LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழகக் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை - முனைவர் ந.இரா.சென்னியப்பன்

வழிபாடு மிகத் தொன்மையானது, வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றுவரை வழிபாடு பல்வேறு முயற்சிகளில் நடைபெற்று வருகின்றது. வழிபடுதெய்வம், கடவுள் வாழ்த்து முதலியன தொல்காப்பியத்தில் சுட்டப்படுகின்றன. இயற்கையைத் தமிழர் வழிபட்டனர் என்பார் திரு.வி.க இயற்கையான சூழலில் மரத்தின் கீழ் கடவுள் உருவத்தை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். ''கள்ளிநிழற் கடவுள் வாழ்த்தி'' என்பது புறநானூறு. திருக்கோயில் உருவ வழிபாடு வேதங்களில் கூறப்படாதவை என்பார் டாக்டர் இராதாகிருட்டிணன். கோயில் வழிபாட்டில் சாதிவேறுபாடு இல்லை. ஆசிரியர் வருவதற்கு முன் தமிழகத்தில் சாதி வேறுபாடுகளில்லை. (Before the arrival of tha Aryans there was no caste system in Tamil country-by M.Srinivasa Aiyangar- Tamil Studies-P.61).

இயற்கைச் சூழலில் அமைந்த தமிழகக் கோயில்களில் மக்கள் அனைவரும் வழிபட்டிருந்தனர். ஆனைக்கா-ஆனை, சிலந்தி வழிபட்டன. எறும்பியூர்-எறும்பு வழிபட்டது, நாரையூர்-நாரை வழிபட்டது, தேவன்குடி-நண்டு வழிபட்டது, குரங்கனில்முட்டம்-குரங்கு அணில், காக்கை வழிபட்டன. மயிலாடுதுறை, மயிலாப்பூர்-மயில் வழிபட்டது. வலிவலம்- கரிக்குருவி வழிபட்டது, கழுக்குன்றம்-கழுகு வழிபட்டது, கரவீரம்-கழுதை வழிப்பட்டது, ஈங்கோய்மலை-ஈ வழிபட்டது, பாதளீச்சரம்-பாம்பு வழிபட்டது, பெண்ணாடம்-பெண், பசு, யானை வழிபட்டன. இத்தகைய அஃறிணை உயிரினங்கள் வழிபட்ட கோயில்கள் ஏராளம் உள்ளன. அவையெல்லாம் சமசுக்கிருத மந்திரங்கள் சொல்லியா வழிபட்டன?

கோயில் வழிபாட்டை விரிவாகக் கூறும் நூல் திருமந்திரம் ஆகும். எந்திரங்கள், மந்திரங்கள் பற்றித் திருமூலர் பலவற்றைப் பாடியுள்ளார்.

''பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே'' (திருமந்திரம்-511)

இந்தப் பாடலுக்கு தருமை ஆதீனப் புலவர், மகாவித்துவான் திரு.சி. அருணை வடிவேல் முதலியார் மிக அருமையான விரிவான உரை எழுதியுள்ளார்.

. . . வடமொழி தென்மொழி என்னும் மொழி வேறுபாடும், ஆதிசைவர், பிறசைவர் என்னும் இனவேறுபாடும் இன்றி இருமொழிகளாலும் அனைத்துச் சைவமும் திருக்கோயிலில் சிவபிரானைப் பல் வகையாலும் நாள்தோறும் முறைவகுத்துக் கொண்டு வழிபாடு செய்தல் வழக்கத்திலிருந்தமை நன்கறியப்படுதலால், அதற்கு மாறாக ஆதிசைவர் ஒருவர்தாம் வடமொழியிலே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்குரியர் எனக் கட்டளை வகுத்தல் விருத்திப்பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில் ''அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான் என்பது சித்தாந்த சாராவளி உரையிலேயே சொல்லப்பட்டு உள்ளது....'' என்பது அவ்வுரையின் ஒருபகுதி.

தருமபுர ஆதீன வெளியீட்டில் இச்செய்தி வருகின்றது.

''திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் முதலிய அருளாசிரியர்கள் காலத்தில் திருக்கோயில்களில் நிகழும். வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழ்மொழியே முதலிடம் பெற்று விளங்கியது. இறைவனது பெருங்கருணைத் திறத்தை வியந்துபோற்றும் பத்திமைப் பாடலாகிய இசைத் தமிழ்ப் பாடல்கள் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்றன....

இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டப்படும் வேதங்களை ''எழுதாக் கிளவி'' எனவும் இறைவனது திருவருள் பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளையார் முதலிய பெருமக்கள் இனிய தமிழாற்பாடியருளிய இத்திருமுறைகளை ''எழுதும் முறை'' எனவும் வழங்குதல் மரபு. வண்டமிழால் எழுது மறைமொழித்த பிரான் எனப் பெரிய புராணமும் எழுது மறை மொழிந்த கழுமல முனிவன் எனத் தில்லைக் கலம்பகமும் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் போற்று முகமாக அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களை எழுதுமறை எனச் சிறப்பித்தல் காண்க.

வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனாகிய முழுமுதற்கடவுளைப் ''பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே'' எனத் திருஞானசம்பந்தர் தம்முடைய தந்தை யார்க்குக் கையாற் சுட்டிக்காட்டிய எளிமையும் இனிமையும் உடைமையானும், அடியார் இறைவன் பால் வேண்டிய வேண்டியாங்குப் பெறுதற்குத் துணைபுரிந்தும் உலக மக்களது தீராத நோய் தீர்க்கும் மந்திரங்களாகியும், காணுதற்கரிய கடவுளை உலக மக்கள் கண்காணக் காட்டியும் இறைவனது திருவருளை உலகத்தார்க்குத் தெளிவாக விளக்குவன ஆதலானும் வேத நூல்களிலும் மேம்பட்டு விளங்குவன இத்தெய்வத் தமிழ் திருமுறைகள் என்பர் பெரியோர்.

''நிறைமொழி மாந்தராகிய அருளாசிரியர்களால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற இத்திருமுறைகள் நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டிய மறுமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது அப்பெருமக்களது வரலாற்றினால் இனிது விளங்கும். மந்திரம் என்பது தன்னைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்பர். தமிழ் மந்திரங்களாகிய இத்திருமுறைகளை அன்பினால் ஓதியுணரும் இயல்புடையோர் இவ்வுல வாழ்க்கையில் நேரும் எல்லாத் தீங்கினையும் நீங்கி எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர்.''

மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் திருப்பனந்தாள் திருமடத்தின் அறக்கட்டளையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய் நிதியில் பன்னிருத் திருமுறை வரலாறு - முதல் பகுதியாக ஆராய்ச்சிப் பேரறிஞர் சு.வெள்ளை வாரணார் எழுதி வெளிவந்த நூலில் உள்ளன.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைவரும் வழிபட்டுள்ளனர்; சாதி வேறுபாடு மொழி வேறுபாடு இல்லை என்பது புலனாகின்றது. தமிழ்த் திருமுறைகள் மந்திரங்களே என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையும் தெளிவாகின்றது. எல்லா மொழியாலும் வழிபாடு செய்ததைத் தேவாரமும் குறிப்பிடுகின்றது.

மகளிர் கருவரையில் சென்று வழிபட்டதைத் திருப்பனந்தாள் தாடகை வரலாறு, திருநீல நக்கநாயனார் வரலாறு, திருமுருகன், பூண்டிக் கல்வெட்டு ஆகியன விளக்கமாகக் கூறியுள்ளன.

இந்தியாவில் 12 சோதிலிங்கங்கள் உள்ளன. கேதாரம், காசி, திரியம்பகம், சோமநாதம், திருப்பருப்பதம் முதலிய 11 சோதிலிங்கங்களைக் கருவறையினுள்ளே சென்று நாமே வழிபடலாம். எந்தமொழியிலும் தோத்திரம் சொல்லி வழிபடலாம். 12 சோதிலிங்கங்களில் தமிழ் நாட்டில் உள்ள இராமேசுவரம் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 சோதிலிங்கங்களில் வடக்கே உள்ள 11 சோதிலிங்கங்களில் அனைவரும் கருவறையில் சென்று எந்த மொழியிலும் யார் வேண்டுமானாலும் வழிபடலாம். இராமேசுவரத்தில் மட்டும் கருவரையினுள் மற்றவர்கள் செல்லக்கூடாது. வடமொழியில் மட்டுந்தான் மந்திரம் ஓதல் வேண்டும்.

தமிழகக் கோயில்களில் தகுதியுள்ள அனைவரும் அருச்சகர்களாகவும், கருவறையினுள் அனைவரும் சென்று வழிபடுபவர்களாகவும் ஆக்கப் பெற்றால் தமிழ் வழிபாட்டிற்கு விடிவுகாலம் உண்டாகும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.