LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழரின் நோன்பு - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தமிழினம் , காலத்தால் மூத்த இனம்; வாழ்வியல் பண்பிலும் வளர்ந்த இனம். சான்றாண்மை, பண்பாடு, ஆகியவற்றிற்கு உரைகல்லாக - எடுத்துக்காட்டாக வாழ்ந்த இனம்- தமிழினம்!

தமிழினத்தின் நாகரிகம், நயத்தக்க நாகரிகம், காலத்தையும் தூரத்தையும் வென்று இன்றைய பூத பவுதிக உலகம் நெருங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை அன்று பெறாத நிலையிலேயே உலகந்தழீஇய ஒட்பத்தை உணர்ந்த இனம், தமிழினம்! உலகத்தோடு ஒட்ட ஒழுகலை ஒழுகலாறு என்று கடைபிடித்த இனம், தமிழினம்! பழியின்றிப் புகழ் புரிந்த வரலாற்றிற்குக் கரும்பொருளாக வாழ்ந்த இனம் தமிழினம்! தமிழர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். ஆதலால், எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் செய்யாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்டனர். வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட ஒரே இனம், தமிழினம்.

வாழ்க்கைக்கு இலக்கணம் பெற்று விளங்கும் மொழி, தமிழ் ஒன்றேயாம். ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடி நடத்தும் மனையறத்திற்கு அகப்பொருள் இலக்கணம், அந்த ஒருவர் வீட்டுக்கு வெளியே நடத்தும் வாழ்க்கைக்குப் புறப்பொருள் இலக்கணம் என்று இலக்கணம் செய்து பெருமை பெற்றது தமிழினம். வாழ்தலின் ஒருமைப்பாட்டை அறிந்தமையின் காரணமாக வாழ்க்கைக்கு இலக்கணம் அமைத்துக் கொண்டு இலக்கியமாக வாழ்ந்து வரலாற்றுக்கு உறுப்பாக விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழர்தம் வாழ்வியலில் நல்ல குடும்பம் அடிப்படை. நல்ல பணியாள்கள், நல்லொழுக்கத்திற்கு அரணாக நிற்கும் அரசு, கற்றுத் தெளிந்து மானுடத்திற்குரிய உயர்நிலைத் தகுதிபெற்ற சான்றோர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு. மூப்பும் நரையுமின்றிப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து வரலாறு படைத்த பெருமையும் இலக்கியங்களும் பெற்று விளங்கியது தமிழினம்.

அன்பும் அறமும் தழீஇய வாழ்க்கை, தமிழர்தம் வாழ்க்கை. ஆடவர் வினைமேற் செல்வதை உயிராகக் கொண்டனர். மகளிர் கணவன் மாட்டுள்ள அன்பையே உயிரெனக் கொண்டு வாழ்ந்தனர்; அறம் பல செய்தனர். ஆயினும்,"" இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்'' என்ற எண்ணத்தில் அறம் செய்யவில்லை. அறம் செய்தல் தமிழினத்தின் இயல்பாக அமைந்த ஒழுகலாறு. அன்பொடும் அருளொடும் வந்த பொருளாக்கத்தை விரும்பினர். செல்வத்தின் பயன் ஈதல் என்ற நெறி நின்றவர்கள். தமிழரசர்கள் கொடைமடம் பெற்றவர்கள்; பெரியோரைப் போற்றினர்; சிறியோரை இகழாது ஏற்றனர்; சிந்தையும் தெளிவும் தெளிவினுள் சிவமும் கண்டனர்; தெளிந்தோரைப் போற்றி மகிழ்ந்தனர். ஆயினும் தமிழ்நாட்டில் வறுமை - ஏழ்மை தொடர்ந்து இருந்துவருகிறது. ஏன்? தமிழர் போற்றிய பண்பு பலரிடம் இருந்ததா? என்பது கேள்வி.

சான்றோர் பலர் இருந்தனர் என்று புறநானூறு கூறின், சான்றோர் அல்லாத சிலர் இருந்திருக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் செல்வம் இல்லாதவர்கள் - வறியவர்கள் பலர் இருந்துள்ளனர்; இன்றும் இருந்து வருகின்றனர். ஏன்? இலர் பலராயினர்? பொதுவாக உண்ணாது உறங்காது பரம்பொருளை நினைந்து சும்மா இருக்கும் தவம் செய்தலையே நோன்பு என்று சமயநெறி கூறும். ஆனால் புறநானூறு பிறர் நலம் கருதி உழைத்தலையே நோன்பு என்று கூறுகிறது. தன்னலம் - சுயநலம் என்பது சிறுமை பொருத்தியது. தன்னலத்தில் பிறர் நலம் அடங்காது. பிறர்நலத்தில் தன்னலம் அடங்கும். தமிழர்கள் மரபுவழி சொத்துரிமையைப் போற்றியவர்கள் அல்லர். ஒவ்வோர் ஆண்மகனும் பொருளீட்ட வேண்டும். அங்ஙனம் பொருளீட்டும் முயற்சியைத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாராட்டுகின்றன.

அகப்பொருள் இலக்கணத்தில் பொருள்வயிற் பிரிதல் என்று ஒரு துறையே உண்டு. அகநானூற்றில் ஒரு காட்சி! பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைமகன் வாராமை நினைந்து தலைவி இரங்குகின்றாள். தோழி ,""தலைவன் வந்துவிடுவான், வருந்தற்க'' என்று ஆறுதல் கூறுகிறாள். ஆயினும் தலைவிக்குத் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை இல்லை. ஏன்? தலைவன் பொருளீட்டச் சென்றது தனக்காக , தன் பெண்டு பிள்ளைகளுக்காக இல்லை. தம்மை நாடி வறுமையால் இரந்து வருவோருக்கு இல்லையென்று கூறிப் பழகாத தலைவன் ஈதலுக்காகவே - வறியோர்க்கு ஈதலுக்காகவே பொருளீட்டச் சென்றுள்ளான். அனைவரும் வறுமையிலிருந்து விடுபடும்வரையில் தலைவரின் பொருள் தேடும் முயற்சியும் தொடரும் அல்லவா?

"" இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே!'' - அகம் 53 : 13-16என்னும் அகநானூற்றுப் பாடல் அடிகளை ஓர்க. இங்ஙனம் பிறர்நலம் கருதிப் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபடுவதை நோன்பு என்று புறநானூறு கூறும்."" தமக்கென முயலா நோன்தாள்பிறர்க்கென முயலுநர்'' - புறநானூறு 18 : 8-9என்பதறிக.பிறர்க்கென முயலும் நோன்புடையார் சிலரானதால் தமக்கென முயலும் சிலர் பலராயினர். பிறர்க்கெனப் பொருளீட்டும் வாழ்க்கை நெறியினை மேற்கொள்வோர் பலராகும் பொழுது தமக்கென முயலுவோர், சிலராகிவிடுவர். பொருளின்மைக்குக் காரணம் தலைவிதியன்று. ஒப்புரவு மேற்கொண்டொழுகுவோர் சிலரானதன் விளைவாலேயே இலர் பலராயினர். இதற்கும் தலைவிதிக்கும் தொடர்பு இல்லை.

சமுதாய வாழ்வியலுக்குத் திருவள்ளுவர் காட்டிய நெறி புதுநெறி- பொதுநெறி- ஒப்புரவு நெறி. கொடுப்பாரும் கொள்வாரும் என்ற நிலையில் கொடுப்பாருக்கு ஏற்றமும் கொள்வாருக்கு இகழ்வும் தருகிறது. கொடுப்பார்- கொள்வார் உறுதி அறநெறி அடிப்படையில் மட்டுமன்று, உரிமையுடன் கூடிய உறவு ஒப்புரவு நெறியிலும் உண்டு. குறியெதிர்ப்பு எதுவும் அறவேயில்லாமல் ஊருணி , பயன்மரம், மருந்துமரம் போல வாழ்தல் ஒப்புரவு கலந்த வாழ்க்கை முறை. கொடுப்போனுக்குரிய உயர்மனப்பான்மையும் கொள்வோனுக்குரிய இழிவு மனப்பான்மையும் இல்லாத வாழ்க்கையே, பண்பாடே சமுதாய அமைப்பு உருவாகத் துணை செய்யும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தக்குடி தமிழ்க் குடியாயினும் தமிழர்தம் வாழ்வில் சமுதாய அமைப்பு, சென்ற காலத்திலும் உருவானதில்லை. இன்றும் - இதுவரை உருவாகவில்லை. எதிர்காலம் எப்படியிருக்கும்? யார் சொல்ல இயலும்? சங்க காலத்தில் ஒரு குடிக்குள்ளேயேகூட மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஒருவரை ஒருவர் தழுவி அரவணைத்துச் செல்லும் வாழ்க்கை தமிழரிடத்தில் போதிய அளவு என்றும் இருந்தது இல்லை. அதனாலேயே பொது நூல் செய்த திருவள்ளுவர் " குடிசெயல்வகை' என்று ஓர் அதிகாரமும் அமைத்தார்."" குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்துமானம் கருதக் கெடும்'' - குறள்- 1028என்றார். மானம்- அவமானம் இவற்றைக் கருதாமல் எல்லாருடனும் உறவுகொண்டு அவரவர் இயல்பு கண்டு ஒத்துழைத்து வாழ்தலே ஒப்புரவு. ஒப்புரவு நெறிவழிதான் சமுதாயம் உருக்கொள்ள முடியும். இந்த ஒப்புரவு நெறியைத் தமிழ்மக்கள் போற்றியதன் விளைவால் அவர்களுடைய சமய நெறியில் எருதினைப் போற்றும் கொள்கை கால்கொண்டது. சிவ பரம்பொருளின் கொடி எருது. சிவ பரம்பொருளின் ஊர்தி எருது. திருக்கோயிலுக்கு வருவாரைக் கண்காணித்து அனுப்ப நுழைவாயிலில் எருது! ஏன்? தான் உழுததன் பயனாக விளைந்த செந்நெல்லை, செங்கரும்பின் சாற்றை, மனிதர் உண்டு மகிழக் கொடுத்துவிட்டு, கழிவுப் பொருளாகிய வைக்கோலைத் தின்று உயிர்வாழ்வது எருது. "" உழுத நோன்பகடு அழிதின் றாங்கு'' என்று நோன்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக எருதினையும் புறநானூறு போற்றுகிறது. எருது, வள்ளுவம் போற்றும் ஒப்புரவுக்கோர் எடுத்துக்காட்டு.

தமிழர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தனர். பிறருக்கென முயலுவோர் பலர் வாழ்ந்தனர். பொருளீட்டும் முயற்சியில் ஈடுபட்டு நோற்பார் பலர் ஆயினர்; உழுத நோன்பகடென வாழ்ந்தனர். இன்றைய தமிழ்மக்களுக்கு நோன்பு தேவை. தமிழர்தம் வாழ்வு வளர, அனைவரும் இந்த நோன்பினை ஏற்போம். ஒப்புரவு நெறி மேற்கொண்டு ஒழுகுவோம். இந்த உலகம் அழியாமல் பாதுகாப்போம். "உண்டாலம்ம இவ்வுலகம்'' என்று பாடிய கவிஞனின் நம்பிக்கையை உண்மையாக்குவோம். இமயச் சாரலில் வாழ்பவனுக்குக் குமரிக் கடலோரத்திலிருந்து மருந்து கொண்டோடியதாகப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகின்றார். பாவேந்தரின் உணர்ச்சி மிக்க கவிதைக்கு உருவம் கொடுப்போம். நாடுமுழுவதும் நஞ்செனப் பரவி வரும் தற்சார்பான வாழ்க்கை முறையை மாற்றுவோம். எங்கும் பிறர்நலம் சார்ந்த உழைப்பு , வேள்வி, நோன்பு, தவம் நடக்க வேண்டும். தமிழகம் புதிய வரலாறு படைக்க விரும்பினால் அதற்குரிய ஒரே வழி புறநானூறு கூறும் " தமக்கென முயலா நோன்தாள்'' போற்றும் கொள்கையை ஏற்றுக்கொள்ளுதலேயாம்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.