LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தமிழ்த்தேன் மலர்

    17. அமிழ்தத் தமிழ்மொழி

    அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
    அன்னை வாழ்க வாழ்கவே.

    வைய கத்தில் இணையி லாத
    வாழ்வு கண்ட தமிழ்மொழி
    வான கத்தை நானி லத்தில்
    வரவ ழைக்கும் தமிழ்மொழி
    பொய்அ கந்தை புன்மை யாவும்
    போக்க வல்ல தமிழ்மொழி
    புண்ணி யத்தை இடைவி டாமல்
    எண்ண வைக்கும் தமிழ்மொழி
    மெய்வ குத்த வழியி லன்றி
    மேவும் எந்தச் செல்வமும்
    வேண்டி டாத தூய வாழ்வைத்
    தூண்டு கின்ற தமிழ்மொழி
    தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
    தேடி தேடி ஆய்ந்தவர்
    தெளிவு கண்ட ஞான வான்கள்
    சேக ரித்த நன்மொழி.

    உலகி லுள்ள மனிதர் யாரும்
    ஒருகு டும்பம் என்னவே
    ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
    தொன்று தொட்டுச் சொன்னது;
    கலக மற்ற உதவி மிக்க
    சமுக வாழ்வு கண்டது;
    கடமை கற்று உடைமை பெற்ற
    கர்ம ஞானம் கொண்டது;
    சலுகை யோடு பிறமொ ழிக்கும்
    சரிச மானம் தருவது;
    சகல தேச மக்க ளோடும்
    சரச மாடி வருவது;
    இலகும் எந்த வேற்று மைக்கும்
    ஈசன் ஒன்றே என்பதை
    இடைவி டாமல் காட்டும் எங்கள்
    இனிமை யான தமிழ்மொழி.

    கொலைம றுக்கும் வீர தீரக்
    கொள்கை சொல்லும் பொன்மொழி;
    கொடியவர்க்கும் நன்மை செய்யக்
    கூறு கின்ற இன்மொழி;
    அலைமி குந்த வறுமை வந்தே
    அவதி யுற்ற நாளிலும்
    ஐய மிட்டே உண்ணு கின்ற
    அறிவு சொல்லும் தமிழ்மொழி;
    கலைமி குந்த இன்ப வாழ்வின்
    களிமி குந்த பொழுதிலும்
    கருணை செய்தல் விட்டி டாத
    கல்வி நல்கும் மொழியிது;
    நிலைத ளர்ந்து மதிம யங்க
    நேரு கின்ற போதெலாம்
    நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
    பாது காக்கும் தமிழ்மொழி.

    அன்பு செய்தும், அருள் அறிந்தும்,
    ஆற்றல் பெற்ற அறமொழி;
    அறிவ றிந்து திறமை யுற்றே
    அமைதி மிக்க திருமொழி;
    இன்ப மென்ற உலக றிந்த
    யாவு முள்ள கலைமொழி;
    இறைவ னோடு தொடர்ப றாமல்
    என்று முள்ள தென்றமிழ்.
    துன்ப முற்ற யாவ ருக்கும்
    துணையி ருக்கும் தாயவள்;
    துடிது டித்தே எவ்வு யிர்க்கும்
    நலம ளிக்கும் தூயவள்;
    தென்பு தந்து தெளிவு சொல்லும்
    தெய்வ மெங்கள் தமிழ்மொழி;
    திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற
    இசைப ரப்பச் செய்குவோம்.

    பழிவ ளர்க்கும் கோப தாப
    குரோத மற்ற பான்மையும்,
    பகைவ ளர்க்கும் ஏக போக
    ஆசை யற்ற மேன்மையும்,
    அழிவு செய்யக் கருவி செய்யும்
    ஆர்வ மற்ற எண்ணமும்,
    அனைவ ருக்கும் நன்மை காணும்
    வித்தை தேடும் திண்ணமும்
    மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற
    உண்மை கண்டு முந்தையோர்
    முறைதெ ரிந்து சேர்த்த திந்த
    நிறைமி குந்த முதுமொழி.
    வழிய றிந்து நாமும் அந்த
    வகைபு ரிந்து போற்றுவோம்;
    வஞ்ச மிக்க உலக வாழ்வைக்
    கொஞ்ச மேனும் மாற்றுவோம்.

    18. தமிழ் வாழ்க!

    தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
    அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
    நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
    தமிழர்க்கும் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.

    பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
    உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
    துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
    அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.

    அன்பென்ற அதைமிக்க அறிவிக்க நின்று
    துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
    இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
    தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.

    அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
    பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்.
    இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
    தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியெ.

    அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
    குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
    வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
    நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.

    கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்;
    நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
    அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
    மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.

    அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
    மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
    நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
    திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.

    குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
    பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
    இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
    மணமிக்க தமிழென்ற மதிமிக்க மொழியாம்.

    பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
    உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
    விலகாத நட்பிற்கு வெகுகெட்டி வேராம்;
    தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.

    எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
    அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
    முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
    தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்.

    விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
    திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
    சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
    பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம்.

    சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
    காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
    ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
    மூலத்தை உண்ர்வெங்கள் மொழிஉண்டு பண்ணும்.

    பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
    உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
    இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
    அறமேதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம்.

    விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும் ;
    மெஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடிக் கற்கும்;
    பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
    அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.

    கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்
    எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
    சொல்லும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
    நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.

    19. தமிழன் இதயம்

    தமிழன் என்றோர் இனமுண்டு;
    தனியே அவற்கொரு குணமுண்டு;
    அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
    அன்பே அவனுடை மொழியாகும்.

    அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
    அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
    பொறியின் ஆசையைக் குறைத்திடவே
    பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

    கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ;
    கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான் ;
    புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
    புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

    'பத்தினி சாபம் பலித்துவிடும்'
    பாரில் இம்மொழி ஒலித்திடவே
    சித்திரச் சிலப்பதி காரமதைச்
    செய்தவன் துறவுடை ஓரரசன்.

    சிந்தா மணி,மணி மேகலையும்,
    பத்துப் பாட்டெனும் சேகரமும்,
    நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
    நாகரி கத்தினை மிகக்காட்டும்.

    தேவா ரம்திரு வாசகமும்
    திகழும் சேக்கி ழார்புகழும்
    ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
    உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

    தாயும் ஆனவர் சொன்னவெலாம்
    தமிழன் ஞானம் இன்னதெனும்;
    பாயும் துறவுகொள் பட்டினத்தார்
    பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

    நேரெதும் நில்லா ஊக்கமுடன்
    நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
    பாரதி என்னும் பெரும்புலவன்
    பாடலும் தமிழன் தரும்புகழாம்.

    கலைகள் யாவினும் வல்லவனாம்
    கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
    நிலைகொள் பற்பல அடையாளம்
    நின்றன இன்னும் உடையோனாம்.

    சிற்பம் சித்திரம் சங்கீதம்
    சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
    வெற்பின் கருங்கல் களிமண்போல்
    வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

    உழவும் தொழிலும் இசைபாடும்;
    உண்மை ; சரித்திரம் அசைபோடும் ;
    இழவில் அழுதிடும் பெண்கூட
    இசையோ டழுவது கண்கூடு.

    யாழும் குழலும் நாதசுரம்
    யாவுள் தண்ணுமை பேதமெலாம்
    வாழும் கருவிகள் வகைபலவும்
    வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

    'கொல்லா விரதம் பொய்யாமை
    கூடிய அறமே மெய்யாகும் ;
    எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
    என்றே தமிழன் புவிசொல்லும்.

    மானம் பெரிதென உயிர்விடுவான் ;
    மற்றவர்க் காகத் துயர்படுவான் ;
    தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
    'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

    ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
    சமரசம் நாட்டினில் கண்டவனாம் ;
    நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
    நிறைகுறை யாமல் செய்தவனாம்.

    உத்தமன் காந்தியின் அருமைகளை
    உணர்ந்தவன் தமிழன் ; பெருமையுடன்
    சத்தியப் போரில் கடனறிந்தான் ;
    சாந்தம் தவறா துடனிருந்தான்.

    20. இளந்தமிழனுக்கு

    இளந்த மிழா! உன்னைக் காண
    இன்ப மிகவும் பெருகுது!
    இதுவ ரைக்கும் எனக்கி ருந்த
    துன்பம் சற்றுக் குறையுது!
    வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
    வலிமை பேசி வந்தனை.
    வறுமை மிக்க அடிமை நிற்கு
    வந்த ஊக்கம் கண்டுநான்
    தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
    தைரி யங்கொண் டேனடா!
    தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
    தக்க காலம் வந்ததோ!
    குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
    குறைவி லாது நின்றுநீ
    குற்ற மற்ற சேவை செய்து
    கொற்ற மோங்கி வாழ்குவாய்!

    பண்டி ருந்தார் சேர சோழ
    பாண்டி மன்னர் நினைவெலாம்
    பாயுமேடா உன்னை யின்று
    பார்க்கும் போது நெஞ்சினில்!
    கொண்ட கொள்கை அறம்வி டாமல்
    உயிர்கொ டுத்த வீரர்கள்
    கோடி கோடி தமிழர் வாழ்ந்த
    கதைகள் வந்து குத்துமே!
    மண்ட லத்தே இணையி லாத
    வாழ்வு கண்ட தமிழகம்
    மகிமை கெட்டே அடிமைப் பட்டு
    மதிம யங்கி நிற்பதேன்?
    செண்டெ ழந்தா லென்னப் பாய்ந்து
    தேச முற்றும் சுற்றிநீ
    தீர வீரம் நம்முள் மீளச்
    சேரு மாறு சேவைசெய்.

    அன்பி னோடும் அறிவு சேர்ந்த
    ஆண்மை வேண்டும் நாட்டிலே;
    அச்ச மற்ற தூய வாழ்வின்
    ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
    இன்ப மான வார்த்தை பேசி
    ஏழை மக்கள் யாவரும்
    எம்மு டன்பி றந்த பேர்கள்
    என்ற எண்ணம் வேண்டுமே.
    துன்ப மான கோடி கோடி
    சூழ்ந்து விட்ட போதிலும்
    சோறு தின்ன மானம் விற்கும்
    துச்ச வாழ்வு தொட்டிடோம்!
    என்ப தான் நீதி யாவும்
    இந்த நாட்டில் எங்கணும்
    இளந்த மிழா! என்றும் நின்றே
    ஏடே டுத்துப் பாடுவாய்!

    பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
    பணிந்தி டாத மேன்மையும்
    பயமுறுத்தல் என்ப தற்கே
    பயந்திடாத பான்மையும்
    குணமி ருந்தார் யாவ ரேனும்
    போற்று கின்ற கொள்கையும்
    குற்ற முள்ளோர் யாரென் றாலும்
    இடித்துக் கூறும் தீரமும்
    இனமி ருந்தார் ஏழை யென்று
    கைவி டாத ஏற்றுமும்
    இழிகு லத்தார் என்று சொல்லி
    இகழ்த்தி டாமல் எவரையும்
    மணமி குந்தே இனிமை மண்டும்
    தமிழ்மொ ழியால் ஓதிநீ
    மாநி லத்தில் எவருங் கண்டு
    மகிழு மாறு சேவைசெய்.
    ஓடி ஓடி நாட்டி லெங்கும்
    உண்மை யைப்ப ரப்புவாய்;
    ஊன மான அடிமை வாழ்வை
    உதறித் தள்ள ஓதுவாய்;
    வாடி வாடி அறம்ம றந்து
    வறுமைப் பட்ட தமிழரை
    வாய்மை யோடு தூய்மை காட்டும்
    வலிமை கொள்ளச் செய்குவாய்;
    கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
    செய்கை யற்ற யாரையும்
    குப்பையோடு தள்ளி விட்டுக்
    கொள்கை யோடு நின்றுநீ
    பாடிப் பாடித் தமிழின் ஓசை
    உலக மெங்கும் பரவவே
    பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
    பணியு மாறு சேவைசெய்.

    தமிழ னென்ற பெருமை யோடு
    தலைநி மிர்ந்து நில்லடா!
    தரணி யெங்கும் இணையி லாஉன்
    சரிதை கொண்டு செல்லடா!
    அமிழ்த மென்ற தமிழி னோசை
    அண்ட முட்ட உலகெலாம்
    அகில தேச மக்க ளுங்கண்
    டாசை கொள்ளச் செய்துமேல்
    கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற
    நாட்டி லுள்ள கலையெலாம்
    கட்டி வந்து தமிழர் வீட்டில்
    கதவி டித்துக் கொட்டியே
    நமது சொந்தம் இந்த நாடு
    நானி லத்தில் மீளவும்
    நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
    செய்து வாழ்க நீண்டநாள்!

    21. தமிழன் குரல்

    ' தமிழன் குரல்' எனும் தனிஓசை
    தருமம் உணர்ந்திட நனிபேசும்;
    அமிழ்தம் போன்றுள அழிவில்லா
    அறிவே அதுதரும் மொழியெல்லாம்.

    கொல்லா விரதம் குறியாக்
    கொள்கை பொய்யா நெறியாக
    எல்லா மனிதரும் இன்புறவே
    என்றும் இசைத்திடும் அன்பறமே.

    அருள்நெறி அறிவைத் தரலாகும்;
    அதுவே தமிழன் குரலாகும்;
    பொருள்பெறா யாரையும் புகழாது;
    போற்றா தாரையும் இகழாது.

    அன்பும் அறமும் ஊக்கிவிடும்;
    அச்சம் என்பதையும் போக்கிவிடும்;
    இன்பம் பொழிகிற வானொலியாம்;
    எங்கள் தமிழெனும் தேன்மொழியே.

    குற்றம் கடிந்திடக் கூசாது;
    கொச்சை மொழிகளில் ஏசாது;
    முற்றும் பரிவுடன் மொழிகூட்டி
    முன்னோர் நன்னெறி வழிகாட்டும்.

    தமிழின் பெருமையை மறந்துவிடின்
    தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்;
    தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;
    தமிழக உரிமையைக் காத்திடுவோம்.

    22. தமிழரின் பெருமை

    தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது
    தரணிக் கெல்லாம் வழிகாட்ட.
    'அமுதாம் என்மொழி; அறமே என்வழி;
    அன்பே உயிர்நிலை' என்றுசொலும் .. (தமிழா!)

    சைவமும் வைணமும் சமணமும் பவுத்தமும்
    தழைத்தது செழித்தது தமிழ்நாட்டில்.
    வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை
    வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள். .. (தமிழா!)

    எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமையை
    ஏத்திப் பணிந்தவர் தமிழ்நாட்டார் ;
    இங்கே அங்கே என்ற வுரைவுகளை
    என்றும் பிரித்திலர் தமிழ்நாட்டார். ... (தமிழா!)

    ஏசு தமிழரலர் என்றகா ரணத்தால்
    இகழ்ந்து விடுவதில்லை தமிழ்நாட்டார் ;
    பேசும் தமிழருள் கிறுஸ்துவைப் போற்றும்
    பெருமை யுடையவர்கள் பலபேர்கள். ... (தமிழா!)

    மகமது பிறந்தது மற்றொரு தேசம்அவர்
    மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில் ;
    அகமகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை
    ஆரார் தொழுகிறார் அறியாயோ? .. (தமிழா!)

    உலகின் மதமெலாம் ஒவ்வொரு காலத்தில்
    ஓடிப் புகுந்ததிந்தத தமிழ்நாட்டில் ;
    கலகம் சிறுதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக்
    காத்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டார். ...(தமிழா!)

    தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும்
    தருமம் வள்ர்த்தவர்கள் தமிழ்நாட்டார் ;
    மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல்
    மண்டிக் கிடப்பதுன்றன் தமிழ்மொழியே. ...(தமிழா!)

    கொல்லா விரதமே நல்லார் வழியென்று
    கூறி நடந்தவுன்றன் குலமுன்னோர்
    எல்லா விதத்திலும் எவரும் மதித்திடும்
    ஏற்ற முடையதுன் இல்லறமாம். .. (தமிழா!)

    உலகம் முழுவதும் கலகம் உறுதுபார்!
    உன்பெருங் கடமைகள் பலவுண்டு ;
    விலகும் படிசெய்யும் வெறிகொண்ட பேச்செல்லாம்
    விலக்க விழித்தெழு வாய்தமிழா! .. (தமிழா!)

    இந்தியத் தாய்மனம் நொந்து கிடக்கையில்
    இனமுறை பேசுகின்றார்! இழிவாகும் ;
    அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன்
    அன்பை நிலைநிறுத்(து) அகிலமெல்லாம். ... (தமிழா!)

    தமிழகம் வாழ்கநல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத்
    தாங்கிடும் இந்தியத்தாய் தவம்பலிக்க
    குமிழும் நுரையுமென்னக் கூடி மனிதரெலாம்
    கொஞ்சிக் குலவிடுவோம் குவலயத்தில். ... (தமிழா!)

    23. தமிழ் நாடு எது? தமிழன் யார்?

    வலைவீச ஆசைதரும் அலைவீசும்
    வயலும்மற்ற வளங்க ளாலோ
    விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
    எதிர்பார்க்கும் விருப்பத் தாலோ
    'தலைவாசற் கதவினுக்குத் தாள்பூட்டே
    இல்லாத தமிழ்நா டெ'ன்று
    பலதேசம் சுற்றிவந்த மகஸ்தனிசும்
    புகழ்ந்துரைத்த பழைய நாடு!

    பற்றொழித்த பெரியவரே பகுத்தரைக்கும்
    அரசுமுறை பணிந்து போற்றிக்
    கற்றறிந்த அரசர்களே காவல்செய்த
    சரித்திரமே காணும் நாடு;
    மற்றெரிந்த வீரனென்று மமதையுள்ள
    மன்னவரை மதிக்கா நாடு;
    சற்றொருவர் வருந்திடினும் தாம்வருந்தும்
    அரசாண்ட தமிழர் நாடு.

    வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்
    நிலப்பரப்பை வேறாய் ஆண்டு
    வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க
    அரசமுறை வகுத்த தல்லால்
    ஈங்குவட இமயம்வரை இந்தியரின்
    நாகரிகம் ஒன்றே யாகும் ;
    தாங்கள்ஒரு தனியென்று தடைபோட்டுத்
    தருக்கினவர் தமிழர் அல்லர்.

    விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு
    நாடுகளில் விரியும் ஞானம்
    பகைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம்
    தமிழ்மொழியில் பலக்க வென்றே
    திசைச்சொல்லுக் கென்றுதனி இடங்கொடுத்தார்
    இலக்கணத்தில் தெரிந்த முன்னோர்
    இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக்
    கிலக்கணநூல் எங்கே? காட்டு!

    எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை
    என்னசெய்யும்?' என்றே முன்னோர்
    வந்தபிற மொழியையெலாம் வரவேற்றுத்
    தமிழ்மொழியை வளரச் செய்தார் ;
    செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல்
    மக்களுக்குத் திரித்துக் கூறி
    இந்திமொழி வந்ததென்ற இகழ்ந்துரைப்போர்
    தமிழ்நாட்டின் பெருமை எண்ணார்.

    பூச்சிபூழு உயிர்களையும் சமமென்று
    போற்றினவர் தமிழ ராவார் ;
    பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப்
    பிரித்துவிடத் தமிழர் பேசார் ;
    ஏச்சிலொரு இன்பமுள்ளோர் எக்காலும்
    தமிழர்களின் இனத்தைச் சேரார் ;
    கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே
    அதற்குநல்ல சாட்சி கூறும்.

    வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத்
    தமிழ்நாட்டார் வாழ்ந்த தில்லை ;
    கூறுபடும் பலநாட்டார் கூடிநலம்
    குலவியதித் தமிழர் நாட்டில் ;
    மாறுபடும் பலமதமும் மருவிமனம்
    கலந்ததெங்கள் தமிழன் மாண்பு ;
    தேறிமனம் தெளிவடைவோம் ; தமிழர்களின்
    பெருங்குணத்தைத் தெய்வம் காக்கும்.

    24. வடநாட்டில் கொடுமை*

    கோபமும் கொதிப்பும் குமிறிடும் படிபல
    கொடுமைகள் நடக்குது வடநாட்டில் ;
    தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
    தமிழா! உன்குணம் தவறிடுமோ?

    அன்னிய மதமென அடிக்கடி பழகிய
    அயலுள மக்களைக் கொல்லுவதை
    என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
    எண்ணவுங் கூடத் தகுமோதான்?

    வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
    வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
    ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
    அழகிது தானோ? ஐயையோ!

    பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
    பிள்ளையை மடிப்பதும் பேய்செயுமோ?
    வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
    விட்டிடப் படுமோ? தமிழ்மகனே!

    அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
    அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
    இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
    எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?

    தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
    தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
    வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
    வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?

    அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
    அன்புள நம்தமிழ்த் திருநாட்டில்
    கொடைக்குணம் மிகுந்ததம் குலத்தவர் காத்தனர்
    கொள்கையை நாம்விடக் கூடாது.

    வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்
    வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு.
    மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
    மதமெனக் கொண்டவர் தமிழர்களே.

    எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை
    ஏந்தி நடப்பது தமிழ்நாடு.
    அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
    அசைந்திட லாமோ தமிழறிவு?

    மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
    மாநிலம் இன்னமும் சகித்திடுமோ?
    விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
    வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.

    * நவகாளி அட்டூழியம் கேட்டுப் பாடியது

    25. தமிழ் மக்கள்

    நிலைபெற்ற அறிவென்ற
    நிதிமிக்க நல்கும்
    நிறைவுற்ற அருள்கொண்ட
    நிகரற்ற தெய்வம்
    கலைமிக்க தமிழன்னை
    கழல்கொண்டு பாடிக்
    கனிவுற்ற மனமொத்த
    களிகொண்டு கூடி
    அலையற்ற கடலென்ன
    அமைவுற்று நாளும்
    அகிலத்தின் பலமக்கள்
    அனைவைர்க்கும் உறவாய்த்
    தலைபெற்ற புகழ்கொண்டு
    தவமிக்க ராகித்
    தயவொன்றிப் பயமின்றித்
    தமிழ்மக்கள் வாழ்வோம் ;
    தமிழ்மக்கள் வாழ்வோம்.

    26. பாரதி பாட்டு

    அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்
    அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
    பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்
    பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
    'நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை
    நீக்காமல் விடுவதில்லை!' எனமுன் வந்து
    துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்
    தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

    படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்
    பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
    துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்
    துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
    'எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை
    இப்பொழுதே இக்கணமே!' என்றென் றார்த்திங்(கு)
    அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்
    அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

    புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்
    புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
    சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே
    தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
    எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி
    'இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!' என்று
    பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்
    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

    எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி
    உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
    பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்
    பிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி
    முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு
    முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
    சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்
    கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!

    நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி
    நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
    வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்
    விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
    இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்
    இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
    பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்
    புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.

    'மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்
    மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ
    மிக்கசுதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா'ளென்றும்
    தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!
    தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்
    தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
    வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத
    வளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை
    வறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று
    பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்
    படித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்
    பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!

    "பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்
    'படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
    வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்
    வெம்படையை மருமத்தில் வாங்கென்' றேவும்
    சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்
    சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!" என்று
    தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்
    தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே!

    'அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்
    பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்
    தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று
    தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
    பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்
    பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்' என்றே
    உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே
    உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!

    பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று
    பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
    சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை
    திசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்
    ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே
    ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
    பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்
    பார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே!

    சோற்றினுக் கறிவை விற்றுத்
    தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
    சோம்பரைச் செல்வ ரென்று
    தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
    கூற்றினுக் குடலம் போகக்
    குப்பையிற் கவிகள் சோரக்
    குறிவிடா திறந்து போகும்
    கவிகளின் கூட்டம் சேரார்
    வேற்றவர்க் கடிமை நீங்கும்
    விடுதலை வரமே வேண்டி
    வீரமும் ஞானம் பொங்கச்
    சக்தியின் வேள்வி பாடி
    நாற்றிசைத் தமிழ ரெங்கும்
    நாட்டினைப் பணியச் செய்த
    நாவலர் சுப்ர மண்ய
    பாரதி நாமம் வாழ்க!

    27. தமிழ்ப் பணி

    தமிழன்னை திருப்பணி செய்வோமே
    தரணிக்கே ஓரணி செய்வோமே
    அமிழ்தம் தமிழ்மொழி என்றாரே!
    அப்பெயர் குறைவது நன்றாமோ?

    அன்பு நிறைந்தவள் தமிழன்னை
    அருளை அறிந்தவள் தமிழன்னை
    இன்பக் கலைகள் யாவையுமே
    ஈன்று வளர்த்திடும் தேவியவள்.

    பக்தி நிறைந்தது தமிழ்மொழியே
    பரமனைத் தொடர்வது தமிழ்மொழியே
    சக்தி கொடுப்பவள் தமிழ்த்தாயே
    சமரசம் உரைப்பவள் தமிழ்த்தாயே.

    வண்மை மிகுந்திடும் மனமுடையாள்
    வாய்மையை வணங்கும் இனமுடையாள்
    தண்மை அளித்திடும் இலக்கியத்தாள்
    தாரணி புகழ்ந்திடும் இலக்கணத்தாள்.

    மாநிலம் முழுதும்ஓர் சமுதாயம்
    மக்களுக் கெல்லாம்தொருநியாயம்
    தானென அறிஞர்கள் தலைவணங்கும்
    தருமம் வளர்த்தவள் தமிழணங்கே.

    அந்நிய மொழிகளை அருவருக்கும்
    அற்பத் தனங்களை அவள்வெறுக்கும்
    நன்னயம் மிகுந்தவள் தமிழ்மாதா
    நாகரி கத்தின் தனித்தூதாம்.

    பற்பல் மொழிகளைப் பகுத்தறிந்தாள்
    பாருள அறிவினைத் தொகுத்துரைப்பாள்
    அற்புத மாகிய மனப்பெருமை
    அடங்கிய தேதமிழ்த் தனிப்பெருமை.

    மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல்
    மதிப்பது தமிழ்மொழி முன்னுரையாம்
    தன்னலம் துறந்திடும் தகவுடையாள்
    தவநெறி வாழ்க்கையின் புகழுடையாள்.

    அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
    அன்னையை மறந்தோம் நேசர்களே!
    முன்னைய பெருமைகள் முற்றிலுமே
    முயன்றால் தமிழகம் பெற்றிடுமே.

    புதுப்புது ஒளிகளில் அலங்கரிப்போம்
    பூரணம் தமிழ்எனத் துலங்கவைப்போம்
    மதிப்புடன் படித்தவர் மகிழ்ந்திடுவார்
    மாநிலத் தறிஞர்கள் புகழ்ந்திடுவார்.

    அன்னிய மொழியே தினம்பேசி
    அன்னையைப் பணிந்திட மனம்கூசி
    இன்னமும் இருந்தால் தமிழ்மொழியே
    இறந்திடும் உனக்கிது பெரும்பழியே.

    தமிழன் என்பதை மறக்காதே
    தாய்மொழிப் பெருமையைத் துறக்காதே
    'அமிழ்தம் தமிழ்மொழி' ஐயமில்லை
    அகிலம் நுகர்ந்திடச் செய்திடுவோம்.

    28. தமிழிசையின் தத்துவம்

    'இசை'எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம்.
    'கற்றலில் கேட்டலே நன்றெ'னும் கட்டுரை
    படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு.
    படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும்
    கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம்.
    என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும்
    செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி
    அறிவைத் தேடும் ஆவலுண் டாக்கி
    எண்ணச் செய்கிற ஓசையே இசையாம்.
    ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம்.
    அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம் ;
    சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம் ;
    அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம் ;
    அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி ;
    ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம் ;
    அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம் ;
    எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம் ;
    எனினும் ஓசையே இசை ஆகாது.
    'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி.
    சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து
    நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து
    நிரவல் செய்து பரவல் நிரப்பிக்
    கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டலே
    சாமான்ய மாகச் 'சங்கீதம்' என்பது.
    அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம்.
    நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம் ;
    அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை ;
    ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு.
    ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
    அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர் ;
    அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.
    பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
    இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
    'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
    எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
    இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
    ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
    சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
    அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
    தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
    அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
    'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
    புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
    கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
    தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
    இசையைக் கேட்க இச்சை கொள்வதே
    'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
    தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
    புதுப்புது 'மெட்டை'யும் இசையிற் புகுத்திப்
    பழைய 'சிந்துகள்' 'பதங்கள்' 'வண்ணமும்',
    தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
    அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
    'தமிழிசை' வளர்ப்பது தமிழன் கடமையாம்.
    சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்.
    சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
    யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
    வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
    ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
    'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
    அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
    தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
    இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
    தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?

    29. சேர்த்து வைத்த செல்வம்

    "தன்குஞ்சு ஒன்றே பொன்குஞ்சு என்று
    கன்னங் கறுத்த காக்கையும் கருதும்"
    என்னும் பழமொழி இயல்புக் கிணங்க
    அவரவர் மொழியே அவரவர்க் குயர்ந்ததாம்.
    ஆயினும் தமிழை அதற்காய்ப் புகழ்ந்திடோம்.
    பழமை மிக்கது தமிழெனும் மொழியாம்.
    ரசங்கள் நிறைந்த ராமா யணத்தை
    வான்மீகி முனிவன் வரைந்த போதே
    தமிழர் நாட்டைத் தனியே புகழ்ந்தான் ;
    ஆட்சியின் சிறப்பையும் அதிலே சொன்னான்.
    வான்மீகி காலம் வரையறை அற்றது ;
    அதற்கும் முன்னால் ஆண்டனர் தமிழர் ;
    இலக்கண அமைப்பிலும் இலக்கியச் சிறப்பிலும்
    தனிப்பட் டுயர்ந்தது தமிழ்மொழி என்றே
    ஆராய்ந்தறிந்த அனைவரும் சொல்லுவர்.
    எந்த மொழியையும் இகழ்ந்திடாத் தமிழன்
    பற்பல பாஷைகள் நன்றாய்ப் படித்தும்
    அறிவையே நாடி அலசிப் பார்த்தும்
    உலகத்தி லுள்ள உயர்ந்த கருத்துகள்
    எல்லாம் நிறைந்த இலக்கியம் உள்ளதாய்ச்
    சேர்த்து வைத்த செல்வம் தமிழ்மொழி
    இன்று நேற்று ஏற்பட்ட தன்று ;
    மூவேந்தர் ஆட்சிக்கு முன்னா லிருந்தே
    இந்திய நாட்டிலும் அந்நிய இடத்திலும்,
    திரவியம் தேடித் திரைகட லோடியும்,
    கப்பல் ஓட்டிக் கடலைக் கடந்தும்,
    அந்நிய மன்னர் அழைப்புக் கிணங்கியும்,
    எவரும் மதித்தே எதிர்கொள்ளும் இனமாய்,
    எங்கும் சென்றே எவரோடும் பழகி
    ஆண்டுகள் பற்பல ஆயிர மாக
    வாழ்ந்த தமிழர் வருந்திச் சேர்த்தது.
    உலக வழக்குடன் ஒட்டியே நின்று
    'கன்னித் தமி'ழென இன்னும் களிக்கப்
    புதுப்புது அறிவுகள் புகுதற் கிடந்தர
    எண்ணிச் செய்த இலக்கணம் உள்ளதாய்,
    உண்மை அறிவில் ஊன்றிய வேருடன்
    பருத்துப் படர்ந்த பற்பல கிளையுடன்
    விழுதுகள் எண்ணில வெவ்வெறு தாங்க
    ஊழிக் காற்றே உரத்தடித் தாலும்
    அசைக்க முடியா ஆல மரம்போல்
    நேர்ந்தவர்க் கெல்லாம் நிழலே கொடுத்தும்
    அலுப்பைத் தீர்த்தும் அமைதியைத் தந்தும்
    கவிதையும் காட்டி, களிக்கச் செய்திடச்
    செழித்து நிற்பது செந்தமிழ்ச் சிறப்பு ;
    தமிழைப் போற்றுதல் தமிழரின் கடமை.
    தமிழின் வளர்ச்சியை மனத்தில் தரித்தும்
    அந்நியர் அறிவையும் தமிழில் பிணைத்தும்
    தொழில்முறை அறிவுகள் தமிழில் தொகுத்தும்
    ஏனைய நாட்டின் எல்லா அறிவும்
    தமிழில் உண்டெனத் தருக்கும் படியாய்ச்
    செய்து வைப்பதே தமிழ்மொழிச் சேவை.

    30. கவிதை என்றால் என்ன?

    அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
    அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
    இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
    நன்மை தீமையை நன்றாய் விளக்க
    இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
    மனக்கண் முன்னால் மலரச் செய்தே
    இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
    மனத்தை விட்டு மறையச் செய்து,
    வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
    ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
    பாடு படாமல் பாடம் பண்ணவும்,
    நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
    இணைத்த சொற்களே 'கவிதை' எனப்படும்.
    'கவிதை' என்பது கற்பனை உள்ளது ;
    கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
    பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
    அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
    எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
    பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
    உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
    கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
    ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
    கணக்கே யாகும் ; கவிதையா காது.
    கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
    தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

    31. தமிழைப் பேணுவோம்

    பாஷைக ளெல்லாம் பசையற நாணிக்
    கூசிக் கூசிக் குறைபடச் செய்யும்
    வாசத் தமிழை வரையிலாத் தொன்மையை
    வீசும் தமிழை விரிந்த கடலினைத்
    தேனினும் பாகினும் தெள்ளிய அமுதினும்
    ஏனினும் எதனினும் இனித்திடும் தமிழைத்
    தின்னத் தின்னத் தெவிட்டாத் தமிழைப்
    பன்னப் பன்னப் பலக்கும் தமிழைக்
    கொள்ளக் கொள்ளக் குறாயாத் தமிழைக்
    கள்ளக் கபடுகள் இல்லாத் தமிழைப்
    படிக்கப் படிக்கப் பயனே தந்து
    குடிக்கக் குடிக்கக் குறையா அமுதை
    என்தாய் மொழியினை என்னுடைத் தமிழை
    உன்தாய் மொழியினை உம்முடைத் தமிழை
    எம்மையும் உம்மையும் மற்றுமிங் கெவரையும்
    செம்மையாம் நம்முடைச் சிறுபிரா யத்தினில்
    தொட்டிலில் விட்டுக் கட்டிலில் வைத்துத்
    தோளிலும் மார்பிலும் தூக்கித் திரிந்து
    பாலூட்டி வளர்த்த பாவையாம் தமிழைத்
    தாலாட்டி வளர்த்த தாயாம் தமிழைச்
    சீராட்டி வளர்த்த சீர்பெறும் தமிழைப்
    பாராட்டி வளர்த்த பழையதோர் தமிழைக்
    கோவண முடுத்துப் பாவாடை தந்த
    தேவியாம் தமிழைத் தெய்வநற் றமிழை
    ஆசையாம் மனைவியை அகத்தினில் விட்டு
    சேவையை விரும்பும் வெறியரைப் போன்ற
    பாஷையை மறந்த பாதகர் பிறந்து
    தேசமிந் நாட்டின் தீவினை யாலே
    சீச்சீத் தமிழெனச் சீறிப் பழித்து
    நாசியை நீட்டி நாய்போல் விழுந்து
    ஏசித் திரியும் இழிவுடை மாக்கள்
    பேசவும் கூசிடும் பேயர்கள் பிறந்து
    தன்னை வளர்த்த தமிழைப் பேசுதல்
    குன்றுந் தொழிலெனக் கூசியே நின்று
    பன்னப் பன்னப் பல்லைக் காட்டிடும்
    சின்னஞ் சிறியவர் பிறந்தத னாலே
    தாயை மறந்த தடியர்கள் போல
    வாயைத் திறந்தொரு வார்த்தை சொல்லவும்
    உரிமையாம் பாஷையைத் தெரியா திருப்பது
    பெருமையென் றெண்ணும் பேயெனு மாக்கள்
    குங்குமம் சுமந்த கழுதையே போலத்
    தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல்
    அத்துடன் அதனை அவமதித் தேசும்
    பித்தரும் பதரெனும் சுத்தநிர் மூடர்கள்
    பிறந்தத னாலே பெருமை மறந்து
    சிறந்த நாளும் சீரும் குறைந்து
    மண்ணிற் கிடக்கும் மணியே போலும்
    அற்பரை அண்டிய விற்பனர் போலும்
    ஆதர வில்லா வித்தையே போலும்
    அணைப்பவ ரில்லாக் குழந்தையே போலும்
    அநுபவ மில்லா அறிவே போலும்
    மங்கிக் கிடக்கும் மருவிலாத் தமிழை
    இங்கிதத் தமிழிழை இனிமையாம் தமிழை
    அந்த நாளினற் சந்திர முடியோன்
    சுந்தரப் படுத்த வந்துநின் றருளி
    விருத்தியே செய்யக் கருத்தினி லெண்ணிப்
    பெருத்த கேள்வியர் பெரியவர் சபையெனச்
    சங்கரன் தானே அந்தத் தலைவனாய்த்
    தங்கியே நடத்திய தனிப்பெரும் சபையெனச்
    சுத்தரும் சித்தரும் பக்தரும் துதிக்க
    இத்தரை யெல்லாம் இசைகொண்டு நின்றே
    உலகெலாம் அழியினும் விலகிடாப் புகழொடும்
    அலகிலாக் கல்விக் களஞ்சிய மாகித்
    தெய்வப் பலகையைத் தன்னிட மடக்கி
    ஐயமில் லாத அருந்தமி ழளித்த
    சித்திரச் சபையாம் மெய்த்திருச் சபையாம்
    முத்தமிழ்ச் சங்கம் விளங்கிய தமிழைத்
    தாயெனப் பேணித் தமிழ்ர்கள் யாவரும்
    ஓயா துழைத்தே ஒப்பிலா மொழியெனப்
    புதுப்புதுக் கவியும் புகழ்பெரு நூல்களும்
    விதவிதம் படைத்து வேறுள நாட்டவர்
    யாவரும் வியக்க அரியா சனத்தில்
    மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே.

    32. தமிழ் இசை

    தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
    தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு வேண்டு மென்ற
    நன்னாட்டத் துடன்ராஜா நம்சர் அண்ணா
    மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்
    தென்னாட்டுத் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
    தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மா னித்தால்
    எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
    ஏசுவதும் பேசுவதும் என்ன விந்தை!

    வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி
    வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம்
    தந்தவர்கள் தமிழரைப்போல வேறு யாரும்
    தாரணியில் இணைசொல்லத் தகுவா ருண்டோ?
    அந்தப்பெருங் குணத்திலின்னும் குறைவோ மில்லை;
    ஆனாலும் தமிழினங்கள் வாழ வேண்டின்
    சொந்தமொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப்
    பார்த்திருந்தும் சோம்புவதும் அறிவோ சொல்வீர்?

    முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து
    மூக்காலும் வாக்குரைத்து, மூச்சு வாங்கத்
    திக்குமுக்க லாடுகின்ற பாஷைக் கெல்லாம்
    சிறப்பாகும் சங்கீதத் திறமை யென்றும்
    சிக்குமுக்காம் உச்சரிப்புச் சிறிதும் வேண்டாச்
    சீரிலகும் எழுத்தியல்பு சேர்ந்த தாகித்
    தக்கமிக்கோர் இனிமையெனும் தமிழில் நாதச்
    சங்கீதம் குறைவென்றால் தரிக்க லாமோ?

    நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்; ஆனால்
    நாமறியா மொழியில்நமக் கேதுநாதம்?
    கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக்
    கிளர்ச்சிபெறா உண்ர்ச்சியிலே கீதம் ஏது?
    வாதமென்ன? இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ?
    வாய்மணக்கப் பிறமொழியை வழங்கினாலும்
    ஓதியும் உணர்ந்ததுவும் தாய்ப்பா லோடும்
    ஊட்டியதாம் தாய்மொழிபோல் உதவா தொன்றும்

    கலையென்றால் உணர்ச்சிகளைக் கவர வேண்டும் ;
    களிப்பூட்டி அறிவினைப்போய்க் கவ்வ வேண்டும் ;
    நிலைகொள்ளாச் சிந்தனையை நிற்கச் செய்து
    நீதிநெறி தெய்வநினைப் பூட்டற் கன்றோ?
    விலையில்லாப் பெருமைபல உடைய தேனும்
    விளங்காத பாஷையிலே பாட்டைக் கேட்டுத்
    தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட் டாலும்
    தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ?

    'சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன
    சம்பந்தம்?' என்றெவரும் சாதிப் பாரேல்,
    இங்கேதும் தடையில்லை ; ஏற்றுக் கொள்வோம் ;
    எல்லாமே தமிழ்பாட்டா யிருந்தா லென்ன ?
    சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
    சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமோ?
    தங்காமல் தயங்காமல் தளர்த்தி டாமல்
    தமிழ்நாட்டார் இச்செயலைத் தாங்க வேண்டும்.

    கேட்டிருந்தார் பாடினவர் எல்லாம் சேர்ந்து
    கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி
    நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி
    நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும் ;
    பாட்டினுடன் இலக்கியமும் படியப் பாடிப்
    பருந்தோடு நிழல்சொல்லும் பான்மை காப்போம் ;
    கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்தி டாமல்
    குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும்.

    பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்?
    பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும் ;
    விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்
    விதம்விதமாய்த் தமிழ்மொழியில் விரிக்க வேண்டும் ;
    அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும்
    அத்தனையும் தமிழ்வழியில் ஆக்க வேண்டும் ;
    நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே
    நிச்சயமாய் உழைக்கஒரு நிலையம் வேண்டும்.

    ஆதலினால் தமிழ்நாட்டில் தமிழ்பாட்டிற்கே
    ஆதரவிங் ககத்தியமாய் அதிகம் வேண்டும் ;
    காதலினால் தாய்மொழியைக் காப்ப தன்றிக்
    கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல ;
    தீதில்லா திம்முயற்சி சிறப்புற் றோங்கத்
    திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி
    வாதெல்லாம் விலக்கி, கலை வாண ரெல்லாம்
    வல்லநல்ல தமிழ்பாடி வாழ வேண்டும்.

    33. திருக்குறள் பெருமை

    அமிழ்தமென்று மிகமகிழ்ந்தே
    அறஞர்யாரும் போற்றிட
    அறிவறிந்த மொழிஇதென்றே
    அகிலமெங்கும் ஏற்றிடும்
    தமிழ்மொழிக்கிங் கழிவிலாத
    தன்மைசூட்டி வைத்ததும்
    தரணியெங்கும் இணையிலாத
    இல்லறத்தை நத்திடும்

    அமைதிமிக்க ஜனசமூகம்
    தமிழரென்ற கீர்த்தியும்
    அடிமையற்ற குடிமைபெற்ற
    அரசுகண்ட நேர்த்தியும்
    இமையவர்க்கும் நெறிபுகட்டும்
    எங்கள்தெய்வ வள்ளுவன்
    இங்குரைத்த குறள்களென்ப
    ஈந்தநன்மை அல்லவோ!

    காடுசென்று குகையடைந்து
    கண்கள்மூடி எண்ணியும்
    காவிகட்டி ஓடெடுத்துக்
    கஷ்டவாழ்க்கை பண்ணியும்
    தாடிவைத்து மொட்டைதட்டித்
    தவசியென்ற பேருடன்
    தரணிமெச்ச ஊர்கள்சுற்றித்
    தருமபோதம் கூறியும்

    கூடுவிட்டுக் கூடுபாயும்
    சித்து செய்யக் கோரியும்
    கோடிகாலம் வாழஎண்ணிக்
    காயகற்பம் தேரியும்
    தேடுகின்ற உண்மையாவும்
    ஓடிவந்து நிற்குமே
    தெய்வவாக்கு வள்ளுவன்
    திருக்குறள்கள் கற்கவே.

    அன்புதந்த அருள்விளக்கி
    அறிவுசொல்லும் அறமொழி
    ஆன்மஞானம் என்றுசொல்லும்
    அதையும்சேரப் பெருவழி
    துன்பமென்ற உலகவாழ்வில்
    துயரம்ஏதும் வந்திடில்
    துணைபுரிந்தே அருகிருந்து
    தோது சொல்லும் மந்திரி.

    இன்பம்என்று தவறுசெய்து
    நோய்கள்சேரக் கண்டதும்
    இடைபுகுந்து மாற்றுரைத்தே
    இடரைநீக்கும் பண்டிதம்
    தென்புமிக்க தூயவாழ்வின்
    தெளிவு காட்டும் பண்பதாம்
    தெய்வஞான வள்ளுவன்
    திருக்குறள்கள் என்பவாம்.

    34. தமிழ் வளர்க்கச் சபதம்

    சீர்திறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச்
    சித்திரையில் தொடங்குகிற திறத்தால் இன்று
    பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர்
    பசுவினுக்கும் சமதர்மம் பரிவாய்ச் செய்தான் ;
    ஏர்சிறந்த ஒருமகனை ஈடாய்த் தந்தான் ;
    இணையறியாப் பெரும்புகழைத் தமிழுக் கீந்தான் ;
    தேர்சிறந்த தியாகேசன் திருவா ரூரில்
    திகழுமிந்தச் சபைதனிலோர் சபதம் செய்வோம்!

    அமிழ்தமென எவ்வுயிர்க்கும் அன்பு செய்தே
    அருள்நெறியைப் புகட்டுவதே அறமாய்க் கொண்ட
    தமிழ்மொழியின் பெருங்குணத்தின் தாரா ளத்தைத்
    தடுக்கவரும் துடுக்குகளைத் தவிர்க்க வேண்டும்.
    நமதருமை முன்னோர்கள் நெடுநா ளாக
    நடத்திவந்த நன்னெறியை நலியப் பேசி
    அமைதிமிக்க தமிழ்வாழ்வைக் குலைக்க எண்ணும்
    அநியாயம் முழுவதையும் அகற்ற வேண்டும்.

    பாண்டியரும் சோழர்களும் சேர மன்னர்
    பாடுபட்டுப் பயிர்செய்த நாக ரீகம்
    நீண்டுயர்ந்து கோபுரங்கள் வடிவாய் நின்று
    நிரந்தரமாம் பரம்பொருளின் நினைவு கூட்டித்
    தூண்டியநல் லுணர்ச்சிகளின் தொகுப்பே யன்றோ
    தொன்றுதொட்டு இன்றளவும் தொடரும் நூல்கள்?
    ஈண்டிவைகள் யாவினையும் இகழ்வோ மானால்
    என்னமிச்சம் தமிழ்வளர்ச்சி இனியும் உண்டோ?

    கோயில்களின் பெரும்பயனைக் குறைத்துப் பேசிக்
    கும்பிடுவோர் நம்புவதைக் குலைத்தும் ஏசித்
    தூயவழி வாழ்வதற்கு நல்லோர் கண்ட
    துறவுமனப் பொறையறிவைத் தோஷம் சொல்லி
    வாயில்வந்த கொச்சைகளால் வசைகள் வீசி
    வகுப்புகளில் வெறுப்புகளே வளரச் செய்யும்
    ஞாயமற்ற பேச்சுகளை நீக்கா விட்டால்
    நம்முடைய தமிழ்வாழ்வு நாச மாகும்.

    முன்னோர்கள் யாவரையும் மூட ரென்றும்
    மூவேந்தர் பரம்பரையும் அமைச்சர் முற்றும்
    சொன்னவர்கள் சூழ்ச்சிகளைச் செய்தா ரன்றிச்
    சொந்தபுத்தி இல்லாத வீணர் என்றும்
    பொன்னாலும் புகழாலும் மயக்க வொண்ணாப்
    புலவர்களின் இலக்கியங்கள் பொய்க ளென்றும்
    என்னேரம் பார்த்தாலும் இகழ்வே யானால்
    எப்படிநம் தமிழ்மொழிக்கு வளர்ச்சி ஏறும்?

    ஏனென்று கேட்பதற்கோ எவரும் இன்றி
    எழில்மிகுந்த தமிழ்வாழ்வை இகழ்ந்து பேசிக்
    கோனென்ற யாவரினும் குணமே மிக்க
    மூவேந்தர் நெறிமுறைக்கும் குற்றம் கூறும்
    நானென்ற அகங்காரம் நம்மைச் சூழ
    நல்லதமிழ் வளர்ச்சியினி நமக்கும் உண்டோ?
    தேனென்ற நமதுமொழி வாழ வேண்டின்
    தீவிரமாய் இந்நிலையைத் தீர்க்க வேண்டும்.

    நித்தியமாம் சத்தியமே நெறியாய்க் கொண்டு
    நெற்றிக்கண் ஈசனுக்கும் குற்றம் காட்டும்
    சுத்தமுள்ள பெரும்புலவர் வழியில் தோன்றிச்
    சுகபோக ஆசைகள்த் துறந்து வாழ்ந்த
    எத்தனையோ பெரியவர்கள் இசைத்த நூல்கள்
    ஏளனத்தால் இழிவடைய விட்டோம் இந்நாள்
    அத்தனையும் அழிந்தொழிய விடுவோ மானால்
    அதன்பிறகு தமிழ்வளர்ச்சி ஆசை என்னாம்?

    புதுமையென்றும் புரட்சியென்றும் புனைந்து கூறிப்
    புவியறிந்த உண்மைகளைப் பொருள்செய் யாமல்
    முதுமொழிகள் யாவையுமே மோசம் செய்யும்
    மூடபக்தி யாகுமென முரண்டு சொல்லிச்
    சதிபுரியத் துணிந்துவிட்டோம்; தமிழ்தாய் நொந்து
    தவிக்கின்றாள்; தான்வளர்த்த தருமம் எல்லாம்
    கதியிழந்து போகுமெனக் கண்ணீர் கொட்டிக்
    கதறுகின்றாள் அவள்பெருமை காப்போம் வாரீர்!

    விஞ்ஞானக் கலைகளெல்லாம் விரித்திட் டாலும்
    வேறெவர்க்கும் அழிவுசெய்ய விரும்பி டாத
    மெய்ஞ்ஞானக் கருணைவழி காக்கும் மேன்மை
    மிகப்படைத்த தமிழ்மனசை மிகவும் தூற்றி
    அஞ்ஞானப் பொய்களையே அடுக்கிக் கொண்டிங்
    கருந்தமிழின் பெருவாழ்வை அழிக்க எண்ணும்
    பொய்ஞ்ஞானத் தீமைகளைப் போக்க வேண்டும்
    புத்தாண்டுச் சபதமிதைப் புனைவோம் இன்று.

    தெள்ளியநல் அறங்களையே தெளிவாய்ச் சொல்லித்
    தினையளவும் பிசகாமல் நடந்து காட்ட
    வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்ன
    வழிகாட்டித் திருக்குறளை வாழ்ந்த வள்ளல்
    பிள்ளைமனப் பேரறிஞன் பெம்மான் காந்தி
    பெருநெறியே தமிழ்தாயின் பேச்சா மென்று
    கள்ளமற நாமறிந்து கொள்வோ மானால்
    காத்திடலாம் தமிழ்மொழியை; வளர்ச்சி காணும்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.