|
||||||||
தைப்பொங்கல்(சூரியப் பொங்கல்) |
||||||||
![]() தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் பொங்கல் பண்டிகைதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இயற்கையோடு இயைந்ததாகவும், அனைவராலும் கொண்டாடப்படும் சமூக விழாவாகத் திகழ்வதுமே இதன் தனிச்சிறப்பாகும்.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் விழா :
பொங்கல் விழா தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விழா போகிப் பண்டிகை ஆகும். இது இந்திரனுக் குரியது. இரண்டாம் நாள் விழா பொங்கல். இது உழவிற்கு உதவிய சூரியக் கடவுளுக்குக் கொண்டாடப்படுவதாகும். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். இது உழவிற்குப் பயன்பட்ட மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைவது. நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்று அழைப்பதாகும். இந்நாளில் மக்கள் விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் ஆகியனவற்றில் ஈடுபட்டு மகிழ்ச்சியில் திளைப்பர்.
தைப் பொங்கல்(சூரியப் பொங்கல்) :
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயனம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தக்ஷிணாயனம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை தைப்பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறோம். தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர். அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.
சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும். எனவேதான் அன்று இக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே இல்லை.
சூரியனை வணங்குவதன் சிறப்பு :
வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே என்று கூறுகிறது. சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதை வேதம், "ஓம் ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷ' என புகழ்கிறது. உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட் கடல் என்பதை, "ஆரோக்கியம் பாஸ் கராதிச்சேத்' என்றும், இதயநோயை நீக்குபவர் என்பதை, "ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் ச நாசய' என்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை, "யாபி ராதித்யஸ த்பதி ரஸ்மிபிஸ் தாபி' என்று கூறுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 22 அனுவாகங்களாக உள்ளன. "ரிக்வேதம் இவரைப் பற்றி "மஹாஸௌரம்' என்ற ஒரு துதியை வெளியிடுகிறது. சாமவேதம் சூரியனை "சுக்ரியம்' என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது.
மகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சய பாத்திரம் அளித்து, என்றும் வற்றாத உணவு அளித்ததும் இக்கதிரவனே ஆகும்.
மகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதல் 12 மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: மித்ரன், ரவி, சூரியன், பானு, ககன், பூஷ்ணன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.
விதவைக் கோலம் அடையமாட்டார்கள் :
பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் விதவைக் கோலத்தை அடையமாட்டார்கள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. விதவை ஸ்த்ரீகளை கஷ்டங்களினின்று காப்பவன் என்று சூரிய ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது.
சீர்காழிக்கருகில் உள்ள திருவெண்காட்டில் சிலப்பதிகாரம் புகழும் சூரியகுண்டம் உள்ளது. திருக்கண்டியூரில் மாசி மாதமும், திருவேதிக்குடி, திருநாவலூரில் பங்குனி மாதமும், சித்திரை மாதம் குடந்தைக் காரோணம் என்று புகழப் படும் நாகேஸ்வரன் கோவிலிலும் சூரிய பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று கதிரவன் இத்தலங்களில் சிவபூஜை செய்வதாக ஐதீகம். தை மாதம் முதல் தேதியில் திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டுத் தீர்த்தம் கொடுக்கிறார். மன்னார்குடி என்ற வைணவத்தலத்தில் "ஸங்க்ரமண உத்ஸவம்' சங்கராந்தி யன்று முதல் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்த நன்னாள் இதுவேயாகும். சபரிமலை யில் ஐயப்பனுக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத்தன்றேயாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்தராயன புண்ணிய காலத்தில் மரிக்கும் ஜீவன்கள் நல்லகதி அடை வதாகக் கூறப்படுகிறது. உத்தராய னத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை, "அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயனம்' என்று கூறுகிறது.
இத்தகைய பவித்ரமான உத்தராயன புண்ணிய காலம் தொடங்கும் தை மாத முதல் நாளாம் பொங்கல் திருநாளில்- மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக. |
||||||||
by Swathi on 12 Jan 2014 0 Comments | ||||||||
Tags: தை பொங்கல் தைப்பொங்கல் தை திருநாள் சூரிய பொங்கல் பொங்கல் சூரியப்பொங்கல் தை முதல் நாள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|