|
||||||||
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் |
||||||||
கோடைக்காலம் என்றாலே பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி! ஏனென்றால் பள்ளிகளுக்கு விடுமுறை. ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை கோடைக்கால முகாம்கள் ஆங்காங்கே இயக்கப்படும் என்ற துண்டறிக்கைகள் நமது வாட்ஸ்ஆப்பில் வந்து கொண்டேதான் இருக்கும். கராத்தே, மட்டைப்பந்து, டென்னிஸ், நாட்டியம், நடனம், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், கணினியெனப் பல முகாம்களின் செய்திகளை நான் இதுவரை கேட்டதுண்டு. ஆனால், இம்முறை தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கற்றல் கற்பித்தல் என்ற புது விதமான கோடைக்கால முகாம்பற்றிய துண்டறிக்கையைப் படித்ததும் அந்த முகாம்பற்றிய மேலதிகத் தகவல்களை அறிய அதன் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டேன். அவர்கள் அளித்த பல தகவல்கள் எனக்குப் பெரும் வியப்பை அளித்தன. அதனை இங்கு அமெரிவாவில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களிடமும் சென்று சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் நான் கேட்டறிந்த விவரங்களை ஒரு கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்.
முகாம்ஏற்பாட்டாளர்களின் விவரம் ஐபாட்டி https://ipaatti-inc.jumbula.com/மற்றும் கொம்பு மரபிசை https://kombu.org/இணைந்து தமிழ் நாட்டிலிருந்து முனைவர் ஏ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி/பாரதி) அவர்களை வரவழைத்து இந்த முகாமை மரபுசார் இசைக் கருவிகள் மற்றும் பல நிகழ்த்துகலை கருவிகளைக் கொண்டு பயிற்றுவிக்கச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை கூடிப் பயிலப் பெரிய கட்டிடம் (இந்திய சர்வதேச பள்ளி மற்றும் இந்திய ஆன்மீக மையம்) ஒன்றை வெர்ஜினியா மாகாணத்தில் வாடகை எடுத்து இரண்டு மாதத்திற்கு இந்த கோடைக்கால முகாமை நடத்துகின்றனர்.https://ipaatti.us/pages/summer-camp
ஆசிரியர் பயிற்றுவிப்பவர் விவரம் முனைவர் ஏ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி/பாரதி) பன்னிரண்டு ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் கவிதை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் ஆகியவற்றில் பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது கவிதைகள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. கடந்த 26 ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் 'கூடல் கலைக் கூடம்' மூலம் பயிற்சியும், ஆராய்ச்சியும் செய்து வருகிறார். பாரம்பரிய ஒயிலாட்டம் கலைஞரான அவர் 'ஒயிலாட்டம்' என்ற புத்தகத்தையும் மேலும் 10 புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல மாநாடுகளில் கலந்து கொண்டு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
30 ஆண்டுகள் தெரு நாடகப் பயிற்சியாளராக இருந்த இவர், 'சிலட்டு' 'கூடு' 'பூசணிக்கை' 'மழை சோறு' 'ஒரு குடம் தண்ணி எடுத்து' போன்ற தெரு நாடகங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். 'குழந்தை உரிமைகள் மற்றும் கல்வி' 'சுற்றுச்சூழல் விழிப்புணர்வு' 'எய்ட்ஸ் விழிப்புணர்வு' 'தாயும் குழந்தையும்' 'மழை நீர் சேகரிப்பு' குறித்து பல விழிப்புணர்வு நாடகங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் உள்ள 'சுகாதார விழிப்புணர்வு'. 'நாட்டுப்புறக் கலைகள்மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல்' என்பதை மையக் கருப்பொருளாக வைத்து அவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு சிங்கப்பூர், 2017, 2018 &2024 இல் கல்வி அமைச்சகத்தில் பயிற்சி நடத்தினார். மலேசியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள்மூலம் கற்பித்தல்-கற்றல், 17/04/24 முதல் 02/04/2024 வரை நடத்தினார். 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற 10வது 'உலகத் தமிழ் மாநாட்டில்' ஒயிலாட்டம் பயிற்சியாளராகவும் ஆசிரியராகவும் கலந்து கொண்டார். இந்தக் கோடைக்கால முகாமின் சிறப்பம்சங்கள் தமிழ் மரபு விளையாட்டுகளைக்குழந்தைகளுக்கு ஏன் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் நமது பிள்ளைகள் பெரும்பாலும்கணினி வழி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறார்கள், அதில் 100விளையாட்டுக்கள் இருக்குமென்றால் அதையே திரும்பத் திரும்ப விளையாடுகிறார்கள்.101-வது விளையாட்டை அவர்களால் உருவாக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகளில் கவனம்செலுத்துவதால் மனச்சோர்வு, மன உளைச்சல் ஏற்படுகிறது மேலும்உடல் உழைப்பு குறைவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது மரபு விளையாட்டுகள்மனதால் மட்டும் கற்றுக் கொடுக்காமல் உடலாலும் கற்று கொடுக்கபடுகின்றன. மிதிவண்டிஒட்டுதல், நீச்சல் இவைகள் எப்படி உடலால் கற்று நாம்எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்கிறோமோ அப்படி விளையாட்டுக்கள்பிள்ளைகளுக்கு உதவி புரியும். உடலும் மனதும் வலு பெரும். நம் பாரம்பரியவிளையாட்டுகள் உடலைக் காக்கும் விளையாட்டுகள் எனப் பெருமிதம் கொள்ளலாம். ஒவ்வொருவிளையாட்டிலும் பல நன்மைகள் உள்ளன. நமது விளையாட்டு முறையில் மூளையின் வலது,நடு இடது என எல்லா பகுதியும் சமமாக வேலை செய்கிறது. இன்றைய குழந்தைகள் விளையாடும் கணினிவிளையாட்டுகளில் இதுபோல் இல்லை என்பதேகுறைபாடு. மரபு விளையாட்டுகளால்குழந்தைக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன்,பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது,அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறுமருத்துவ பலன்களைத் தருகின்றன. அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும்விளையாட்டுகளை இந்தக் கோடைக்கால ஐபாட்டி கொம்பு மரபிசை முகாமில் கற்பிக்கிறார்கள்.
மரபு விளையாட்டுகளின் பயன்கள் நடுவர் இல்லாத மரபு விளையாட்டுக்கள், குறிப்பாகச் சில விதிமுறைகள் மட்டுமே அல்லது விதிகள் இல்லாமலேயே விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும். நடுவர் இல்லாமல் விளையாடும்போது, ஒவ்வொருவரும் தாங்களாகவே விதிகளைப் பின்பற்றி, சரியான முறையில் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். இது சுயவரை உணர்வை மேம்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. அவர்கள் தாங்களே முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைச் சமாளிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். குழுவின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதல்களைத் தீர்க்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கின்றனர். இவைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களின் ஆர்வத்தையும், சுதந்திரத்தையும் பூர்த்தி செய்ய உதவுகின்றன, ஏனெனில் விதிகள் குறைவாகவோ அல்லது இல்லை என்பதனால் அவர்கள் சுயமாக விளையாட முடிகிறது. நேர்மையாக விளையாடும் பழக்கத்தை வளர்க்கின்றன. ஏனெனில், நடுவர் இல்லாமல் விளையாடும்போது, ஒவ்வொருவரும் நியாயமான முடிவுகளை எடுக்கின்றனர்.
பல்லாங்குழி-தமிழ் மக்களின் பண்டைய விளையாட்டுகளில் பல்லாங்குழி முக்கியமான ஒன்று. இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகளின் சேமிப்பு திறன் அதிகரிக்கிறது. 12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களைச் சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவும். சுங்கரக்காய்-சின்னசின்ன கல் கொண்டு, கைகளில் எடுத்து விளையாடுவது. கண் மற்றும் கைகளுக்கு உடனுக்குடன் செயல்படும் திறன் அதிகரிக்க உதவும். பம்பரம்-ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடிப் பம்பரத்தை வெளியே வரச் செய்ய வேண்டும். பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும். பரமபதம்-ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்புத் திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும். கோலி குண்டு-குழந்தைகள் தங்களின் சின்ன சின்ன விரலைப் பின் புறமாகச் சற்று அழுத்திப் பச்சை, நீல நிற கண்ணாடி குண்டைக் கொண்டு மற்ற குண்டை அடிப்பார்கள். இதில் குழந்தைகள் தங்களின் சின்ன சின்ன இலக்குகளை அடைவது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள். மேலும், கைகளின் விரல்கள், மணிக்கட்டு நரம்புகள் வேலை செய்ய உதவுகிறது. கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டைத் தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிபார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலமாகக் குழந்தைகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. கில்லியாட்டம்-ஒரு சின்னக் கட்டையைத் தரையில் வைத்து, அந்தக் கட்டையைப் பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைபெறும். கிட்டிப் புள் என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய மற்றும் சின்ன மரக்குச்சிகள் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு கிட்டத்தட்ட இன்றைய மட்டைப்பந்து போலவே இருக்கும். சுற்றியுள்ள மற்ற எந்த ஒரு போட்டியாளரிடமும் கிட்டி சிக்காத வண்ணம் அடிக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாகக் குழந்தைகளின் சிந்தனை மற்றும் திட்டமிடல் அதிகரிக்கிறது. உறியடி-கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு சாரம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பது. சுற்றியுள்ள மக்களின் சத்தம் கேட்டு நடுவே அந்தப் பானையை உடைக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாக நடு மூளை தூண்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஓடிப்பிடித்தல்-சிறுவர் மற்ற சிறுவர்களைப் பிடிக்க வேண்டும், இவ்வாறு ஓடும்போது உடலின் தசைகள் வலுவகிறது. நுரையீரல் பலப்படுகிறது. இந்த விளையாட்டின் மூலமாகச் சற்று வேகத்துடன் ஓடக்கூடிய கவனமாக மற்றவர்களைப் பிடிக்கக் கற்று கொள்கிறார்கள். கபடி-இரண்டு குழு இருப்பார்கள். இவர்களுக்கிடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் குழுவில் உள்ள ஒரு நபரைத் தொட வேண்டும். கபடி கபடியெனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும். பச்சக்குதிரை-ஒரு நபரைக் கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்துத் தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு நீட்சி ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரைத் தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு. பாண்டி ஆட்டம்-செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்குச் சீரான இயக்கம் கிடைக்கிறது. கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது. கும்மி ஆட்டம்-முளை விட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முளைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராகக் கிடைக்கிறது. இவ்வாறு பலவிதமான பயன்கள் மரபு விளையாட்டுகளில் உள்ளன. இதனை இன்றைய சிறுவர்களிடம் எடுத்துச் செல்வது இன்றியமையாத ஒன்றாகும்.
தமிழ் மரபு இசைக்கருவிகள் நிகழ்த்து கலைகள் பயிற்சி விவரம் தோல்கருவிகள், காற்றுக்கருவிகள், நரம்புக்கருவிகள் மற்றும் கஞ்சக்கருவிகள் என நான்கு வகைப்படும் தமிழர் இசைக்கருவிகளின் பயிற்சியும் நிகழ்த்துகலை ஆடல் பாடல் கூத்து ஆகியவைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பறை, முரசு, உடுக்கை, மத்தளம், தமுக்கு, உறுமி, தம்பட்டம், சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, உடல் உடுக்கை, தட்டை, தடாரி, பம்பை, கொம்பு, புல்லாங்குழல், மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு, வில், கோட்டுவாத்தியம், கைமணி, சாலரா, சேகண்டி, கஞ்சம், கைத்தாளம், கொண்டி, கடம் ஆகிய இசைக்கருவிகளும் இதில் அடங்கும். பறை, தவில், நாதசுவரம், உடுக்கை, சாலரா, சங்கு போன்ற இசைக்கருவிகள் கொண்டு இசைவிருந்து படைத்து பொய்க்கால் குதிரை, காவடி, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தேவராட்டம், காளையாட்டம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மனித உடலைக் கழுத்திற்குமேல், கழுத்துமுதல் இடுப்புவரை மற்றும் இடுப்புமுதல் கால்வரையென மூன்றாகப் பிரிக்கலாம். நமக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் இந்த மூன்று உடற்பகுதிகளில் ஏற்படும் நோய்களால் பிரிக்கலாம். இந்த நிகழ்த்து கலைகள் பயில்வதன் மூலம் உடல், அடகு அசைவு, கால்பாதம், ஆட்டம் அனைத்தும் சீராகி உடலை ஆரோக்கியப்படுத்தி நோய்நொடி இல்லாமல் வாழ உதவுகின்றன. நம் மரபு விளையாட்டுக்களும் கலைகளும் பிள்ளைகளுக்குக் கற்றல், கற்பித்தல், விட்டுக் கொடுத்தல், அறம் அறிதல் என்ற உயர்வான குணங்களை இயல்பாக விதைக்கின்றன. கணிப்புத் திறன், கணித திறன், அறிவியல், வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்பற்றிய அறிவு கிடைக்கும். நடுவர் அற்ற விளையாட்டுக்கள் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள். சிறுவர்கள் குழுக்களாகப் பிரிந்தாலும் வெற்றி தோல்வியெனக் கூற நடுவர் எவர் உதவியும் தேவை இல்லை. நம் பாரம்பரிய விளையாட்டுகள் சமத்துவத்தைப் போதிக்கின்றன. இவ்விளையாட்டுக்களில் பல சிறுவர்கள் தாங்களாகவே கூடி விளையாடி வெற்றி தோல்விகளை ஏற்கின்றனர். சமத்துவம் என்பதை வாழ்வியலோடு கலந்து வளர்க்கின்றனர். விளையாடும்போது ஒரு சொல் பல சொற்கள் என பேசி மொழியையும் எண்ணிக்கை கொண்டு அளந்து கணிதத்தையும் கற்கின்றனர். சேமிப்பு, திட்டமிடல் செலுவு செய்தல் போன்ற தலைமைப் பண்புகளும் வளர்கின்றன. விளையாடப் பயன்படுத்தப்படும் அனைத்தும் தற்சார்பு பொருட்களைக் கொண்டு அந்தந்த நிலத்தில் தயாரிக்கப்படுகின்றன. எந்த ஒரு நெகிழியும் இல்லை. உடல் சார்ந்து பயில்வதால் தசைகள் நினைவு கொள்கின்றன. திணை, தினை போன்ற மண் சார்ந்த வாழ்வையும் மேலும் காலநிலை சார்ந்த விளையாட்டுக்கள் அறிவியலின் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன. மரபுக்கலைகளின் ஆரோக்கிய பயன் அறிந்து மருத்துவ அறிவும் பெறுகின்றனர். இவை அனைத்தும் பழகி சமூக மதிப்புள்ள மனிதர்களை மரபுகலைகள் உருவாக்குகின்றன. மனிதவளம் மேம்படவும் மேலும் வாழ்வு சிறக்கவும் வேரென்ன வேண்டும்? இந்தக் கோடைக்கால முகாமில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சேரலாம். இன்று வாசிங்டன் வட்டாரத்தில் முதன் முறையாக நிகழும் இந்த கோடைக்கால முகாம் பற்றிய முழு விவரங்கள் அறிந்தது மகிழ்ச்சியே! இது போன்ற கோடைக்கால முகாம்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களில் உள்ள ஊர்களிலும் இனி வரும் ஆண்டுகளில் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்!ஐபாட்டி கொம்பு மரபிசைகுழுவினர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வார்கள் என்று நம்புவோம்!வாழ்த்துகள்!
தொகுப்பு – முருகவேலு வைத்தியநாதன் |
||||||||
by Swathi on 11 Aug 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|