LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நீல.பத்மநாபன்

தேடல்

வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ 'ணங் ' 'ணங் ' என்று தட்டும் ஓசை.

மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்....இன்றும் நேற்று போல் தானா ? இதென்ன நியூசன்ஸ் ' இந்த அகால வேளையில் இப்படி வந்து கதவைத் தட்டி எழுப்பும் அளவுக்கு அவசரக் காரியம் என்னமோ..... '

மீண்டும் காரின் ஹாரன்.

'ணங் '

'ணங் '

நெஞ்சின் மீது பாம்பாய்ப் பற்றிக்கிடந்த நிர்மலாவின் கரத்தை எடுத்து விலக்கிவிட்டு, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். கீழே பாயில் குறுக்கும் நெடுக்குமாய்க் கிடந்து நித்திரை கொள்ளும் குழந்தைகளை மிதித்து விடாதிருக்க சிரமப் பட்டவாறு கவனமாய் நடந்து, ரோட்டைப் பார்த்திருந்த ஜன்னல் கதவின் அருகில் செல்வதற்குள் காரின் ஹாரனும், 'ணங் ' 'ணங் 'கும் பலமுறை சப்தித்து அடங்கிவிட்டன.



ஜன்னல் கதவைத் தள்ளித் திறந்தான். சாக்கடை வாடைக் காற்று உள்ளே அவசர அவசரமாய் ஓடிவந்தது. வெளிக்கேட்டின் முன் ஒரு டாக்ஸி நிற்பது தெரு விளக்கின் மங்கிய ஒளியில் தெரிய வருகிறது. காருக்குள் நிழல் கோடுகளாய், நிறைய மனிதத் தலைகள். கேட்டின்முன் ஒருவன்.

'என்ன வேணும் ? '

முற்றத்தைத் தாண்டி வெளிகேட்டின் அருகில் நிற்கும் அவனுக்கு கேட்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, தன் எரிச்சலை முழுதும் கொட்டித் தீர்க்க--வெளிப்பிரகடனம் பண்ண வேண்டுமென்றே ஒரு வேகத்தில் உரக்க சத்தம் போட்டுக் கேட்டான்.

இருளில், மணி நிற்பது எங்கே என்று சரிவர கேட்டின் முன் நிற்பவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தும் குரல் வந்த திசை நோக்கி 'காமாட்சி வீடு இதுதானே ? ' என்று கேட்டான்.

மணிக்குக் குபீரென்று ரத்தம் தலைக்கேறி விட்டது போல் ஒரு உணர்வு.

'இல்லை '.

'இந்த ரோடில் இடப்பக்கம் புதிய வீடுண்ணு சொன்னாங்களே...அது இதுதானே ? '

--இப்படி அவன் மீண்டும் தர்க்கித்து, இது காமாட்சி வீடுதான் என்று ஸ்தாபிக்க முயன்றபோது, மணிக்கு ஆத்திரம் அசாத்தியமாய்க் கூடியது.

'இங்க இல்லைண்ணு சொன்னா சலம்பாம போய்விட வேண்டியதுதானே....அர்த்த ராத்திரி வந்து மனுஷனை தூங்க விடாமெ.... '

கணவன் சத்தம் போட்டு யாரிடமோ பேசுவதைக் கேட்டு 'யாரது ? ' என்று கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தாள் நிர்மலா.

இப்போது அவன் ஆத்திரம் அர்த்தமில்லாமல் அவளிடம் திரும்பியது. 'நீ பேசாமல் கிட. நீயா காமாட்சி..... ? '

காரின் பின் கதவுகள் படார் படார் என்று திறந்து மூடும் சத்தம். இரண்டு மூன்று பேர்கள் கூட காரிலிருந்து இறங்கி கேட்டின் முன்வந்து நிற்கும் சந்தடி...கையிலிருக்கும் சிகரெட் தீயின் செம்புள்ளி மினுங்க, வெள்ளைச் சட்டைக்குள்ளிருந்த ஒருவன் முகம் தெரியவில்லை. கேட்கிறான்: 'என்னசார் இப்படி கோபப்படுறீங்க, இப்போ காமாட்சியின் குரல் கேட்டுதே.....சும்மா பிகுபண்ணாமல் கதவைத் திறங்க சார்.... '

மணிக்கு உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவமானத்தாலும் ஆத்திரத்தாலும் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.

'என்னடா நெனச்சே....படுவா.... ' என்று அலறியவாறு ஜன்னலைப் படாரென்று அடைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளி முற்றத்துக்கு இறங்கும் முன் கதவைப் போய்த் திறக்க, வெறிப்பிடித்தவனைப் போல் பாய்ந்தான் அவன். கால்பட்டுக் குழந்தைகள் வீல் என்று கத்திக் கொண்டு எழுந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டன. நிர்மலா ஓடிவந்து அவன் கையைப் பிடித்திழுத்துத் தடுத்தால். 'வேண்டாம்....நீங்க வெளியே போகாதீங்க....குடிகார பசங்க...எதுக்கும் துணிஞ்சவங்க.... '

'எவனா இருந்தால் எனக்கென்ன ' அவன் சொன்னதைக் கேட்டியில்லே....அயோக்கிய ராஸ்கல் ' என்று திமிறிக்கொண்டு கதவின் தாழை நீக்கித் திறந்து கொண்டு முற்றத்தில் குதித்தான். நிர்மலா முற்றத்து லை ஸ்விட்சை தட்டி விட்டதால் இப்போ பளிச்சென்று வெளிச்சம். மணி கேட்டைத்திறந்து வெளியில் வருவதற்குள் அவர்கள் எல்லோரும் ஓடிச் சென்று காருக்குள் ஏற, கார் விரைந்தது. அந்த ரோடின் மறுமுனையில் போய் அந்தக் கார் நிற்பதையும், அதிலிருந்து ஆட்கள் இறங்குவதையும் பார்த்து 'மானம் கெட்டவங்க ' என்று உறுமி 'தூ ' என்று காறித் துப்பியும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. உடம்பின் நடுக்கம் நிற்கவில்லை.

'எதுக்கு சார் இந்த மாதிரி ஆட்களிடம் வம்புக்கு போகணும். எல்லோரும் ஃபுல்லோடு ' என்று சொன்னவாறு, எதிரிலிருந்த வொர்க்ஷாப் வாச்சர் கோலப்பாபிள்ளை அவன் பக்கத்தில் இருட்டிலிருந்து வந்தார்.

'யாரு கோலப்பாபிள்ளை அண்ணாச்சியா...நீங்களும் பார்த்துகிட்டுதான் இருந்தீங்களா...... ? ' என்று கேட்டான் மணி.

'நான் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். உங்க சத்தம் கேட்டுதான் முழிச்சேன். 'எதுக்கு இப்படி வந்து வம்புக்கு நிக்கிறீங்க. காமாட்சி வீடு அதுதான் ' என்று அந்த வீட்டைச் சுட்டிக்காட்டி நான் தான் அவுங்களை அனுப்பி வச்சேன். '

அவனுக்கு இன்னும் உதறல் சரியாக மாறவில்லை. 'இந்தக் காமாட்சியை அங்கே இருந்து ஒழிச்சு கட்டினாத்தான் நமக்கு நிம்மதியாகத் தூங்க முடியும் போலிருக்கிறது என்று அவன் சொன்னபோது அவர் விழுந்துவிழுந்து சிரித்தார். 'நல்லா சொன்னீங்க அங்கே மெயின் கஸ்டமர் யார் தெரியுமில்லே...இந்த ஏரியா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன். ஒழிச்சுக்கட்டப் போகிறவங்க ஒழிஞ்சு போகாமல் பார்த்துக்கணும் ஆமா... '

'அதுக்காக... 'இங்கே நமக்குக் குழந்தை குட்டிகளோடு வாழ வேண்டாமா.... ? '

'யார் வேண்டாமுன்னு சொன்னாங்க.... ' நல்லா வாழுங்க. அவளையும் வாழ விடுங்க.... ' உம்....நீங்களாவது ரோடின் இந்த முனையில்தான் இருக்கிறீங்க...அங்கே காமாட்சியின் வீட்டைத் தொட்டு அடுத்த வீட்டில் வசிக்கும் ராமலிங்கம்தானே அவளுக்கு அந்த வீட்டை விலைக்கு வாங்கத் தரகு பண்ணிருக்கான். அவனும் பெஞ்சாதி பிள்ளைகளோடு அடுத்த வீட்டில் வாழாமலா இருக்கான். அதிகமென்ன, அந்த காமாட்சியும் குழந்தை குட்டிகளோடு தானே அங்கே வாழறா.... ' '

'யாரு அந்த ராமலிங்கமா ? '

'ஆமாம்...அவனுக்கு நல்ல கமிஷன் கிடைச்சுதா கேள்வி...காமாட்சி கிட்டேதான் பணம் எக்கச்சக்கமாச்சே.... ' '

மணி ஒன்றும் பேசவில்லை. திரும்பிப் பார்த்த போது நிர்மலாவும் குழந்தைகளும் அவனையே பார்த்தவாறு வராந்தாவில் நிற்பது தெரிகிறது.

'நீங்க உள்ளே போய் படுங்கோ....இனி அடுத்தது வேறு யாராவது வரப் போறா....என்று அவன் அவசரப் படுத்தினான்.

'பனி பெய்யுது. எதுக்கு அங்கே போய் நிக்கிறீங்க... கதவை சாத்திகிட்டு வந்து படுங்கோ... ' என்று விட்டு அவள் உள்ளே போனாள்.

'இப்படி இங்கே ஒரு நிரந்தர தொந்தரவு இருக்குமுண்ணு நேரமே தெரிஞ்சிருந்தா நான் இங்கே குடிவந்தே இருக்கமாட்டேன் ' என்றான் மணி.

'இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம்தான் சார். வீடுமாறிப் போய் இப்படி நம்ம வீட்டுக் கதவைத்தட்டி இதுதான் அவ வீடாண்ணு கேட்டுவிட்டால் எதுக்கு நாம இப்படி உணர்ச்சி வசப்படணும். இப்போ தப்பு உங்கமேல்தான். 'இதில்லை அப்பனே அவவீடு...அதுதான் அவவீடு '-- அப்படிண்ணு நீங்க சொல்லியிருந்தா அவுங்க பேசாம போயிருப்பாங்க. இப்படித் தவறிப்போய் வீட்டுக் கதவைத் தட்டி மனுஷங்களை தொந்தரவு செய்யும் விவகாரம் அந்தப் பழைய பாண்டிராஜா காலத்தில் கூட இருந்திருக்கிறதே.... ' உங்களை எழுப்பி கோலாப்பிள்ளை நீங்கதானாண்ணு தெரியாமல் யாராவது விசாரிச்சால், அதுக்காக உங்களை ஒரு வாச்சராக தாழ்த்தி விட்டதா நீங்க கோபப்படுவதில் அர்த்தமுண்டா ? '

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

'உங்களைத் தேடி வருகிறவங்க யாராவது தெரியாமல் அங்கே காமாட்சி வீட்டில் போய் விசாரிச்சாங்கண்ணா, 'இதில்லை: அது ' என்று உங்கவீட்டை சுட்டிக் காட்டிக் கொடுப்பதுதானே முறை. இதெல்லாம் ஒவ்வொருத்தர் தொழில்.....உலகத்தில் எல்லாம்தான் இருக்கும். இதையெல்லாம் நாம் ஒருத்தர் நினைச்சால் திருத்திவிட முடியுமா சார் ? '

அவரிடம் அவன் தர்கிக்க விரும்பவில்லை. 'அதுசரி....எப்போதும் வெளியே வெற்றிலைப் போட்டுக் கொண்டு யாராவது வர்றாங்களாண்ணு பார்த்துக்கிட்டு ஒருத்தன் அங்கே உட்கார்ந்திருப்பானே அவன் யாரு ? '

கோலப்பா பிள்ளைக்கு இப்போது உற்சாகம் வந்து விட்டது.

'அப்படி கேளுங்கோ சார்.....இப்போ கேட்டாங்க இல்லையா, அது நியாயம் ' எப்படியானாலும் நம்ம அண்டை வீட்டுக்காரனைப்பற்றி நாம் சரியாக அறிஞ்சிருக்க வேண்டாமா ' காமாட்சி செத்துப் போன ராமப்பாவின் இரண்டாவது பெண்டாட்டி...முதல் தாரத்தின் மகன்தான் அந்த ரங்கன். காமாட்சி அந்தக் காலத்தில் ஆள் பிரமாதமா இருப்பாள். அப்பா செத்த பிறகு ரங்கனுக்கு இந்தச் சித்திக்காரிதான் எல்லாம்...எல்லாம்.

கோலப்பா பிள்ளையின் விஷமச் சிரிப்பிலிருந்து மணிக்கு விஷயம் புரிந்தது.

'அது சரி...இப்போ அங்கே நிற்கும் இளம் பெண்கள்... ? '

'என்னாசார்...அப்போ சித்தெமுந்தி காட்டின வெறுப்பெல்லாம் வேஷம்தானா.. ? என்னா, நோட்டம் உண்டுமா ? ' என்று கேட்டுவிட்டு கோலப்பாபிள்ளை கடகடவென்று சிரித்தார்.

மணிக்குப் பயமாய் போய்விட்டது. 'சும்மா விளையாடாதீங்க...அவ என் வீட்டுக்காரி சண்டைக்கு வரப்போகிறா......அனாவசியமா குடும்ப கலகத்தை உண்டாக்கி வச்சிருதாயேயும்... ' என்று திரும்பி பார்த்துவிட்டு மெல்லச் சொன்னான்.

'காமாட்சிக்கு இப்போ வயசாயிட்டது. அசல் அங்கமுத்துவைப் போல் பெருத்துப் போனாள். அவளால் இப்போ ஒண்ணும் முடியாது. அந்த மூன்று பெண்களும் அவ பெற்றவங்க தான். கிளியாட்டம் இருக்கிறாங்க..... பிறகென்ன..... ' மற்றபடி, வெளியிலிருந்தும் சின்னச் சின்னக் குட்டிகள் வருவதாய் கேள்வி. எது எப்படியோ...பாவி மகளுக்கு இந்த பஞ்சகாலத்திலும் பிஸினஸ் அமோகமாய் நடக்குது. இன்னும் கொஞ்ச நாளில் இந்த தெரு பூராவையுமே அவ விலைக்கு வாங்கிவிட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சரி சார். நமக்கெதுக்கு இதெல்லாம்.... 'உங்க வீட்டுக்காரி வேறெ சந்தேகப்படப் போகிறா,நீங்க கேட்டை அடைச்சு கிட்டு போய்படுங்க சார். எனக்கும் தூக்கம் வருது.... ' என்று கொட்டாவி விட்டவாறு திரும்பினார் கோலப்பா பிள்ளை.

மணி கேட்டை அடைத்து விட்டு உள்ளே வந்தான். கதவைத் தாள் போட்டுவிட்டு அறைக்குள் வந்தபோது, குழந்தைகள் எல்லாம் தூங்கிவிட்டன. கட்டிலில் படுத்திருந்த நிர்மலா, 'என்ன இந்த அர்த்த ராத்திரியில் அந்த கிழவன் கிட்டே இப்படி ரகசியான பேச்சு ' என்று விசாரித்தபோது, 'ஒன்றுமில்லே....ஹும், நாம உள்ளே தேடுகிறோம். அவுங்க ஊரில் தேடுறாங்க ' என்று சொல்லியவாறே லைட்டை அணைத்துவிட்டு அவள் அருகில் வந்து படுத்தான் மணி.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.