LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

தண்டோரா

                                                    தண்டோரா

 ராயவரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பிரமாத அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னைப் பட்டணத்திலிருந்து சாட்ஷாத் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரையே வந்திருந்தார். இன்னும் ஜில்லா சூபரின்டென்டெண்டு துரையும், இரண்டு டிபுடி சூபரின்டென்டெண்டுகளும், அரைடஜன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸப்-இன்ஸ்பெக்டர்களும், முப்பது கான்ஸ்டபிள்களும் ஆஜராகியிருந்தார்கள்.

     ஜில்லா சூபரின்டென்டெண்டு துரை மேஜையிலே ஓங்கிக் குத்திவிட்டுச் சொல்கிறார்: "நம்முடைய ஜில்லா போலீஸ் படைக்கு இதைவிட அவமானம் வேண்டியதில்லை. நம்முடைய மானம் போயே போய் விட்டது. சென்னையிலிருந்து டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரை வந்திருப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இன்று 20ஆம் தேதி. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் திருடனை நாம் பிடித்தேயாக வேண்டும். தெரிகின்றதா?..."

     டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சொல்கிறார்: "திருடன் எடுத்து வந்த மோட்டார் கொள்ளிடம் பாலத்துக்குப் பக்கத்தில் மடுவில் கிடந்து அகப்பட்டு விட்டது. ஆகையால் அவன் இந்தக் கொள்ளிடக்கரையில் தான் எங்கேயோ ஒளிந்திருக்கிறான். கொள்ளிடக்கரை காடுகளைச் சல்லடைபோட்டு சலித்து விடுங்கள். அவனுக்கு யாராவது உதவி செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டும். யார் மேல் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே அரெஸ்ட் செய்து விடுங்கள். கொஞ்சங்கூடத் தயங்க வேண்டாம். தெரிகின்றதா?"

     பிறகு, டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரை, ஜில்லா சூபரின்டென்டெண்டைப் பார்த்து, "இந்தத் திருடனை உள்ளூரில் துப்பு வைக்காமல் கண்டுபிடிப்பது கஷ்டம். 'துப்புச் சொல்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்' என்று 'டாம் டாம்' போடச் சொல்லுங்கள்" என்றார்.

 

*****

     முத்தையன் கொள்ளிடக்கரைக்கு வந்து பத்து நாளைக்கு மேல் ஆகிவிட்டது. அன்று காலையில் கல்யாணி சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலே குதூகலம் குடிகொண்டிருந்தது. சில சமயம் தனக்குத்தானே புன்னகை புரிந்து கொள்வாள். சில சமயம் தனக்குள்ளேயும் சில சமயம் வாய்விட்டும் பாட்டுப் பாடுவாள். முத்தையனுக்காக நாம் சமையல் செய்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு அத்தகைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் அளித்தது.

     சமையல் செய்த பிறகு கொஞ்ச சாப்பாட்டைப் பக்குவமாய்ப் பிசைந்து இலையில் கட்டிக் குடத்துக்குள் வைத்துக் கொண்டு, அத்தையிடம் குளிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கல்யாணி ஆற்றுக்குக் கிளம்புவது வழக்கம். அத்தைக்குக் கண் பார்வை கொஞ்சம் மங்கல். அது இப்போது கல்யாணிக்கு ரொம்பவும் சௌகரியமாயிருந்தது.

     சில சமயம் ஆற்றங்கரைக்குக் கிளம்பும்போது கல்யாணிக்குச் சங்கடம் ஏற்பட்டுவிடும். அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது வந்து, "நாங்களும் உன்னுடன் குளிக்க வருகிறோம்" என்பார்கள். அப்போது திடீரென்று அவள் தன் மனத்தை மாற்றிக் கொண்டு, "இல்லை, அம்மா! நான் இன்று குளிக்க வரவில்லை" என்று சொல்லிவிடுவாள். அப்புறம் மத்தியானத்துக்கு மேல் தனியாகப் போவாள். அப்படிக் கிளம்புவது தடைபட்டபோதெல்லாம், "ஐயோ! முத்தையன் காத்திருப்பானே! பசியோடிருப்பானே?" என்று அவளுடைய உள்ளம் துடிதுடித்துக் கொண்டிருக்கும்.

     அன்றைய தினம் அவள் சாப்பாட்டைக் குடத்துக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது வாசலில் தண்டோ ரா போடும் சத்தம் கேட்டது. கிராம வெட்டியான் பின்வருமாறு கூவினான்: "கொள்ளைக்கார முத்தையா பிள்ளையைப் பிடிக்கத் துப்புச் சொல்றவங்களுக்கு சர்க்காரிலே ஆயிரம் ரூபா சம்மானம் அளிப்பாங்க. (டம் டம் டம் டம்) மேற்படி முத்தையா பிள்ளைக்குச் சாப்பாடு போடறது, தங்க இடங்கொடுக்கிறது, பேசறது, பழகுகிறது எல்லாம் பெரிய குத்தங்களாகும். அப்படிச் செய்றவங்களைச் சர்க்காரிலே கடுமையா தண்டிச்சுப்புடுவாங்க. சாக்கிரதை, சாக்கிரதை, சாக்கிரதை!" (டம் டம் டம் டம்)

 

*****

     கல்யாணி வழக்கம் போல் அன்றும் இடுப்பில் குடத்துடன் கொள்ளிடத்திற்குக் குளிக்கக் கிளம்பினாள். போகும்போது அவளுடைய உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றி அலைந்தன. விர்ரென்று வீசிய மேலக் காற்றினால் அவளுடைய சேலையின் தலைப்பு அலைந்ததைக் காட்டிலும் அதிவேகமாகவே அவளுடைய உள்ளம் அலைந்தது. எவ்வளவு எவ்வளவோ ஆபத்துகளுக்குத் துணிந்து நாம் முத்தையனுக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு எல்லையில்லாத பூரிப்பை அளித்தது. இந்த ஆபத்தெல்லாம் விலகி, முத்தையனும் தானும் கப்பலேறிச் சென்று நிர்பயமாயும் சந்தோஷமாயும் வாழும் காலம் வருமா என்று எண்ணியபோது, அவளுடைய இருதயம் பெரும் புயலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல் கலங்கியது.

     ஆனால் எல்லாவற்றையும் விட, அவளை அதிகமாய்க் கலங்கச் செய்து வந்த எண்ணம் வேறொன்றாகும். தன்னுடைய இத்தனை அன்புக்கும் முத்தையன் பாத்திரந்தானா? - இந்த நினைவு சில சமயம் தோன்றும் போது அவள் சொல்ல முடியாத வேதனை அடைவாள். அன்று ரயில்வே ஸ்டேஷனில், முத்தையனுடைய ஸ்திரீ சகவாசத்தைப் பற்றி அவள் காதில் விழுந்த பேச்சு 'தெள்ளிய பாலில் ஒரு சிறிது நஞ்சைக் கலந்தது' போல் அவளுடைய தூய உள்ளத்தில் விஷத்தின் விதையைப் போட்டு விட்டது. "நம்முடைய முத்தையனா அப்படியெல்லாம் செய்வான்? ஒரு நாளும் இல்லை!" என்று ஒரு நிமிஷம் எண்ணுவாள். மறுநிமிஷம் "பேதைப் பெண்ணாகிய எனக்கு என்ன தெரியும்! புருஷர்கள் எல்லாரும் அப்படித்தானோ, என்னமோ? என்னை மோசந்தான் செய்கிறானோ, என்னமோ?" என்று கலங்குவாள். சென்ற பத்து நாளாகவே, இது விஷயமாக முத்தையனிடம் பிரஸ்தாபித்து, அவனிடம் உறுதி பெற வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்குத் தைரியம் வராமல், நா எழாமல், நாட்கள் கழிந்து வந்தன. இன்றைக்கு எப்படியாவது அந்தப் பேச்சை எடுத்து முத்தையனிடம் உறுதி பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வழியில் கல்யாணி தீர்மானம் செய்து கொண்டாள்.

     ஆனால், ஐயோ! அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அன்று அவள் பாழடைந்த கோவிலுக்குக் கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்தபோது காட்டின் உள்ளிருந்து பேச்சுக் குரல் வருவது கேட்டுத் திடுக்கிட்டாள். இந்த ஆபத்தான நிலைமையில் முத்தையனுடன் யார் வந்து பேச முடியும்? அந்த இடத்திலேயே நின்று மரங்களின் இடைவெளி வழியாக உற்றுப் பார்த்தாள். ஐயோ! இது என்ன காட்சி! பார்க்க சகிக்கவில்லையே! முத்தையனுக்கு அருகில் ஒரு ஸ்திரீயல்லவா உட்கார்ந்திருக்கிறாள்? அவளுடைய தளுக்கும் குலுக்கும்! சிரிப்பைப் பார் சிரிப்பை! அழகு சொட்டுகிறது! சீ! முத்தையனுடைய முதுகில் அவள் தட்டிக் கொடுக்கிறாளே? ஐயோ! இது என்ன கோரம்? முத்தையன் திரும்பி அவளைத் தழுவிக் கொள்கிறானே?

     கல்யாணிக்கு அந்த நிமிஷத்தில் சித்த பிரமையே உண்டாகிவிட்டது போலிருந்தது. பார்த்தது பார்த்தபடி சில நிமிஷம் அங்கேயே நின்றாள். பிறகு அங்கே நிற்க முடியாதவளாய், இடுப்பில் குடத்துடன் வந்த வழியே திரும்பிச் செல்லலானாள். 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.