LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தமிழ் கலாச்சாரமும் களைய வேண்டிய வாழ்வியல் நெறிகளும்

நம் மொழி பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்று அறிவோம். ஒரு காலத்தில் தமிழ் பல நாடுகளில், லேமொரியா கண்டம் முழுதும் பேசப்பட்ட மொழி என்று அறிகிறோம். இமையம் முதல் குமரி வரை முருக வழிபாடு இருந்துள்ளது என்று ஆய்வுகள் கூருகின்றன. தமிழில் அறிவியல், மருத்துவம், வாழ்வியல், இலக்கியம், கலை, காலாச்சாரம், பொறியியல், விவசாயம், ஆன்மிகம் என்று நாம் ஒரு முழுமை பெற்ற வாழ்வியலைக் கொண்ட மொழி பேசும் மக்கள் என்று பெருமிதம் கொள்ளலாம். இது உலகின் ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு.  தமிழ்தான் நம் அனைவரின் அடையாளம். குழந்தை பிறப்பில் ஆரம்பித்து வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் நிறைவாக வாழ அனைத்து நெறிமுறைகளையும் ஆராய்ந்து ஆவணப்படுத்திய மொழியை, இலக்கியத்தை கொண்ட இனத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பெருமிதம் கொள்ளளாம்.

 

 

இவ்வளவு சிறப்புகளை கொண்ட நாம் இன்று வாழ்வியலில் என்ன வித தரத்தை கொண்டிருக்கிறோம் என்பதை மனசாட்சிக்கு உகந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் “நம் இலக்கியத்தில், திருக்குறளில், நீதி நூல்கலில் உள்ள” நன்நெறிகளை நம் தாத்தாக்கள், அப்பாக்கள் இன்று வாழ்வியலாக நடைமுறைப்படுத்தி வாழ்ந்துவருகிரார்களா? அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது நம் தமிழ் நீதி நெறிகளுக்கு உட்பட்டதா? இதை ஆய்வதன் நோக்கம், இன்று தமிழகம் ஒரு அவல நிலையில் சென்றுகொண்டுள்ளதையும், அமைதியாக நெறிமுறைகளை பின்பற்றி வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் நாளுக்குநாள் மாறிவருகிறது என்பதையும் சமூகத்தை உற்று நோக்குபவர்கள் அறிவார்கள். இன்று நேர்மை, திறமை, உண்மை என்பவை நாவல் தலைப்புகளாக போய்விட்டன. இப்படித்தான் வாழவேண்டும் என்று நம் தமிழனின் வாழ்வியல் வகுத்த நெறிகள் மாறி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது. இன்று மற்றவரிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொண்டு, ஒவ்வொருவரிடமும் எச்சரிக்கையாக பழகவேண்டிய நிலை இருக்கிறது.

 

 

நம் இலக்கியங்களும், நூல்களும் சொல்லியுள்ள கருத்துக்களை தமிழர்கள் வாழ்வியல் நெரிமுறையாக வகுத்து வாழ்கிறோமா? எவ்வளவு சதவீதம் இது நடைமுறையில் இருக்கிறது?  இவ்வளவு இலக்கியச் செறிவு பெற்ற சமுதாயம் ஏன் தரமான வாழ்வை எட்ட முடியவில்லை? மேற்குலக கலாசார மோகம் நம்மை அடியோடு புரட்டிப் போடுகிறது என்றால், நாம் ஒரு வலுவான அடித்தளம் இல்லாத வாழ்வியலை கொண்டிருக்கிறோமா?  இன்று இருக்கும் வாழ்வியலை நேர்மையாக ஆராய வேண்டாமா?

 

கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்”. எண்ணமும், சொல்லும், செயலும் வேறுபட்ட மனிதனை குறிப்பிட இந்த சொற்றொடரை பயன்படுத்துவார்கள். இதுபோல்

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

 

என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப நம் தாத்தாக்களும், அப்பாக்களும் வாழ்தார்காளா? வாழ்கிறார்களா?  இன்று தமிழ் சமூகத்தில் இருந்து எவ்வித வாழ்வியல் கோட்பாடுகளை நம் அடுத்த தலைமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் பெற்றோராகிய நம் கடமை என்ன?

 

சாதிய அடுக்குமுறை:  தமிழ் சமுகத்தில் இருந்து சாதியை பிரிக்க முடியாத அளவு பின்னிப்பிணைந்துள்ளது. கிராமத்தில் வீட்டிற்கு வருபவர்களை “இவர் என்ன ஆளுப்பா?” என்று கரிசனமாக கேட்டு ஒருவரின் சாதியை அறிந்து அதற்கேற்ப நடக்கும் ஆண்டிப்பட்டி தமிழன் முதல், அமெரிக்காவில் வலுவான சாதிச் சங்கங்களை  கட்டியமைத்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு வருகிரீர்களா என்றால் இல்லை “எங்கள் சாதிச்சங்கத்தில் பொங்கல் நிகழ்ச்சிக்கு போகிறோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் வாசிங்டன் தமிழன் வரை அனைவரிடம் என்கெங்கெனாதபடி எங்கும் சாதி விரவிக் கிடக்கிறது. தமிழனின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட இந்த சாதி விதை இன்று முகநூலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வளர்ச்சியுற்று இருக்கிறது. இதை இன்னும் நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு தமிழனின் மனதில் இருந்து அகற்ற முடியுமா? இது ஒவ்வொரு தமிழனும் அவர்களுள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. நம் தமிழ்ச் சமுகத்தை பல நூறு ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளியது நம் சாதிய அடுக்குமுறை என்பதை உணர்ந்து உயர்ந்தது, தாழ்ந்தது என்ற அடுக்குமுறை சாதிச் சிந்தனையாவது நம் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்காமல் இருக்க வேண்டும்.   இது நம் தாத்தாக்களும், தந்தையும் பின்பற்றினால் நாமும் பின்பற்ற வேண்டுமா? அவர்கள் வாழ்வியலை கேள்வி கேட்டு களைய வேண்டியதை களைய வேண்டாமா?

 

மத வேறுபாடு:

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

 

என்ற பரந்துபட்ட சிந்தனையை, உலகின் குடிமகனாக தன்னை கருதவேண்டும் என்ற வாழ்வியல் சித்தாந்தத்தை அன்பும், கருணையும் மிளிர வேண்டும் என்று சிந்தித்த நம் தமிழ் பரம்பரை எங்கே மதத்தில் சிக்குண்டது?  மதம் என்பது அதன் தத்துவத்தை புரிந்துகொண்டு அதில் பல வாழ்வியல் விளக்கங்களை தெளிவு பெற்று அதில் இருந்து தனி மனித வாழ்வின் நெறிகளை வகுத்துக்கொள்வதுதான் மதங்களின் நோக்கமே தவிர பின்பற்றுபவர்களை உருவாக்குவது இல்லை என்று நமக்கு ஏன் சொல்லிக்கொடுக்கப் படவேயில்லை?. எவன் ஒருவன் ஒன்றை பின்பற்ற ஆரம்பிக்கிரானோ அவன் அதற்கு அடிமையாகிறான், அதை உயர்ந்ததாக பார்க்கிறான், மற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அங்கே அவனுக்கு மதம் பிடிக்கிறது, மனிதத்தன்மை மறைகிறது. இதை இளைஞர்கள் புரிந்து கேள்விகேட்க வேண்டாமா? தமிழன் மதங்களை படித்து, உணர்ந்து அதில் எடுக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு, எல்லா மதங்களும் ஒரே நதியில்தான் கலக்கிறது என்ற உண்மையை உணர்த்து, பக்திமார்க்கத்திற்கு அடுத்த நிலை ஞான மார்க்கம் என்ற உண்மையை உணர்ந்து வாழ எது தடுக்கிறது? வேதாத்திரி மகரிஷி போன்ற பல மகான்கள் நம்மை “ஒரு உலக குடிமகனாக” உருவாக்க முயற்சித்தார்களே அதுதானே தமிழனின்  வாழ்வியலை உயர்த்தும். தமிழா? மதமா? என்றால் இன்று எதை நம் அடையாளமாக கொள்வோம்?

 

கருப்பு வெள்ளை மனித நிற வேறுபாடு:

தமிழனின் மனதில் நிற வேறுபாடு மிக ஆழமாக பதிந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். கருப்பு என்றால் தாழ்ந்ததாகவும், வெள்ளை என்றால் உயர்ந்ததாகவும் கருதும் மனோபாவம் உள்ளது. குழந்தை பிறந்தால் என்ன நிறம்? பெண், மாப்பிள்ளை என்ன நிறம்? என்று எதற்கும் நிறம் பார்க்கும் தாழ்வு மனப்பான்மை எப்படி தமிழனிடம் உருவானது? ஒருவரை இயற்கையின் படைப்பாக பார்க்க நம் தமிழ் இலக்கியங்கள் இன்னும் எழுதப்பட வில்லையா?  இதை பின்பற்றும் நம் முன்னோர்களை, நம் சமுதாயத்தை கேள்வி கேட்க வேண்டாமா?

 

 

ஆண்-பெண் பாகுபாடு:

இன்று எத்தனையோ படித்த குடும்பங்களில் பெண் குழந்தையை செலவாகவும், ஆண் குழந்தைகளை வரவாகவும் பார்க்கும் மனோபாவத்தை பார்க்கிறோம். “ஆசைக்கு ஆண் - ஆஸ்திக்கு பெண்” “அடுத்தவர் வீட்டிற்கு போகும் பெண்தானே”, “என் மகன் வீட்டு பேரக்குழைந்தைகள் தான் எங்கள் வீட்டு குழந்தைகள்”  போன்ற சொல்வழக்குகள், சிந்தனைகள் நம் தமிழ் சமூகத்தில் இருக்கிறதே இதை எந்த இலக்கியத்தில் கற்றோம்? இதை நமக்கு சொல்லிக்கொடுத்த சமுதாயத்தை, நம் முன்னோர்களை கேள்வி கேட்கவேண்டாமா?

 

வடதட்சனை வாங்குவது எவ்வளவு குற்றமோ அதேபோல் தன் சொத்தில் சரிபாதி ஆண்-பெண் குழந்தைகளுக்கு பாரபட்சமின்றி கொடுக்காமல் இருப்பதும் என்பதை தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்துகிறோமா? இதை செய்யாத பெற்றோர் தன் பெண் குழந்தைகளுக்கு தவறு இழைத்தவர்கள் என்பதை  வாழ்வியல் கோட்பாடாக கொண்டு வரவேண்டாமா?  இன்று பெண் விடுதலை அந்தப் பெண்ணை வளர்க்கும் இன்னொரு பெண்ணிடமிருந்தும், அந்தப் பெண்ணின் பெற்றோரிடமிருந்தும் தானே ஆரம்பிக்க வேண்டும்?   இந்தக் கேள்வியை கேட்டால் எத்தனை தமிழ்ப் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள்?  இன்றைய நடைமுறை அவல வாழ்வியல் எந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது?

 

சுயநலம் பொருளை ஒட்டிய வாழ்க்கை:

இன்று தமிழ் மரபில் ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டுவதற்காக இந்த உலகத்திற்கு வந்த பிறவிகள் என்பதுபோல் ஒரு வாழ்வியல் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதும், பொருளாதாரத் தேவை இருக்கிறதோ இல்லையோ காலையில் இருந்து மாலை வரை ஒரு வேலைக்கு ஓட வேண்டும் என்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது என்பதை உணர்கிறோமா?  குழந்தை பிறந்ததும் அதை மடித்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருவரும் போருளீட்டுவதில் கவனம் செலுத்த ஒரு தலைமுறை தயாராகி வருகிறதே. பாவம் இக்காலத்தில் பிறக்கும்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பதே பழங்கதை ஆகி வருகிறதே இதை உணர்கிறோமா?. தனக்கு பிடிக்காவிட்டாலும், குடும்ப அழுத்தம் காரணமாக, பெற்றோர் உருவினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி அல்லது அந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இந்த தலைமுறை  பெண்கள் இளம் குழந்தையைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு வேலை வேலை என்று ஓடுகிறார்களே இவர்கள் உருவாக்கும் பொருளைக் கொண்டு எதை வாங்கப்போகிறார்கள் என்று உண்மையாக யோசித்தோமா?

 

பெரும்பாலும் பொருள் இல்லாதவர்களைவிட, நடுத்தர வர்க்கத்தை விட வசதி படைத்தவர்கள் அதிகமாக ஓடுவதை பார்க்கிறோமே, இவர்கள் என்றாவது இந்த வாழ்க்கையில் பணத்தின் மதிப்பீட்டை உணர்ந்ததுண்டா?

 

இதுதானா நம் முன்னோர்கள்களும் நம் சமூகமும்  நமக்கு சொல்லிக்கொடுத்தது?  இதை தவறென்றால் தவிர்க்க முயற்சிக்க வேண்டாமா?

 

பிடித்த வாழ்க்கையா? கிடைத்த வாழ்க்கையா?

இன்று இருபது வயதோ, அறுபது வயதோ யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் “உங்களுக்கு பிடித்தது எது, நீங்கள் எதில் தன்னிறைவு அடைகிறீர்கள்” என்று.  90 சதவீதம் பேர் வாழ்க்கை என்றால் என்ன? எப்படி நிறைவான வாழ்வை வாழ்வது? எப்படி மன அமைதியை பெறுவது? பிரச்சினைகளை எதிர்கொள்வது? வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது? என்ற தெளிவு இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மை விளங்கும். எங்கே சென்றது நம் வாழ்வியல் அறிவுகளும், கோட்பாடுகளும்?  இன்று முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர்கள் முதல் பெரும்பாலான படித்தவர்கள் வாழ்வின் கடைசி வரை பணம் ஈட்டுவதே  வாழ்க்கை என்று வாழ்கிறார்களே! அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை எதை அவர்களிடம் கற்றுக்கொள்ளும்?  இன்று தேவையான அளவு பொருளை ஈட்டியவுடன் அதை வைத்து வாழவும், தனக்கு பிடித்ததை இந்த மொழிக்கு, இனத்திற்கு, சமுதாயத்திற்கு செய்வதுமான வாழ்வியலை எத்தனைபேர் மேற்கொள்கிறார்கள்?  பணி ஓய்வு பெற்றதும் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் நிலையை காண்கிறோம். இவர்களிடம் இருந்து அடுத்த தலைமுறை எந்த வாழ்வியலை கற்றுக்கொள்ள முடியுமா?

 

பெரியவர்களுக்கு மரியாதை: பெரியவர்களுக்கு மரியாகை கொடுக்கவேண்டும் என்ற உயர்ந்த பண்பை காப்பாற்ற, இன்று பெரியவர்கள் நேர்மையானவர்களாக, அனுபாவம் நிரந்த வழிகாட்டிகளாக இருக்கிறார்களா? நல்ல தலைவர்கள் இருக்கிறார்களா? இன்று பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை தவறாக பயன்படுத்தி “நான் பெரியவன் நான் சொன்னால் ஏன் கேட்கமாட்டேன் என்கிறீர்கள்? என்று சொல்லும் பெரியவர் முதல் “பெரியவர்கள் சொன்னால் பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க வேண்டும் என்று இன்றைய தலைமுறையின் வாழ்க்கையில் புகுந்து தனக்கு தெரிந்த அரைகுறை அனுபவத்தை வைத்து குழப்பத்தை விளைவிக்கும் பெற்றோர்களிடம், பெரியவர்களிடம் இருந்து தன் வாழ்க்கையை காப்பாற்றத் துடிக்கும் இளைய தலைமுறையின் சத்தம் கேட்கிறதா?  குழந்தைகள் நம் மூலம் இந்த உலகிற்கு வந்தவர்கள், நம் சொல் கேட்டு நடக்க வந்தவர்கள் இல்லை என்பதை இந்த பெரியவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது? இது தமிழ் சமுதாயத்தில் இருந்து களையப்பட்டு நல்லவர்கள், அறிவுள்ளவரகளை, ஏன் அனைவரையும் மதிக்கப்பட வேண்டும் என்ற நிலை வரவேண்டாமா?

 

இன்றைய தலைமுறை நம் இன்றைய வாழ்வியலில் எடுத்துக் கொள்வதை விட கேள்வி கேட்டு, வாழ்க்கையை அறிந்து, வாழ்வின் நோக்கத்தை புரிந்து விட்டு விட்டுச் செல்லக்கூடிய பல வாழ்வியல் நெறிகளும், சிந்தனைகளும் இருக்கிறது என்று உணர்ந்து,  

 

“எவருக்கும் எவரும் தாழ்ந்தவரில்லை

அவரவர் திறமை ஒரு துறையில்

எல்லாம் அறிந்தவர் எவருமில்லை

எல்லாம் அறிந்தவர் மனிதரில்லை"

 

என்பதை உணர்ந்து, அனைவரையும், அனைத்தையும் கேள்வி கேட்டு, தெளிவு பெற்று, விளக்கம் இல்லாத, புரியாத சம்பிரதாயங்களை களைந்து, புரிதலோடு கூடிய ஒரு பகுத்தறிவுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனமும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுவே நம் தமிழ் நூல்களும், இலக்கியங்களும், ஆன்மீகப் பெரியவர்களும் சொல்லவரும் செய்தியாகும். 

by Swathi   on 06 Jul 2014  7 Comments
Tags: Tamil Culture   Tamil Kalacharam   Tamil Kalacharam Article   தமிழ் கலாச்சாரம்   வாழ்வியல் நெறிகள்        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் கலாச்சாரமும் களைய வேண்டிய வாழ்வியல் நெறிகளும் தமிழ் கலாச்சாரமும் களைய வேண்டிய வாழ்வியல் நெறிகளும்
கருத்துகள்
05-Nov-2015 02:47:56 ஆ .சீ .சுந்தர் said : Report Abuse
மிகவும் கருத்தாழமிக்க பதிவு .பாராட்டுக்கள் .எல்லாக் கருத்துக்களும் ஏற்க்க படத்தக்கது .முதலில் சாதிய வேறுபாடுகளை களைய வேண்டும் .தமிழன் என்ற அடையாளம் வர வேண்டும்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மறுக்க முடியாது .
 
14-Nov-2014 04:32:15 ரவீந்திரன்-S said : Report Abuse
மறுக்ககுடிய ondrue
 
07-Nov-2014 20:31:34 ரவி முத்துசாமி said : Report Abuse
நல்ல சிந்தனை கேள்வி அனால் எனது கருத்து சாதி மிக முக்கியமானது அதை நல்ல முறையில் அடுத்தவர்களை பாதிக்காமல் கடை பிடிக்க வேண்டியது மனித நேயம். தமிழ் கலாச்சாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு சாதியின் கலாச்சாரம் மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டுபாடுக்குள் இருக்க சாதி மிக முக்கியமான ஒன்று. சாதி தனது குடும்ப வரலாறை பேணி காக்க முக்கிய வழிகாட்டி. சாதி முறை இல்லை என்றால் சகோதர சகோதரி அப்பா அம்மா என்ற பாகு பாடு இல்லாமல் மாணிதன் வாழ தொடங்கி விடுவான் அதுதான் இப்போ நடந்து கொண்டு உள்ளது. சாதி தனது குடம்ப அடயாளம் அதை தொலைத்தால் வாழ்க்கை மிகை ஆகாது. ஆன் பெண் என்கிற பாகு பாடு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு சாதி முக்கியமான வழிபாடு. சாதி முறை மீறலால் நிறைய மனித உறவுகள் சகோதர சகோதிரிகுல்லேய மேலும் தாய் மகனுக்குலேய கலப்பின சேர்க்கை நடப்பதை நன்கு அறிவோம். இப்படி தவறான சேர்கை அமவைதால் மனித நல்ல ஒழுக்கம் இல்லாமல் ஒரு வாழ்க்கை முறை இல்லாமல் வாழ நேரிடும். நமது தமிழை காப்போம் குடும்ப அடையாளமான சாதியெய் பின்பற்றுவோம்.
 
06-Nov-2014 23:20:48 P.MURUGAN said : Report Abuse
super ra irukuga sir
 
06-Nov-2014 23:20:18 P.MURUGAN said : Report Abuse
super ra irukuga sir
 
13-Aug-2014 15:44:14 Saha nathan said : Report Abuse

ரொம்ப நல்லா இருந்தது .......கேள்வி கேட்காமல் எல்லோரையும் சிந்திக்க வைப்பதே ....சிறந்த வழி .... Saha Nathan 

 
23-Jul-2014 06:10:15 பொன்முடி said : Report Abuse
தமிழ்கற்றோரனைவரிடத்திலும் இந்த வினாக்கள் எழுந்திருந்தால் தமிழ்மக்களிடையே இதைப்பற்ரிய ஒரு விழிப்புணர்வு தோன்றியிருக்கும். படிக்காத பாமரமக்களேகூட வாழ்வின் நெறிமுறைகளிலிருந்து வழுவாமலும் தங்களது துன்பத்திலும் பிறருக்கு உதவியும். அன்புகொண்டு உறவினர்களை பேனியும்வாழ்கிறார்கள். ஆனால் கற்றோர் பொருளீட்டுவதில் மேலோங்கியிருப்பதால், பொருளுடையோரைமட்டுமே உறவாய்க்கொள்கிறார்கள். இல்லாதோருக்கு உதவும் எண்ணம் குறைந்துதான்போய்விட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை படித்தவர்களேசெய்கிறார்கள்! திருக்குறள்காணும் அடிப்படைக்குணங்களை இன்று எவரிடத்திலும் கானமுடியவில்லையென்றால், உலகில் கற்றோரில்லையென்பதன்றுபொருள்! கற்றோர் கற்றோராயில்லையென்பதேபொருள். தமிழற்றோரெல்லாம் தம் பிள்ளைகளை ஆங்கிலக்கல்விக்கனுப்பிவிட்டு, அதைப்பற்றி கேட்டால், 'எங்களுக்குமட்டும் ஆசையிருக்காதா?' என்று கொஞ்சமும் வெட்கமின்றி நம்மையே திருப்பிக்கேட்பதை என்னவென்றுசொல்வது? இவர்கலுக்கெல்லாம் தமிழிலுள்ள நீதியிலக்கியங்கள் என்னசொல்கின்றனவென்பது தெரியுமோ, தெரியாதோ!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.