LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF

நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு

நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு

 

      குறிப்புதவி: இலக்கியவரலாறு – புலவர் சோம இளவரசு.

பதிப்பு: மணிவாசகம் ஆப்செட் பிரிண்டெர்ஸ், சென்னை-600 021

 

       இலக்கிய வளர்ச்சி என்பது முந்திய நூற்றாண்டு வரை செய்யுள் வடிவிலேயே காணப்பட்டது. ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் "உரை நடை" வளர்ச்சி பெற்றது. அது மட்டுமல்லாமல் மேல் நாட்டார்களின் தொடர்பால் அந்நாட்டு இலக்கியங்களும் நம் இலக்கியங்களோடு இணையலாயிற்று. அதன் பின் நாவல் இலக்கியம் வளர ஆரம்பித்தது.

     என்றாலும் நம் கலாச்சாரத்தில் கதை சொல்லும் மாண்பு “காலந்தொட்டே” இருக்கிறது. இவைகள் உண்மையில்லாத கட்டுக்கதை, உண்மையை விளக்கும் நகைச்சுவை கதை, என இருவகையாக பிரிக்கிறார் தொல்காப்பியர்.

     உதாரணமாக ‘செவிலித்தாயார்கள்’ தலைவியின் மன துயரை நீக்குவதற்காக சொல்லப்பட்டவையாக இருக்கும். சிலப்பதிகாரம், மணிமேகலை இ

ரண்டுமே செய்யுள் வடிவ நாவல்கள்தான்.

 

முதல் நாவல்கள் என்று சொல்லப்படுவது மூன்றிருக்கிறது.

    பிரதாப முதலியார் சரித்திரம்- வேதநாயகம்பிள்ளை. கதாபாத்திரங்கள்.1.பிரதாப முதலியார், ஞானாம்பாள்.

  கதை இயற்கை கடந்த நிகழ்ச்சிகள், நகைச்சுவை அதிகம், கதையோடு தொடர்பில்லாத கிளை கதைகள். இதன் நடை ஜான்சனின் நடை போல் இருக்கிறது என்பர்.

   சுகுணசுந்தரி என்னும் நாவலும் எழுதி உள்ளார்.

 

கமலாம்பாள் சரித்திரம்- ராஜம் ஐயர்

  உலகியல் பற்றில்லாதவர்,மெய்யுணர்வாலர். முத்துசாமி  ஐயர் என்னும் கதாபாத்திரம் மூலம் வாழ்வியலின் உண்மைகளை விளக்குகிறார்.

பத்மாவதி சரித்திரம்- மாதவையா

“டிக்கன்ஸ்” என்னும் ஆங்கில நாவலாசிரியரின் அடியொற்றி இவரது நடை.

இவை மூன்றும் குடும்ப நாவல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவைகள் வெளி வந்தன.

 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துப்பறியும் நாவல்கள் அதிகமாக வெளி வந்தன. முக்கியமாக வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய ‘திகம்பர சாமியார்’ குறிப்பிட தக்கது.

 

அடுத்து ஆரணி குப்புசாமி முதலியார், டி.டி.சாமி, முதலியோர் துப்பறியும் நாவல்கள் படைத்துள்ளார்கள். அதன் பின், வரிசையாக தமிழ்வாணன், மேதாவி, சிரஞ்சீவி போன்றொர் துப்பறியும் நாவல்கள் படைத்துள்ளார்கள்.

 

வரலாற்று நாவல்கள்

     இதில் அதிகம் எழுதி புகழ் பெற்றவர் கல்கி. இவர் ஆனந்த விகடனில் கள்வனின் காதலி, தியாக பூமி, இவைகளை தொடர்கதையாக எழுத துவங்கினார். "கல்கி"  இதழ் தொடங்க பெற்றதும் பெரிய நாவல்கள் படைக்க துவங்கினார். "பார்த்திபன் கனவு" சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன், இவைகள் வரிசையாக வெளி வந்தன.

    எளிய நடை, உயிரோட்டம் மிக்க மொழி, விளக்கும் திறன், சிறந்த உணர்ச்சி, உயர்ந்த கருத்துக்கள் அமையப்பெற்ற நாவல்கள் அவை. இவருடைய நாவல்களை படிக்கும்போது நாமும் சேர சோழ,பாண்டிய காலத்துக்குள் நுழைந்து விடுவோம். அத்தகைய உணர்ச்சிகளை நமக்கு தந்து விடும்.

   இவரை பின்பற்றி சாண்டில்யன் படைத்த மலை வாசல், ஜீவ பூமி,

   ஜெகசிற்பி எழுதிய நந்திவர்மன் காதலி,

   அரு இராமநாதன் தீட்டிய அசோகனின் காதலி, வீரபாண்டியனின் மனைவி,   

   அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன்" குறிப்பிட தக்கன. வேங்கையின் மைந்தன் அகிலனுக்கு “சாகித்ய அகாடமி” பரிசை வென்று தந்தது.

 

குடும்ப நாவல்கள்

   குடும்ப சூழ்நிலைகளை கொண்டு பல நாவல்கள் வந்தன. வை.மு.கோதை நாயகி அம்மாள் எழுதிய நாவல்களில் "ஜகன்மோகினி" சிறந்தது. பி.எம்.கண்ணன், மாயாவி, க.நா.சு, முதலியோர் குறிப்பிட தக்கவர்கள். குடும்ப நாவல்களில் வாழ்க்கை போராட்டத்தின் பல்வேறு உணர்ச்சிகளை காண்பித்திருப்பார்கள். அதில் பெண்கள் அதிகம் கோலோசியிருந்தனர், ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, லட்சுமி,ராஜம் ராமமூர்த்தி, சூடாமணி முதலியவர்கள் சிறப்பிடம் பெற்றவர்கள். மறக்க முடியாதது லட்சுமியின் "பெண் மனம்", ராஜம் கிருஷ்ணனின் "பெண் குரல்"

 

 

சமூக நாவல்

    குடும்ப நாவல்கள் விரிவு பெற்றால் “சமூக நாவல்கள்” ஆகிறது. சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள்,, அதன் புற நிகழ்ச்சிகள், மனவெழுச்சிகள், இவைகள் கலந்து வரும்.

   “டிக்கன்ஸன்” எழுதிய சமுதாய நாவல்கள் இங்கிலாந்தின் சமுதாய வாழ்க்கையையே புரட்டி போட்டதாக சொல்வர்.

   டாக்டர்.மு.வா. அவர்களின் நாவல்களை குறிப்பிட்டு சொல்லலாம், அவர் எழுதிய "கள்ளோ காவியமோ" கரித்துண்டு, கயமை, அகல் விளக்கு, நெஞ்சில் ஒரு முள், பெற்ற மனம் இவைகள் சிறப்பானவை. அகல் விளக்கு “சாகித்ய அகாடமி” சிறப்பு பெற்றது.

   அடுத்து கு.ராஜவேலு எழுதிய காதல் தூங்குகிறது, அழகு ஆடுகிறது, வான வீதி முதலிய நூல்கள் வெளி வந்தன.

கல்கியின் அலை ஓசை சமூக நாவலே, அகிலன், நா.பார்த்த சாரதி, கா.நா.சு, பி.எம்.கண்ணன், கோவி.மணி சேகரன், இவர்கள் புகழ் பெற்றவர்கள். க.நா.சு. வின் கதைகள் இலக்கிய உத்திகள் அதிகம் கொண்டது.

 

இலட்சிய நாவல்கள்

     கலை மக்களுக்காக, என்ற கொள்கையில் நாவல்கள் படைத்தனர். இவர்கள் அரசியல் கருத்துக்களையும், லட்சியங்களையும் பாத்திரங்களின் வழியாக புகுத்தினர். முன்னோடிகளாக வா.ர. இவர் எழுதிய நாவல்கள் "கோதை தீவு" சுந்தரி என்பன. நாவல்களில் வழக்கு சொற்களை பயன்படுத்தினார்.

   அடுத்து அண்ணா எழுதிய பார்வதி.பி.ஏ, ரங்கோன் ராதா, இவைகள் புகழ் பெற்றவை.

   அடுத்து விந்தன், எழுதிய "பாலும் பாவையும்" என்பது மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையை விவரிப்பவை.

   ரகுநாதனின் "பஞ்சும் பசியும்"உலக நாவல் இலக்கியங்களுடன் ஒப்பிடக்கூடியவை. பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது.

   துரைக்கண்னனின் "உயிரோவியம்" உயர்ந்த காதல் இலட்சியத்தை கொண்டது.

 

மொழி பெயர்ப்பு நாவல்கள்

   "ரெயினால்ட்ஸ்" எழுதிய ஆங்கில நாவலை மறைமலை அடிகளார் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார். இவர் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் நாவலையும் எழுதி உள்ளார்.

   மராத்தி, வங்காளி, இந்தி மொழி நாவல்கள் அதிகம் மொழி பெயர்க்கபட்டுள்ளன. மராத்தியில் சிறந்த நாவலாசிரியர் "காண்டேகர்"  இவர் எழுதிய நாவல்களை ஸ்ரீ.ஸ்ரீ.அழகாக தமிழில் தந்துள்ளார். கருகிய மொட்டு, எரி நட்சத்திரம் , இரு துருவங்கள் சிறப்பு வாய்ந்தவை.

   வங்க மொழியில் தாகூர் எழுதிய "பூந்தோட்டம்" "புயல்" என்பனவற்றை த,நா.குமாரசாமியும், ‘குமுதினியை’ ரங்கநாயகி என்பவரும்  மொழி பெயர்த்துள்ளனர். பக்கிம் சந்திரனின் நாவல்களும், சரத் சந்திரரின் நாவல்களும் தமிழாக்கம் பெற்று வெளி வந்துள்ளன.

  "டால்ஸ்டாய்" "மாக்சிம் கார்க்கி" டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி, முதலிய மேல்நாட்டு அறிஞர்களின் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 

  நாவல் இலக்கியம் நாவலை "உரை நடையில் அமைந்த இலக்கியம்" என்பார்கள். ஆண்டு தோறும் பல நாவல்கள் வெளி வருகின்றன.தமிழ் வார மாத இதழ்கள் நாவலை தொடர்கதையாக வெளியிட்டு வருகின்றன. ‘கலைமகளை’ உதாரணமாக சொல்லலாம். சில மாத,வார இதழ்களையும் குறிப்பிடலாம்.

 

சிறுகதை

   நூறூ ஆண்டுகளுக்கு முன்னர் “எட்கார் ஆலன் போ” அமெரிக்காவில் சிறு கதை எழுத துவங்கினார். அவர் விதைத்த வித்து உலக அளவில் ஆலமரமாய் பரந்து விரிந்து வளர்ந்திருக்கிறது.

   அமைப்பு: குதிரை பந்தயம் போன்று தொடக்கமும் முடிவும் விரைவாக, சுவையாகவும் அமைய வேண்டும். அரை மணியிலிருந்து இரண்டரை மணி நேரம் வரைக்கும் இருக்கலாம். சிறு கதையின் அளவு சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். கதை நடக்கும் காலம் கூட ஐந்து நிமிடமோ,ஒரு நாளோ,ஒன்பது ஆண்டுகளோ கூட இருக்கலாம்,ஆனால் கதை  முடிந்த பின்பு ஓர் உணர்ச்சி மட்டும் படிப்பவர் நெஞ்சில் நிறைந்து இருக்க வேண்டும்.

 

    எழுதி முடித்த கதைக்கு முன்னேயும் பின்னேயும் உள்ள ‘எழுதாத கதைகள்’ படிப்பவர் உள்ளத்தில் விரிய வேண்டும்.என்பார் அகிலன்.

    கதை என்பது ஒரு சம்பவம்,அல்லது ஒரு மனோபாவம், அல்லது உள்ள போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வரையில் சிறுகதை பிறக்கும், இரண்டாகவோ, அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது என்பார் க.நா.சு.

   இந்த இலக்கணங்களை பார்த்தால் "கலித்தொகை" அமைந்த  பாடல்கள் சிறந்த சிறுகதைகளாக உள்ளன. ஆனால் அவை செய்யுள் வடிவில் உள்ளன.

 

தோற்றம்

   இருபதாம் நூற்றாண்டில் தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமா முனிவர் எழுதிய "பரமார்த்த குரு" கதையும்வீராசாமி செட்டியார் இயற்றிய "விநோதரச மஞ்சரியும்" தாண்டவராய முதலியார் மொழி பெயர்த்த பஞ்ச தந்திர கதைகளும்சிறு கதையின் தொகுப்புகளே. ஆனாலும் இவைகள் சிறுகதைகளின் இலக்கணங்கள் வாய்த்தவை அல்ல. ஆனால் சிறுகதையின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தன என்று சொல்லலாம்.

 

     இருபதாம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் வரவேற்புக்கு உள்ளானபோது சிறு கதைகள் எழுத பலர் முன் வந்தனர்.

    பாரதியார் தாகூரின் கதைகளை மொழி பெயர்த்தார்.

    மாதவையா பல சிறு கதைகள் எழுதினார்.அவை "குசிகர் குட்டி கதைகள்: என்று தொகுக்கப்பட்டுள்ளன.

    வ.வே.சு.ஐயர் சிறுகதை படைப்பதில் வல்லவராவர். சிறுகதை தமிழகத்தில் வாழ்வு பெற்றது. வ.வே.சு.ஐயர் எழுதிய கதைகள் "மகையர்கர்சியின் காதல்" என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. இக்கதைகளில் "குளத்தங்கரை அரசமரம்" என்பது மிக சிறந்த சிறுகதை. இதனை "ஓர் உணர்ச்சி மயமான காதல் கதை"சோகக்கதை" சிறு காவியம்" என்று புகழ்வார் க.நா.சு.

 

மணிக்கொடி இதழ் 1939 ல் தொடங்கி மூன்று ஆண்டுகள் நடந்தது அவற்றில் பல சிறுகதைகள் வெளி வந்தன. படைத்தவர்கள்,

புதுமை பித்தன், கு.ப.ராசகோபாலன், மெளனி, பி.எஸ்.ராமையா, கு.அழகிரிசாமி, க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, முதலியோர் ஆவர். இவர்களை மணிக்கொடி பரம்பரை என்றே சொல்வர்.

 

புதுமை பித்தன்: சிறுகதை மன்னன், தென்னாட்டு மாபஸான்,என்று புகழ்வர். இவர் கதைகளில் ஆழமும், சிந்தனையும், நடை சம்மட்டியின் அடி போலவும், சாட்டையின் வீச்சை போலவும் இருக்கும். ஆனால் புரிந்து கொள்வது சற்று கடினமாகும், புராண இதிகாச கதைகள் மிகுந்து வரும், ஆனால் இக்கால உலகை எடுத்து காட்டவே பயன்படுத்தப்படும்.

  "முறுக்கு பாட்டி" என்றால் சிறு குழந்தைகளுக்குத்தானே தெரியும், அவள் வறுமையில் குசேலரின் தங்கை, சமய குரவர்கள் இயக்கும் அற்புதங்கள் என்ற ‘செப்பிடு வித்தைகள்’ நடவாத இந்த காலத்திலும், அவள் தினம் தினம் காலந்தள்ளுவது மல்லாமல் தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம் (சங்கிலி தேவனின் தர்மம்) இவ்வாறு பாத்திரங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார்.

   இவருடைய சாப விமோசனம், கடவுளும் கந்தசாமியும், அகல்யை, பொன்னகரம் என்பன உயர்ந்த படைப்புகள். உலகத்தின் சிறந்த சிறுகதைகளுக்கு ஒப்பானது.

 

கு.ப.இராஜகோபாலன். இவர் புதுமை பித்தனோடு ஒப்ப மதிக்கத்தக்கவர். கனகாம்பரம், காணாமலே காதல், புனர்ஜென்மம், என்பன இவருடைய கதை தொகுப்புகள். கிட்ட

கிட்டத்தட்ட 85 கதைகள் எழுதி உள்ளார்.

 

மெளனி: மிக குறைவான விரல் விட்டு எண்ணத்தக்க கதைகளை எழுதி அவற்றால் புகழ் பெற்றவர். இவரது சிறுகதைகள் பதினைந்து. மெளனியின் கதைகள் என்னும் தொகுப்பாக வெளி வந்துள்ளன.

பி.எஸ்.ராமையா: இவருடைய கதைகளில் சீர் திருத்தம் மிகுந்திருக்கும் காலத்தின் வளர்ச்சியை காணலாம்.

 

கு.அழகிரிசாமி: உருவகப்படுத்தி எழுதுவதில் வல்லவர், குண வேறுபாடுகளை சித்தரிப்பதில் வல்லவர்.

 

க.நா.சுப்ரமணியம்: வரலாற்று உண்மைகள் பிறலாதாவாறு எழுதுபவர்.

 

ல.சா.ராமாமிர்தம்: குடும்ப கதை எழுதுவதில் கைதேர்ந்தவர். புலன் உணர்ச்சிகளை சித்தரிப்பதில் கை தேர்ந்தவர்.

 

கல்கி: நகைச்சுவையுடன் கதை எழுதுவதில் தலை சிறந்தவர். இவருடைய கதைகளே பெரும்பான்மையான மக்களை கதை படிக்க தூண்டியது எனலாம்.

 

மு.வரதராசன். : சங்க இலக்கிய செய்திகளை கொண்டு அறக்கருத்துக்கள் நிறைந்த கதைகள் எழுதுவதில் ஆற்றல் வாய்ந்தவர்.

 

அகிலன் : இவர் காலத்தை ஒட்டி கதை எழுதும் திறமை பெற்றவர். இவருடய கதைகளில் காந்திய சிந்தனை தத்துவம் இழையோடும்.

 

விந்தன் : ஏழைகளின் துன்பங்களை படம் பிடித்து காட்டுவார். பொதுவுடமை எண்ணங்களை ஒளி விட செய்தவர்.

 

ஜெயகாந்தன்: இலக்கிய உலகில் புரட்சியாளராக கருதப்பட்டவர். இவருடைய கதைகளில் குடிசை வாழ் மக்கள் காவிய தலைவர்கள் ஆகின்றனர். பேச்சு மொழி, இலக்கிய மொழி, ஆகின்றது. யதார்த்தவாதம் இவருடைய கதைகளின் அடிப்படை.

 

    இன்னும் நிறைய எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் கோலோச்சியுள்ளார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தி.சு.செல்லப்பா, சோமு, ஆர்.வி,மாயாவி, கி.வா.ஜ,  தி.ஜ.ர, ஜெகசிற்பியன், தி.ஜானகிராமன், ந.பிச்சமூர்த்தி, பூவை.எஸ் ஆறுமுகம், சுந்தர ராமசாமி, பெண் எழுத்தாளர்களாக ஆர்.சூடாமணி, குகப்பிரியை, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், போன்றோரும் பூவண்ணன், அழ.வள்ளியப்பா ஆகியோர் குழந்தை களுக்கு சிறுகதைகள் வடிவமைப்பதில் சிறந்தவர்கள்.

   இக்காலத்தை இலக்கிய வரலாற்றில் “சிறுகதை காலம்” என்றே குறிப்பிடலாம். இந்த அளவுக்கு சிறுகதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் நிலைத்து நிற்குமா ? என்னும் கேள்விக்குறியும் எழாமல் இல்லை.

 

     இக்கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியையும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தையுமே சுட்டி காட்டியுள்ளது. நிலைத்து நிற்குமா? என்ற கேள்விக்கு பதிலாக, அதன் பின் எண்ணற்ற எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் தோன்றி அதன் வளர்ச்சிக்கு நாவலாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதை அடுத்த கட்டுரையாக பின்னர் காணலாம்.

19th century to 20th century quarter period short stories
by Dhamotharan.S   on 25 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.