LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்

நவ, 30 2020: வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? – பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்

அறிமுகம்:

‘வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா?’ என்ற தலைப்பில் பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் ‘வலைத்தமிழ் இணையதளம்’ முகநூலில் நேரலையாக நிகழ்த்தியது. இதில் ஆறு நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டு வாழ் தமிழர்கள், பல துறைகளைச் சார்ந்தவர்கள் அந்தந்த நாடுகளிலிருந்து கொண்டே இணையம் வழியாகத் தத்தமது பங்களிப்பினை அளித்தார்கள்.

நடுவர் - முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் - சிங்கப்பூர்

இந்த இணையவழி பட்டிமன்றத்தில், சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழரான முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் அவர்கள் நடுவராகப் பங்கு வகித்தார். இவர் 45 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வசிக்கிறார். 450க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களில் உரையாற்றி இருக்கிறார். தன் முனைப்பு பேச்சாளர், ஆங்கில பேராசிரியர், தொழில் முனைவோராகவும் விளங்குகிறார். பட்டிமன்றத்திற்காகப் பல பரிசுகளைப் பெற்ற இவர் தமிழ் மொழிக்காகப் பல தொண்டுகளைச் செய்து வருகிறார்.

உரை:

பல ஆண்டுகளாகத் தமிழர்கள் பல்வேறு அயல் நாடுகளுக்குப் படிப்பிற்காகவோ, பணிகளுக்காகவோ பிற தேவைகளுக்காகவோ சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் போது தமிழ் அதிகமாகப் பேசக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ்ப் பண்பாடு தானாகவே வளர்கிறது. ஆனால் வெளிநாட்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் வாழக்கூடிய தமிழர்கள் தாய் மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா என்ற தலைப்பில் விவாதம் நிகழ்த்தப்படுகிறது.

முனைவர் சித்ரா - ஹாங்காங்

கால் நூற்றாண்டு காலமாக ஹாங்காங்கில் வசிப்பவர் முனைவர் சித்ரா அவர்கள். மென்பொருள் நிபுணராக பணிபுரிகிறார். பகுதி நேரத் தமிழ்ப் பேராசிரியராக விளங்குகிறார். முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு மொழியியல் குறித்த ஆராய்ச்சி செய்து வருகிறார்.

உரை:

5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாடு வாழ் தமிழர்கள் தலைமுறைப் பெருமையை வளர்க்கிறார்கள். அமெரிக்காவில் 250க்கு மேற்பட்ட பள்ளிகளில் கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள். தமிழர் வழிபாட்டுக் கோயில்கள் பல வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்காகக் காணப்படுகின்றன. ஹாங்காங்கில் 50 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வருகிறது. பொங்கல், புத்தாண்டு, நவராத்திரி போன்ற தமிழ் விழாக்கள் ஆண்டுதோறும் ஹாங்காங்கில் கொண்டாடப்படுகின்றன. சிங்கப்பூரில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. அங்குத் தமிழ் மாதத் திருவிழாவை 30 நாட்கள் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். நாளிதழ்களில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என ஒரு பக்கம் காணப்படுகிறது. தமிழ் பேசும் வானொலிகள் வெளிநாடுகளில் காணப்படுகின்றன. ஆக ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, கம்போனியா, கத்தார், சவுதி, துபாய், தாய்லாந்து, ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, கன்னடா என எந்த நாடாக இருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் தமிழையும், தலைமுறைப் பெருமையையும் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

முனைவர் பாக்கியலட்சுமி – சவுதி அரேபியா

முனைவர் பாக்கியலட்சுமி அவர்கள் 13 ஆண்டுகளாகச் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். வளைகுடாவில் தமிழ் சமூகப்பணிகளை முன்னெடுத்துச் செய்து வருகிறார். வளரும் தமிழ் எழுத்தாளர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ‘வளர்தமிழ் மாமணி’ என்ற பட்டமும் பெற்றுள்ளார். பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார்.

உரை:

இன்றையத் தலைமுறையினர் பல மொழிகளைக் கற்கின்றனர். குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் பல மொழிகளைக் கற்கும் போது தமிழையும் அதில் ஒரு பாடமாக மட்டுமே எண்ணுகின்றனர். பொங்கல் விழாவானது அனைத்து வெளிநாடு வாழ் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையில் பொங்கல் விழாவின் நோக்கம் உழவர்களையும், விவசாயத்தையும் மேம்படுத்துவதே ஆகும். அத்தகைய விவசாயத்தை வெளிநாடு வாழ் தமிழர்கள் அவர்களின் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. விழாக்கள், பண்டிகைகள் என்பவை வெளிநாடு வாழ் தமிழர்களைப் பொருத்தவரை ஒரு முகப்பூச்சே. வெற்று கொண்டாட்டங்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. அவசர உலகில் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நாடும் உலகம் இது. சித்த மருத்துவத்தைச் சிந்தையில் நினைக்கக் கூட வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நேரம் இல்லை. ‘வணக்கம்’ என்ற ஒரு சொல் தமிழர்களின் பண்பாட்டை ஒட்டுமொத்தமாகக் காட்டிவிடும். அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வெளிநாடு வாழ் தமிழர்கள் மறந்து விட்டனர். எந்த ஒரு வெளிநாட்டுத் தமிழரும் தன் குழந்தை விவசாயியாக வேண்டும் என நினைப்பதில்லை. மருத்துவர், பொறியாளர் போன்ற பணிகளைப் பெற வேண்டும் என்றே நினைக்கின்றனர். தமிழுக்காகப் பல ஆண்டுகளாகப் பல முயற்சிகள் செய்தாலும் அவை அத்தனையும் இன்றும் குழந்தை தவழும் நிலையிலேயே உள்ளது. அது எழுந்து, நடந்து, ஓடி ஆட இன்னும் பல வருடங்கள் ஆகும்.

திருமதி. மதிவதனி(வாணமதி) – சுவிட்சர்லாந்து

உடல் உள நலப் பராமரிப்பாளர், புலம்பெயர்ந்த அன்னைகளுக்காக சமூக நல ஆலோசகராகச் செயல்படுகிறார். தமிழ் ஆசிரியை மற்றும் எழுத்தாளராகவும் செயல்படுகிறார்.

உரை:

விமான நிலையத்தில் உள்ள பாதுகாவலர்கள் மற்றும் சேவகர்கள் தமிழர்களைப் பார்த்தால் முதலில் ‘வணக்கம்’ என்றே கூறுகின்றனர். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை வெளிநாடு வாழ் தமிழர்கள் புழக்கத்தில் உள்ள மொழியாக மாற்றியிருக்கின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் விவசாயத்தை வளர்க்கவில்லை. ஆனால் வீட்டுத்தோட்டத்தில் கற்பூரவல்லியையும், புதினாவையும் வளர்க்கிறார்கள். ஏனெனில் இது அவர்களின் பாரம்பரிய விழுமியம் என்பதை அவர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள். கையால் சாப்பிட்டுப் பழகியவர்கள் தமிழர்கள். அதனால்தான் அதை மறக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் pizzaவைக் கூட பிய்த்துச் சாப்பிடுகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களுக்குத் தமிழ் மொழியே தலை வாசலாக விளங்குகிறது. மற்ற மொழிகள் அவர்களுக்குச் சாளரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழால் பூசை செய்யும் ஆலயங்கள் வெளிநாடுகளில் காணப்படுகின்றன. தமிழ் மொழியால் எழுதப்பட்ட பதாகைகள் காணப்படுகின்றன. வெளிநாடு வாழ் தமிழர்கள் வசிப்பது பத்தடி அறையாக இருந்தாலும் அதில் நிச்சயம் ‘சாமி அறை’ என்று ஒன்று இருக்கும். பத்து நாட்கள் கழித்துச் சமைத்தாலும் சாம்பாரைச் சமைக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் தமிழர்களை சில நேரங்களில் ‘தபு’ என்று கூறுவார்கள். அதற்கு ‘தமிழர்கள் அறைக்குள் பேச வேண்டிய விஷயங்களை வெளிப்படையாகப் பேச மாட்டார்கள், அவர்கள் நாகரீகமானவர்கள்’ என்று அர்த்தம். அந்த வார்த்தைக்குத் தமிழர்கள் உதாரணமாகின்றார்கள் என்றால் வெளிநாடு வாழ் தமிழர்கள் தலைமுறைப் பெருமையையும் வளர்க்கின்றார்கள் என்று தானே பொருள்.

திருமதி. ஜெயா மாறன் - அட்லாண்டா(அமெரிக்கா)

கால் நூற்றாண்டுக்கு முன் அமெரிக்கா சென்ற மதுரை மரிக்கொளுந்து இவர். ஜார்ஜியாடெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிதி ஆய்வாளராக பணிபுரிகிறார். 13 வருடங்களுக்கு மேல் பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்றவற்றில் பேசி வருகிறார். தமிழிலக்கிய பாடல்களைத் தனியாகப் பாடி, மக்கள் ரசிக்கும் வகையில் காணொளியாக மாற்றி அமெரிக்காவில் பரப்பி வருபவர். பல வரலாற்றுக் கதாபாத்திரங்களில் நடித்தவர். வார இறுதியில் தன்னார்வ தமிழாசிரியராக அமெரிக்காவில் பணிபுரிந்த வருகிறார்.

உரை:

தமிழ் மொழிக்காகவும், தலைமுறைப் பெருமையைக் காப்பதற்காகவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். அவை அனைத்தும் முயற்சியாக மட்டுமே உள்ளன. வெளிநாடு வாழ் தமிழர்கள் நடத்துகிற தமிழ்ச் சங்கங்களால் தமிழ் சினிமா தான் வளர்கின்றன. தமிழ் மொழி வளரவில்லை. 3000 தமிழர்கள் வசிக்கக்கூடிய வெளிநாடுகளில் 30 பேர் மட்டுமே தமிழ்ச் சங்கங்களுக்கு வருகின்றனர். 2000 பேர் கலந்து கொள்ள வேண்டிய தமிழ் மாநாட்டில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ‘தமிழுக்கு இவ்வளவுதான் கூட்டம் வரும்’ என்று அதனை நியாயப்படுத்தியும் கொள்கின்றனர். அமெரிக்காவில் 250க்கு மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் மொழியை மாணவர்கள் பயில்கின்றார்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க தமிழ்த் தொண்டர்களே காரணம். ஆனால் படிக்கின்ற மாணவர்கள் அதை கிரெட்டிற்காக மட்டுமே படிக்கின்றனர். தமிழ் தெரிந்த மாணவர்கள் கூட கல்லூரிக்குச் சென்ற பிறகுத் தன் உறவினர்களிடம் கூட, தமிழில் பேசத் தயங்குகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் அயல் நாட்டு மோகத்தை மட்டும் மிக நேர்த்தியாக அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி விடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் வெளிநாட்டில் ஓரிரு ஒழுக்கத்தை மட்டும் கையில் இறுக்கப் பிடித்துக் கொண்டு உணவு, உடை, திருமணம் போன்றவற்றைப் பிள்ளைகளின் விருப்பத்திற்கே விடும் போக்கே காணப்படுகிறது. தான் பேசும் தமிழை தன் பிள்ளை பேசாத போது, அதற்கு அடுத்த தலைமுறை தமிழினமாக இருக்குமா என்பது சந்தேகமே. தமிழ் மொழியை வளர்க்கவும், தலைமுறைப் பெருமையைக் காக்கவும் எடுக்கப்படும் அத்தனை முயற்சிகளும் முயற்சிகளாக மட்டுமே உள்ளன. அவை வளர்ச்சியை எட்டவில்லை.

திரு. மகாதேவன் - கத்தார்

தஞ்சையிலிருந்து கத்தாருக்கு வந்தவர். 12 ஆண்டுகளாக கத்தாரில் வசித்து வருகிறார். அபோகி பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கத்தாரில் உள்ள இட்லி உணவகத்தின் பங்குதாரர். கத்தாரிலிருந்து கொண்டே, இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோராக விளங்குகிறார்.

உரை:

தமிழக வரலாற்றில் ‘உலகத் தமிழ் மாநாடு’ என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய உலகத் தமிழ் மாநாட்டின் முதல் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. பத்தாவது மாநாடு கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. உலகமே அங்கீகரித்த மொழி தமிழ், உலகமே அங்கீகரித்த இனம் தமிழினம் ஆகும். அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ‘பாரக் ஒபாமா’ அவர்கள் ‘நான் படித்த காலங்களில் இராமாயணம், மகாபாரதம் கேட்டுத் தான் வளர்ந்தேன்’ என்று கூறுகிறார். கன்னட பிரதமர் தைத்திருநாளுக்கு தமிழில் வாழ்த்துக் கூறுகிறார். கொய்த்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நியூசிலாந்தில் 600 ஆண்டுகளுக்கு முன் சென்ற தமிழ் மன்னன் தவற விட்ட மணியை, இன்றும் ‘தமிழ் மணி’ என்று அங்கே அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். ஜப்பானில் பல்கலைக்கழக நுழைவாயிலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஜப்பானில் அதிகமாகக் கனிமம் வளரக்கூடிய இடத்திற்கு ‘அதியமான்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். கனிமத்தைக் கொண்டு போர்க்கருவி செய்தவன் அதியமான் என்பதால் அவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் பிழைப்பதற்காக எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் ‘வணக்கம்’ சொல்லுவார்கள். ஆனால் இதயத்தில் தாய்மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

திரு. பிரபு சின்னத்தம்பி – நியூஜெர்சி (அமெரிக்கா)

கணினித்துறையில் பணிபுரிகிறார். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வார இறுதி என்பது மிக இன்றியமையாதது. அந்த வார இறுதியில் இவர் தன்னார்வ தமிழாசிரியராக பணியாற்றுகிறார்.

உரை:

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் தமிழர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். அதில் வரும் வசனங்கள் அனைத்தும் வீரியமிக்கவை. ஆனால் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு அந்த வசனங்கள் புரியுமா, அதன் பின்னனிக் கோபம் தெரியுமா என்றால் சந்தேகமே. 1960, 1970களில் அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. அவற்றை அவர்களின் குழந்தைகளே பராமரிக்கவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் முன்வரவில்லை. பன்னாட்டு மக்கள் வாழும் நாட்டில் விருந்தோம்பல் செய்ய முடியாது. வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கவே தயங்குகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடும் போது, தாய் மொழியையும், தலைமுறை பெருமையையும் வளர்க்க அவர்களுக்கு நேரமேது?

தீர்ப்பு:

பேசிய ஆறு பேர் வாதங்களிலும் உண்மை இருக்கிறது. வெளிநாடுகளில் தமிழ் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அவனது பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகிவிடும். இந்த நிலையில் அடுத்த தலைமுறை தானாகத் தமிழைக் கற்க முன்வராது. பல்லின சமூகம் வாழக்கூடிய நாட்டில் தமிழை முழுமையாக வளர்க்க முடியவில்லை என்பது உண்மையே. புற அடையாளங்கள் வேண்டுமானால் அழிந்து போயிருக்கலாம். ஆனால் அக அடையாளங்கள் அழிந்து போகவில்லை. தமிழ் மொழி ‘நமது அடையாளம்’ என்பதை அடுத்த தலைமறை உணரும். அடையாளத்தைத் தொலைத்து வாழ்வது, பிச்சையெடுத்து வாழ்வதை விட மோசமானது என்பதை வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டு தான் வருகிறார்கள். உ.வே.சா. வாழ்ந்த காலத்திலேயே ‘நாம் தமிழுக்காகச் செய்ததை அடுத்த தலைமுறை செய்ய மாட்டார்கள்’ என்றே நினைத்தார்கள். ஆனால் இன்று வரை ஒவ்வொருவரும் தன்னால் இயன்றவரைத் தமிழுக்காகத் தெரிந்தோ, தெரியாமலோ பங்கினை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். தொலைதூரத்திலிருந்தாலும் தமிழின அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் நினைக்கும் உயரத்திற்கு அவர்கள் வளர்க்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் வளர்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

by Swathi   on 30 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.