|
||||||||
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு |
||||||||
![]() விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் பூமிக்குத் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்குத் திரும்பி வர வேண்டியது.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்சினைகளைச் சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.
இந்தக் கால தாமதம் ஏன்?
61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் இதுவாகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதைக் கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது அமைந்தது.
ஆனால், இதனைப் பயன்படுத்தும் போது சில பிரச்சினைகள் இதில் ஏற்பட்டன. விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டது. சில த்ரஸ்டர்களும் செயலிழந்தன.
இவர்கள் இருவரையும் பாதுகாப்பாகப் பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்கிடம் கொடுத்துள்ளார். நாசா வெளியிட்ட அறிவிப்பின் படி அவர்கள் மார்ச் 19 அல்லது 20 தேதியில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9-ன் உறுப்பினர்கள் விண்வெளியிலிருந்து புறப்படும் முன் செய்தியாளர் சந்திப்பின் மூலம் அனைவரிடமும் பேசினர். மார்ச் 4 அன்று நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹாட்ஜ், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் விண்வெளியில் இருந்த வண்ணமே செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
சுனிதா வில்லியம்ஸ் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆனால் இது சுனிதாவின் முதல் வரலாற்றுச் சாதனை அல்ல. 2006-07 ஆண்டில் தனது முதல் விண்வெளிப் பயணத்தின் போது, அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார்.
இதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாகும். மேலே குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் அவர் நான்கு முறை விண்வெளியில் நடந்துள்ளார். முன்னதாக இந்தச் சாதனையை விண்வெளி வீராங்கனை கேத்தரின் வசமிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 21 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை மேற்கொண்டு சாதனை புரிந்திருந்தார்.
இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற கடற்படை உலங்கூர்தி விமானி, வில்மோர் போர் விமானத்தை இயக்கிய முன்னாள் விமானி. வில்மோர் இதற்கு முன்பு இரண்டு முறை விண்வெளிப் பயணம் செய்துள்ளார்.
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாகப் பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராகத் தேர்வு செய்தது.
சுனிதா அமெரிக்கக் கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி. சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாகத் தன்னுடைய பணியைத் துவங்கினார். விண்வெளியில் தற்போது தங்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாகப் பூமிக்கு அழைத்துவர அனைத்துவிதமான வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறது நாசா.
நாசாவின் கமர்சியல் க்ரூ திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச், சில நாட்களுக்கு முன்பு, "சுனிதாவையும், வில்மோரையும் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக அழைத்து வர வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. ஆனால் நாங்கள் இதர சாத்தியங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
ஸ்டார்லைனரை பயன்படுத்தி அவர்களைப் பூமிக்கு அழைத்துவர இயலவில்லை என்றால், மாற்றுத் திட்டங்கள் மூலம் அவர்களை இங்கே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பூமிக்கு அழைத்து வருவதற்கான சாத்தியங்கள் குறித்துத் தெரிவித்தார் அவர்.
தற்போது விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கும் விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் என்பதாகும். ஆரம்பத்தில் இதில் நான்கு பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தேவைக்கு ஏற்றபடி இரண்டு இருக்கைகளைக் காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாகத் தீர்க்கமான முடிவை நாசா இன்னும் எடுக்கவில்லை.
|
||||||||
by hemavathi on 09 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|