|
||||||||
தற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு. |
||||||||
நம்முடைய பாரம்பரிய விதைநெல்களை கவனமாக விவசாயக் குடும்பங்களில் பாதுகாப்பார்கள். அதை மூட்டைகளில் தனியாக கட்டி வேறு தானியங்கள், பருத்தி, மிளகாய் பக்கத்தில் அண்டாமல் கண்ணுங் கருத்துமாக ஈரம்படாமல் தனியறையில் பாதுகாப்பது வாடிக்கை. சில இடங்களில் விவசாயிகளுக்கு இடப்பற்றாக்குறை என்றால் பொதுவான பாரம்பரிய விதைநெல் கோட்டைகளிலும் தனித்தனியாக பாதுகாப்பதும் உண்டு. இவை ஆதிகாலத்திலிருந்து நடைமுறையில் உள்ள முறையாகும். இப்போது அத்தகைய வழக்கங்கள் இன்றைக்கு இல்லாமல் ஆகிவிட்டன. குறிப்பாக கலப்பட நெல் விதைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டதால் கவனத்தோடு விதைநெல்களை பராமரிக்கும் பாடுகள் நம்மைவிட்டு தொலைந்துவிட்டன. நான் அறிந்த வகையில், தாமிரபரணி பாசனம், வைகை பாசனம், காவிரி டெல்டாவில் இது போன்ற வாடிக்கைகள் தொன்றுதொட்டு இருந்தது. பண்டைய நெல் சாகுபடியில் முக்கிய இடம் வகித்தவை தான் விதைநெல் கோட்டைகள். நமது விவசாயிகள் விதை நெல்லை பதப்படுத்தி, பக்குவமாக சேமித்து வைக்கும் பழக்கத்தை காலம் காலமாக மேற்கொண்டிருந்தனர். அறுவடைக் காலங்களில் நன்றாக விளைந்த நெல் வயலிலிருந்து பிற வகை நெல் கலக்காமல் விதைநெல்லை பிரித்தெடுக்க நெற்கதிர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு தேர்ந்தெடுத்த நெற்கதிர்களை மட்டும் களத்து மேட்டில் தனியாக போரடித்து விதை நெல்லை பிரித்தெடுப்பர். அதனை மிதமான வெயிலிலும், நிழலிலும் இரண்டு, மூன்று நாட்கள் காய வைத்து பதப்படுத்துவார்கள். அவ்வாறு காய்ந்த விதை நெல்மணிகளை பதப்படுத்திய பின்னர் அவற்றை கோட்டையில் கட்டுவர். பிரி என்பது சுத்தமான நெல் நீக்கப்பட்ட வைக்கோலைக் குறிப்பிடுவதாகும். இதனை கயிறு போல பயன்படுத்தி அதன் மீது வைக்கோலை பரப்பிய பின்னர் காயவைத்து பதப்படுத்திய விதை நெல்மணிகளை அதன் மீது கொட்டுவர். பின்னர் வைக்கோலை பந்து போல சுருட்டி, அந்த பிரிகளை கொண்டு இழுத்து கட்டப்படும். அதன் மேல் பசுவின் சாணத்தை கொண்டு மெழுகுவர். வெயிலில் நன்றாக காயவைத்த பின்னர் அந்த கோட்டைகளை வீட்டினுள் காற்று புகாத அறையில் அடுக்கி வைப்பார்கள். ஒரு கலம் என்பது 12 மரக்கால், ஒன்றரைக் கலம் என்பது 18 மரக்கால், இரண்டு கலம் என்பது 24 மரக்கால் ஆகும். இவ்வாறு பல்வேறு அளவுகளில் கோட்டைகள் கட்டப்பட்டு விதைநெல் வைக்கோலின் கதகதப்பான தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்படும். பசும் சாணம் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கும். இத்தகைய விதைநெல் கோட்டைகளை அடுத்த பருவ சாகுபடி வரை பத்திரமாக வைத்திருப்பர். பருவ மழைக் காலத்திற்குப் பிந்தைய சாகுபடி காலம் துவங்கியவுடன் அந்த விதைநெல் கோட்டைகளை அந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளான குளம், குட்டை, கண்மாய், ஊருணி போன்றவற்றில் போட்டு ஊற வைப்பார்கள். நன்றாக ஊறிய பின்னர் அந்த நெல் கோட்டைகளை கரையேற்றி நீரை வடிய வைத்து நாற்றாங்கால் வயலுக்கு தூக்கி செல்லப்படும். நீரில் மூழ்கிய விதை நெல்மணிகள் நன்றாக முளைவிட்டிருக்கும். இயற்கை பொருட்கள், தாவர இலைகள் கொண்டு பதப்படுத்திய வயலில் நெல் விதைகள் தூவப்படும். இரண்டு, மூன்று நாட்களில் அவை முளைக்கத் துவங்கும். விவசாயிகள் குடும்பங்களில் தங்களின் தேவைக்கும், விற்பனைக்கும் போக மீதமிருக்கும் நெல்லை நெல்கோட்டைகளிலும் பொதுவாக சேமித்து வைக்கும் சத்திரம் போன்ற கட்டிடங்களிலும் மூட்டை கட்டி வைப்பது வாடிக்கை. சிலர் தங்களுக்கு விதைநெல் இல்லையென்றால் இங்கு வந்து கேட்பது அந்த காலத்து வாடிக்கை. இதுதான் நமது பாரம்பரிய நெல் வகைகள்
அன்னமழகி
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 09/10/2018. |
||||||||
by Swathi on 15 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|