LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தமிழ் - தாய்மொழியா? வாய்மொழியா? -2

தமிழ் - தாய்மொழியா?  வாய்மொழியா? - 2 

 

தொடர்ச்சி

 

மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம்:

நாம் பேசும் மொழி என்பது நாம் வாழ்வதன் அடையாளம் ஆகும்.  ஒவ்வொருவரும் முதலில் ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா , கணவன், மனைவி என எதாவது ஒரு பாத்திரத்தை வகிக்கிறோம். அதற்கு அடுத்து,  மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி சூழலில் வாழும் நாம், தமிழராக, தமிழ் மொழி பேசுபவராக பெருமைப்படுகிறோம். அடுத்து நாம் நம் தெருவின், ஊரின் அங்கமாகத் திகழ்கிறோம்.  கடைசியாக, நம் மாநிலம் அமைந்துள்ள நாட்டின் குடிமகனாக, இந்திய குடிமகனாக, அமெரிக்க குடிமகனாக அடியாளம் கொள்கிறோம்.  இந்த வரிசையில்,  ஒரு நாட்டின் நல்ல குடிமகனாக இருப்பதற்காக, குடும்பத்தின் அடையாளத்தையோ, மொழியின் அடையாளத்தையோ விட்டுகொடுக்க இயலாது.  நாம் , நம் குடும்பம்,  நம் மொழி, நம் ஊர், நம் மாநிலம் மற்றும் நம் நாடு என்ற வரிசைப்பாட்டில் ஒருவருக்கு குழப்பம் வரும்பொழுது ஒருவர்,  அவரின் அடையாளம் மற்றும் தனித்தன்மையை இழக்கிறார்.  ஒரு குடிமகன், தனிமனித ஒழுக்கம் இல்லாமல் (நான், I ), குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் (Family Responsibility ) , மொழி அடையாளம் இல்லாமல் (Language identity ) சிறந்த குடிமகனாக இருக்க முடியாது என்பதை நாம்  நினைவில் கொள்ளவேண்டும்.  இன்றைய புலம்பெயர் சுழலில், நம் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தாலும், நம் அடையாளத்தை பெருமையாகக் கருதி, அதை தாங்கிப்பிடிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது நமக்கும், நம் எதிர்கால சந்ததிக்கும் ஒரு அவசியமான மற்றும் அவசரமான தேவையாகும்.

 

தாய்மொழி - பணம் பண்ணவா? , வேலை வாங்கவா? வாழ்க்கையின் தேவையா?

பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய, போட்டிகள் நிறைந்த இன்றைய எதார்த்த உலகில்,   இந்த கேள்வி அனைவருக்கும் வருவது சாதாரணமானதுதான்.  "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று பாடிய மகாகவி பாரதி பிறந்த இந்த தமிழ் சமுகத்தில்,  நமக்கு நம் மொழியின் அவசியத்தை உணர்த்தாக, இன்றைய சமுகச்சூழலை உருவாக்கிய நம் முந்தைய தலைமுறையை குற்றம் சுமத்தாமல் இருக்க முடியவில்லை.  பணம், பொருள், அவற்றை ஈட்டும் வேலை என்பது வாழ்வின் ஒரு பகுதிதான் , இந்த பணமும், வேலையும், பொருள் ஈட்டுவதன் நோக்கமும், அந்த பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான, அமைதியான, வாழ்க்கையை வாழ்வதாகவும் இருக்கவேண்டும்.  ஆனால் இன்று, வேலையே வாழ்க்கையாகி, வாழ்க்கையின் நோக்கமே வேலையாகி போன காரணத்தால், அனைவரும் எதற்க்கெடுத்தாலும் எனக்கு என்ன பயன் என்று பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. எதையோ நோக்கி அனைவரும் ஓடும் இன்றைய அவசர உலகத்தில், நமக்குள் எழும் முக்கியமான கேள்வி, பணம் பண்ணவும், வேலை வாங்கவும் அவசியப்படாத தாய்மொழியை கற்பதில் செலவிடும் நேரத்தை, வேறு எதாவது பணம் வரும் வழியில் செலவிடலாமே என எண்ணுகிறார்கள்.  அடிப்படையில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வருமானம் ஈட்டாத, செலவு வைக்கும் ஒரு மனிதர்களாக நாம் பார்க்க ஆரம்பித்தால் என்ன நிலையோ அதேநிலைதான் நம் மொழிக்கும் ஏற்படும். நாம் வளர்த்து தமிழ் வளரவேண்டிய சூழ்நிலையில் தமிழ் இல்லை. அந்த மொழியை, அதன் வளத்தை, அதில் உள்ள வாழ்வியல் சார்ந்த கருத்துக்களை அறிந்து, தெளிந்து நம்மை உயர்த்திக்கொள்வதும், நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. 

நமக்கு மகிழ்ச்சியிலும், வருத்தத்திலும் கைகொடுப்பது, நம்முடன் இருப்பது நம் மொழியும், இலக்கியமும், பாடலும், கலையும், தத்துவங்களும், நம் கலாச்சாரமும் ஆகும்.  இதை எந்த பொருளோடும்,எந்த வேலையின் உச்சத்தோடும் ஒப்பிடமுடியாது. தாய்மொழியை படிக்காத, பாடல் வரிகளை, அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளமுடியாத ஒரு நிலைமையை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி, நம் மொழி, கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டஒரு சமுதாயத்தை உருவாக்குவது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது ஆகாதா?  ஆங்கிலம் என்பது, கணக்கைப்போல், அறிவியலைப்போல், கணிப்பொறியைப்போல், ஒரு வேலைக்கு, நம் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படலாமே தவிர, தாய்மொழிக்கு இணையாக கருதமுடியுமா?  கணிப்பொறி வல்லுனராக எந்தனையோ நாட்கள் நாம் ரசித்து ப்ரோக்ராம் (program) செய்திருக்கலாம். அதனால், அதையே வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக கருத முடியுமா?    கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து, வாலி , இளையராஜா, இன்றைய எத்தனையோ எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நாவலாசிரியர்கள் என எதையுமே அறியாத, ரசனையில்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியுமா?

இன்று தமிழ் மொழி வாசிக்கத் தெரியாத, ஆங்கில வழி கல்வி கற்ற,30 ,35 வயதை கடந்த இளைய தலைமுறை திருமணமாகி பெற்றோர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள்.  பெரும்பாலான இந்த தாய் தந்தைகளுக்கு தமிழ் படிக்க, எழுத , தெரிவதில்லை. "ரசப்பொடி எடுத்து" என்பதை Rasappodi eduththu என்றுதான் எழுதுவதை காணமுடிகிறது. இவர்களுக்குப் புரியாத, இவர்கள் ரசித்திராத, நம் மொழியில் உள்ள வாழ்வியல் விஷயங்களை இவர்கள் எப்படி அவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்?

இன்று இளைஞர்களுக்கு உதாரணமாகத் தெரியும் டாக்டர் அப்துல்கலாம் என்ற தமிழர் எதனால் இந்த சிந்தனை வளம் பெற்றார்? என்பதை நாம் யோசிக்கவேண்டும். அவரின் தந்தை அவரை ஒரு ஆங்கில வழி பள்ளியில் படிக்கவைத்து அமெரிக்க நாசா கனவுடன் வளர்த்திருந்தால் அவரும் கோடானு கோடி மனிதர்களில் அவரும் ஒருவராக அடையாளம் தெரியாமல் போயிருப்பாரே. டாக்டர் M.S.உதயமூர்த்தி, மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் நமக்கு ஒரு தமிழ் சாதனையாளர்களாக கிடைக்காமல் போயிருபார்களே. இவர்கள் எல்லாம் இந்த தமிழை, அரசாங்க பள்ளியில் பயின்றவர்கள்தானே, இவர்களுக்குத் தெரியாத அறிவியலையும், சிந்தனைகளையுமா தமிழல்லாத, மேற்கத்திய கலாச்சாரத்தில் தேடி நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்போகிறோம்?   திருக்குறளை வாழ்வின் உன்னதமாக உணர்ந்த நம் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அக்னிச்சிறகுகள் நூலில் குறிப்பிடும்பொழுது ஏவுகணை வெற்றியின்போதும், தோல்வியின்போதும் தன் டைரியில் கவிதை எழுதியாதாக சொல்கிறாரே?  அது அவரின் அறிவியலா? மொழியியலா? உச்சகட்ட இன்பத்திலும், துன்பத்திலும் நம் உணர்வை பதிவுசெய்ய தாய்மொழிதானே வருகிறது. தமிழில் உள்ள ஒரு கவிதை நூலை, நாவலை படித்து பல மணி நேரம், பல நாட்கள், பல மாதங்கள் அதன் தாக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் இருக்க முடியுமே.  கரடு முரடான ஒரு மனிதனைக்கூட சிற்பமாக செதுக்கக்குடிய வல்லமை நம் தமிழ் நூல்களில் இருக்கிறதே, இதை இழந்துவிட்டு எதை நோக்கி செல்கிறோம்?  நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். 

 

மொழி என்பது பேசுவதற்க்குத்தானா?

ஒரு கணிப்பொறிக்கு Operating System எப்படியோ அப்படியே மனிதனின் Operating System என்பது ஒவ்வொருவரின் சிந்தனை மொழி, தாய்மொழியாகும்.     மூளை என்பது ஒரு மனிதனின் Processor எனக் கருதலாம். Operating System என்ன மொழியில் இருக்கிறதோ அந்த மொழியில்தான் நம் மூளை சிந்திக்கும்.   பிறகு, என்ன மொழியில் வெளிப்படுத்தவேண்டும் என்று மொழிபெயர்ப்பு செய்து வெளியிடும்.  தாய்மொழியை அரைகுறையாக கற்பது, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை குழப்பும் என்பதை  அறியவும்.  அமெரிக்காவில் குழந்தை மருத்துவர்களிடம் செல்லும்பொழுது அவர்கள் குழந்தைளுடன் வீட்டில் தாய்மொழியில் பேசவே அறிவுறுத்துகிறார்கள். பொதுவாக சிந்திப்பது, பேசுவது என்பது இரு வேறு விஷயங்கள். சிந்திப்பது தாய்மொழியிலும், வெளிப்படுத்துவது எதிரில் உள்ளவரைப் பொறுத்து தாய்மொழியிலோ, ஆங்கிலத்திலோ இருந்தால் அது ஒரு சிக்கலாக இருக்காது.  இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிந்தனைத்திறத்தில் மேம்பட்டு விளங்குவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  அவர்களின் மொழியறிவு ஆங்கில மோகம் கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட சிறப்பானதாக விளங்குவதாக தெரியவருகிறது.  காரணம், அரசுப் பள்ளிகளில் மொழி வகுப்புகளை, Smart Class என்ற பெயரில், கணிப்பொறிக்காகவும், Revision Test-க்காகவும் பயன்படுத்தாமல்,  மொழிவகுப்புகளில் முழுமையாக நம் தாய்மொழி அறிவை சொல்லிக்கொடுப்பதேயாகும். பொதுவாக தமிழ் கற்காத, தமிழ் நூல்களை படிக்கத்தெரியாத மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுகிறார்கள் ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ளத் திணறுகிறார்கள்.  இலக்கியமும், மொழியறிவும், நூல் வாசிப்பு பழக்கமும், கவிதை, கதை, தத்துவம், பாடல் ,ஆன்மிகம் என அறிந்த சுமாராகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் வாழ்வியல் நுணுக்கத்தை அறிந்து வாழ்வில் வெற்றிபெறுகிறார்கள். 

 

 

 

 

-தொடரும்
ச. பார்த்தசாரதி

-தொடரும்

 

 

ச. பார்த்தசாரதி

by Swathi   on 10 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.