|
|||||
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! |
|||||
ஒரு வருடம் அல்லது ஆண்டு என்பது, பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவரத் தேவையான காலமாகும். பூமி சற்று சாய்வாகவும் சுற்றுவதால் சூரியனின் கதிர்கள் பூமியின் மீது விழும் கோணம் மாறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாகச் சூரியன் பூமியின் கடக ரேகை, மகர ரேகை இடையே சென்று வருவது போன்ற நிகழ்வுகள் அமைகின்றன. பூமியின் மீது சூரியக் கதிர்கள் விழும் கோணத்தைப் பொறுத்து, இவ்வுலகில் தட்ப வெப்ப நிலை மாறிக் கொண்டே வரும். அதன் அடிப்படையில் பண்டைத் தமிழர்கள் காலங்களை 6 வகைப்படுத்தினர். இளவேனில் என்பது தை- மாசி மாதங்கள்! முதுவேனில், பங்குனி, சித்திரை மாதங்கள்! கார்காலம், வைகாசி, ஆனி மாதங்கள்! கூதிர் காலம் ஆடி, ஆவணி மாதங்கள்! முன் பனிக் காலம் புரட்டாசி, ஐப்பசி மாதங்கள்! பின் பனிக்காலம் கார்த்திகை, மார்கழி மாதங்கள்! தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ரேகையில் இருந்து வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும். அந்த நாளே தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. சூரியன் பூமத்திய ரேகைக்கு வரும் நாள் மார்ச் மாதம் 21 மற்றும் செப்டம்பர் மாதம் 21. மார்ச் 21-ஆம் நாள், பங்குனி மாதம் ஏழாம் நாளாக இருக்கும். செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள், புரட்டாசி மாதம் 4-5 நாளாக இருக்கும். எனவே சூரியன் பூமத்திய ரேகையில் பயணத்தைத் தொடங்கும் நாளை வருடத்தின் முதல் நாளாகவோ, மாதத்தின் முதல் நாளாகவோ கொள்ள இயலாது. இந்தியக் கலாச்சாரத்தின் படி ஒரு நாளின் தொடக்கம் பகல் பொழுதின் தொடக்கம் தான். ஐரோப்பியர்களுக்கு நாளின் தொடக்கம் நடு இரவு. இந்தியக் கலாச்சாரத்தின் படி, சூரியன் கிழக்கே உதித்து. மேலே சென்று மேற்கில் மறைவது வரையிலான பகற் பொழுது, நாளின் முதற் பகுதி. மேற்கே மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கே உதிக்கும் வரையிலான இராக்காலம், நாளின் இரண்டாம் பகுதி. ஒரு நாளின் தொடக்கமோ, மாதத்தின் தொடக்கமோ, வருடத்தின் தொடக்கமோ காலையில் தான் வரும். நாளின் நடுவிலோ, இரவின் நடுவிலோ இருக்க இயலாது. வருடத்தின் தொடக்கம், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப் படுகிறது. முற்காலத்தில் தமிழர்கள் விவசாயத்தின் பலனை அடைந்து வரும் நாட்களில் மன நிறைவுடன் இருப்பார்கள். அப்போது தான் மனதில் மகிழ்ச்சியுடன் விழாக் கொண்டாட இயலும். அதாவது அறுவடை முடிந்து விவசாய வேலைகள் குறைவாக இருக்கும் நாட்களே கொண்டாடத் தகுந்த நாட்கள். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்தபின் அதற்குக் காரணமான சூரியனுக்கு நன்றி பாராட்டும் வகையில் விழாவாகக் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். இவை அனைத்தும் தை மாதம் முதல் நாளுடன் ஒத்துப் போகும். தமிழகத்தின் பொங்கல் திருநாளும், வடவர்களின் மகர சங்கராந்தி நாளும் ஒன்றாகவே இருப்பதால், வருடத்தின் தொடக்கம் அந்த நாளாகவே இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதாவது தை மாத முதல் நாளையே வருடத்தின் முதல் நாளாக, புத்தாண்டாகக் கருதுவதற்குக் காரணங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. சித்திரை மாத முதல் நாளுக்கு இதுபோன்று இயற்கையுடன் தொடர்புடைய அல்லது சூரிய ஓட்டத்துடன் தொடர்புடைய எந்தக் காரணியும் காணப்படவில்லை. இக்கருத்திற்கு ஒப்பளிப்பது போல், 'மனு தர்ம சாஸ்திரத்தில்', முதல் அத்தியாயத்தில் 67-ம் சுலோகம் காணப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுதின் தொடக்கம் தை மாதம் முதல் நாள். இரவுப் பொழுதின் தொடக்கம் ஆடி மாதம் முதல் நாள். ஒரு நாளின் தொடக்கம், பகல் பொழுதின் தொடக்கமே. தேவர்களின் ஒரு நாளே, மனிதர்களின் ஒரு வருடம். எனவே 'தேவர்களின்' பகல் பொழுதின் தொடக்கம், தை மாத முதல் நாள் எனவும், மகர சங்கராந்தி என வட நாட்டிலும், 'பைசாகி' என்று பஞ்சாப் பகுதியிலும் குறிப்பிடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கிப் பயணிப்பதை சமஸ்கிருதத்தில் 'உத்திர அயனம்' அல்லது 'உத்தராயணம்' என்று சொல்லப்படுகிறது. வடக்கு நோக்கிப் பயணிக்கும் சூரியன், ஆடி மாதம் முதல் நாள் கடக ரேகையில் இருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும். அது தட்சிணாயணம். தெற்கு நோக்கிய பயணம் என அறியப்படுகிறது. வடக்கு நோக்கிய பயணம் 6 மாதங்கள். தெற்கு நோக்கிய பயணம் 6 மாதங்கள். ஆக ஒரு வருடத்தில் சூரியன், மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்குச் சென்று மீண்டும் மகர ரேகைக்கு வந்து விடுகிறது. இக்காலமே ஒரு வருடம் ஆகும். எனவே, வருடத்தின் தொடக்கம் ஒன்று சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம். அல்லது தெற்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம். தெற்கு நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்றால் ஆடி மாதம் முதல் நாளாக இருக்கும். வடக்கு நோக்கிய பயணத்தின் முதல் நாள் என்றால் தை மாதம் முதல் நாளாக இருக்கும். எனவே வருடத்தின் முதல் நாள் அல்லது புத்தாண்டு நன்னாள், ஒன்று ஆடி மாத முதல் நாளாகவோ அல்லது தை மாத முதல் நாளாகத் தான் இருக்க முடியும். ஆகவே, மனிதர்களின் ஆண்டின் தொடக்கமானது, தேவர்களின் காலைப் பொழுதின் தொடக்கமாகவே இருக்க வேண்டும். எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் புத்தாண்டுத் தொடக்கம் தை மாத முதல் நாள் தான் என்ற முடிவிற்கே வர இயலும். ஆகவே தை மாத முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். சித்திரை மாதத்து முதல் நாளுக்கும், சூரியனின் பயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சித்திரை மாதத்தின் முதல் நாளில், சூரியன் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையில் பயணித்துக் கொண்டு இருக்கும். அதாவது உத்தராயணக் காலத்தின் இடைப்பகுதியாக இருக்கும். இயற்கையுடனும், சூரியனின் ஓட்டத்துடனும் இணைத்துப் பார்க்கும் போது, புத்தாண்டு தைமாத முதல் நாள் தான் என்பது புலனாகும். இயற்கையுடன் இணைந்து பயணிக்கும் தமிழர்களின் புத்தாண்டு அதாவது தமிழ்ப் புத்தாண்டு தை மாத முதல் நாள் தான்!--------நீதியரசர் ஏ.கே. ராஜன். |
|||||
by Mani Bharathi on 28 Jun 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|