LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 462 - அரசியல்

Next Kural >

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை. (ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு-தாம் தெரிந்தெடுத்த சூழ்ச்சித்துணையினத்தோடு கூடிச் செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமும் தனிப்பட எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்கு; அரும்பொருள் யாது ஒன்றும் இல்-முடித்தற் குரிய வினை எதுவும் இல்லை. 'தெரிந்த இனம்' என்பது வினைகளையெல்லாஞ் செய்யுந்திற மறிந்த இனம் என்றுமாம்.வினையாவன போரும் நால்வகை ஆம் புடைகளைப் பயன் படுத்துமாறும் சந்து செய்தலும் பிறவுமாம்.வெற்றிக்கேற்ற கருவிகளும் வழிகளும் குறைவின்றிக் கையாளப் பெறுதலால், அரிய வினைகளும் எளிதாகக் கைகூடப் பெறுவர் என்பதாம்.
கலைஞர் உரை:
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
Translation
With chosen friends deliberate; next use the private thought; Then act. By those who thus proceed all works with ease are wrought
Explanation
There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.
Transliteration
Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku Arumporul Yaadhondrum Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >