LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

அடிக்கருத்தியல் நோக்கில் திணை, துறை விளக்கம்

''அடிக்கருத்து'' என்பது கவிதையின் நோக்கம், அர்த்தம், நீதி, ஒழுக்கப் பிரச்சனைகள், மானிடப் பிரச்சனைகள் போன்று கவிதையில் புலப்படுத்திக்காட்டப்படும் சிக்கல்கள், சூழல்கள் முதலியனவும் அடிக்கருத்தாக அமையும் திறனுடையன. எனவே, இதற்குப் பொருத்தமான தொல்காப்பியம் ''அடிக்கருத்து'' ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொல்காப்பியத்தில் அடிக்கருத்து பற்றிய சிந்தனைகள் காணப்படுகின்றன. இதில் அடிக்கருத்து என்று நேரடிச் சொல்லாக அமையாது, அந்தந்த இலக்கிய மரபிற்கு ஏற்ப வெவ்வேறு கலைச் சொற்கள் அமைவது போல அடிக்கருத்துக்கள் பற்றிய சிந்தனைகள் அமைந்துள்ளன. அவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். திணை

''கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப''

இது அகத்திணைகள் ஏழு பற்றி தொல்காப்பியர் கூறியது.

இங்கு நடுவண் ஐந்திணை என்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றைச் சுட்டுகிறார். திணை என்ற சொல், முதலில் நிலத்தைக் குறித்துப் பின்னர் அந்நிலமக்களின் வாழ்க்கை ஒழுகலாற்றையும் அவ்வொழுகலாற்றைப் பற்றிப் பாடப்பட்ட இலக்கியத்தையும் குறித்தது.

முப்பொருட்கள்

முதல் கரு உரி என்ற மூன்றும் அகப்பாடலில் அமைந்து வரும் முப்பொருட்கள் ஆகும். அகப்பாடல் ஒரு கட்டமைப்புக்குரியது. ஒரு பாடலில் முதல் கரு உரி என்ற முப்பொருளும் அடங்கியிருக்கும். மேனாட்டர் கவிதைப் பொருளை அடிக்கருத்து தலைமைக்கருத்து எனப் பகுப்பர். இங்கு ''உரி'' என்பது மக்களின் செயற்பாடுகளாகிய ''புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவும் அவற்றின் நிமித்தம் என்பனவுமாகும். இவையே அகப்பாடலின் ''அடிக்கருத்து'' எனத்தக்கன. இவை அகப்பாடலுக்கு இன்றியமையாதன. ஐவகை நிலமும், பொழுதும் முதற்பொருளாம். அந்நிலத்தின் இயற்கைச் சூழல், தெய்வம், உணவு, கலைகள், மக்கள், தொழில் போன்றன கருப்பொருட்கள். கருப்பொருளும், முதற்பொருளும் பாட்டில் வரும் உரிப்பொருளாகிய மாந்தர் தம் வாழ்வு நிகழ்ச்சிகளுக்குப் பின்னணியாகப் புனையப்படும். இப்பின்னணிகள் இல்லாமல் உரிப்பொருள்மட்டுமே அமைந்த பாடல்களும் உள்ளன. நிலம் என்பது நேர் முகமாகவும் கருப்பொருள் வழியாக மறைமுகமாகவும் பெயர் சுட்டப்படுவதால் இது இன்ன திணைப்பாட்டு என அறிவதற்கு உதவியாக இருக்கும். நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு பொழுதையும் சேர்த்து முதற்பொருள் என்றனர். மேலும் இந்த நிலத்திற்கு அல்லது திணைக்கு இந்தப் பருவங்கள் சிறப்புடையன என அவற்றை இணைத்துக் கூறினர். பொழுது என்பது சிறுபொழுது ஆறு, பெரும்பொழுது ஆறு, இதில் பகற்பொழுது மூன்று கூறு, இரவுப் பொழுது மூன்று கூறு எனப் பிரித்துள்ளனர்.

ஒரு குறிஞ்சித்திணைப் பாட்டை எடுத்துக்கொண்டால் அது புணர்தலும், புணர்தல் நிமித்தமாகிய உரிப்பொருளை அடிக்கருத்தாகக் கொண்டிருக்கும். அந்நிலமக்களின் களவுக்காதலே இதில் சிறப்பாகப் புனையப்படும். அக்களவுக் காதலுக்கு மலைப்பாங்கான இயற்கைப் பின்னணியும், இரவின் நடுப்பகுதியாகிய யாமமும், குளிர் நடுங்கும் கூதிர் காலமும் பின்னணியாக புனையப்படும். குறிஞ்சியில் பிற திணை உரிப்பொருள்கள் சில நேரம் வரலாம். எந்த நிலத்திலும் எந்த ஒழுக்கமும் நிகழலாம். ஆயினும் குறிஞ்சிக்கு எதன் இயற்கைச் சூழலுக்குச் சிறப்பாகப் பாடத்தகுந்தது களவுக்காதலே. சுருங்கச்சொன்னால் குறிஞ்சி நிலப் பின்னணித் தவிர களவுக் காதலே பாட வேறு எந்த நிலப்பின்னணியும் பொருத்தமாக இருக்காது. காதல் வாழ்வு எனும் நாடக அரங்குக்குக் குறிஞ்சி நிலச்சோலை பின்னணி திரையாக அமைக்கப்படும்.

திணையும் அடிக்கருத்தும்

தொல்காப்பியர் கூறும் திணைபற்றிய செய்திகளை அடிக்கருத்து அடிப்படையில் குறுந்தொகை பாடல்கள் சான்றுகள் மூலம் ஒப்பிட இயலும். இவை இரண்டிற்குமான ஒற்றுமை புலப்படுத்தப்படுகிறது.

குறிஞ்சித் திணை

கருங்கட் தாக்கலை.............எனத் தொடங்கும் குறுந்தொகை 69 ஆம் பாடல். இப்பாடலில் ஆண் குரங்கு இறந்ததால், பெண்குரங்கு தன் குட்டிகளை சுற்றத்திடம் சேர்த்துவிட்டு மலையிலிருந்துத் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும் என்பது பொருள். ஆனால் இதன் உட்பொருள் ஒன்று உண்டு. பெண் விலங்கினங்கள் தம் துணைக்குத் துன்பம் வந்த காலத்தில் தன் குட்டியையும் நினையாமல் உயிர் விடுதல், தலைவன் நாட்டில் அவன் அறிந்த ஒன்று. அதுபோல், தலைவன் இரவில், தலைவியைக் காணவரும் போது வழி இடையில் யாது நேருமோ? என எண்ணித் தலைவி வருந்துகிறாள். அதனால் நள்ளிரவில் வராதே என்று தோழித் தலைவனிடம் கூறி, இரவுக்குறி மறுத்தலின் மூலம் வரைவுக்கு வற்புறுத்துகிறாள். வரைவுகடவுதலே இப்பாடலின் மையக்கருத்து, வரைவுகடாவுதற்கு துணையாக, மலை, நள்ளிரவு ஆகிய முதற்பொருளும் துணை இழந்த கருங்கண்தாக்கலை, ஓங்குவரை அடுக்கம், சாரல் நாடன் என்பன போன்ற கருப்பொருட்களும் சுட்டப்படடு வரைவுகடாதல் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை முழுமையாக்குகின்றன.

முல்லைத் திணை

மழை விளையாடும்.....எனத்தொடங்கும் குறுந்தொகை 108 ஆம் பாடல். மேயும் பொருட்டு சென்ற பசுக்கள் மாலைக் காலத்தில் கன்றை நினைத்து வீடு செல்லும். இதுவே இப்பாடலில் பொருள். இந்த பசுக்களின் செயல் மூலம் தலைவி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். தான் வினை முடிந்து மீளுவதாகத் தலைவன் கூறிய கார் பருவம் வந்து விட்டது. இன்னும் தலைவன் வரவில்லை. கார்ப்பருவத்தைச் சுட்ட முல்லை மலர்தல், மழை விளையாடுதல் போன்றவற்றை உறுதுணையாக்குகிறாள் தலைவி. கார்ப்பருவம் கண்டு தலைவி வருந்துவதே பாடலின் அடிக்கருத்து. கறவை வீடு திரும்பலும், முல்லை பூத்தலும், மாலையில் நிகழும் ஒரு இயல்பான நிகழ்ச்சி இதனை தன் ஆற்றாமையை வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறாள். குன்று சேர் சிறுகுடி, கறவை, கன்று, பசு, இலை முல்லை, ஆசு, இல், வான், பூ போன்ற கருப்பொருட்களும் இது முல்லைத்திணைப்பாட்டு என்பதை உறுதி செய்கின்றன.

மருதத்திணை

ஐயவி அன்ன....எனத்தொடங்கும் குறுந்தொகை 50 ஆம் பாடல். தலைவன் தன்னுடன் அளவாளவிய தன் தோளை விட்டு நீங்க, அவன் ஊர்துறையோ ஞாழல் மலர்களும், மருத மலர்களும் சேர்ந்து அணி செய்வதாய் அமைந்துள்ளது என்ற கூறுவதன் மூலம், தனிமையையே தான் அழகாகப் பெற்றிருக்க தலைவனோ பரத்தமை ஒழுக்கத்தோடு இன்புற்று இருக்கிறான் என்று இப்பாடலில் புலப்படுத்துகிறாள் தலைவி. கருப்பொருள், உரிப்பொருள் அடிப்படையில் அமைந்துள்ள மருதத் திணைக்கு ஏற்ற அடிக்கருத்து இப்பாடலில் அமைந்துள்ளது.

நெய்தல் திணை

தண்கடுற்படுதிரை......எனத்தொடங்கும் குறுந்தொகை 166 ஆம் பாடல். கடல் சார்ந்த தண்கடல் படுதிரைக் கொண்ட மரந்தை எனும் ஊர் இயற்கை வழம் மிகுந்தது. இயற்கை அழகால் தவமிக்கது. ஆனால், தலைவனைப் பிரிந்தத் தலைவிக்கு அவ்வூரே வருத்தத்தை தருவதாகவே உள்ளது என்று தலைவி கூறுவதன் மூலம் இப்பாடலின் உரிப்பொருளாகிய இரங்கல் சுட்டப்படுகிறது. தனிமைக்குக் காரணம் தலைவி, இற்செறிக்கப்பட்டமையே. இவ்வுரிப்பொருள் தலைவியின் வருத்தத்தைக் தீர்ப்பதற்கான வரைவுகடாவுதலும் இப்பாடலின் அடிக்கருத்தாக அமைந்துள்ளன.

இதற்கு உறுதுணையாக, மரந்தை எனும் ஊரின் தண்கடல் படுதிரை, திரையால் பெயர்க்கப்பட்ட அயிரை, வெண்பாநாரை போன்ற முதல் கருப்பொருட்களையும் கொண்டு உரிப்பொருள் முழுமைப்படுத்தப்படுகிறது.

பாலைத்திணை

உள்ளார் கொல்லோ தோழி . . . எனத்தொடங்கும் குறுந்தொகை 16ஆம் பாடல். தலைவன் பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாமையில் இருந்த தலைவியை தோழி ஆற்றுவித்தல் என்பது இப்பாடலின் நோக்கம்.

தொகுப்புரை

இச்சான்றுகள் மூலம் தொல்காப்பியர் சுட்டிய அகன் ''ஐந்திணை'' என்ற சிறப்புடைய ஐந்திணைகளும் காதலுக்கு அடித்தளமாக அமைகின்றன. திணைப்பாடல் ஒவ்வொன்றும் அத்திணையின் உரிப்பொருளுக்கு பொருத்தமான பினைவுக் கூறுகளும் கொண்டு சிறப்புக் பெறுகின்றன.

துறைக்கு ஏற்ற உரிப்பொருள், அத்துறைக்கு உறுதுணையாக முதற்பொருள், கருப்பொருள்கள் ஆகியன அமைந்து உரிப்பொருளை முழுமைப்படுத்துகின்றன. உரிப்பொருளே பாடலின் மையக்கருத்தாகும்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.