LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

புத்தி பலம்

    புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.


     இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.


     “தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.


     அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.


     இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.


     வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.


அப்பொழுது—


     எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.


     “எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.


     “என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.


     “உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.


     “நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.


     “இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.


     “சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.


     இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.


     திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.


     எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.


     கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.


     மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.