LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016

தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி


வட அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து ஒலித்து வரும் இம்முழக்கமே இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் மையக்கரு. ”தமிழுக்குத்தொண்டுசெய்தோன்சாதல்இல்லை” எனப் பாடிதமிழ்த்தொண்டர்களுக்கும், தமிழ்கற்றார்களுக்கும்நிலைப்பேறுஉண்டுஎன உரைத்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்தநாள் விழா, தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாகவும் பேரவையின் 29 ஆம் ஆண்டு விழா  அமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் டெரன்டன் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.


இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையும், நியூசெர்சி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இவ்விழா கடந்த சூலை 1 முதல் 4 வரை நடைபெற்றது. இவ்விழாவில் அமெரிக்கா – கனடா மற்றும் உலகமெங்கும் இருந்து வந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட 2000 வரையிலான தமிழ் மக்கள் தங்கள் குடும்பத்துடன்கலந்து கொண்டனர். அமெரிக்காவில் உள்ள 43 க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் பேரவை விழா நியூசெர்சி மாகாணத்தில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


திருக்குறள் மறை ஓதல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் திரு. நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளார் மரு. திரு. சுந்தரம், நியூசெர்சி தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. உசா அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது.விழா மேடை தமிழர் மரபுக் கலைகளால் இரண்டு நாளும் கலைக்கோலம் பூண்டது.


நியூசெர்சி தமிழ்ச் சங்கத்தின் காவடி, ஒயிலாட்ட நடனத்துடன் கலை கட்ட, கணக்டிகட் தமிழ்ச் சங்கத்தினரின் கூட்டுப் பறையிசை நடனம், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின்  நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 80 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து நடத்திய வில்லுப்பாட்டு, கும்மியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம், மேலும் ஆல்பனி, கரோலினா, நியூயார்க், பாசுடன், டெலாவர் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் தமிழ் கலைகளுக்கு உயிரூட்டியது என்றால் அது மிகையல்ல. இந்த நடனங்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்ப் பள்ளி மாணவ, மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளாராக வந்திருந்த சித்த மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் சித்த மருத்துவத்தின் சிறப்புகள், தேவைகள் குறித்துவிழா அரங்கில் உரையாற்றினார், மேலும் ”நல வாழ்விற்குப் பெரிதும் உதவுவது உணவா? மருந்தா?” என்ற கருத்துக்கள நிகழ்ச்சியையும் வழிநடத்தினார். மற்றொரு சித்த மருத்துவர் அன்பு கணபதி அவர்கள் இணையமர்வில் சித்தமருத்துவம் , திருமந்திரக் கருத்துக்களை பகிந்துகொண்டார் .  பல அரிய தமிழ் நூல்களை தொடர்ந்து பதிப்பித்து, ஆவணப்படுத்தும் பெரும்பணி செய்து வரும் ”தமிழ்மண்” பதிப்பகம் ஐயா.கோ இளவழகன் அவர்கள் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ் நூல்களை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை குறித்து பேசினார். துபாயில் இருந்து வந்திருத்த தமிழ் விக்கிபீடியா / கலைக்களஞ்சியப் படைப்பாளி திரு. மயூரநாதன் அவர்கள் தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில் தமிழ் மொழி தரவுகளை அதிகரிக்க வேண்டிய தேவையையும் சரியான தரவுகளை கொண்டு சேர்க்க வேண்டியதையும் வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். விழாவின் முதல் நாள் மாலைஇசைக்கலைஞர் திரு. கிருட்னா அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரைக்கலைஞர்கள், பாடகர்கள், சிறப்பு அழைப்பாளார்கள் அனைவரையும் பாராட்டி விழா மேடையில் பேரவை சிறப்பு செய்தது.


அமெரிக்காவில் உள்ள ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் இருக்கை அமைக்க பெருங்கொடை அளித்த திரு. விசய் சானகிராமன் அவர்களும், திரு. சுந்தரேசன் சம்பந்தம் அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய படிப்புகளுக்கான துறையில் தமிழ் ஆசிரியராக உள்ள சோனதன் ரிப்லே இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமெரிக்கரான இவர் தமிழில் சிறப்புரையாற்றினார். ”நான் மதுரையில் இருக்கும் பொழுது கவனித்தது, தமிழர்கள் அனைவருமே தமிழ் மொழி குறித்து பெருமையாக பேசுகின்றனர். ஆனால் அவர்கள் மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு கொடுப்பதில்லை என்பதை கண்டு வேதனை அடைந்தேன் எனக் குறிப்பிட்டார். ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கினால் தமிழின் வளர்ச்சியை தொடர்ந்து உறுதிப்படுத்தலாம் என தன் உரையில் குறிப்பிட்டார்.


இந்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் சனநாயகக் கட்சி சார்பாக பேராய உறுப்பினராக போட்டியிடும் முதல் அமெரிக்கத் தமிழரான திரு. இராசா கிருட்ணமூர்த்தி அவர்கள் பேரவையின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பேரவையின் சார்பாக கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் ”அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது 2016” இந்த ஆண்டு பின்வரும் நால்வருக்கு பேரவைத் தலைவர் முன்னிலையில் விழா மேடையில் வழங்கப்பட்டது.


திரு. கேரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர், கனடா


விஞ்ஞானி. முனைவர். திரு. பரம்சோதி செயக்குமார். இவர் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சிறந்த விஞ்ஞானி விருது பெற்றவர்.


முனைவர். நிம்மி கெளரிநாதன், சமுக செயற்பாட்டாளரான இவர் பாலியல் வன்முறைகளின் பின்னான அரசியல் சார்ந்த படிப்புகளில் பேராசிரியராக உள்ளார்.


தி’லோ, மூன்றாம் பாலினத்தவரான இவர் நடிகர், எழுத்தாளர்.


இவ்விருதைப் பெற்று பேசிய திரு. கேரி ஆனந்தசங்கரி அவர்கள், ”இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், இனக்கொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர தொடர்ந்து போராட வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பன்னாட்டு விசாரணைக்காக பல மட்டங்களிலும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையை பயன்படுத்தி நீதிக்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசின் சட்ட அமைப்பு முறையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்போவதில்லை நாம் அனைவரும் நன்கு அறிவோம். கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு எந்த உறுதியான முயற்சியையும் எடுக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசிடமிருந்து நீதி கிடைக்கும் என நம்பவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டிய கடமை உள்ளது” என்றார்.


”தமிழ் தொழில்முனைவோர் மன்றத்தின்” இரண்டாம் ஆண்டு கூட்டம் விழாவின் இணை அமர்வாக நடைபெற்றது. ”இணை, கல், வழிநடத்து” என்ற கருப்பொருளில்நடைபெற்ற இந்த ஒரு நாள் கூட்டத்தில் உலகமெங்கும் பல தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் தமிழர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பேச்சாளர்கள்தங்கள் வெற்றிக்கான அனுபவங்களை பங்கேற்ப்பாளார்களுடன் பகிர்ந்து கொண்டனர். தமிழ் பெண்களில் சாதித்து வரும் தொழில்முனைவோர்கள் பங்கேற்ற சிறப்பு அமர்வும் இந்த ஆண்டு நடைபெற்றது.


அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் பாடத் திட்டத்தில் இயங்கும் மினசோட்டா தமிழ் பள்ளியில் பயின்று ”தமிழுக்கான இரு மொழி ஓப்புதலில்” பலனடைந்த மாணவிகள் சானிசு பெஞ்சமின், இலட்சன்யா பாலசுப்ரமணியம் ஆகியோரை சிறப்பு செய்தது, இந்த விழாவில் கவிஞர் அறிவுமதி எழுதி, உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி, அரோல் கரோலி இசையமைத்து, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி தயாரித்து வெளியிட்ட தமிழில் முதல் “பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை” மருத்துவர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட  ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  அமெரிக்கா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகளில் இருக்கும் தமிழ் ஆசிரியர்களை சிறப்பு செய்யும் பாடல் அர்பணிப்பு, தமிழகத்தில் இருந்து விழாவுக்கு வந்த குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் அவர்களிடம் பயிற்சி பெற்ற குழுந்தைகள் அரங்கேற்றிய நாடகம் என  இந்த ஆண்டு தமிழ் விழாவின் சிறப்புகள் ஏராளம்.


ஒவ்வொரு ஆண்டும் பேரவை விழாவில் ”சங்கங்களின் சங்கமம்” நிகழ்வில் ஒவ்வொரு தமிழ்ச் சங்க மக்களும் குழுவாக ஊர்வலம் வந்து அரங்க மேடைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு “சங்கங்களின் சங்கமம்” ஊர்வலம் அரங்கிற்கு வெளியே திறந்த வெளியில் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு சங்கமும் பறையிசை நடனத்துடன் ஊர்வலமாக வர நியூசெர்சி தமிழ்ச் சங்கமும் பார்வையாளர்களும் அனைவரையும் குதுகலத்துடன் வரவேற்றனர்.


விழாவின் கடைசி நாளில் நடைபெற்ற தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வில் உலகமெங்கும் வந்திருந்த தமிழ் ஆசிரியர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் பேசிய திரு.செ.முத்துசாமி மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அவர்கள், தொடக்கப் பள்ளியில் தமிழ் மொழியில் கற்று சாதனை படைத்த அப்துல்கலாம், மயில்சாமி, இராமன் உள்ளிட்டோர்களை நினைவு கூர்ந்து தமிழ் வழிக் கல்வியின் தேவையையும் அதிலும் தொடக்கப் பள்ளியின் பங்கு குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்த் துறை பேராசிரியரும், போலாந்து வார்சா பல்கலைக்கழக  வருகைப் பேராசிரியருமான திரு.அ. இராமசாமி அவர்கள் பேசும் பொழுது,


நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் தேவை இன்றைய சூழலில் என்ன என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அன்று தனித் தமிழ் இயக்கத்தின் எதிரியாக எது இருந்தது, அதே எதிரி, அதே தேவை தான் இன்றும் இருக்கின்றதா என நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். தற்பொழுது புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்திய அரசு திட்டமிடுகின்றது. இந்தியாவில் ”தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” தான் இந்தியாவின் தேசிய மொழிக் கொள்கையை திட்டமிடும் அமைப்பு. இவர்கள் தற்பொழுது புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்த திட்டமிடுகின்றனர்.


அவர்கள் முதன்மையாக முன்வைப்பது தற்பொழுது நடைமுறையில் இருக்கும் மொழிப்பாடத்தை மாற்றும் திட்டம் தான். அதன்படி இந்தியாவில் தொடர்பு மொழியாக வர வேண்டும் என அவர்கள் நினைக்கும் இந்தியை முதல் மொழியாகவும், இரண்டாவது மொழியாக தாய் மொழியான தமிழ் மொழியையும், மூன்றாவதாக இந்தியாவின் பெருமை என சொல்லப்படும் சமற்கிருதத்தை எல்லோரும் கற்க வேண்டும் என சொல்கின்றனர். இந்த முயற்சி நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனித் தமிழ் இயக்கத்திற்கு இருந்த பகையை விட மிகக் கடுமையானது. தாய்மொழியை புறக்கணிக்கும் இந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள பிற மொழி பேசும் மக்களும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் உணர்வாளர்களும் இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


மேலும் ”தனித்தமிழின்தேவை” என்ற தலைப்பில் பேராசிரியர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), ”ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?” என்ற தலைப்பில் முனைவர்இர. பிரபாகரன் (மேனாள்தலைவர்வாசிங்டன்வட்டாரத்தமிழ்ச்சங்கம்), ”தனித்தமிழ்நூற்றாண்டில்தமிழாஎழுச்சிகொள்!!!!” என்ற தலைப்பில் பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன், ”தனித்தமிழைநடைமுறைப்படுத்துவோம்” என்ற தலைப்பில் திரு. பார்த்தசாரதி சம்பந்தம் (தலைவர், வாசிங்டன்வட்டாரத்தமிழ்ச்சங்கம்), தனித்தமிழ்இயக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர்நாகராசன் (மேனாள்தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.


அறிஞர்களின் உரையுடன்


“தனித்தமிழ் குழந்தைகளிடம் போய் சேராதிருக்க முக்கிய காரணம் பெற்றோரா? சமுதாயமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்களை வாதங்களை முன்வைக்க மதுரைகாமராசர் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் நடுவராக இருந்தார். மாணவர்களின் வாதத் திறமையை பாராட்டிய நடுவர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் எனது இடக்கையும் வலக்கையும் மறைமலைஅடிகளும் இராசுப் பிள்ளையும் என குறிப்பிட்டது போல தனித்தமிழ் இன்று உலகம் முழுவதும் ஒளிர்வதற்கு மிக முதன்மையான காரணம் பெற்றோர்கள், சமுதாயத்தின் கூட்டுப் பங்கு என தீர்பளித்தார்.


நிகழ்வின் இறுதியில் தனித்தமிழ் இயக்கத்தை தொடர்ந்து வலிமையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையை வலியுறுத்தும் பேரவையின் தீர்மானங்களை பேராசிரியர் திரு. அரசு செல்லையா அவர்கள் முன்மொழிந்தார்.


தமிழக அரசும், உலகளாவிய தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும் தனித்தமிழ் இயக்கத்தினைமீண்டும்முனைப்புடன் முன்னெடுக்க வேண்டுமென வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பாக வலியுறுத்துதல், பேரவையின் அனைத்து விழாக்களிலும் தனித்தமிழ் இயக்கத்தை வளர்க்க உறுதி பூண்டு  2016 முதல் 2026 வரையிலானபத்துஆண்டுகளை ”தனித்தமிழ்இயக்கமறுமலர்ச்சிக்காலம்”எனஅறிவித்தது உள்ளிட்ட முதன்மையான ஏழு தீர்மானங்களை பேரவை நிறைவேற்ற நிகழ்விற்கு வந்திருந்தவர் அனைவரும் கையொலி எழுப்பி தீர்மானங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


”தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்” என்றார் பாவேந்தர். இவ்வரிகளுக்கு உயிரூட்ட அவரின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்ச் சமுகத்தின் விளைவுக்கு நீராகிய தமிழ் மொழியை பாதுகாக்க உறுதி ஏற்று நிறைவுற்றது பேரவையின் 29 ஆண்டு தமிழ் விழா.


இவ்விழா ”தனித்தமிழ் இயக்கத்தின்” தேவையையும் தமிழ் குழந்தைகளுக்கு “தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளியின்” தேவையையும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வலியுறுத்திய முன்னோடி விழா என்றால் அது மிகையாகாது.



”தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளி”


- இளங்கோவன் சந்தானம்


 

பின் இணைப்பு:


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை சார்பாக இயற்றப்பட்ட தனித் தமிழ் இயக்கத் தீர்மானங்கள்:


1) தனித்தமிழ் இயக்கத்தின் நாயகர்களான - மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர், பரிதிமாற்கலைஞர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட அனைத்து தமிழறிஞர்களையும், தன்னார்வலர்களையும்; வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மிகுந்த நன்றிப்பெருக்குடன் நினைவுகூறுகிறது, போற்றுகிறது.


2) தனித்தமிழ் இயக்கத்தினை மீண்டும் முனைப்புடன் முன்னெடுக்கவேண்டுமென - தமிழக அரசையும், உலகளாவிய தமிழ் மக்களையும், தமிழ் அமைப்புக்களையும்; வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை சார்பில் வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.


3) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை ஆண்டுவிழாக்களிலும், விழாக்களுக்கிடையேயும் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து பரப்ப வேண்டியவற்றை செய்ய பேரவைசார்பில் உறுதி பூணுகிறோம். 2016 முதல் 2026 வரையிலான பத்து ஆண்டுகளை ”தனித்தமிழ் இயக்க மறுமலர்ச்சிக்காலம்” என அறிவித்து, திட்டமிட்டு, வரும் 10 ஆண்டுகளில் இந்நன்னோக்கில் பேரவை செயல்படும்.


4) பேரவையின் உறுப்பினர் தமிழ்ச்சங்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களை - அடையாளம் கண்டு உரிய குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்கள் வாயிலாக – பிறமொழி கலவாமல் சரியான இலக்கணத்துடன் தமிழில் உரையாடல், மேடையில் பேசுதல், எழுதுதல், கதைகள் கட்டுரைகள் படைத்தல் ஆகியவற்றிற்கு பயிலரங்கங்கள் உரியவர்களைக் கொண்டு நடத்தப்படும்.


5) தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியே, வரும் தலைமுறைகளுக்கும் தமிழை தக்கவைக்கும் தழைக்கவைக்கும்.  இந்நோக்கில் உரிய பிற அமைப்புக்களுடன் பேரவை இணைந்து பணியாற்றும்.


6) தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியோடு; தமிழ் வழிக்கல்விக்கும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கும் பேரவை துணையிருக்கும். சரியான தன்னார்வலர்களை அடையாளம் கண்டு உரிய அமைப்புக்களோடு அவர்கள் இணைந்து பணியாற்ற வழிவகுக்கும்.


7) இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரும் தமிழ் மொழிமீது மாறாப்பற்று கொண்டு பல்லாண்டுகளாக தமிழ்த்தொண்டு புரிபவர்களே. உங்கள் அனைவரையும், நம் தாய்த்தமிழ் செழித்து வளர நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை தள்ளிவைத்து, இணைந்து செயல்பட பேரவை சார்பில் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.


 

 

FeTNA Tamil Convention - Kavadiyattam
by Swathi   on 17 Jul 2016  0 Comments
Tags: Tamil Kalvi   Tamil Palli   USA Tamil Palli Vizha   USA Tamil Kalvi Vizha   FETNA 2016 Vizha   FETNA Convention 2016   தமிழ்க் கல்வி  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !! வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.