|
|||||
பிரிட்டிஷ் செஸ் வாகையர் போட்டித் தொடரில் 60 வயது கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய 10 வயது திருச்சி சிறுமி |
|||||
பிரிட்டிஷ் செஸ் வாகையர் போட்டியின் கடைசி சுற்று ஆட்டத்தில் 60 வயதுடைய கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸை, 10 வயது சிறுமி போதனா சிவானந்தன் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள ஹாரோவில் வசிக்கும் இளம் செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன். தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட போதனா, தற்போது உலக செஸ் அரங்கங்களில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் செஸ் வாகையர் போட்டித் தொடரில் 10 வயதே ஆன போதனா சிவானந்தன், 60 வயதுடைய கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதனா, பீட்டர் வெல்சை வீழ்த்தி மிக இளம் வயதில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய செஸ் வீராங்கனை எனும் தனித்துவச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கரிசா யிப் (10 வயது 11 மாதம் 20 நாட்கள்) கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்துடைய வீரரை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது போதனா (10 வயது, 5 மாதம், 3 நாள்கள்) கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதனையடுத்து போதனா சிவானந்தனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக, போதனா சிவானந்தன் 3 உலக இளையவர் வாகையர் பட்டங்களை வென்றுள்ளதுடன், கடந்தாண்டு இங்கிலாந்து மகளிர் செஸ் அணியிலும் வீராங்கனையாகச் சேர்க்கப்பட்டிருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் மிக இளம் வீராங்கனை எனும் பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
போதனாவின் தந்தை சிவானந்தன் வேலாயுதம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐடி மேலாளரான இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குக் குடியேறி அங்கேயே வசித்து வருகிறார். அங்குப் பிறந்த போதனா, தனது 5 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.
முதலில் காணொளி விளையாட்டுகள் மூலம் செஸ் விளையாடத் தொடங்கிய போதனா, அதன் பின் படிப்படியாக முன்னேறி தற்சமயம் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
| by hemavathi on 16 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|