|
|||||
விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு |
|||||
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற 970 மாணவ மாணவியர் இதில் பங்கேற்றார்கள். அவர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
முதல் நாள் தொடக்க விழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். பேராசிரியர்கள் பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் உள்படப் பல்வேறு தமிழ் ஆளுமைகள் நிகழ்வில் பேசினர்.
இரண்டாம் நாள் காலை குறள் வினாடி வினா போட்டியும் மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, சிறுகதைப்போட்டி, நடனப் போட்டிகள் நடைபெற்றன, திருக்குறளில் உள்ள பல்வேறு குறட்பாக்களை எடுத்து அதன்மூலம் மாணவர்கள் நாடகமாகவும் கதையாகவும் நடனமாகவும் விளக்கியது, பங்கேற்ற மாணவர்களை ஆச்சர்யப்படுத்தியது.
பிற்பகலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் 'தமிழ் ஓசை' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 'அழகே தமிழே' என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா சிறப்புரை ஆற்றினார். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த இரண்டு நாள்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
|
|||||
by on 05 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|