LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

மாறிவரும் தமிழகம் ...

சென்றமாதம் தாயகம் சென்றபோது, நான் கண்ட மாற்றங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு தாயகப் பயணத்தின்போதும் இருக்கும் நாட்களில் சாத்தியப்படாத பல வேலைகள் எதிர்பாராமல் வந்து சேரும். அவைகளைத் தாண்டி இம்முறை கடந்த பயணங்களில் விடுபட்ட நண்பர்களை சந்திப்பது, விடுபட்ட சாப்பாடுகளை ருசிப்பது என்று  ஒரு நீண்ட பட்டியலுடன் சென்று ஒருவாரம் சென்னையில் தங்கி சுற்றி வந்தேன்.

 

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள், தமிழகம் மேற்கத்தைய கலாச்சாரத்திற்கு அதீத மாற்றம் பெற்று  வருவதை காணமுடிந்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் அமெரிக்க KFC உணவகம் வெகு விரைவாக வளர்ந்து எந்த மூலையிலும் விளம்பரங்களை காண முடிகிறது. McDonalds  மற்றும் Pizza Hut  போன்றவைகள் இருந்தாலும் அவ்வளவாக விளம்பரம் இல்லை. சமீபத்தில் KFC Chicken இந்தியாவில் சைவ உணவு வகைகளை முதன்முறையாக அறிமுகம் செய்திருப்பதை அறிய முடிந்தது. சந்தையை பிடிப்பதற்கு அமெரிக்க வியாபாரிகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுமா  என்ன?

 

அதுமட்டுமல்ல, அடையார் ஆனந்தபவன் உணவகங்களில் கூட Glazed Donuts ,Burger, French Fries, Noodles போன்ற ஐட்டங்கள் நம் போண்டா, பஜ்ஜி வகையறாக்களை பின்தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறது.  சாப்பாடு மற்றும் மற்ற பொருட்களின் விலைகள் பல மடங்கு எகிறிக் கிடக்கிறது. ஒவ்வொரு உணவகங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அவ்வளவு ருசித்து சாப்பிடுகிறார்களா என்று வியந்தேன். அதற்குப் பிறகு நண்பர் சொன்னார்,  இங்கு எங்களுக்கு Social Pressure அதிகம், எனவே நாங்கள் பல நேரங்களில் Pizza, Burger சாப்பிடுவதும், பெரிய உணவகங்களில் சாப்பிடுவதும், பக்கத்துவீட்டில், உறவுகளிடத்தில், அலுவலத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டிய நெருக்கடி, கவுரவம் இருக்கிறது என விளக்கிக் கூறினார்.

 

Express Avenue Shopping Mall க்கு சென்று அனைத்து கடைகளிலும் நுழைந்து  வந்தேன். அது Fair Oaks Mall- ஐ விட எவ்விதத்திலும் குறைவில்லாமல் இருந்தது. சில பன்னாட்டு நிறுவனப் பொருட்களின் விலையை ஒப்பிட்டேன், அவை அனைத்தும் பெரும்பாலும் அப்படியே டாலர்-ஐ ரூபாயாக மாற்றி விலை வைத்திருந்தார்கள், பெட்ரோலையும் சேர்த்து.  இன்னும் சம்பளமும், வீட்டு வாடகையும் மட்டும்தான் அமெரிக்க அளவில் ஏறவில்லை. பெரும்பாலான Mall கடைகளில் வழக்கமாகக் கிடைக்கும் தரமான இந்திய காட்டன் உடைகள், டிசைன்கள் அனைத்தும் மாறி வால்மார்ட், Macys கிழிந்து  தொங்கும் ஆடைகளாக மாறிவிட்டது.

 

இன்று தமிழகத்தில் ஒருவரும் ஏழை கிடையாது. உடல் உழைத்து வேலை செய்யவேண்டும் என்று இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது மாதம் பத்தாயிரம் சம்பாதிக்க முடியும்.  யாராவது பணம் இல்லை, வறுமையில் இருக்கிறேன் என்று சொன்னால் தயவுசெய்து நம்பிவிடாதீர்கள்.  இன்று கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் 100 நாள் வேலைத்திட்டம் அமலில் இருக்கிறது, உடனே உங்கள் கணிப்பொறி மூளை என்ன வேலை என்று கேட்கும்.  அதை சொல்வது சிக்கலான சமாச்சாரம்.  யோசித்துக்கொண்டிருங்கள். 

 

சைக்கிள்,காலணி, சமையல் பொருட்கள், வேஸ்டி, சேலை, தொலைக்காட்சி, மடிக்கணினி, கிரைண்டர் மிக்சி, ஒரு ருபாய் அரிசி, பொங்கலுக்கு வெள்ளம், இலவசத் திருமணம்,தாலிக்கு தங்கம், இன்ஜினியரிங் சீட்  என்று வாழ்க்கைக்குத் தேவையான சகலவிதமானதும் அரசாங்கம் இலவசமாகக் கொடுத்துள்ளது. அதனால் உடல் உழைப்பிற்கு யாரும் இன்று தயாரில்லை.

 

அனைத்து பிரச்சினைகளுக்கும் மெஷின் கண்டுபிடிக்கும் கோயம்புத்தூர், பவர் இல்லாததற்கு இன்வெட்டரும், பெட்ரோல் விலையை சமாளிக்க பேட்டரியில் இயங்கும் டூ வீலரும்  கண்டுபிடித்து இருக்கிறார்கள்.  இன்வேட்டர் இருப்பதால், மின்சாரம் உள்ளதா இல்லையா என்று சொல்லமுடியாத அளவில் பேட்டரி வசதி உள்ளது.  பேட்டரி வண்டி(ebike) விலை 33000/- ரூபாய்க்கு பெட்ரோலில் இயங்கும் வண்டிக்கு இணையாக (டிவிஎஸ் ஸ்கூட்டி) இருக்கிறது.  நானும் ஒன்றை வாங்கி இருக்கும்வரை பயன்படுத்திப் பார்த்தேன். நம்ம ஊர் சாலையில் இழுக்குமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. பரவாயில்லை, இரண்டுபேரை வைத்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இழுக்கிறது. முப்பது மைல் வேகத்தில் பயணிக்க நல்ல கண்டுபிடிப்பு. எவ்வித வாகனப் பதிவும் இல்லை. GREEN என்று போர்டு போட்டு ஓட்டவேண்டியதுதான்.

 

 

கிராமம், திண்ணை, வேலைவெட்டி இல்லாமல் சுற்றும் பட்டதாரிகள், பண்ணையார் போன்ற எந்த கருப்பு வெள்ளை பட சுவடும் இல்லாமல் கிராமத்தில் வயதானவர்களும், நகரத்தில் இளைஞர்களும் என்று மாறிப் போயுள்ளது.  வட மாவட்டம், தென் மாவட்டம் என்று  மதுரை, ராமநாதபுரம், கும்பகோணம்,சிதம்பரம், மயிலாடுதுறை  என்று அதை சுற்றிய கிராமங்களை சுற்றியபோது இதை நேரடியாக உணர்ந்தேன். இளைஞர்கள் அனைவரும் எதாவது ஒரு தொழிலை செய்கிறார்கள், பணம் சேர்க்கவேண்டும் என்ற வேகம் இருக்கிறது. அனைவரிடமும் இருசக்கர வாகனம் இருக்கிறது, கிராமங்களில் பல வீடுகளில் மகிழுந்து இருக்கிறது, பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி இலவசமாக அரசாங்கம் கொடுத்துவிட்டதால், மிதிவண்டி அதன் முந்தைய முக்கியத்துவத்தை, டூ வீலருக்கு விட்டுக்கொண்டுத்து ஒரு படி கீழே வந்துள்ளது.  அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை செய்வதை காண முடிகிறது.  பெரிய கணிப்பொறி நிறுவனங்களில் வேலை செய்வோர் கட்டுமானத் தொழிலை உபத்தொழிலாகவும், தினப்படி சம்பளத்தில் உள்ளவர்கள் எதையோ ஒன்றை வாங்கி விற்கும் இடைத்தரகர்களாக இருப்பதையும் காணமுடிகிறது.  இன்று தள்ளு வண்டியில் சலவை செய்பவரிடம்தான் அதிக பணம் புரள்வதாக நண்பர் சொல்வதைக் கேட்டு வியந்தேன்.  ஆமாம், அவருக்குத்தான் எந்த இடம், வீடு விற்பனைக்கு வருகிறது என்ற விபரம் தெரியுமாம். அவர் பெரிய இடைத்தரகராகவும், அவருக்குக் உதவியாக பல துணை மற்றும் இணை இடைத்தரகர்களை  வைத்தும் தொழிலை சிறப்பாக செய்கிறார்கள் என்பதை அறிந்தேன். இன்று ஒவ்வொரு தொழிலின் பரிமாணமும் மாறியிருப்பதை காண முடிந்தது.

 

 

எனக்குத் தெரிந்த எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேளையில் இருக்கும் ஒரு பையன் ஒரு மகிழுந்தை வாங்கி CALL-TAXIல் விட்டு இன்னொரு டெம்போவை வாங்கி அதை ஒட்டுனரைப் போட்டு சென்னைக்கு வெளியில் இருந்து வாட்டர் கேன் எடுத்து வந்து அதில் நல்ல வருமானம் கிடைப்பதாகக் கூறினார்.  ஆச்சர்யமாக இருந்தது.  இன்று பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. வங்கிகளும், மத்திய மாநில அரசுகளும் சுயத்தொழிலை உக்குவிக்க பல கோடி நிதியை ஒதுக்கி தொழில் முனைவோர்களை உருவாக்க 25%-35% மானியத்தில் கடன் கொடுத்து பயிற்சி கொடுத்து ஊக்கம் அளிக்கிறார்கள்.

 

 

நிலம் குறித்து பேசும்போது ஏக்கர் என்ற கணக்கில் யாரும் அதிகம் பேசுவதில்லை.  பெரும்பாலும் அனைவரும் சதுர அடிக்கு (SQFT) மாறிவிட்டார்கள். விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தரிசு நிலங்களாக்கப்பட்டு, பிறகு வீட்டு மனைகளாக விற்பனைக்கு வருகிறது.  இன்னும் எவ்வளவு நாளைக்கு நம் விவசாயம் இருக்கும் என்று உறுதியாகக் கூரமுடியாது.  விவசாய தொடர்பில் உள்ளவர்கள் ஊருக்குப் போகும்போது தேவையான புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நம் எதிர்கால சந்ததிகளுக்கு நம் தமிழனும்  விவசாயம் செய்தான் என்ற வரலாறு சொல்வதற்கு வசதியாக இருக்கும். நான் பார்த்தவரையில் இந்த தலைமுறையில் விவசாயம் பெரும்பாலும் குறைந்துவிடும். நம் பெருமைக்குரிய ஆட்சியாளர்களால் விவசாயம் என்பது ஒரு சாபக்கேடான தொழிலாக மாற்றப்பட்டு அவர்களுக்கு எவ்வளவு தொந்தரவுகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து, அடுத்த தலைமுறை படித்து வேறு வேலைக்கு போகவில்லை என்றால் வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

 

என் கிராமத்திற்கு சென்றால் அங்கே பெரும்பாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று  புலம்பித் தவிக்கிறார்கள்.  வீட்டு வேலைக்கு ஆட்கள் இல்லை, விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை, இருபது தென்னை காய்க்கும் மரங்களை வைத்துக்கொண்டு என் அப்பா அருகில் உள்ள கடையில்  போய் தேங்காய் வாங்கி வந்தார்கள். ஏன் என்று கேட்டால், தேங்காய் பறித்து விற்றால், ஒரு நாளைக்கு மரம் ஏறுபவருக்கு சம்பளம் Rs.550/- , தேங்காய்/இளநீரின் விலை 3-5 ருபாய் வரை போகும், அதற்கும் ஆள் வரும்வரை தேங்காய் சட்டினி செய்வதை சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை. மரத்தில் இருப்பதை அப்படியே பறிக்காமல் விட்டுவிட்டு கடையில் வாங்குவதே எங்களுக்கு பழகிவிட்டது என்று சொன்னபிறகு எனக்கு நிலைமை புரிந்தது.  நான் இருந்தவரை ஆட்களுக்கு அலைந்து பார்த்துவிட்டு, என் பள்ளிப் பருவத்தில் கற்ற விதைகளைக் கொண்டு நானே எனக்கு தேவையான இளநீரை பறித்து நாட்களை ஓட்டினேன். சென்னையில் இருந்தபோது 250 மைல் தொலைவில் 2-3 ரூபாய்க்குக்கூட விலைபோகாத இளநீரை 35 ருபாய் கொடுத்துக் குடிக்கும்போது, நம் கொள்முதல் மற்றும் விற்பனையில் உள்ள இடைவெளி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.

 

 வெளிநாடுகளில் உள்ள நம் தமிழக பார்வை பல நேரங்களில் பத்து, இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கி இருக்கிறது.  காரணம், நாட்டை விட்டு வெளியில் வந்தபிறது நம் அனைவருக்குமே தமிழகம் இப்படி இல்லையே என்று  பல நேரங்களில் நினைக்கிறோம். பொது சேவை செய்யவேண்டும், நம்மால் முடிந்த உதவியை யாருக்காவது செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் எதாவது பொது சேவை அமைப்புடன் இணைந்து அல்லது தனியே ஏதாவது செய்துகொண்டிருக்கிறோம்.  "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பதற்கு ஏற்ப சிலர் தன்  வருமானத்தில் ஒரு சிறு பகுதியை பொது சேவைக்கு , சமுதாயப் பணிக்கு ஒதுக்குவதைப் பார்க்கிறோம். 

 

ஒன்றை நாம் அனைவரும் அறியவேண்டியது, ஐந்து , பத்து  ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில்  இருந்த பொருளாதார நிலை வேறு, வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தவர்களின் தேவைகள் வேறு, இன்று அவர்களின் தேவை , நிலைமைகள் வேறு. எனவே, வெளி நாடுகளில் உள்ள சேவை உள்ளங்கள், சேவை அமைப்புகள் தங்கள் பொன்னான நேரத்தை, சிந்தனையை, பொருட்களை நிலவரம் அறிந்து அவற்றில் கவனம் செலுத்தினால் அதன் பயன் பலரை சென்று அடையும்.  இன்று மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் தொழில்நுட்பம், அறிவு, சிஸ்டம் இல்லாதது, இருந்தாலும் சரியாக செயல்படாதது போன்றவையாகும்.  உதாரணத்திற்கு, வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்கள் உள்ள சேவை அமைப்புகள், இன்று தமிழகம் எதிர்நோக்கி உள்ள போலி மருத்துவர்கள், போலி மருந்துகள் போன்ற பிரச்சினைகளுக்கு உங்கள் அறிவை, அனுபவத்தை  பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்கலாம்.

 

கல்வித்துறையில் உள்ளவர்கள், கிராமப்புற குழந்தைகளின் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த உதவலாம். ஒரு பள்ளிக்கு ஒரு மேசை நாற்காலி வாங்கிப் போடுவதை விட,  அதுபோன்ற அடிப்படை  கட்டமைப்புகளை உருவாக்க நம் அரசாங்கத்தில் உள்ள திட்டங்களை, அதை அடையும் முறைகளை அறிந்து, ஓரிரு பள்ளிகளில் முயற்சி செய்து அது வெற்றியடைந்தால் அதை அனைத்து தேவையான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயற்சி கொடுக்காலாம். சில ஆண்டுகளுக்கு முன் நம் பகுதியை சேர்ந்த எய்ம்ஸ் இந்தியா  என்ற தொண்டு நிறுவனம் பஞ்சாயத்து அகாடமி என்ற ஒன்றை உருவாக்கி பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி அளித்தது. இப்படிப்பட்ட நீண்ட கால விளைவை கொடுக்கும் திட்டங்களை முயற்சிக்கலாம் .  மீனை கொடுப்பதை  விட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கும் திட்டங்களே அங்கு பெரும்பாலும் தேவைப்படுகிறது.  சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் மட்டும் 12000 க்கு மேற்பட்ட தொண்டு  நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களின் ஆண்டு செலவு பல நூறு கோடிகள் என்பதும் அவைகள் நீண்ட காலத் தேவைகளை  ஆராய்ந்து, திட்டமிட்டு பணி  செய்தால்  இன்னும் சிறப்பான நிலைக்கு தமிழகத்தை    கொண்டுசெல்ல முடியும் என்றும் ஒரு ஆய்வில் தெரிய வருகிறது.

 

வலைத்தமிழுக்காக,

இலக்கியன்.

by Swathi   on 16 Feb 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
30-Nov-2013 15:47:55 Somasundaram க said : Report Abuse
அருமை அருமை...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.