LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தற்கொலை பற்றிய புரிதல்

சமீப காலமாக செய்தித்தாள்களிலும் நாளிதழ்களிலும் நாள்தோறும் வரும் ஒரு கவலையானச் செய்தி – தற்கொலை! கல்லூரி விடுதியில் மாணவன்/மாணவி தற்கொலை, திருமணமான ஒரே மாதத்தில் பெண் தற்கொலை, பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர் தற்கொலை, விஷம் குடித்து காதலன் காதலி தற்கொலை!! இப்படி தற்கொலைகள் பற்றிய செய்திகள் இல்லாத நாட்களே கிடையாது. இதற்கு முக்கியக்காரணம் தற்கொலை ஏன் நடக்கிறது என்பது பற்றிய புரிதல் நம்மிடம் இல்லாமல் இருப்பதே! 


உலகில் மனிதன் எதற்காகப் படைக்கப்படுகிறான்? இங்கு பிறக்கும் உரிமை ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் போது, அவன் இறப்பை தேர்வு செய்யும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஏன் குற்றமாகக் கருதப்படுகிறது? வாழ விருப்பமில்லாதவர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தவறென்ன? தற்கொலை என்பது ஒரு கோழைத்தனமானச் செயல்; தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் ஒரு துணிவான முடிவு அல்லது முட்டாள்களின் தவறான முடிவு என்பது சரியா?  


மரணம் சோகமானது; அதனினும் தற்கொலை மிகவும் சோகமானது. தற்கொலைகளின் முடிவு அவர்களை மட்டுமல்ல அவர்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் பாதிக்கும். 

இவ்வுலகில் மனித இனத்தைத் தவிர வேறேந்த உயிரினமும் தற்கொலை செய்துகொள்வதாக அறியப்படவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள ஒருவகையான மான் இனத்தில்  இருப்பதாகக் கேள்வி, அதற்குக் காரணம் அது தன் துணையைப் பிரிந்த சோகத்தினால் அல்ல; துணையின்றி வாழ அது பழகவில்லை என்பதே உண்மை. ஆறறிவு படைத்த மனித இனத்தில் தான் இதுபோன்ற செயல் நடந்து வருகிறது. தற்கொலை ஏன் நடக்கிறது? அதற்கானக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா? இல்லை நிச்சயம் கிடையாது.வாழ்க்கையில் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாத ஒன்று - நம் பெற்றோரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே; முயற்சி இருந்தால் மற்றவைகளை முடிந்த வரை தேர்ந்தெடுக்க முடியும். 

ஒரே நாளில் 20 சேட்டிலைட்டுகளை 26 நிமிடத்திற்குள் விண்ணிற்கு செலுத்தி இந்தியா சாதனை என்று ஒருபுறம் வளர்ச்சிப் பாதையில் செல்ல; மறுபுறம் உலகில் அதிகம் தற்கொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா. அதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு முதலிடத்தில்; மற்ற மெட்ரோக்களுடன் ஒப்பிடும்போது சென்னை முதலிடத்தில் உள்ளது - இதுவே நடுங்கவைக்கும் உண்மை. இந்தியாவில் ஓராண்டில் நடக்கும் மொத்த தற்கொலைகளில் 15-17% தமிழகத்தில் மட்டும் நடக்கிறது. அதில் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட இருமடங்காக உள்ளது. இவர்களில் 15-29 வயது மற்றும் 30-40 வயதுள்ளவர்கள் தான் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.  


இன்று சின்னச் சின்ன விஷயங்களுக்காகத் தற்கொலை செய்வது இயல்பாகவுள்ளது. ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளத் தெரியாமல், சுற்றத்தின் நெருக்கடி காரணமாக மனமுடைந்து இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.


தற்கொலைக்கானப் பொதுவானக் காரணங்கள்:


மன அழுத்தம், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் தோல்வி, சமூக/பொருளாதார நெருக்கடி, கடன்சுமை, வேலையில்லாமை, உடல் வலி/நோய்கள், அவமானம், தனிமை, கோபம், விரக்தி, சமூக நெருக்கடி, வாழ்வு பற்றிய குழப்பம், திருமணம் சார்ந்த/குடும்பப் பிரச்சனைகள், குடும்பத் தகராறு, குழந்தையின்மை, பழிவாங்கும் முயற்சி, மது/போதைக்கு அடிமை, பாலினம் சார்ந்த பிரச்சனைகள், மனநோய் மற்றும் வறுமை போன்றவை முக்கியக் காரணிகளாக உள்ளது.


இவற்றில் முக்கியமானவை; 25-30% - குடும்பப்பிரச்சனைகள், உடல் நோய்கள் 15-25% - திருமணம் மற்றும் காதல் சார்ந்த பிரச்சனைகள் 10-15% மது/போதை, வரதட்சணைக் கொடுமை, தேர்வில் தோல்வி, வேலையில்லாமை மற்றும் இதர காரணங்கள் 

ஒரு காலத்தில் தற்கொலைக்கு முக்கியக் காரணம் படிப்பின்மை தான் என்று நம்பப்பட்டுவந்தது. ஆனால் இன்றைய சூழலில் சினிமா/டிவி பிரபலங்கள், பொறியியல், மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் என்று படித்த மக்களிடையேதான் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. 


தற்கொலை என்பதை வெறும் ஒரு மனநோயாக மட்டும் பார்க்க முடியாது; அதுபோல தற்கொலை என்பது ஒரு தனி மனித முடிவு என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் பங்குண்டு. பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என்று இங்குள்ள அனைத்துத் தரப்பினருக்கும் இக்(தற்)கொலையில் பங்குண்டு. 


இரண்டு நாட்களுக்கு முன் ஐஐடி சென்னையில் நடந்த இரண்டு தற்கொலைகள், முகபுத்தகத்தில் தவறான படங்களை வெளியிட்டதினால் மனுமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விஷ்ணுப்பிரியா போன்றவர்களின் தற்கொலைகள்  உணர்த்தும் செய்தி என்ன? அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டியக் காரணிகள் எவை?


இதுபோன்ற தற்கொலைகளில் முக்கியப் பங்கு வகிப்பது இச்சமுதாயமும், பெற்றோர்களுமே ஆவர். குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு நிலைகளிலும் பெற்றோர்கள் கொடுக்கும் தவறான அழுத்தம், குழந்தைகளுக்குப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்தில் தோன்றும் பயம், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடத்தில் குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் நடக்கும் செயல்களைக் கண்டு பயத்தில் வளரும் குழந்தைகளுக்கு அவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமை போன்றவையே முக்கியக் காரணங்களாகும். 


பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தன் பிள்ளைகளை முதல் மதிப்பெண் பெற வேண்டும் இல்லையென்றால் நல்ல வேளை கிடைக்காது, பணம் ஈட்ட முடியாது என்று தவறாகச் சொல்லி வளர்ப்பதால் அவர்களிடத்திலிருக்கும் பிற திறமைகள் வெளிவராமலேயே அழிந்து விடுகிறது. கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியம், நல்ல மதிப்பெண் வாங்காவிடில் நாம் வாழ்வில் வெற்றி பெற முடியாது, தோல்வியை அடைவோம் என்ற தவறானச் சித்தரிப்பை அவர்களிடத்தில் விதைக்கிறோம். 


அதே போல் வீட்டில் அம்மா, அப்பா சண்டைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்களின் தவறான வளர்ப்பின்மைக் காரணமாக பெற்றோரின் அடிக்கு பயந்து வளரும் பிள்ளைகளுக்கு, பின்னாளில் வாழ்வில் வரும் இன்பம், துன்பம், விரக்தி, சந்தோஷம் போன்றவற்றைக் கையாளத் தெரியாமல் திணரும் நிலை உருவாகிறது. 


எதிர் பாலினத்தவரைப் பற்றிய புரியதலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  ஆண், பெண் குழந்தைகளிடத்தில் இங்கும் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவரல்ல, ஆணும் பெண்ணும் சமம், அனைவரையும் மதித்து நடக்க வேண்டும், அடுத்தவரின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. பிரச்சனைகளை மனம்விட்டு பெற்றோர்களிடத்தில் பகிர்ந்துகொள்வது பிள்ளைகளின் கடமை என்று புரிய வைக்க வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு, எனவே தோல்வியைக் கண்டு துவளாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை மறவாமல் தத்தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

இதில் சமுதாயத்தின் பங்கையும் ஒதுக்கிவிட முடியாது. பிள்ளைகளிடத்தில் ஏற்படும் தவறான சமுதாயச் சித்தரிப்பு, சினிமாக்களில் வரும் தவறான கதைகளுடன் ஒப்பிட்டுக் கொள்வது, விரும்பிய ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாமை, சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வேற்றுமை, பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று சித்தரிக்கும் நிலை, தோல்வியடைந்தவர்களைத் தூற்றும் மனப்பான்மை போன்றவற்றைச் சமுதாயத்திலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். வகுப்பில் ஆசிரியர்கள் கல்வி பற்றிய முட்டாள்தனமான திணிப்புகளைப் போதிக்காமல், பிற துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி உதாரணங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.  

பதின் பருவத்தில் வரும் எதிர் பாலினத்தைப் பற்றிய தவறான புரிதல், முறையான பாலியல் கல்வி இல்லாமை, ஆண்/பெண் பருவநிலையில் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய போதிய அறிவின்மை, நெறிபடுத்தப்படாத காமம், பாலியல் சார்ந்த கட்டுப்பாடுகளும், அவற்றைப் பற்றிய போதிய அறிவின்மையும் தவறான செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. இதன் காரணமாக நாடெங்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன.  

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிகப்படுகின்றன - ஆனால் இன்றைய திருமணங்கள் ஆண், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக முடித்து வைக்கப்படுகின்றன. குழந்தையின்மை,  விவாகரத்து, சமூக நெருக்கடி, ஆணாதிக்க சிந்தனைகளும் அதனால் ஏற்பட்ட தவறான பழக்கவழக்கங்கள், விருப்பத்திற்கு எதிராக முடித்துவைக்கப்படும் திருமணங்களில் உள்ள சிக்கல்கள், உறவுகள் மற்றும் தாம்பத்யத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு, ஆண்/பெண்களிடத்தில் நிலவும் நெறியற்ற காமம் போன்றவைகள் இருபாலரிடத்திலும் மனவழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மனதுக்குப் பிடிக்காதவருடன் வாழும் போது ஏற்படும் ஏமாற்றங்களும், தீராத கோபமும், பழிவாங்கும் உணர்ச்சியும் புற்றுநோய் போல் மனதிற்குள் பரவி தற்கொலையில் முடிகிறது. 

திருமணமான பின்னர் எதிர்பாலினத்தவரை மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தற்கொலைகள் நிகழ்கின்றன. மது, போதைப் பொருட்கள் உபயோகித்தல் மனவழுத்தத்தை ஏற்படுத்துவதோடு வெளியுலகைப் பற்றிய பயத்தையும் உண்டாக்குகிறது.  


இன்றைய சூழ்நிலையில் நம்முடைய குடும்ப அமைப்புகளும் இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இன்று குடும்பங்கள் தனித்தனித் தீவுகளாக உள்ளதால், பிரச்சனைகளை ஒன்றுகூடிப் பேசாமல், நாளடைவில் பிரச்சனைகள் மறைக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. அம்மா அப்பா வேலைக்குச் செல்வதால் தனிமையில் பெரியவர்களின் கவனமில்லாமல் வளரும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். 


இவற்றை எப்படி தடுக்கலாம்:


1. முதலில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் முடிந்த வரை தனிமையிலிருப்பதைத் தடுக்க வேண்டும்


2. நம்மிடமுள்ள பிரச்சனைகளைப் பெற்றோர்களிடத்தில் அல்லது நண்பர்களிடத்தில் எடுத்துக்கூற வேண்டும்  


3. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் போதிய சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்


4. குடும்பத்தில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகளை நேருக்கு நேர் பேசித் தீர்க்க வேண்டும்; இல்லையேல் மனநல ஆலோசகர்களை அணுகி விளக்கலாம்


5. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் நிச்சயம் உளவியல் மருந்துவரை அணுகி தேவையான சிகிச்சைகளைப் பெற வேண்டும்


6. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தன்னம்பிக்கையை மாணவர்களிடத்தில் வளர்க்க வேண்டும். படிப்பு மட்டுமே இங்கு முன்னேற உதவாது என்பதை தெளிவாக்க வேண்டும்


7. பருவ வயதில் எதிர்பாலினத்தவரின் மீது உருவாவது காதல் அல்ல; அது ஒரு ஈர்ப்பு (infatuation) என்பதைப் புரிய வைக்க வேண்டும். நண்பர்களுக்கிடையில் தவறான சிந்தனையை 

8. வளர்க்காமல் இருத்தல் வேண்டும்


9. பொருளாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் முடிந்த உதவி செய்ய வேண்டும்


10. தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது 


11. இதுபோன்று மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள முயல வேண்டும். உதாரணமாக அனாதை இல்லம், முதியோர் இல்லம் அல்லது சமூக விழிப்புணர்வு 

12. ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.  


13. தற்கொலை என்பது பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வல்ல; அது ஒரு தற்காலிக முடிவு.  


``மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்


வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை


எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.


ஏழை மனதை மாளிகை ஆக்கி

இரவும் பகலும் காவியம் பாடு


நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு


உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு``

by varun   on 18 Jul 2016  0 Comments
Tags: Suicide Awareness   Suicide Awareness Articles   தற்கொலை              
 தொடர்புடையவை-Related Articles
தற்கொலை பற்றிய புரிதல் தற்கொலை பற்றிய புரிதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.