LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் (Thirukkural Research Articles)

உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும்

திருக்குறள் இன்று உலக அளவில் தமிழர்களிடையே பேசப்பட்டாலும், தமிழுக்கு வெளியே காந்தி, டால்ஸ்டாய் உள்ளிட்ட பல உலக ஆளுமைகள் வியந்து திருக்குறளின் உயர்நெறிகளை பேசியிருந்தாலும், அது அடைந்திருக்கவேண்டிய மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக அடையவில்லை என்பதும், அதற்கு கிடைத்திருக்கவேண்டிய உலக உலக அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதை இரண்டுவேறு கருத்துகள் இல்லாமல்  நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.

ஒரு தத்துவம், ஒரு நூல், உலக அளவில் சென்று சேரவேண்டுமானால் அதை முதலில் பயன்பாட்டில் கொண்டிருக்கும் சமூகக்கூட்டம் அதை வாசித்து, உள்வாங்கி, வாழ்ந்து , அதன் பயனை அனுபவித்து,  அதன் விளைவை வெளிப்படுத்தியிருக்கும்.  உதாரணமாக, ஜப்பானியர்கள் குறித்து நாம் என்ன விதமான பார்வையைக் கொண்டுள்ளோம்?  அவர்களின் அறிவியல் வளர்ச்சி, நேரம் தவறாமை, வாழ்வியல் ஒழுங்கு என்று பலவற்றை வைத்தே, அவர் ஜப்பானியர் சரியான நேரத்திற்கு கூட்டம் தொடங்கிவிடவேண்டும் என்கிறோமல்லவா?.   இது அவர்களின் செயலால் ஏற்படும் தாக்கம். அதுபோல் தமிழர்கள் கொண்டுள்ள பண்பாடு எது?  தமிழர்கள் என்றால் எது நினைவுக்கு வருகிறது?  உலகின் எந்த இனத்திற்கும் இல்லாத , உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டுள்ள ஒப்பற்ற நூலான    திருக்குறளில் பொதிந்துள்ள கருத்துகளுக்கு ஏற்ப நாம் உயர்ந்துள்ளோமா? அது நம் அடையாளம் ஆகியுள்ளதா?  தமிழ்நாட்டுக்கு வரும் ஒருவர், தமிழரை சந்திக்கும் ஒருவர், வியந்து, இதுவல்லவா வாழ்க்கைத் தத்துவம் என்று பெருமிதம் கொள்ளும் நிலையில் தமிழர்களின் இன்றைய வாழ்வியல் உள்ளதா?

முழுமையாக இல்லை என்றுதானே சொல்லமுடியும். அப்படியெனில் எங்கே ஏற்பட்டது இடைவெளி?  நாம் திருக்குறளை அதிகமாகப் புகழ்ந்துவிட்டோம், கொண்டாடிவிட்டோம், பெருமிதமாகக் குறிப்பிட்டுவிட்டோம்,  ஆனால் பெரும்பாலான தமிழர்கள் திருக்குறளை முழுமையாக அட்டையைத் திறந்து உள்ளே  வாசிக்கவில்லை, வாசித்தவர்கள் அனைவரும் முழுமையாகப் பின்பற்றவில்லை, பின்பற்றியவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை   வெளிப்படுத்தவில்லை.  உலகின் ஒரு உயர்ந்த தத்துவத்தை நாம் வாழ்ந்துகாட்டுவதன் மூலம், நம் வாழ்க்கைத்தரத்தின் வெளிப்பாடாகத்தான் உலகிற்கு கொண்டுசேர்க்க முடியும்.   அது திருக்குறளில் இன்னும் முழுமையாக நிகழவில்லை என்பதை இன்றைய நம் வாழ்வியல் முறையிலிருந்து அறியலாம்.

சுமார் பத்துகோடி மக்கள்தொகை உள்ள தமிழர்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க விழுக்காடு மக்கள் திருக்குறளைப் பின்பற்றி வாழ்ந்திருந்தால், தமிழர்களின் வாழ்வியல் முறை உலக அளவில் பேசப்பட்டிருக்கும், அதன் காரணத்தை அறிய முற்படும் பிற சமூகங்கள் நம் திருக்குறள் அடித்தளத்தை உணர்ந்து உலகத் தத்துவமாக அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் மனிதகுலத்திற்கு சென்றடைந்திருக்கும். 

இந்த எதார்த்த நிலையை உணர்ந்துகொண்டு நாம் திருக்குறளை பரப்ப என்ன செய்யவேண்டும்?.  முதலில் நாம் செய்யவேண்டியது, நாம் வாசித்து அதைப் பின்பற்றவேண்டும். பின்பு நம் குடும்பத்தில் உள்ளவர்களிடம்  ஆர்வத்தை விதைத்து வாசிக்கவைத்து , பின்பற்ற ஊக்கப்படுத்தவேண்டும்.  இது ஒவ்வொரு தனிமனிதனும் செய்யும்போது தமிழ்ச் சமூகம் திருக்குறள் சார்ந்த மேம்பட்ட வாழ்வியல் கருத்தினை பின்பற்றும் சமூகமாக மாறிவிடும்.   

இதுகுறித்து வலைத்தமிழ் குழு திருக்குறள் பரப்புரையை உலகத் தமிழர்களிடத்தில் முன்னெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் செய்துவருகிறது. திருக்குறள்  பரப்புரையில் தேவையான 23 திட்டங்களை தனியாகவும், பிற திருக்குறள் அமைப்புகளுடன் இணைந்தும் செய்துவருகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 1. கூகுள் தேடலில் திருக்குறள் பரவலாக்கல்

திருக்குறள் மற்றும் அதன் உரைகளில்  உள்ள வார்த்தைகளை, ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள வார்த்தைகளை இணையத்தில் வெளியிட்டு அவை கூகுளில் தேடினால் வலைத்தமிழ் திருக்குறள் பகுதிக்கு (www.Thirukkural.ValaiTamil.com) வாசகரை கொண்டுவந்து சேர்க்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாள் பணியன்று. விளம்பரம் கொடுத்தோ, பெரும் பொருட்செலவு செய்தோ குறுகிய காலத்தில் செய்துவிடமுடியாது.  பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக இன்று கூகுள் தேடுபொறியில் அது முறையாக இடம்பெற்று திருக்குறள் பரவலாக்கல் பணியை ஒரு ஆண்டுக்கு சுமார் 1.2 மில்லியன் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது.

 1. உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்

உலகெங்கும் பிறமொழிகளில்  வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத்  தொகுப்பதற்காக வலைத்தமிழ் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும்  திருக்குறள் ஆர்வலர், திரு.இளங்கோ தங்கவேலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைத்து, பல்வேறு நாடுகளின் நூலகங்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழார்வலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,   தமிழறிஞர்களைத் தொடர்புகொண்டு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள்  குறித்த விவரங்களைத் திரட்டி நூல்களைச் சென்னைக்கு வரவழைத்து திரட்டப்படுகிறது. இந்தப்பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக நிறைவுபெறும்.  அடுத்தக் கட்டமாக இந்த மொழிபெயர்ப்புகளை அந்தந்த நாட்டின் அரசுகள், தூதரகங்கள், அந்தந்த நாட்டில்  வசிக்கும் தமிழர்கள் பிறமொழி சமூகத்திற்கு எளிதில் பெற்று அன்பளிக்கக வழங்கும் வகையிலும் , இந்திய அரசின் அனைத்து விருந்தினர்களுக்கும் அரசுகளே இதை பயன்படுத்தும் வகையிலும் அரசுத்துறையில் கவனத்திற்குக் கொண்டுசென்று நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு அடித்தளமாக அனைத்து நூல்களும், விவரங்களும் முதலில் சேகரிக்கப்படவேண்டும்.

 1. 1330 திருக்குறளுக்கும் அனைத்து வகையிலும் பயன்படுத்த தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது

திருக்குறளை தமிழ் ஆங்கிலத்திலும்,  ஒலி வடிவிலும், காணொளி விளக்கமாகவும், மறையோதும் வடிவிலும், ஓவியமாகவும், செயலிகளாகவும், ஆங்கில விளக்கத்துடனும், மு.வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர் , தேவநேயப்பாவாணர், கலைஞர், சாலமன் பாப்பையா ஆகிய உரைகளுடனும், தமிழ் தெரியாதவர்களும் குரலை உச்சரிக்க ஏதுவாக Transliteration வசதியுடனும் , குறள் வார்த்தைகள், பொருள் ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழில் தேடும்வகையிலும், குறள் எண் , அதிகாரம் உள்ளிட்டவை கொண்டு எளிதாக தேர்ந்தெடுத்து படிக்கும் வகையிலும்  சில ஆண்டுகள் தொழில்நுட்ப, வாசகர் தேவைகளையொட்டிய பயன்பாட்டு  ஆய்வுகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

URL : www.Thirukkural.ValaiTamil.Com

 1. திருக்குறள் பரப்புரையில் iPhone, Android செயலிகள்

தமிழ் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலிகள்  வடிவமைக்கப்பட்டு 2017-ல் iPhone, Android வெளியிடப்பட்டது.  தேடுவதற்கு ஏதுவாக தமிழ் ஆங்கிலத்தில் தேடும் வசதியும், பிடித்த குறளை தொகுத்து வைத்தால், ஒலி வடிவில் ஒவ்வொரு திருக்குறளுக்கும் கேட்கும் வசதி என்று பல்வேறு வழிகளில் எளிதாகப் பயன்படுத்த உரிய சோதனை செய்து வெளியிடப்பட்டது.

 • App Name: Thirukkural Audio (Android , iPhone)

Published in Feb, 2017 and downloaded and used by 50000+ users.  Search by ValaiTamil to get this app or use this link to download: `

 

 1. திருக்குறள் ஆளுமைகளின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் தொடர் நிகழ்ச்சி "எனைத்தானும் நல்லவை கேட்க" 

வலைத்தமிழ் மற்றும் வள்ளுவர் குரல் குடும்பம் அமைப்புகள் இணைந்து 100-க்கும் மேற்பட்ட  திருக்குறள் சிந்தனையாளர்களை, ஆளுமைகளை , திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலாசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை ,அவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள் கருத்துகளை "எனைத்தானும் நல்லவை கேட்க"  என்ற தொடர் நேர்காணல் நிகழ்ச்சியாக  ஆவணப்படுத்தப்படுகிறது.  அதன் காணொளிகளைக் காண:  

https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTMt8UGwtIytLXFxNvW1y9T

 

 1. ஒவ்வொரு திருக்குறளுக்கும் எளிமையான இன்றைய வாழ்வியல் உதாரணங்களுடன் விளக்கவுரை காணொளி உருவாக்கும் திட்டம்

ஒவ்வொரு திருக்குறளுக்குமான விளக்க உரைகளை தொகுக்கும் திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 1330 திருக்குறளுக்கும் தரமான   உரைகள் , பல கோணங்களில் , பல நாடுகளிலிருந்து, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக்கும் பயணம் தொடர்கிறது

காணொளிகளைக்  காண  :

https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjT8G9YCpeewLmkpI2zhqO2-

 1. இசைவடிவில் , மந்திரமாக , நல்ல நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ஏதுவாக திருக்குறள் மறையோதல் தொகுப்பு

அமெரிக்காவின் பனை நிலம் தமிழ்ச்சங்கம் இசையுடன் உருவாக்கியுள்ள திருக்குறள் மறையோதலை அவர்களுடன் இணைந்து காணொளியாக ஆவணப்படுத்தி 133 அதிகாரத்திற்கும் 133 காணொளிகளைத் தொகுத்து வலைத்தமிழ் திருக்குறள் பகுதியில் இணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது..  

காணொளிகளைக் காண : https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjRcIQettH-O1aa8VB1u34LO

 

 1. 1330 திருக்குறளுக்கும் "திருக்குறள் ஓவியம்" தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன் அவர்கள் ஓவியம் தீட்டியதை அறிந்து , அந்த செயலைப்  பாராட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, பட்டயம் வழங்கி அதை உலக மக்களுக்கு வழங்கும் பொருட்டு அவரையே தனி இணையதளம் உருவாக்கி பதிவிட ஆலோசனை வழங்கி, மேலும் அதை வலைத்தமிழ் திருக்குறள் பகுதியிலும்  அவரது பெயரில் இணைத்துளோம்.  

      https://www.valaitamil.com/innaa-enaththaan-unarndhavai-thunnaamai-ventum-pirankan-seyal-kural-316.html

 1. Thirukkural for UNESCO

திருக்குறளை நாம் உலகப் பொதுமறையாகக்  கூறினாலும், அதை நிறைவேற்ற சரியான அமைப்பு யுனெஸ்கோ (UNESCO )வாகும்.  இது பல ஆண்டுகாலமாக, பல அறிஞர்கள்களால் , பல அமைப்புகளால் தொடர்ந்து வைக்கப்படும் ஒரு கோரிக்கையாகும்.  அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்பொருட்டு உலகத் திருக்குறள் அறக்கட்டளை- மொரீசியஸ், வலைத்தமிழ் - அமெரிக்கா, வள்ளுவர் குரல் குடும்பம் - இந்தியா , தமிழ் வளர்ச்சி மன்றம் - ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகள் இணைந்து திருக்குறளை யுனெஸ்கோ கொண்டுசெல்லும் நோக்கில் பல்வேறு  செயல்திட்டங்களைத் தீட்டியுள்ளது..   தமிழ்நாடு அரசு, செம்மொழி ஆய்வு நிறுவனம், இந்திய ஒன்றிய அரசு, பாரிஸ் தூதரகம், யுனெஸ்கோ , பாரீஸ் தமிழ்ச்சங்கங்கள்  உள்ளிட்ட அமைப்புகளுடன் கைகோர்த்து இந்தத் திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து இக்குழு உழைக்கும்.

 

இக்குழு “Thirukkural and UNESCO for World Peace. “ என்ற தலைப்பில் இதுவரை 24 ஆங்கிலக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது.

 

Extracts from the Constitution of UNESCO

 1. To realize this purpose the Organization will:

.....

 (c) Maintain, increase and diffuse knowledge:

By assuring the conservation and protection of the world’s inheritance of books , works of art and monuments of history and science, and recommending to the nations concerned the necessary international conventions;

 

Project Team:

Chair:  Dr.Armoogum Parsuramen, President

                International Thirukkural Foundation - Former Director, UNESCO -          Former Education Minister, Mauritius

Team:

 • Chandrika Subramanian ,Founder , Tamil Valarchi Mandram, Australia
 • C.Rajendiran, IRS (Retd.) , Founder & Co-ordinator , Voice of Valluvar Family
 • Sa.Parthasarathy, Founder, ValaiTamil Media, USA
 • Prabakaran, Washington DC
 1. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். "இளமையில் கல்வி பசுமரத்தாணி" என்பது பழமொழி.

திருக்குறள் மனித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச் சொத்து. திருக்குறள் நெறிகள் பரவப்பரவ , அறம் பரவும். தமிழ் மொழிப்பயிற்சியும், மாணவர்களுக்குக் கிடைக்கும். அறமும், மொழியும் வளரும். மேலும் அறமும், திறனும், ஒருங்கே வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிட வலுவான அடித்தளமாக திருக்குறள் மனனம் அமையும். சமுதாயத்தில் நல்லிணக்கமும், மனித நேயமும் வளரும்.  

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றோதல் செய்யும் 70 மாணவர்களுக்கு, 2021 ஆம் வருடம் வரை, தலா ரூ10000/- திருவள்ளுவர் தினத்தன்று அரசு வழங்கி வந்தது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பை நீக்கியது.பரிசுத்தொகையும் உயர்த்தப்படும் என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.{தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை. தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை - 46 அறிவிப்புகள் ( 2021-2022)}

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை ஆண்டுதோறும் பரிசு பெறும் மாணவர்களின் வயதைப் பார்த்தால் 95 விழுக்காடு மாணவ/ மாணவியர் 14 வயதுக்குட்பட்டே இருக்கிறார்கள். ஆறு / ஏழாம் வகுப்புக்குள் மனனம் செய்துவிட்டால், பிறகு மேல் வகுப்புகளில் பொருளுணர்ந்து படிக்க ஏதுவாக இருக்கும். தனிவாழ்வில் நிறைவான வாழ்க்கை வாழவும், சமுதாய பிரச்சனைகளை திருக்குறள் துணையுடன் எதிர் கொள்ளவும், இளவயதிலேயே 1330 அருங்குறள் மனனம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பின்புலத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் இணைந்து, ஏற்கனவே திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களையும், தன்னார்வ ஆசிரியர்களையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா திருக்குறள் முற்றோதல் பயிற்சியைத் துவங்கியது.

10.1 ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறளை முற்றோதல் பயிற்சி:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முற்றோதல் பயிற்சியளித்து, முற்றோதல் முடித்த மாணாக்கர்களை  உருவாக்கி அனுபவம் பெற்றுள்ள பயிற்சி ஆளுமைகளை ஒருங்கிணைத்து முற்றோதல் பயிற்சியை ஒருங்கிணைத்து மாவட்டத்திற்கு 100 அரசுப்பள்ளி மாணவர்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  முற்றோதல் முடித்த மாணவர்கள் அரசுத் திட்டத்தில் கலந்துகொள்ள வழிகாட்டவும்,  வழங்கும் முற்றோதல் சான்றிதழைப் பெறவும், ஊக்கத்தொகையாக அரசின் 10000 ரூபாய் பரிசுத்தொகையைப்  பெறவும் இக்குழு வழிகாட்டல் செய்யும். 

 10.2 அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்களை அரசுப்பள்ளிக்கு வழங்கும் திட்டம்

திருக்குறள் முற்றோதல் இயக்கம் வட அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இயங்கும் ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்புடன் புரிந்துணர்வு செய்துகொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு 2000 திருக்குறள் நூல்களை வழங்கவும் மொத்தமாக ஆண்டுக்கு 80000 நூல்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வானதி பதிப்பகம் திருக்குறள்  முனுசாமி அவர்களது உரையுடன் கூடிய திருக்குறள் நூலை தயாரித்து திருக்குறள் முற்றோதல் இயக்கத்திற்கு வழங்கும்.

10.3 திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை உலக அளவில் தொகுத்து  இணையத்தில் வெளியிடுதல்

உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை நாடுவாரியாக, மாநிலவாரியாக தொகுத்து இணையத்தில் வெளியிட்டு , அவர்கள் கற்றதை மறந்துவிடாமல் , தடம் மாறாமல் வெற்றியாளர்களாக நிற்க கைகொடுப்பது, வழிகாட்டுவது அவசியம்.  எனவே ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளில் முற்றோதல் செய்ய அவரவர்கள் உள்ள இடத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையை தேர்ந்தெடுத்து முற்றோதல் செய்ய வழிகாட்டுதல் செய்யப்படும்.

10.4 முற்றோதல் முடித்தவர்களை மாணவத் தூதுவர்களாக அழைத்து மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்துதல்

உலகெங்கும் உள்ள தமிழ்ச்சங்கங்கள்  தங்கள் விழாக்களுக்கு இலக்கியத்துறை, திரைத்துறையினரை, பிற துறை ஆளுமைகளை  அழைப்பதுபோல் திருக்குறள் முற்றோதல் முடித்த இளையோரை மாணவத் தூதுவர்களாக அழைத்து  அந்தந்த நாட்டிலுள்ள மாணவர்களுடன் உரையாட  வாய்ப்பு ஏற்படுத்த தொடந்து முற்றோதல் இயக்கம் தமிழ்ச்சங்கங்களுக்கு தொடர்புகொண்டு முயற்சிக்கும்.  மேலும் முற்றோதல் முடித்தவர்கள் சாதனையாளர்களுடன் உரையாட, தன்னம்பிக்கை பெற , கல்வி வேலைவாய்ப்பில் வழிகாட்டுதல் பெற என்று பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

 

 1. திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் , செய்திகள் ,நேர்காணல்கள் , கருத்தரங்கங்கள் தொகுக்க சிறப்புப் பகுதி

திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் , நேர்காணல்கள்  , செய்திகள் , கருத்தரங்கங்கள் அனைத்தும் ஓரிடத்தில் தொகுக்கப்படுகிறது. இது திருக்குறள் ஆய்வு செய்யும் மாணவர்கள் பயன்படுத்தவும், கூகுளில் தேடும்போது கிடைக்கவும் வழிசெய்யப்பட்டுள்ளது. 

https://www.valaitamil.com/literature_thirukkural

 1. உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களைத் தொகுத்தி வெளியிடுதல்

திருக்குறள் முற்றோதல் செய்து மாணவர்களை உருவாக்கிய ஆளுமைகளின் விவரங்களை உலகெங்குமிருந்து தொகுத்து வெளியிட ஒரு தனிப்பகுதி ஒதுக்கி அதை www.Thirukkural.ValaiTamil.Com ல்   இணைக்கப்பட்டுளள்து. இப்பகுதி தொடர்ந்து புதிய தகவல்களைத் திரட்டி மேம்படுத்தப்படும்.

 1. உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் நெறிப்படுத்தும் அமைப்புகளை தொகுத்து வெளியிடுதல்

உலகெங்கும் தரத்துடன் முற்றோதல் செய்து சான்றிதழ் வழங்கும் அமைப்புகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டு முற்றோதல் குழு அவர்களிடம் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும்

புதியவர்களை பொது தளத்தில் இணைத்து செயல்படும்.

 1. உலகெங்கும் . திருக்குறளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தொகுத்து வெளியிடுதல்

திருக்குறளில் உரிய முறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்களின் ஆய்வுகளைத் திரட்டி வெளியிடுவதுடன் ஆய்வாளர்களின் விவரங்களையும் தொகுத்து வெளியிடுதல். இது புதிய ஆய்வாளர்களுக்கு திருக்குறளில் புதிய  கோணத்தில் ஆய்வு செய்ய  உதவியாக இருக்கும்.

 1. திருக்குறளுக்குப் பங்களித்த அறிஞர்களின் பங்களிப்புகளைத் தொகுத்து வெளியிடுதல்

திருக்குறள் பயணத்தில் அதன் வளர்ச்சிக்கு பல்வேறு ஆளுமைகள் வித்திட்டுள்ளார்கள்.  அவற்றைத் தொகுத்து தொடர்ந்து வெளியிடுவதும், அந்தந்த காலக்கட்டத்தில் திருக்குறள் வளர்ச்சிக்குப்  பங்களிப்பு செய்த ஆளுமைகளை நினைவில் நிறுத்தி அவர்களின் தொண்டை போற்றுவதற்கு ஏதுவாக அவர்களின் விவரங்களை வெளியிடுவதும் அவசியமாகிறது.  இதற்கு சிறப்புப் பகுதி  உருவாக்கப்பட்டு www.Thirukkural.ValaiTamil.Com -ல்   சேர்க்கப்படும்.

by Swathi   on 12 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புரவலர் நண்பர் மணி பெரியகருப்பனுக்கு நன்றி.. புரவலர் நண்பர் மணி பெரியகருப்பனுக்கு நன்றி..
இன்று பெங்காலி மொழிபெயர்ப்பு நூல் நம் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இணைந்தது இன்று பெங்காலி மொழிபெயர்ப்பு நூல் நம் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இணைந்தது
ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு
திருக்குறள் பிரசாரம் செய்யும் கோயம்புத்தூர் நித்தியானந்த பாரதி திருக்குறள் பிரசாரம் செய்யும் கோயம்புத்தூர் நித்தியானந்த பாரதி
திருக்குறளுக்குப் பங்களித்த அறிஞர்களின் பங்களிப்புகளைத் தொகுத்து வெளியிடுதல் திருக்குறளுக்குப் பங்களித்த அறிஞர்களின் பங்களிப்புகளைத் தொகுத்து வெளியிடுதல்
உலகெங்கும் . திருக்குறளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தொகுத்து வெளியிடுதல் உலகெங்கும் . திருக்குறளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தொகுத்து வெளியிடுதல்
உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் நெறிப்படுத்தும் அமைப்புகளை தொகுத்து வெளியிடுதல் உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் நெறிப்படுத்தும் அமைப்புகளை தொகுத்து வெளியிடுதல்
உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களைத் தொகுத்தி வெளியிடுதல் உலகெங்கும் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களைத் தொகுத்தி வெளியிடுதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.