|
||||||||
விண்வெளியில் கால் பதித்த சுபான்ஷு சுக்லா |
||||||||
![]()
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன்-9 ஏவூர்தியுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்குத் தங்கியிருந்து 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களைச் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வாரக் காலம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்தில் இஸ்ரோ சார்பில் பயணிப்பதற்கு, ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை விமானியான ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்), ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி ஆகிய வீரர்களும் இத்திட்டத்தில் இணைந்தனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஏவூர்தியுடன் இணைந்த டிராகன் விண்கலம் மூலம் இந்தக் குழுவினர் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.
28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்தது. டிராகன் விண்கலத்தில் வந்த ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களையும், சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வரும் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். குளிர்பான பொட்டலங்களை வழங்கினர்.
டிராகன் குழுவினர் 2 வாரக் காலத்துக்கு அங்குத் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். உணவு தானியங்கள், பாசிகளை வளர்த்தல், நுண்ணிய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மின்னணு கருவிகள் மூலம் மனிதர்கள் உரையாடுவது, விண்வெளி சூழலில் ஊட்டச்சத்து, தாவரங்களின் பாரம்பரியப் பண்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது உட்பட மொத்தம் 60 ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதன்பிறகு, டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன்-9 ஏவூர்தியுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்குத் தங்கியிருந்து 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
|
||||||||
by hemavathi on 29 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|