LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழரின் அகவாழ்வில் வெற்றிலை, பாக்கு! - வே.சிதம்பரம்

பழங்காலத்திலிருந்து வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்துவருகிறது. தெய்வ வழிபாட்டிலும், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வெற்றிலை, பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக - இன்ப உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்த வரலாறு அறியத்தக்க ஒன்றாகும்.

 "வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்' என்று வரலாற்றுப் பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார் (ஏண்ள்ற்ர்ழ்ஹ் ர்ச் ற்ட்ங் பஹம்ண்ப்ள்- ல்ஞ்.101). "வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்' என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்குப் போடுவது பற்றிய குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன.

 பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி வெற்றிலை சுண்ணாம்பு விற்பவர்கள் மதுரை நகரில் இருந்தனர் என்பதை, ""நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்'' (401) என்று குறிப்பிடுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் ""வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பை உடையாரும்'' என்று உரை விளக்கம் தந்துள்ளார்.
 பண்டைத் தமிழகத்தில் அரசருடன் இருந்த ஒரு குழு "எண்பேராயம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் வெற்றிலை, பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். "எண்பேராயம்' என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் ""சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்'' (இந்திர விழவூரெடுத்த காதை-157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில், "பாக்கிலை' வைத்திருப்போரும் ஒருவர். இவரை "அடைப்பைக்காரன்' என்று குறிப்பிடுவர். இதிலிருந்து வெற்றிலை, பாக்கு தமிழர் வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு பெற்றிருந்தது என்பதை அறிகிறோம்.

 வெற்றிலை, பாக்குப் போடுவது ஆண்-பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாக மிக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டபின் கணவனுக்கு, மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் பழக்கம் தமிழர்களிடையே பழங்காலத்திலிருந்தே இருந்துள்ளது.
 கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்து புறஞ்சேரியில் மாதரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த இரவில் உணவு உண்டபின் கோவலனுக்கு, கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கின்ற கடைசிநாள் அதுதான். இதை இளங்கோவடிகள்,

 ""உண்டு இனி திருந்த உயர்பே ராளற்
 அம்மென் திரைலோடு அடைக்காயீத்த
 மையீரோதியை வருகெனப் பொருந்தி''
 (கொலைக்களக்காதை-54-56)

 என்று குறிப்பிடுகிறார். "திரையல்' என்பது வெற்றிலை, "அடைக்காய்' என்பது பாக்கு. அவர்கள் மகிழ்வாக இருந்தனர் என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

 மணிமேகலையில், கச்சிமா நகர்புக்க காதையில் (241-43) உணவளித்தபின் வெற்றிலை, பாக்குக் கொடுக்கப்பட்டது என்ற செய்தி பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியில் (6-7), ""உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்'' என்கிறார் நம்மாழ்வார்.
 சீவகசிந்தாமணியில், காவியத் தலைவன் சீவகன் விமலையாரிடம் புணர்ச்சி வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்காக அவளைத் தொட்டான் என்று கூறப்படுகிறது. ""பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய'' (பா-1987). இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ""வெற்றிலை மடித்துக் கொடுத்தற்கென்றது இடக்கர்'' என்று கூறுகிறார். நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தி அநாகரிமாக இருக்கும் சமயங்களில் அதை மறைமுகமாகச் சொல்லும் முறையை தமிழ் இலக்கண நூல்கள் "இடக்கர்' எனக்கூறும்.

 கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அசோக வனத்தில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் சீதையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யும் கம்பர், "ராமனுக்கு யார் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள்' என்று தனது இயலாமையை எண்ணி, சீதை மனம் நொந்துபோவதாகக் கூறுகிறார்.
 ""அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்'' (காட்சிப்படலம்-15)
 ராமனைச் சேர்ந்து இன்பம் துய்க்கமுடியாத தனது நிலைமையை இச்செய்தி மறைமுகமாகவும் கூறுவதாக அமைகிறது. காவியப் புலவனின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சரியான முறையில் காவியத்திலே பயன்படுத்தியுள்ளார் கம்பர்.

 கலிங்கத்துப்பரணி போர்க்களக் காட்சியில் மிகுதியாக உண்டதால் உணவு செரிமானத்திற்காகப் பேய்கள் தாம்பூலம் போட்டுக்கொண்டன என்கிறார் செயங்கொண்டார். ""பெருக்கத் தின்றீர், தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்...(585)
 தமிழர் பண்பாட்டில் அகத்துறையில் வெற்றிலை, பாக்குப் பெற்றுள்ள இடம் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது...

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.