LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வாழ்வியல் Print Friendly and PDF

தமிழர்களின் திருமண முறைகள் (Tamil Marriage System)-5

1. பதிவுத் திருமணம்


பதிவுத்திருமணம் என்பது எந்தவித சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் மாப்பிள்ளை இருவரும் சென்று, தேவையான படிவங்களை பூர்த்தி செய்து, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் விபரங்களுடன் சட்டப்படி பதிவு செய்தல் ஆகும். இத்தகைய பதிவுத் திருமணம் மூலம் வழங்கப்படும் திருமண சான்றிதழ், இந்திய நாட்டின் திருமண் சட்டப்படி உள்ள அனைத்து அங்கீகாரம் மற்றும் உரிமையை வழங்குகிறது. இந்த பதிவுத் திருமணம் நேரடியாக நடைபெறும் மாலை மற்றும் முறையிலோ அல்லது திருமணம் முடிந்த பிறகு நடைபெறும் பதிவாகவோ இருக்கலாம். மற்ற திருமண முறைகள் செய்துகொண்டாலும்,  அதை பதிவு செய்து திருமண சான்றிதழை பெறுவது அவசியமாகும்.

2. புரோகிதர் திருமண முறை(இந்து)/மத அடிப்படியிலான முறை

இந்த முறை  இந்து அல்லது மற்ற மதத்தை சார்ந்தவர்கள் மிகவும் பாரம்பரியமாக பின்பற்றும் மதம் அடிப்படையிலான முறையாகும். இந்து மதத்தினர் அக்னி சாட்சியாக, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மந்திரங்கள் முழங்க திருமணம் நடத்துகிறார்கள்.  கிறிஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் அனைத்து மதத்தவர்களும் அவரவர் முறைப்படி பாரம்பரியமாக ஏற்கும் திருமண முறையாகும்.

 

3. சுயமரியாதை திருமணம் (தமிழ் சமூக நன்னெறித் திருமணம்)

தமிழர் முறை- சமூக நன்னெறித் திருமணம் ஏன்?


தமிழர் வாழ்வியல் முறை அன்பும், அறனும், அறிவும், இணைந்தோங்கிய செழுமை நிறைந்தது. அறிவார்ந்த சமூகத்தின் அடையாளம்தான் தமிழ் சமூகம். அறிவுடைச் சமூகமாய்த் தழைக்க, பண்பாட்டை வளர்த்தெடுக்க, அவற்றின் நெறிமுறைகளை கடைப்டிப்பதே நம்மின் தமிழ்முக அடையாளம்.

 

இந்த சமூக நன்னேறித் திருமண முறையில் மணமேடை, மந்திரங்கள் இல்லை; சடங்குகள் இல்லை; குருமார், ஓதுவார் இல்லை; தாலி இல்லை; சோதிடம் இல்லை; தீ வளம் இல்லை; அம்மி மிதித்தல்-அருந்ததி பார்த்தல் இல்லை; வரதட்சணை இல்லை; சீர் வரிசை இல்லை;

 

அதே வேளையில் தமிழர் முறைத் திருமணம் கடைபிடிப்பதால் விளையும் நன்மைகளையும் இங்கே வரிசைப்படுத்தலாம்.

 

1. தமிழுக்கு முதன்மை

2. தமிழர்க்கு தலைமை

3. தமிழ் பண்பாட்டுப் பெருமை

4. ஆண் – பெண் சம உரிமை

5. தமிழர் மரபு – மானம் – மாண்பு காப்பு

6. பகுத்தறிவு ஏற்பு

7. மூட நம்பிக்கை ஒழிப்பு

8. சிக்கனச் சிறப்பு

9. பெற்றோரை சிறப்பித்தல்

 

 

இவ்விதமான நன்மைகள் விளைந்தால் “மனிதம்” காக்கப்பட்டு மனித மனங்கள் விரிவடையும்.  வாழ்வு சிறக்கும், சமூகம் தழைக்கும்.

 

 

 

திருமண நிகழ்வுமுறை  

 1. தமிழ் வாழ்த்து –திருக்குறள் ஓதல்

2. வரவேற்புரை

3. தமிழ் திருமணமுறை பற்றிய சிறப்புகள்

4. மண நிகழ்வு

  • புத்தாடை உடுத்தி அவையோரை வணங்குதல்
  • பெற்றோர் முன்னிலையில் தீப ஒளி ஏற்றுதல்
  • பெற்றோர் எடுத்துத் தர மாலை மாற்றுதல்
  • பெற்றோர் மணமக்களை வாழ்த்துதல்
  • மணமக்கள் உறுதிமொழி வாசித்து கையொப்பமிடல்

5. மண வாழ்த்துரை

6. நன்றியுரை

7. மண விருந்து

 

 

சான்றோர் கூற்று: 

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல

காலவகையி னானே

                  -நன்னூல் ஆசிரியர் பவந்தி முனிவர்

 

மனமுறைக்குப் பழமையைத் தேடித்திரிய வேண்டியதில்லை; கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடைதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய ஒரு காலத்து முறைகளே எக்காலத்திற்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றுதான் பொருள்.

                              -தந்தை பெரியார்

 

சுயமரியாதை திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால் நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடும்.

                              -பேரறிஞர் அண்ணா

 

திருமணத்தை யார் செய்வது? (கூட்டுத் திருமண முறை)  

 

மரபின் பேரில் எங்கள் குல முறைப்படி, மாப்பிள்ளை வீட்டார் செய்ய வேண்டும், பெண் வீட்டார் செய்ய வேண்டும் என்ற குலமுரைத் திருமணங்கள் ஒருபுறம்.  திருமண பேரத்தில் கெடுபிடியின் உச்சம், பெண்ணுக்கு வரதட்சணை, சீர் செய்தது போதாது, “கன்னிகாதானம்” என்ற முறையில் திருமணமும் செய்யுங்கள் என்று பெண்வீட்டாரை சுமைப்படுத்தும் சீரற்றப் போக்கிற்கும் நம் சமூகத்திலே பஞ்சம் இல்லை.

 

பெண் வீட்டாரை சுமைப்படுத்துவதை விடுத்து, இரு வீட்டாரையும் சுகப்படுத்துவது சாத்தியப்படும் வகையிலே அமையக்கூடியதுதான் கூட்டுத் திருமண முறையாகும். அதாவது திருமணச் செலவை சரிபாதியாக இருவீட்டாரும் பகிர்ந்து செய்வது. அதிலும் தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து முடிந்த வரையில் எளிமையாகத் திருமணம் செய்வது சாலச்சிறந்தது.  இத்தகைய கூட்டுத்திருமண முறை இருவீட்டார்க்கும், சம உரிமையையும், சம கவுரவத்தையும் ஈட்டித்தரும் என்பது கூடுதல் சிறப்பு.

 

கூடி வாழ்தால் கோடி நன்மை

கூதடை செய்யின் மனமும் பெருமை!

 

 

தமிழர் முறைத் திருமணத்தைப் பற்றிய நூல்கள் 

 

  1. தமிழர் திருமணம் (செய்முறை விளக்கம்),ஆசிரியர் : ஐவர் வழி வ.வேம்பையன்,அவ்வை பதிப்பகம்,சென்னை-18.
  2. தமிழர் திருமணம்,ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவணார்,     தமிழ் மண் பதிப்பகம்.

 

 

 

வரதட்சணை வரமா? சாபமா?  

 

தமிழ் சமூகத் தோற்றத்திற்கு முன்பாக மனித குல வளர்ச்சியை ஆராய்வோமானால் வரலாற்றின் சுவடுகளில் பெண்களின் ஆளுமைதிறனை அறிந்து கொள்ளலாம்.பிற்காலத்தில் நிலவுடைமைச் சமூக “தனிகுடும்பத் தோற்றத்தின் விளைவே” பெண்ணை அடிமைப்படுத்தும் நிறுவனமாக மாற்றம் கொண்டது.மூட வழக்கங்களில் ஒன்றான பெண்ணை விலைபேசி,ஆண் சமூகம் வாங்கும் இழிநிலையின் உச்சம்தான் வரதட்சணை முறை. பரிசம் கொடுத்து பெண்ணை மதித்து வாழ்ந்த தமிழ்ச் சமூகம் பின்னர்,பெண் ஓர் உயிராக பாவிக்கும் நிலைமாறி,பொன்,பொருள் போல விலைபேசி வாங்கப்படும் அவலம் உருவானது.

 

அந்தக் காலத்தில் இளம் வயதில் இருபதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் புழக்கத்திலிருந்தது. திருமணத்திற்குப் பிறகு புது மாப்பிளைக்கு தனிப்பட்ட வருமானம் என்பது சாத்தியாமாகும் வரை,புகுந்த வீட்டிற்குப் போகும் பெண் தன் கணவனுடன் மகிழ்ச்சியோடு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து வாழ வேண்டும் என்ற நோக்கில் பெண்ணை பெற்றோர் அன்பின் அடிப்படையில் கொஞ்சம் பண்டம்,பணம்,பொருள் கொடுத்து உதவுவது வழக்கத்திற்கு வந்து அவரவர் தகிதிக்கேற்ப கொடுத்து உதவினார்கள்.இப்படி விரும்பி வரனுக்கு தரப்படுகிற தட்சணை(வரதட்சணை=வரன்+தட்சணை) என்பது சடங்கு,சம்பிரதாயம் என்றாகி இப்போது கட்டாயம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.ஆக,தட்சணை என்பதே விருப்பபட்டு செய்வதுதானே,இதில் எப்படி கட்டாயம் என்பது எட்டிப்பார்க்க முடியும்?

 

 

விளைவு,இன்று பாமரர் முதல் படித்தோர் வரை “வரதட்சணை” என்பது ஏதோ தவத்தால் கிடைக்கும் வரம் போல் நினைத்து “வரதட்சணை இல்லையேல், பெண்ணுக்குத் திருமனமில்லை என்ற அவல நிலையை பின்பற்ற ஒருமித்து சபதம் ஏற்றுள்ளனர்.இத்தகைய கட்டாய வரதட்சணை முறையால்,நாட்டில் ஏழைப் பெண்களுக்குத் திருமணம் என்பது எட்டாக்கனியாக மாறி,பெண்ணைப் பெற்றாலே பாவம்-பாரம் என்றாகி,பெண் சிசுக் கொலைகள் பெருகக் காரணமாய் அமைந்துள்ளது.

 

அறிவால் முன்னேறிய சமூகத்தில் வாழுகின்ற நாம்,திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இனைந்து வழக்கை இணையர்களாக கருத்தொருமித்து,இனிய இல்லறம் காண பொன்னும் பொருளும் முக்கியமல்ல; தூய்மையான அன்பும்,மன ஒருமைப்பாடுமே அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இருமனம் இணையும் திருமண முறைக்கு,வலியக் கேட்டுப் பெறும் வரதட்சணை என்பது வரமல்ல! மாறாக இந்த பூமியிலே புனிதமாக மதிக்கிற பெண்ணுக்கு,தாய்மைக்குக் கேடு செய்து கேட்டுப் பெறுகின்ற “சாபமே” என்பதை எல்லோரும் உணர்தல் வேண்டும்.பகுத்தறிவுப் பாதையிலே பயணித்து ஏற்றமிகு உன்னத சமுதாயத்தை உருவாக்கிட உளமுவந்து சூளுரை ஏற்போம்; வரதட்சணையைத் தவிர்ப்போம்; உழைத்து ஈட்டி வளம் பெறுவோம்!


ஆணும் பெண்ணும் சமம்:

அரசாங்கம் இரண்டு விதமான சட்டங்களை இயற்றியுள்ளது.  ஒன்று வரதட்சணை ஒழிப்புச் சட்டம் மற்றொன்று பெற்றோர் சொத்தில் ஆணுக்கும் பெண்னுக்கும் சரி பங்கு உள்ளது என்ற சட்டம். 


வரதட்சணை(Dowry) Vs ஆண்-பெண் சொத்து சம உரிமை சட்டம்: 

வரதட்சணை என்பது புதிதாக வாழ்வை ஆரம்பிக்கும் தன் மகளுக்கு பெற்றோர் சீதனமாக மனமுவந்து தன் வசதிக்கேற்ப செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்புவது மரபாக இருந்தது. பிறகு அதுவே கட்டாயமாகி ஒவ்வொரு மகனின் திருமணத்திற்கும் இவ்வளவு வருமானம் வரும் என்ற அவல நிலை உருவானது.  மாப்பிள்ளை வீட்டார் என்பவர்கள் எதோ வேறு உலகில் இருந்து வந்தவர்கள் என்றோ, பெண் வீட்டார்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்றோ இதில் அர்த்தம கொள்ளக்கூடாது.  காரணம், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வைத்திருப்பவர்கள் தன் பெண்ணிற்கு கொடுக்கும் சீதனத்தை விட தன் பையனுக்கு எதிர்பார்ப்பது அதிகமாக இருக்கிறது.  பல நேரங்களில், என் பெண்ணிற்கு இவ்வளவு போட்டு சீரும் சிறப்புமாக திருமணம் செய்தோம் என்பதை தகுதியாகக் காண்பித்து, தன் பையனுக்கு பேரம் பேசும் நிலை நாம் அனைவரும் அறிந்ததே.  எந்த புரட்சி பெற்றோரும், தன் மகளுக்கு வரதட்சணை கேட்டு வாங்கியதுபோல் என் மகனுக்கு கேட்டு நம் வீட்டிற்கு வரும் மருமகளை விளைபேசக்கூடாது என்று எண்ணுவதில்லை.  ஒவ்வொரு பெண்ணும் அம்மா, மாமியார் என்ற பாத்திரங்களை வேறாகத்தான் பார்கிறார்கள்.  இதில் ஆண் பெண்களை குழந்தைகளாக பெற்றவர்கள் ஒரு கொடுக்கல் வாங்கலாகவே பார்த்தார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பையன் இல்லாமல், அதிகம் பெண் குழந்தையை பெற்றவர்கள் மட்டுமே. இப்படி வரதட்சணை தலைவிரித்தாடிய காலத்தில் பெண்கள் அதிகம் படிக்காதவர்களாக, வேலைக்கு போகாதவர்கலாக இருந்தார்கள்.  மேலும் பெற்றோர் சொத்தில் பெண்ணுக்கும் பங்குக்குண்டு என்ற சட்டம் இல்லாத காலமாக இருந்தது.  வரதட்சணை மற்றும் பெண் சொத்துரிமை இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. காரணம், ஆண்-பெண் சமத்துவமில்லாத போக்கை தண்ணீர் விட்டு வளர்ப்பவர்கள் பெற்றோர்களே.  ஒரு வீட்டில் ஒரு ஆண் ஒரு பெண் என்று இருந்தால், ஆண் படிக்கும் கல்வியில் இருந்து, அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வரை ஒருபடி மேலேதான் இருக்கிறது. பெண்ணை அடுத்தவர் வீட்டிற்கு செல்பவர் என்பது போலவே வளர்த்து, திருமணம் என்று வரும்போது, இன்னொருவருடன் அனுப்பும்போது, பெற்றோரால் தான் சம்பாதித்த சொத்தை, தனக்குப் பிறகு ஆணும பெண்ணும் சமமாக பங்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.  இதுவே ஒரு சமநிலையற்ற போக்காகும்.  தன் காலத்திற்கு பிறகு தன் வாரிசான தன் மகன் வசதியாக தன் பெயரை சொல்லும்படி வாழவேண்டும் என்று கருதும் பெற்றோர், தன் மகளை அடுத்தவீட்டு பெண்ணாகவே பார்க்கும் அவல நிலையும், இன்று பல தங்கை, அக்காக்கள் நீதிமன்றத்தின் கதவைத்தட்டி போராடி, தன் தந்தை சொத்தை பெறுவதையும் நாம் பார்க்கிறோம்.  எனவே, வரதட்சணைக்கு எதிரான சட்டத்தையும், ஆண்-பெண் அனைவரும் சம உரிமை சட்டத்தையும் சேர்த்தே பார்க்கும்போது, இந்த குடும்ப முறை இன்னும் சமநிலையுடன் ஆரோக்கியமானதாக விளங்கும். 


 

 

தாலி தமிழருடையதா?   தற்காலச் சூழலில் இது அவசியமா?   

 

தமிழர் திருமணங்களில் முக்கியமானதாகவும்,முதன்மையானதாகவும் இருந்து வரும் சடங்குகளில் ஒன்று மணமகன்,மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது.தாலி என்ற வார்த்தையில் உள்ள தால் என்பது “பனை என்ற பொருளைக் குறிக்கும்.தால்-பனை போல் மங்கல அணியானது பெண்ணுடைய கழுத்தில் தொங்குவதால் தாலி என்று பெயர் பெற்றிருக்கலாம்.குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வந்த தமிழர் இலையையும்,பூவையும் ஆடையாக அணிவது வழக்கம்.அந்த வகையில் பனங்குருத்தாலான காதணி,கழுத்தணி முதலிய பல்வேறு அணிகளைச் செய்து அணிந்துள்ளனர்.உதாரணத்திற்கு ஓலையைக் குறிக்கும் “தோடு” என்னும் சொல் இன்றும் காதணியின் பெயராய் அழைக்கப்படுவதை யாவரும் அறிவோம்.

 

முன் காலத்தில் குடும்பமாய் இல்லாமல் கூட்டாய் வாழ்ந்த ஒரு குலத்து ஆடவர் அனைவருக்கும்,பெண் என்பவள் பொது மனைவியாய் வாழ்ந்து வந்த நிலை மாறி, நாகரிகம் மேம்பட்டு ஒவ்வோர் ஆணுக்கும் தனி மனைவி என்ற நிலை உருவானது.அப்படி திருமணமான மனைவியை தனித்து அடையாளம் காட்ட வேண்டி தாலி கட்டும் வழக்கம் ஏற்பட்டது என சங்க இலக்கியங்கள் சான்று புகட்டுகின்றன.(ஈகையரிய இழையணி மகளிர்-புறநானூறு)  

 

இதையடுத்து பெண்ணுக்கு ‘தாலி” என்றால் ஆணுக்குக் காலில் “மெட்டி அணிவது வழக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.காரணம் மரபின் திணிப்பிலே தலை நிமிர்ந்து நடக்கும் ஆணுக்கு பெண்ணின் கழுத்திலுள்ள தாலியும்,தலை குனிந்து நடக்கும் பெண்ணுக்கு ஆணின் காலிலுள்ள மெட்டியும் எளிதாக கண்பட்டு அடையாளம் காண முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது.நாளடைவில் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பரவலாகி மெட்டியை ஆண்கள் விலக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல்,அந்த மெட்டியையும் பெண்ணிடமே திணித்து இன்றும் அது நடைமுறையில் உள்ளது.இப்படி சாதி,குல,மத, அடிப்படையில் இல்லாமல்,தமிழ் மொழி பேசும் இன அடிப்படையில் தமிழர்களிடையே தாலி அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளதை முழுமையாக மறுப்பதிற்கில்லை.அதுவே இடையில் தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்பட்டு அனைவருக்கும் பொதுவாக இருந்த தாலி,பொன் தாலியாக மாறி,தாலியில் குறுகிய நோக்குடைய சாதி,குல அடையாளங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டன.இப்படி மாய மந்திரதிற்கும்,வேத வேள்விக்கும் தம் சுய சிந்தனையை அடகு வைக்கும் அளவிற்கு திராவிடத் தமிழர்களின்  தன்மானம் சிதைக்கப்பட்டதையும்,சடங்கு சம்பிரதாய மூட நம்பிக்கைகளைப் புகுத்தி தமிழர் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டதையும் தமிழர் வரலாற்றைப் புரட்டினால் நமக்கு நன்றாக புரியும்.

 

அதே சமயம் முன்பு நடைமுறையில் இருந்த வழக்கங்களான உடன்கட்டை ஏறல்,கைம்பெண்-பூ,மஞ்சள் குங்குமத்தை இழத்தல் முதலானவற்றைத் தகர்த்தெறிந்து,கணவனை இழந்த பெண்களுக்கு விதவை மறுமணம் என்ற மேலோங்கிய நிலைக்கு கால,நாகரிக,பண்பாட்டு,மாறுதலுக்கேற்ப அறிவார்ந்த பாதையில்,தமிழ்ச் சமூகம் உயர்ந்துள்ளது என்பதையும் நிச்சயமாக மறுக்க முடியாது.இவற்றை ஏற்கும்,பாராட்டும் அதே வேளையில்,ஆணுக்கு சமம் பெண் என்பது எழுத்தளவில் நில்லாது,செயலளவிலும் பல்வேறு துறைகளில் ஆணுக்கு நிகராக பெண்ணும் சாதனைகளை நிலை நிறுத்தியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மரபு,அடையாளம் என்ற பெயரில் “தாலி கட்டுதல்”என்பது ஒரு வகையில் காலா காலத்திற்கும் பெண்ணைத் தாழ்த்துகின்ற, ஆதிக்கம் செயக்கின்ற போக்காகத்தான் இருக்கிறது என்பது அறிவார்ந்தோர்,பெண் சமூகம் உயரப் பாடுபடுவோரின் உயர்ந்த கூற்று.

 

ஆக அறிவையும்,திறமையையும் முன் வைத்து எல்லோரும் ஏற்றம் பெரும் ஒரு உன்னத சமுதாயம் உருவாக வேண்டிய இந்தச் சூழலில்,இனியும் ஆண்-பெண் சமத்துவத்தை மறுக்கின்ற,பெண்ணை ஆதிக்கம் செய்கின்ற இந்த “தாலி கட்டுதல் முறை தேவைதானா? சிந்திக்க வேண்டும்.

 

உண்மையில்,ஆணுக்குப் பெண்ணும்,பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கை இணையர்களே, துணையயல்ல. மனமொருமித்து, அன்பு கலந்து நேசித்து,ஒருவருக்கொருவர் உள்ளுணர்ந்து ஈடுபடும் இல்லற வாழ்வுக்கு இடையில் இனி இந்தத் தாலி அவசியமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.மனசாட்சிப்படி பார்த்தாலும் இது நியாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறைதானே ?

 

 

                 இரு மனம் இணையும் திருமண விழாவில் 

                இனி மாலையை மாற்றுவோம்; 

                மனங்களை ஒன்றிணைப்போம்; 

                முறையாக திருமணத்தை பதிவு செய்வோம்!  

 

                     

 

               

அன்பளிப்புக்கு உகந்த முறை                 

 அன்பானவர்களே,

அன்பளிப்பு என்ற பெயரில் பொன்னாகவோ,பொருளாகவோ,பணமாகவோ வழங்குவதைத் தவிர்க்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.இத்தகைய அன்பளிப்பைக் காட்டிலும், தங்களின் வருகையும், வாழ்த்துகளுமே மணமக்களுக்கு உண்மையில் பேரன்பளிப்பு,பெருமகிழ்ச்சி. வேண்டுமானால்,ஆதரவற்ற இல்லங்களுக்கும்,மக்கள் நலப்பணிகளுக்கும் கொடுப்பது மிகப்பெரிய சேவையாகும்.அதற்கான வழிவகைகளும் திருமண அரங்கில் செய்யப்பட்டுள்ளது.இதுவும் கட்டாயமில்லை உங்கள் விருப்பம்.

மொய் விலக்கப்பட்டது வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி (மணமகள்) 

 

-------- மாவட்டம், ---------- தாலுகா, --------------------- தெருவைச்சேர்ந்த மானமிகு. ------------------------------ ஆகியோரின் மகள் -------------------------- என்கிற நான், ------------------------- மாவட்டம்,----------------------- தாலுகா,------------------------------ சேர்ந்த மானமிகு.---------------------------- ஆகியோரின் இளைய மகன் நெறிமிகு.------------------------ என்ற தங்களை இந்த மணவிழாவில் பங்கேற்றுள்ள பெற்றோர்கள்,பெரியோர்கள்,தாய்மார்கள்,தோழர்கள் முன்னிலையில் பங்குனி 05 (3101.2008) இன்று முதல் என் வாழ்க்கை இணையாக ஏற்றுக்கொள்கிறேன்.

 

 

பெரியோர்/பெற்றோர் சான்றொப்பம்                            இங்ஙனம்,

 

 

(மணமகள் பெயர்)

1.                                                                     

2.      


 

வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி   (மணமகன்)

 

--------------------------------------------- மாவட்டம், ---------------------------------- தாலுகா, ----------------------------------------- கிராமத்தைச் சேர்ந்த மானமிகு.-------------------------------------------------- ஆகியோரின் இளைய மகன் ------------------------------------------------------- என்கின்ற நான் ------------------------------------- மாவட்டம்,------------------------------------------- தாலுகா,----------------------------------------------------தெருவைச்சேர்ந்த மானமிகு. ---------------------------------------- ஆகியோரின் மகள் நெறிமிகு.------------------------------------------ என்கிற தங்களை இந்த மணவிழாவில் பங்கேற்றுள்ள பெற்றோர்கள்,பெரியோர்கள்,தாய்மார்கள் தோழர்கள் முன்னிலையில் பங்குனி 05(31.01.2008) இன்று முதல் என் வாழ்க்கை இணையாக ஏற்றுக்கொள்கிறேன்.

 

பெரியோர்/பெற்றோர் சான்றொப்பம்                                               இங்ஙனம்,

 

1.                                                                                     (மணமகன் பெயர்)                                                                 

2.                   

 

 

 

by Swathi   on 25 Jun 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும் அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
வளைகுடா நாடு  ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1 வளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1
இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில
நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன் நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்
The beauty of weddings in Tamil culture The beauty of weddings in Tamil culture
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
கருத்துகள்
30-Sep-2018 13:22:06 வினோத் said : Report Abuse
நான் தமிழர் முறை படி திருமணம் செய்ய விரும்புகிறேன்... உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி
 
16-Mar-2018 11:10:50 S .NATARAJAN said : Report Abuse
உலகில் மனித இனத்தில் ஆண் பெண் இணைந்தோ தனித்தோ வாழ்வது அவரவர் உரிமை என்பதை போல துணையை, துணையின் விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவரவர் உரிமை . அப்படியிருக்க சடங்குகள் எதற்கு ? சடங்குகளில் எந்தப் பொருளுமில்லை. முட்டாள் தனமான கற்பனைகளே. வாழ்வின் பொருளறிந்து பெற்றவர்க்கு உற்றவர்க்கும் உறுதுணையாக இருந்து, காலத்தின் சூழலுக்கேற்ப ஒப்பந்த உறுதிகளுடன் இறுதி வரை மகிழ்ச்சியுடன் வாழ்தலே சிறப்பு .
 
13-Nov-2017 10:28:17 நாராயணன் said : Report Abuse
பிராமண திருமண சடங்குகள் அதன் விளக்கமும் இ மெயில் மூலமாக வேண்டும்
 
09-Aug-2015 08:47:00 swaminathan said : Report Abuse
சுய மரியாதை திருமணங்கள் மன நெகிழ்வை தருவதில்லை. நமது சடங்குகள் போல் உலகில் எங்கும் காண முடியாது. நாம் கொடுத்து வைத்தவர்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.