|
||||||||||||||||||
நல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர் |
||||||||||||||||||
குருவை மிஞ்சிய சீடன் யார்? “நீங்கள் பாலு மகேந்திராவுக்கு ரசிகரா? இரசிகரா? “ எனத் தலைப்பிட்ட முந்தைய கட்டுரையில். தமிழில் ல,ள,ர,ற போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அதனால் அவற்றை அ,இ,உ சேர்த்து எழுதவேண்டும். ரசிகர் என்பதை இரசிகர் என்றும், (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்றும் எழுத வேண்டும் எனப் பார்த்தோம். மேலும் ஆங்கில இலக்கணப்படி vowels எனும் A,E,I,O,U வில் தொடங்கும் சொல்லின் முன்னால் (an) சேர்ப்பது மரபு. அதுபோல தமிழிலும் உயிர் எழுத்துக்களில் (அ முதல் ஔ) தொடங்கும் சொல்லின் முன்னால் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க "ஒரு" என்றில்லாமல் "ஓர்" பயன்படுத்த வேண்டும் எனப் பார்த்தோம். சரி, இந்த மாதம் நீங்கள் “குருவை மிஞ்சிய சீடன் யார்? “ என பலத்த யோசனை செய்யத் தேவையில்லை. ஏனென்றால் அடிப்படையில் இந்தக் கேள்வியே பிழையானது. தனக்கு மிஞ்சிதான் தானதர்மம் எனும் சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது மிச்சமிருப்பதே மிஞ்சியது. இன்று பலர் மிஞ்சிய , விஞ்சிய எனும் இரண்டு சொற்களையும் சரியான பதத்தில் பயன்படுத்துவதில்லை. குருவை விடச் சிறந்த சீடன் யார் எனும் வினாவை “குருவை விஞ்சிய சீடன் யார்? “ எனக் கேட்பதே சரி. “விஞ்சி“ அதாவது மேலோங்கி நிற்பதை விஞ்சியது என்போம். அதுபோல “அவன் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை“ எனக் கொக்கரித்தான் என எழுதுவதெல்லாம் பிழையானது. மாறாக “...விஞ்சிய வல்லமை உள்ளவன்..“ என்பதே சரி. “கற்பில் விஞ்சிய பெருமை கண்ணகிக்கா மாதவிக்கா ? “ எனும் பட்டிமன்றத் தலைப்புகளைக் கேள்விப்பட்டிருப்பீர்களே. அதாவது மிஞ்சியது- மீதமிருப்பது. விஞ்சியது- மேலோங்கியது. அதனால், குருவை விஞ்சிய சீடன், தந்தையை விஞ்சிய தனயன் எனப் பிழையின்றி எழுதுவோம். பேசுவோம். |
||||||||||||||||||
by Swathi on 06 Nov 2019 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|