LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் !!

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதை, கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து வருகிறார். காமன் வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என பலமுறை அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் பிரதமருக்கு கடிதமும் எழுதினார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இது வரை இந்த விஷயத்தில் எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது,

 

2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர்  உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும்  ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து ஒரு இனப் படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது. 

 

இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை ஈவு இரக்கமற்ற இழி செயலை மனிதாபிமானமற்ற தன்மையை, மனிதநேயமற்ற நடவடிக்கையையும், இலங்கை  தமிழர்களைஅழிக்க இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியது மற்றும் பயிற்சிகள் அளித்த நடவடிக்கையையும் நான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறேன்.  இலங்கை அரசின், அராஜகச் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இலங்கை நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. 

 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு தனது ஆய்வில், பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது; மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும்  குண்டுகளை வீசியது; மனிதாபிமான முறையில், செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது;  உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது உள்பட பல்வேறு கடுமையான குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தது.

 

இந்தச் சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நான், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,  இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

 

இதனைத் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவும், மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன்.  இதன் விளைவாக, தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவது  ரத்து செய்யப்பட்டது.

 

இருப்பினும், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வரப் பெற்றன. இது மட்டுமல்லாமல் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து புதிய ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் நாடே கொதித்தது.

 

இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்றே கடிதம் வாயிலாக, மாண்புமிகு பாரதப் பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன்.

 

இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,  இலங்கை நாட்டை "நட்பு நாடு" என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான  சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்,  இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்,  தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு "தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன். அது இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

 

இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம்  Queen Elizabeth அவர்களால் காமன்வெல்த் நாளான 11.3.2013 அன்று கையெழுத்திடப்பட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ், "We are committed to the Universal Declaration of Human Rights and other relevant human rights covenants and international instruments.   We are committed to equality and respect for the protection and promotion of civil, political, economic, social and cultural rights including the right to development for all without discrimination on any grounds as the foundation of peaceful, just and stable societies.  We note that these rights are universal, indivisible, interdependent and interrelated and cannot be implemented selectively.”  

 

    "We are implacably opposed to all forms of discrimination whether rooted in gender, race, colour, creed, political belief or other grounds." என்று கூறியுள்ளார்.

 

அதாவது, மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன்பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும்,  அமைதி, நியாயம் மற்றும் நிலையான சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் வளர்ச்சி உரிமை உள்பட சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார சம உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் சம உரிமை மற்றும், கண்ணியத்தை எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கவும் உறுதி பூணுகிறோம் என்றும்,  இந்த உரிமைகள் அனைத்தும் பொதுவானவை, பிரிக்க முடியாதவை, ஒன்றுக்கொன்று சார்புடையவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், இதில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து செயல்படுத்த முடியாது என்றும், காமன்வெல்த் சானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை, அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

 

காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார்.  அந்த அறிக்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பு தொடர்ந்து உகந்த வகையில் திகழ வேண்டுமென்றால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை மதித்தல் போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட காமல்வெல்த் அமைப்பு அவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கனடா நம்புகிறது.  கனடா நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் காமன்வெல்த் நாடுகளின் இந்த முக்கியக் கொள்கைகளை நிலைநிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டதால்,  கனடா நாட்டு பிரதமர் என்ற முறையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, "Canada believes that if the Commonwealth is to remain relevant it must stand in defence of the basic principles of freedom, democracy and respect for human dignity, which are the very foundation upon which the Commonwealth was built. It is clear that the Sri Lankan Government has failed to uphold the Commonwealth’s core values which are cherished by Canadians. As such, as the Prime Minister of Canada, I will not attend the 2013 Commonwealth Heads of Government Meeting in Colombo, Sri Lanka" என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்திருக்கிறார். 

 

அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே  இது காட்டுகிறது.

 

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும்,  பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து, இது போன்ற நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தினை நான் பாரதப் பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதே கோரிக்கையினை  வலியுறுத்தி வருகின்றன.  எனினும், மத்திய அரசு  இந்தப் பிரச்னை தொடர்பாக ஒரு திடமான, தீர்க்கமான முடிவை  இன்னமும் எடுக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத், தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தினை  முன்மொழிகிறேன்.

 

"தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து  இந்த ஆண்டு நவம்பர் மாதம்  இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக  பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு  தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு  நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக தமிழக முதலவர் ஜெயலலிதா தனது தீர்மானத்தில் கூறியுள்ளார். 

 

இந்த தீர்மானத்தின் மீது தி.மு.க., தே.மு.தி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பிலும் உறுப்பினர்கள் பேசினர். இதனை தொடர்ந்து தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: தமிழக சட்ட சபை   காமன்வெல்த் மாநாடு   இந்தியா   ஜெயலலிதா   தீர்மானம்   Tamilnadu Assembly   Resolution  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம் 100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம்
50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !! 50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.