|
||||||||
தமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன? |
||||||||
தமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன? இச்சொற்களின் வேர்ச்சொற்கள் எவை? அவ்வேர்வழிப் பிறக்கும் பொருள் என்ன? இவ்வேழு சொற்களின் வேர்வழிப்பெறப்படும் பொருண்மையை முதல் முதல் இக்கட்டுரை விளக்கிக் கூறுவதால், இயல் இசைத் துறை வல்லுநர்கள் இவ்விளக்கங்களை மேலும் ஆய்ந்து ஆய்ந்து, தமிழ்ச்சொற் பொருண்மையாகிய செல்வ வளத்தை வளர்க்கப் பெரிதும் வேண்டுகிறேன். இசைச் சுவரங்களைக் கோவை அல்லது நரம்பு என்னும் தமிழ்ச்சொற்களால் என்றும் குறித்துப் பேசினால் மாபெரும் அறிஞர் மறைமலையடிகளின் மன்னுயிர் (ஆன்மா) மகிழும். ஏழு நரம்பு இசைகளையும் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் குறியீட்டு எழுத்துக்களால் இன்று குறித்து வருகின்றனர். சட்சமம்(ச), ரிடபம் (ரி), காந்தாரம் (க), மத்திமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிடாதம் (நி) என்பன. இவ்வாறு ஏழு நரம்புகளும் பெயர் பெற்றமைக்குக் காரணங்கள் கூறப்பட்டுள்ளன:- 1. சட்சமம் என்னும் சொல், ஆறு நரம்புகளினின்று பிறந்தது எனப் பொருள் படுவது; 2. ரிடபம் எனும் சொல், காளை மாட்டின் கத்துதல் ஒலி போனறது எனப் பொருள் படுவது ; 3. காந்தாரம் எனும் சொல், இன்ப சுகந்தருவது எனப்பொருள்படுவது; 4. மத்திமம் எனும் சொல், மத்திய தானமாய் விளங்குவது எனப் பொருள்படுவது; 5. பஞ்சமம் என்பது ஐந்தாம் தானமாய் நிலவுவது எனப் பொருள்படுவது; 6. தைவதம் என்பது தெய்வத் தொடர்புடையது எனப் பொருள்படுவது. 7. நிடாதம் என்பது மற்றைய ஆறு நரம்புகளும் படிப்படியாய் உயர்ந்து வந்து தன்னிடம் சேரப்பெற்றது எனப்பொருள் படுவது. இவை ஏழும் வடமொழிப் பெயர்கள். இவற்றிற்குச் சொற்பொருள் விளக்கம் பன்னூறு ஆண்டுகளாய்க் கூறப்பட்டு வருவது போன்று, ஏழிசை நரம்புத் தமிழ்ப் பெயர்களுக்கும் சொற் பொருள் அறிந்து கூறுவது இன்றியமையாதது; இன்பம் பயப்பயது; இசையியலை வளர்ப்பது. எனவே, கற்கும் அன்பர்கள் தொடர்ந்து ஊன்றிக் கற்று இந்த ஆய்வில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன விள்ளுமாறு வேண்டுகிறேன். குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை ஏழும் யாழின் இசைகெழு நரம்பே இப்பாடலால் - சுவரம் என்பது நரம்பு எனவும் , அவை ஏழு எனவும் அவற்றின் நிரல் ஈத எனவும் பெறப்படும். 1. குரல்: இச்சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி தந்துள்ள பொருள்: ஒன்றொடொனறு சேர்ந்துள்ள சேர்க்கை; எ‡டு: ‘குரல் அமை ஒரு காழ்’ (கலித்-54:7) இனிக் குரல் எனும் முதல் நரம்பானது கைக்கிளையுடன் (க) சேர்ந்துள்ள பற்றுமையானது நட்பாம்; குரல் நரம்பு இளியோடு (ப) சேர்ந்துள்ள பற்றுமை இணையாம் பற்றுமை ; குரல் நரம்பு மென்கைக்கிளையோடு வல்லுழையோடு சேர்ந்துள்ள பற்றுமை முறையே மூன்றாம், ஆறாம் தானத்தில் நிற்கச்செய்யும் பற்றுமை. எனவே குரல், நரம்பு - நட்பாய், கிளையாய், இணையாய்ப, பிற நரம்புகளை 4,5,7, வீட்டு நிலைகளில் நிற்கச் செய்து பற்றுமை தருவது ; மேலும் 1,2,3,6 முதலிய தானங்களிலும் பிற நரம்புகளை நிற்கச் செய்து பற்றுமை தருவது. இதனைப் புறநானூற்று வரி தெளிவுறுத்துவது அறிந்து இன்புறத் தக்கது :- ‘குரல் புணர்சீர்க் கொளைவல் பாண்மகன் ’(புறநா.11) . இப்பாடல் வரிக்குப் பழம் உரையாசிரியர் தந்துள்ள பொருள்- ‘முதல் நிலையாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவுடைய பாட்டில் வல்ல பாணன்’ - என்பது. இவ்வுரையால் குரலே முதல்நிலை என்றும் குரலே அனைத்து நரம்புகட்கும் பற்றுமையாகி நிற்பது என்றும் அறியலாம். எனவே ‘குரல்’ என்னும் சொல் - சேர்க்கை அல்லது பற்றுமை என்னும் பொருண்மையுடையது. குரல் எனும் முதல்நிலை நரம்பு பிற நரம்புகட்குப் பற்றுமைதருவதால் குரல் எனப் பெயர் பெற்றது. (பிற சொற்களின் பொருள் இங்கு ஒப்பு நோக்கற்குரியன:- குரவை = கோத்தல்; கைகோத்து ஆடும் ஆடல்; கையுடன்கை பற்றுமை பெற்று ஆடும் ஆடல். குரால் -பசுவுடன் பற்றுமை கொண்டு திரியும் - கன்று. குரடு-கம்பிகள் ஒன்றோடொன்று பற்றுமை கொண்ட தச்சனின் பற்றுக் குரடு. குரவன் - பற்றுமைக் குரியவன்) 2. துத்தம்: (துத்தம் = ரிடபம்) ‘துத்தம்’ குரல் இசையைக் காட்டிலும் சற்று உயர்ந்த ஒலியடையது; குரலுக்கு அடுத்துப் பிறப்பது. துத்தம் = சற்று உயர்ந்த நரம்பிசை. ‘துத்தம்’ எனும் சொல்லின் வேர்ச்சொல் எது? அவ்வேர் வழியாக எவ்வாறு துத்தம் பிறந்நது? அதன் பொருண்மை என்ன? உந்துதல் என்பதன் பொருள் ஏறுதல், உயருதல், எழும்புதல்;உத்துதல் - உயருமாறு செய்தல், உந்து த உத்து; ‘உ’ எனும் சுட்டுச் சொல்லே -மேனோக்கி எழுதல் எனும் பொருளது. உந்து த உத்து; உத்து + அம் = உத்தம் என ஆகும். ‘உத்தம்’ எனும் சொல் ‘த்’ எனும் முன் அடைஒலி பெறும்; த் + உத்தம்=துத்தம் (‘த்’ எனும் ஒலி முன்னடையாக வந்துள்ள பிற ஒப்புச் சொற்கள் காண்க;- உவளுதல் ; உந்தி ததுந்தி; உருத்தித துருத்தி; உதைத்தல் ததுதைத்தல். இவைபோல் பல ;) துதைத துத்து; (ஒப்புச் சொல் விதை தவித்து) துத்து+அம் = துத்தம். எனவே துத்தம் எனும்நரம்பிசை, குரலுக்கு அடுத்து, ஏறு நிரல் வரிசையில் (ஆரோ கணத்தில்) இரண்டாம் நிலையில் நிற்பது; சற்று உயர்ந்த ஒலிப்பது. (ஒப்பு நோக்குதற்குப் பிற சொற்கள். துதி = உயர்த்திச் சொல், புகழ்; துதிக்கை=உயர்த்தும் கை. துத்தம் = படிப்படியாய் உயர்ந்து அமையும் ஒரு வகைப் படிகம்.) 3. கைக்கிளை: (கைக்கிளை = காந்தார சுவரம்) குரலுடன், இளி மிகவும் ஒன்றித்து ஒலிக்கும். குரல், இளி உறவை ‘இணையாம் உறவு என்றும்’, ‘குரலிளிக் கிழமை’ என்றும் (ச-ப உறவு ) ‘பட்டடையாகி ஒலிக்கும் உறவு’ என்றும் சொல்லுவர்.‘ இணை, கிளை, நட்பு’ எனும் ‘இசை புணர் குறி நிலைகளுள்’ (சிலப். 8:33:4) குரலுடன் தலையாய் ஒன்றுவது இளியே. குரலுடன் உழை கொள்ளும் ஒன்றிப்பாகிய உறவைக் -‘கிளை’ என்றனர். மு. ஆபிரகாம் பண்டிதர் குரலுடன் இளிகொள்ளும் உறவைக் கணவன் மனைவி கொள்ளும் உறவு போன்றது என்பர். குரலுடன் உழை கொள்ளும் உறவைச் சொந்தக்காரர் கொள்ளும் உறவு போன்றது என்பர். குரலுடன் கைக்கிளை கொள்ளும் உறவு நண்பருடன் கொள்ளும் உறவு போன்றது என்பர். எனவே அது நட்பு எனப்பட்டது. இவ்வாறு உறவு நிலைகள் பொருந்தி நரம்புகள் தம்முள் இசைப்பதை-ஒத்திசைத்தல் ((Harmony)) என்பர். ‘இசை புணர் குறி நிலை’ என்றார் இளங்கோ அடிகளார். இணைகிளை பகைநட்பு என்றிந் நான்கின் நட்பாம் நரம்பு=கைக்கிளை ; இது கிளை போன்று, மிக்க உ றவு கொள்ளாமல், சற்று குறைந்து உறவு கொள்வதால் சிறுமை உறவின் நரம்பு எனும் பொருள்படக் கைக்கிளை என்று பெரிட்டனர். கை என்பது சிறுமை ; கிளை என்பத உறவு. கைக்கிளை ‡சிறுமை உறவின் நரம்பு. அகத்திணை இலக்கணம் இங்கு நினைத்தற்குரியது; தலைவன் மட்டும் ஒருத்தியைக் காதலிக்கின்றான்; அவளோ அவனைக் காதலிக்க வில்லை. இந்நிலையைக் கைக்கிளை எனச் சுட்டுவர். (ச ‡ ம ஒத்திசைப்பதை மத்திம சுருதி என்பர்; ச - ப ஒத்திசைப்பதைப் பஞ்சம சுருதி என்பர். ச - ப ஒத்திசைக்க வைத்துச் சுருதி வைப்பது கிடையாது. ஆபிரகாம் பண்டிதர் கூறுவது இங்குக் கருதற்குரியது. குரலொடு கைக்கிளை ஒருவாறு ஒத்திசைப்பினும் இதனைக் கேள்விக் கூட்டொலியாகக் (சுருதிக் கூட்டமாக) கொள்வது கிடையாது. எனவே கைக்கிளையானது குரல் நரம்பிசையுடன் ஒருவாறு சிறிது ஒத்திசைக்கும் காரணத்தால் இது கைக்கிளை எனப்பெயர் பெற்றது எனக் கருணாமிர்த சாகரம் விளக்குவது மிகவும் ஏற்றற்குரியது. பெரிதும் பாராட்டற்குரியது. 4. உழை: (உழை=மத்திமம்) உழை=பக்கம்; உழையர்=பக்கத்திலிப்பவர், சுற்றம்போல் (கிளை போல்) பக்கத்திருப்பவர், கிளை போல் குரலுடன் பொருந்தியிசைக்கும் நரம்பு ‡ உழை எனப் பெயர் பெற்றது. குரல் ‡உழை உறவு என்பது பக்கத்தில் இருக்கும் சுற்றம் போன்ற உறவுத் தனமை. உழைநரம்பு என்பது உறவினர் அல்லது சுற்றத்தார் அல்லது சொந்தக்காரர் போன்ற உறவுடைய நரம்பு எனப் பொருள்படுவது. 5. இளி: குரலுடன் இளி - மிகமிகப் பொருந்தி இசைப்பது. இளிதல் என்பதற்கு அகராதிப்பொருள் - இணங்குதல், இணைதல். குரலுடன் இணைதல் என்பது ஒன்றுதல். எனவே இணையும் நரம்பே இளி நரம்பு எனப்பட்டது. நின்ற நரம்பிற்கு ஏழாம் நரம்பு - இணை நரம்பு. ஏழாம் நரம்பிணை -என்பது கல்லாட மேற்கோட் செய்யுள் வரி. கு து து கை கை உ உ இ 0 1 2 3 4 5 6 7 இவ்வாறு முதல் நரம்பு நிற்க அதை விடுத்து அதற்கு மேல் எண்ணிச் சென்றடையும் ஏழாம் நரம்பு - இணை நரம்பு எனக் கண்டுபிடிக்கலாம். இசை ஆய்ந்தோர் சிலர் நம் நூலுள் பகை நரம்பையே இணை எனத் தவறாகக் கொண்டனர். எனவே அதை விடுக்க. இனி, இணை நரம்பை விளக்கும் பகுதிகள்: 1) ஆராய்தல் என்பது அமைவரக் கிளப்பின் குரன் மு தலாக இணைவழி கேட்டும் - (சிலப் 7.5 அரும் ‡ மேற்) 2) இணைவழி யாராய்ந்து இணைகொள முடிப்பது பண்ணல் - (சிலப் 7:5. அரும் . மேற்) 3) ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின் 4) பட்டடை என்றது நரம்புகளில் இளிக்குப் பெயர் ‡ (சிலப் 3:63) 5) இணை நரம்புடையன அணையக் கொண்டு ‡ (சிலப் 3:90) 6) குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் 7) ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் - (சிலப் 3:70-71 அரும்... வுரை) என்னும் சிலப்பதிகாரப் பகுதிகளின் விளக்கங்களினின்றும் ‡ இணைநரம்பு என்பது குரலிளி உறவில் நிற்கும் நரம்பை எனத் தெளிவாய் அறியலாம். (இளிதல்=இணைதல்) இளி என்னும் நரம்பை அகப்படும் நரம்பு என்றும் பட்டடை நரம்பு என்றும் சிலப்பதிகாரம் கூறும்: பட்டு +அடைதல் = பட்டடைதல். பட்டு அடைதல் என்பது முற்றிலும் ஒன்றுபட்டுச் சேர்ந்து ஒன்றித்துக் கொள்ளுதல் இளிக்கிரமம் செய்தல் அல்லது பட்டடை பண்ணுதல் என்னும் முறையும் -இளி நரம்புப் பெயர்ப்பொருளை விளக்குவதாகும். 6.விளரி: (விளரி -‘த’) இளி (ப) எனும் நரம்பினுக்கு அடுத்து ஒட்டிச் சற்று உயர்ந்து மெல்லியதாக ஒலிப்பத விளரி. விளரி= மென்மை ஒலியுடையது ; விளர்=மென்மை. மிக உருக்கமான, இரங்கற்குரிய மென்மையான நெய்தற் பண்ணுக்கு ‘விளரிப்பண்’ எனப் பெயருடைமையால், விளரி நரம்பு என்னும் சொல்லை விளங்கிக் கொள்ளலாகும். 7. தாரம் : (தாரம் - ‘நி’) மற்றைய நரம்புகளிலும் உச்சமான எடுத்தல் ஓசையை உடையது தாரம். தாரம் -எடுத்த ஓசை எனச் சொல்லும் கழகக் கையகராதி. மேலும், உச்ச இசையின் பெயரே தாரம் என வீரமாமுனிவரின் சதுரகராதி பண்டைய நூற்பாவால் விளக்குகிறது. மேலும்தாரத்திற்கு மற்றோர் பெயர் வல்லிசை. தாரமும் உச்சமும் வல்லிசை யாகும் என்பது பிங்கலம் (கழக வெளியீடு 1421 நூற்பா). தார் எனும் வேர்ச் சொல்லுக்கு முன்னோங்கி நீண்டு உயர்ந்திருப்பத என்பது பொருண்மை. (நீண்டு ஓங்கியது என்னும் பொருண்மையடியகத் தார் மாலை, தார்ப்படை, தார்க்கோல் எனும் தொடர்கள் அமைந்தன. தாரு = நீண்டோங்கிய மரம். தார் + அம் =தாரம். ஓங்கி யுயர்ந்த எடுத்தல் ஓசையுடைமையாலே தாரம் என நரம்பு பெயர் பெற்றது). இனி இது காறும் முதன் முதலாக விளக்கிக கூறியவற்றைத் தொகுத்துச் சுருக்கி முடிப்பாம்: 1) குரல் அடிப்படைப் பற்றாக அமைந்த நரம்பிசை. 2) துத்தம் -குரலினின்றும் சற்றுயர்ந்த ரம்பிசை 3) கைக்கிளை குரலுடன் சற்று ஒத்திசைப்பதாகிய நரம்பிசை, சிற்றுறவு நரம்பிசை 4) உழை என்பது இளியினும் சற்றுத் தாழ்ந்து குரலுடன் ஒத்திசைப்பது. சுற்றம் போன்று உறவுடையது. 5) இளி என்பது குரலுடன் மிகமிக இணைந்து ஒத்திசைப்பது. 6) விளரி என்பது மென்மையான ஒலியுடையது. 7) தாரம் என்பது உச்சமான எடுத்த ஒலியுடையது. இந்த ஏழிசை நரம்புகளும் ஒலி உறவுத் தன்மையின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளன. நரம்புகட்குப் பெயரிடும் முறை ஒவ்வொரு மொழியிலும் உண்டு. கிரேக்கர் டோ,ரே,மீ... என்று பெயரிட்ட முறையிலும், ச,ரி,க,ம ... என்று பெயரிட்ட முறையிலும் தமிழர் பெயரிட்ட முறை மிக்க தருக்க நெறி சார்ந்தது; தொடக்க முதல் இறுதி வரை ஒரே முறை பின்பற்றப்பட்டுள்ளது. இசை புணர் குறி நிலையை மிகவும் பின்பற்றிப் பெயரிட்டமை பெரிதும் நுண்ணறிவு உடைமையைக் காட்டுவது. (வீ.பா.கா.சுந்தரம் அவர்கள் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிருந்து..) |
||||||||
by Swathi on 06 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|