LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

சகோதரி சாராதமணி

                                       சகோதரி சாராதமணி

ஸர்வோத்தம சாஸ்திரிக்கு அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. கதைகளில் வரும் காதலர்களைப் போல் "எப்போது இரவு தொலையும், பொழுது விடியும்?" என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். காலையில் முதல் காரியமாகத் தமது மனைவியை அழைத்து, "நேற்றிரவு ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். ரொம்ப நன்றாயிருந்தது. அப்படிப்பட்ட நாடகம் நான் பார்த்ததேயில்லை. இன்று இரவு உன்னையும் அழைத்துப் போக உத்தேசித்திருக்கிறேன், வருகிறாயா?" என்றார்.

     "உங்களுக்கே இவ்வளவு கருணை பிறந்து ஓரிடத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிறேனென்று சொல்லும் போது, நான் மாட்டேனென்றா சொல்வேன்? அதற்கென்ன, போவோம். ஆனால், இன்றைக்கு அந்தப் பெண் அபிராமியைப் பார்க்க வேண்டாமா?" என்றாள் மீனாட்சி அம்மாள்.

     "பார்த்தால் போகிறது. ஏன் அவளையும் நாடகத்துக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டுமென்றாலும் போவோம்."

     "என் மனத்திலிருக்கிறதை அப்படியே தெரிந்து கொண்டு விட்டீர்களே! ஆனால் உங்கள் தமக்கை சாரதாமணி என்ன சொல்வாரோ என்னமோ? ஒரு மாதிரி கிறுக்காயிற்றே? அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார்."

     "ஆமாம்; அவளிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 'ஒரு நாளைக்கு எங்களுடன் இருக்கட்டும். நாளைக்கு கொண்டு வந்து விட்டுவிடுகிறோம்' என்று சொன்னால் போயிற்று."

     "போலீஸ்காரர்களுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்க வேணும்?" என்றாள் அவருடைய பத்தினி.

 

*****

     சாஸ்திரி அன்றெல்லாம் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். நாடகக் கொட்டகைக்குப் போய்ப் பத்துப் பதினைந்து வரிசைக்குப் பின்னால் மூன்று ஸீட்டுகள் ரிஸர்வ் பண்ணினார். முன் வரிசையில் இடம் காலி இருக்கிறது என்று சொல்லியும், அவர் பிடிவாதமாக "வேண்டாம்; பின் வரிசையில் தான் வேண்டும்" என்று சொல்லிவிட்டார். 

     பிறகு அவர் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போய், கமிஷனரைப் பேட்டி கண்டு, வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இப்படிப் பல காரியங்கள் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

     சாயங்காலம் அவரும் அவர் மனைவியும் சரஸ்வதி வித்யாலயத்துக்குச் சென்றார்கள். அந்த வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி நமது சாஸ்திரியினுடைய ஒன்றுவிட்ட தமக்கை. அவருடைய தகப்பனார் ஹைகோர்ட்டு ஜட்ஜாயிருந்து காலஞ் சென்றவர். துரதிர்ஷ்டவசமாக சாரதாமணியின் மணவாழ்க்கை அவ்வளவு சந்தோஷமானதாயில்லை. கல்யாணமான இரண்டு மூன்று வருஷத்துக்கு அப்புறம் அவருடைய கணவன் யாரோ ஒரு சட்டைக்காரியுடன் கப்பலேறிச் சிங்கப்பூருக்குப் போய்விட்டான். அப்புறம் அவன் திரும்பி வரவேயில்லை.

     இவ்வாறு பெரும் துர்ப்பாக்கியத்துக்காளான சாரதாமணிக்கு அவருடைய தகப்பனார் நிறைய சொத்துக்கள் வைத்துவிட்டுக் காலஞ்சென்றார். சாரதாமணியும் நாளடைவில் தம்முடைய துக்கத்தை மறந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தம்மைப் போலவே பொது ஊழியத்தில் பற்றுக் கொண்ட இன்னும் சில ஸ்திரிகளுடன் சேர்ந்து இந்தச் சரஸ்வதி வித்யாலத்தை அவர் ஆரம்பித்தார். நாளடைவில் மற்றவர்களுடைய சிரத்தை குறைந்து போய்விட வித்யாலயத்தின் பொறுப்பு முழுவதும் கடைசியாக அவர் மேலேயே சார்ந்துவிட்டது.

     அப்படிச் சார்ந்தது முதல், வித்யாலத்தில் அவருடைய சிரத்தையும் பன் மடங்கு அதிகமாயிற்று. அவரது உலகமே வித்யாலயத்துக்குள் அடங்கிவிட்டதென்று கூறலாம். ஒரு சங்கீத வித்வான் நன்றாய்ப் பாடுகிறார் என்று யாராவது சொன்னால், "அவர் நமது வித்யாலயத்துக்கு ஒரு 'பெனிபிட் பர்பார்மன்ஸ்' (உதவிக் கச்சேரி) கொடுப்பாரா?" என்று கேட்பார். யாராவது ஒரு தலைவர் சென்னைக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டால், அவரை வித்யாலயத்துக்கு வரச் செய்ய உடனே முயற்சி தொடங்கிவிடுவார். யாராவது ஒரு வக்கீலுக்கு நிறைய வரும்படி வருகிறதென்று கேள்விப்பட்டால், "அவரிடம் நமது வித்யாலயத்துக்கு ஏதாவது நன்கொடை வசூலிக்க வேண்டுமே!" என்று யோசனை செய்வார். யாராவது ஒரு பெண் முதல் வகுப்பில் பி.ஏ. பாஸ் செய்தாள் என்று அறிந்தால், "அவளை நமது வித்யாலயத்தில் வாத்தியாராகச் செய்துவிட்டால் தேவலை" என்று தான் எண்ணமிடுவார்.

 

*****

     இத்தகைய அவருடைய சுபாவத்தை நன்கு அறிந்தவராதலால், சாஸ்திரி பேச்சின் ஆரம்பத்திலேயே, "சாரதா! இந்த வித்யாலயத்தைப் பார்க்கும் போது நாங்கள் எல்லோரும் எதற்காக ஜீவித்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. இப்பேர்ப்பட்ட உத்தமமான காரியத்துக்கு ஒரு உதவியும் செய்யாத ஜன்மமும் ஒரு ஜன்மமா?" என்று புகழுரையும் ஆத்ம நிந்தனையும் கலந்து கூறினார்.

     "அதென்ன அண்ணா, அப்படிச் சொல்கிறாய்? நீயுந்தான் பெரிய உதவி செய்திருக்கிறாயே? அந்தப் பெண் அபிராமியை எங்கள் வித்யாலத்துக்கு அனுப்பியதே ஒரு உதவிதானே?" என்றார் சகோதரி சாரதாமணி.

     "ஆனால் அந்த மாதிரி உதவி இன்னும் எத்தனையோ பேர் உங்களுக்குச் செய்யத் தயாராயிருப்பார்கள். பெண்களை அனுப்பி வைப்பதுதானா கஷ்டம்?" என்றாள் மீனாட்சி.

     "அப்படியில்லை, அம்மா! அபிராமியைப் போன்ற புத்திசாலிப் பெண்ணை அனுப்பி வைத்ததே ஒரு உதவி தான்."

     "நிஜமாகவா? அவள் சமர்த்தாயிருக்கிறாளா?"

     "அபிராமி ரொம்ப சமர்த்து. வித்யாலயத்திலேயே சங்கீதத்தில் அவள் தான் முதல். இப்போது வித்யாலயத்துப் பெண்களைக் கொண்டு ஒரு நாடகம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு வேண்டிய பாட்டுக்கள் எல்லாம் அவள்தான் இட்டுக் கட்டுகிறாள். அடாடா! எவ்வளவு நன்றாயிருக்கின்றன!..."

     "இதைக் கேட்க ரொம்பத் திருப்தியாயிருக்கிறது, அக்கா! எப்படியாவது அவள் சந்தோஷமாயிருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாள் அவள் எங்களோடு இருக்கட்டுமே. அழைத்துக் கொண்டு போய் நாளைக்குக் கொண்டுவிட்டு விடுகிறோம்" என்றார் சாஸ்திரியார்.

     சாரதாமணி, "அதற்கென்ன? பேஷாகச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு, அபிராமியை அழைத்து வர ஒரு பெண்ணை அனுப்பிவைத்தார்.

     பிறகு, "அந்தப் பெண் விஷயத்தில் ஒரே ஒரு சிரமம் இருக்கிறது. திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டு அழத் தொடங்கிவிடுகிறாள். அப்போதெல்லாம் அவளைச் சமாதானம் செய்வது பெருங்கஷ்டமாயிருக்கிறது - அவளுடைய அண்ணன் சங்கதி என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.

     "இன்னும் அகப்படவில்லை!" என்றார் சாஸ்திரி

     "அதற்கென்ன, ஒரு நாளைக்குப் பிடித்து அந்தப் பையனை ஜெயிலுக்கு அனுப்பி விடுவீர்கள். உடனே போலீஸ் இலாகாவுக்கு ரொம்பக் கிதாப்பு வந்துவிடும்..."

     "பின்னே என்ன சொல்கிறாய், அக்கா! திருடர்களைப் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பாவிட்டால், சமூகம் எப்படி நடைபெறும்?"

     "ஆமாம்; திருடர்களையெல்லாம் பிடித்து ஜெயிலுக்கு அனுப்புவதென்றால், முதலில் இந்த ஊரிலே இருக்கிற ஐகோர்ட் ஜட்ஜுகள், வக்கீல்கள், உத்தியோகஸ்தர்கள், சட்டசபை மெம்பர்கள் எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீயும் நானுங்கூடப் போக வேண்டியது தான். மகாத்மா காந்தி என்ன சொல்கிறார்? நம்முடைய கையால் உழைத்துப் பாடுபட்டுச் சம்பாதிப்பதைத் தவிர பாக்கி விதத்தில் பெறும் சொத்தெல்லாம் திருட்டுத்தான் என்கிறார். அந்தப்படி பார்த்தால் இன்றைய தினம் பங்களாக்களில் வாழ்ந்து மோட்டார் சவாரி செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் முதலிலே ஜெயிலுக்குப் போயாகவேண்டும், இல்லையா?"

     "சாரதா! அவ்வளவு பெரிய தத்துவம் நமக்குக் கட்டி வராது. அது வருகிறபோது வரட்டும். ஆனால் இன்னொரு விதத்தில் நீ சொல்கிறதை நான் ஒப்புக்கொள்கிறேன். சாதாரணமாய் ஜெயிலுக்குப் போகிற திருடர்களை விட வெளியில் இருக்கும் திருடர்கள் தான் அதிகம். இதைக்கேள். எங்கள் ஜில்லாவில் ராவ் சாகிப் சட்டநாத உடையார் என்று ஒரு பெரிய மனுஷர் இருக்கிறார். அவர் சுங்கத் திருடர் என்பது எல்லாருக்கும் தெரியும். காரைக்காலிலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் வரி கொடாமல் சாமான் கொண்டு வருவதுதான் அவருக்கு வேலை. இதிலேயே கொழுத்த பணக்காரராகி விட்டார். ஆனாலும் அவரை இதுவரையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலிலே போலீஸையே கையில் போட்டுக் கொண்டு விடுகிறார். அது முடியாமற் போனால் - கொஞ்சம் மனச்சாட்சியுள்ள போலீஸ்காரன் நடவடிக்கை எடுக்க முயன்றால், மாஜிஸ்ட்ரேட்டும் யோக்யராயிருந்து விட்டால் உடையார் இன்னும் மேலே போய்க் காரியத்தை ஜயித்துக் கொண்டு வந்து விடுகிறார். எங்களுக்குத்தான் அசட்டுப் பட்டம் கிடைக்கிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு மோட்டார் கேஸில் அவர் கலந்திருந்ததற்கு நல்ல ருசு இருந்தது. ஆனாலும் பிரயோசனமில்லை. இரண்டு நாளைக்கு முன்பு அவருக்கு ஆனரரி மாஜிஸ்ட்ரேட் வேலை கொடுத்திருப்பதாய்ப் பத்திரிகைகளிலே வெளியாகியிருந்தது. இதற்கு என்ன சொல்கிறாய்?"

     "என்னத்தைச் சொல்கிறது? உங்கள் உடையாரைப் போன்ற எத்தனையோ உடையார்கள் நமது சமூகத்தில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விமோசனம் ஒன்றே ஒன்றுதான்; மகாத்மா சொல்கிறபடி அவரவர்களும் கையால் உழைத்து ஜீவனம் செய்யவேண்டும். ஒருவருடைய உழைப்பைக் கொண்டு இன்னொருவர் வாழ்வு நடத்துவது என்பது கூடாது. இந்த நோக்கத்துடனேதான், வித்யாலயத்தில் எல்லாப் பெண்களுக்கும் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக் கொடுக்கிறோம். அவர்களுடைய கைவேலைகளையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையே? வாருங்கள் காட்டுகிறேன்" என்று சகோதரி சாரதாமணி சொல்லி, சாஸ்திரியையும் அவருடைய மனைவியையும் வித்யாலயத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றார். 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.