LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சிறுகாப்பிய மலர்

    175. சங்கராச்சாரியர் அருளிச்செய்த பஜகோவிந்தம்

    167. கண்ணன் தந்த தீபாவளி

    தீபா வளிப்பெரிய திருநாள்--நாம்
    தெய்வப் பணிபுரிய வருநாள்
    பாபாதி தீவினைகள் ஒழியத்--திடம்
    பண்ணித் தொலைத்துதலை முழுகித்
    தூபாதி கற்பூரம் ஏற்றி--மலர்
    தூவித் தோத்திரங்கள் சாற்றி
    மாபாவி நரகனை வென்றோன்--கண்ணன்
    மலரடி யைத்தொழுது நின்றால்.

    கன்னங் கருநீலக் கண்ணன்--நம்
    காட்சிக் கழகுமிகும் வண்ணம்
    மின்னும் பலஅணிகள் பூண்டு--புவி
    மெச்சும் கட்டழகில் நீண்டு
    சின்னஞ் சிறியவர்கள் உள்ளம்--அந்தச்
    சிங்காரம் கண்டுகளி கொள்ள
    முன்னம் நம்மிடத்தில் வருவான்--குறை
    முற்றும் நீக்கிநலம் தருவான்.

    புத்தம் புதியஉடை தரித்தே--எழில்
    பொங்கும் மலர்மணங்கள் விரித்தே
    சித்தம் வியக்கஒளி வீசிப்--பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி
    மெத்தப் படித்துவரும் கேட்டுப்--பயன்
    மேவும் மெய்யறிவு கூட்டும்
    தித்திக்கும் கீதங்கள் பாடி--வந்த
    தெய்வக் கண்ணனிடம் ஓடி,

    கண்ணன் அறிவுரைகள் கேட்போம்--ஒருக்
    காலும் சோர்ந்திருக்க மாட்டோம்
    பண்ணும் எந்தஒரு செயலும்--சுய
    பாசம் அற்றிருக்க முயலும்
    எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம்--அவன்
    என்றும் பணிபுரியக் கண்டோம்
    திண்ணம் கண்ணனுடை உறவால்--நாம்
    தீரச் சிறப்புகளைப் பெறுவோம்.

    168. தீபாவளி எனும் திருநாள்

    தீபாவளிஎனும் திருநாளே
    தெய்வம் அன்பென வருநாளாம்.
    கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
    கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.

    தனித்தனி வீட்டின் தரைமெழுகி
    தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
    மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
    மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

    உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
    உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
    புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
    புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

    கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
    கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
    பட்சம் வந்த மனத்துடனே
    பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

    ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
    ஒருவருக் கொருவர் உபகாரம் ;
    இவ்வித வாழ்வே தினந்தோறும்
    இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.

    ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
    ஏங்கிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
    நோயால் நொந்தே இளைத்தவரும்
    நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.

    'ஐயா பசி'யென் பாரில்லை
    'அப்புறம் வா'யென் பாரில்லை.
    மெய்யே அன்பு மிகுந்திடும்நாள்
    வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும்நாள்.

    மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
    மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
    ஆச்சரி யம்போல் எல்லோரும்
    ஆடலும் பாடலும் சல்லாபம்.

    169. சுதந்தரத் திருநாள்

    இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
    இன்பம் யாவையும் இனிமேல் தருநாள் ;
    செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
    தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி.

    அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம் ;
    'அடிமை' என்னும் சொல்லையும் அழித்தோம் ;
    பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும்
    பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.

    அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும் ;
    அன்னை பாரதத் தாய்மனம் குளிரும் ;
    துன்பம் யாவையும் தொலைத்திட முடியும் ;
    சோற்றுத் தரித்திர மாவது விடியும்.

    முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
    முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
    மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம் ;
    மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.

    எல்லாத் தேசமும் எமக்கினி உறவாம் ;
    எவரும் செய்திடும் நன்றியை மறவோம் ;
    நல்லோர் யாரையும் நலமுறக் காப்போம் ;
    நலிப்பவர் எவரும் நடுங்கிடப் பார்ப்போம்.

    சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
    சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும் ;
    பதந்தரும் பலந்தரும் ; பரமனைக் காணும்
    பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.

    170. குடியரசு தினப் பிரார்த்தனை

    இந்தியத்தாய் குடியரசுத் திருநாள் இந்நாள்
    இந்நாட்டின் அயலுறவு சிறப்புற் றோங்கி
    வந்திடுமோ எனநடுங்கும் அணுகுண் டுப்போர்
    வாராமல் தடுத்துலகை வாழ வைக்கும்
    மந்திரமாம் காந்திமகான் மார்க்கம் தன்னை
    மற்றெல்லா நாடுகளும் மதிக்கச் செய்யத்
    துணைபுரியத் திருவருளைத் தொழுவோம் வாரீர்.

    அமிழ்தமெனும் தமிழ்வளர்த்த அறிவிற் கேற்ப
    அன்புமுறை தவறாத ஆற்றல் கூட்டித்
    தமிழரெனும் தனிப்பெருமை தாங்கி நின்று
    தனிமுறையில் செயல்புரியத் தலைப்பட் டாலும்
    இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
    இந்தியத்தாய் சொந்தமதை இகழ்ந்தி டாமல்
    அமைதியுடன் ஒற்றுமையை உறுதி யாக்கும்
    அதுதான்நம் குடியரசின் ஆக்கம் காக்கும்.

    சாதிமத பேதமெல்லாம் மறந்து விட்டுச்
    சமமாகப் பலதுன்பம் சகித்துக் கொண்ட
    சாதனையின் பயனன்றோ இன்று நம்மைச்
    சார்ந்திருக்கும் சுதந்தரத்தின் சக்தி யெல்லாம்?
    ஆதலினால் வேற்றுமையை வளர்த்தி டாமல்
    அன்புருவாம் காந்திஅண்ணல் நமக்குத் தந்த
    போதனையைத் தொடர்ந்துசெயல் புரிவோ மானால்
    புகழோடு குடியரசில் இன்பம் பொங்கும்.

    ஆண்டானுக் கடிமையெனும் அவலம் நீக்கி
    அரசாட்சி நமதுடைமை ஆக்கிக் கொண்டோம் ;
    பூண்டோடு வறுமையறப் பொருளா தாரப்
    புதுமுறைகள் திட்டமிட்டுப் பூர்த்தி செய்வோம் ;
    தீண்டாமை ஒன்றைமட்டும் ஒழித்து விட்டால்
    சாதிமதக் கொடுமையெல்லாம் தீர்த்த தாகும் ;
    தூண்டாத மணிவிளக்காய் நமது நாட்டின்
    குடியரசில் காந்திஒளி துலங்க வாழ்வோம்!

    எந்திரத்தால் சந்திரன்போல் பொம்மை செய்தே
    எட்டாத பெருவெளியில் சுற்றச் செய்தே
    வித்தைமிகும் விஞ்ஞான வித்தை தன்னை
    விதவிதமாய்ப் பாராட்டி வியந்திட் டாலும்
    சிந்தனையில் தெய்வபயம் இருக்க வேண்டும்
    செய்வதெல்லாம் கருணையுடன் செய்ய வேண்டும்
    மந்திரமாம் காந்திமகான் உபதே சத்தை
    மறவாமல் குடியரசில் வளர்க்க வேண்டும்.

    171. காந்தி பிறந்த நாள்

    கத்திய வார்தன்னில்--காந்தி
    கதைதரும் போர்பந்தர்
    புத்திலி பாய்அன்னை--செய்த
    புண்ணிய மேஎன்ன
    உத்தமன் பிறந்ததினம்--அறிஞர்
    உவந்திடும் சிறந்ததினம்
    இத்தினம் மகிழ்வோடு--காந்தி
    எம்மான் புகழ்பாடு.

    ஆர்வம் குன்றாமல்--காந்திய
    அறவழி நின்றோமேல்
    போர்ப்பயம் மறைந்துவிடும்--உலகில்
    புலைகொலை குறைந்துவிடும்
    பார்தனில் எல்லோரும்--மனிதப்
    பண்புள நல்லோராய்ச்
    சீர்பெற வாழ்ந்திடலாம்--தெய்வச்
    சிறப்புகள் சூழ்ந்திடலாம்.

    (வேறு)

    காந்தி மகானைப் பணிந்திடுவோம்
    காட்டிய அஹிம்சை அணிந்துடுவோம்
    சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம்
    சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம்
    மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம்
    மதவெறி இனவெறி அறப்பெறுவோம்
    தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம்
    தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம்.

    தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும்
    தான்பிற உடலோடு சேர்ந்திருக்கும்
    இன்னுயிர் நீக்கும் வினைபுரியா
    திருப்பவ ரேதாம் மிகப்பெரியார்
    பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம்
    புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
    அன்னவன் புகழே பாடிடுவோம்
    அஹிம்சா வழியே நாடிடுவோம்.

    ஒன்றாய் நல்லது கொல்லாமை
    ஒத்தது பொய்யுரை சொல்லாமை
    என்றான் வள்ளுவன் திருக்குறளில்
    எம்மான் காந்திதன் உருக்குறளில்
    நின்றான் அம்மொழி நிலைநாட்ட
    நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி
    நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின்
    நானிலம் போர்வெறி தணிந்துவிடும்.

    172. கம்பன் திருநாள்

    கம்பன் திருநாள் கொண்டாடிக்
    கவிதா தேவியின் அருள்கூடி
    அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம்
    அனைவரும் இன்புறும் படிநடப்போம்.

    கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும்
    கம்பன் திருநாள் இதுவாகும்
    மற்றுள பற்பல நாட்டாரும்
    மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும்.

    தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத்
    தந்தது கம்பனின் கவிச்சிறப்பே.
    'அமிழ்தம் தமிழ்மொழி' என்பதுவும்
    அழியா திருப்பதும் கம்பனதாம்.

    கம்பனை மறந்தால் தமிழ்ஏது?
    கவிதை என்பதும் கமழாது!
    அம்புவிக் கவிஞருள் அரசாகும்
    அவனே தமிழ்மொழிப் பரிசாகும்.

    கற்பனை சிறந்தது கம்பன்சொல்
    கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல்
    அற்புதச் சித்திரம் அவன்பாட்டு
    அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு.

    சத்தியம் மிளிர்வது கம்பன்சொல்
    சாந்தியைத் தருவது கம்பன்சொல்
    நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு
    நிந்தனை அற்றதும் அவன்வாக்கு.

    இயல்பாம் வழிகளில் கதைபேசி
    இசைமிகும் மொழிகளில் கவிவீசி
    நயமிகும் நாடகம் நடப்பதுபோல்
    நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம்.

    கலைமொழி நயங்களைக் காட்டிடவும்
    கல்வியின் தெளிவினை ஊட்டிடவும்
    நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில்
    நின்றிடும் கம்பன் அரும்பாட்டு.

    கன்னித் தமிழெனும் பெருமையெலாம்
    கம்பன் கவிதையின் அருமையினால்
    இன்னொரு கம்பனும் வருவானோ?
    இப்படி யும்கவி தருவானோ!

    துயரம் நேர்ந்திடில் துணையாகும்
    துன்பம் நீந்திடப் புணையாகும்
    அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும்
    அச்சம் நீங்கிட வலுப்படுத்தும்.

    குணங்களில் உயர்ந்திட நலங்கொடுக்கும்
    கொடுமையை எதிர்த்திடப் பலங்கொடுக்கும்
    வணங்கிய வாயுரை மொழிகூட்டும்
    வாழ்க்கையின் பயன்பெற வழிகாட்டும்.

    சாதியை மதங்களை மறந்திடவும்
    சமரச உணர்ச்சிகள் நிறைந்திடவும்
    நீதியை அறங்கள் நினைப்பூட்ட
    நிரந்தரக் களஞ்சியம் அவன்பாட்டு.

    பண்டிதர் புகழ்ந்திடல் போதாது
    பாமரர் மகிழ்ந்திடத் தோதாகப்
    பெண்டிரும் பிள்ளையும் அதைப்பிடித்துப்
    பெருமைக ளடைந்திடும்விதம்கொடுப்போம்.

    ஆராய்ச் சிகளால் மயங்காமல்
    அவைதரும் சண்டையில் தயங்காமல்
    நேராய் கம்பனைப் படிப்பவரே
    நிச்சயம் கவிரசம் குடிப்பவராம்.

    திருநாள் நட்புடன் நில்லாமல்
    தினந்தினம் படித்திட எல்லோரும்
    வருநாள் கண்டு களித்திடவே
    வாழிய தமிழுக் குழைத்திடுவோம்.

    173. கம்பன் விழா

    செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
    தேடுகின்ற இலக்கியமும் செறிந்த தாகும்
    நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
    நானிலத்தில் கவிஞருக்குள் தலைவன் என்றே
    அப்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
    அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
    கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
    கைகூப்பி வரவேற்போம் ; கடவுள் காக்கும்!

    அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்தே
    அதிசயித்திங் காசைகொள்ளும் கவியாம் கம்பன்
    தன்னையிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ?
    சரியாகப் போற்றாத தவறே போலும்!
    என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
    ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோ காணோம்!
    இன்னமும்நாம் இப்படியே இருக்க லாமோ?
    இழிவன்றோ தமிழரேனும் இனத்துக் கெல்லாம்?

    நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
    நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
    மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
    மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
    துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
    சோழவள வெண்ணெய்நல்லூர் சடையன் சேரும்
    கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
    கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.

    174. வன மகோத்ஸவம்

    வனம கோத்ஸவ வைப வத்தினை
    வான்ம கிழ்ந்திட வாழ்த்துவோம்
    ஜனம கோத்ஸவ மாக வேயிதைத்
    தமிழ கத்தினில் எங்கணும்
    மனம கோத்ஸவ மங்க ளத்துடன்
    மக்கள் யாவரும் செய்திடில்
    தினம ஹோத்ஸவ இன்ப மெய்திடத்
    திங்கள் மும்மழை பெய்திடும்.

    மரம டர்ந்துள வனமி ருப்பதன்
    மகிமை சொல்லவும் கூடுமோ?
    வரம டைந்தென வளமை யாவையும்
    வலிய நம்மிடை நாடுமே
    திறம றிந்திதன் தெய்வ சக்தியைத்
    தேசம் முற்றிலும் ஓதினால்
    உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும்
    உணவி லாக்குறை ஏதினி?

    கடவுள் ஆணையைமீறு கின்றநம்
    கபட நாடக வாழ்வினால்
    அடவி தந்திடும் பசுமை முற்றிலும்
    அழிவு செய்துள தாழ்வினால்
    கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக்
    காலம் மாறின பருவமும்
    மடமை விட்டிடக் கடமை கண்டினி
    மரம் வளர்ப்பது கருதுவோம்.

    நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும்
    விறகெ ரித்துள நிந்தையால்
    தழல்பு குந்துநம் சமையல் செய்திடச்
    சாண முற்றிலும் வெந்ததால்
    தழையி லாமலும் எருவி லாமலும்
    தகுதி யற்றுள மண்ணிலே
    விழல்மு ளைக்கவும் சார மில்லைபின்
    விளைவு எப்படி எண்ணலாம்?

    வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும்
    வான நீதியின் சத்தியம்
    வனம ழிந்தது மழைகு றைந்தது
    வாய்மை கண்டனம் இத்தினம்
    மனமு வந்தினி நாட்டி லெங்கணும்
    மரம டர்ந்திடச் செய்குவோம்.
    தினமி ருந்திடும் தானி யக்குறை
    தீர்ந்தி டும்படி உய்குவோம்.

    பசும ரங்களில் தெய்வ முண்டெனப்
    பழைய முன்னவர் போற்றினார்
    இசைமி குந்திட ஆயுள் நீண்டிட
    இன்ப இல்லறம் ஆற்றினார்
    வசைய ழிந்திட நாமும் அப்படி
    வனம ரங்களை எண்ணுவோம்
    திசைய னைத்திலும் புகழ்சி றந்திடத்
    தீர வாழ்க்கையும் பண்ணுவோம்.

    வாழ்க இத்திரு வாரம் முழுவதும்
    மரம்வ ளர்ந்திட நட்டவர்
    வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற
    வரையில் நீர்தினம் விட்டவர்
    வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும்
    வான ளாவிடும் சோலைகள்
    வாழ்க சத்திய சாந்த நல்வழி
    வந்த இந்தச் சுதந்தரம்.


    176. பகவத் கீதை : ஸாங்க்ய யோகம்
    இரண்டாம் அத்தியாயம்

    அர்ச்சுனன் கேட்கிறான் :
    கேசவா விளங்கச் சொல்வாய்
    கெட்டியாம் அறிவு பெற்றோன்
    பேசுமா றெவ்வா(று)? அன்னான்
    பிறரிடம் என்ன சொல்வான்?
    ஆசிலா அவனுக் குள்ள
    அடையாளம் யாது? அந்தத்
    தேசுளான் எதனைச் செய்வான்?
    தேர்ந்திடும் பலன்தான் என்ன?

    பகவான் சொல்லுகிறார்:
    பார்த்த!கேள் சொல்லு கின்றேன்
    பலமுள்ள அறிஞன் தன்மை ;
    ஆர்த்தெழு மனத்தில் தோன்றும்
    ஆசைகள் அனைத்தும் நீக்கித்
    தீர்த்தபின் ஆத்மா தோன்றும்
    தெரிந்துளே மகிழ்வா னாயின்
    நீத்தவன் அவனே என்ப
    நிச்சய புத்தி பெற்றோன்.

    துன்பங்கள் வந்திட் டாலும்
    துணுக்குற மாட்டான்; மற்றும்
    இன்பங்கள் எய்தி னாலும்
    இச்சித்து மயங்க மாட்டான்;
    பின்பவன் ஆசை, அச்சம்
    பிணைந்துள்ள சினமும் நீங்கும் ;
    தென்புள்ள முனிவ னாகித்
    திடமுற்ற அறிஞன் ஆவான்.

    நல்லது வந்த போதும்
    நசைதரும் மகிழ்ச்சி கொள்ளான் ;
    அல்லது கெடுதி வந்தால்
    அருவருப் படைய மாட்டான் ;
    தொல்லைய விருப்பி னோடு
    வெறுப்பையும் துறந்தோன் என்னும்
    வல்லவன் அவனே யாகும்
    வலிவுள்ள அறிவு வந்தோன்.

    தலைஒன்று, கால்கள் நான்கு,
    ஐந்தையும் தனக்குள் ளேயே
    நிலைபெற இழுத்துக் கொள்ளும்
    ஆமைபோல் நினைத்த வாறே
    அலைதரும் புலன்கள் ஐந்தும்
    தன்னுளே அடக்கி ஆளும்
    கலைதெரிந் தவனே யாகும்
    கலங்கிடா அறிவு கண்டோன்.

    தம்மிடம் மோகம் கொள்ளா
    ஜீவரை விட்டுத் தாமே
    வெம்மைய விஷய மெல்லாம்
    விலகிடும் எனினும் முன்னே
    அம்மனம் சுவைத்த இன்ப
    ஆசையின் சபலம் தங்கும் ;
    மெய்ம்மையன் பரமாத் மாவை
    மேவினால் அதுவும் நீங்கும்.

    குந்தியின் மகனே! கேளாய் ;
    குறைவற முயலும் யோக
    சிந்தனை யுடைய நல்ல
    தவசியின் திடத்தைக் கூட
    இந்திரி யங்கள் வேகம்
    தம்முடன் இழுத்துச் செல்லும் ;
    நிந்தனை சேரப் புத்தி
    நிலைதடு மாற நேரும்.

    அப்படிப் பட்ட அந்தப்
    பொறிகளை அடக்கி வைத்துத்
    தப்பற யோகம் தன்னில்
    தன்மனம் ஊன்றி நிற்பாய் ;
    எப்பொருள் எதையும் விட்டிங்
    கென்னையே பரனாய்க் கொண்டு
    வெப்புறும் புலனை வேன்றோன்
    மேவுவன் நிலைத்த ஞானம்.

    மனிதர்கள் விஷயம் தம்மை
    மனத்தினில் மருவும் போது
    பனிதரும் ஆசை தோன்றிப்
    பற்றுகள் பற்றிக் கொள்ளும்.
    வினைதரும் பற்றுண் டாகி
    விளைந்திடும் மோகத் தாலே
    சினமெனும் தீமை தோன்றிச்
    சிந்தனை கெட்டுப் போகும்.

    சினமது வந்த பின்னர்ச்
    சிந்தனை மயக்கம் கொள்ளும்
    மனமது மயங்கும் போதில்
    எண்ணத்தில் மாசுண் டாகும் ;
    நினைவது மாசு பட்டால்
    நிச்சயம் புத்தி நாசம் ;
    அனையதாய் அறிவு கெட்டால்
    அதன்பின்பு அழிவே திண்ணம்.

    அருப்புடைப் புலன்கள் தம்மை
    அடக்கிய அறிஞன் என்போன்
    இருப்புள உலகத் தோடே
    இணங்கிஊ டாடி னாலும்
    விருப்பொடு வெறுப்பு மின்றி
    விஷயங்கள் நுகர்வோ னாகத்
    திரிப்பிலன் ஆகி உள்ளத்
    தெளிவுடன் அமைதி சேர்வான்.

    தெளிவுடன் அமைதி சேர்ந்த
    சித்தத்தில் ஒளிஉண் டாகும் ;
    ஒளிபெறும் போது புத்தி
    விரைவினில் உறுதி கொள்ளும் ;
    அளிதரும் சாந்தி பெற்ற
    அறிவுதான் நிலைப்ப தாகும் ;
    இளிதரும் துன்பம் என்ப
    திவனுக்கிங் கில்லை யாகும்.

    யோகமில் லாத பேர்க்கே
    உறுதியாம் புத்தி யில்லை ;
    ஆகவே அவர்கள் ஆத்ம
    சிந்தனை அடைய மாட்டார்.
    சேகெனும் அந்த ஆத்ம
    சிந்தனை இல்லை யானால்
    பாகெனும் சாந்தம் இல்லை;
    பகர்ந்திட இன்பம் ஏது?

    இந்திரி யத்தின் வேக
    இழுப்பினில் சிக்கிக் கொண்டு
    சிந்தனை விஷயத் தோடு
    பின்பற்றிச் செல்லு மாயின்
    அந்தரக் கடலில், காற்றில்
    அலைபடும் படகே போல
    மைந்தரின் அறிவு மங்கி
    மலைத்திடும் ஆசை மோத.

    ஆதலால் வலிய தோளாய்!
    அத்தகை விஷயம் தம்மைக்
    காதலால் தொடரா வண்ணம்
    பொறிகளைக் கட்டிக் காத்து
    வாதனைக் கிடமில் லாமல்
    வசமாக்கி வைக்கத் தக்க
    சாதனை உடையோன் புத்தி
    சலனமில் லாத தாகும்.

    மற்றுள உயிர்கள் தூங்கும்
    மடமையின் இரவே யாகும்
    கற்றுள யோகி ஞானக்
    கண்ணுறங் காத நேரம் ;
    உற்றுள உலகத் தோர்கள்
    உழல்கின்ற பகற்கா லத்தை
    நற்றவ யோகி சாந்த
    நள்ளிர வாகக் கொள்வான்.

    ஆறுகள் பாய்ந்து தண்ணீர்
    அடிக்கடிப் புகுந்திட் டாலும்
    மாறுகொள் ளாது நிற்கும்
    மாபெரும் கடலே போல
    வீறுகொள் காமம் பாய்ந்தும்
    விருப்புறா நிலையே சாந்தி ;
    சாறுற விருப்ப முற்றோன்
    சாந்தியை அடைய மாட்டான்.

    இச்சையை ஒழித்தே எல்லா
    இன்பமும் துறந்தோ னாகி
    எச்சரிப் போடு காத்திங்
    கிடைதடு மாறி டாமல்
    நச்சிடும் மமதை கூட்டும்
    'நான்என' தென்ப தற்றோன்
    நிச்சயம் பரம் சாந்த
    நிலையினை அடைந்தோ னாவான்.

    அந்நிலை அதுவே ப்ரம்ம
    ஆனந்த நிலைமை யாகும் ;
    இந்நிலை பெற்றோன் பின்னர்
    எதிலுமே மயங்க மாட்டான் ;
    பொய்நிலை யான தேகம்
    போய்விடும் போது கூடச்
    செந்நிலை மாறி டாமல்
    முத்தியைச் சேர்வான் திண்ணம்.

    177. வாக்குமூலம்
    [மகாத்மா காந்தி, விசாரணையின்போது
    நீதி மன்றத்தில் கூறியதின் சாரம்]

    'ஆங்கில அரசியல் அதுமிக நல்லது
    ஈங்கதற் கொன்றும் இணையிலை' யென்றே
    எண்ணியே இருந்த என்மன முடைந்து
    மண்ணிலே அதுமிக மயக்குடைத் தென்று
    கண்ணிய முடையோர் கலந்திடார் அதிலெனத்

    திண்ணமாய் நம்பித் திரும்பிய காரணம்
    ஈங்குள யாவரும் இந்திய ரனைவரும்
    ஆங்கில மக்களும் அரசியல் அதிபதி
    தாங்களும் அறியச் சத்தியம் தெரிய
    ஓங்கிய கடமையில் உரைத்திட நின்றேன்.

    ஆதிநாள் தென்னாப் பிரிக்கா தன்னிவில்
    நீதியும் எங்கள் நிலைமையும் கண்டேன்
    இந்திய னாகவே இருந்தத னாலே
    சொந்தமென் றுரிமை சொல்லுதற் கொன்றும்
    இந்தமா உலகில் எமக்கிலை யென்பதை

    அங்கே முதலில் அறிந்திட லானேன்
    என்கிற போதும் ஏகாதி பத்யம்
    போய்விடும் போலப் போரில் எதிர்த்த
    போயர் சமரிலும் ஜூலுவர் போரிலும்
    அந்தநா டாளும் ஆங்கிலே யருக்கே

    என்னா லான உதவிகள் புரிந்தேன்
    சொற்பொரு ளுடலும் சோர்விலா துதவி
    பற்பல விதமாய்ப் பட்டமும் பரிசும்
    ஏட்டினிற் கூட என்னைப் புகழ்ந்து
    காட்டியே எழுதும் கனதையும் பெற்றேன்.

    ஜெர்மனி சண்டை செய்திடும் போதும்
    தர்மம் இதுவெனத் தளரா துழைத்தேன்.
    ஆனஎன் தேகம் அசதியுற் றிருந்தும்
    சேனையும் பணமும் சேர்த்துக் கொடுத்தேன்.
    சண்டையின் பின்பு தருமம் தழைக்கும்

    அண்டிய எங்கள் ஆரிய நாடும்
    மாநிலத் துள்ள மற்றநா டுகளெனத்
    தானிமிர்ந் துயரத் தயவுசெய் வாரென
    நம்பியே நானும் நாளும் உழைத்து
    வெம்பினேன் எண்ணமும் வீணாய்ப் போனதே!

    அடிமேல் அடியென அஞ்சியே பதைத்திட
    இடிமேல் இடிவிழ இற்றது நெஞ்சமும்
    முதலடி 'ரெளலட்' சட்ட மூலமாய்
    முதுகினில் விழுந்தது சுதந்தரம் முறியப்
    பதைத்துநா னெழுந்து பலவிதத் தாலும்

    அதைத்தடுப் பதற்கே அலைந்திடும் நாளில்
    தயங்கிய என்மனம் தைரிய மடையுமுன்
    பயங்கர மாகிய பஞ்சாப் படுகொலை!
    கூர்மையாம் இடியது மானமுங் குறைய
    மார்பினில் விழவே மயங்கினன் ஐயோ!

    இந்திய முசல்மான் மக்களுக் கென்று
    மந்திரி யுரைத்த உறுதியை மறந்தும்
    அன்னவர் குருவின் ஆதி பீடமாம்
    மன்னிய கிலாபத் மதவிஷயத்திலும்
    சொன்னதம் வாக்கினைச் சோரவிட் டார்கள் ;

    எண்ணமும் இல்லை யென்பதை யுணர்ந்தேன்.
    இத்தனைக் கொடுமைகள் இழைத்தனர் தெரிந்தும.
    சித்தமும் அவர்க்குச் சீக்கிரம் திரும்புமென்
    றாசையே கொண்டு அடக்கினேன் துக்கமே.
    ஏசிய என்னை எதிர்த்தவ ராகி

    எச்சரித் திட்ட என்னுடைய நண்பர்கள்
    உச்சரித் திட்ட உரைகளை விடுத்தே
    இந்தியர் குறைகளை எடுத்துரைத் திடவென
    வந்திடும் பெரிய வாக்குடை காங்கிஸில்
    அத்தினம் நானும் அமிர்த சரசினில்

    ஒத்துழைப் பதையே உறுதியாய்க் கொண்டு
    தாங்கியே நின்றேன் தருமந் தானென
    ஏங்கினேன் ஐயோ ஏமாந் தவனாய்!
    மகம்மதி யர்க்குரை வார்த்தையும் பொய்த்தது.
    தகுமெனப் பஞ்சாப் தருக ணாளரை

    அடிப்பது போலும் அழுவது போலும்
    நடிப்பினைச் செய்து ஞாயமும் மழுப்பித்
    தீங்கிழைத் தவர்க்கே உதவிசம் பளமும்
    பாங்குடன் கொடுத்துப் பரிசுகள் அளித்தார்.
    இதையெலாங் கண்டபின் இந்தியர்க் களித்த

    உதவாக் கரையாம் சீர்திருத் தங்களும்
    என்னுடை நாடு இன்னமுங் குறைந்து
    குன்றிட வென்றே கொடுத்தனர் என்று
    கண்டனன் நானும் கருத்திழந் தவனாய்ப்
    பண்டைய இந்தப் பாரத நாட்டிடம்

    அரசியல் செய்பவர்க் கன்பிலை யென்றும்
    உரிமையெம் பணத்தை உறிஞ்சிட வென்றே
    அறிந்திட நின்றேன் ஆங்கில ஆட்சியில்
    சிறந்தஎன் தேசம் சீர்குலைந் ததுவே!
    அன்றியும் இந்த ஆட்சியின் முன்னால்

    மாசிலா அவனுடைச் சன்னதி மன்றினில்
    ஆங்கில தேசமும் அதனுடன் எண்ணிய
    பாங்கின ராகிய இந்தியர் பலரும்
    உத்தரம் சொல்ல ஒதுங்கிடும் காலம்
    சத்தியம் ஒருநாள் வந்திடும் சத்தியம்.

    பற்பல விதமாய்ப் பார்த்துப் பார்த்தே
    அற்புத உண்மையை அறிந்தனன் நானும்
    அறிந்தோ அன்றோ அன்னியர் தமக்கே
    பரிந்தே நிற்கும் பகருமிவ் வாட்சியை
    நல்லதே யென்று நம்பினராகி

    நல்லதோர் துரைகளும் நாட்டினர் பலரும்
    மயங்கியே நிற்கும் மகிமையே மகிமை!
    முயங்கியே அவர்கள் செய்திடும் முறையில்
    ஆண்மையை யிழந்திங் கழுந்திடும் தேசம்
    பான்மையை உணரார் பாவமும் அறியார்.

    ஆதலா லிந்த அரசியல் மாறத்
    தீதிலா வழியில் திரும்பினேன் உழைக்க.
    அரசியல் செலுத்தும் அதிகா ரிகளாம்
    ஒருவ ரிடத்தும்நான் உள்ளம் கசந்திலன்
    மன்னவ னிடத்துள் மதிப்பிலும் குறையேன்.

    என்னினும் இந்த இயல்பிலா முறைமை
    இதுவரை கண்ட எல்லா முறையிலும்
    இதுமிகக் கெடுதிகள் இழைத்துள தென்று
    நம்பியே அதனுடன் நான்பிணக் குற்றேன்
    அன்புகாட் டுவதே அக்ரம மென்றேன்.

    இந்தியா விற்கும் இங்கிலாந் திற்கும்
    சந்ததம் நன்மையை நாடியே நானும்
    ஒத்துழை யாமையே உயர்ந்த வழியென
    ஒன்றிய சுகங்கள் உயர்ந்தஇந் நாட்டில்
    மனைதொறும் இருந்து மானங் காத்ததாம்

    நினைவரி தாகிய ராட்டினத் தொழிலை
    அழித்தனர் முற்றும் அறிந்தே யென்றிங்
    கெழுதினர் தெரிந்த இங்லீஷ் காரரே.
    காரண மிதனால் கணக்கிலா ஜனங்கள்
    சோறுண வழியும் துணியுமில் லாமல்

    நடைப்பிணம் போல நாள்கழிப் பதனைத்
    தடைசொல யார்க்கும் தைரியம் வருமோ?
    பட்டணக் கரையில் பகட்டியே யலைந்து
    சட்டவட் டம்பல ஜம்பமாய்ப் பேசி
    வீடுகள் கட்டியே விளக்குகள் ஏற்றிப்

    பாடுப டாமலே பசப்பியே வாழ்ந்து
    நாட்டுப் புறங்களில் நலித்திடும் ஏழைகள்
    பாட்டைப் பிடுங்கியோ பிறருடன் கூடிப்
    பங்குகொண் டுண்ணும் பாவமாம் வாழ்க்கையைத்
    தகர்த்திட் எண்ணார் தரகராய் வாழ்வார்.

    ஏழையின் பணத்தை எளிதினிற் பறிக்கவே
    ஆளுமிந் நாட்டின் ஆட்சியின் முறைமை
    உதவியாய் நிற்பதென் றுணரார் அவரும்
    உதவியாய் நிற்பதால் உண்மையை அறியார்.
    வித்தைகள் ஜாலமும் வேணது செய்தே

    எத்தனைக் கணக்குகள் எடுத்துரைத் தாலும்
    உண்மையாம் இதனை ஒளித்திட முடியுமோ?
    திண்மையாய் நானும் செப்புவ துண்டாம்.
    உலகக் கதைகளில் உவமையன் றில்லாப்
    பலமிகு மிகப்பெரும் பாவத் திற்கே

    ஈசனென் றொருவன் இருப்பதும் உண்மையேல்
    இத்தரை யெல்லாம் இயம்பினேன் அறிய,
    கடமையை யுணரும் ஒவ்வொரு குடியும்
    திடமுடன் கொண்டு செய்திட வென்றும்
    சட்டப் படிக்குத் தவறெனத் தெரிந்தும்

    திட்டமாய் நானும் தெரிந்தே செய்தேன்.
    ஆகையால் துரையே! அறைகுவன் முடிவாய்
    ஆகிய இந்த அரசியல் முறைமை
    சரியல வென்றும் சத்தியத் தில்நான்
    நிரப ராதியே என்பதும் நினைத்தால்

    ஒருவழி ஒன்றே உங்களுக் குண்டு.
    மருமிகும் இந்த மார்க்கத் திருப்பது
    சாலவும் தவறெனத் தகுதியி லுணர்ந்தால்
    வேலையை விட்டு விலகிடல் வேண்டும்.
    அன்றேல் இந்த அரசியல் முறைமை

    நன்றே நானும் நாட்டிற் கிடைஞ்சல்
    செய்தவ னென்றே தெளிந்திடு வீரேல்
    நொய்தில் விடாமல் நூலில் இதற்குள
    தண்டனை முழுவதும் தந்திடல் வேணும்
    கொண்டஇந் நாட்டின் குறைதவிர்ந் திடவே.


    178. நாட்டுக் கும்மி

    கும்மியடி பெண்கள் கும்மியடி யுங்கள்
    கொத்துச் சரப்பளி சத்தமிட
    நம்மையெ லாம்பெற்ற இந்திய நாட்டின்
    நன்மையைக் கோரி யடியுங்கடி!

    கடவுள் வணக்கம்

    புத்தனென் றும்மஹ மத்தனென் றும்ஏசு
    நாதனென் றும்மது சூதனென்றும்
    நித்த முதித்தருள் நீதி யளித்திடும்
    நிர்மல ஜோதியைப் போற்றுங்கடி!

    பிரமன் துதி

    நீதி நிலைக்க நினைந்தவ னாம்அருள்
    ஜோதி யுருக்கொண்ட மேனியனாம்
    ஆதி யறத்தை அளித்திடு வான்எங்கள்
    அரவிந்த நாதனைப் போற்றுங்கடி!

    சிவபிரான் துதி

    ஆலமுண் டாலும் அசையா தான்பர
    கால னடிகுண சீலனடி
    பாலை முனிந்த பனிமொழி யாள்பதி
    பாலகங் காதரன் பாடுங்கடி.

    கோபாலன் துதி

    தீதுசெய் வேந்தரைச் சீர்திருத் தம்செய்யத்
    தூதுந டந்திடும் தூயனடி
    கோதில் குணத்தவன் கோகுலத் தில்வந்த
    கோபால கிருஷ்ணனைப் பாடுங்கடி.

    வழிபடு கந்தன் துதி

    கந்தம லரொடு மேலவர்க்கும் ஞானக்
    கைப்பலம் காட்டிய கந்தனடி
    கந்தம ணக்கின்ற ஜோதிய டிபுகழ்
    காந்திய டிவெகு சாந்தனடி.

    தற்கால நிலமை

    கிட்டுங்க டிமலர் கொட்டுங்க டிகையைத்
    தட்டுங்கடி கண்ணீர் சொட்டுங்கடி
    மட்டில் புகழ்கொண்ட இந்திய தேவியின்
    மாட்சிமை கெட்டதைக் கேளுங்கடி!

    கெட்டோம் டிகுடி கெட்டோம டிநாம்
    பட்டோம டிவெகு கஷ்டமடி
    முட்டத் தரித்திரம் கிட்டி முறைக்குது
    மூதேவி நம்மை முறைமை கொண்டாள்.

    கஞ்சியற் றோம்பழங் கந்தையற் றோம்குல
    வஞ்சிய ரேஎன்ன வஞ்சமடி
    கெஞ்சுகின் றோம்மிக அஞ்சுகின் றோமென்ன
    காலம டிவந்த கோலமடி.

    மானமி ழந்தும தியிழந் துபுகழ்
    தானமி ழந்துத வமிழந்து
    ஞானமி ழந்துந லமிழந் துநாமும்
    போன கதியினைப் பாருங்கடி!

    காசு பணத்தைக்கை விட்டா லுங்கதிர்
    வீசும் புகழை விடலாமோ?
    வீசும் புகழையும் விட்டுவிட் டோம்சற்றும்
    வெட்கமு மின்றி வெளியில்வந்தோம்!

    நல்ல குடியிற் பிறந்தோமடி நாமும்
    நல்ல நிலையி லிருந்தோமடி
    தொல்லைப் பிறப்பும் புகழும் மறந்துநாம்
    தொண்டுசெய் தொண்டரின் தொண்டரானோம்!

    பேரும் புகழும் பெருமையுங் கொண்டவர்
    பேரரின் பேரரின் பேரரடி
    சீரும் சிறப்பையும் விற்றுவிட் டுநாமும்
    சின்னத் தனத்தினைத் தேடிக்கொண்டோம்!

    உத்தம ஜாதி மனிதர டிநாமும்
    உத்தம மான குலத்தரடி!
    பத்தினி ஜாதியின் பாவையே நாமிப்போ
    பஞ்சப் பனாதிக ளானோமடி!

    வீரர் குடித்தன வீரர டிநாமும்
    வீரருள் வீரரின் பேரரடி!
    சூரர் குடித்தனச் சூரர டியிப்போ
    சோற்றுக்கும் நீருக்கும் சோருதடி!

    வேந்தர் குடிவந்த மாந்தர டிவெகு
    வெற்றி யடிநாம் பெற்றதடி!
    சோர்ந்து சுழன்று சுழித்துத் திரிகின்றோம்
    சொக்கு தடிமனம் வெட்குதடி!

    அன்னிய ரெத்தினை வந்தா லும்மிக்க
    அன்புடன் கொண்டு விருந்த ளிக்கும்
    கண்ணிய மான குடியிற் பிறந்துநாம்
    கஞ்சியு மற்றுக் கதறுகின்றோம்!

    அன்னக் கொடிகள் பறந்து விருந்திடும்
    ஆசார வாசலின் வீதியடி!
    பின்னக் கழுதையும் பேயும் குடிகொள்ளப்
    பெண்மணி யேஎன்ன காலமடி!

    வெண்ணெயும் பாலும் பெருகி வழிந்திடும்
    பண்ணைய மெங்களின் பண்ணையடி!
    தண்ணீரு மின்றித் தயங்கத் தரித்திரம்
    தங்குத டிமனம் பொங்குதடி!

    நெல்லுங் குலமணிக் கல்லு முதிர்ந்திடும்
    கொல்லைய டியெங்கள் கொல்லையடி!
    கல்லுங் கரட்டொடு காடுமே டாயிப்போ
    காணுத டிமனம் நாணுதடி!

    கோடானு கோடி குடித்தனக் காரரின்
    கூட்டமடி யெங்கள் கூட்டமடி!
    நாடோடி யாகி நடுத்தெரு வில்நின்று
    நாமும் புலம்பிடும் ஞாய மென்ன?

    கண்ணும் மனமும் கருத்துங்கொண் டமட்டும்
    காணும டியெங்கள் காணியடி!
    கண்ணும் மனமும் கருத்துஞ் சுழன்றிடக்
    கஞ்சியற் றோமடி வஞ்சியரே!

    மன்னருள் மன்னரும் வந்து வணங்கிடும்
    மன்னவர் மன்னரின் மைந்தரடி!
    சின்னஞ்சி றுவரும் நின்று சிரித்திடச்
    செய்வினை என்னடி சேடியரே!

    நீதியும் நல்ல நெறிமுறை யுங்கொண்ட
    ஜாதியடி எங்கள் ஜாதியடி!
    நீதியும் நின்ற நெறிமுறை யுங்கெட்ட
    நிந்தனை யென்னடி சுந்தரியே!

    மானம் பெரிதென்று பிராணனை விட்டுயர்
    மாட்சிமை கொண்டவர் மைந்தரடி!
    மானத்தை விற்று வயிற்றை வளர்த்திடும்
    மாயமு மென்னடி சேயிழையே!

    வெள்ளியும் பொன்னும் விரிந்து
    வீசுமடி எங்கள் வாசலிலே!
    கள்ளியும் முள்ளும் கலந்து முளைத்திப்போ
    காட்டுத டிமனம் வாட்டுதடி!

    முத்தும் பவளமும் சிந்திக் கிடந்திட்ட
    முற்றமடி யெங்கள் முற்றமடி!
    சொத்தைப் பணத்திற்கும் செல்லாத காசுக்கும்
    சோருதடி மனங் கோருதடி!

    போரொடு நின்று புகழோ டிறந்திட்ட
    தீரர் வழிவந்த தீரரடி!
    தேரொடு நின்று தெருவோ டலைந்திடத்
    தேற்றமு மென்னடிக் கோற்றொடியே!

    இல்லையென் றோர்களுக்(கு) அள்ளிக் கொடுத்திட்ட
    வள்ளல் வழிவந்த வள்ளலடி!
    இல்லையில் லையில்லை யில்லையில் லையென்று
    பல்லை இளிக்கிறோம் பாருங்கடி!

    பார்த்த திசையெங்கும் பச்சைப்ப சேலேன்று
    பார்க்கும டியெங்கள் பாளையத்தில்
    பார்த்த திசையெங்கும் நீத்துக் கிடக்குது
    பாவமு மென்னடி பூவையரே!

    பட்டும்பட் டாடையும் கட்டிக் கழித்திட்ட
    பட்டையக் காரனின் பந்தலிலே
    கட்டக்கை யகலக் கந்தையு மின்றிநாம்
    கத்துவ தென்னடி சித்திரமே!

    மிஞ்சுவ ளங்கள் நிறைந்து சுகங்கள்
    மிதந்து கிடந்திட்ட தேசத்திலே
    பஞ்சமும் கொள்ளைப் பலவகை நோய்களும்
    மிஞ்சுவ தென்னடி ரஞ்சிதமே!

    பாலுந் தினுசுப் பழவகை யும்மூன்று
    வேளையும் தின்று வெறுத்தவர்நாம்
    பாழும் வயிற்றுக்குக் கூழுமின் றியிப்போ
    பற்றுத டிவயிறு வற்றுதடி!

    வேதமொ டுகுறள் நீதி முறைகளும்
    ஓது மடியெங்கள் வீதியிலே
    வாது வழக்கொடு வஞ்சனை மோசமும்
    வஞ்சிய ரேயிப்போ மிஞ்சுதடி!

    புத்தம் புதியவ ரானா லும்உயிர்
    தத்தம் அவருக்குத் தந்தவர்கள்
    ஒத்துப் பிறந்தவர் செத்துக் கிடந்தாலும்
    ஒத்தி நடந்திடக் க்ற்றோமடி!

    கட்டுக் கடங்காத கஷ்டங்கள் வந்தாலும்
    விட்டுப் பிரியாத கட்டுடையோம்
    விட்டுத் தனித்தனி எட்டிய தாலிந்த
    வேதனை வந்தது மாதரசே!

    கூடப் பிறந்த சகோதரர் கள்மிக
    வாடி யிருந்து வருந்துகையில்
    மோடி யிருந்து தனித்துச் சுகித்ததால்
    மோசம் போனோமடி மொய்குழலே!

    வாசம டிபுகழ் வீசுமடி எங்கள்
    தேசம டிவந்த மோசமடி!
    நாசம டிவெகு நாசம டிமனங்
    கூசுத டிபழி யேசுதடி!

    பொங்குத டிமனம் பொங்குத டிஉடல்
    பொங்குத டிதுயர் தங்குதடி!
    மங்குத டிமதி மங்குத டிமட
    மங்கைய ரேயன்ன பங்கமடி!

    எண்ணவெண் ணமனங் குன்றுத டிவினை
    என்னென்று சொல்லுவேன் கன்னியரே!
    பண்ணிய தொல்லைப் பழவினை யோவென்ன
    பாவம டிஎவர் சாபமடி!

    ஏன் இக்கதி யடைந்தோம்?

    பாவமல் லவருஞ் சாபமல் லமுனி
    கோபமுஞ் சாமியின் குற்றமல்ல ;
    தாபம டிபெற்ற தாயைம றந்ததால்!
    தாழ்வடைந் தோமடி தையலரே!

    மாதாவின் பெற்ற வயிறெரிய நாமும்
    மஹேச்வர பூஜையைச் செய்தமடி
    ஆதலி னாலிந்த வேதனை வந்ததும்
    ஆச்சரி யமல்ல ஆச்சியரே!

    அந்தத் தாய் யார்?

    தேசம டிஇந்து தேசம டிநம்மைப்
    பாசமு டன்பெற்றுப் பாலித்தவள்
    தேசம டிஇந்து தேசம டிஎங்கள்
    தேவிய டிஎங்கள் ஆவியடி!

    தேவிய டிஇந்து தேவிய டியெங்கள்
    ஆவிய டிஉங்கள் ஆவியடி!
    பாவிய டிவெகு பாவிய டிபடு
    பாதக ரெங்களைப் பெற்றதனால்!

    பெற்றவ ளிந்தியத் தேவிய டிபெயர்
    இட்டவ ளிந்தியத் தேவியடி!
    உற்றவ ளிந்தியத் தேவிய டிபால்
    ஊட்டி வளர்த்தவ ளும்அவளே.

    மாதமும் மாரி பொழிந்து செழித்திட்ட
    மாநிலத் துயர்ந்த தேவியடி!
    போதமும் வேதமும் முந்தி யுரைத்திட்ட
    புண்ணிய ஞானக் கிழவியடி!

    முப்பத்து முக்கோடி மக்கள டிஇந்த
    மூப்புடை இந்தியத் தேவிபெற்றாள்
    முப்பத்து முக்கோடி மக்களுந் தானுமாய்
    முச்சந்தி வீதியில் கத்துகின்றாள்.

    மூப்புடை இந்தியத் தேவியடி நம்மை
    முன்னம் பயந்து வளர்த்தெடுத்தாள்
    மூப்புடை இந்தியத் தேவிய டிநம்மை
    இன்னும் புரந்து முகம்துடைப்பாள்.

    இந்தியத் தேவிநம் மைப்பயந் தாள்கலை
    இந்தியத் தேவிந மக்களித்தாள்
    இந்தியத் தேவிந மைப்புரந் தாள்அந்த
    இந்தியத் தேவியை நாம்மறந்தோம்.

    எத்தனை காலஞ் சுமந்திருந் தாள்நமக்
    கெத்தனை கஷ்ட மனுபவித்தாள்!
    அத்தனை கஷ்டமும் நாமறந் தோமவள்
    அத்தனை குற்றமு மேபொறுத்தாள்!

    கோடானு கோடி பகைவர டிமுன்னம்
    கொள்ளை யடித்திட வந்தவர்கள்
    கோடானு கோடியும் தான்சகித் துத்தன்
    குஞ்சு குழந்தையை ஆதரித்தாள்.

    எண்ணிக்கை யற்ற அரசர டிஇந்த
    ஏந்திழை செல்வத்தில் ஆசைகொண்டார்
    எண்ணிக்கை யற்ற பகைவரடி அந்த
    ஏந்திழை வென்று நமைப்புரந்தாள்.

    அத்தனை கஷ்டமும் தான்சகித் துநம்மை
    ஆதரித் திருந்த தேவியினை
    மத்தரைப் போல மறந்தத னாலிந்த
    மாநிலத் தேமிக ஈனமுற்றோம்.

    அற்புத மான பொறுமையை டிஅவள்
    அற்புத ஞானப் பெருமையடி!
    அற்புதமான சிறுமைய டிஇப்போ
    அற்பத் தனத்தினால் தேடிவைத்தோம்.

    பெற்ற வயிறுமெ ரியாதோ? அவள்
    பேதை மனமும் வருந்தாதோ?
    பெற்ற குழந்தைகள் தன்னை மறந்ததைப்
    பெண்ணு மொருத்தி சகிப்பாளோ?

    பெற்ற மனமுங் கசிந்தழு தேஅந்த
    பேதை யுகுத்திடுங் கண்ணீரால்
    பெற்ற தனமும் புகழு மிழந்துநாம்
    பேதை களானது பெண்ணரசே!

    தாயை மறந்த குழந்தைக ளெப்படித்
    தாரணி தன்னில் செழிக்குமடி?
    தாயை யிகழ்ந்த குழந்தைக ளையிந்தத்
    தாரணி நின்று பழிக்குமடி!

    அன்னையும் தந்தையும் தெய்வமென்று முன்னம்
    சொன்ன கிழவியின் வார்த்தையைப்போல்
    அன்னையும் தந்தையும் அத்தையும் மாமனும்
    அத்தனை யும்இந்து தேசமடி!

    அந்தத் தேசத்தின் எல்லையும் சிறப்பும்

    வெள்ளி மலையும் வடக்கா கவிரி
    வெற்புடைச் சிங்களம் தெற்காகப்
    பள்ளக் கடலடி வங்கா ளம்குண
    பாரிச மேற்கி லரப்பிக்கடல்.

    பரந்து கிடக்கின்ற தேசமடி எம்மைப்
    பாலிக்கும் இந்தியத் தேவியடி!
    சிறந்து விளங்கிய தேசம டிஅவள்
    சீரும் சிறப்பையும் கேளுங்கடி.

    வேத முதித்தது மிந்நாடே அருள்
    வேதிகை நின்றது மிந்நாடே.
    போத முதித்தது மிந்நாடே மிக்க
    புண்ணிய பூமியென றாடுங்கடி!

    ஞான முதித்தது மிந்நா டேஅருள்
    ஞானிகள் நின்றது மிந்நாடே.
    மோன மறிந்த முதல்நா டேவெகு
    முத்த ரிருந்தது மிந்நாடே.

    புத்தர் பிறந்தது மிந்நா டேஅவர்
    போதம் வளர்த்தது மிந்நாடே.
    சித்த ரிருந்தது மிந்நா டேவெகு
    சித்திகள் பெற்றது மிந்நாடே.

    சீதை பிறந்தது மிந்நா டேஅவள்
    சீர்த்தி விளங்கிய திந்நாடே.
    கீதை பிறந்தது மிந்நா டேவெகு
    கீர்த்திகள் பெற்றது மிந்நாடே.

    சீருடை யத்தம யந்தியோ டுபுகழ்
    சிலம்புடைக் கண்ணகி தேவியையும்
    பேருடை யாள்சா வித்திரி தேவியைப்
    பெற்று வளர்த்தது மிந்நாடே.

    ராம னிருந்தது மிந்நா டேஅந்த
    பீம னிருந்தது மிந்நாடே
    சோம னொடுபுகழ் சூரியன் மரபும்
    ஜோதி பொழிந்தது மிந்நாடே.

    கண்ணன் பிறந்தது மிந்நா டேகொடை
    கர்ண னிருந்தது மிந்நாடே
    அண்ண லடியரிச் சந்திர னும்மவன்
    அன்புடைத் தேவியு மிந்நாடே.

    முன்னுமில் லைஇனிப் பின்னுமில் லையென
    முந்திய நீதியின் மூவேந்தர்
    மன்ன ரடிசேர சோழரும் பாண்டியர்
    மாட்சிமை கொண்டது மிந்நாடே.

    ஏட்டி லடக்க முடியா துமனம்
    எண்ணி எழுதவும் போதாது ;
    பாட்டி லடக்க முடியா தபுகழ்ப்
    பாவையும் மிந்தக் கதியானாள்.

    இனி நாம் செய்யவேண்டுவதென்ன?

    போனது போகட்டும் கண்மணி யே!இனி
    யாகிலும் புத்தியு டனிருப்போம்.
    மாநிலத் தாயை வணங்கிநின் றாலினி
    மாநிலத் தேமிக நாமுயர்வோம்.

    இந்தியத் தேவியைப் பூஜைசெய் யுமந்த
    இந்திய ரெல்லோரும் ஒன்றடியே
    எந்த மதத்திற்கும் எந்தக் குலத்திற்கும்
    சொந்தம டிஅவள் தொந்தமடி!

    ஏழையு மெங்களுக் கண்ணனடி செல்வப்
    பேழையு மெங்களின் தம்பியடி
    கோழையு மெங்கள் குலத்த னடிகுடி
    காரனுங் கூடப் பிறந்தவனே.

    நல்லவர் கெட்டவ ரென்பதன்றி மற்றும்
    நாலு வருணமு மொன்றடியே
    தொல்லைச் சுருதியின் சொல்லடி யேஇதைத்
    தோகையே நீயும் மறக்காதே.

    பறையரு மெங்கள் குலத்தர டிசுத்தப்
    பார்ப்பன ருமெங்கள் பந்துவடி!
    அரையனு மெங்களுக் கானவ னேயன்றி
    அல்லவ னும்வெகு நல்லவனே.

    அன்னிய ரானாலும் இந்திய நாட்டை
    அடைந்தவர் எங்களுக் கண்ணரடி!
    மன்னவ ரானாலும் இந்திய நாட்டை
    மறந்தவர் தங்களை நாமறப்போம்.

    எந்தக் குலத்தில் பிறந்தா லும்அவர்
    எந்த நிலையி லிருந்தாலும்
    இந்து நிலத்தில் பிறந்தவ ரெல்லோரும்
    இந்தியத் தேவியின் மக்களடி!

    முப்பத்து முக்கோடி மக்களடி நாங்கள்
    முப்பத்து முக்கோடி சோதரர்கள்.
    முப்பத்து முக்கோடி பேரு மொருமிக்க
    முப்பொழு தும்அவள் பூஜைசெய்வோம்.

    பூஜையென் றால்வெறும் பூஜையல்ல செல்வப்
    புண்ணிய பூமியின் பிள்ளைகளே
    ஆசையு டனவள் கைத்தொழில் வித்தையை
    ஆதரஞ் செய்யுங் கடமையடி.

    எண்ணிக்கை யற்ற தொழிலடி யேஇந்தப்
    புண்ணிய பூமியுங் கண்டதடி.
    எண்ணிக்கை யற்றவர் இந்தியர் தொழிலை
    அந்நிய தேசங்கள் ஆளுதடி.

    கைத்தொழில் கெட்டுக்க லங்குத டிதேசம்
    கைத்தொழி லின்றிப் புலம்புதடி!
    கைத்தொழில் தம்மை விருத்திசெய் தாலந்தக்
    கண்ணுடைத் தேவியும் கண்விழிப்பாள்.

    ஆயிரம் ஆயிரம் வித்தையடி இங்கே
    ஆதரிப் பாரின்றிச் செத்ததடி
    ஆயிரம் ஆயிரம் கைத்தொழி லாளிகள்
    ஆதர வின்றி உயிர்துறந்தார்.

    இந்தியத் தேவியின் கைத்தொழில் நாமும்
    ஏற்றுப் புகழக் கடமைப்பட்டோம்
    இந்தியத் தேவியின் வித்தைகளை நாமும்
    எந்த விதத்திலும் ஆதரிப்போம்!

    இந்திய தேசத்தில் உண்டா னபொருள்
    எந்த விதத்திலு முத்தமமே!
    இந்திய தேசத்தொ ழிலாளிநமக்
    கெந்த விதத்திலும் சொந்தமதால்.

    அன்னியர் சரக்கைத் தீண்டோமே நாமும்
    அன்னியர் தயவை வேண்டோமே
    அன்னியர் பொருளைத் தீண்டுந்தோ றும்அந்த
    அன்னை வயிற்றி லடிப்பதுபோல்.

    பயன்

    என்று நினைந்து மனங்கசந் துநாமும்
    இந்தியத் தேவியைப் போற்றிசெய்தால்
    நின்ற துயரம் மறையுமடி இங்கே
    நீடிய பஞ்சம் பறக்குமடி.

    கண்டுகொண் டோமடி கண்மணி யேஇனி
    காரண மின்னதெ னத்தெரிந்தோம்.
    பண்டைச் சிறப்பினை நாமடை யஇந்துப்
    பாவை பதத்தினைப் பூஜைசெய்வோம்.

    கேளுங்க டிஇனிக் கேளுங்க டிவந்து
    வீழுங்க டிஅவள் பாதத்தினில்
    வாழுங்க டிஇனி வாழுங்க டிஅவள்
    வாழ்த்தி யிருந்து வரங்கொடுப்பாள்.

    கிட்டுங்க டிகையைத் தட்டுங்க டிமலர்
    கொட்டுங்க டிஅவள் பாதத்தினில்
    விட்டத டிசனி விட்டத டிபழி
    விட்டத டிதுயர் விட்டதடி.

    பஞ்சமும் நோயும் பறக்குமடி அந்தப்
    பத்தினி தேவியை நாம்நினைந்தால்
    பஞ்சமும் நோயும் பற்றுமடி அந்தப்
    பத்தினி தேவியை நாம்மறந்தால்.

    இல்லையில் லையென்று பல்லை யிளிப்பதும்
    இல்லைய டிஇனி இல்லையடி!
    இல்லைய டிபசி இல்லைய டிநோயும்
    இந்தியத் தேவியை நாம்நினைந்தால்.

    உத்தம மாகிய ராஜாங் கம்இனி
    ஒப்பில தாகி உயருமடி
    நித்திய மாக நிலைக்கும டிநல்ல
    நீதியும் வேத நெறிமுறையும்.

    பொங்கும டிபால் பொங்கும டியினி
    புண்ணிய பூமி மனைதோறும்
    மங்கும டிவினை மங்கும டீஇந்த
    மங்கையை நாமும் மனதில்வைத்தால்.

    ராச்சியம் பொங்கித் தழைத்தோங் கநாமும்
    ராச்சியம் வேண்டி உழைத்திடுவோம்
    ஓச்சிய கோலு முயிர்த்தோங் கநாமும்
    ஒற்றுமை யோடும் உழைத்திடுவோம்.

    நீதி நிலைக்க நினைத்து வருகின்ற
    நிர்மல மாகிய ராஜாங்கம்
    ஆதி அரசின் வழிமுறை யேநின்றிங்
    காதித்தன் போல விளங்குமடி!

    வாழி

    வாழி மழைபொழி வானமொடு வரு
    மேழி யுழவர் வழிவாழி!
    வாழிய கைத்தொழில் வாணிபம் தம்மொடு
    வாழ்விக்க நின்றிடும் ராஜாங்கம்!

    வாழி முனிவர்கள் தேடி யளித்திட்ட
    வேத வழிவரும் நீதியெல்லாம்!
    வாழியர் ஞான முணர்ந்தோர் கள்வழி!
    வாழிய இந்த உலகமெலாம்!

    இந்தியத் தேவி தனக்கா கத்தங்கள்
    சொந்த சுகத்தைத் துறந்தவர்கள்
    எந்த மதத்திலும் எந்தக் குலத்திலும்
    வந்தவர் வந்த வழிவாழி!

    179. விடுதலைக்கு விதை விதைத்த வீரர் கூட்டம்

    இப்போது நூறாண்டு களுக்கு முன்னால்
    இந்தியத்தாய் சுதந்தரமே எண்ண மாக
    அப்போதே இந்நாட்டை அடக்கி யாண்ட
    ஆங்கிலரை அகற்றநின்ற ஆர்வம் தன்னைச்
    சிப்பாய்கள் கலகமென்ற நாமம் சூட்டிச்
    சிந்தித்துப் புத்தகத்தில் எழுதி னாலும்
    தப்பாமல் அதன்பெருமை நினைவு கூர்ந்து
    தலைவணங்கித் தாய்நாட்டைத் தாங்கி நிற்போம்.

    எங்கிருந்தோ எப்போதிங் கெவர்வந் தாலும்
    எதிர்கொண்டு வரவேற்று இனிதே பேசிப்
    பங்கிருந்தே உண்டுடுக்கப் பலவும் செய்யும்
    பரிவுடைய தமிழ்நாட்டுப் பண்பிற் கேற்பத்
    தங்குதற்கிங் கிடம்கேட்ட ஆங்கி லர்க்குத்
    தயவாகச் சென்னையிலே இடம்தந் தார்கள்
    அங்கிருந்து மெள்ளமெள்ள இந்த நாட்டின்
    ஆட்சிதனை அபகரித்தார் சூழ்ச்சி யாலே.

    சமயமுற்ற போதெல்லாம் சதிகள் செய்தார் ;
    இந்நாட்டு மன்னரிடை சண்டை மூட்டித்
    தமையடுத்த அரசருக்கும் உதவி போலத்
    தந்திரமாய் அவர்களைத்தம் அடிமை யாக்கி
    இமயமுதல் குமரிமுனை இறுதி யாக
    இப்பெரிய திருநாட்டைப் பற்றிக் கொண்டார் ;
    சுமைசுமையாய் இங்கிருந்த செல்வம் தன்னைச்
    சூரைகொண்டு சீமைக்குத் தூக்கிச் சென்றார்.

    நாகரிக அரசாட்சி நடத்தி இங்கே
    நன்மைசெய்ய வந்தவர்போல் தோன்றி னாலும்
    போகமிகும் பதவியெல்லாம் வெள்ளை யர்க்கே ;
    புழுக்கைகளின் வேலைகளே இந்தி யர்க்காம் ;
    சோகமுற்று இதைக்கண்ட சுதேச மக்கள்
    சுதந்தரத்தின் சிறப்புணரத் தொடங்கி னார்கள் ;
    வேகமுடன் எண்ணிமனம் வெந்து நொந்து
    வீறுகொண்டு விடுதலைக்கே துணிந்திட் டார்கள்.

    'இந்துமதக் கொள்கைகளில் தலையிட் டார்கள்'
    இஸ்லாம்கள் மதத்தினையும் இகழ்ந்திட் டார்கள் ;
    சொந்தமதம் கிறிஸ்தவத்தைப் பரப்பு தற்கே
    சூழ்ச்சியுடன் ஆட்சிசெய்யத் தொடங்கி யுள்ளார் ;
    இந்தவிதம் மதத்தினைநாம் இழக்க லாமா?'
    என்றுபல காரணங்கள் இணைத்துக் கூறிப்
    பந்தமற வெள்ளையரை வெறுக்கும் பேச்சே
    பட்டாளத் தார்களிடைப் பரப்பி னார்கள்.

    சுதந்தரத்தில் பேரார்வம்

    சுதந்தரத்தில் பேரார்வம் உச்சிக் கேறிச்
    சூழ்நிலைக்கே காத்திருந்த மக்க ளுக்குள்
    மதங்கெடுக்க வெள்ளையர்கள் வந்தார் என்ற
    மாற்றமது மந்திரம்போல் சீற்ற மூட்ட
    முதன்முதலாய்ச் சிப்பாய்கள் பர்ஹம் பூரில்
    வெள்ளையர்க்குக் கீழ்ப்படிய முடியா தென்றார் ;
    அதன்பயனாய் அவர்களுக்கு விலங்கு பூட்டி
    அடைத்திட்டார் சிறைக்குள்ளே ஆங்கிலேயர்.

    அதிலிருந்தே சுதந்தரப்போர் ஆரம் பந்தான் ;
    ஆயிரத்தெண் ணூற்றைம்பத் தேழா மாண்டில்
    மதிகணக்கில் மேமாதம் பத்தாம் தேதி
    மருவியநாள் ஞாயிற்றுக் கிழமை மாலை
    பதிசிறந்த மீரத்துப் பட்டி னத்தின்
    பாங்கிருந்த சிப்பாய்கள் படைகள் மூன்றும்
    கொதிமிகுந்து வெள்ளையரைச் சுட்டுக் கொன்று
    கொடிதூக்கிச் சுதந்தரப்போர்க் கோலங்கொண்டார்.

    உடைத்தார்கள் சிறைச்சாலைக் கதவை யெல்லாம்
    உள்ளிருந்த யாவரையும் விடுவித் தார்கள் ;
    படையெடுத்துத் தில்லியைப்போய்ப் பற்றிக் கொண்டு
    பஹதூர்ஷா மன்னனெனப் பறைசாற் றிட்டார் ;
    அடைவாக அங்கிருந்த பட்டா ளங்கள்
    அவைமூன்றும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு
    தடையிலராய்த் தம்முடைய பட்டா ளத்தின்
    தலைவர்களாம் வெள்ளையரைச் சுட்டுக் கொன்றார்.

    அன்னியர்கள் கொட்டத்தை அடக்கி விட்டோம்
    ஆங்கிலயர்கள் இனிநம்மை ஆள வொட்டோம்
    என்னுமொரு நம்பிக்கை எழுந்து பொங்க
    எங்கெங்கும் வெள்ளையருக்(கு) எதிர்ப்புண் டாகி
    மன்னுமந்த வடமேற்கு மாகா ணத்தில்
    மத்தியமா காணத்தில், அயோத்தி தன்னில்
    மின்னனைய வேகத்தில் சிப்பாய் மார்கள்
    மிடுக்காக விடுதலைப்போர் தொடுக்க லானார்.

    எழுச்சிகொண்ட புரட்சி

    முடியிழந்த மன்னர்பலர் முகம்ம லர்ந்தார்;
    முன்னிருந்த பெருமைவர முடியும் என்றே
    துடிதுடித்துச் சிப்பாய்க்குத் துணைவ ரானார் ;
    துணைபுரிய மக்களையும் தூண்டி விட்டார் ;
    வடிவமைந்த வீரப்பெண் ஜான்ஸி ராணி,
    வல்லமைசேர் தாண்டியா தோப்பி யோடும்.
    படியிழந்த பேஷ்வாவாம் நானா சாஹிப்
    பந்துவாம் ராவ்சாஹிப், அஸிமுல் லாகான்,

    குடும்பத்தின் சொத்திழந்த குன்வார் சிங்கும்,
    குலமுறையில் மொகலாயன் பிரோஸ் ஷாவும்,
    கடும்பக்தன் வெள்ளையர்பால் 'பென்ஷன்' வாங்கும்
    கதியடைந்த கான்பஹதூர் கான்என் பானும்,
    இடம்போன இப்படிப்பேர் பலரும் சேர்ந்தே
    எழுச்சிகொண்ட புரட்சிதனை இயக்க லானார் ;
    படம்கொண்ட நாகம்போல் சீறிப் பாய்ந்து
    பாமரரும் வெள்ளையரைப் பலியிட் டார்கள்.

    முட்டமுட்ட மூவைந்து மாத காலம்
    மும்முரமாய்ச் சுதந்தரப்போர் முழங்கிற் றப்பால்
    திட்டமிட்ட போர்முறைகள் வகுத்தி டாமல்
    திடமிருந்தும் ஒத்துழைக்கச் சேர்ந்தி டாமல்,
    கிட்டிவிட்ட வெற்றிகளைக் கட்டிக் காத்துக்
    கெட்டிபண்ணும் கிரியைகளைச் செய்தி டாமல்
    தொட்டெடுத்த சிப்பாய்கள் தோற்றிட் டாலும்
    சுதந்தரத்தின் உதயமதைத் தோன்றச் செய்தார்.

    எப்படியோ வெள்ளையர்கள் எதிர்த்து நின்றார்
    இந்தியரின் துணைகொண்டே இதனை வென்றார்.
    அப்படியாய் எழுச்சிகளை அடக்கும் போதும்
    ஆங்கிலயர்கள் செய்திட்ட அநியா யங்கள்
    எப்பொழுதும் அவரினத்தை நாணச் செய்யும் ;
    எங்கெங்கும் நாகரிகம் ஏசிக் கூசும் ;
    தப்பறியாப் பெண்களையும் தூக்கி லிட்டார் ;
    தாயோடு சிசுக்களையும் தகித்துக் கொன்றார்.

    குடுகுடுத்த கிழவரையும் குத்திக் கொன்றார் ;
    குற்றமற்ற பேர்களையும் சுட்டுத் தள்ளிப்
    பிடிகிடைத்த வீரர்களைப் பிணைத்துக் கட்டிப்
    பீரங்கி வாயில்வைத்துப் பிளந்திட் டார்கள் ;
    கடுகடுத்திங் கிதற்கீடாய்க் கான்பூர் தன்னில்
    காப்பளிக்க பட்டவெள்ளைக் காரப் பெண்கள்
    நடுநடுங்கச் சிசுக்களுடன் நசுக்கப் பட்டார்
    நானாவின் ஆட்களினால் நாணம் எஞ்ச.

    அதன்பிறகும் ஆங்கிலர்கள் வெறிகொண் டார்கள் ;
    அரக்கரினும் கொடுமைகளை அதிகம் செய்தார் ;
    மதங்கொண்ட யானையைப்போல் சுற்றிச் சுற்றி
    மக்கள்தமைக் கண்டபடி வதைத்திட் டார்கள் ;
    அதம்செய்தும் ஊர்களுக்கு அனலிட் டார்கள் ;
    அபயமென்ற பேர்களையும் அழித்திட் டார்கள் ;
    இதம்கண்டார் துரைத்தனத்தார் இங்கி லாந்தில்
    எப்படிச்செய் தாலும்சரி என்றிட் டார்கள்.

    வித்தகி அப்பெண்ணரசி

    வீரருக்குள் வீரர்களும் வியந்து போற்றும்
    வித்தகிஅப் பெண்ணரசி ஜான்ஸி ராணி
    போரகத்துக் குதிரையின்மேல் போகும் போது
    புல்லியர்தம் குண்டுபட்டு மாண்டு போனாள் ;
    ஆரணங்கு பதியிழந்த அயோத்தி பீகம்;
    அவளுடனே பிரோஸ்ஷாவும், நானா சாஹிப்,
    ஊரிலுள்ள ஒருவருக்கும் தெரியா வண்ணம்
    ஓடிவிட்டார் நாட்டைவிட்டே உயிருக் காக.

    போனசொத்து மறுபடியும் தருவா ரென்றும்,
    புரட்சிகளில் சேர்ந்ததனைப் பொறுப்பா ரென்றும்,
    மானமற்ற துரோகிஒரு மான்சிங் கென்பான்
    மனமாரத் தன்னைநம்பி மறைந்து வாழத்
    தானணைத்த தாண்டியா தோப்பி தன்னைத்
    தந்திரமாய் வெள்ளையர்க்குக் காட்டித் தந்தான் ;
    ஈனமிக்க உதவிசெய்த இவனைக் கூட
    இரக்கமின்றித் தூக்கிலிட்டார் இங்கி லீஷார்.

    அப்படியவ் விடுதலைப்போர் அடங்கி னாலும்
    அதிலுதித்த சுதந்தரத்தின் ஆர்வந் தானே
    எப்பொழுதும் குறையாமல் இருந்தே வந்திங்
    கிந்தியரின் தேசபக்தி இறுகச் செய்தும்
    ஒப்பரிய காந்திமகான் சாந்தப் போரில்
    உறுதியுடன் ஒத்துழைக்க ஊக்கம் தந்தும்
    இப்பொழுதும் இங்கிருக்கும் சுதந்த ரத்தின்
    இன்பத்தை நாமடையச் செய்த தென்போம்.

    ஆகையினால் சுதந்தரத்தில் ஆர்வம் பொங்கி
    ஆயிரத்தெண் நூற்றைம்பத் தேழா மாண்டில்
    வேகமுடன் வெள்ளையரை எதிர்த்தெ ழுந்து
    விடுதலைக்கு விதைவிதைத்த வீரர்க் கெல்லாம்
    வாகையுடன் புகழ்மாலை வணங்கிச் சூட்டி,
    வாயார இந்தியத்தாய் வாழ்த்துப் பாடி
    ஓகையுடன் இந்நாட்டு மக்க ளுக்குள்
    ஒற்றுமையே உறுதிபெற உழைப்போம் வாரீர்.

    அப்பெரிய மகிழ்ச்சியிடை மறந்தி டாமல்
    அதற்குமுன்னால் ஆயிரத்தெண் ணூற்றா றாண்டில்
    வெப்பமுடன் வெள்ளையரை விரட்ட வென்றே
    வேலூரில் விரைத்தெழுந்து புரட்சி செய்து,
    செப்பரிய துணிவுடைய செயல்க ளாற்றித்
    தியாகத்தில் உயிர்துறந்த சிப்பாய் கட்கும்
    இப்பெரிய திருநாளில் வணக்கம் செய்வோம்
    இந்தவிழாச் சிறப்பினுக்குத் தகுந்த தாகும்.

    பதினான்கு வருடங்கள் அதற்கும் முன்னால்
    பாஞ்சாலங் குறிச்சி, தமிழ்ப் பாளையத்தில்
    அதிவீரப் போர்புரிந்த அஞ்சா நெஞ்சன்
    ஆங்கிலரை ஆட்டிவைத்த கட்ட பொம்மன்
    சதிகார வெள்ளையரால் தூக்கில் மாண்ட
    சரித்திரமே விடுதலைக்குத் தலைப்போ ராகும் ;
    அதனோடு மருதிருவர் ஊமைத் துரையாம்
    அவர்களுக்கே அஞ்சலிமுன் செலுத்த வேண்டும்.

    பொன்னனைய சுதந்தரத்தை இழந்து விட்டுப்
    பொழுதெல்லாம் நொந்துமனம் புழுங்கி நின்றாள்
    அன்னியர்க்கிங் கடிமையென அவதி யுற்றாள்
    அன்னையிந்த பாரதத்தாய் அவலம் நீங்கிப்
    பின்னுமவள் தன்னரசைப் பெறுமா றெண்ணிப்
    பேராண்மை யோடுபல தியாகம் செய்து
    முன்னமிங்கே உயிர்துறந்த யாரானாலும்
    முடிவணங்கி அவர்பெருமை முழங்கச் செய்வோம்.

    இச்சைபோல் சுதந்தரமாய் இயங்கும் ஆசை
    ஈ எறும்பு புழுக்களுக்கும் இருப்ப துண்மை ;
    பிச்சைகேட் டுடல்வளர்க்கும் ஏழை கூடப்
    பிறர்க்கடிமை என்றிருக்கப் பிணங்கு மன்றோ
    அச்சத்தால் அடிமை செய்யும் கோழைகூட
    அந்நிலையை அகற்றிடவே ஆசை கொள்வான் ;
    மெச்சத்தான் தக்கதிந்த சுதந்த ரத்தின்
    மேன்மைதனை நன்குணந்து மிகவும் காப்போம்.

    முந்தியிந்த உலகத்தில் எவருங் காணா
    முற்றுமொரு சன்மார்க்க முறையைத் தந்த
    தந்தையெங்கள் காந்தியண்ணல் தலைமை யின்கீழ்
    தரணிமெச்சும் சாந்தநெறி நின்ற தாலே
    வந்தஇந்த சுதந்தரத்தை வணங்கிக் காத்து,
    வையமெங்கும் அமைதிவரும் வழியே நாடி,
    எந்தஒரு நாட்டோடும் பகையில் லாமல்
    எவ்வெவர்க்கும் நலங்கருதி இனிது வாழ்வோம்.

    180. காந்தி சரித்திர நொண்டிச் சிந்து

    காந்தியின் சரிதம்சொல்வேன்--நல்லோர்
    காதுக் கினிப்ப(து) அதைக் காட்டிலு முண்டோ?
    மாந்தர்க்குயர் தர்மமெல்லாம்--காந்தி
    மகாத்மாவின் வாழ்க்கையிலே மலிந்திருக்கும்.
    புண்ணியக் கதைஇதுவே--கேட்டால்
    பூதலத்தில் மூர்க்கருக்கும் பொறுமைவரும்.
    கண்ணியம் கனதையென்று--பழைய
    கதைகளில் முன்புநாம் கேட்டனவெல்லாம்
    சத்தியம் வடிவெடுத்து--வேதம்
    சாந்தி சாந்தியென்ற சாந்தத்துடனே
    இக்கரையிற் கண்டுகளிக்க--இன்னும்
    இருந்தே அறந்தருமோர் பெருந்தகையார்
    கூர்ஜர வடநாட்டில்--நல்ல
    குணமிகும் போர்பந்தர் சமஸ்தானம்
    தார்முடி மன்னர்க்கு--ராஜ
    தந்திர முரைக்குந்திறல் மந்திரிகளாய்
    வாழ்ந்தவர் பரம்பறையில்--குஜராத்
    வாணிய குலத்துக்கோர் ஆணியெனலாம்
    கரம்சந்த் என்பவரின்--மனைவி
    கற்பில்அருந் ததியென்னும் பொற்புடையவர்,
    புத்திர வதியாரின்--மூன்றாம்
    புத்திரரா கப்பிறந்தார் உத்தமர் காந்தி
    அன்னையுந் தந்தையுமே--தாம்
    அறிந்த கடவுளென்று நடந்திடுவார்.
    பள்ளிப் பருவத்திலும்--சிறு
    பையன்களின் துடுக்குகள் செய்யமாட்டார்.
    எள்ளளவும் பொய்பேசார்--மற்ற
    எவரொடும் தவறுகள் எதுவும் செய்யார்.
    ஆசான் மார்களுங்கூடக்--கண்டே
    ஆச்சரியப் படும்படி நடந்துகொள்வார்
    பன்னிரண்டு வயதினிலே--கஸ்தூரி
    பாயென்னும் உத்தமியை மணமுடித்தார்.
    தாயார் பெருங்குணமும்--கொண்ட
    தாரந்தனக் கேற்றபடி வாய்த்த நலமும்
    ஓயாப் புகழுடனே--காந்தி
    உலகினுக் குழைப்பதற் குதவியென்பார்.
    பெண்ணின் பெருமையன்றோ--நாட்டின்
    பெருமைகள் யாவினுக்கும் பிறப்பிடமாம்?
    பத்தொன் பதுவயதில்--சீமை
    பாரிஸ்டர் பரி¨‡க்குப் போய்ப்படிக்க
    ஆசைகொண் டார்காந்தி--கேட்ட
    அறிந்தவர் பந்துமித்ரர் அனைவருமாய்ச்
    சீமைக்குப் போனாலே--ஒழுக்கம்
    சீர்கெட்டு நம்ஆசாரம் போய்விடுமென்று
    தடுத்தார் பலபேர்கள்--பெற்ற
    தாயாரும் சம்மதிக்கத் தயங்கிநின்றார்.
    காந்தியின் பிடிவாதம்--கண்டு
    கடைசியில் அன்னையரு விதந்தேறி
    "மூன்றுவிதச் சபதங்கள்--செய்து
    முற்றுமவை காப்பேனேன்று சத்தியஞ்செய்தால்
    தருவேன் விடை" யென்று--பெற்ற
    தாயுரைத்த வாசகத்தைத் தலைவணங்கி
    "அருள்வீர் என்னசபதம்?"--என்றார்
    அன்னையவள் தன்மகனை யணைத்துச்சொல்வாள் :
    "மாமிசம் மதுவுண்ணல்--பர
    மாதர்களைக் காமுறுதல் இவைமூன்றும்
    செய்யேன் என்றெனக்கே--சத்தியம்
    செய்தபின்னர்ச் சீமைக்குச் செல்லுக" என்றாள்.
    "செய்வேன் அப்படியே--அந்தச்
    சீமையிலே மட்டுமல்ல சென்மமுழுதும்
    செய்வேன்" என்று சொல்லி--ஒரு
    சிறந்த சமணசந் யாசியின் முன்னால்
    சத்தியம் செய்து கொடுத்தார்--தாய்
    சந்தோஷ மாகவிடை கொடுத்தனுப்பச்
    சீமைக்குச் சென்றங்கே--தாய்க்குச்
    செய்துவந்த சத்தியங்கள் பிசகாமல்
    பாரிஸ்டர் பட்டம் பெற்றுத்--திரும்பப்
    பம்பாய் நகரில்தொழில் செய்யும்போது
    தென்னாப்பி ரிக்காவிலே--சில
    தெரிந்த மஹம்மதிய வியாபாரிகள்
    வக்கீல் தொழிலாக--ஒரு
    வழக்கை நடத்த அங்கு வரக்கேட்டார்.
    போனார் காந்தியங்கே--முன்னால்
    போயிருக்கும் இந்தியர்கள் படும்பாட்டைப்
    பார்த்தார் பரிதவித்தார்--மீண்டும்
    பம்பாய் திரும்பமனம் படியாமல்
    இந்தியரின் உரிமைக்காக--அங்கே
    இருபது வருஷங்கள் இருந்துழைத்தார்.
    விண்ணப்பம் செய்துபார்த்தார்--லண்டனில்
    வேண்டிய துரைகளைக் கெஞ்சிக்கேட்டார்.
    கண்டபலன் ஒன்றுமின்றிக்--கடைசியில்
    தன்கையே தனக்குதவி என்றுதுணிந்தார்.
    அநியாயச் சட்டங்களைச்--சிறுதும்
    அஞ்சாமல் சாந்தமுடன் எதிர்ப்பதென்றே
    இந்தியரை ஒன்று திரட்டிக்--கேட்க
    எல்லாரும் சரியென்றே ஒப்புக்கொள்ளவே
    தொடுத்தார் அறப்போரை--இந்தத்
    தொல்லுலகம் முன்னறிந்த தில்லையெனலாம்.
    சாந்தமும் சத்தியமும்--நம்பும்
    சர்வேசன் கருணையும் படையாகக்
    காந்தியும் போர்த்தெடுத்தார்--தாமே
    கைவிரற் பதிவுசெய்யும் சட்ட மறுத்தார்.
    தண்டனை யிரண்டுமாதம்--பெற்றுச்
    சந்தோஷ மாகச்சிறை முதலில் சென்றார்.
    ஆயிரக் கணக்காக--இந்தியரும்
    அங்கிருந்த சீனர்களும் சிறைக்குவந்தார்.
    இந்தவிதம் எட்டுவருஷம்--அங்கே
    இடைவிடாம லேயுழைத்தார் இடர்பொறுத்தார்.
    பலமுறை சிறைபுகுந்தார்--மக்கள்
    பத்தினியுங் கூடச்சிறைப் பயத்தைவிட்டார்.
    கல்லுடைத்துச் செக்குமிழுத்தார்--சிறையின்
    கக்கூசில் மலஜலம் வாரியெடுத்தார்.
    வீதியில் விலங்குடனே--சர்க்கார்
    வேண்டுமென்று நடத்தவும் சகித்திருந்தார்.
    இத்தனை துயரும் சகித்தே--அங்கே
    இந்தியரின் கண்ணியத்தைக் காத்து வைத்தார்.
    கைரேகைப் பதிவு செய்தல்--இந்தியரைக்
    கட்டாயக் கூலி செய்யக் கப்பலேற்றல்
    தலைவரி கொடுப்பதிவை--சர்க்கார்
    தள்ளிவிடச் சம்மதிக்க வெற்றியடைந்தார்.
    இந்தியா திரும்பி வந்தார்--சொந்த
    இந்நாட்டின் விடுதலைக் குழைத்திடவே
    சபர்மதி ஆச்சிரமத்தை--ஏற்படுத்தி
    ஸத்யாக்ர ஹப்பியரை வளர்த்துவந்தார்.
    சம்பரான் ஜில்லாவினிலே--அவுரிச்
    சாகுபடி கூலிகளைத் தாங்கி யுழைத்தார்.
    கெய்ரா ஜில்லாவினிலே--விளைவு
    கெட்டவர்க்கு நிலவரி விட்டிடச் செய்தார்.
    ஜெர்மன் சண்டைவரக்--காந்தி
    சேனையும்பண மும்மிகச் சேர்த்துக் கொடுத்தார்.
    நன்றியை நினைப்பார்கள்--இந்த
    நாட்டுக்கொரு நல்வழி பிறக்கு மென்றே
    நம்பியிருந் தார்காந்தி--ரெளலட்
    சட்டங்களால் இந்தியரை நசுக்க எண்ணம்
    கொண்டதைக் கண்டபின்னர்--இதுவரை
    கொண்டிருந்த நம்பிக்கை முற்றுந் துறந்தார்.
    சாத்வீகப் போர்தொடுக்க--ஜனங்களைச்
    சத்திய மெடுத்துக்கொள்ளப் புத்தி புகன்றார்.
    பற்பல இடங்களிலே--வெகு
    பரபரப் புடன்மக்கள் பதைத்தெழுத்தார்.
    நாடெங்கும் கூக்குரலும்--பஞ்சாப்
    நாட்டிற்சில பேர்புரிந்த பதட்டங்களும்
    'டய'ரென் றொருபாவி--அன்று
    ஜலியன்வா லாவிற்சுட்ட சங்கதியும்
    ராணுவச் சட்ட அமுலும்--இந்த
    நாட்டிற் பிறந்தவர்கள் மறப்பாரோ?
    கிலாபத் விஷயத்திலும்--ஆங்கிலரால்
    கிடைத்திருந்த வாக்குறுதி தவறியதால்
    ஒத்துழைப் பினிமேலே--சிறுதும்
    உதவா தென்றுமனம் உறுதிகொண்டார்.
    கல்கத்தா விற்கூடிய--விசேஷக்
    காங்கிரஸின் ஒத்துழையாத் தீர்மானம்
    நாட்டுக்கொரு புத்துணர்ச்சி--தந்து
    நல்லபல வேலைகளும் நடக்கையிலே
    சௌரிசாரா வென்னுமிடத்தில்--வெறிகொண்ட
    ஜனம்சிலர் போலீசுக் கச்சேரிக்குத்
    தீயிட்டுக் கொளுத்தியதில்--உள்ளே
    சிக்கிய இருபத்தொரு பேரும்மாண்டார்.
    கேட்டார் இதைக் காந்தி--இயக்கம்
    கெட்டுவிட்ட தென்றுகண்டு சட்டமறுப்பைத்
    தாமே நிறுத்தி விட்டார்--அந்தத்
    தகைமையை உலகென்றும் புகழுமன்றோ?
    சிலநாள் சென்றதன்பின்--காந்தியைச்
    சிறைபிடித்தார் குற்றப் பொறுப்பையெல்லாம்
    தம்மேல் ஒப்புக்கொண்டே--அதற்குத்
    தண்டனையா றுவருஷம் கொண்டுசிறையில்
    இரண்டு வருஷமிருந்தார்--குடலில்
    ஏற்பட்ட நோயினுக்குச் சிகிச்சை செய்து
    விடுதலை செய்தார்கள்--பிறகு
    வெகுநாள் நிர்மாண வேலைகள் செய்தே
    காங்கிர¨ஸைப் பலப்படுத்திக்--குடிசைக்
    கைராட்டைத் தொழிலெங்கும் பரவச் செய்தார்.
    முஹம்ம தலியின் வீட்டில்--ஹிந்து
    முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பட்டினிகொண்டார்.
    ஆறு வருஷம் பொறுத்தார்--நாட்டின்
    அடிமைத் தனங்குறைய ஆள்வோர்க்கே
    எண்ணமில்லை யென்று கண்டு--வைஸிராய்
    இர்வினுக்குத் தம்முடைய எண்ணமெழுதிச்
    சத்தியப் போர்தொடுத்தார்--உப்புச்
    சட்டத்தை மறுத்திருவ தென்று 'டாண்டி'க்குப்
    புறப்பட் டார்காந்தி--அந்தப்
    போதெழுந்த உணர்ச்சியை ஏதுசொல்லுவோம்!
    ஆச்சரியம்! ஆச்சரியம்!--அதை
    ஆராலும் முடியச் சொல்ல முடியாது.
    டாண்டியில் சட்ட மறுத்தார்--ஒருநாள்
    ஜாமத்தில் வந்து சர்க்கார் கைதுசெய்தார்.
    நாட்டிலெந்த மூலைமுடுக்கும்--சண்டை
    நடந்ததில் ல‡ம்பேர் சிறைபுகுந்தார்.
    ஸாத்வீகம் தவறாமல்--ஜனங்கள்
    சந்தோஷ மாகப்பல ஹிம்சை சகித்தார்.
    இந்தவிதம் பத்துமாதம்--சண்டை
    இடைவிடா மலெங்கும் நடந்திடவே
    காந்தியை வெளியில் விட்டுச்--சர்க்கார்
    காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    இரண்டாம் வட்டமே¨ஜைக்--கூட்டத்
    திந்தியக் காங்கிரஸின் பிரதிநிதியாய்
    வீரமொழி கள்புகன்றார்--ஏழைகள்
    விடுதலை விட்டெதுவும் வேண்டாமென்றே
    இந்தியா வருமுன்னால்--சர்க்கார்
    இர்வின் உடன்படிக்கை மீறிவிட்டதால்
    வில்லிங்டன் வைஸிராயைப்--பார்க்க
    விடைவர வேணுமென்று சேதிவிடுத்தார்.
    வைஸிராய் மறுத்துவிட்டார்--வேறு
    வழியின்றிக் காந்தியும் கைதியானார்.
    சிறையில் இருக்கும்போதே--அங்கே
    சீமையின் மந்திரி திட்டமொன்றினால்
    தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களைத்--தேர்தல்
    தனித்தனித் தொகுதியிற் பிரித்து வைத்தார்.
    காதில் விழுந்த உடனே--காந்தி
    கட்டாயம் பட்டினியிற் சாவேனென்றார்.
    எங்கும் பரபரப்பாய்ப்--பூனா
    எரவாடா ஒப்பந்தமும் நிறைவேறி,
    சிறையில் இருந்தபடியே--ஹரிஜன
    சேவை செய்ய வசதிகள் செய்துகொடுத்தார்.
    சிலநாள் சென்றதன்பின்--ஹிந்துக்கள்
    தீண்டாமை விஷயத்தில் மனமிரங்கத்
    தாம்ஒரு மூன்றுவாரம்--பட்டினித்
    தவஞ்செய்யக் கடவுளின் ஆணையெவரும்
    தடை சொல்லக் கூடாதென்றும்--காந்தி
    தாமெடுத்த விரதத்தைச் சர்க்கா ரஞ்சி
    விடுதலை செய்து விட்டார்-உடனே
    சட்டமறுப் பைச்சிறிது நிறுத்தச் சொல்லிப்
    பட்டினியை வென்று முடித்தார்-கிழவர்
    பயந்தவர் யாவரும் வியந்திடவே
    தலைவர்க ளோடுகலந்து-முடித்தால்
    சண்டையை முடித்தேஒரு ராஜிசெய்யவே
    வைஸிராய் வில்லிங்டனைத்-தாம்
    வந்துகாணச் சம்மதிக்கத் தந்திகொடுத்தார்.
    பதில்தந்தி மறுத்திடவே-முதலில்
    பாடுபட்டுத் தாம்வளர்த்த பயிரான
    சபர்மதி ஆச்சிரமத்தை-மூடித்
    தாமும்சில சீடர்களும் சிறைபுகுந்தார்,
    சிறையினில் முன்போல-ஹரிஜன
    சேவைக்கு வசதி சர்க்கார் குறைத்ததனால்
    வசதிகள் அவைபோனல்-இனித்தாம்
    வாழ்வதன் ல‡¢யம் போனதென்றே
    பட்டினியிற் சாகத் துணிந்தார்-உலகம்
    பயந்து நடுநடுங்கிப் பரதவிக்கத்
    தெய்வச்செய லேபோலே-காந்தியைத்
    திரும்பவும் சர்க்கார் விட்டுவிடவே
    செய்வதுதான் இன்னதென்று-தமக்குத்
    தெளிய விளங்கவில்லை அதனாலே
    'கிச்சிக் கிச்சிக் தம்பளம்' போல்-சர்க்கார்
    பிடிக்கவும் விடுக்கவும் செய்ய நடத்தல்
    கண்ணியக் குறைவென்று-தண்டனைக்
    காலம் ஒருவருஷம் கழியுமட்டும்
    ஹரிஜன சேவை ஒன்றே-அதன்பின்
    ஆண்டவன் விட்டவழி விடட்டுமென்றே
    ஏழைகளுக் குழைப்பதற்கே-தவம்
    ஏந்தும் காந்திபுகழ் என்றும் வாழ்கவே!

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.