LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

திருடன் திருடன்

                                  "திருடன்! திருடன்!"

அன்று சாயங்காலம் கையெழுத்து மறையும் நேரத்துக்கு முத்தையன் நாணற் காட்டிலிருந்து லயன் கரைச் சாலைக்கு வந்தான். நேற்று மத்தியானத்துக்குப் பிறகு அவன் சாப்பிடவில்லையாதலால், கோரமான பசி அவனை வாட்டிக் கொண்டிருந்தது. உடம்பு சோர்ந்து போயிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்தான். லயன் கரைக்குப் பக்கத்தில் இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. அதில் வாழைக்குலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. முத்தையன் அங்கே சென்று, ஒரு வாழைத்தாரில் சற்றுச் சிவந்திருந்த ஒரு காயைப் பறித்துக் கடித்தான். தின்ன முடியாமல் துப்பி விட்டான்.

     கொஞ்ச தூரத்தில் தென்னந் தோப்புக்கு மத்தியில் ஒரு கோயிலின் ஸ்தூபி தெரிந்தது. அதற்கு அருகில் புகை கிளம்பிற்று. அங்கே ஒரு கிராமம் இருக்க வேண்டும். கிராமத்திலுள்ள வீடுகளில் இப்போது சமையல் நடந்து கொண்டிருக்க வேண்டும். இதை நினைத்தபோது முத்தையனுடைய பசி அதிகமாயிற்று. அவனை அறியாமலேயே முத்தையனுடைய கால்கள் அந்தக் கிராமத்தை நோக்கி நடந்தன.

 

*****

     திருப்பரங்கோவில் லாக்-அப்பிலிருந்த இரண்டு கைதிகள் தப்பி ஓடிவிட்டார்களென்ற செய்தி ஊருக்கு ஊர் வாய்மொழியாகவே பரவி நெடுந் தூரத்துக்கு எட்டி விட்டது. தப்பியோடியவர்கள் இரண்டு பேரும் பொல்லாத திருடர்கள் என்றும் கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள் என்றும் செய்தி பரவிற்று. அவர்கள் எந்தெந்த ஊரில் எந்தெந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்தார்கள் என்பதாகக் கதைகளும் பரவின. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் கேட்டிருந்த திருடர் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்

     பனங்குடி கிராமத்தில் சுப்பையா முதலியார் வீட்டில், முதலியார் தாழ்வாரத்தில் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தாயார் - வயதான கிழவி - முற்றத்தின் குறட்டில் படுத்துக் கொண்டிருந்தாள். கூடத்தில் மாடத்தில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதலியாரின் மகன் அந்த விளக்கின் வெளிச்சத்தில் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு ராகம் போட்டு வாசித்துக் கொண்டிருந்தான்.

     "ஆகையால், பிள்ளைகளே! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!" என்று பையன் பாடத்தை முடித்தான்.

     அந்தச் சமயம் பார்த்து, வாசலிலே நாய் குரைத்தது!

     முதலியார், தமது மனைவியைக் கூப்பிட்டு, "ஏய்! கொல்லைக்கதவைப் பார்த்துத் தாளிட்டாயா! ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. திருப்பரங்கோயில் ஜெயிலிலிருந்து இரண்டு பக்காத் திருடர்கள் தப்பி ஓடிப்போயிருக்கிறார்களாம்" என்றார்.

     "திருடன் வந்தால் வரட்டும். இங்கே என்னத்தைக் கொண்டு போவேன்? கைக் கொலுசைக் கூடத்தான் வாய்தாப் பணத்துக்கு விற்றாய் விட்டதே?" என்றாள் அவர் மனைவி.

     அச்சமயம், வாசற்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டார்கள். மறுபடியும், அந்தச் சத்தம்.

     முதலியார், "யார் அது?" என்று இரைந்தார்.

     "நான் தான்."

     "நான் தான் என்றால் யார்?"

     "நான் தான் என்றால் நான் தான். கதவைத் திறங்க, ஐயா!"

     "யாரடா அவன் அவ்வளவு திமிராகப் பேசுகிறது?" என்று சொல்லிக் கொண்டு முதலியார் எழுந்திருந்தார்.

 

*****

     குறட்டில் படுத்திருந்த கிழவி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து, "இந்தாடாப்பா, சுப்பையா! நீ போவாதே! சொல்லிவிட்டேன். அதெல்லாம் நீ போகவே கூடாது" என்று வழி மறித்தாள். முதலியார் அதைப் பொருட்படுத்தாமல் திமிறிக் கொண்டு போனார். கிழவி சட்டென்று கூடத்துக்குப் போய் அங்கிருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு முதலியாரைப் பின் தொடர்ந்தாள்.

     முதலியார் கதவைத் திறந்து, "யாரடா அது?" என்றார்.

     "ரொம்பப் பசிக்கிறது. ஐயா! கொஞ்சம் சாதம் போடுவீர்களா?" என்றான், வாசலில் நின்ற முத்தையன். அவன் பேச்சு ரொம்பவும் ஈனஸ்வரத்தில் இருந்தது.

     அவன் அப்படிச் சொன்னானோ இல்லையோ, பின்னால் சிம்னி விளக்குடன் வந்து கொண்டிருந்த கிழவி, "ஐயோ! திருடன்! திருடன்!!" என்று கூவிக்கொண்டே விளக்கைக் கீழே போட்டாள். விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது. 

     "திருடன்! திருடன்!" என்று அந்தக் கிழவி போட்ட கூச்சலுக்கு நாலா பக்கங்களிலிருந்தும் எதிரொலி கிளம்பியது.

     அடுத்த வீடு, அண்டை வீடு, எதிர் வீடுகளில், "திருடன்! திருடன்!" என்ற ஒலி எழுந்தது. அது வீடு வீடாகப் பரவி, கிராமத்தின் கடைசி வீடு வரையில் சென்றது. "திருடன்! திருடன்!" என்று கூவிக் கொண்டே சிலர் வீட்டுக் கதவை அவசரமாய்த் தாழ்ப்பாள் போட்டார்கள். வேறு சில தீர புருஷர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஓடி வந்தார்கள். அவரவர்களும் கையில் அகப்பட்டதை - தடி, உலக்கை, அரிவாள், மண்வெட்டி - இப்படிக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

     விளக்கு அணைந்ததோ இல்லையோ, சுப்பையா முதலியார் சட்டென்று உள்ளே புகுந்து கதவைப் படார் என்று சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டார். முத்தையன் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம, கிராமத்தாரெல்லாம் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்து இனி அங்கு நிற்பது அபாயம் என்று அறிந்து ஓடத் தொடங்கினான்.

     "அதோ ஓடறான்!" "அதோ ஓடறான்!" "விடாதே! பிடி!" என்று கூக்குரல்கள் எழுந்தன. தெருவிலிருந்த நாய்கள் எல்லாம் ஏக காலத்தில் குரைத்தன.

     முத்தையன் வீதியில் கொஞ்ச தூரம் ஓடியதும் நாலாபுறமிருந்தும் ஜனங்கள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். இனி, ஓடுவதில் பயனில்லை என்று தோன்றிற்று. கோவிலுக்கெதிரில் இருந்த லாந்தர் கம்பத்தினடியில் போய் வெளிச்சத்தில் நின்று, தான் திருடனில்லையென்றும் திருடுவதற்கு வரவில்லை என்றும் அவர்களுக்குச் சொல்லிவிடுவது தான் சரியென்று எண்ணினான். அந்த லாந்தர் வெளிச்சத்தண்டை அவன் போன போது யாரோ ஒருவன் கையில் சூரிக் கத்தியுடன் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். அடுத்த கணத்தில் அவ்வாறு ஓடிவந்தவன் கத்தியை ஓங்கினான். முத்தையன் அவன் கையைத் தாவிப் பிடித்துக் கத்தியைப் பிடுங்கினான். அப்படி பிடுங்கும்போது, கத்தி வைத்திருந்தவனின் தோளில் காயம்பட்டு இரத்தம் பீறிட்டது. அவன் கீழே விழுந்தான்.

     முத்தையனுடைய கையிலே இப்போது கத்தி இருந்தது. அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. முத்தையனுடைய கையிலும் துணியிலுங்கூட இரத்தம். லாந்தர் வெளிச்சத்தில் முத்தையன் இதையெல்லாம் பார்த்தான். அவன் முகம் ஒரு நொடியில் பயங்கரமாக மாறிற்று. கண்கள் திருதிருவென்று விழித்தன. பற்கள் நறநறவென்று சப்தித்தன. இரத்த வெறியென்பது இது தான் போலும்!

     அதற்குள்ளே கிராமத்தார் அநேகர் கையுந் தடியுமாக அவனை அங்கு வந்து சூழ்ந்தார்கள். முத்தையன் சூரிக்கத்தியைத் தூக்கிக் காட்டி, "வாருங்களடா" என்று ஒரு கர்ஜனை செய்து பல்லைக் கடித்தான். வந்தவர்கள் அவனுடைய பயங்கரத் தோற்றத்தைப் பார்த்தார்கள். இரத்தம் தோய்ந்த கத்தியைப் பார்த்தார்கள். கீழே காயம்பட்டுக் கிடந்தவனையும் பார்த்தார்கள். ஒருவன் "ஐயோ!" என்று கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி ஓடினான். அவ்வளவுதான்; எல்லாரும் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். முத்தையன் பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைத் துரத்தத் தொடங்கினான்! 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.