|
||||||
இன்றைய பன்னாட்டு வாழ்வியல் சூழலில் தமிழ் வளர்ச்சிக்கும் , தமிழ் அடையாளத்தை காப்பதற்கும் ஏற்பட்டுள்ள சவால்களும் தீர்வுகளும் -ச.பார்த்தசாரதி |
||||||
தொழில்நுட்பம், உலகப் பரவலாக்கல் , புலம்பெயர்ந்து வாழும் சூழல் என்ற தொடர் பயணத்தில் தமிழ் இனத்தின் தொன்மை, மரபு , வாழ்வியல் முறை , மொழி , அடையாளம் குறித்த பார்வைகள் பல்வேறு புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது. உலகின் அனைவரின் தாய்மொழிகளும் சந்திக்கும் சவால்தான் இது என்றாலும், பல மொழிகள் அச்சவால்களை எதிர்கொள்ள முடியாமல் மெல்ல பிறமொழிகளின் போக்கில் கலந்துவிடும் நிலையில், தமிழ் இன்றளவும் தன்னைத்தானே தகவமைத்துக்கொண்டு , மாற்றங்களை உள்வாங்கி நிலைத்து நிற்கிறது என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இருப்பினும் இன்றைய கால மாற்றம் நம் மொழிக்கும், அடையாளத்திற்கு பல்வேறு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கி , ஆய்வுகள் அடிப்படையில் அதற்கான நிரந்தர தீர்வை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது. இன்றைய சூழலில் நம் முன் நிற்கும் சில சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் குறித்து ஒவ்வொன்றாகக் காண்போம். 1. தமிழில் பெயர் வைத்தல்: முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பது கடந்த 15-20 ஆண்டுகளில் குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் உள்ள மாணவர்களின் 100 பெயர்களை ஆராய்ந்தால் அதில் 10 விழுக்காடு கூட தமிழில் இருப்பதில்லை. அயலகத்தில் இதன் விழுக்காடு மேலும் குறையும். நம்மில் பலர், பெயரில் என்ன இருக்கிறது? என்று கேட்கிறார்கள். சிலர் மொழி என்பது தொடர்பு சாதனம்தானே, எனக்கு பிறமொழியில் பிடித்த பெயரை வைப்பதில் என்ன தவறு என்று பேசுகிறார்கள். தமிழில் பொருளற்ற , சொல்லத்தகாத பொருள் தரும் பெயர்களை வைப்பதைக் குறித்து இந்த தலைமுறை அதிகம் கவலைப்படவில்லை என்பதை நாம் முதலில் உள்வாங்க வேண்டும். மொழி என்பது நம் அடையாளம். தாய்மொழியில் பொருள் பொதிந்த பிற மொழி கலப்பில்லாத பெயர்களை வைப்பது என்பது நம் அடையாளத்தை தக்கவைப்பது என்பதாகும். ஒரு பெயரைப் பார்த்து அவர் எந்த நாட்டுக்காரர், எந்த மொழிக்காரர், எந்த பகுதிக்காரர் என்று எளிதாக அறிந்துகொள்ளமுடியும். நீண்ட பெயர்களை விடுத்து, சில எழுத்துகளில் நல்ல பெயர்கள் வேண்டும் என்று தேடும் இளந்தலைமுறை பெற்றோர்களின் கோரிக்கை நியாயமானது. நிலா, வெண்பா,அகிலன் , இனியா, காவியா, கவின், நித்திலன், முகிலன் போன்ற பெயர்களை தமிழ் உணர்வுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதுபோல் பல சிறிய தமிழ்ப் பெயர்களை இருபாலருக்கும் உருவாக்கி தொடர்ந்து பரப்புவது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்பவர்களுக்கு பெயரில்தான் உன் அடையாளம் தொடங்குகிறது என்பதை விளக்கவேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் முக்கியத்துவ த்தை வலியுறுத்தி தொடர்ந்து எடுக்கப்படும் முன்னெடுப்புகளால் , முயற்சிகளால் மட்டுமே இளம் பெற்றோர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தமுடியும். உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் தொகுத்து வழங்கிய 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" என்ற நூலை தமிழியக்கம் வெளியிட்டது. அதில் மேலும் பல சிறு பெயர்கள் சேர்க்கப்படவேண்டும். கைபேசி செயலியாக வெளியிடவேண்டும். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த மொரிசியஸ் நாட்டின் மேனாள் கல்வியமைச்சரும், யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனருமான டாக்டர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் மீண்டும் தொப்புள்கொடி உறவுகளுடன் தொடர்புகொள்ளவும், தென்னாப்பிரிக்காவின் ஒரு அமைச்சராக விளங்கும் திரு.இரவி பிள்ளை தமிழ் மொழி பேசத் தெரியாவிட்டாலும் மீண்டும் தமிழ் சமூகத்துடன் தொடர்புகொள்ளவும், தமிழ் சமூகம் அவர்களை கொண்டாடவும் அவர்களது பெயர் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இவை குறித்து இளம் தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லவேண்டும். 2. தமிழைத் தமிழாய் பேசுவோம்: இளம் தலைமுறை பெற்றோர் இருவரும் ஆங்கிலச் சூழலில் 8 மணி நேரம் பணியாற்றிவிட்டு வீட்டில் வந்து தமிழில் பிறமொழிக் கலப்பின்றி பேசுவது என்பது சவாலாக உள்ளதை அறிவோம். மேலும் குழந்தைகள் பிறமொழி பேசும் குழந்தை காப்பகத்தில் விடுவதாலோ, ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும்போது அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது தமிழைவிட எளிதாக உள்ளது என்று கருதி பேச ஆரம்பித்து , வீட்டின் தொடர்பு மொழி ஆங்கிலமாகிவிடுகிறது. இன்றைய சூழலில் பிறமொழிகளைவிட ஆங்கிலம்தான் உலகின் பல மொழிகளை ஆக்கிரமித்துவருகிறது. Window வை Close பன்னு , car ஐ Start பன்னு , walking போய் shopping பண்ணிட்டு வந்திடலாம் என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது இயல்பாகிவருகிறது. இதனால் என்ன? என்று கருதாமல் இதன் போக்கு எங்கு முடியும் என்று அறிந்து விழிப்புணர்வு கொள்வதும், ஆங்கிலத்தை அதற்குரிய அழகிலும், தமிழைத் தமிழாகவும் பேச பயிற்சிக்கட்டமைப்பு உருவாக்குவது அவசியம். உலகெங்கும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய நிலையில் வட அமெரிக்காவில் தொடக்கவிழா கண்டுள்ள "தமிழைத் தமிழாய் பேசுவோம் " பயிற்சிக் கட்டமைப்பு உலகெங்கும் அனைவரின் ஒத்துழைப்போடும், வரவேற்போடும் பயணித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் பேச்சுத்தமிழில் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தலாம். 3. தமிழ்ச்சங்கங்களில் தலைமைப் பயிற்சி: உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உருவாக்கி நடத்திவரும் தமிழ்ச் சங்கங்களில் தேவைகளும், சேவைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இன்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரளும் நிலையில், அதை நேர்த்தியாக வழிநடத்த, அர்ப்பணிப்புடன் தமிழ்த்தொண்டாற்ற தலைமைப்பண்புகள் உணர்ந்த தலைவர்களும், செயற்குழு உறுப்பினர்களும் தேவைப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், பல்வேறு கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. கருத்தியல் வேறுபாடுகளை வளர்ச்சியாகப் பார்க்கவேண்டும். தமிழ்ச்சங்கங்கள் "தமிழ் " என்ற ஒற்றை இலக்கில் செயல்படவேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் தங்கள் சமூக வாழ்வை, செயல்பாட்டை, சிந்தனையை சோதனைக்குள்ளாக்கும் பக்குவமும், விமர்சனங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் இயல்பும், தனிமனித வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளாமல் முடிவெடுக்கும் ஆற்றலும், நிர்வாகத்தை மக்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி அரசியல் இல்லாமல் முன்னெடுக்கும் ஆளுமைத்திறனும் உடையவர்களாக இருத்தல் அவசியம். அதற்கு ஆளுமைகளை உள்ளடக்கிய , நடைமுறை உலகில் தலைமைப்பண்பு கொண்ட தலைவர்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட "தலைமைப்பண்புகள்" பயிற்சித்திட்டத்தின் வழி தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கு பயிற்சிகொடுப்பது பெரும் பலனை ஏற்படுத்தும். எந்த முரண்பாடுகளையும் வெளிப்படையாக அமைப்பின் நோக்கத்தை, சட்டதிட்டத்தை முன்னிறுத்தி உரையாடல் வழி சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை கொண்டவர்களாகத் தலைவர்கள் திகழவேண்டும். 4. தமிழ் மொழி குறித்த பார்வை மாற்றம்: பிற மொழிக்காரர்களைவிட தமிழர்கள் அதிகத் தாய்மொழிப் பற்று கொண்டவர்கள் என்ற பார்வை பொதுவெளியில் இருந்தாலும், நடைமுறையில் பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் நம் மொழியின் பெருமை அறியாதவர்களாகவே இருக்கிறோம். தமிழ் படித்து என்ன செய்யப்போகிறோம்? பேசத்தெரிந்தால் போதாதா? பிறமொழியில் பெயர் வைத்தால் என்ன? தமிழ் ஒரு மொழிதானே, எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என்று தூக்கிப்பிடிக்கிறீர்களே, தமிழ் வெறியர்களாக பேசுகிறார்கள், தமிழ் ஒரு பேச்சுக்கான தொடர்பு சாதனம்தானே அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா?, ஆங்கிலம் , பிரென்ச் படிப்பதை விடுத்து, தமிழ் படித்தால் என்ன பயன்? பிற மொழி கற்பதற்கு செலவுசெய்யலாம், தமிழ் கற்க தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கு செலவு செய்வது, நேரம் செலவிடுவது தேவையா? என்பதுபோன்ற பல கேள்விகளை தமிழர்களே ஒருவருக்கொருவர் கேட்பதை நாளும் பார்க்கிறோம். இதுகுறித்து தமிழர்கள், தமிழ் அமைப்புகள் தங்களுக்குள் அறிவார்ந்த உரையாடலை மேற்கொள்ளவேண்டும். பொருளாதாரம் மிகுந்த, மேல்தட்டு என்று தங்களை நினைத்துக்கொள்ளும் பலரும் ஆங்கிலம் பேசுவதில், பிறமொழி தெரியும் என்று காட்டிக்கொள்வதில் காட்டும் அக்கறையை, முக்கியத்துவத்தை தன் தாய்மொழிமேல் காட்டுவதில்லை என்பதைப் பார்க்கமுடிகிறது. இவர்கள்தான் தாய்மொழி குறித்த அதிக புரிதலோடு இருக்கவேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. இது மாறவேண்டும். தாய்மொழி என்ற அடித்தளத்தில்தான் நம் சித்தாந்தங்கள், நம்பிக்கைகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் வெற்றி, சமூக வாழ்க்கை , நம் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், அறம் என்று அனைத்தும் கட்டியமைக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியுள்ளது. மொழியுணர்வும், இலக்கியச் சுவையும் அறியாத பொருளாதார வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் எந்த பயனையும் ஏற்படுத்தாது என்பதை உணரவைக்கவேண்டும். சாதி, மதம், அரசியல் அனைத்தையும் தாண்டி தமிழ் என்பதே நம் மையப்புள்ளி , நம் அடையாளம் என்பதை உணரவைக்கவேண்டும். 5. தமிழாசிரியர்களை தரம் உயர்த்துதல்: கடந்த 15 ஆண்டுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பள்ளிகளை மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாக்கியுள்ளது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இப்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தன்னார்வலர்களாகவே இருக்கிறார்கள். இது போற்றத்தக்கதாகும். இந்த ஆரம்பக்கட்ட நிலையைக் கடந்து அடுத்த கட்ட வளர்ச்சியாக, ஆசிரியர்களை ஒரு பல்கலைக்கழகப் பட்டம் தமிழில் பெறுவதற்கு ஊக்குவிக்கவேண்டும். ஏற்கனவே அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் , பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தங்கள் ஆசிரியர்களைத் தரப்படுத்திவரும் நிலையில், இது பரவலாக்கல் செய்யப்படவேண்டும். அதன்மூலம் இலக்கணம், இலக்கியம் அடிப்படை கல்வியுடன் பாடநூலை ஒரு கையேடாகக்கொண்டு பாடம் நடத்தும் நிலை மாணவர்களுக்கு மேலும் தமிழ் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும். இருமொழி முத்திரை உள்ளிட்ட பல தேர்வுகளில் தமிழ் அடிப்படை கல்வி கற்றவர்கள் தேர்வாளர்களாக இருக்கவேண்டும் என்ற தேவையும் நிறைவேறும். 6. வரலாறு , தொன்மை, மரபு குறித்த விழிப்புணர்வு பெறுதல்: மேலை நாடுகளில் குடும்ப வரலாறு, தங்கள் நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு இடத்தை, நாட்டைப் பார்க்க சுற்றுலா சென்றால்கூட அதுகுறித்தான முழுமையான தகவல்களைத் திரட்டுவதில், நூல்களை வாசிப்பதிலும், காணொளிகள், இணையதள கட்டுரைகளை வாசிப்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு இது. தமிழ் வரலாறு என்பது எதனோடும் ஒப்பிடமுடியாத கால எல்லைகளுக்குட்பட்டது. இது கடந்துவந்த பயணத்தில் சில தேக்கங்கள் இருந்தாலும்,தொடர்புகள் அறுபட்டிருந்தாலும் அதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் , மேலோட்டமாக புரிந்துகொள்வதன் விளைவாக இளம் தலைமுறை பெற்றோரிடம் மொழி, இனம் குறித்த ஆழமான பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதில் தேக்கம் ஏற்படுத்திக்கறது. இதை உணர்ந்து தமிழ் அமைப்புகள் மேலும் புரிதலை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. 7. ஆய்வுத்திறன கொண்ட அறிஞர்களையும், ஆளுமைகளையும், மேலோட்டமான பேச்சாளர்களையும் பகுத்தறிதல் அவசியம். சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு ஆழமாக வாசிக்கும் , சிந்திக்கும், செயல்படும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யார்? கிடைத்த தலைப்புகளில் துறைசார்ந்த அனுபவம் ,வாசிப்பு, களப்பணி இல்லையாயினும், அதுகுறித்து மேலோட்டமாக சுய கருத்துகளை பேசும் நிலையும் அவர்களை பிரபலமாகக் கொண்டாடும் போக்கும் இருக்கிறது. தமிழ் அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் உள்ள பேச்சை வைத்து பிரபலம் என்று கருதி தோளில் தூக்காமல், அவர்களது தமிழ் உணர்வை, சமூகப் பங்களிப்பை , துறை அனுபவத்தை, பின்புலத்தை, படைப்புகளை, எழுத்துகளை முழுமையாக ஆராய்ந்து முன்னிறுத்தவேண்டும் . 8. தமிழர்கள் நண்டு மனோபாவம் கொண்டவர்கள் என்பதை மாற்றவேண்டும்: ஒருவர் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ச் சமூக வளர்ச்சி சார்ந்த பங்களிப்புகளைச் செய்ய முன்வரும்போது அவர் எதிர்கொள்ளவேண்டிய விமர்சனங்கள் பெரும்பாலும் தமிழர்களிடமிருந்தே வருகிறது. அத்தகைய விமர்சனங்கள் பெரும்பாலும் அவருடைய சிந்தனை, செயல்பாடுகள், நோக்கம் , சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றைக்கொண்டு அமையாமல், போட்டி, அரசியல், துணைநிற்காமை , நேர்மையாக அணுகாமை என்று பல கட்டங்களில் சவாலாக அமைகிறது. அவரால் முடிந்ததை அவர் செய்கிறார், நம்மால் முடிந்ததை நாம் செய்வோம் என்றில்லாமல் , தான் செய்வதை விட்டுவிட்டு அடுத்தவர்களை ஆராய்வதும், விமர்சிப்பதும், அவர் முன்னோக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்வதுமாக தமிழர்களுக்குள் ஒரு உளவியல் சிக்கல் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால், அதிலிருந்து பெருந்தன்மையான,வெளிப்படையான, அரசியல் செய்யாத நிலைக்கு, நல்லது நடந்தால் போற்றும் நிலைக்கு நம்மால் முன்னேறமுடியும். இதனால் தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே ஏற்படும் சிறு முயற்சிகளும், வளர்ச்சித்திட்டங்களும் முடங்கிவிடாமல் முன்னோக்கி நகரமுடியும். தமிழர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்கிறார்கள். எதோ ஒரு சிறு குணம், கருத்தியல், சொல், செயலில் தனித்தனியாக நிற்கிறார்கள். இது வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து அன்பை, அரவணைப்பை ஏற்படுத்தி பயணிக்கவேண்டும். 9. விருதுக்காக, புகழ்ச்சிக்காக, உதவிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தமிழ் அறத்துடன் நிற்றல் : சமரசமில்லாமல் தமிழ்ப்பணி, சமூகப்பணி செய்யக்கூடிய ஆளுமைகள், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று விருதுகள், புகழ்ச்சி, உதவிகள், நட்புகள், சாதி, மதம் என்று எதற்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சை நிமிர்த்தி, தமிழர் அறத்துடன், தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யும் உணர்வுள்ளவர்களும், அறிஞர் பெருமக்களும், ஆளுமைகளும் பல்கிப்பெருகுவது அவசியம். வளைந்து , நெளிந்து வாழாத கொள்கை சார்ந்த நேர்மையான நிமிர்ந்த வாழ்க்கையே “அறம் சார்ந்த தமிழர் வாழ்வியல்” என்பதை தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். 10. தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழ் தலைமுறையையும் காப்போம்: புலம்பெயர்ந்த தமிழர்கள் தாய்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்து தமிழ்மொழியில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது, தமிழ் தலைமுறைகளாக அவர்கள் பன்னாட்டு வாழ்வியல் சூழலில் தமிழர்களுக்குள் திருமணம் செய்துகொண்டு தடம் மாறாமல் தமிழர்களாகத் தொடரவேண்டும் என்பதிலும் மேலும் கவனம் செலுத்தப்படவேண்டும். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தமிழ் ஆணும், ஐரோப்பாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணும் திருமணம் செய்வதும், ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாடுகளுக்குள்ளேயே தமிழர்களுக்குள் திருமணம் செய்ய வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துவதும், அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இன்றைய அவசிய மற்றும் அவசரத் தேவையாகும். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முன்னெடுத்துள்ள திருமணம் சார்ந்த இணையதளத் திட்டம் இதற்கு ஒரு முன்னுதாரணம். இது செம்மையாகச் செயல்பட்டு தமிழர்கள் தங்களுக்குள் மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள வட அமெரிக்கா உலகத் தமிழர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவேண்டும்.
-ச.பார்த்தசாரதி,
|
||||||
|
||||||
|
||||||
|
||||||
|
||||||
|
||||||
by Swathi on 06 Jun 2022 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|