LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழ் மீது தீராத பற்று கொண்ட பேராசிரியர் தமிழண்ணல்.

தோற்றம்:12.08.1928    மறைவு :29.12.2015

மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள். பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார்.

பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர்.

தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர்.

பிறப்பு:

தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.

கல்வி:

மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆசிரியர் பணி:

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். இங்கு, தம் கல்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றியவர். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.

1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்தவர். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.

குடும்பம்:

தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழண்ணல் பெற்ற சிறப்புகள்:

1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டவர். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.

இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர். இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.

தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழண்ணல் நூல்கள்:

தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :

  • வாழ்வரசி புதினம்
  • நச்சுவளையம் புதினம்
  • தாலாட்டு
  • காதல் வாழ்வு
  • பிறைதொழும் பெண்கள்
  • சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
  • சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
  • தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
  • புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
  • தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
  • ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
  • ஒப்பிலக்கிய அறிமுகம்
  • குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்
  • தொல்காப்பியம் உரை
  • நன்னூல் உரை
  • அகப்பொருள் விளக்கம் உரை
  • புறப்பொருள் வெண்பாமாலை உரை
  • யாப்பருங்கலக் காரிகை உரை
  • தண்டியலங்காரம் உரை
  • சொல் புதிது சுவை புதிது
  • தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
  • தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
  • பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
  • பிழை திருத்தும் மனப்பழக்கம்
  • உரை விளக்கு
  • தமிழ் உயிருள்ள மொழி
  • தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
  • தமிழ்த்தவம்
  • உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • திருக்குறள் உரை
  • இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன.

மறைவு 

தமிழண்ணல் மதுரை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2015 டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

மேலும் விவரங்களுக்கு : https://thamizhannal.org/

by Swathi   on 10 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.