக்கு தெரியாது உங்கள் பாடு என்று நோயாளி மீது பழி போடுவது, இதெல்லாம் வெளிநாட்டு நோயாளிகளை எரிச்சல் அடைய செய்யும். அவர்கள் பணம் செலவு செய்து, நாட்களை எண்ணி எண்ணி நம்மிடம் வருகின்றனர். அவர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் முன்பதிவு செய்யும் போதே வேறு மையத்துக்கு கைகழுவி விடுவது சிறந்தது. சரிவர இந்த நோயாளிகளை கவனிக்காவிட்டால், கெடுவது உங்கள் மையத்தின் பெயர் மட்டுமல்ல, நம் சித்த மருத்துவத்தின் பெயரும் தமிழ் நாட்டின் பெயரும், இந்தியாவின் பெயரும்தான்.

Siddha Medical Tourism விளம்பரம்:

தமிழகமற்றும் இந்திய அரசுகள் தனது வலைத்தளங்களில் Siddha Medical Tourism குறித்த தகவல்களை மிகத்தெளிவாக விளக்க வேண்டும். அதற்கென குறிப்பிட்ட ஒரு வலைத்தளம் அமைக்க வேண்டும். விமானம் மற்றும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வலைதளங்களில் இதற்கான செய்திகள் வந்து போக வேண்டும். ஏதேனும் சலுகைகள், கவர்ச்சி திட்டங்கள், combo திட்டங்கள், தமிழகத்தில் பாரம்பரிய கலாசார திருவிழாக்கள், ஜல்லிக்கட்டு என அத்தனை விவரங்களும் தெளிவாக அடிக்கடி விளம்பரப் படுத்தப்பட வேண்டும். எல்லா சுட்டிகளும், பொதுவான ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தில் திறக்கும்படி செய்யவேண்டும். அந்த குறிப்பிட்ட வலைத்தளத்தில், சித்த மருத்துவ வரலாறு, சித்தர்கள், ஓலை சுவடிகள், இதுவரை வெளிவந்த புத்தகங்கள், வருமுன் காப்போம், வந்தபின் தீர்ப்போம், மூலிகை விவரங்கள், மருந்துகள் செய்யும் முறைகள், வீட்டு(கை) வைத்தியம், சித்த மருத்துவம் சொல்லும் 4448 நோய்களும், தீர்வுகளும் விதவிதமான மருத்துவ முறைகளின் விளக்கங்கள் (உதாரணமாக, வர்ம வைத்தியம், அது எப்படி செய்யப் படுகிறது, எதற்காக, எந்த நோய்கள் தீரும், அதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நோயாளர் பக்கம் செய்வது, விலைப்பட்டியல்), பாரம்பரிய தமிழர் உணவுகள், போன்றவைகள் மிக தெளிவாக படத்துடனும், வீடியோவுடனும் இருக்க வேண்டும்.

அத்துடன், அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள Siddha Medical Tourism நடத்தும் (அரசு மற்றும் தனியார்) நிறுவனங்களின் தொடர்பு இணையங்கள், பக்கத்தில் உள்ள விமான/ரயில் நிலையம் மற்றும் மையத்தை தொடர்பு கொள்ளும் வழிகள் என அத்தனையும் அதில் இருக்க வேண்டும். எந்த மையத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் வலைதளத்தை மேலும் திறந்து தெரிந்து கொள்ளலாம். அத்துடன், ஒரு அழைப்பு மையமும், அதில் 24x7 நேரமும் பல மொழிகளில் பேசும் மனிதர்களை பணியமர்த்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கிய செயலி(App) கூட செய்து கொள்ளலாம். நாம் தரமாக இந்த சேவையை செய்யும் போது, மக்கள் தானாக விரும்பி மறுபடியும் வரத்தான் செய்வார்கள். மேலும் நாட்டில் உள்ள அத்தனை விமான நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும், முக்கியமான சுற்றுலா தளங்கள் அனைத்திலும் இது குறித்த தகவல் பலகை கண்டிப்பாக இடம்பெற வேண்டும். விமான டிக்கெட் அல்லது ரெயில் டிக்கெட் அச்சடித்து தரும்போது, அதன் பின் பக்கம் கூட இந்த விளம்பரங்கள் இடம் பெறலாம். விமான நிலையத்தில் இருந்து உள்ளுரில் இலவச பயணம் (free airport pick up and drop),  மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றால், ஒரு நாள் இலவச சுற்றுலா, ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்றால், இரண்டு நாள் இலவச சுற்றுலா என பல இலவசங்களை அறிவித்து மக்களை கவரலாம். இலவசங்களால் கவர்வதற்கு தமிழ் நாட்டுக்கு சொல்லிதர வேண்டியதில்லை.

இந்தியாவின் வெளியுறவுத்துறை, உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து இருக்கும், அங்கெல்லாம் இந்த விளம்பரங்கள் இடம்பெற வேண்டும். அவர்களின் இணையதளத்திலும் இது இடம் பெற்றால் நல்லது. முடிந்தால், முக்கியமாக எந்தெந்த நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகிறார்களோ, அந்த நாடுகளின் வெளியுறவு துறையில் ஒரு சித்த மருத்துவ பிரிவை கண்டிப்பாக நிறுவி ஒரு சித்த மருத்துவரை பணியமர்த்தினால் நல்லது. குறிப்பாக, தமிழ் மக்கள் பெருவாரியாக வாழக்கூடிய அனைத்து உலக நாடுகளிலும், தமிழ் மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப ஒன்றோ அலல்து இரண்டோ என இந்த சித்த மருத்துவ மையங்கள் அமையப்பெற்றால் சிறப்பாக இருக்கும். அங்கு மக்கள் வந்து தகவல்கள் பெறவும், மருத்துவ ஆலோசனைகள் பெறவும், பின்னர் சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலாவை திட்டமிடவும் இது மிகவும் சிறப்பாக இருக்கும்.

யார் என்ன செய்ய வேண்டும்?:

அரசு உரிய வழிமுறைகளை வகுத்து தருவது, பயிற்சிகள் கொடுப்பது, சட்ட அங்கீகாரம் கொடுப்பது, தொடர்ச்சியாக தரத்தை கண்காணித்துக் கொள்வது, குறைகள் இருந்தால் சரிபடுத்த முயற்சி எடுப்பது,தமிழகத்தில் செயல்படும் சித்த மருத்துவ நலசுற்றுலா மையங்கள் தவறான பயன்பாட்டிற்க்கு மாறிவிடாமல் கண்காணித்தல், வெளிநாடுகள் மற்றும் உள் நாடுகளில் போதிய விளம்பரம்/ விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இது குறித்த விசாரணை மையம், சித்த மருத்துவ மையம் அமைத்தல், வங்கிக்கடன் ஏற்படுத்தி தருதல், மூலிகைப் பண்ணைகளை மாவட்டம் தோறும் அமைத்துத் தருதல், சித்த மருத்துவ அருங்காட்சியகங்கள் அமைத்துத் தருதல், சுற்றுலா பயணிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி, பெண் போலீசார், சட்ட பாதுகாப்பு, சுகாதார வசதிகள், பொது இடங்களில் இலவச கழிவறைகள், என பல கட்டமைப்பு வசதிகளை அரசுதான் செய்ய வேண்டும்.  

பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படும் இந்த சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா மையங்களை அரசே நடத்தலாம், அல்லது தனியார் நிறுவனங்களோ,  மருத்துவமனைகளோ இதை நடத்தலாம், அல்லது அரசு-தனியார் சேர்ந்தும் நடத்தலாம். அரசால் மதுக்கடைகள் நடத்த முடியும் போது, இதையும் கண்டிப்பாக நடத்த முடியும் எனபதில் ஐயமில்லை. அரசே இதற்கு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தால், பலர் இந்த தொழிலை தமிழகத்தில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். தமிழ் நாட்டிள் இருந்து வெளிநாட்டில் தங்கி இருக்கும் மக்கள் வருடந்தோறும் ஒரு தடவையாவது ஊருக்கு வந்து செல்லும் போது, இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் நலத்பேணுவர். இதனால் மாவட்டம் தோறும் பல வேலை வாய்ப்புகள் பெருகும், அரசுக்கும் மக்களுக்கும் நிரந்தரமாக வருமானம் ஈட்டித்தரும். மதுக்கடைகளை அரசு குறைக்க வழிவகைசெய்யும். நமது பாரம்பரியம் காக்கப்படும், மூலிகை சாகுபடி அதிகரிக்கும், பாரம்பரிய நெல் வகைகள், காய்கறிகள், மாடுகள்/ஆடுகள்/கோழிகளின் தேவைகள் அதிகமாகும், விவசாயம் செழிக்கும், விவசாய பொருட்களுக்கு வெளிநாட்டு வியாபார தேவைகள் அதிகரிக்கும், தமிழ் நாடு கண்டிப்பாக முன்னோடி மாநிலாகும். இந்தியா தமிழகத்தை பெருமையுடன் உலக அரங்கில் முன்னிலைப்படுத்தி தன்நாட்டு பரம்பரிய, பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முன்வரும்.

சித்தம் தெளியும் (சித்தம் வளரும்)...

by Swathi   on 11 Nov 2018  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
04-Jun-2020 13:48:25 surya said : Report Abuse
நன்றி!, மிகவும் பயனுள்ள பதிவு. அனைத்து விதமான நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் எளிய வீடு மருத்துவ குறிப்பு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. https://naturalhomeremediesfor.com/ #homeremedies #health #naturalhealth #ayurveda #siddha
 
11-Jun-2019 10:03:12 ராமமூர்த்தி said : Report Abuse
குடிக்கமல் இருக்க இரண்டு குளுக்கோஸ் போட்டு இரண்டு உளசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டனர் . இப்போது நான் மீண்டும் குடிக்கனும்
 
19-Nov-2018 10:13:44 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். தமிழகத்திலும், அண்டை மாநிலமான கேரளத்தைப் போலவே சித்தா மெடிக்கல் டூரிஸம் பிரபலமடைய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக நம் கலாசரம் மற்றும் பண்பாட்டை உலகறிய செய்ய முடியும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.