LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

சிற்றிலக்கணப் பதிப்புகள் - செம்பதிப்புகளுக்கான காத்திருப்பு - மு. நடராஜன்

தமிழ் மொழியில் நன்னூல் என்று சொல்லப்படும் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பேசுகின்ற நூல் தோன்றிச் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்நூல் தொடர்ந்து படிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெற்ற காலத்தில் முதலில் அச்சான நூல்களில் தனக்கோர் இடத்தைப் பிடித்துக்கொண்ட இந்த நூல் இன்றுவரை சுமார் ஐம்பதுக்கும் மேலான பதிப்புகளைக் கண்டது. ஆறுமுக நாவலர், உ.வே. சாமிநாதையர், தண்டபாணி தேசிகர் எனப் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர்களால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆறுமுக நாவலராலும் உ.வே. சாமிநாதையராலும் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலும் அதன் உரையும் செம்பதிப்புப் பெற வேண்டிய நிலையில் இருக்கும் என்பதை யாரும் கனவிலும் கருதியிருக்கமாட்டார்கள். ஆனால் ஜெர்மனியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அ. தாமோதரன் அவர்களால் 1999இல் நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞானமுனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும் என்னும் நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த நூலைப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற என்னைப் போன்ற வெகு சிலருக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களாலும் ஆயிரக்கணக்கான மாணவர்களாலும் படிக்கும் வாய்ப்புப் பெற்றும் மிகச் சிறந்த பதிப்பாசிரியர்களால் பதிப்பிக்கப்பெற்றிருந்தாலும்கூட ஒரு நூல் நவீன காலத்துக்குத் தகுதிபெற வேண்டுமானால் அது இன்றைய நிலையிலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பேராசிரியர் தாமோதரன் பதிப்பு, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது. தமிழ் மொழியில் புகழ்பெற்ற ஒரு நூலுக்கே இந்தக் கதி!
இறையனார் அகப்பொருள், தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து என்று நீண்ட இலக்கணப் பாரம்பரியம் தமிழ் மொழிக்கு உள்ளது. இதில் இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, வீரசோழியம் போன்ற நூல்கள் இலக்கண அறிஞர் கோபாலையர் அவர்களால் செப்பம் செய்யப்பட்டு நவீன பதிப்புகளாக வெளி வந்துள்ளன. 'சங்கர நமச்சிவாயரின் உரையையும் சேர்த்து நன்னூல் விருத்தியுரைக்கு இந்த நூற்றாண்டில் மட்டும் ஐந்து பதிப்புகள் வந்துள்ளன. சாமிநாதையர் (1925), கழகப் புலவர் குழுவினர் (1956), தண்டபாணி தேசிகர் (1957), எம். சுந்தரேசம்பிள்ளை (1969), சோம. இளவரசு (1981) ஆகியோர் பார்வையில் இவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. மனம் திறந்து சொன்னால் அவர்களுள் சாமிநாதையரும் தண்டபாணி தேசிகரும் விருத்தியுரையை ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டுப் பதிப்பித்தார்கள்; மற்றவர்கள் அச்சுப் பிரதிகளைப் பார்த்துப் படியெடுத்து வெளியிட்டார்கள். அவர்கள் இருவரும் பதிப்பியல் நெறிமுறைகளுக்குச் சிறப்பிடம் அளித்தார்கள்; மற்றவர்கள் விற்பனை வழிமுறைகளுக்கு முதலிடம் தந்தார்கள். அவர்களுடைய பதிப்புகள் ஆய்வாளர்க்கும் பயன்படுபவை; மற்ற வெளியீடுகள் மாணவர்க்கும் உதவாதவை என்று பொதுவாகக் கூறலாம்.1
தமிழ் யாப்பிலக்கண வரலாற்றில் யாப்பருங்கலக் காரிகை காலங்காலமாக மாணவர்களுக்குப் பாடமாக இருந்துவரும் சிறப்புடைய நூல். இதேபோல் யாப்பிலக்கணத்தை விரிவாகக் கற்போர்க்கும் ஆராய்ச்சிக்கும் பயன்படத்தக்க மற்றொரு யாப்பிலக்கண நூல் யாப்பருங்கலம் ஆகும். யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தைக் கூறுவதுடன் மிகப் பழைய காலத்தில் தமிழ் நூல்கள் கடல்போல் விரிந்திருந்த காட்சியை ஆதாரத்துடன் தருவது. 1916இல் பவானந்தம்பிள்ளை அவர்களால் முதலில் அச்சு வடிவம் பெற்ற இந்த நூல் பிற்காலங்களில் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, இரா. இளங்குமரன் போன்றவர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது. இருப்பினும் இன்றும் ஆய்வாளர்களுக்கு விளங்காத பல பகுதிகளை இந்நூலினுள் காணலாம். உதாரணமாக,
இவற்றையெல்லாம் ஞானாசிரியமும், சயதேவமும், மிச்சாகிருதியும், பிங்கலமும், மாபிங்கலமும், இரண மாமஞ்சுடையும், சந்திர போடிச் சந்தமும், 'குணகாங்கிய' என்னும் கருநாடகச் சந்தமும், வாஞ்சியார் செய்த வடுகர் சந்தமும் ஆகியவற்றுள்ளும், மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் புகுதியுடையார் வாய்க் கேட்டுக் கொள்க. இவையெல்லாம் விகற்பித்து உரைக்கப் பெருகும் ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், 'குருவும் இலகுவும் புணர்ந்து முற்ற வரினும், முற்றுக் குருவேயாயும் முற்ற இலகுவேயாயும் வரினும், 'சமானம்' என்பதாம்; இலகுவும் குருவும் புணர்ந்து முறை வரிற் 'பிரமாணம்' என்பதாம்; இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வரினும், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும் 'விதானம்' என்பதாம்' என்பர்
என்னும் பகுதியைக் காட்டலாம்.
இத்தகைய பல பகுதிகள் இந்நூலுள் பரந்து காணப்படுகின்றன. இதில் குறிப்பிடப்படும் நூல்கள் எந்த மொழியைச் சார்ந்தவை, என்ன தன்மைகளை உடையன, எந்த விதமான விளக்கத்துக்காக இங்கு மேற்கோள் காட்டப்படுகின்றன என்பன போன்ற விசயங்கள் இன்று வரை தமிழ் அறிஞர்களுக்குப் புரியாத புதிர்கள்தாம். தமிழ் செம்மொழி என்னும் தகுதிபெற்றுள்ள இன்றைய நாளில் இந்திய மொழிகள் பலவற்றுடன் ஒப்புமைப்படுத்திப் பேசப்படும் இத்தகைய பகுதிகள் விளக்கி எழுதப்படுவது காலத்தின் தேவை மட்டுமல்ல; மற்ற மொழிக்காரர்களும் தமிழ் மொழியின் தகுதியைப் புரிந்துகொள்ள வாய்ப்பாகும் இடங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
இறையனார் களவியல் எல்லோரும் அறிந்த ஒரு நூல். இந்த நூலைச் சுருக்கி மிகவும் அழகாக எழுதப்பட்ட அகப்பொருள் இலக்கண நூல் 'தமிழ்நெறி விளக்கம்'. 1937இல் உ.வே. சாமிநாதையர் அவர்களால் இந்நூல் அச்சு வடிவம் பெறுகின்றது. 'களவியற் காரிகை' என்று புதுப்பெயர் சூட்டி3 வையாபுரிப்பிள்ளை அவர்கள் பதிப்பித்த அகப்பொருள் இலக்கண நூலுக்குப் பெயர் விளங்காமல் 'இறையனார் களவியல் விளக்கம்' என்று பெயர் சூட்டப்பட்டிருந்ததாக மு. அருணாசலம் குறிப்பிடுகின்றார். களவியல் காரிகையில் மேற்கோளாகக் காட்டப்பட்ட எட்டுப் பாடல்களின் வழியாகத்தான் இஸ்லாமிய முதல் இலக்கியமாகிய 'பல்சந்தமாலை' என்பது அறியப்படுகின்றது. தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை என்ற இரு நூல்களும் இன்று காண்பதற்கு அரிதான நூல்களாகிவிட்டன. இந்நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டையொட்டி வெளிவந்தவை. இந்த நூல்களை நம் தலைமுறையினர் கண்ணால் காண வேண்டுமானால் மீண்டும் அவை அச்சிட்டு வெளியிடப்பட வேண்டும்.
அகப் பொருள் பற்றிப் பேசும் இறையனார் களவியல், தமிழ் பயிலும் பெரும்பாலானோரால் நன்கு அறியப்பட்ட ஒரு நூல். தமிழ்ச் சங்கங்கள், நக்கீரர் கதை என்ற தமிழ்த் தொண்டு மரபுக்கும் ஆதாரமாக உள்ள நூல். இந்த நூல் தாமோதரம்பிள்ளை அவர்களால் (1883-1899) இருமுறை பதிப்பிக்கப்பெற்றது. பவானந்தம் பிள்ளை பதிப்பு, கா. நமசிவாய முதலியார் பதிப்பு என்னும் இவை தவிர கழகப் பதிப்பு என்று பல முறை அச்சிடப்பட்டு வெளிவந்திருந்தாலும் ஐயரவர்களின் பதிப்புகளை ஒத்த ஓர் ஆராய்ச்சிப் பதிப்பு இன்றுவரை வெளிவரவில்லை என்று மு. அருணாசலம் தனது 10ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் (ப. 254) கூறுகிறார். இன்றுவரையில் அதற்கான முயற்சிகளும் ஒருவராலும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்று தமிழில் 'அலங்காரத்துக்குத் தண்டி' என்று புகழ்பெற்ற தண்டியலங்காரம் 1857இலிருந்து இன்றுவரை பல பதிப்புகளைக் கண்ட நூலாகும். வை.மு. சடகோப ராமானுசாச்சாரியார் (பதிப்பு-1901), சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பதிப்பு-1903), செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம் சேர்வை (பதிப்பு-1920), கழகப் பதிப்பு (1938 முதல் இன்றுவரை), கு. சுந்தரமூர்த்தி பதிப்பு என்று பல முறை பதிப்பிக்கப்பட்டிருந்தாலும், "கற்றோர்க்குப் பயன்படும் ஆராய்ச்சிப் பதிப்பு இனிதான் வெளிவர வேண்டும். கழகப் பதிப்பில் சிறப்புப் பாயிரத்தையும் எடுத்துவிட்டார்கள். ஐயரவர்கள் ஒரு பதிப்பு வெளியிடவில்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது"4 என்று வருத்தப்படும் மு. அருணாசலத்துடன் சேர்ந்து நாமும் வருத்தப்படும் நிலைதான் இன்றும் உள்ளது.
தமிழ் மொழியின் நீண்ட நெடிய பாரம்பரியத்தில் புகழ்பெற்ற இலக்கண நூல்களாயினும் சரி, அறியப்படாத இலக்கண நூல்களாயினும் சரி, கிட்டத்தட்ட எல்லா நூல்களுமே ஒரு விரிவான ஆராய்ச்சிப் பதிப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. நன்னூலுக்குப் பேராசிரியர் அ. தாமோதரன் அவர்களின் பதிப்பு வந்ததைப் போல் தொல்காப்பியத்திற்குக்கூட அமையவில்லை. பெரும்பாலான தமிழ் இலக்கண நூல்கள் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றில் முதல் நூல்கள் தோன்றுவதற்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன. இந்தக் காலத்தில் வட இந்தியாவில் வழங்கும் பல மொழிகள் எழுத்து வடிவம் பெறவே இல்லை. இவ்வாறு தென்னிந்திய, வட இந்திய மொழிகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட நம் தமிழ் இலக்கண நூல்கள் இன்றுவரை ஒரு நிறைவான ஆராய்ச்சிப் பதிப்பு பெறாமல் இருப்பது தமிழர்கள் அனைவரும் கவலையுடன் கவனிக்க வேண்டிய ஒரு விசயமல்லவா? தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தை அடைந்துவிட்டோம் என்று மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் இத்தகைய பணிகளையும் மேற்கொண்டு செயல்படுத்தினால், தமிழ் செம்மொழி என்பதை மேலும் வளப்படுத்தி உறுதிசெய்யும் செயலாக அது அமையும் என்பதில் ஐயமில்லை.
பின்குறிப்பு:
1. அ. தாமோதரன், நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும், பதிப்புரை, 1999, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ப. 56
2. மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, அமித சாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் பழைய உரையுடன், மறுபதிப்பு 1998, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ப. 558.
3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு (ஒன்பதாம் நூற்றாண்டு), 1970, காந்தி வித்யாலயம், ப. 233.
4. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு (12 ஆம் நூற்றாண்டு), 1970, காந்தி வித்யாலயம், ப. 651.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.